Followers

Wednesday, December 21, 2022

சபையில் வலப்புறம் பேணுதல்.

 21-12-2022


நேற்று மஹ்ரிப் நேர தொழுகைக்கு பள்ளிக்கு செல்லும் போது பள்ளியின் வாதில் குளிரினால் ஒரு கதவு அடைக்கப்பட்டிருந்தது. மற்ற கதவு வழியே ஒரு நபர் மட்டுமே செல்ல வழி இருந்தது. என்னை விட வயதில் மூத்த ஒரு சவுதி நாட்டவர் வந்தார். அவர் முன்னே செல்வதற்காக அவருக்கு எனது கைகளால் 'செல்லுங்கள்' என்று சைகை செய்தேன். அவரோ புன் முறுவலோடு என்னிடம் 'லா.... எமீன் அவ்வல். அன்த ரூஹ் அவ்வல்' (இல்லை. வலப்புறம்தான் முதலில். எனவே நீ முதலில் போ' )என்று என்னிடம் சொன்னார். அதாவது இருவர் வந்தால் வலப்புறம் உள்ளவரே முதலில் செல்ல வேண்டும் என்பது நபிகள் நாயகத்தின் கட்டளை. அதனை அங்கு செயல்படுத்துகிறார் அந்த சவுதி.

இஸ்லாம் வருவதற்கு முன்பு தாங்கள்தான் மொழியில் உயர்ந்தவர்கள்: நாங்கள் பேசும் மொழி தவிர்த்து உலகில் மற்றவர்கள் பேசுகின்ற மொழிகள் அனைத்தும் ஊமை கள் பேசும் பாஷை என்று கிண்டலடித்த காலம் உண்டு. நபிகள் நாயகம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியவுடன் நிலைமை தலைகீழாக மாறுகிறது. அது இன்று வரை அரபுகளின் வாழ்வில் தொடர்கிறது. 'நீ மனிதர்களை சமமாக நடத்தவில்லை என்றால்: உன்னை உயர்ந்தவனாக கருதினால் உனக்கு சொர்க்கம் கிடைக்காது: மனிதர்களில் ஏற்றத் தாழ்வு காண்பிப்பதை இறைவன் விரும்ப மாட்டான் என்ற நபிகளின் போதனை இங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது.


சபையில் வலப்புறம் பேணுதல்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுடைய இதே வீட்டில் எங்களிடம் வந்து தண்ணீர் புகட்டும்படி கேட்டார்கள். ஆகவே நாங்கள் எங்களுடைய ஓர் ஆட்டின் பாலை அவர்களுக்காகக் கறந்தோம். பிறகு நான் எங்களுடைய இந்தக் கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து அதை அவர்களுக்கு கொடுத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் இடப் பக்கத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களும் எதிரில் உமர் (ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். நபி (ஸல்)அவர்கள் பாலைக் குடித்து முடித்தவுடன் உமர் (ரலி) அவர்கள் இதோ அபூபக்ர் என்று கூறினார்கள். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது (பாலின்) மீதத்தை கிராமவாசிக்குக் கொடுத்தார்கள். பிறகு வலப்பக்கத்திலிருப்பவர்களே முன்னுரிமையுடையவர்கள். ஆகவே வலப்ப்பத்திலிருப்பவர்களுக்கே முதலிடம் கொடுங்கள் என்று கூறினார்கள். இறுதியில் அனஸ் (ரலி) அவர்கள் அது நபிவழியாகும் அது நபிவழியாகும் என்று மும்முறை கூறினார்கள்
புஹாரி : 2571 அனஸ் (ரலி).

 நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களின் வலப்பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப்பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), ‘சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்துவிட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா?’ என்று கேட்டார்கள். அதற்கு அச்சிறுவர், ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான்விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். எனவே, நபி (ஸல்) அவர்கள், (அந்தப் பாலில்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்துவிட்டார்கள்.
புஹாரி : 2351 ஸஹ்ல் பின் ஸஅது (ரலி).






No comments: