Followers

Thursday, April 09, 2015

மூக்கின் மேல் அடையாளம் - வியக்க வைக்கும் குர்ஆன்



'அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் 'முன்னோர்களின் கட்டுக் கதைகள்' எனக் கூறுகிறான்.

'அவனது மூக்கின் மேல் அடையாளமிடுவோம்'

-குர்ஆன் 68:15,16


நாளை மறுமையில் ஏக இறைவனை மறுத்தோரை அனைத்து மக்களின் முன்னாலும் தனியாக அடையாளப்படுத்த அவர்களின் மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்கிறான் இறைவன்.

மனிதனுக்கு அடையாளமிட எத்தனையோ இடங்கள் இருக்க இறைவன் மூக்கை பிரதானமாக ஏன் சொல்ல வேண்டும்?

மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் உள்ளன. ஒன்று ரேகைகள். இது பற்றி நமக்கும் தெரியும். இதை அனைவராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆயினும் ஆய்வு செய்து எந்த மனிதனின் ரேகை என்பதைக் கண்டு கொள்ளலாம். ஒருவரின் ரேகை போல் இன்னொருவரின் ரேகை இருக்காது. இன்னொன்று கண்கள். மற்றது காதுகள். இவற்றிலிருந்தெல்லாம் ஓரளவு மனிதனை பிரித்து அடையாளப்படுத்தலாம்.

அனைவரும் தெரிந்து கொள்ளும் மற்றொரு அடையாளம் மூக்கு. எவ்வளவு நெருக்கமான மனிதராக இருந்தாலும் மூக்கை மறைத்துக் கொண்டால் துல்லியமாக இன்னார் தான் என்று அடையாளம் காண முடியாது. ஒரு மனிதனின் மூக்கானது தோராயமாக 10000 மணம் மற்றும் நாற்றங்களை வகைப்படுத்தும் விதமாக மிக உயர்ந்த தொழில் நுட்பத்தில் படைக்கப்பட்டுள்ளது.

கைரேகை மூலம் ஒருவரைக் கண்டுபிடிப்பதைவிட கண்களைக் கொண்டு அடையாளப்படுத்துவதை விட மூக்கைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் எந்த மனிதரையும் துல்லியமாகக் கண்டறியும் போட்டோ பேஸ் என்ற தொழில் நுட்பம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள பத் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டாக்டர் ஆட்ரியன் ஈவின்ஸ் பல ஆய்வுகளை செய்து ஒரு மனிதனை அடையாளப்படுத்த மூக்கு எந்த அளவு முக்கியத்துவம் பெறுகிறது என்ற அய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். ஒரு மனிதனின் முழு முகத்தை ஸ்கேன் செய்து உண்மையை கண்டறிவதை விட 3டி தொழில் நுட்பத்தின் மூலம் மூக்கை மட்டுமே பிரதானமாக ஸ்கேன் செய்து மிக விரைவில் ஒரு மனிதனை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதிலிருந்து 'மூக்கின் மேல் அடையாளமிடுவோம்" என்ற சொல் எவ்வளவு பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இது இறை வேதம் தான் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சான்றாக நமக்கு அமைந்துள்ளது.

தகவல் உதவி
news.bbc.co.uk/2/hi/science/nature
02-03-2010

http://news.bbc.co.uk/2/hi/science/nature/8543292.stm

Scientists are developing ways to identify people by physical features, like intricate patterns in the eyes. But some of these techniques require the person to step close and stand still—which criminals may not do willingly. That's one reason why engineer Adrian Evans, of the University of Bath in England, turned to the nose.

Evans:
Noses are very hard to cover up without drawing suspicion to yourself. So they're actually quite easy to capture with non-cooperative subjects.

He and his colleague Adrian Moorhouse analyzed 3-D images of 40 people. By measuring just three specific aspects of a nose, they were able to narrow down the possible matches much faster than a full face-recognition scan. The trade-off is that it's harder to make a one-to-one match. So the system may be best used to quickly flag suspects for further scrutiny. I'm Bob Hirshon for AAAS, the Science Society.


http://sciencenetlinks.com/science-news/science-updates/nose-biometrics/

http://news.bbc.co.uk/2/hi/science/nature/8543292.stm

Wednesday, April 08, 2015

மாலையிட்டவுடன் தீட்டு கழித்த வர்ணாசிரம கொடுமை!



பீஹார் மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரராக கருதப்படும் ராம் மனோஹர் லோகியாவுக்கு சிலை ஒன்று உள்ளது. சென்ற வாரம் மரியாதை நிமித்தமாக அந்த சிலைக்கு ஜிதன்ராம் மனிஹி மாலையிட்டார். இவர் பீஹாரை 9 மாதங்கள் முதல் மந்திரியாக இருந்து ஆட்சி செய்தவர். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். இவர் மாலையிட்டு சென்றவுடன் சிலை தீட்டு பட்டு விட்டதாகக் கூறி உயர் சாதி இளைஞர்கள் நான்கு பேர் அந்த சிலையை தண்ணீர் ஊற்றி முழுவதுமாக கழுவி தீட்டைக் கழித்துள்ளனர். ஜிதன்ராம் போட்ட மாலையையும் கழற்றி புதிதாக வேறொரு மாலையை அந்த சிலைக்கு போட்டுள்ளனர் சாதி வெறியர்கள்.

மாலையிட்ட ஜிதன்ராம் சாதாரணமான ஆள் அல்ல. பீஹாரை முதல் மந்திரியாக இருந்து 9 மாதங்கள் ஆட்சி செய்தவர். இவர் முதல்வராக இருந்தபோதே ஒரு கோவிலுக்குள் நுழைந்து இறைவனை வழிபட்டார் என்பதற்காக அன்றே அந்த கோவிலை தண்ணீர் ஊற்றி கழுவி தீட்டைக் கழித்தனர். அப்போதும் அது பெரும் பிரச்னையாக்கப்பட்டது. அதே இன ஒதுக்கல் சென்ற வாரம் மீண்டும் பல மக்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது. மற்ற மூவரை காவல்துறை தேடி வருகிறது.

இதற்கு முன்பு ஜெகஜீவன்ராம் ராணுவ மந்திரியாக இருந்த போதும் இதே போல் உயர் சாதி இந்துவுக்கு மாலையிட்டதற்காக சிலையை கழுவி தீட்டு கழித்தனர் உயர் சாதி இந்துக்கள். இத்தனை வருடம் சென்றும் அதே சாதி வெறி மீண்டும் அரங்கேற்றப்பட்டள்ளது. படித்து விட்டால் சாதி மறைந்து விடும் என்ற வாதம் முன்பு வைக்கப்பட்டது. படித்தவர்கள் மத்தியில்தான் இந்த சாதி வெறி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 'நீ முதல் மந்திரியாக இருந்திருக்கலாம், மத்தியில் ராணுவ மந்திரியாகவும் இருந்திருக்கலாம். எவ்வளவு உயர் பதவியைப் பெற்றாலும் எனது பார்வையில் நீ தலித். நீ தீண்டத்தகாதவன்' என்று சொல்கிறது மேற்படி சம்பவம்.

'இப்பல்லாம் யார் சார் சாதி பார்க்கிறா?' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பவர்களுக்கு சென்ற வாரம் நிகழ்ந்த இந்த சம்பவம் சிறந்த செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

தகவல் உதவி
ndtv
outlookindia
06-04-2015



http://www.ndtv.com/india-news/lohia-statue-washed-after-being-garlanded-by-ex-chief-minister-jitan-ram-manjhi-752700
http://www.outlookindia.com/news/article/Lohias-Statue-Cleaned-After-Manjhi-Garlands-It-Four-Booked/889903

பிரபல பின்னணி பாடகர் நாகூர் அனீஃபா காலமானார்!





இஸ்லாமிய பாடல்களை பல ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலிக்கச் செய்த நாகூர் ஹனீஃபா இன்று இரவு காலமானார். சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்தது. இவருக்கு வயது 96. இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். (நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே திரும்பிச் செல்பவர்களாகவே இருக்கிறோம்...)

இறைவன் இவரது பாவங்களை மன்னிக்க நாமும் பிரார்த்திப்போமாக!

Tuesday, April 07, 2015

இந்து முண்ணனி ராம கோபாலனின் திட்டம் தவிடு பொடியானது!

நெகிழ வைத்த நிகழ்வு - மத மாற்றம்.... இது ஒரு மீள் பதிவு...

இந்து முண்ணனி தலைவர் ராம கோபாலன் தனது இயக்கத்தவருக்கு ஒரு அன்பு கட்டளையை சில ஆண்டுகளுக்கு முன்பு இட்டார். 'முஸ்லிம் பெண்களை காதலித்து கடைசியில் அவர்களை இந்துக்களாக மாற்றி விடுங்கள்' என்ற கட்டளையே அது. இந்து மதம் வளர இது ஒன்றே வழி என்று முடிவெடுத்துள்ளார் போல் தெரிகிறது. ஏனெனில் கொள்கையை சொல்லி அவரால் இந்து மதத்தை வளர்க்க முடியாது என்பது அவருக்கும் தெரியும். திராவிடர் கழக தலைவர் வீரமணி கேட்கும் பல கேள்விகளுக்கு இராம கோபாலனிடம் எந்த பதிலும் இன்று வரை இல்லை. எனவே ராம கோபாலன் இட்ட இந்த கட்டளையை நிறைவேற்ற பல இந்து முன்னணி இளைஞர்கள் இஸ்லாமிய பெண்களை படிக்கும் இடங்களில் சீண்டுவது ஆங்காங்கே அரசல் புரசலாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் எனது கிராமத்துக்கு அருகில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமத்தில் இது போன்று கல்லூரிக்குச் சென்ற ஒரு இஸ்லாமிய பெண்ணை ஒரு இந்து முன்னணி இளைஞன் ஒருவன் எப்படியோ ஆசை வார்த்தைகள் காட்டி மயக்கி விட்டான். ஒரு மத போதகரின் மகள். வறிய குடும்பம். அந்த பெண்ணும் காதலில் வீழ்ந்து விட்டாள். தனது தந்தைக்கோ அல்லது தனது ஊர் ஜமாத்துக்கோ தெரிந்து விட்டால் பெரும் பிரச்னையாகி விடும் என்று கல்லூரியிலிருந்து அந்த இளைஞனோடு ஓடி விட்டாள் அந்த பெண்.

இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் அந்த ஊரே கொதித்தது. ஊரில் பல கட்டுப்பாடுகளையும் விதித்தனர். மத போதகரான அந்த பெண்ணின் தந்தையை பலரும் கேவலமாக பேச ஆரம்பித்தனர். அவரும் கூனிக் குறுகிப் போய் அவமானத்தில் தனது மகளை கை கழுவி விட்டு வாழ்க்கையை ஓட்டி வந்தார். அந்த பெண் ஓடிப் போன நேரம் ரமலான் மாதம். மிகவும் கட்டுப்பாடாக இஸ்லாமிய மார்க்க சூழலில் வளர்ந்த பெண் என்பதால் தொழுகையையும் நோன்பையும் அங்கு சென்றும் விடாமல் நிறைவேற்றி வந்துள்ளார். அந்த இந்து முன்னணி இளைஞனின் குடும்பம் இந்த பெண்ணின் நடவடிக்கைளை ஆச்சரியத்தோடு பார்க்க ஆரம்பித்தது. அந்த பையனின் தாயார் இரவில் எழுந்து நோன்பு வைக்க உணவுகள் சுடச் சுட தயார் செய்து கொடுத்துள்ளார். இஸ்லாமிய வீட்டு உணவுகள் எப்படி இருக்கும் என்று அக்கம் பக்கத்தில் விசாரித்து அந்த தாய் அந்த பெண்ணுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளார். புகுந்த வீட்டில் தான் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக தனது தாயாரிடம் அந்த பெண் கைபேசி மூலம் கூறியுள்ளார். இதனை எல்லாம் எனது ஒன்று விட்ட தங்கை என்னிடம் சொல்ல நானும் ஆச்சரியப் பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்..

தனது திட்டம் நிறைவேறினாலும் இந்த பெண்ணின் இஸ்லாமிய நடவடிக்கைகளை மட்டும் அந்த இளைஞனால் மட்டுப் படுத்த முடியவில்லை. அந்த பெண்ணை எதுவும் சொல்லக் கூடாது என்று மாமியாரின் கட்டளை வேறு. நாட்கள் இப்படியே ஓடியது. தான் தவறிழைத்து விட்டோமோ என்று அந்த இளைஞன் சற்று சஞ்சலப்பட ஆரம்பித்தான். திடீரென்று ஒரு நாள் அந்த பெண் ஓதிக் கொண்டிருந்த தமிழ் குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்தான் அந்த இளைஞன். அவனுள் இனம் புரியாத மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. தினமும் இரண்டு பக்கம் மூன்று பக்கம் என்று படிக்க ஆரம்பித்தான். படிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை அந்த பெண்ணிடமும், இஸ்லாமிய நண்பர்களிடமும் கேட்டு தெளிவடைந்து கொண்டான். காலப் போக்கில் தானும் இஸ்லாமியனாக மாறி விட வேண்டும் என்ற உந்துதல் அவனது மனதில் நிழலாடியது. இது அவனது இந்து முன்னணி இயக்கத்துக்கு தெரிந்தால் கொலையும் செய்து விடுவார்கள் என்பதால் இரவோடு இரவாக தனது சொந்த ஊரை காலி செய்து விட்டு பெண்ணுடைய இஸ்லாமிய கிராமத்துக்கு வந்து நடு இரவில் கதவை தட்டினான்.

பெண்ணின் தகப்பனார் கதவை திறந்தார். அவனை பார்த்தவுடன் கோபத்தில் 'ஏண்டா என் குடும்பத்தை இப்படி சீரழிச்சே...' என்று கேட்கத் தொடங்கினார்.

'மன்னித்துக் கொள்ளுங்கள். அதற்கு பிராயச்சித்தம் தேடவே வந்துள்ளேன். நான் முஸ்லிமாக மாற தீர்மானித்துள்ளேன். உங்கள் மகளையும் நாளை அழைத்து வருகிறேன்.'

பெண்ணின் தந்தை சந்தோஷத்தோடு 'அப்படியா! எல்லா புகழும் இறைவனுக்கே! நாளை என் மகளை அழைத்து வந்து விடு! பள்ளி வாசலில் வைத்து ஊர் மக்கள் முன்னிலையில் உன்னை முஸ்லிமாக்கி விடுகிறோம்' என்றார்.

'உள்ளே வாங்க' மாமியாரும் ஆசையோடு அழைத்தார். பாலும் சில பலகாரங்களும் வைத்தனர். சாப்பிட்டு விட்டு 'நாளை வருகிறேன்' என்று சொல்லி சென்று விட்டான்.

மறுநாள் தனது மனைவியோடு அந்த இஸ்லாமிய கிராமத்தில் காலடி எடுத்து வைத்தான் அந்த இந்து முண்ணனி இளைஞன். பள்ளியில் வைத்து இஸ்லாமியனாக உறுதி மொழி எடுக்க வைக்கப்பட்டது. 'இறைவன் ஒருவன்தான் என்பதை உறுதியாக நம்புகிறேன். அந்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டேன் என்றும் உறுதி கூறுகிறேன். முகமது நபி கடைசி இறைத் தூதர் என்றும் நம்புகிறேன்' என்று தமிழிலும் அரபியிலும் அந்த இளைஞன் சொல்ல வைக்கப்பட்டான். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது தமிழர்களின் ஆதிகால கொள்கை அங்கு நடைமுறைப் படுத்தப்பட்டது. பின்னர் திருமணம் எனும் நிக்காஹ்வும் நடத்தப்பட்டது.

அந்த பள்ளியிலேயே இனிப்பு பலகாரங்கள் வழங்கி மிக சிம்பிளாக திருமணம் முடிக்கப்பட்டது. மறுநாளிலிருந்து ஒவ்வொரு இஸ்லாமியர் வீட்டிலும் ஒரு நாள் அந்த தம்பதிகளுக்கு விருந்தும் கொடுக்கப்பட்டது. இன்று அந்த தம்பதிகள் சந்தோஷமாக தங்கள் வாழ்வை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ராமதாஸைப் போல அந்த மக்களை தூண்டி விட்டு அந்த கிராமத்தை அழிக்க இங்கிருந்து யாரும் படையை அனுப்பவில்லை. வசதியுள்ள இந்த இஸ்லாமிய கிராமத்துக்கு அதனை செய்வதற்கு அதிக நேரமும் ஆகாது. ஆனால் இஸ்லாமியர்கள் பொறுமை காத்தார்கள். அந்த பொறுமைக்கு பலன் கிடைத்தது. ராம கோபாலனின் திட்டமும் தவிடு பொடியானது.

‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். இறைவனும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் இறைவனேயாவான்’

(அல்-குர்ஆன் 3:54)

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

நெகிழ வைத்த ஒரு நிகழ்வு - ரியாத் பேரூந்து நிலையத்தில்

போன வருடம் கம்பெனி வேலையாக ஒரு வாரம் தபூக் மாநகருக்கு செல்ல வேண்டி இருந்தது..... அதற்காக டிக்கெட் முன் பதிவு செய்ய ரியாத் பேரூந்து நிலையத்துக்கு சென்று வரிசையில் காத்திருந்தேன். அப்போது எனக்கு பின்னால் ஒரு இந்தியர் திரு திரு என்று விழித்துக் கொண்டு ஒரு பயம் கலந்த தொனியில் நின்று கொண்டிருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல வருவதை உணர்ந்து கொண்டு நான் கேட்டேன்...

'எந்த ஊரு?' ('ஆப் கஹாங் ரேனேவாலா') எனக்குத் தெரிந்த உருதுவில் கேட்டேன் :-)

'ஆந்திரா... கர்நூல்' என்று பதிலளித்தார். அந்த இந்து நண்பருக்கு உருதுவும் சரியாக வரவில்லை. தட்டுத் தடுமாறி பேசினார். தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர். தனது கையில் உள்ள ஒரு துண்டு சீட்டை என்னிடம் நீட்டினார். அதில் ஹஃப்ரல்பாதின் என்ற ஊர் பெயரும் - மற்றும் டெலிபோன் நம்பரும் எழுதப்பட்டிருந்தது. புதிதாக சவுதி வருகிறார். விமான நிலையத்திலிருந்து ரியாத் பேரூந்து நிலையம் வந்து விட்டார். இங்கு ரியாத்திலிருந்து அவர் வேலை செய்யும் இடமான ஹஃப்ரல் பாதின் 250 கிலோ மீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ளது. அங்கு பஸ் பிடித்து இவர் செல்ல வேண்டும்.

எனது முறை வரவே நான் டிக்கெட் எடுத்து விட்டு அவரது பாஸ்போர்டை கொடுத்து 'ஹஃப்ரல் பாதினுக்கு ஒரு டிக்கெட் கொடுங்கள்' என்று கவுண்டரில் உள்ளவரிடம் கேட்டேன். அவர் பெயரை கணிணியில் பதிவு செய்து விட்டு '110 ரியால்' என்று என்னிடம் கேட்டார். நான் அந்த இந்து நண்பரிடம் '110 ரியால் பஸ் டிக்கெட்டுக்கான ரியாலை கொடுங்கள்' என்றேன். அவர் தனது கையில் இருந்து முழு பணத்தையும் என்னிடம் தந்தார். எண்ணிப் பார்த்தால் வெறும் 35 ரியால்தான் இருந்தது. 'என்ன இது? மீதி பணம் எங்கே?' என்றேன். தான் விமான நிலையத்திலிருந்து பேரூந்து நிலையம் வர 50 ரியால் கொடுத்ததாகவும் கொஞ்சம் இந்திய ரூபாய் இருப்பதாகவும் வேறு பணம் இல்லை என்றும் பரிதாபமாக சொன்னார். டிக்கெட் கவுண்டரில் உள்ள சவுதி நாட்டவரோ பணம் இல்லை என்றவுடன் சற்று கோபத்துடன் அடுத்த ஆளை கூப்பிட்டார்.

எனது தகுதிக்கு 10 ரியால் கொடுத்து மற்றவர்களிடமும் வசூல் பண்ணி கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் அவரை அழைத்துக் கொண்டு நகர ஆரம்பித்தேன். எங்கள் வரிசையில் நின்ற இரண்டு சவுதி நாட்டவர் இதனை கவனித்து விட்டு என்னிடம் 'என்ன பிரச்னை?' என்று கேட்டனர். நான் முழு விபரத்தையும் சொன்னேன். உடனே அந்த இருவரும் தங்கள் பையிலிருந்து 50 ரியாலையும் மற்றவர் 50 ரியாலையும் என்னிடம் கொடுத்து 'போதுமா' என்றனர். தற்போது 135 ரியால் சேர்ந்து விட்டது. நான் போதும்' என்றேன். அதே நபர் மேற்கொண்டு 20 ரியாலை அந்த இந்து நண்பரின் கையில் கொடுத்து 'வழியில் சாப்பிட வைத்துக் கொள்' என்று கொடுத்தார். அந்த இந்து நண்பருக்கு முகத்தில் ஏக மகிழ்ச்சி. அவர்கள் இருவருக்கும் நான் நன்றி சொன்னேன். அந்த இந்து நண்பரையும் நன்றி சொல்ல சொன்னேன். அவரும் அந்த சவுதிகளின் கைகளை பிடித்து நன்றி கூறினார். இது ஒரு சிறிய உதவிதான். ஆனால் மொழி தெரியாமல், சாப்பிடாமல் ஒரு அந்நிய தேசத்தில் அல்லாடிக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில் இந்த நூறு ரியால் என்பது வள்ளுவர் சொல்வது போல் 'ஞாலத்தின் மாணப் பெரிது' அல்லவா?

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

-திருக்குறள்

விளக்கம் : மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறிதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரிதாக மதிக்கப்படும்.

நான் அவர் ஒரு இந்தியர் என்ற காரணத்தினால் உதவ போனேன். ஆனால் அந்த இரண்டு சவுதிகளும் யாரென்றே தெரியாத அந்த இந்து நண்பருக்கு உதவிய மனிதத் தன்மையை நினைத்து நெகிழ்வுற்றேன். இது போல் சவுதியில் ஆங்காங்கு பல நிகழ்வுகள் தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுக்கவும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமது இந்திய நாட்டில் இந்துத்வாவாதிகளால் தினமும் எங்காவது ஒரு மூலையில் இஸ்லாமியர்கள் கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த இந்துத்வாவாதிகள் செய்யும் அந்த கொடூரங்கள் என்னை இந்த இந்து நண்பருக்கு உதவி செய்ய தடுத்து விடவில்லை. அந்த இரண்டு சவுதிகளும் டிக்கெட்டுக்கு பணத்தையும் கொடுத்து சாப்பாட்டு செலவுக்கு மேற்கொண்டும் பணத்தை கொடுத்த அந்த மனித நேயத்தை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு பால்தாக்கரேயையும், சிவாஜியையும் தரக்குறைவாக விமரிசித்ததாக கூறி அதனை முஸ்லிம்கள் செய்ததாக வதந்தி பரப்பி கலவரத்தை காவிகள் மும்பையில் அரங்கேற்றினர். சற்றும் சம்பந்தம் இல்லாத ஒரு கணிணி வல்லுனர் காவிகளால் அடித்தே கொல்லப்பட்டார். அந்த நேரத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள கிராமங்களில் இந்துக்களை யாரும் தாக்கி விடாமல் முஸ்லிம்கள் காவல் காத்தார்களாம். இதனை நெகிழ்வாக ஒரு இந்து நண்பரே பேட்டியாக கொடுத்துள்ளார். இதனைத்தான் குர்ஆன் முஸ்லிம்களுக்கு போதிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்:

'நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள். அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இறைவன் நீங்கள் செய்வதை நன்கு அறிந்தவன்'
-குர்ஆன் 5:8