Followers

Tuesday, December 09, 2014

மீத்தேன் - விஸ்வரூபமெடுத்தது.....



காரைக்குடி: காரைக்குடி பகுதியில் மீத்தேன் வாயு குறித்த ஆய்வுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததாலும், சோதனை கேபிள் வயர்கள் அறுத்து எறியப்பட்டதாலும், காவல் துறையினர் உதவியுடன் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

காரைக்குடி நகர் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மீத்தேன் வாயு இருப்பதாக செயற்கோள் மூலம் அறியப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் ஓ.என்.ஜி.சி மூலம் ஆய்வு மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டு அதற்காக சோதனை குழாய் இப்பகுதி முழுவதும் பதிக்கப்பட்டு வருகிறது. அதில் ஜீயோ டெஸ்டிங் என்று சொல்லப்படும் அதிர்வு கருவி பொருத்தப்பட்டு அதனை பூமிக்கு அடியில் வெடி மருந்து கொண்டு வெடிக்க செய்து அதன்மூலம் மீத்தேன் வாயு உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வினால் சில தினங்களுக்கு முன் காரைக்குடியில் சில வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து ஆய்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாம் தமிழர் உட்பட சில அமைப்புகள் இந்த ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆய்விற்காக பொருத்தப்பட்டிருந்த கேபிள்கள் மற்றும் கருவிகளை அறுத்து எரிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர். மேலும் கருவிகளை சேதப்படுத்தியதாக நாம் தமிழர் கட்சியினர் உட்பட முப்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடரந்து இன்றும் தொடர்ந்து காரைக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆய்வுப்பணி மேற்கொள்ளபட்டு வருகிறது. ஆய்வுப்பணியை நிறுத்துமாறு இன்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யபட்டனர்.

ஆய்வு நடைபெற்றுவரும் மேலமனக்குடி மற்றும் மாத்தூர் ஆகிய கிராமங்களில் தங்களது விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கு பதிக்கப்பட்டு இருந்த சோதனை கேபிள் வயர்களை அறுத்து விட்டனர். இதையடுத்து காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதோடு கிராம மக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவி்ல்லை.

தொடர்ந்து தங்கள் கிராமத்தி்ல் இதுபோன்று சோதனை மேற்கொண்டால் ஆய்வுக் கருவிகள் அனைத்தையும் தீயில் எரித்து விடுவதாக கிராம மக்கள் அதிகாரிகளிடம் எச்சரிக்கை செய்தனர். மீத்தேன் வாயு ஆய்விற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்ததால் சோதனை நடைபெற்ற பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு அப்பகுதிகள் பரபரப்புடன் காணப்பட்டது.

இதனிடையே இந்த சோதனை குறித்து அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது , இதனை முற்றாக மறுத்தனர். “பொதுமக்கள் அறியாமையினால் இப்படி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உண்மையில் இப்பகுதிகளில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என்பது குறித்துதான் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் ஒருசிலரின் துண்டுதலினால் மக்கள் இப்படி எதிர்ப்பு காட்டுகின்றனர்" என்கின்றனர்.



- அபுதாஹிர்
படங்கள்: சாய்தர்மராஜ்

நன்றி விகடன்

No comments: