நான் மதிக்கும் ஒரு பதிவர் திடீரென்று ராம பக்தி முற்றிப் போய் ராமர் கோவில் ஏன் கட்டக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராமருக்கு இன்னும் ஆயிரம் கோவில்களை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுங்கள். ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல் பாபரி மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று கூறும் வடி கட்டிய பொய்யைத்தான் எதிர்க்கிறோம். ஒவ்வொரு தேர்தலிலும் இந்துக்களின் ஓட்டுக்களை கவர்வதற்காக 'பாபர் மசூதி இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவோம் ' என்ற ராம பக்தி இந்துத்வாவினருக்கு கரை புரண்டு ஓடும். அதைத்தான் இப்போதும் பார்க்கிறோம். அயோத்தியிலேயே ராமர் பிறந்ததாக 10 க்கும் மேற்பட்ட இடங்களை ராமனை நம்புபவர்கள் கூறுகின்றனர். இதில் யாருடைய பேச்சை ஆதாரமாக எடுப்பது?
ஏன் ராமரை நான் மதிக்கிறேன் என்பதற்கு அந்த பதிவர் கூறும் காரணங்களை இனி பார்ப்போம்.
//இராமன் வாழ்வு சொல்லும் நெறி போல் சிறந்தநெறி உலகில் வேறு இல்லை.
இராமனை போல் வாழ முடியாதவர்கள் தான் இராமனை எதிர்ப்பவர்கள்.
திருக்குறள் காட்டிய அனைத்து நெறிகளிலும்,காட்டாத நல்நெறிகளிலும் வாழ்ந்தவன் இராமன்.
இராமன் இந்தியாவின் ஒருமைப்பாட்டின் சின்னம்.
இராமனிடம் இருந்துதான் இந்தியாவின் முழு ஆன்மா பிறக்கிறது.
இந்தியாவின் சுதந்திரத்தில் இராமனின் பங்கு அளப்பறியது,சொல்லி மாளாது .
என்பது படித்த பண்பேறிய தமிழறிஞர்களின் கருத்தாக உள்ளது .//
இந்த பதிவர் சொல்வதுபோல் அவ்வளவு உயர்ந்த தரத்தில் வைத்து பார்க்கப்படுபவனா ராமன்? ராமனை தெரிந்து கொள்ள வால்மீகி ராமாயணத்தைத்தான் நம்மால் பார்க்க முடியும். அந்த ராமன் யார்? அவனது குணாதிசியங்கள் என்ன? என்பதை அம்பேத்கார் ஆய்வு செய்து தனது கருத்துக்களை வைத்துள்ளார். அதனை இனி பார்ப்போம்.
ராமனும், ஏசுவும்: ராமன் கடவுளா? மனிதனா? என்-கிற இந்த சந்தேகம் ராமனுக்கே இருந்திருக்கிறது.
டாக்டர் அம்பேத்கர் எழுதுகிறார்: ராமன் கடவுளானது கிருஷ்ணனின் விஷயத்தைவிட அதிகச் செயற்கையானது. தான் கடவுள் என்பதை ராமனே அறிந்திருக்கவில்லை. இயேசுவை கடவுளாக பலர் வழி-பட்டாலும், அவரே ஒரு கடவுளை வழிபட்டிருக்கிறார். அதுபோல் ராமனை பலர் கடவுளாக வழிபட்டாலும், அவன் பல கடவுள்களை வழிபட்டிருக்கிறான். ராமாயணத்தை எடுத்துக்காட்டி டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.
மனிதன் கடவாளாக மாற்றப்படும் நிலை: நான் என்னை ஒரு மனிதனாக, தசரதனின் மகன் ராமனாகக் கருது-கிறேன். தெய்வங்களாகிய நீங்கள் நான் யார் என்றும், எங்கிருந்து வந்தேன் என்-றும் கூறுங்கள். ஒரு விபத்தில், தன்னைப் பற்றிய விஷயங்களையே மறந்து போன பழைய தமிழ் சினிமா கதாநாயகன் டாக்டர்-களைப் பார்த்து, நான் யார்? என்று கேட்பதுபோல், கடவுள்களைப் பார்த்து கேட்கிற ராமன்தான் இந்துக்களின் தனிப்பெரும் கடவுள். கிருஷ்ணனைப் போல ராமனும் ஒரு மனிதனாக இருந்து கடவுள் ஆக்கப்-பட்டார்….அவருடைய கடவுள் தன்மையை முழுமையாக்குவதற்காகத்தான் அவர் விஷ்ணுவின் அவதாரம் என்றும், அவரது மனைவி சீதை, விஷ்ணுவின் மனைவியான லட்சுமியின் அவதாரம் என்றும் கூறும் கொள்கை கண்டுபிடிக்கப் பட்டதாகத் தோன்றுகிறது என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.
அம்பேத்கரும், ராமனும்: சீதையை ராமன் நடத்திய விதமும், வாலியை கொன்ற முறையும், ராமன் கடவுளாக அல்ல ஒரு மனிதனாக இருக்கக்கூட லாயக்கற்றவன் என்கிறார் டாக்டர் அம்பேத்கர். எனக்கு இலங்கைக்கு செல்வதற்கு உதவி செய்தால், உன்னை ஆட்சியில் அமர்த்துவதற்கு உதவி செய்கிறேன், என்று சுக்ரீவனோடு ஒப்பந்தம் செய்து கொண்டுதான் வாலியைக் கொன்று இருக்கிறான் ராமன். அதை நிகழ் கால சம்பவங்களோடு பொருத்திச் சொல்ல வேண்டும் என்றால், எனக்காக நீ பாகிஸ்தானோடு போர் இடு. உனக்கு நான் என்ன உ.தவிகள் வேண்டுமானாலும் செய்கிறேன் என்று அமெரிக்கா இந்தியாவை நிர்ப்பந்திப்பதுபோல. நற்பெயரோடே மோசடிகளை செய்வதில், அமெரிக்காவின் தந்திரங்கள், அந்தக் காலத்து ராமனை நினைவு படுத்துகிறது. தனது சுயலாபத்துக்காக தனக்கு எதிரியாக இல்லாதவர்களைக்-கூட கொலை செய்கிற ராமனின் நடத்தை, இந்தக் காலத்து அமெரிக்காவை நினைவுபடுத்துகிறது. தனது சுயலாபத்துக்காக வாலியைக் கொல்வதற்கு என்ன தந்திரத்தை சுக்ரீவன் மூலம் கையாண்டானோ, அதே போன்ற தந்திரத்தைதான் பேரரசன் ராவணனை கொல்வதற்கும் அவனுடைய சகோதரன் விபீஷணன் மூலமாகக் கையாண்டு இருக்கிறான் ராமன், என்று ராமனின் யோக்கியதையை இரண்டாகப் பிளக்கிறார் டாக்டர் அம்பேத்கர். வாலியின் படுகொலைக்காக நிரம்ப கோபமுற்று ராமனை கட்டி வைத்து சவுக்கால் அடிப்பதுபோல் கேள்வி கேட்கிறார் டாக்டர் அம்பேத்கர்:
வாலியின் படுகொலை ராமனின் நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். ராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து ராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும்… நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற ராமனின் செயல் கோழைத்தனமானதும் பேடித்தனமானதுமாகும். வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப் பட்ட படுகொலையாகும். வாலியையும், ராவணனையும் ராமன் கொன்றதற்கு, தன் மனைவி சீதையின் மேல் கொண்ட அன்பினால் அல்ல, அதிலும் தனிப்பட்ட சுயநலமே ராமனிடம் இருந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அம்பேத்கர்.
மனித மனம் படைத்த பாமர மனிதன்கூட துயரம் கவ்விய நிலையி-லுள்ள மனைவியிடம், ராமன் சீதை-யிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாகத் தோன்றுகிறது…… ராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான்: உன்னைச் சிறைப்பிடித்-தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்துப் பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்-பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. ராவண-னைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெரும் தொல்லையை மேற்கொள்ளவில்லை.
ராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்து இருக்க முடியும்? ராமன் அதோடு நிற்கவில்லை; சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்; உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். ராவணன் உன்னை களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்குப் பெரும் எரிச்சலூட்டுகிறது. “ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை ராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட ராமனைச் சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. சீதை கருவுற்றிருந்த காலத்தில் அவளை கொண்டு போய் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுகிறான் ராமன். பிறகு பல ஆண்டுகள் கழித்து இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு அவளை சந்திக்கிற ராமன் அப்போதும், அவளை சந்தேகித்து, தீயில் இறங்கி அவள் நேர்மையை நிரூபிக்கச் சொல்கிறான். அப்படி நிரூபித்த பிறகு, பூமியை இரண்டாகப் பிளந்து அதனுள் இறங்கி விடுகிறாள் சீதை.
இதை டாக்டர் அம்பேத்கர் மிகுந்த கோபத்தோடு இப்படி குறிப்பிடுகிறார். காட்டுமிராண்டித்தனமானவனை விட கேவலமாய் நடந்துகொண்ட ராமனோடு மனைவியாய் திரும்பப் போவதைக் காட்டிலும் சீதை மரணத்தையே விரும்பி ஏற்றுக் கொண்டாள். கடவுளான ராமனின் கயமையும் சீதையின் துயரமும் இவ்வாறு காணப்படுகிறது. ராவணன் பெண் பித்தன், ராமன் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று உயிராக வாழ்ந்தவன் என்று மூணு பொண்டாட்டிக்காரன் கதாகாலட்சேபம் செய்வதுபோல், பல பெண் பித்தர்களும், பக்தர்களும் ராமனுடைய சிறப்பு ஏக பத்தினி விரதன் என்று சொல்கிறார்கள். ஆனால் டாக்டர் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தில் இருந்து ஏகப்பட்ட எடுத்துக்-காட்டுகளோடு, ராமன் ஒரு ஸ்திரீலோலன் என்று நிரூபித்திருக்கிறார்.
அம்பேத்காரின் ராமாயணம்?: ராமன் ஏக பத்தினி விரதன் என்பது ஒரு சிறப்பாகக் கூறப்படு-கின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்து கொள்ள முடியாததாக உள்ளது. வால்மீகியேகூட தன் ராமாயணத்தில் ராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதைக் குறிப்பிடுகிறார். மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் ராமன் வைத்திருந்தான். ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்குப்பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆசாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரச-வைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தை கழித்தான். அந்தப்புரப் பெண்களுடன் கூடிக் களித்து அயர்ந்திட்டால் கோமாளிகளுடன் பேசிக் களிப்பான். கோமாளி-களுடன் பேசிக் களைப்புற்றால் அந்தப்புரப் பெண்களை நோக்கி ஓடுவான். ராமன் அந்தப்புரப் பெண்-களோடு அனுபவித்த களியாட்டங்கள் வால்மீகியும் மிக விசாலமாகவே விவரிக்கிறார். ராமன் அளவுக்கு அதிகமாகவே குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்-தான். அப்படிக் குடித்து விட்டு அவன் ஆடும் களியாட்டத்தில் சீதையையும் கலந்து கொள்ளச் செய்தான், என வால்மீகி குறிப்பிடுகிறார். அழகிகளின் மத்தியில் ராமன் குடித்துக் கூத்தாடி கலந்து மகிழ்ந்து களிப்புற்றுக் கிடந்தான். அப்-பெண்களெல்லாம் ராமனை மகிழ்-விக்கப் பெரும் பாடுபட்டனர்.
ராமன் ஏக பத்தினி விரதன் அல்லன்;. ஏகப்பட்ட பத்தினிகள் விரதன் என்று அம்பலப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர். இந்த ராமனின் ராஜ்ஜியம் வர வேண்டும் என்பதுதான் காந்தியின் கனவாக இருந்தது. காந்தியின் கனவு நனவாகி இருந்தால்.. நினைக்கவே கூசுகிறது. உண்மையில் ராம ராஜ்ஜியம் என்பது, காம ராஜ்ஜியம்தான். ராமனை, இப்படி எல்லாம் கொச்சைப்படுத்தலாம். ஆனால் அவன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினான். நீதி, நேர்மை தவறாமல் ஆண்டான். அவன் ஆட்சியில் எல்லா உயிர்களும் நிறைவாக மகிழ்ச்சியாக வாழ்ந்தன. நீதி தவறாத ராமனின் ஆட்சியைத்தான் ராமராஜ்ஜியம் என்றார், மகாத்மா. அந்த ராமனின் ஆட்சியைத்தான் வலியுறுத்தினார் காந்தி மகான். என்று காந்திய ஆதரவாளர்களான இந்து மிதவாதிகள் விவாதிக்கக் கூடும். இந்த வாதத்தை ஊதித் தள்ளுகிறார் டாக்டர் அம்பேத்கர். காந்தியத்தின் அரை-ஆடையும் அம்பேத்கரின் அறிவுக்கு முன் பறந்துபோய் நிர்வாணமாகிறது.
நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்-களின் பழக்கத்தைக்கூட ராமன் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை ராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகிறார். அதுவும் துயரமான நிகழ்ச்சியாக அமைகிறது. அக்குறையைத் தானே தீர்த்திடுவதாய்ப் பொறுப்பேற்கிறான் ராமன். அப்படி செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் ராமன். அதுவே சூத்திரனான சம்புகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.
பொய்களை அடுக்கும் நாத்திக வேடதாரிகள்: பிராமணச் சிறுவன் ஒருவன் அகால மரணமடைய நேர்ந்தது.. அரண்மனையின் வாசலில் பிணத்தைக் கிடத்திவிட்டுக் கதறி அழுதான். தன் பிள்ளையின் சாவுக்கு ராமனே காரணமென நிந்தித்தான். மன்னனின் ஆட்சியில் படிந்திட்ட பாவந்தான் தன் மகனின் மரணத்திற்குக் காரணம் என்றான். மனம் போனபடி, பழித்தான், சபித்தான். குற்றவாளியைப் பிடித்துத் தண்டித்துச் செத்துப்போன தன் மகனைப் பிழைக்கச் செய்யாவிட்டால் அரண்மனை வாசலிலேயே பட்டினிப் போர் நடத்தித் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்-தினான்…. நாட்டு மக்களுள் அதாவது ராம ராஜ்ஜியத்தில் யாரோ ஒரு சூத்திரன் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். தரும (புனித) சட்டங்களின்படி பிராமணர்கள் மட்டுமே தவம் செய்யலாம். பிராமணர்-களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரர்-களுடைய கடமை என்று மேலும் நாரதன் கூறினான். தருமத்திற்கு எதிராக ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம், குற்றம் என்று ராமன் திடமாய் நம்பினான்… உடனே தன் தேரில் ஏறி நாட்டைச் சுற்றி வந்தான். அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒருவன் கடினமானதொரு தவத்திலாழ்ந்திருப்பதைக் கண்டான். இராமன் அவனை நோக்கிப் போனான். அந்தத் தவம் செய்து கொண்டிருந்தவன் தான் சம்பூகன் என்னும் சூத்திரனா? மனித உருவிலேயே மோட்சத்திற்குச் செல்லத் தவம் செய்பவனா? என்று கூடக் கேட்டறியாமல், விசாரணையோ, எச்சரிக்கையோ, உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ இன்றி சம்பூகனின் தலையைச் சீவி விட்டான் ராமன். அதே நொடியில் எங்கே தொலைதூரத்து அயோத்தியில் அகால மரணமடைந்த பிராமணனின் மகன் மீண்டும் உயிர் பெற்றானாம்.
ஒரு மனிதன் எந்த நேரமும் குடி, பல பெண்களுடனான உறவு என்று ஊதாரியாக வாழ்வது மோசமானது. அதுவும் ஒரு மன்னன் அப்படி இருந்தால், அது எவ்வளவு கேவலமானது? ஆனால், சம்பூகனை கொலை செய்த ராமனின் செயலை அவனுடைய ஊதாரித்தனமான பாலியல் லீலை-களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ராமனின் காம லீலைகள் எவ்வளவோ முற்போக்கானவை. படுகொலை செய்து முறையற்ற தீர்ப்பு வழங்கி அநீதிக்கு வழிவகுத்த ராமனை மேலும் ஆட்சி அதிகாரத்தில் தலையிடவிடாமல் பார்த்துக் கொண்டு, அந்தப்புரத்திலேயே வளைத்து வைத்திருந்த அந்த அழகிகளுக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும். சம்பூகன் என்னும் சூத்திரனை பார்ப்-பானுக்காக, பார்ப்பனியத்தை பாது-காப்பதற்காக கொலை செய்த ராமனின் தோலுரித்த டாக்டர் அம்பேத்கர் சிலையின் கழுத்தை உடைக்கிறார்கள், நன்றிகெட்ட சூத்திரர்கள்.
வே. மதிமாறன் எழுதிய “நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை” நூலில் இருந்து (பக்கம் 52_58)
தகவல்: விடுதலை தமிழ்ச்செல்வன், தருமபுரி.