Followers

Showing posts with label மத நல்லிணக்கம். Show all posts
Showing posts with label மத நல்லிணக்கம். Show all posts

Monday, September 14, 2015

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119

இந்த ஒரு நபி மொழியை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களில் 80 சதமான பேர் உண்மையான இஸ்லாம் என்ன என்பதை விளங்காமல் பல பிரச்னைகளை தங்களுக்கும் தம்மைச் சார்ந்த சமூகத்துக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் 'இவை எல்லாம் எங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சென்று விட்டு விடும்' என்று வேறு சொல்கிறார்கள்..

மேலே உள்ள நபி மொழியில் சில நல்லறங்களை நான் செய்யாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பதிலை நாம் பார்க்கிறோம். ஷியாக்களுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் பகை: இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகை: கிறித்தவர்களுக்கும், பவுத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை: தவ்ஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வணங்கிகளுக்கும் பகை: என்று எங்கு நோக்கினாலும் பிரச்னைகளே!

முஸ்லிம்களை அழித்து அதன் மூலம் தாங்கள் மோட்சம் அடைந்து விடலாம் என்பது பெரும் பாலான இந்துத்வாவாதிகளின் நம்பிக்கை. இதற்கு அவர்களின் வேதங்களே தடையாக இருப்பதை ஏனோ இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை: முதலில் சக மனிதனை நிம்மதியாக வாழ வைத்தால்தான் நீ இறைவனை நெருங்க முடியும் என்று உலக மதங்கள் அனைத்துமே கூறுகிறது. ஆனால் மனித மனம் இதனை சிந்திப்பதில்லை. தலைவர்கள், இயக்கங்கள், குழுக்கள் என்ற பெயரில் அவரவர்க்கு தோதான வசனங்களை பிடித்துக் கொண்டு தினமும் ரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே! இவர்கள் நல்லது செய்யா விட்டாலும் சும்மா இருந்தாலே போதும்: பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். அதாவது உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமில்லையா?

சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! அந்த பாசம் வந்து விட்டால் முறுகல் விலகும்: அன்பு பெருகும்: மனிதம் தழைக்கும்:

Monday, April 27, 2015

ரத்ததானம் - நெகிழ வைத்த நிகழ்வு



(தங்களின் ரத்தத்தை யாரோ ஒருவருக்கு தானமாக கொடுக்க வரிசையில் நிற்கும் தவ்ஹித் சகோதரர்கள். துபாயில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் லதீஃபா மருத்துவ மனையில் நடத்திய ரத்த தான முகாமையே நாம் படத்தில் பார்கிறோம்.)

நேற்று மாலை நேர தொழுகைக்கு தவ்ஹீத் பள்ளிக்கு தொழச் சென்றிருந்தபோது ஒரு நிகழ்வு நடந்தது. ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அறுவை சிகிச்கைக்காக இரண்டு பாட்டில் ரத்தம் தேவைப்பட்டது. அந்த குடும்பத்தினர் ராஜகிரி தவ்ஹீத் ஜமாத் கிளையை அணுகினர். உடன் தவ்ஹீத் சகோதரர்கள் இரண்டு பேர் சென்று ரத்தம் கொடுத்துள்ளனர். ரத்தம் கொடுக்கும் ஒவ்வொருவருக்கும் 1200 ரூபாய் அன்பளிப்பாக ரத்த வங்கியில் அளிப்பார்களாம். அந்த பணத்தை வாங்காது 'அந்த ஏழை குடும்பத்துக்கே அந்த பணத்தை சேர்ப்பித்து விடுங்கள்' என்று அந்த இரு தவ்ஹீத் சகோதரர்களும் சொல்லி விட்டு வந்துள்ளனர்.

யாரோ ஒருவருக்காக தனது ரத்தத்தையும் கொடுத்து அதற்காக அளித்த அன்பளிப்பையும் அந்த ஏழை குடும்பத்துக்கே கொடுத்த அந்த தவ்ஹீத் இளைஞர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். இது போன்ற மனித நேயப் பணி தமிழகமெங்கும் சத்தமில்லாமல் ஏதோ ஒரு மூளையில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதே வேளை தவ்ஹீத் ஜமாத்தின் மேல் காழ்ப்புணர்ச்சியால் தினமும் ஏதாவது ஒரு அவதூறுகளும் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டக் கொண்டிருக்காமல் சமூகத்தில் சத்தமில்லாத மறுமலர்ச்சி அசுர வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர். அந்த சிறுபான்மையினரிலும் சிறுபான்மையாக ஏகத்தவ வாதிகள் உள்ளனர். இந்த சிறிய அமைப்பு பல ஆண்டுகளாக தமிழகத்தில் ரத்த தானம் கொடுப்பதில் முன்னணியில் இருந்து வருகிறது. சத்தமில்லாத ஆர்பாட்டமில்லாத புரட்சி.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Tuesday, January 27, 2015

10 முஸ்லிம்களின் உயிரைக் காத்த ஷாயில் தேவி!



சென்ற ஞாயிற்றுக் கிழமை பீஹாரின் அஜீஸ் பூர் நகரைச் சுற்றி இந்து முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. அஜீஸ்பூர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமம். இந்துத்வ தொண்டர்கள் வெறியோடு இந்த கிராமத்தில் புகுந்து முஸ்லிம்கள் நான்கு பேரை வெட்டிக் கொன்றனர். 25 முஸ்லிம் வீடுகளுக்கு மேல் தீ வைத்து நாசப்படுத்தினர். இதைப் பற்றி அக்கிராமத்தில் வாழும் ஷாயில் தேவி கூறுகிறார்.

'அந்த வெறி பிடித்த கூட்டம் ஆக்ரோஷமாக எங்கள் கிராமத்துக்குள் புகுந்தது. கொல்வதற்கு முஸ்லிம்களாக தேடினர். உடன் எனது பக்கத்து வீட்டு முஸ்லிம்கள் 10 பேரையும் எனது வீட்டுக்குள் மறைத்து வைத்தேன். எனது வீட்டுக்குள் புகுந்த அந்த கூட்டம் 'முஸ்லிம்கள் இங்கு இருக்கிறார்களா?' என்று அதட்டிக் கேட்டனர்.

'இங்கு யாரும் முஸ்லிம்கள் இல்லை' என்று பொய் சொன்னேன். வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனர். நான் சத்தம் போட்டு அவர்களை வெளியில் அனுப்பினேன். 10 உயிர்களை காப்பாற்றிய நிம்மதி கிடைத்தது' என்கிறார் ஷாயில் தேவி.

கலவரத்தில் தப்பி பிழைத்த 60 வயது ஆஷ் முஹம்மது கூறுகிறார் 'எங்கள் உயிரைக் காப்பாற்ற இறைவன் எங்களுக்கு ஷாயில் தேவியை அனுப்பியதாகவே உணருகிறோம். இவர் இல்லை என்றால் இன்று நாங்கள் உயிருடன் இல்லை' என்று நன்றி பெருக்கோடு கூறுகிறார்.

ஷாயில் தேவி மேலும் கூறும் போது 'முஸ்லிம்களை காப்பாற்றியது சிலருக்கு என் மேல் கோபத்தை உண்டு பண்ணியுள்ளது. சிலர் எனக்கு மிரட்டலும் விடுத்தனர். எனவே பயந்து போய் அருகில் உள்ள முஹம்மதின் வீட்டில் எனது இரண்டு பெண் குழந்தைகளோடு தஞ்சம் புகுந்து சில நாட்கள் வாழ்ந்தேன். மாவட்ட அரசு அதிகாரிகள் எனது உயிருக்கு உத்தரவாதம் கொடுத்ததால் இன்று எனது வீட்டுக்கு திரும்பியுள்ளேன்' என்கிறார்.

பீஹார் முதல்வர் ராம் மன்ஸ்ஹி 51000 ரூபாய் அன்பளிப்பாக ஷாயில் தேவிக்கு வழங்கியுள்ளார். போலீஸ் இந்துத்வாவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இவரைப் பாராட்டி காங்கிரஸ் கட்சி தனது கட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தன்று கொடியேற்ற வைத்து கௌரவித்தது.
பிஹார் காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஷாயில் தேவி அழைக்கப்பட்டு தேசியக் கொடியை ஏற்றுமாறு கவுரவிக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், "மிகவும் சாதாரணமானவளான என்னை, காங்கிரஸ் கட்சி அழைத்துக் கொடியேற்ற வைத்ததை மிகவும் பெருமையாக உணர்கிறேன்" என்றார். ஷாயில் தேவிக்கு புதிய வெள்ளை காட்டன் புடவையையும், சால்வையையும் பரிசாகத் தந்துள்ளனர் காங்கிரஸார். காங்கிரஸ் இதிலும் அரசியல் பார்கிறது. இவர்கள் முன்பு ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் இந்த நாடு இவ்வளவு கீழ்த்தரமான ஆட்சியாளர்களை பெற்றிருக்கிறாது. இன்று புண்ணுக்கு மருந்திடுகின்றனர்.

தகவல் உதவி
என்டிடிவி

பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் இது போன்ற நாட்டுப் பற்றுடைய சக மனிதர்களை மதம் கடந்து நேசிக்கும் பண்புடைய ஷாயில் தேவி போன்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். கொலைகாரர்களெல்லாம் ஆட்சிக் கட்டிலும் இது போன்ற நல்ல உள்ளங்கள் கிராமங்களில் ஏழ்மையில் வாழ்ந்து வருவது இந்தியாவுக்கே உள்ள முரண்பாடுகள். நாட்கள் இப்படியே சென்று விடாது. தெய்வம் நின்று கொல்லும். அந்த நாட்களில் ஷாயில் தேவி போன்ற நல்ல உள்ளங்களை இந்த நாடு தலைவர்களாக பெறும். அதற்காக பிரார்த்தனை புரிவோம்.

தகவல் உதவி
என்டிடிவி

http://www.ndtv.com/article/india/how-a-hindu-widow-saved-10-muslims-in-bihar-riots-651837

Thursday, January 22, 2015

எங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா!

எங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா



எங்க ஊர்ல வாணக்காரய்யா, வாணக்காரய்யான்னு ஒரு இஸ்லாமியர் இருந்தாரு. புதுக்கோட்டையில் இருந்து பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்தாரு. அவரைப் பத்தி எழுதணும்னு ஊருல விசாரிச்சேன், ஒருத்தருக்கும் அவரோட பேரு தெரியல. எல்லோரும் சொன்னது அவரு பேரு வாணக்காரருன்னுதான். இல்லேன்னா சாயப்பு (சாய்பு) வாணக்காரர். அதுவும் எங்க ஊருல அவரு மட்டும்தான் வெடி செஞ்சதாலயோ என்னமோ அவரோட பெயரை தெரிஞ்சிக்கணும்மனு யாருக்கும் தோணலையோ?

இந்து மத சம்பிரதாய சடங்குகளும், சாதிய பாகுபாடும் வலுவா இருக்கும் எங்க ஊருல, இந்து மதத்தை தவிர வேத்து மததுக்காரவங்கன்னு யாரும் கெடையாது. இவர்தான் பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம். சுத்துப்பட்டுல உள்ள எல்லா ஊருக்கும் தீபாவளி, கோயில் திருவிழா, கல்யாணம், சாவுன்னு எல்லாத்துக்கும் வாணவெடி செய்றதுதான் இவரு தொழிலு. பாதுகாப்பா வெடி செய்றதால கிராமம் மட்டும் இல்லாம டவுனுலேர்ந்து கூட வந்து வாங்கிட்டு போவாங்க.

வாணக்கார அய்யா, குடும்பத்தோட எங்க ஊருக்கு வந்த போது “புள்ளக்குட்டியோட வந்துருக்காரு இவருக்கு ஏதாவது உதவி செய்யணு”ன்னு நெனச்சு ஊர் காரங்க ஒரு முடிவு செஞ்சு இருந்துட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்தாங்க.
“ஐயனார் கோயில் எடந்தான் இருக்கு. உங்களுக்கு இஷ்டன்னா அதுல கொட்டகை போட்டுகிட்டு இருங்க”ன்னு சொன்னாங்க.
“சாமில என்னங்க இருக்கு, எல்லாத்துக்கும் மனசுதான் ஒத்துப் போகணும். புள்ளகுட்டியோட வந்த என்னை, முடியாதுன்னு சொல்லாம தங்க வச்சுக்கிறிங்கன்னு" சொன்னாரு வாணக்காரரு. ஐயனாரு எடத்த அல்லா காட்டுன வழியா நெனச்சு தொழில ஆரம்பிச்சு அமோகமா இருந்தாரு வாணக்கார அய்யா.

ஊருகுள்ள வாணக்காரய்யா வாணவெடிக்கு தனி மவுசு இருதுச்சு. ஒத்த வெடி, ஓல வெடி, அணுகுண்டு, பொதபொத வாணம் (புஸ் வாணம்), சங்கு சக்கரம், பென்சில் மத்தாப்பு, திருவிழா வெடி இவ்வளவுதான் அவர் செய்த வெடிகளோட வெரைட்டி. ஆனால் ஒவ்வொண்ணும் அவ்வளவு பாதுகாப்பா பாத்துப் பாத்து செய்வாரு. பிள்ளைகளோட பாதுகாப்பு கருதி வெடிகளோட மேல் அமைப்பு எல்லாம் களி மண்ணால செய்திருப்பாரு. சீக்கிரத்துல வெடி நமத்தும் போகாது. எந்த ஒரு வெடியும் வெடிக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் வரைக்கும் வெறும் மத்தாப்பு போல தான் வரும், பிறகு லேட்டாதான் வெடிக்கும். வெடிக்காத பென்சில் மத்தாப்புலக் கூட பாதி வரைக்கும் தவுடுதான் இருக்கும். அல்லா புண்ணியத்துலயோ அய்யனாரு புண்ணியத்துலயோ வாணக்காரையா சாவுற வரைக்கும் அவர் செய்த வெடியால எந்த விபத்தும் நடக்கல.

எங்க ஊரைச் சுத்தி இருக்குற இருபது கிராமத்துக்கு மேலேருந்து இவர்கிட்ட வெடி வாங்க வருவாங்க. ஊருக்கூரு திருவிழா வெடிங்கறது சீசனுக்கு தான் நடக்கும், ஆனா சாவுக்கு வெடி கட்றது தினமும் நடக்கும். அதனால வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். 40 வருசத்துக்கு மேல எங்க ஊருல தொழில் பாத்தாரு. ஆனா சொத்துன்னு எதுவும் சேத்து வைக்கல. ஒரு வீடு கூட சொந்தமா இல்ல. வேலையாளுக்கு நல்ல சம்பளம் கொடுப்பாரு. பசின்னு வர்றவங்களுக்கு சாப்பாடு போடுவாரு. ஊரு விசேசத்துக்கு நல்லா செய்வாரு. ரொம்ப நல்ல மனிதர்.

எங்க ஊருல சேவை சாதி, தாழ்த்தப்பட்ட சாதி குடும்பத்திலிருந்து தொழில் செய்றவங்களுக்கு வேலைக்கி கூலி கொடுக்க மாட்டாங்க. வருசம் பூரா செய்ற வேலைக்கி அறுவடை முடிஞ்சதும் நெல்லு தான் கூலியா வாங்கிக்கணும். அதே போலதான் வாணக்கார அய்யாவும் தீபாவளிக்கு வாணவெடிய கொடுத்துட்டு அறுவடை முடிஞ்சதும் நெல்லு வாங்கிக்கணும்னு முறை வச்சாங்க.

தீபாவளிக்கு வெடி குடுத்துட்டு யாருக்கு எத்தனை மரக்கா நெல்லுக்கு வெடி குடுத்தோங்கற கணக்க நோட்டுல எழுதி வச்சுக்குவாரு. அறுவடை முடிஞ்சதும் ஒவ்வொரு வீடா போய் நெல்லு வாங்கிக்குவாரு. சாதாரண மக்கள் மரக்கால் கணக்குக்கும், பணக்கார விவசாயிகள் மூட்டை கணக்குக்கும் வெடி வாங்குவாங்க. வெளியூரு சனங்களுக்கு வெடி விக்கும் போது காசு வாங்கிக்குவாரு. கருவேப்பிலை, கொத்தமல்லி மாதிரி கொசுறா ஓல வெடியும், பென்சில் மத்தாப்பும் கொடுப்பாரு. தீபாவளி சமயத்துல வெடி விக்கிற எடத்துல பிள்ளைங்க போய் நின்னா, மிட்டாய் மாதிரி வெடிக்காத மத்தாப்பு வெடிய கையில கொடுத்தனுப்புவாரு. வியாபாரி போல இல்லாம ஊர் மக்களோட தாயா பிள்ளையா பழகுனாரு.

வெடி செய்யறதுக்கும், வெடி மருந்துகள பாதுகாக்கறதுக்கும் ஊருக்கு ஒதுக்கு பக்கமா இருக்குற தென்னந்தோப்புல ஒருத்தர் இடம் கொடுத்தாரு. செஞ்ச வெடிய தீபாவளி சமயத்துல விக்கிறதுக்கு ஊருக்குள்ள சும்மாக் கெடந்து வீட்ட ஒருத்தங்க தந்தாங்க. நாலு தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் இவர்கிட்ட வேல செஞ்சாங்க. தென்னந்தோப்புல அழகான ஒரு குடிசை போட்டு, உக்காந்து வெடி கட்ட திண்ணை போட்டு, பேட்ரி ரேடியோவ்ல பழைய எம்.ஜி.ஆர். பாட்டுப் போட்டு வேலை செய்ற அழகே தனி. இத பாக்குறதுக்குன்னே தினமும் மாடு மேய்க்க அங்கதான் போவோம்.

வாணக்கார அய்யா சாதி மதம் பாக்காம எல்லா சாதியினரிடமும் சகோதர குணத்தோட பழகுவாரு. எங்க ஊரையும், இந்து ஆதிக்க சாதி பண்டிகையையும் மதிச்சு நடந்துக்குவாரு. இந்த ஊருல வியாபாரம் பாத்து பொழக்கிறதாலயும், ஐயனாரு சாமி எடத்துல குடி இருக்குறதாலயும் தானும் ஏதாவது செய்யணும்னு வருசா வருசம் ஐயனாரு திருவிழா, முருகனுக்கு மாசி மகம், பங்குனி உத்திரமுன்னு எல்லா திருவிழாவுக்கும் காசு வாங்காம வாணவெடி கட்டித் தருவாரு. சித்திரை திருநாளுக்கு முதல் நாள் இரவுலேர்ந்து மறுநாள் காலை வரைக்கும் விடிய விடிய கண்ணு முழிச்சு எந்த மனத்தடையும் இல்லாம சந்தோசமா சாமி புறப்பாட்டுல கூடவே வருவாரு. நன்றிக் கடனா ஐயனாருக்கு மட்டும் ஒரு படி கூடுதலா வெடி தருவாரு, காட்டுக்குள்ள புறப்புற்ற ஐயனாரு ஊருக்குள்ள வந்து சேர்ற வரைக்கும் விடிய விடிய வெடி சத்தத்துல ஊரே கிடுகிடுத்து போகும். பாக்க கண்கொள்ளா காட்சியா இருக்கும்.

வாணக்கார அய்யாவுக்கு மூனு பொண்ணுங்க. ஆம்பள பிள்ளை கிடையாது. அந்த பொண்ணுங்க வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டாங்க. முஸ்லீம் மத கட்டுப்பாட்டோட போட்ட முக்காடு எடுக்காம இருப்பாங்க. இந்த வெடித் தொழில் செஞ்சுதான் மூணு பொண்ணுவளையும் கட்டிக் குடுத்தாரு. வீட்லயே பந்தல் போட்டு ஊரு மணக்க பிரியாணி போட்டு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாரு. கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி அந்த கல்யாணமே எங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு. எங்க ஊருல ஒரு சில படித்த, நகரத்தோட பழக்க வழக்கம் வச்சுருந்த சில பெரிய மனிதர்களை தவிர, பெரும்பாலான சாதாரண மக்கள் இந்து மதத்து திருமணத்த தவிர வேறு மத திருமணத்த பாத்திருக்க வாய்ப்பில்லைதான். மொகத்துல பூப்போட்டு மூடி மறைச்சு முகமே தெரியாம நடந்த கல்யாணத்த பாக்குறதுக்கு எங்க ஊருக்கே வியப்பா இருந்துச்சு.

வாணக்காரையா தனிப்பட்ட நல்ல குணம்னா பசின்னு வர்ரவங்களுக்கு சாப்பாடு போட்றது தான். எந்த நேரமும் அடுப்பு எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். ஊர்க்காரவங்க யாரு அவரு வீட்டுக்கு போனாலும் சாப்புடாம விடமாட்டாங்க. பூக்காரம்மா, கூடை, மொறம் விக்கிறவங்க, வளையல் மணி விக்கிறவருன்னு பல சுமைதூக்கும் வியாபாரிங்கக் கூட சாப்பாட்டு நேரத்துக்கு சாயப்பூட்டுக்குப் போனா ரெண்டு சோறு திங்கலாம்னு போவாங்க. பாவப்பட்ட மக்க, மனுசங்க மனசறிஞ்சு சோறு போடும் பண்பு அந்த குடும்பத்துல எல்லாருக்குமே இருந்துச்சு.

இப்படி எங்கிருந்தோ வந்து ஊர் மனசுல இடம் பிடிச்சு ஊர் நல்லது கொட்டதுல கலந்துகிட்டு, இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாம பழகி வாழ்ந்த வாணக்காரைய்யா 75 வயசுக்கு மேல இறந்துட்டாரு. வாழ இடம் குடுத்த ஊர் சனங்க புதைக்க எடம் கொடுக்கறதுல தயக்கம் காட்டுனாங்க. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்குற எங்க ஊருல இவர் மதத்துக்குன்னு ஒரு சுடுகாடு இல்ல. அதால இவர எங்க பொதைக்கறது என்ற புது பிரச்சனை உருவாச்சு.

“நம்மோட தாயா பிள்ளையா பழகினாலும் எரிக்கிற எடத்துல பொதைக்க எப்புடி எடம் கொடுக்க முடியும். நாம பிரேதத்த கொண்டு போகும் போது கொம்பு ஊதி, தார தம்பட்ட அடிச்சு, சங்கு ஊதி கடைசி காரியம் பண்ணுவோம். அவங்க வேற மாதிரி செய்வாங்க இதெல்லாம் சரிபட்டு வராது. என்ன செய்யலாம்?” எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும் முடியல, ஊர்ல புது பழக்கத்த ஏற்படுத்தவும் முடியல ரெண்டுங் கெட்டான் மனசோட பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராம பாதி பொழுதுக்கு மேல இழுத்துகிட்டே போச்சு.

துக்கத்துக்கு வந்த வாணக்காரையா சொந்தக்காரங்க இந்த குழப்பத்த எதிர்பார்க்கல இங்கேயே அடக்கம் செய்யணுன்னு சொல்லவும் முடியல. நடந்த கொழப்பத்த பாத்துட்டு ஊருக்கு எடுத்துட்டு போய் அடக்கம் பண்றதா சொன்னாங்க. ஆனா ஊர்க் காரங்களுக்கு தூக்கிட்டு போவச் சொல்றதுல விருப்பமில்ல. வாணக்காரையா பழகின விதமும் ஊரு நல்லது கெட்டதுல பங்கெடுத்துகிட்ட முறையும் அவரை விட்டுக் கொடுக்க மனசில்லாம செஞ்சுருச்சு. இந்த ஊரை நம்பி வந்துட்டாரு இவ்வளவு காலமா நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகினாரு அதுவும் இல்லாம பாதில தூக்கிட்டு போனாங்கன்னா ஊருக்கு ஒரு இழுக்கா போயிரும்னு ஊர்க்காரங்க முடிவு வந்தாங்க.

“வாணக்காரையா சாதி மதம் பாக்காம எல்லார் கிட்டையும் நல்லா பழகினவரு. அவரும் இந்த ஊர்க்காரனாட்டம் கோயிலுக்கு வரி குடுத்து நல்லது கெட்டதுல கலந்துகிட்டாரு. அது மட்டும் இல்லாம அவரோட நல்ல நடத்தைக்கும், நல்ல மனசுக்கும் மதிப்பு குடுத்து நடந்துக்கணும். அவங்க ஒரு குடும்பம் இருக்குங்கறத மனசுல வச்சுகிட்டு இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்” என்று முடிவெடுத்தாங்க. எந்த சாதிக்காரங்க சுடுகாட்டுலயும் இல்லாம ஆத்துக் கரையோரமா அவங்களுக்குன்னு ஒரு தனி எடம் கொடுத்து அதுல பொதச்சுக்க சொன்னாங்க.

வாணக்காரையா இறந்ததும் அவர் மனைவி மட்டும் தனியா இருந்தாங்க. பொண்ணுங்க தன்னோட வந்து இருக்கும் படி கூப்பிட்டும் போக மறுத்துட்டாங்க. இது தன்னோட ஊரு இங்க இருக்குறவங்கதான் தனக்கு சொந்தக்காரங்க என்ற நெனப்போடு இருந்தாங்க. வெடி செய்றது கிடையாதுன்னாலும் பொண்ணுங்க குடுக்குற பணத்த வச்சுகிட்டு ஊர்க் காரங்க சில பேரு குடுக்குற நெல்ல வச்சுகிட்டு வாழ்ந்தாங்க. சும்மா இருக்க முடியாம ஊதுவத்தி செய்வாங்க. பத்து வருசத்துக்கு பிறகு நடக்க முடியாம படுத்த படுக்கையா போய்ட்டாங்க. பொண்ணுங்களுக்கு வந்து வந்து பாக்க முடியல. அதனால ஊர்க்காரங்க கிட்ட சொல்லிட்டு அந்தம்மாவ பொண்ணுங்களே கொண்டு போய்டாங்க.

அதுக்குப் பிறகு வாணக்காரையா குடும்பத்தை பத்தி எந்த சேதியும் தெரியல. இன்னைக்கும் எங்கூர்ல தீபாவளி பண்டிகையெல்லாம் பெரிய விசயமா கொண்டாடறது கிடையாது. வாணக்காரையா இல்லைங்கிறதுனாலயோ என்னமோ இப்பல்லாம் ஊருல பட்டாசு சத்தம் அதிகமாக கேக்கிறது இல்ல.

பட்டணுத்துல நான் பாத்த சிவகாசி பட்டாசெல்லாம் வாணக்கார அய்யா வெடி வகைங்களோடு ஒப்பிட்டால் ஒண்ணுமே இல்லை. ஏன்னா அந்த ஐயாவோட வெடியில சத்தம் மட்டுமில்ல, தன்னலம் கருதாக ஒரு அன்பு இருந்துச்சுன்னு இப்ப புரியுது.

-சரசம்மா
(இது கற்பனைக் கதையல்ல, உண்மைச் சம்பவம்)

நன்றி: வினவு தளம்


Monday, December 22, 2014

என் அருமை இஸ்லாமிய சகோதரனே .. .மன்னிப்பாயாக ,,,, !

என் அருமை இஸ்லாமிய சகோதரனே ...

பெரும்பான்மை இனத்தில் பிறந்த நான் உன் முன்னே வெட்கித் தலை குனிகிறேன் ...

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனபின்னரும் உன்னை வாக்கு வங்கியாக மட்டுமே உபயோகித்து வரும் அரசியலில் பெரும் பங்கு வகித்துள்ள இனத்தை சேர்ந்தவன் என்பதால் ....

வாடகைக்கு வீடு கேட்டு வரும் உன்னை தீவிரவாதியைப் போல நடத்தும் ஒவ்வொரு முறையும் என் மீதும் என் தேசத்தின் மீதும் காரி உமிழும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதனால்

உன் வழிபாட்டுத் தளத்தை அத்து மீறி இடித்ததுமில்லாமல் ... அதை ஒரு சாதனை என்று மார் தட்டிக் கொள்ளும் மிருகங்களின் மத்தியில் இயலாமையுடன் வாழ்ந்து வருகிறேன் என்பதனால் ...

என் இறைவனை காரணம் காண்பித்து உன் இறையான்மையையே கேள்விக்குரியாக்கிய கயவர்களை வளர விட்டதுமில்லாமல் , இன்று ஆளவும் விட்டுள்ளேன் என்பதனால் ....

என்னை நீ மன்னிப்பாயாக ,,,,

https://www.facebook.com/kishore.kswamy/posts/10203418662695632?fref=nf

Wednesday, December 10, 2014

மது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிராமம்!



மது, சூதாட்டம், வட்டிக்கு தடை –இப்படியும் ஒரு கிராமம்!

மது, கந்துவட்டி, கல்லாமை என திசைக்கொரு தளைகளில் சிக்குண்டு, இருட்டில் தவித்த மக்களை மீட்டு, தங்கள் கிராமத்தை மாதிரி கிராமமாக மாற்றியிருக்கிறது அம்மாப்பட்டினம் பொதுநல இளைஞர் பேரவை.

பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் சற்று உள்ளடங்கிய கிராமம்
அம்மாப்பட்டினம். ஊர் எல்லைகளில் வைக்கப்பட்டுள்ள ‘வட்டி தடை செய்யப்பட்ட கிராமம்’ என்ற அறிவிப்புப்பலகையே இக்கிராமத்தின் தனித்துவத்தை உணர்த்துகிறது.

சுமார் 2000 பேர் வசிக்கும் இக்கிராமத்தில் பலருக்குத் தொழில் மளிகை வியாபாரம். மீனவர்கள், விவசாயிகளும் உண்டு. “எல்லாருமே ஒரு காலத்தில் கடலை நம்பி பொழச்சவங்கதான். எங்கூர்ல இருந்து 12 கி.மீ தான் லங்கா. அந்தக்காலத்துல எங்க மூதாதைங்க, நம்மூர்ல மளிகைச் சாமான்களை வாங்கிட்டு படகுல போயி, லங்கா மலைத்தோட்டங்கள்ல வேலை செஞ்ச மக்கள் கிட்ட வித்து விட்டு வருவாங்க. 83ல நடந்த இனக்கலவரத்துக்குப் பெறவு, இந்த யாவாரம் முடங்கிப்போச்சு. அதுக்குப் பெறவு, தமிழ்நாட்டுல பல இடங்கள்ல மளிகைக்கடையை திறந்துட்டாங்க.

இப்ப 350க்கும் மேற்பட்டவுகளுக்கு அதுதான் தொழில். ஜனப்பிரியா மளிகை, தமிழ்நாடு மளிகை, சோழன் மளிகை, இந்தியன் மளிகை, தீன் மளிகை, நேஷனல் மளிகை… இந்த பேரை எந்த ஊர்ல பாத்தாலும் அது எங்க ஊராளுங்க கடைதான்!” என்கிறார் சையத் இப்ராஹிம். இவர் தான் இளைஞர் பேரவையின் செயலாளர். இளைஞர் பேரவையில் மொத்தம் 150 பேர் உறுப்பினர்கள். இந்தப் பேரவையை தொடங்க நேர்ந்த சூழலை விவரிக்கிறார் தலைவர் சாகுல் ஹமீது.

“எங்க தலைமுறை வரைக்கும் யாரும் பள்ளிக்கூடம் போனதில்லங்க, பையங்களை அஞ்சு வயசுலயே மளிகைக்கடைக்கி விரட்டிருவாங்க. மீன்தொழில் செய்றவங்க கடலுக்கு அனுப்பிருவாங்க. பாவம் பொண்ணுங்க. வெளியுலகமே தெரியாம முடங்கிக் கிடந்தாங்க. ஊருல இருந்த தொடக்கப்பள்ளி ஆள்வரத்து இல்லாம காத்தாடும். ஊருக்குள்ள நல்ல ஆஸ்பத்திரி இல்ல. பிரசவம் பாக்கனும்னாக்கூட, ஒரு வீட்டுல கதவைப் பேத்தெடுத்து அதுல புள்ளத்தாச்சியை படுக்க வச்சு தூக்கிட்டு மணமேல்
குடிக்கி ஓடுவாங்க.

இது இல்லாம, தண்ணியப் போட்டுட்டு, வந்து சண்டை சச்சரவுன்னு ஊரே கதிகலங்கிப்போவும்.இன்னொரு பக்கம் சூதாட்டம். ஓழைக்கிற காசு இப்பிடியே போனதால, கந்துவட்டி, மீட்டர் வட்டின்னு கிடைக்கிற இடத்துல கடனை வாங்குறது.. நாங்கள்லாம் கொஞ்சம் வெளியில் வந்து ஊரு உலகத்தை அறிஞ்ச பிறகுதான், எங்க ஊரோட நிலைமை உறைச்சுச்சு, ஊரை மாத்தணும்னு நாலைஞ்சு பேரு ஒன்னா சேந்தோம். பொதுநல இளைஞர் பேரவையை தொடங்குனோம்.

முதல்ல, வெளியூர்ல கடை வச்சிருக்கிற எங்கூரு ஆளுங்க எல்லார் கிட்டயும் நிதி திரட்டி ஆபத்துக்காலத்துக்கு உதவ ஒரு ஆம்புலன்ஸ் வாங்குனோம். அடுத்து, படிப்பு குறிப்பா பெண்பிள்ளைகளை பள்ளிக் கூடத்துக்குக் கொண்டு போகனும். ஜமாத்துல போய் கோரிக்கை வச்சோம். அவங்க எங்க கோரிக்கையை ஏத்துக்கிட்டு எல்லா பிள்ளைகளையும் கட்டாயம் ஸ்கூலுக்கு அனுப்பணும்னு அறிவிச்சாங்க. அதுக்கப்புறம் எல்லாம் படிப்படியா மாறிருச்சு…”ஆள் நடமாட்டமே இல்லாதிருந்த தொடக்கப்பள்ளி இப்போது பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக வளர்ந்துவிட்டது.

500க்கும் அதிக மாணவிகள். இப்பள்ளியில் படித்த மாணவிகள் பலர் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, சாஃப்ட்வேர் நிபுணர்களாகப் பணியாற்றுகிறார்கள். தொடக்கம் முதல் இப்போது வரை இப்பள்ளியின் தேர்ச்சி 100 சதவிகிதம்!

“தண்ணி அடிச்சிட்டு வந்து ஊருக்குள்ள ரகளை பண்றவங்ககிட்ட பணிவா பேசிப்பாத்தோம். பலனில்லை. ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு கண்டிச்சோம். அதையும் கேக்கலை. அதுக்குப்பிறகு அவங்க வழியையே கையில எடுத்தோம். அடிச்சுத் தொரத்துனோம். இப்போ பெரும்பாலும் எங்க ஊரைச் சேர்ந்த யாரும் மது சாப்பிடுறதில்ல. அப்படியே ஒருசிலர்
சாப்பிடணும்னாகூட வெளியூர் போயிடுவாங்க. ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடை இருந்தாலும் எஙக ஊர்ல இன்னைவரைக்கும்
மதுக்கடைக்கு இடமில்லே” என்கிறார் பேரவையின் பொருளாளர் முகமது இஸ்மாயில்.

காவல்துறை உதவியோடு வீதிக்கு வீதி நடந்த சூதாட்டத்தை அடியோடு ஒழித்த இளைஞர்கள். வட்டிக்கு எதிராக நடத்திய யுத்தம்தான் இக்கிராமத்தை வியப்புக்குறி ஆக்கியுள்ளது.

“விடியற்காலையில் காக்கா குருவிக்கு முன்னால 30க்கும் அதிக கந்துவட்டிக்காரங்க ஊருக்குள்ள வந்துருவாங்க. எல்லாரும்
கரூர்காரங்க. மணமேல்குடியில தங்கி தொழில் செஞ்சாங்க. 1000 ரூபா கடன் கேட்டா, 300 ரூபா வட்டி, 15 ரூபா சீட்டுக்காசு கழிச்கிக்கிட்டு 685 ரூபா கொடுப்பாங்க. 100 நாள்ல நாளுக்கு 10 ரூபா வீதம் 1000 ரூபா கட்டணும். ரெண்டுநாள் சேந்தாப்புல கட்டாம விட்டா, கெட்ட வார்த்தையில திட்டுவாங்க. பத்துநாள் கட்டலைன்னா சைக்கிளோ, வண்டியோ எது கெடந்தாலும் தூக்கிட்டுப் போயிடுவாங்க. நிறையப் பேர் அவங்ககிட்ட சிக்கி விடுபட முடியாம தவிச்சாங்க. சிலபேர் தற்கொலைக்குக்கூட முயற்சி செஞ்சாங்க. பல குடும்பங்கள் நிலை குலைஞ்சு போச்சு. ஒருநாள், எல்லா கந்துவட்டிக்காரங்களையும் கூப்பிட்டு, மொத்தமா எங்க கிராமத்துல இருந்து எவ்வளவு பணம் வரணும்னு ஒரு லிஸ்ட் கேட்டு வாங்குனோம்.

4 லட்சம் ரூபா. உடனடியா பேரவையைக் கூட்டி பேசி, ‘வட்டியில்லாத பொருளாதார மேம்பாட்டு மையம்’னு ஒண்ணுஆரம்பிச்சோம். ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, வெளியூர்ல இருக்கிற ஊர்க்காரங்ககிட்டயும் நிதி திரட்டுனோம். மொத்தம் 8 லட்ச ரூபா சேந்துச்சு. கந்து வட்டிக் காரங்களை அழைச்சு, அவங்களுக்குச் சேர வேண்டிய தொகையைக் குடுத்து, ‘இனிமே கந்துவட்டிக்காரங்கிட்ட யாரும் கடன் வாங்கக்கூடாது. கடன் தேவைப்பட்டா எங்ககிட்ட வாங்கிக்கலாம். ஒத்தப் பைசாகூட
வட்டியில்லை. கொஞ்சம் கொஞ்சமா கடனை அடைக்கலாம்’னு அறிவிச்சோம்.

இப்போ 300 பேர் கடன் வாங்கியிருக்காங்க. எந்த பிரச்னையும் இல்லாம போய்க்கிட்டிருக்கு” என்கிறார் சாகுல் ஹமீது.இந்த அமைப்பில் கடன் பெற, மத, இன அடையாளங்கள் அவசியமில்லை.

ஹாஜா முகைதீன், முகமது அலியாரோடு, மெக்கானிக் முருகன், சலவைக்கடை பன்னீர், சலூன்கடை கேசவன், மாட்டு வண்டி ராஜேந்திரன் என பலரும் வாடிக்கையாளரே.

“எங்க கிராமத்தில் எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உறவுக்காரங்களா வாழுறாங்க. இந்து, முஸ்லிம்னு நாங்க பிரிச்சுப்பாத்து உதவுறதில்ல. எங்க பேரவையில் ஒவ்வொருத்தரும் 10 தடவைக்கு மேல ரத்ததானம் செஞ்சவங்க. யாரோட ரத்தம், யாருக்குள்ள
போகுதுன்னு யாருக்கும் தெரியாது. யாரு கஷ்டப்பட்டாலும் எங்களுக்கு வலிக்கும். எங்க கரம் நீளும். எங்க ஊர்ல ஏழைகளே இருக்கக்கூடாது. இதுதான் லட்சியம். இந்த அமைப்பை ஒரு வங்கியா உருமாத்தணும். அதுக்காகத்தான் இப்போ வேலை செஞ்சுக்கிட்டு இருக்கோம்”. என்று புன்னகையோடு சொல்கிற முகமது இஸ்மாயிலைப் பார்க்க பெருமையாக இருக்கிறது.

- நன்றி… குங்குமம

தமிழக கிராமங்கள் அனைத்தும் இது போல் மாறி விட்டால் எவ்வளவு அழகாக இருக்கும். இளைஞர்கள் முயற்சிப்பார்களா?

Wednesday, November 26, 2014

மனித நேயத்துக்கு கிடைத்த பரிசு!



இது முஸ்லிம் இயக்கத்தின் மாநாடோ அல்லது ஆர்ப்பாட்டமோ அல்ல :அய்யம்பேட்டை டாக்டர் கோட்டை சாமி அவர்களின் இறுதி சடங்கு - மெய் சிலிர்த்தது தஞ்சை மாவட்டம்....!!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை,சக்கராப்பள்ளி முஸ்லிம்கள் நிறைந்து வாழக்கூடிய ஊராகும்.

இந்த ஊரில் டாக்டராக 40 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றியவர் டாக்டர் கோட்டை சாமி,

இவர் பணி புரிந்த காலத்தில் அய்யம்பேட்டை,சக்கராப்பள்ளி சுற்று வட்டார(வழுத்தூர், வடக்கு மாங்குடி, பசுபதி கோவில்) முஸ்லிம்களுடன் குடும்ப உறுப்பினரை போல உண்மையான தொப்புள் கொடி உறவாகவே பழகி வந்தார்.

பணத்தை மட்டுமே குறிக்கோளாய் வைத்து பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு மத்தியில் ஏழைகளுக்கு குறைந்த பணம் பெற்று சேவை புரிந்த நல்ல மனிதர் டாக்டர் கோட்டை சாமி...

இந்நிலையில் நேற்று அவர் விபத்தில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார், அவரது இழப்பு அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அந்த ஊர் மக்களையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அவரது உடலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது, அவரது உடலை காண பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களும் திரண்டு வந்து பார்வையிட்டனர்.

அவரது ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்கள் கலந்து கொண்டனர்.

இப்படியொரு நிகழ்வை கண்டு தஞ்சை மாவட்ட மக்கள் மெய் சிலிர்த்து பேசி வருகின்றனர்.

நன்றி : முகநூல் முஸ்லிம் மீடியா,

இந்துவின் உயிர் காக்க தன் உயிர் விட்ட முஸ்லிம்கள்!



உபியில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக கலந்து வாழும் ஓர் ஊர் மொராதாபாத். இங்கு சுமன் என்ற பெண் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இதனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த நுஃமான், தனீஷ் என்ற இரு இஸ்லாமிய இளைஞர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை காப்பாற்ற அந்த வெள்ளத்தில் குதித்தனர். ஆனால் நீரின் வேகம் அதிகரிக்கவே அந்த இளைஞர்களால் அந்த பெண்ணைக் காப்பாற்ற முடியவில்லை. இவர்களாலும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. ஆம். இந்த இரு இளைஞர்களும் நீரால் அடித்துச் செல்லப்பட்டனர். 36 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மூன்று உடல்களையும் ராணுவத்தினர் மீட்டனர்.

இரு இஸ்லாமிய இளைஞர்களின் சவ(ஜனாஜா) ஊர்வலத்தில் பல இந்துக்கள் தங்கள் தோள்களால் அந்த தியாகிகளை சுமந்து சென்றனர். வழி நெடுக இந்து பெண்கள் மலர்களை தூவி அந்த இளைஞர்களுக்கு தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். 'யாரோ சாலையில் இறந்து கிடந்தாலும் நமக்கென்ன என்று செல்பவர்களை பார்த்துள்ளோம். ஆனால் இந்த இளைஞர்கள் தங்கள் உயிரை விட மற்றவரின் உயிருக்கு மதிப்புக் கொடுத்த தன்மை எல்லோருக்கும் வந்து விடாது. இந்த இரு இளைஞர்களும் எங்கள் பார்வையில் உண்மையில் ஹீரோக்கள்' என்று புகழ்ந்தார் அந்த ஊரின் இந்துவான சக்தி மல்ஹோத்ரா.

'எங்கள் நகரம் சமூக ஒற்றுமையில் சிறந்து விளங்குவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது' என்கிறார் உள்ளூர் வாசியான முஸ்லிம் இக்ராம் குரைஷி. இறந்த மூன்று குடும்பத்தினருக்கும் தலா ஐந்து லட்சம் அரசு தரப்பில் வழங்கப்படும். அரசு உத்தியோகமும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதாரம்:

-முஸ்லிம் மிர்ரர்
-ஹிந்துஸ்தான் டைம்ஸ்
24-09-2014



குஜராத்தில் அப்பாவியான ஒரு முஸ்லிம் கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து அந்த சிசுவையும் வெளியில் இழுத்து நெருப்பில் இட்டவர்களும் நமது நாட்டிலேதான் வாழ்கிறார்கள். தனது உயிரையும் துச்சமாக மதித்து ஒரு இந்து பெண்ணை காப்பாற்ற முயற்சித்து உயிர் விட்ட இந்த இரு இஸ்லாமிய இளைஞர்களும் நமது நாட்டில்தான் வாழ்கிறார்கள். மனிதரில்தான் எத்தனை நிறங்கள்!

'ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்'

-குர்ஆன் 5:32

Monday, September 08, 2014

ஒரு ஏழை இந்து சகோதரருக்கு முடிந்தவர்கள் உதவுங்களேன்!



முத்துப்பேட்டை கொய்யா மஹால் அருகே பெட்டிக்கடை வைத்திருப்பவர் மணி .சமீபத்தில் இவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை யாரோ சில மர்ம ஆசாமிகள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் .இதனால் கடைக்குள் இருந்த அத்துனை பொருட்களும் தீயில் கருகி நாசமாயின .இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான மணி செய்வதறியாது திகைத்து நிற்கிறார் . பாதிக்கப்பட்ட மணியை பல்வேறு இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் நேரில் சென்று ஆறுதலை கூறி வருகின்றனர் .

இந்நிலையில் தீயில் கருகிய பொருட்களை மதிப்பீடு செய்வதற்காக நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்தின் சார்பாக கொய்யா மஹால் அருகே இருக்கும் அவரது வீட்டிற்கு சென்றோம் .

பின்னர் நம்மிடம் பேசிய மணி ,"நான் மீண்டும் எனது பெட்டி கடையை திறக்க முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்கேன் பாய் ,இப்போ என்கிட்டே அறவே பணம் இல்லே பாய் , என்றார்" .உடனே குறுக்கிட்ட நாம் ,"உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை படுகிறது என்றோம்" .

அதற்கு பதிலளித்த அவர் "எனக்கு சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் தேவைப்படுது பாய். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் உங்களது இஸ்லாமிய சகோதரர்களிடம் சொல்லி எனக்கு பண உதவி செய்ய சொல்லுங்க பாய்" என்று கண்ணீர் மல்க நம்மிடம் வேண்டுகோள் விடுத்தார் .

மணி என்பவர் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்பதாலும் ,அவர் பிறவியில் ஊனமாக இருப்பதாலும் ,இதை எல்லாம் காட்டிலும் மணி ஒரு சிறந்த மதநல்லிணக்க வாதி என்பதாலும் இதனை படிக்கும் எமது இஸ்லாமிய சொந்தங்களே ,நமது தொப்புள் கொடி உறவான ஒரு இந்து சகோதரனுக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்து அவரின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட இன்றே உதவி செய்து நாளை மறுமை வெற்றியாளர்களாக தங்களை ஆக்கி கொள்ளுங்கள் என்று அன்போடு வேண்டுகிறோம் .நீங்கள் இன்று செய்யும் உதவி ,நாளை அவரை இஸ்லாத்தின் பால் இணைக்க கூடும் என்றும் தெரிவித்து கொள்கிறோம் .

மணியை நீங்களே நேரடியாக தொடர்பு கொண்டு உதவிகளை செய்யலாம் :

மணி :அலைபேசி -9698548943

சந்திப்பு :ஜே :ஷேக் பரீத்
MA .JOURNALISM AND MASS COMMUNICATION
உறுப்பினர் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் ,
சென்னை





சகோதரர் மணியிடம் இன்று அலை பேசியில் பேசினேன். ரொம்பவும் வருத்தப்பட்டார். விநாயக சதுர்த்தி ஊர்வல நாள் அன்றுதான் மண்ணெண்ணையை ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார்கள்.

'உங்களுக்கு யார் மீது சந்தேகம்?' என்று கேட்டேன்.

'உள்ளூர் பாய்கள் யாரும் இந்த செயலை கண்டிப்பாக செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரிடமும் அண்ணனாகவும் தம்பியாகவும் பழகி வருகின்றேன். இதுவரை எங்களுக்குள் எந்த பிரச்னையும் வந்ததில்லை. முஸ்லிம்கள் அதிகம் உள்ள இந்த இடத்தில் ஒரு இந்துவின் கடையை கொளுத்தினால் அதன் மூலம் கலவரத்தை உண்டு பண்ணலாம் என்ற நோக்கில் யாரோ செய்திருப்பதாகத்தான் நினைக்கிறேன். குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல்ல என்னால் முடியவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் நான் அங்கு இல்லை. இருக்கும் பணத்தை வைத்து லாக்கர்களை சரி பண்ணிக் கொண்டிருக்கிறேன். வசதியுள்ளவர்கள் கடனாக கொடுத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்' என்று கூறுகிறார்.

சேத மதிப்பு இரண்டு லட்சத்துக்கும் மேல் என்கிறார். வசதியுடைய சகோதரர்கள் இந்த மாற்றுத் திறனாளிக்கு உதவி மனித நேயத்தை பேணுவார்களாக! அரசும் இது போன்றவர்களுக்கு உதவ முன் வர வேண்டும். அதிமுக பிரமுகர்களும் இதற்கு முயற்சிப்பார்களாக!

Sunday, September 07, 2014

இந்த படம் இந்துத்வாவாதிகளுக்கு சமர்ப்பணம்!



சென்ற வருடம் டெல்லி விஞ்ஞான் பவனில் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது. விருதை ஜனாதிபதி பிரணப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார். பீஹார் மாநிலத்தை சேர்ந்த யாஸ்மின் என்ற இஸ்லாமிய சகோதரியும் 2012 ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றுக் கொண்டார். அவ்வாறு விருதை வழங்கும் போது ஜனாதிபதி சம்பிரதாயமாக கையெடுத்து கும்பிடுகிறார். விருதை வாங்கும் சகோதரி யாஸ்மின் இஸ்லாமிய மரபுபடி தனது கைகளை இதயத்தில் வைத்து அவருடைய அன்பை ஏற்றுக் கொள்கிறார். அவரவர் மத பண்பாடுகளை எந்த வெறுப்பும் இல்லாமல் கடைபிடிப்பது நமது பாரதத்தில் தொன்று தொட்டு நிலவி வரும் கலாசாரம். இது தான் மத சார்பற்ற இந்தியா!

ஜனாதிபதியே கையெடுத்து கும்பிடும் போது இவரும் கும்பிட வேண்டியது தானே என்று சில இந்துத்வாவாதியினர் கேட்கலாம். கையெடுத்து கும்பிடும் இந்த பழக்கமானது வெறும் சம்பிரதாயமாக முடிந்து விடுவதில்லை. மனிதனை தெய்வமாக மாற்றக் கூடிய வழமை வருவதற்கு முதல்படியே இந்த கையெடுத்து கும்பிடும் வழக்கம்தான். சுய மரியாதை உடைய ஒரு மனிதன் சக மனிதனை கடவுளாக நினைக்கவே மாட்டான். என்னதான் அவர்கள் மனித புனிதர்களாக இருந்தாலும் கடவுள் நிலையை மனிதன் அடையவே முடியாது.

மனிதப் புனிதர்களாக கருதப்பட்ட சாய்பாபா, நித்தியானந்தா, ஜெயேந்திரர் போன்றவர்களலெல்லாம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்குண்டு, அதை மறைக்க கொலை வரை கூட சென்றதை நாம் மறந்து விட முடியாது. சாதாரண மனிதர்களாகிய நமக்கு இருக்கும் சுய கட்டுப்பாடு கூட 'மனித தெய்வம்' என்று கூறக் கூடிய இவர்களிடம் இல்லாதது இவர்கள் என்றுமே கடவுளாக முடியாது என்பதை தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்து மத வேதங்களும் பழந் தமிழ் இலக்கியங்களும் இது போல் மனிதனை தெய்வமாக பூஜிக்க சொல்லவில்லை. இவை எல்லாம் பிற்காலத்தில் கலாசார மாற்றத்தினால் ஏற்பட்ட புதிய பழக்கங்கள் ஆகும்.

எனவேதான் நபிகள் நாயகம் தான் சபைக்கு வரும் போது தனக்காக யாரும் எழுந்து நிற்க வேண்டாம் என்று தடை செய்ததைப் பார்க்கிறோம். தனது காலில் யாரும் விழக் கூடாது என்று மனிதனுக்கு சுய மரியாதையை கற்றுத் தந்ததையும் பார்க்கிறோம்.

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.

நூல் : அஹ்மத் 12093

'அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறெதனையும் நான் பின்பற்றுவதில்லை' என்று முஹம்மதே! கூறுவீராக! 'குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன் 6:50)

'அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்' என்று முஹம்மதே! கூறுவீராக!

(திருக்குர்ஆன் 7:188)


குர்ஆனின் இந்த இரு வசனங்களும் நபிகள் நாயகமாக இருந்தாலும் அவர்களும் நம்மைப் போன்ற ஒரு மனிதர்தான். அவருக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு அவருக்கு வரும் இறை செய்திதான் என்பதை விளங்குகிறோம். எனவே மனிதர்களை மதிப்போம். அதே நேரம் அந்த மனிதர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தாமலும் இருப்போம்.!

மசூதியின் தண்ணீர் இந்துக்களுக்கு இலவச விநியோகம்!



குஜராத்தின் அஹமதாபாத் நகரில் தாரியாபூர் என்ற சிற்றூர் உள்ளது. இங்குள்ள மசூதியில் 5:30 மணிக்கு காலை தொழுகைக்காக குழாய்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த குடி தண்ணீரை சுமார் 2000க்கும் மேற்பட்ட இந்துக்கள் தினமும் தங்கள் குடும்பத்துக்காக குடங்களில் எடுத்துச் செல்கின்றனர். இதற்கான செலவுகள் அனைத்தையும் முஸ்லிம்களே ஏற்றுக் கொள்கின்றனர்.

இதே அஹமதாபாத் நகரில் கவுஸர் பீவி என்ற ஒரு இஸ்லாமிய கர்பிணி தாயின் வயிற்றை கிழித்து அதன் உள் இருந்த சிசுவையும் நெருப்பில் இட்டு பொசுக்கினார்களே! இந்திய வரலாறு அதனை என்றுமே மறக்காது. அதே ஊரில் அதற்கு பரிகாரமாக முஸ்லிம்கள் இந்து தாய்மார்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

இதுதான் இஸ்லாம்.

பங்கஜ் பர்வ் என்ற இந்துத்வவாதி இதற்கு பின்னூட்டம் இடும் போது....

'இது பாகிஸ்தான் மஸ்ஜித் அல்ல. இந்தியர்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மஸ்ஜித். அதில் எங்களுக்கும் பங்குண்டு'

என்று கூறுகிறார். என்னதான் இஸ்லாமியர்கள் நேசக்கரம் நீட்டினாலும் இது போன்ற இந்துத்வாவாதிகளினால் என்றுமே பிரச்னைகளை இந்த சமூகம் சந்தித்துக் கொண்டேதான் இருக்கும். இது போன்ற அற்ப பதர்களை தூரமாக்கி 90 சதவீதமான நல்ல மனம் கொண்ட இந்துக்களை நாம் பகைக்காமல் இந்த நாட்டை சாதி சமய மோதலற்ற நாடாக மாற்ற முயற்சிப்போமாக!



இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்

-திருக்குறள்

'நமக்குத் தீமை செய்பவர்களை தண்டிக்க அவர் வெட்கப்படும்படியாக நன்மையை செய்துவிடுங்கள்.




Wednesday, September 03, 2014

மஹாத்மா காந்தியின் மகன் இஸ்லாத்தை ஏற்றதைப் பற்றி.....



மஹாத்மா காந்திக்கு நான்கு புதல்வர்கள். ஹரிலால், மணிலால், ராமதாஸ், தேவதாஸ் என்ற நான்கு ஆண் குழந்தைகள் காந்திக்கு பிறந்தனர். மஹாத்மா காந்தி கஸ்தூரிபாயை மணக்கும் போது வயது 13. பால்ய விவாகம் அன்றைய இந்தியாவில் பலரும் கடைபிடித்தால் இது நமக்கு ஆச்சரியத்தை தராது. காந்திஜிக்கு 18 வயதாகும் போதே முதல் மகன் பிறக்கிறார். கடைக்குட்டியான ஹரிலால் சிறுவனாக இருக்கும் போது காந்தி ஆப்ரிக்கா சென்று விடுகிறார். அதன் பிறகு இந்திய விடுதலை போராட்டமும் சேர்ந்து கொண்டதால் குழந்தைகளோடு அதிக நேரத்தை காந்தியால் செலவிட முடியவில்லை.

இளமையில் தந்தையின் அன்பு கிட்டாததாலோ என்னவோ இறக்கும் வரை காந்தியோடு முறுகல் நிலையையே கடைபிடித்தார் ஹரிலால். பிரிட்டிஷார் காந்தியை பழி வாங்குவதற்காக அவருக்கு போதை பழக்கத்தையும் விபசாரிகளிடம் செல்லும் பழக்கத்தையும் கற்றுக் கொடுத்தனர் என்றும் சொல்கின்றனர். இவரது மனைவி ப்ளூ ஜூரத்தினால் பாதிக்கப்பட்டு இள வயதிலேயே இறந்து விட்டார். மூன்று குழந்தைகள். மறுமணம் செய்து கொள்ள ஹரிலால் விரும்பினார். ஆனால் காந்தி 'உனக்கு இன்னும் பொறுப்பு வரவில்லை' என்று கூறி திருமணத்தை தடை செய்து விட்டார். இதுவும் கூட தந்தையின் மேல் கோபம் கொள்ள வைத்திருக்கும்.

திடீரென்று ஒரு நாள் மும்பை ஜூம்ஆ பள்ளிக்குச் சென்று 'நான் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்' என்று கூறி தனது பெயரை அப்துல்லாவாக மாற்றிக் கொண்டார்.

தாயாரான கஸ்தூரிபாவுக்கு இது மிகுந்த வேதனையைக் கொடுத்தது. இது பற்றி தனது கணவனான காந்திஜியிடம் கலந்துரையாடினார். இது பற்றி காந்தி தனது கடிதங்களில் விவரிக்கும் போது...

'மத மாற்றம் என்பது ஒரு மனிதனுக்கும் அவனைப் படைத்த இறைவனுக்கும் உள்ள விஷயம். மனம் சுத்தமாகாமல் பெயரை மட்டும் மாற்றிக் கொள்வதால் ஒரு மனிதனுக்கு எந்த பலனும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

இந்து மதமும், இஸ்லாமிய மதமும் எனது இரண்டு கண்களைப் போன்றது. என் மகன் ஹரிலால் அப்துல்லாவாக பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய மதத்துக்குள் சென்று விட்டதாக பத்திரிக்கைகளில் படித்தேன். ஏதோ ஒரு வகையில் என் மகனுக்கு சாந்தியும் சமாதானமும் இஸ்லாத்தின் மூலம் கிடைக்கும் என்றால் அது பற்றி எந்த ஆட்சேபணையும் எனக்கு இல்லை' என்றார் பெருந்தன்மையாக!

இஸ்லாம் சொல்வதைத்தான் காந்தியும் பிரதிபலிக்கிறார். மனம் மாற்றமடையாமல் ஒரு மனிதன் தனது பெயரை மாற்றிக் கொள்வதால் மட்டுமே இஸ்லாமியனாகி விட முடியாது. மேலும் சில நிர்பந்தங்களை காண்பித்து ஒருவரை இஸ்லாத்தில் நுழைய வைப்பதையும் இஸ்லாம் தடுக்கிறது. குர்ஆனும் நபிகளின் பொன்மொழிகளும் ஒருவரின் இயலாமையை பயன்படுத்திக் கொண்டு இஸ்லாத்தில் நுழைவிப்பதை தடை செய்கிறது. சொல்வது மட்டுமே நமது கடமை. மனதில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது இறைவன் புறத்தில் இருந்து வர வேண்டியது.

இதனால்தான் நிர்பந்தத்திற்காக இஸ்லாத்தை ஏற்கிறேன் என்று வந்த ஒரு மன்னரையே ஒளரங்கஜேப் தடுத்த சம்பவம் வரலாறுகளில் காணக்கிடைக்கிறது.

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு. பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.

“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

உள்ளத்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.

History Of Aurangzeb, Page 249.

Thursday, August 28, 2014

மாற்று மதத்தவர்களுக்கான நிகழ்ச்சி - ரியாத்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!

இறைவன் நாடினால்.... எதிர் வரும் 29/8/2014 அன்று இரவு 7 மணிக்கு மேல் பத்தாஹ் ரமாத் ஹோட்டலில் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களுக்குத் தெரிந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களை உடன் அழைத்து, தாங்களும் வந்து கலந்து சிறப்பித்துத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

Tuesday, August 26, 2014

இந்து சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய அமைப்பு!



துபாய்: இந்து சகோதரருக்கு இறுதிச் சடங்கு செய்த இஸ்லாமிய அமைப்பு

துபாயில் இறந்து போன தமிழகத்தைச் சேர்ந்த ஜெயராமனின் உடலுக்கு இஸ்லாமிய அமைப்பான ஈமான் அமைப்பின் முயற்சியில் 16.04.2014 புதன்கிழமை துபாய் ஜெபல் அலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. துபாயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இறந்து எவ்வித தகவலும் இன்றி துபாய் மருத்துவமனை பிணவறையில் ஜெயராமன் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

துபாயில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் உதவியுடன் ஈமான் அமைப்பு கடலூர் மாவட்டத்திலுள்ள ஜெயராமன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அவரது உடலை துபாயிலேயே இந்து மத சம்பிரதாயப்படி இறுதிச்சடங்கு நடத்த ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு அனுமதிக் கடிதம் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து 16.04.2014 புதன்கிழமை காலை துபாய் ஜெபல் அலி மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இறுதிச் சடங்கில் ஈமான் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின், முஹம்மது உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த ஜெயராமனின் ஊரைச் சேர்ந்த இளவரசன் இந்து மத சம்பிரதாயங்களை நிறைவேற்றினார். அவரிடம் துபாய் காவல் துறையினர் ஜெயராமன் இறந்தபோது வைத்திருந்த பணம், கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

"எங்கே இருந்தாலும் மாற்று மதத்தினரை மதிப்பவன் தான் உண்மையான முஸ்லிம்".



நன்றி: tamil.oneindia.in

நபிகள் நாயகம் ஒரு சபையில் அமர்ந்திருந்த போது ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டது. அதைக் கண்ட நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து நின்றார்கள். உடனிருந்த தோழர்கள் இது யூதரின் பிரேதம் என்று சுட்டிக் காட்டினார்கள். அதைக் கண்டு கொள்ளாத நபிகள் நாயகம் அவர்கள் "அந்த பிரேதமும் ஆதமுடைய சந்ததி அல்லவா? உங்களை ஒரு பிரேதம் கடந்து சென்றால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள்" என்று கூறினார்கள்.

(ஆதாரம் புகாரி 1228)

நபிகள் நாயகம் அவர்களைக் கொலை செய்திட சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் முயன்ற போது அவர்களும் அவர்களின் நெருங்கிய தோழரான அபூபக்கரும் ஊரைவிட்டு இரகசியமாக வெறியேறினார்கள். மதினாவுக்கு செல்லும் வழியைக் காட்டுவதற்காக முஸ்லிம் அல்லாத ஒருவரை நம்பி அவரிடம் அப்பொறுப்பை ஒப்படைத்தார்கள். (ஆதாரம் புகாரி 2103)

இது போன்று பல சம்பவங்கள் நபிகளின் வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. மாற்று மதத்தவர்களை மதித்தே தனது வாழ்நாள் பூராவும் வாழ்ந்துள்ளார்கள். அன்பை விதைத்தார்கள்: சிறந்த அறுவடையை பெற்றார்கள்! அவர் வழியில் வந்த நாமும் அன்பையே விதைப்போம்! அனந்த சாகர், தருமி, அனந்தன் கிருஷ்ணன், சாரங்க் போன்ற நண்பர்களுக்கும் இன் முகத்துடனேயே பதில் கொடுப்போம். இன்றில்லா விட்டாலும் என்றாவது உண்மையை உணர்ந்து கொள்வார்கள்.


Monday, August 18, 2014

கிருஷ்ண ஜெயந்தியில் இஸ்லாமிய சிறுவர்கள்!



உத்தர பிரதேசத்தில் கிருஷ்ண ஜெயந்தி அன்று அந்த விழாவில் கலந்து கொள்ள ஒரு முஸ்லிம் பெண் தனது குழந்தைகளை கிருஷ்ணனின் வேடமிட்டு அழைத்துச் செல்வதைத்தான் நாம் பார்க்கிறோம். தமிழ் இந்து தளத்தில் மத ஒற்றுமைக்கு உதாரணமாக இதனை குறிப்பிட்டு ஒரு ஆர்ட்டிக்கிள் வந்துள்ளது. இதன் மூலம் மத ஒற்றுமை வந்து விடுமா என்றால் கண்டிப்பாக வராது.

மத மோதல்களே எதனால் வருகிறது? ஒருவர் மற்றவர் மதத்தை சரியாக புரிந்து கொள்ளாததாலேயே முறுகல் முற்றி அது மத சண்டையாக மாறி விடுகிறது.

அப்துல்லா என்ற ஒரு உபி கார்பெண்டர் எங்கள் கம்பெனியில் வேலை செய்தான். அவனது குடும்பம் பல தலைமுறைகளாக இஸ்லாமியர்களாக வாழ்ந்தாலும் இஸ்லாமிய அடிப்படையான தொழுகை எவ்வாறு தொழுவது என்பது கூட அவனுக்குத் தெரியவில்லை.

அவனது கிராமத்தில் பல முஸ்லிம்கள் வீட்டில் ராமனின் படமும் கிருஷ்ணனின் படமும் இருக்குமாம். ராமனின் நாடகமும் கூத்தும் நடக்கும் போது இவனும் நடனமாடுவானாம். ராம நாடகத்தில் நடனம் ஆட தெரிந்த இவனுக்கு ஐந்து வேளை தொழுகை எவ்வாறு தொழ வேண்டும். அந்த தொழுகையில் என்ன ஓத வேண்டும் என்று எதுவும் தெரியாமலேயே 25 வயது வரை வளர்ந்து பொருளீட்ட சவுதிக்கும் வந்துள்ளான். பிறகு அவனுக்கு இஸ்லாம் என்றால் என்ன? அவன் எவ்வாறு பலதரப்பட்ட மனிதர்க ளோடு வாழ வேண்டும்? அதற்கு குர்ஆன் சொல்லும் வழி என்ன? என்பதை பற்றியெல்லாம் இரண்டு ஆண்டுகள் அவனுக்கு தொடர்ந்து வகுப்பெடுத்தேன். இன்று குர்ஆன் காட்டும் ஒரு சிறந்த முஸ்லிமாக உபிக்கு சென்றுள்ளான்.

அவனிடம் நான் கேட்டேன் 'இவ்வாறு ஹிந்து கலாசாரத்தோடு வளர்ந்துள்ளாயே உனது கிராமத்தில் ஹிந்து முஸ்லிம் பிரச்னை வந்திருக்கிறதா?'

'அது அவ்வப்போது வரும். கொலை வரை கூட செல்லும்'

'அப்படி என்ன உங்களுக்குள் பிரச்னை வரும்?'

'அதிகமாக பெண் பிரச்னைதான். இந்து பெண்களை முஸ்லிம்கள் காதலிப்பதும், முஸ்லிம் பெண்களை இந்துக்கள் காதலிப்பதும் பிறகு பெரியவர்கள் தலையிட்டு அந்த காதலை தடுப்பதும் இதில்தான் அதிக பிரச்னை வரும். எனது சொந்தங்களில் கூட பல இளைஞர்கள் இன்றும் சிறையில் இருக்கிறார்கள்' என்றான்.

அந்த கிராமத்தில் இந்து கலாசாரத்தை இஸ்லாமியர்கள் உள் வாங்கியதால் கலவரம் குறைந்து விடவில்லை. மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே கலவரங்களை சந்திக்கும் மாநிலம் உபி. இதனை நாம் அறிவோம். ஒரு இஸ்லாமியன் எப்படி வாழ வேண்டும்? யாரை திருமணம் முடிக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாததால் இந்துத்வத்தை உள் வாங்கியும் அங்கு அமைதியை கொண்டு வர முடியவில்லை.

நமது தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். கடந்த 25 வருடங்களாக ஏகத்துவ சிந்தனை வந்தவுடன் 20 வயது 25 வயது இளைஞர்கள் கூட குர்ஆன் காட்டும் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தொடங்கினர். வன்முறைக்கு குர்ஆனின் வழியில் கிஞ்சிற்றும் இடமில்லை என்பதை உளப்பூர்வமாக உணர்ந்தார்கள். நம்மோடு ஒன்றாக பழகும் இந்து கிறித்தவ நண்பர்கள் அனைவருக்கும் மூலம் ஒரு தாய்தான் என்று போதிக்கப்படுவதால் அவர்கள் மேல் ஒரு சகோதரத்துவ பாசத்தை இந்த ஏகத்துவம் கொண்டு வந்துள்ளது.

சமூகத்திலிருந்து ஒதுங்கியிருந்த இஸ்லாமியர்களை பொதுத் தொண்டாற்ற பழக்கியது ஏகத்துவ இயக்கங்கள். இன்று தமிழகத்தில் ரத்த தானத்தில் பல வருடங்களாக முதல் இடத்தில் இருப்பது ஏகத்துவ இயக்கங்கள்தான். ஆம்புலன்ஸ் சேவை, அனாதை விடுதி, மரம் வளர்த்தல், முதியோர் இல்லம், பேரிடர் நடந்து விடும் போது ஓடி வந்து உதவும் குணம், கல்வியில் மறு மலர்ச்சி என்று சாதி மதம் பாராமல் இவர்கள் செய்த சேவைகள் இன்று தமிழகத்தை ஒரு அமைதிப் பூங்காவாக மாற்றியுள்ளது.

'இஸ்லாம் ஊர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்துக்களைக் கேள்வி கேட்க வைத்து அழகிய முறையில் பொறுமையாக பதிலளித்தது ஏகத்துவ இயக்கங்களே! தமிழகத்தின் அனைத்து கிராமங்கள் நகரங்களிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் பட்டதால் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட நினைத்த இந்துத்வாவாதிகளின் எண்ணத்தில் மண் விழுந்தது. ஒரு சில கொலைகள் நடந்ததும் கந்து வட்டி, பெண் பிரச்னை, ரியல் எஸ்டேட் என்ற உண்மையை தமிழக காவல்துறை அதிகாரியே பட்டியலிட்டதை நாம் பார்த்தோம்.

இதனையும் மீறி ஒரு சில கொலை, கொள்ளைகளை முஸ்லிம்கள் செய்திருந்தால் அவர்களின் பின்புலத்தை பார்த்தால் அவர்களிடம் தொழுகையோ இன்ன பிற வணக்கங்களோ இல்லாதிருப்பதை அவதானிக்கலாம். அந்த குற்றவாளிகள் ஏகத்துவ வாதிகளாக இல்லாததையும் நாம் பார்த்திருக்கலாம்.

எனவே ஒருவன் தவ்ஹீத் கொள்கையை அதாவது வஹாபிய கொள்கையை ஏற்றிருப்பதால் மாற்று மதத்தவர்களோடு முறுகல் நிலையை ஏற்படுத்தியதை பார்க்க முடியாது. அவனுக்கு தாய் மொழியான தமிழ் மொழிப் பற்றும் இருக்கும். சொந்த தாய் நாட்டை நேசிப்பவனாகவும் மாறி விடுகிறான். குர்ஆன் எதிர்பார்ப்பதும் இதைத்தான்.

எனவே இந்துக்கள் நோன்பு கஞ்சி குடிக்க தலையில் தொப்பியோடு போலியாக அமரவும் வேண்டாம். முஸ்லிம்கள் மத ஒற்றுமை என்ற பெயரில் கிருஷ்ணனாக வேடமிடவும் வேண்டாம். அவரவர் மதத்தை நன்கு விளங்கி அவர்களின் மதத்தில் பிடிப்புடன் இருந்தாலேயே மத ஒற்றுமை தானாக வந்து விடும். அதனை கடந்த 25 ஆண்டுகளாக தவ்ஹீத் ஜமாத்தினர் தமிழகத்தில் செயல்படுத்தியும் வருகின்றனர். தமிழகத்தை போன்றே இலங்கையிலும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் குறைந்த காலத்திலேயே மிகப் பெரிய தாக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தி வருவதை நாம் பார்க்கிறோம். தமிழகம் இலங்கை போன்று அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் தவ்ஹீத் சிந்தனை வளர வேண்டும். மத ஒற்றுமை மேலும் மேலும் வளர வேண் டும் என்று இறைவனிடம் நாம் பிரார்த்திப்போமாக!

Saturday, August 16, 2014

ரியாத்தில் நடந்த சுதந்திர தின சிறப்பு ரத்த தான முகாம்!



ரியாத்தில் நடந்த சுதந்திர தின சிறப்பு ரத்த தான முகாம் – 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

ரியாத்தில் இந்தியாவின் 68 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏற்பாட்டின்படி நேற்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ரியாத் மாநகரிலுள்ள கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டியில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில் 100 பேர் கலந்து கொண்டனர்.

அவர்களில் 66 பேரிடமிருந்து இரத்தம் தானமாக பெறப்பட்டது. இதில் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பலர் ரத்ததானம் செய்தனர். அதுபோன்று இந்தியர்களுடன் இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஏமன், சிரியா, எத்தியோப்பியா மற்றும் சவுதி நாட்டவரும் இந்த இந்திய சுதந்திர தின இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

இது தவ்ஹீத் ஜமாத்தின் ரியாத் மண்டலம் நடத்தும் 31 ஆவது இரத்ததான முகாமாகும். வளைகுடா நாடுகளில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் தவ்ஹீத் ஜமாஅத் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி தட்ஸ் தமிழ்

Wednesday, August 13, 2014

தாய்லாந்தில் வளர்ந்து வரும் இஸ்லாம்!



தாய்லாந்தின் புகழ் பெற்ற பள்ளிவாசலில் ரமலான் இரவுத் தொழுகையை நிறைவேற்றும் தாய்லாந்து முஸ்லிம்கள்!

தாய்லாந்தின் மக்கள் தொகையில் பவுத்தர்களுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருப்பவர்கள் முஸ்லிம்கள். இஸ்லாத்தின் வளர்ச்சி இங்கு மிகச் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வருட ஹஜ் பயணத்துக்காக 10000 பேர் தாய்லாந்திலிருந்து புனித மெக்கா வர இருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் ஒரு நாட்டுக்கு ஒதுக்கப்படடும் ஹஜ் கோட்டாவில் 20 சதவீதம் இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது. காரணம் மெக்கா பள்ளியின் விரிவாக்க பணிகளே!

பட்டாணி, யாலா, நரதிவாட், சாதுன் போன்ற ஊர்களிலிருந்து பெருமளவிலான தாய்லாந்து முஸ்லிம்கள் இந்த வருடத்திற்கான தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். ஆனால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே!

அரசு அதிகாரி கூறும் போது '95 சதவீதம் புத்த மதத்தை கொண்ட எங்கள் சமூகம் இஸ்லாமியர்களையும் அரவணைத்துச் செல்கிறது. இஸ்லாமியர்கள் எங்கள் நாட்டு மக்களோடு நட்புறவோடு பழகி இந்நாட்டின் முன்னேற்றத்திலும் சிறந்த பங்காற்றி வருகின்றனர். தாய்லாந்து அரசு சமீபத்தில் மிகப் பெரிய இஃப்தார் பார்ட்டியையும் ஏற்பாடு செய்திருந்தது.' என்கிறார்.

அவர் மேலும் கூறும் போது '800 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கல்விக் கூடங்கள் தாய்லாந்து முழுக்க பரவி உள்ளன. மசூதிகள் கிட்டத்தட்ட 3802 வரை ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் மாத்திரம் 177 பள்ளி வாசல்கள் உள்ளன. பவுத்தர்களும் இஸ்லாமியர்களும் எந்த பிணக்குமின்றி தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்' என்கிறார்.

தகவல் உதவி
அரப் நியூஸ்
26-07-2014

Tuesday, August 05, 2014

முஸ்லிம்களை 'பாய்' என்று அழைப்பதை நிறுத்துங்கள்!

திரு சன் கிரீன், பாண்டியன்!

//முதலில் ஹிந்துக்கள் முஸ்லிம் அன்பர்களை பாய் என்று அழைபதை நிறுத்தவேண்டும்.//

பல இந்துத்வாவாதிகளின் மனதில் உள்ள ஆற்றாமையை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். மனிதன் ஒரு மூலத்திலிருந்து பிறந்தவன் ஆனதால் உலக மக்கள் அனைவரும் சகோதரர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. இதனை உணர்ந்ததாலோ என்னவோ பெரும்பான்மையான இந்து சகோதரர்கள் இஸ்லாமியர்களாகிய எங்களை 'பாய்' அதாவது சகோதரரே என்று அழைக்கின்றனர். முஸ்லிம்களும் பதிலுக்கு அதனையே தமிழ்ப்படுத்தி 'அண்ணன், தம்பி' என்று அவர்களை அன்போடு அழைக்கின்றனர். தமிழக கிராமங்களில் இதனை அதிகமாக பார்க்கலாம். எங்கள் ஊருக்கு வரும் காவல் துறையினர் எப்போதாவது என்னைப் பார்த்தால் 'என்னங்க.... பாய்? சௌக்கியமா? எப்போ ஊருக்கு வந்தீங்க..' என்று அன்போடு அழைப்பார். மற்ற இனத்தவரோடு 'டேய்... இங்க வாடா...' என்று அதிகாரத்தோடு அழைக்கும் அதே காவல்துறை அன்பர் எங்களிடம் அன்பாக நடக்கக் காரணம் நாங்களும் அதே அளவு அன்பை அந்த சகோதரர்களிடம் காண்பிப்பதால்தான்.

இதனை ஒரு இந்துத்வாவாதியான நீங்கள் எதிர்ப்பது எனக்கு ஆச்சரியமாக படவில்லை. ஏனெனில் அன்றைய அரபுலகமும் இதே மேட்டிமைத்தனத்தில்தான் திளைத்திருந்தது. நீங்கள் எப்படி சமஸ்கிரதம் தேவ பாஷை. மற்ற மொழிகள் நீச பாஷை' என்கிறீர்களோ அது போலவே அன்றைய அரபிகளும் 'எனது மொழியே உயர்ந்த மொழி. மற்றவர்கள் பேசும் மொழி ஊமை மொழி' என்று கூறினான். அதாவது ஊமைகள் 'பே..பே...' என்றுதான் சப்தமிடுவார்கள். நீங்கள் அழகிய மொழியில் பேசினாலும் அவன் பார்வையில் உங்கள் மொழி ஊமை மொழிதான். அதே போல் இன்று பார்பனர்கள் எவ்வாறு தங்களை உயர்சாதியினராக கருதுகின்றனரோ அதே போல் அன்றைய அரபுகளில் குறைஷி இனத்தைச் சார்ந்தவன் உயர் சாதியினராக மதிக்கப்பட்டான். நீக்ரோக்களையும் மற்ற இனத்தவரையும் இழி பிறவிகள் என்று ஒதுக்கினான். கிட்டத்தட்ட இன்றைய நம் நாட்டு நிலையை ஒத்திருந்தது அன்றைய அரபுலகம்.

இஸ்லாம் வந்தது: நிலைமை தலைகீழாக மாறியது. ஒரு நீக்ரோ இறை வழிபாட்டுக்கு தலைமையாக நியமிக்கப்பட்டாலும் அவரை பின்பற்றி நீங்கள் தொழ வேண்டும் என்று மார்க்க கட்டளையாகவே இட்டார் நபிகள் நாயகம். அதனால் இன்றும் கூட மார்க்கத்தை படித்து பட்டம் வாங்காத என்னைப் போன்றவர்களெல்லாம் சவுதி பள்ளிகளில் தொழுகைக்கு தலைவராக நிற்க முடிகிறது.

அதே நேரம் நமது தமிழ் நாட்டில் வேதம் படித்த பல பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பார்பன குலத்தில் பிறக்காததால் இன்று வரை கோவில்களில் குருக்களாக நியமிக்கப்படாத கொடுமை தொடர்கிறது. இதற்கு தடையாணையையும் வாங்கியுள்ளீர்கள். அந்த அளவு மேல் சாதிப் பற்று உங்களை ஆட்டிப் படைக்கிறது.

இந்த சாதித் திமிரை தூரமாக்கி அன்போடு எங்களை 'பாய்' என்று அழைப்பது உங்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

ஒரு முறை ஜூனியர் விகடனில் மதம் மாறிய தலித் இளைஞரை பேட்டி கண்டனர்.

'மதம் மாறியதால் உங்கள் இழிவு நீங்கி விட்டதாக நினைக்கிறீகளா?'

'என்னைவிட சிறுவர்களெல்லாம் முன்பு என்னை 'டேய்... சரவணா...' என்று தான் அழைப்பார்கள். ஆனால் இன்று நான் மதம் மாறியவுடன் அதே நண்பர்கள் 'ரஹ்மான் பாய்.... சவுக்கியமா' என்று கேட்கின்றனர். மற்ற இழிவுகள் நீங்குகிறதோ இல்லையோ... இந்த ஒரு இழிவு நீங்கினாலே என்னைப் பொருத்த வரை போதுமானது' என்றார் அந்த இளைஞன்.

ஆகவே 'பாய்' என்ற இந்த வார்த்தைக்கு அத்தனை சக்தி இருக்கிறது. நீங்கள் விரும்பா விட்டாலும் மத நல்லிணக்கத்தையும் உலக மனிதர்களையும் நேசிக்கும் பெரும்பான்மையான இந்துக்கள் எங்களை 'பாய்' என்றே அழைப்பர். அதை நாங்களும் விரும்புகிறோம். ஏனெனில் இந்த வார்த்தையின் பின்னால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மூலரின் திரு மந்திர வரிகளும் மறைந்துள்ளது. ஒட்டு மொத்த தமிழகத்தில் இரண்டு சதவீதமே இருக்கும் உங்களைப் போன்ற இந்துத்வாவாதிகளை நாங்களும் பொருட்படுத்துவதே இல்லை.


Sunday, July 13, 2014

நெகிழ வைத்த நிகழ்வு - நோன்பு திறக்கும் இடத்தில்.....



சவுதியைப் பொருத்தவரை ரமலான் வந்து விட்டாலே இரவு பகலாகி விடும், பகல் இரவாகி விடும். எனக்கும் அலுவலகத்தில் இரவு நேர வேலைதான். இரவுத் தொழுகை முடிந்தவுடன் வேலை ஆரம்பம். பிறகு நடு நிசி 2 மணிக்கு வேலை முடியும். இது போலவே பெரும்பாலானோருக்கு வேலை அமைவதால் நோன்பு சிரமமின்றி சென்று விடும்.

அடுத்து நோன்பு திறப்பு. பெரும்பாலான பள்ளிகளில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்திருப்பர். நோன்பு திறந்தவுடன் தொழுகையும் உடன் கிடைத்து விடுவதால் பெரும்பாலானவர்கள் பள்ளியிலேயே நோன்பு திறக்க வந்து விடுவர். தேவைக்கு மீறி அதிக உணவுகள் பள்ளிகளில் குவிந்தவண்ணம் இருக்கும். மீதப் படுவதை தேவையுடையவருக்கு கொடுத்து விட்டு மீதியை குப்பை தொட்டிகளில் கொட்டுவதை சர்வ சாதாரணமாக காணலாம். ஒரு பக்கம் ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளில் ஒரு வேளை உணவிற்கு அல்லாடும் பெரும் கூட்டம். மற்றொரு புறமான அரபு நாடுகளில் மித மிஞ்சிய செல்வம். இஸ்லாம் காட்டித் தரும் பொருளாதார சட்டங்களை நடை முறை படுத்தாததாலேயே இந்த ஏற்றத் தாழ்வுகள்.

எனது அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள பள்ளியில் நோன்பு திறக்க சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அங்கு முஸ்லிம் அல்லாத இரண்டு மலையாள இந்து சகோதரர்களும் பள்ளிக்கு நோன்பு திறக்க சென்றுள்ளனர். கணிணி சம்பத்தப்பட்ட பணியை செய்து வருபவர்கள். ஆனால் இந்த இருவரும் பள்ளிக்கு வருவதை நமது சகோதரர்கள் விரும்பவில்லை.

"இது நோன்பாளிகளுக்காக கொடுக்கப்படும் உணவு. இவர்கள் எப்படி சாப்பிட வரலாம்?" என்று என்னிடமும் முறையிட்டனர்.

"யாருக்கும் உணவு கிடைக்காமல் திரும்பவில்லை. எல்லோருக்கும் போதுமான உணவு இருப்பில் உள்ளது. மித மிஞ்சிப் போய் சில நேரங்களில் குப்பை தொட்டியிலும் கொட்டுகின்றனர். அப்படி இருக்க அந்த இரண்டு சகோதரர்களும் சாப்பிடுவதில் என்ன குறை வந்து விடப் போகிறது. உணவு பற்றாக் குறையாக இருந்தால் நீங்கள் சொல்வது சரி." என்றேன்.

"இல்ல பாய்........ அதில் ஒருவன் இந்துத்வ சிந்தனை உள்ளவன். தனது தெய்வங்களை உயர்வாக பேசக் கூடியவன். அரபுகளின் கலாசாரத்தை இழிவாகப் பார்க்கக் கூடியவன்."

"அது அந்த நபரின் உரிமை. இந்து மதத்தில் பிறந்ததால் அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதில் தவறில்லையே! ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற இயக்கங்களோடு தொடர்பு கொண்டு முஸ்லிம்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்டிருந்தால் தான் அவரிடம் நாம் குறை காண முடியும். தினமும் இவர்கள் பள்ளிக்கு வந்து இங்கு நடத்தப்படும் உரைகளை கேட்பதன் மூலம் உள்ளங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதல்லவா?"

இப்படியாக அந்த இருவரைப் பற்றியும் எங்களிடையே விவாதங்கள் சென்று கொண்டிருக்கும். அந்த இந்து நண்பர்களும் தினமும் பள்ளிக்கு வந்து கொண்டே இருந்தனர். திடீரென்று சென்ற வியாழக்கிழமை அந்த இருவரும் சேர்ந்து "நாங்களும் நோன்பு பிடிக்கிறோம்" என்று சொல்ல ஆரம்பித்தனர்.. எல்லோருக்கும் ஆச்சரியம். சில நேரங்களில் நாத்திகமும் பேசிக் கொண்டு திரிந்த இந்த அன்பர்களின் மனதில் இப்படி ஒரு மாற்றம். சந்தோஷத்தோடு இரவு நேர சாப்பாட்டுக்கு எங்கள் இடத்துக்கு அழைத்திருந்தோம். அருமையான மீன் குழம்பு வைத்து அன்றைய சஹர் உணவு எங்களோடு கழிந்தது அவர்களுக்கு. ஒரு நாள் முழுக்க நோன்பையும் முழுவதுமாக பூர்த்தியாக்கினர்.

தாஃவா சென்டரில் வேலை பார்க்கும் மலையாள நண்பரிடம் "இவர்களுக்கு தேவையான புத்தகங்களை கொடுத்து, இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகமும் பண்ணுங்கள்" என்றேன். செய்வதாக அவரும் சொன்னார். இந்த இருவரும் இஸ்லாத்தை ஏற்கிறார்களோ இல்லையோ கேரளாவுக்கு சென்று இந்துத்வ நடவடிக்கைகளில் கண்டிப்பாக ஈடுபட மாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் தினமும் பள்ளியில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது மிகப் பெரிய மாற்றத்தை அந்த இந்து சகோதரர்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். நாம் இந்து என்று தெரிந்தும் நம்மிடம் முகம் கோணாமல் இந்த முஸ்லிம் சகோதரர்கள் இன்முகத்துடன் நடந்து கொண்டனரே என்ற எண்ணம் அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்து வரும்.

இந்துத்வாவுக்கு எதிராக நாம் பெரும் படை திரட்ட வேண்டிய அவசியமெல்லாம் தேவையில்லை. இன்முகத்தோடு அவர்களை அணுகி, உண்மையை அவர்களுக்கு உரத்து சொல்ல முயற்சித்தாலே அதிகமான தீவிரவாத செயல்களை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். நாமும் நமது அக்கம் பக்கத்தில் உள்ள இந்து நண்பர்களோடு இன்முகத்தோடு பழகி நமது சத்திய மார்க்கத்தையும் எத்தி வைப்போமாக.

Monday, June 30, 2014

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119


இந்த ஒரு நபி மொழியை நாம் சரியாக விளங்கிக் கொண்டால் பல பிரச்னைகளுக்குத் தீர்வைக் காணலாம். இன்று உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களில் 80 சதமான பேர் உண்மையான இஸ்லாம் என்ன என்பதை விளங்காமல் பல பிரச்னைகளை தங்களுக்கும் தம்மைச் சார்ந்த சமூகத்துக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் அவர்கள் 'இவை எல்லாம் எங்களை சொர்க்கத்துக்கு கொண்டு சென்று விட்டு விடும்' என்று வேறு சொல்கிறார்கள்..

மேலே உள்ள நபி மொழியில் சில நல்லறங்களை நான் செய்யாமல் போனால் என்ன செய்வது என்ற கேள்விக்கு, மனிதர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும் என்ற பதிலை நாம் பார்க்கிறோம். ஷியாக்களுக்கும் சுன்னத் ஜமாத்துக்கும் பகை: இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பகை: கிறித்தவர்களுக்கும், பவுத்தர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பகை: தவ்ஹீத் வாதிகளுக்கும் தர்ஹா வணங்கிகளுக்கும் பகை: என்று எங்கு நோக்கினாலும் பிரச்னைகளே!

முஸ்லிம்களை அழித்து அதன் மூலம் தாங்கள் மோட்சம் அடைந்து விடலாம் என்பது பெரும் பாலான இந்துத்வாவாதிகளின் நம்பிக்கை. இதற்கு அவர்களின் வேதங்களே தடையாக இருப்பதை ஏனோ இவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை: முதலில் சக மனிதனை நிம்மதியாக வாழ வைத்தால்தான் நீ இறைவனை நெருங்க முடியும் என்று உலக மதங்கள் அனைத்துமே கூறுகிறது. ஆனால் மனித மனம் இதனை சிந்திப்பதில்லை. தலைவர்கள், இயக்கங்கள், குழுக்கள் என்ற பெயரில் அவரவர்க்கு தோதான வசனங்களை பிடித்துக் கொண்டு தினமும் ரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்களே! இவர்கள் நல்லது செய்யா விட்டாலும் சும்மா இருந்தாலே போதும்: பல பிரச்னைகள் முடிவுக்கு வந்து விடும். அதாவது உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்கலாமில்லையா?

சக மனிதர்களை அன்போடும் பாசத்தோடும் நோக்குங்கள்: இந்துவோ, முஸ்லிமோ, கிறித்தவனோ யாராக இருந்தாலும் அவனும் ஆதமின் மகனே! அந்த பாசம் வந்து விட்டால் முறுகல் விலகும்: அன்பு பெருகும்: மனிதம் தழைக்கும்: