Followers

Sunday, July 13, 2014

நெகிழ வைத்த நிகழ்வு - நோன்பு திறக்கும் இடத்தில்.....



சவுதியைப் பொருத்தவரை ரமலான் வந்து விட்டாலே இரவு பகலாகி விடும், பகல் இரவாகி விடும். எனக்கும் அலுவலகத்தில் இரவு நேர வேலைதான். இரவுத் தொழுகை முடிந்தவுடன் வேலை ஆரம்பம். பிறகு நடு நிசி 2 மணிக்கு வேலை முடியும். இது போலவே பெரும்பாலானோருக்கு வேலை அமைவதால் நோன்பு சிரமமின்றி சென்று விடும்.

அடுத்து நோன்பு திறப்பு. பெரும்பாலான பள்ளிகளில் நோன்பு திறக்க ஏற்பாடு செய்திருப்பர். நோன்பு திறந்தவுடன் தொழுகையும் உடன் கிடைத்து விடுவதால் பெரும்பாலானவர்கள் பள்ளியிலேயே நோன்பு திறக்க வந்து விடுவர். தேவைக்கு மீறி அதிக உணவுகள் பள்ளிகளில் குவிந்தவண்ணம் இருக்கும். மீதப் படுவதை தேவையுடையவருக்கு கொடுத்து விட்டு மீதியை குப்பை தொட்டிகளில் கொட்டுவதை சர்வ சாதாரணமாக காணலாம். ஒரு பக்கம் ஆப்ரிக்கா, ஆசிய நாடுகளில் ஒரு வேளை உணவிற்கு அல்லாடும் பெரும் கூட்டம். மற்றொரு புறமான அரபு நாடுகளில் மித மிஞ்சிய செல்வம். இஸ்லாம் காட்டித் தரும் பொருளாதார சட்டங்களை நடை முறை படுத்தாததாலேயே இந்த ஏற்றத் தாழ்வுகள்.

எனது அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள பள்ளியில் நோன்பு திறக்க சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். அங்கு முஸ்லிம் அல்லாத இரண்டு மலையாள இந்து சகோதரர்களும் பள்ளிக்கு நோன்பு திறக்க சென்றுள்ளனர். கணிணி சம்பத்தப்பட்ட பணியை செய்து வருபவர்கள். ஆனால் இந்த இருவரும் பள்ளிக்கு வருவதை நமது சகோதரர்கள் விரும்பவில்லை.

"இது நோன்பாளிகளுக்காக கொடுக்கப்படும் உணவு. இவர்கள் எப்படி சாப்பிட வரலாம்?" என்று என்னிடமும் முறையிட்டனர்.

"யாருக்கும் உணவு கிடைக்காமல் திரும்பவில்லை. எல்லோருக்கும் போதுமான உணவு இருப்பில் உள்ளது. மித மிஞ்சிப் போய் சில நேரங்களில் குப்பை தொட்டியிலும் கொட்டுகின்றனர். அப்படி இருக்க அந்த இரண்டு சகோதரர்களும் சாப்பிடுவதில் என்ன குறை வந்து விடப் போகிறது. உணவு பற்றாக் குறையாக இருந்தால் நீங்கள் சொல்வது சரி." என்றேன்.

"இல்ல பாய்........ அதில் ஒருவன் இந்துத்வ சிந்தனை உள்ளவன். தனது தெய்வங்களை உயர்வாக பேசக் கூடியவன். அரபுகளின் கலாசாரத்தை இழிவாகப் பார்க்கக் கூடியவன்."

"அது அந்த நபரின் உரிமை. இந்து மதத்தில் பிறந்ததால் அவருக்கு அப்படி ஒரு எண்ணம் இருப்பதில் தவறில்லையே! ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற இயக்கங்களோடு தொடர்பு கொண்டு முஸ்லிம்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்டிருந்தால் தான் அவரிடம் நாம் குறை காண முடியும். தினமும் இவர்கள் பள்ளிக்கு வந்து இங்கு நடத்தப்படும் உரைகளை கேட்பதன் மூலம் உள்ளங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதல்லவா?"

இப்படியாக அந்த இருவரைப் பற்றியும் எங்களிடையே விவாதங்கள் சென்று கொண்டிருக்கும். அந்த இந்து நண்பர்களும் தினமும் பள்ளிக்கு வந்து கொண்டே இருந்தனர். திடீரென்று சென்ற வியாழக்கிழமை அந்த இருவரும் சேர்ந்து "நாங்களும் நோன்பு பிடிக்கிறோம்" என்று சொல்ல ஆரம்பித்தனர்.. எல்லோருக்கும் ஆச்சரியம். சில நேரங்களில் நாத்திகமும் பேசிக் கொண்டு திரிந்த இந்த அன்பர்களின் மனதில் இப்படி ஒரு மாற்றம். சந்தோஷத்தோடு இரவு நேர சாப்பாட்டுக்கு எங்கள் இடத்துக்கு அழைத்திருந்தோம். அருமையான மீன் குழம்பு வைத்து அன்றைய சஹர் உணவு எங்களோடு கழிந்தது அவர்களுக்கு. ஒரு நாள் முழுக்க நோன்பையும் முழுவதுமாக பூர்த்தியாக்கினர்.

தாஃவா சென்டரில் வேலை பார்க்கும் மலையாள நண்பரிடம் "இவர்களுக்கு தேவையான புத்தகங்களை கொடுத்து, இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகமும் பண்ணுங்கள்" என்றேன். செய்வதாக அவரும் சொன்னார். இந்த இருவரும் இஸ்லாத்தை ஏற்கிறார்களோ இல்லையோ கேரளாவுக்கு சென்று இந்துத்வ நடவடிக்கைகளில் கண்டிப்பாக ஈடுபட மாட்டார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும். ஏனெனில் தினமும் பள்ளியில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இது மிகப் பெரிய மாற்றத்தை அந்த இந்து சகோதரர்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். நாம் இந்து என்று தெரிந்தும் நம்மிடம் முகம் கோணாமல் இந்த முஸ்லிம் சகோதரர்கள் இன்முகத்துடன் நடந்து கொண்டனரே என்ற எண்ணம் அவர்களின் வாழ்நாள் முழுக்க இருந்து வரும்.

இந்துத்வாவுக்கு எதிராக நாம் பெரும் படை திரட்ட வேண்டிய அவசியமெல்லாம் தேவையில்லை. இன்முகத்தோடு அவர்களை அணுகி, உண்மையை அவர்களுக்கு உரத்து சொல்ல முயற்சித்தாலே அதிகமான தீவிரவாத செயல்களை கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியும். நாமும் நமது அக்கம் பக்கத்தில் உள்ள இந்து நண்பர்களோடு இன்முகத்தோடு பழகி நமது சத்திய மார்க்கத்தையும் எத்தி வைப்போமாக.

1 comment:

Anonymous said...

மிக நல்ல பதிவு தங்களுடைய இந்த பதிவு ஒரு பிரபல தமிழ் பத்திரிகை தமிழ்குரல் தன்னுடைய பதிவாக பிரசுரித்து நற்பெயர் வாங்கி உள்ளார்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா???