Followers

Monday, July 20, 2026

நேற்று ஒரு திருமணத்துக்கு சென்று விட்டு ரேபிடோ டாக்ஸியில் திரும்பிக் கொண்டிருந்தோம்.

 


Sathyamurthy Ramanujam

·

நேற்று ஒரு திருமணத்துக்கு சென்று விட்டு ரேபிடோ டாக்ஸியில் திரும்பிக் கொண்டிருந்தோம்.

 

வழக்கமாக டாக்ஸி, ஆட்டோவில் ஏறினால் ட்ரைவருடன் பேச்சு கொடுப்பேன். ஆண்கள் பலரும் அப்படி செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

 

ஏறும் போதே ஓட்டுநரின் பெயரை கவனிப்பேன். அவர் பெயரைச் சொல்லி அழைத்து குட் மார்னிங், ஆஃப்டர் நூன், ஈவினிங் சொல்லி, “எப்டி இருக்கீங்க! நல்லாயிருக்கீங்களா?” என்பேன்.

 

கிட்டத்தட்ட இருபது வருடங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்ததில் தொற்றிக் கொண்ட நல்ல பழக்கம்.

 

நாமெல்லாம் (இந்தியாவில் இந்தியர்கள்) அலுவலகத்தில் சக ஊழியரைப் பார்த்தால் உடனே விஷயத்திற்கு வந்து விடுவோம்.

 

மத்தியக்கிழக்கில் சம்பரதாயமாக முதலில் க்ரீட்டிங் செய்து, எப்படி இருக்கீங்க என்று கேட்டுவிட்டு பின்னர்தான் விஷயத்துக்கு வருவார்கள். பொதுவாக இப்படித்தான். ரொம்ப சில நேரங்களில்தான் இது தப்பும்.

 

நேற்றைய டாக்ஸிக்கு திரும்புவோம்.

 

அவரது பெயர் ஏழுமலை அஷ்ராஃப் என்றிருந்தது.

 

கன்வர்ட்டட் கிரிஸ்ட்டியன் பார்த்திருக்கிறேன். நிறைய. அவர்கள் பெயரும் டேனியல் வரதராஜன், டேவிட் சுந்தரராஜன் என்று இருக்கும். என் ஆறாம் வகுப்பு ஆசிரியர் டேவிட் சுந்தர்ராஜன்தான். அவரது மகன் பெயர் ஆல்பர்ட் டேனியல் நவராஜன். என் க்ளாஸ்மேட்.

 

முதல் முறையாக இந்துப்பெயர் இணைந்த முஸ்லீம் இளைஞரை சந்தித்தேன்.

ஏறி அமர்ந்ததுமே பேச டாப்பிக் ரெடியாகிவிட்டது.

 

சில இந்து அப்பாக்கள் மதபேதம் இல்லை என்பதைக் காட்ட இப்படி பெயர் வைக்கிறார்கள். குவைத்தில் அப்படி மும்மத பெயர் கொண்ட ஒரு இந்து நண்பர் இருந்தார். எனது நெடுநாள் சோஷியல் மீடியா நண்பர் Jamshed V Rajan பார்ஸி பெயர் சேர்த்து வைக்கப்பட்டவர். மதம் காரணமில்லை. டாடா மேல் மதிப்பால் என்று நினைக்கிறேன். அதனால் கொஞ்சம் சந்தேகத்துடன் கேட்டேன்.

 

என்ன ஏழுமலை அஸ்ராஃப்? வித்தியாசமா இருக்கே?”

 

முஸ்லீமா கன்வர்ட் ஆயிட்டேன் சார்!”

 

நீங்க மட்டுமா? ஃபேமிலி ஃபுல்லாவா?”

 

அவங்க எல்லாம் இந்துவாத்தான் இருக்காங்க. நான் மட்டும்தான்”

 

என்ன விஷயம்? லவ் மேரேஜ்ஜா?”

 

அதெல்லாம் இல்ல. இங்க பிடிக்கல. அதுனால மாறிட்டேன்”

 

எப்ப?”

 

அது 21 வயசுலயே மாறிட்டேன்”

 

என்ன பிடிக்கல?”

 

இங்க தீண்டாமை ரொம்ப தாஸ்தி சார். தொட்டு கூட பேச மாட்டாங்க எங்க ஊர்ல. ரொம்ப மோசமா நடத்துவாங்க. தண்ணி கூட தர மாட்டாங்க?”

 

தீண்டாமையா? இந்த காலத்திலா?”

 

இப்ப குறைஞ்சிருக்கு. ஆனா இன்னும் இருக்கு சார். எங்க ஊர்ல எல்லாம் இருக்கு!”

என் முகத்தில் திருமண் பார்த்து ரொம்ப தோண்டறேன்னு ஏதாவது நினைப்பாரோ என்று தோன்றியது.

 

நான் நாமம் போட்டிருக்கேன். ஆனால் ஜாதி மத பேதமெல்லாம் நாங்க பார்க்க மாட்டோம்”

 

தெரியுது சார்! இத்தனை சகஜமாக பேசறீங்களே!”

 

சரி! நீங்க சொல்லுங்க! இப்பவுமா தீண்டாமை? யார் செய்யறாங்க?”

 

எங்க ஊர்ல _______, ________, ______ செய்வாங்க. அதான் வெறுத்துப் போச்சு” (மூன்று ஜாதிகள் பெயரைச் சொன்னார். ஒன்றும் பிராமண ஜாதி இல்லை).

 

அதுக்காக மதம் மாறணுமா? அவங்க அப்படித்தான்னு இருக்கலாமே?”

 

சார்! உங்களை ஆபீஸ்ல இல்ல வீட்டுல யாராவது இப்படி நடத்தியிருக்காங்களா? நடத்தியிருந்தா எப்படி அவமானமா இருக்கும்ன்னு தெரியும் சார்!”

 

கோபமில்லாமல்தான் சொன்னார். ஆனால் அவர் சொற்கள் அவர் அனுபவித்த வலியை உணர்த்தின.

 

எனக்கு நடந்ததில்ல. ஆனால் சிலர் அவமானப்படுத்தும்போது நிச்சயமா வலிச்சிருக்கு”

அதான் சார் எனக்கும்”

 

அதுக்கு மதம் மாறணும்ன்னு முடிவு பண்ணீங்க. சரி. ஏன் முஸ்லீமாகணும்ன்னு நினைச்சீங்க?”

 

கொஞ்சம் ஃப்ரெண்ட்ஸ்க்கிட்ட பேசினேன். அதுல மேல கீழன்னு இல்லன்னு சொன்னாங்க”

 

சரி! வீட்ல அப்பா அம்மாகிட்ட சொன்னீங்களா? அவங்க ஒத்துக்கிட்டாங்களா?”

 

அவங்க உடனே ஒத்துக்கல. நான் அவங்ககிட்ட என்ன நடக்குது. மதம் மாறினா அது இருக்காதுன்னு சொன்னேன். அதுக்கு மேல அவங்க ஏதும் சொல்லல. அவங்களுக்கும் தீண்டாமை இருக்கு. அப்படியே வாழ்ந்துட்டாங்க”

 

உங்க தம்பி?”

 

அவன் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டான். ஒதுங்கி போயிடுவான்”

 

முஸ்லீம் மதம் மாற என்ன செய்தீங்க”

 

அல்லா மேல நம்பிக்கை இருக்குன்னு சொல்லணும். கல்மா படிக்கணும். அவ்ளோதான். முஸ்லீம் பெரியவங்க செய்துடுவாங்க”

 

அப்புறம் புதுப்பெயர் வைப்பாங்களா?”

 

நானே மாறப்போற முன்னாடியே எனக்கு அஷ்ராஃப்-ன்னு பேரு செலக்ட் பண்ணி வச்சிருந்தேன். அதை சொல்லிட்டேன். அப்புறம் கெஸட்ல மாத்திக்கிட்டேன்”

 

மாறினப்புறம் ஊர்ல எல்லாம் நல்லா பேசறாங்களா?”

 

இந்த சமூகத்துல அதெல்லாம் இல்ல. பழைய ஆளுங்ககிட்ட சம்பந்தம் இல்ல. ஆனா அந்த ஜாதிக்காரங்க இப்ப என்கிட்ட சாதாரணமா பழகறாங்க”

 

எப்பவாவது மதம் மாறாம இருந்திருக்கலாமே, திரும்ப வந்துடலாம்ன்னு தோணுமா?”

 

இல்ல சார்! அப்படியெல்லாம் நினைச்சதில்ல. இதுல நல்லாத்தான் இருக்கேன்”

 

“21 வருஷம் இந்துவா இருந்திருக்கீங்க. கோவிலுக்கெல்லாம் போவறது பழக்கமாயிருக்குமே? அதெல்லாம் இப்பவும் செய்யறீங்களா?”

 

அப்பல்லாம் எங்க சார் கோவிலுக்குள்ள விட்டாங்க? இப்ப மசூதிக்கு மட்டும்தான். கோவிலெல்லாம் கூடாது”

 

அது சரி! ஆனா இந்துக்கள் எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் போகலாம். தடை இல்லை. அய்யப்பன் கோவிலுக்கு போகும்போது மசூதிக்கு போவோம். நாகூர், வேளாங்கண்ணி எல்லாம் இந்துக்கள் போவாங்க தெரியுமில்ல?”

 

தெரியும் சார்! டாக்ஸி ஓட்டறனே. நானே சாந்தோமுக்கு போற இந்துக்களை பாத்திருக்கேன். ஆனா ஒண்ணு சார்!”

 

என்ன?”

 

யார் வேணா வேளாங்கண்ணி - நாகூர் தர்கா போகலாம். யார் வேணா எந்த மதத்துக்காரனும், ஜாதிக்காரனும் எல்லா கோவிலுக்கும் போக முடியுமா சார்?”

 

என்னிடம் நிச்சயமான பதில் இல்லை என்பதுதான் உண்மை. மஸ்கட் - குவைத்தில் சில மசூதிகளுக்கும், கோவாவில் சர்ச்களுக்கும், பாங்காக்கில் குருத்வாராவுக்கும் போயிருக்கிறேன். நான் யார் என்று அவர்கள் கேட்டதில்லை. இந்துக் கோவில்களுக்கு அப்படி செல்ல முடியாது என்பது உண்மை.

 

இந்து மதத்தில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளும், ஜாதி பேதங்களும் மதமாற்றங்களுக்கு வித்திடுகின்றன என்பது இந்து மதத்தினராக நாம் மறுக்க முடியாத உண்மை.

***

அவர் பெயர் ஏழுமலை அஷ்ராஃப். ஒரு விதத்தில் மதநல்லிணக்கமான பெயர்தான். ஏழுமலையானுக்கு மனிதருள் பேதம் கிடையாது. ஶ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு துலுக்க நாச்சியார்.

 

 

Sathyamurthy Ramanujam

 

No comments: