Followers

Saturday, December 06, 2014

சாத்வி நிரஞ்சன் ஜோதி - பார்பனியத்துக்கு கிடைத்த வெற்றி!



"இந்த நாட்டில் உள்ள அனைவரும் ராமரின் பிள்ளைகளே, கிறிஸ்துவர், முஸ்லிம்களும் கூட ராமரின் பிள்ளைகள் தான். இந்தியாவில் இருந்து யார் ஒருவர் வெளிநாடு சென்றாலும் நாம், அனைவரும் இந்துஸ்தானி என்று தான் சொல்கிறோம். இதனை ஏற்று கொள்ள முடியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறலாம். டில்லியில் வரும் காலத்தில் ராமரின் மகன் ஒருவனே ஆட்சி செய்ய போகிறான் . டில்லியில் ராமரை பின்பற்றுபவர்கள் ஆட்சி வேண்டுமா ? சட்ட விரோதிகள் ஆட்சி வேண்டுமா ? டில்லி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" இவ்வாறு அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேசினார் என்று தினமலர் கூறுகிறது.

ஆனால் சில ஆங்கில நாளிதழ்கள் அவரது பேச்சை அப்படியே வெளியிட்டுள்ளன. இதை விட கடுமையான வார்த்தை. முறைகேடாக பிறந்தவர்கள் என்ற அர்த்தத்தில் இந்த பெண்மணி பேசியுள்ளார்.

"நீங்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகின்றீர்கள்?, இராமரின் மகன்களுக்கா (Ramzada) அல்லது முறைகேடாக பிறந்தவர்களுக்கா (har****da)?"

பிஜேபியில் அங்கம் வகிக்காத அனைவரும் முறைகேடாக பிறந்தவர்களாம். முற்றும் துறந்த ஒரு பெண் சாமியாரின் பேச்சைப் பார்த்தீர்களா? இந்த பெண்மணி யார்? இவரது பின்புலத்தைச் சற்று பார்போமா?

47 வயதாகும் சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி. உ.பியின் ஹமீர்புர் மாவட்டத்தில், கேவட் (நிஷாத்) என்னும் கங்கை நதியில் படகோட்டி, மீன்பிடித்து வாழும் தாழ்த்தப்பட்ட சாதியில் சாதியில் பிறந்தவர். ஃபதேபூரில் உள்ள சுவாமி பரமானந்த கிரியின் ஆசிரமத்தில் சமயக் கல்வி கற்று, சுற்றுப்புற கிராமங்களில் ராமாயண பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். விரைவில் ஒரு சிறந்த “கதா வாசக்” (பிரசங்கி) ஆக பிரபலமடைந்தார். 1980, 90களில் அயோத்தி இயக்கத்தின் ஊடாக சாத்வி உமா பாரதி, சாத்வி ரிதம்பரா ஆகியோருடன் இணைந்து அரசியல் களத்தில் குதித்தார். மற்ற இரு சாத்விகளும் கூட இவரைப் போன்றே தாழ்த்தப்பட்ட சமுதாயப் பின்னணி கொண்டவர்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இந்த பெண்மணி இவ்வளவு அநாகரிகமாக பேச எங்கு கற்றுக் கொண்டுள்ளார் என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். இனி இந்த பெண்மணியின் ராம பக்திக்கு வருவோம். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பற்றி ராமனின் என்ன ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை ராமாயணத்திலிருந்து பார்போம்.

தலைகீழாக நின்று கொண்டு தவமிருந்த சம்புகனைப் பார்த்து ராமன் கேட்கிறான்,

"நீ எந்த ஜாதியில் பிறந்தவன்? நீ எவரை நினைத்து இந்த தவம் செய்கிறாய்? நீ யார் பிராமணனா சூத்திரனா? உண்மையைச் சொல்" என்று கேட்கிறான்.

"மகாராஜாவே நான் சூத்திர ஜாதியில் பிறந்தவன்" என்றான் சம்புகன்.

அப்பொழுது ராமன் சொல்கிறான் "சம்புகா! இந்த யுகத்தில் சூத்திரர்கள் தவமிருக்க அதிகாரம் பெற்றிலர்; ஆகவே உன்னை வதைப்பது என் கடமை!" என்று ராமன் கூறி, கத்தியை வீசி சம்புகன் கழுத்தை வெட்டினான். அப்பொழுது தேவர்கள் புஷ்ப மாரி பொழிந்தார்கள். (ஆதாரம் வால்மீகி இராமாயணம் _ உத்தர காண்டம் _ 79ஆவது சருக்கம்).

இந்த பெண் அமைச்சர் போற்றி புகழும் ராமன் இவரது சாதியை தனதளவில் எந்த தரத்தில் வைத்துள்ளார் என்பது இப்போது தெரிந்திருக்கும். இறைவனை நினைத்து தவம் செய்த ஒரு சூத்திரனின் தலையை கொய்த ராமன் பின்பற்றத்தக்க ஒரு அவதார புருஷனா? இந்த வரலாறை முழுமையாக உள் வாங்கியிருந்தால் இந்த பெண்மணி இவ்வாறான பேச்சை பேசியிருப்பாரா?

இங்குதான் நாம் பார்பனியத்தின் வெற்றியை பார்க்கிறோம். தவம் செய்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த சம்புகனை கொன்ற ராமனை அதே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி என்ற பெண்மணிக்கு கடவுளாக்கி அதனை பிரசாரமும் செய்ய வைத்துள்ளார்கள். இது பார்பனியத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியல்லவா?

இங்கு மட்டுமல்ல.... கோவையில் நடந்தது என்ன? அங்கும் இஸ்லாமியரின் சொத்துக்களை குறி வைத்து அழிக்க மார்வாடிகளாலும், பார்பனர்களாலும் கொம்பு சீவி விடப்பட்டு களத்தில் இறக்கப்பட்டவர்கள் அருந்ததி இனத்தை சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்களே! இந்தியா முழுக்க பார்பனர்களின் வர்ணாசிரமத்தைக் கட்டிக் காக்க கறி வேப்பிலையாக பயன்படுத்தப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிறபடுத்தப்பட்ட மக்களே ஆவர். இதனை இன்று வரை சரியாக விளங்காமல் இஸ்லாத்துக்கும் கிறித்தவத்துக்கும் எதிராக ஆயுதம் ஏந்தும் தாழ்த்தப்பட்ட மக்களை நினைத்து ஒரு கணம் நாம் பரிதாபம்தான் பட முடியும். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் பார்பனர்களின் பிடியிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் விடுதலையாக வாய்ப்பே இல்லை. இருக்கும் ஒரே வாய்ப்பு இஸ்லாம் மற்றும் கிறித்தவ மதத்தை தழுவுவதுதான். அந்த வாய்ப்பையும் பாதிப்படைந்த தாழ்த்தப்பட்ட மக்களை வைத்தே அழிக்கப் பார்க்கிறது பார்பனியம். அதன் பல முயற்சிகளில் ஒன்றுதான் இந்த பெண் அமைச்சரின் பேச்சு!


No comments: