Followers

Friday, December 26, 2014

அமீர்கானின் "பிகே" பார்தேன்! அதன் விமர்சனம்!



வேறு ஒரு கிரகத்திலிருந்து பறக்கும் தட்டில் வந்து பூமியில் இறங்குகிறார் பிகே(அமீர்கான்)! அது இறங்கிய இடம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம். அந்த பறக்கும் தட்டின் சாவி அவர் கழுத்தில் ஜொலிக்கிறது. பூமியில் அனைவரும் தங்கள் உடம்பை மறைத்துக் கொண்டு கண்ணியமாக செல்வதை ஆச்சரியத்தோடு பார்க்கிறார். அந்த வழியே வந்த ஒரு வழிப்போக்கன் இவரது கழுத்தில் ஜொலிக்கும் அந்த சாவியை ஏதோ விலையுயர்ந்த ஆபரணம் என்று தவறாக கருதி பிகேயிடமிருந்து பிடிங்கிக் கொண்டு ஓடி விடுகிறார். அந்த சாவி இல்லாமல் அவரது கிரகத்துக்கு திரும்ப முடியாது. எனவே அந்த சாவி எவ்வாறு கிடைக்கப் பெற்று திரும்பவும் தனது கிரகத்துக்கு செல்கிறார் என்பதுதான் கதை.

டைரக்டர் மிக நகைச்சுவையாக இந்த கதையை நகர்த்திச் சென்றுள்ளார். பூமியில் மக்களிடம் பேசுவதற்காக போஜ்பூரி பாஷையை கற்றுக் கொள்கிறார் பிகே. அந்த மக்களிடம் தனது சாவி எங்கு கிடைக்கும் யாரைப் பார்க்கலாம் என்று கேட்க, கடவுளை பார்.. அவரிடம் கோரிக்கை வை என்கின்றனர் எல்லோரும்.

ஒரு கடைக்கு செல்கிறார். 'எனக்கு கடவுள் வேண்டும்'

'15 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் எந்த கடவுள் வேண்டும்?' கடைக்காரர் சாமி சிலைகளை காட்டி கேட்கிறார்.

'எனது கோரிக்கை ஒன்றுதான். எல்லா கடவுளும் ஒன்றுதான் எனும் போது எனக்கு விலை குறைந்த கடவுளை தரவும்'

'அப்போ 15 ரூபாய் கடவுளை தருகிறேன்' கடைக்காரர் சிலையை தர வாங்கிக் கொள்கிறார் பிகே.

கடவுளை எந்த அளவு கீழ்த்தரமாக சித்தரிக்கின்றனர் என்பதை இந்த காட்சி அழகாக சொல்கிறது.

அடுத்து கதாநாயகி ஒரு பாகிஸ்தானிய முஸ்லிமை (அஃப்ராஸ்) பெல்ஜியத்தில் காதலிக்கிறாள். இந்த செய்தியை தனது பெற்றோருக்கு தெரிவிக்கிறார். 'இந்துவாக எங்கள் குடும்பத்தில் பிறந்த நீ ஒரு முஸ்லிமை காதலிப்பதா? கூடாது இதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்' என்று எதிர்க்கின்றனர் பெற்றோர். கதாநாயகியின் தந்தை தனது குருவான ஒரு இந்துத்வா மத துறவியிடம் இந்த செய்தியை கொண்டு செல்கிறார். அவர் செய்தியை கேள்விப்பட்டு

'பாகிஸ்தானிகள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள். உனது வாழ்வு வீணாகி விடும்' என்று அந்த இந்துத்வா துறவி கதாநாயகியை மிரட்டுகிறார். இந்த பேச்சுக்கள் ஸ்கைபில் (மடிக்கணிணியில்) நடக்கிறது. 'இல்லை! எனது காதலன் எனக்கு நம்பிக்கை துரோகியாக மாட்டான். நான் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்' என்று கண்டிப்புடன் கூறி தொடர்பை துண்டிக்கிறாள் கதாநாயகி.

அந்த இந்துத்வா துறவி சொன்னது போல் நம்மை இந்த பாகிஸ்தானி ஏமாற்றி விடுவானா என்ற யோசனையில் ஆழ்ந்த போது காதலனும் அருகில் வருகிறான். 'நாம் நாளை திருமணம் முடிக்கிறோம்'

'ஏன் என்ன அவசரம்?' -பாகிஸ்தானி

'அதெல்லாம் ஒன்றுமில்லை. நாளை நமது திருமணம் ரிஜிஸ்டர் ஆபிஸில் நடக்கிறது. மறக்காமல் வந்து விடு'

மறுநாள் ரிஜிஸ்டர் ஆபிஸில் கதாநாயகி காத்திருக்கிறாள். ஆனால் ஒரு சிறுவன் ஒரு காகிதத்தை கொடுக்கிறான். அதில் 'மன்னிக்கவும். திருமணம் முடிக்கும் மன நிலையில் நான் இல்லை' என்று எழுதியிருந்தது. தனது பெற்றோரும் துறவியும் சொன்னது சரியாகி விட்டதே என்று எண்ணி அழுதவளாக இந்தியா திரும்புகிறாள். ஆனால் இந்த பெண்ணை குடும்பத்தில் பெற்றோர் சேர்க்கவில்லை. எனவே ஒரு செய்தி சேனலில் ரிப்போர்ட்டராக சேருகிறார்.

அங்குதான் நமது கதாநாயகன் பிகேயை சந்திக்கிறாள். அதன் பிறகு பாகிஸ்தானி அவளை ஏமாற்றவில்லை. அந்த துண்டு சீட்டு வேறொரு பெண்ணுக்கு வந்தது. தவறாக நமது கததாநாயகியிடம் கொடுக்கப்பட்டது என்பதை நமது பிகே விளக்கி எல்லா நாட்டிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர் என்பதை உலகுக்கு விளக்குகிறார்.

இந்து, கிறித்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதத்தையும் இந்த படத்தில் ஒரு பிடி பிடிக்கிறார் டைரக்டர். மூன்று மதங்களிலும் புரோகிதம் எந்த அளவு வேரூன்றியுள்ளது என்பதை அழகாக விவரிக்கிறார். 'பெண்கள் கல்வி கற்கக் கூடாது' என்று இஸ்லாம் சொல்லவில்லை. பிறகு ஏன் பெண்கள் கல்வி கற்பதை எதிர்க்கிறீர்கள்? அந்த அதிகாரத்தை உங்களுக்கு கொடுத்தது யார்? என்ற கேள்வியையும் வைக்கிறார் டைரக்டர். இந்த கேள்வியானது தாலிபான்களைப் பார்த்து கேட்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.

கடவுளுக்கு நாம் கோரிக்கை வைத்தால் இடையில் இந்த இடைத் தரகர்களான புரோகிதர்கள் எதற்கு என்று பல இடங்களில் கேள்வி கேட்கிறார். "ஒரு தாய் தனது குழந்தைக்கு பசியறிந்து சோறு ஊட்டுகிறாள். அதற்கு காணிக்கை எதுவும் வாங்குவதில்லை. தாயை விட மேலான இறைவனிடம் கோரிக்கை வைக்க உண்டியலில் பணத்தை போடச் சொல்கிறீரே! இப்படி உண்டியலில் பணம் போடச் சொல்லி கடவுள் உங்களுக்கு கட்டளையிட்டாரா?' என்று புரோகிதர்களைப் பார்த்து பிகே கேட்கிறார்.

மூன்று மதங்களையும் பொதுவாக சொன்னாலும் பல இடங்களில் இந்துத்வாவாதியினர் செய்யும் அட்டூழியங்களை இந்த படம் மிக அழகாக தோலுரித்துக் காட்டுகிறது. பல இடங்களில் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தங்கள் திட்டத்தை இப்படி அம்பலப்படுத்தி விட்டார்களே என்ற கோபத்தில் நாடெங்கும் இந்துத்வாவாதியினர் இந்த படத்தை தடை செய்யக் கோரி போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டமானது இந்த படத்துக்கு மேலும் விளம்பரத்தை கொடுத்து அமோக வசூலைக் கொண்டிக் கொண்டிருக்கிறது. :-)

நேரமிருப்பின் படத்தை பாருங்கள்....


No comments: