Followers

Showing posts with label திருவாசகம். Show all posts
Showing posts with label திருவாசகம். Show all posts

Saturday, July 26, 2014

பெற்ற தாயை விட மேலானவன் இறைவன் - திருவாசகம்

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!

-திருவாசகம்



பொருள்:குழந்தைக்கு வேண்டிய பாலை எப்போது தர வேண்டும் என்று நினைத்து நேரமறிந்து தருபவள் தாய். அந்த தாயை விட என் மேல் அன்பு செலுத்தி, நீ என்னுடைய உடலை உருக்கி, எனக்குள் இருக்கும் ஒளியை பெருக்கி, அழிவு இல்லாத தேனையொத்த அறிவினைத் தந்து , வெளியில் இருந்த செல்வமான சிவ பெருமானே,

விளக்கம்:இந்த பாடலில் நம்மை படைத்த இறைவன் தாயை விட ஒரு படி மேல் என்று பாடப்படுகிறது. ஒரு தாய் தனது குழந்தைக்கு பசித்தால் தாய்ப்பாலை புகட்ட முடியும். சிறிது பெரியவனானாலும் அவனுக்கு உணவு வழங்க முடியும். ஆனால் அறிவை வழங்க முடியாது. எல்லோராலும் மதிக்கப்படுகின்ற அந்த வற்றாத அறிவை எனக்கு தந்த இறைவா! என்னை இந்த உலகில் எல்லா செல்வங்களையும் குறைவின்றி தந்து கௌரவமாக வாழச் செய்திருக்கிறாயே! உன்னை நான் வாழ்த்துகிறேன்! வணங்குகிறேன்! என்கிறார் மணி வாசகர்.

தமிழ் மொழியில் எண்ணிலடங்கா இறை பக்தி பாடல்கள் இதுபோல் மலிந்து கிடக்கின்றன. ஆனால் அதனை எல்லாம் மறைத்து விட்டு எதற்கும் உதவாத வருணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கிற பார்பனர்களின் ராமாயணம் வலிந்து முன்னிறுத்தப்பட்டு இன்று இந்து வேதங்களின் தரத்தில் பார்க்கப்படுகிறது. வட நாட்டை ஆண்ட ஒரு அரசனின் மகனின் வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்களை மேலும் கற்பனையில் மெருகூட்டி ஒரு அவதார புருஷனாக காட்டப்பட்டு அந்த ராமனின் பெயரால் பல ஆயிரம் உயிர்களையும் காவு கொண்டு விட்டது இந்துத்வா. இது இனி மேலும் தொடராமல் இருக்க வட மொழி நூல்களை தூரமாக்கி திருவாசகம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் நூல்கள் இந்து மக்களை சென்று அடைய வேண்டும். இந்து மதத்தின் மறுமலர்ச்சியை உண்மையிலேயே விரும்பும் இந்து இயக்கங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இதன் மூலமாக மட்டுமே இந்து மதத்தை அழியாமல் காக்க முடியும்.