Followers

Sunday, December 21, 2014

தனது வாரிசுகளாலேயே கொல்லப்படும் வயதான பெற்றோர்!



கால்நூற்றாண்டுக்கு முன்னர் பெண் சிசுக்கொலைகள் நடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய தமிழ்நாட்டில் இன்று பெற்றோர் கொலைகள் நடக்கத் துவங்கியிருக்கின்றன.

தமிழ்நாட்டின் முதியோர் பராமரிப்பின் மோசமான நிலைமையே இத்தகைய மவுனக்கொலைகள். இந்த நிலைமை உருவானதற்கான சமூக, பொருளாதார, கலாச்சார பின்னணியை ஆராயும் பெட்டகத்தொடரின் முதல் பகுதி.

"100 கிராமங்களில் மட்டும் 200 பேர் கொலை?"

மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலைமை வெறும் மதுரைப் பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.

இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்ளப்பார்க்கிறார்கள்; அல்லது வேகவேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.

தற்கொலைத் தூண்டுதல் தவறினால் முதியோர் இல்லம்

மேலும் எல்லா வீட்டில் வேண்டப்படாத எல்லா முதியவர்களும் கொல்லப்படுவதும் இல்லை. பலர் தற்கொலையை நோக்கி படிப்படியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரை முதியோர் இல்லத்தில் பலவந்தமாக கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார்கள். சில சமயம் அந்த முதியவர்களுக்குத் தெரியாமலே கூட. இன்னும் பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகளை பொறுக்க முடியாமல் முதியவர்களில் பலர் தாமாகவே முதியோர் இல்லம் தேடி ஓடும் சூழலும் நிலவுகிறது.

தகவல் உதவி
பிபிசி
12-12-2014

வயதான காலத்தில் தம்மைப் பெற்ற பெற்றோர்களை இவ்வாறு கொல்லும் கல் நெஞ்சக்காரர்கள் தனது மகனாலோ அல்லது தனது மகளாலோ பிற் காலத்தில் இதே முறையால் கொல்லப்படலாம் என்பதை நினைத்துதான் பார்த்தார்களா?

அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப்பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(அல்-குர்ஆன் 17:23-24)

No comments: