Followers

Monday, February 01, 2021

வீட்டுத்தோட்டம்

 

வீட்டுத்தோட்டம் அமைப்பது தொடர்பா பல்வேறு தகவல்களை இந்தப் பகுதியில் பார்த்துட்டு வர்றோம். இந்த முறை கோயம்புத்தூரைச் சேர்ந்த வீட்டுத்தோட்ட ஆலோசகர் சுந்தர் சில ஆலோசனைகளைச் சொல்லி இருக்காரு. அதைப் பார்க்கலாம்.

 

`நாம சாப்பிடுற காய்கறிகள்ல முக்கால்வாசி பந்தல்ல விளையுறதுதான். புடலங்காய், பீர்க்கங்காய், சுரை, பாகல், பூசணி, பரங்கி இப்படி பெரும்பான்மையான காய்கறிகள் கொடி வகை பயிர்கள்தான். மாடித்தோட்ட விவசாயிகள், அதைப் பயிர் செய்யும்போது, கொடிகள் படர்ந்து போக முறையான ஏற்பாடுகளைச் செய்யணும். ரொம்ப பேர், அப்படியே தரையிலயே விட்டுடுவாங்க, இல்லைன்னா, சுவர் மேல எடுத்து விட்டுடுவாங்க. ஆனா, முறையா கொடிகள் படர வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தாதான் பூ, பூத்து காய் காய்க்கும். அதுக்காகக் காசு செலவு பண்ணி பந்தல் போடணும்னு இல்லை. நம்மகிட்ட இருக்குற பொருள்களை வெச்சே பந்தல் அமைக்கலாம்.

மொட்டை மாடியில மண்ணு நிரப்பின சாக்கு மூட்டையை நாலு பக்கம் வெச்சு, அதுக்கு மேல கொம்பை ஊன்றி, நூல், கயிறு, கம்பினு எது கிடைக்குதோ அதைக் குறுக்கும் நெடுக்குமா கட்டி விட்டா போதும் பந்தல் தயாராகிடும். இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, இப்படித்தான் பந்தல் போடணும்னு வரைமுறையே கிடையாதுங்க. கொடி தங்கு தடையில்லாம படர்ந்துப் போகணும். அதுதான் நோக்கம். அதுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தப் போதும்.

 

ஆனா, பலபேரு கொடியிலே ஒரு நூலை மட்டும் கட்டிட்டு அதோட நம்ம கடமை முடிஞ்சு போச்சுனு நினைக்கிறாங்க. ஆனா, கடமைக்கு அங்க முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது. நூல் மட்டும் இருந்தா போதாது. அதுல கொடி ஏறுதான்னு தினமும் கவனிக்கணும். நுனி கீழ் பக்கம் சாய்ஞ்சு இருந்தா அதை எடுத்து நூல்ல மறுபடியும் விடணும். கொடி பந்தலைத் தொடுற வரைக்கும் இதைக் கவனமா செய்யணும்.

கொடி நல்லா படர்ந்து போனா மட்டும்தான் நல்லா காய் பிடிக்கும். இல்லைன்னா காய் பிடிக்காது. கண்டிப்பா கொடிகளைப் பந்தல்ல எடுத்துவிட்டே ஆகணும். அதிகமா செலவு செய்யத் தேவையில்லை ரொம்ப சிம்பிளா செய்யணும்னா நூல் எடுத்து, குறுக்கும் நெடுக்குமா சதுர வடிவில நாலு பக்கம் கட்டி விட்டுட்டு, அதுக்குக் கீழே பைகளை வச்சு கொடிய படர விடலாம். இப்ப, கடைகள்ல நரம்புவலைங்க கிடைக்குது. கோழி வலை மாதிரியான வலைகளை வாங்கிட்டு வந்து கட்டிவிடலாம்.

 

மொட்டை மாடி சுவத்துல கூட நாலு குச்சிகளை வெச்சு, பந்தல் மாதிரி அமைப்பை ஏற்படுத்தலாம். இப்படி இடத்துக்கு ஏற்ற மாதிரி, நம்ம கற்பனைக் குதிரையைக் கொஞ்சம் தட்டிவிட்டா போதும். அதிக செலவில்லாம பந்தல் அமைச்சிடலாம். பந்தல்ல கொடி இருக்கும்போது, அதுக்குக் கீழே எந்தப் பைகளையும் வைக்கக் கூடாது. அங்கு போதுமான சூரிய ஒளி கிடைக்காம, காய் பிடிக்கவே பிடிக்காது. அதுல கவனமா இருக்கணும்.

மாடித்தோட்டத்துல இருக்க ஒரு பிரச்னை என்னன்னா கீரை ரொம்ப இடத்துல பெருசா வளராது. கொஞ்சமா முளைக்கும். அப்படியே நின்னு போயிடும். இது நல்லா வளரணும்ன்னா சில வேலைகளைச் செய்யணும். முதல்ல பாக்டீரியாக்களை கொஞ்சம் பயன்படுத்தலாம். பாக்டீரியான்னு சொல்றது, அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் பாக்டீரியாதான்.

 

இது மூன்றும் காற்றில், சூரிய வெளிச்சத்தில் இருக்கும் சத்துகளை எடுத்து செடிகளுக்குச் சேர்க்கும் வேலையைச் செய்யும். அதனால இந்தப் பாக்டீரியாக்கள் பயன்படுத்துறதால செடிகள் நல்லா வளரும். அதேப்போல சூடோமோனஸ்னு ஒரு பூஞ்சையையும் பயன்படுத்தலாம். அது பூச்சிகளைக் கட்டுப்படுத்த மற்றும் வேர் அழுகல் நோய்க்கட்டுப்பாட்டுக்கு ரொம்ப உதவியா இருக்கும். இதைக் காய்கறிச் செடிகள் மற்றும் கீரைகளுக்கும் பயன்படுத்தலாம்.

 

இதைக் கீரைச் செடிகளுக்குப் பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். கீரைச் செடிகளை விதைக்கும்போது, ஒரு முக்கியமான விஷயம் கவனிக்கணும். பையில மண்கலவை மேல விதைகளைப் போட்டதும், அதுக்கு மேல நியூஸ் பேப்பர் போட்டு மூடிடணும். அதுக்கு மேலதான் தண்ணி தெளிக்கணும். 3 நாளைக்கு இப்படி நியூஸ் பேப்பர் மேலேயே தண்ணிய தெளிச்சு விடுங்க. மூணு நாள் கழிச்சு பேப்பர் எடுத்துப் பார்த்தா எல்லா விதைகளும் முளைச்சிருக்கும். இந்த மாதிரி முயற்சி பண்ணுனா கீரைகள் சாய்ந்து போகாமல் வளர்ச்சி நின்றுவிடாமல் நன்றாக வளரும்.

 

ஏன் அப்படி பண்றோம்னா ஒரு விதை முளைப்பதற்கு வெயில், நிழல், ஈரப்பதம் மூன்றும் முக்கியம். பெரிய பெரிய விதைகளை மண்ணுக்குள் புதைத்து விடுவோம். அதுக்கு வெயில், ஈரப்பதம் கிடைக்கும். ஆனால், கீரை மாதிரியான விதைகள் மேலாக இருக்கும். அதுக்கு போதுமான நிழல் கிடைக்காது. அந்த நிழலுக்காகத்தான் கொஞ்சம் முளைக்கும் வரைக்கும் பேப்பர் போட்டு மூடி வைக்குறோம். கொஞ்சம் வளர்ந்த பிறகு பேப்பரை எடுத்துடலாம். இந்த மாதிரி கீரைக்கு பண்ணி பாருங்க. சூப்பரா வளரும்.

செடி நல்லா பூப்பூக்குறதுக்கு முட்டை ஓடு நிறைய போடுங்க. வீட்டில் வேஸ்ட் ஆகுற முட்டை ஓடுகளை ஒரு மிக்ஸியில் போட்டு அரைச்சு, அதைப் பூச்செடிகளுக்குப் போட்டா, அதிக பூக்கள் எடுக்கும். குறிப்பா ரோஜா செடிகளுக்குப் போடும்போது அதிக பூ பூக்கும்.

மாடித்தோட்டத்தில் நிறைய பேர் செய்யும் தவறு, மண்ணைக் கிளறாம விடுவதுதான். தினமும் கிளறி விட்டுக்கொண்டே இருந்தால்தான் காற்றோட்டம் நல்லாக் கிடைச்சு, செடிகளின் வளர்ச்சியும் நல்லா இருக்கும். மகசூலும் அதிகம் கிடைக்கும்.

 

அதே போலச் செடியைச் சுற்றி எந்தக் களைச்செடிகளும் இருக்கக் கூடாது. தக்காளிச் செடி ஒரு பையில இருக்குதுன்னா அங்கே வெறும் தக்காளிச் செடி மட்டும்தான் இருக்கணும். வேற எந்தச் செடிகளும் இருக்கக் கூடாது. அப்படி இருந்துச்சுன்னா செடியோட வளர்ச்சி பாதிக்கும். இன்னொன்னு பூ பூக்காது... காய்க்காது. அதே போலக் காய் காய்க்கும் நேரத்துல மீன் அமிலம் கொடுத்த நல்லா காய் காய்க்கும். மீன் அமிலம் தயாரிக்க வாய்ப்பு இல்லாதவங்க, வீடுகள்ல மீன் கழுவுற தண்ணியை செடிகளுக்கு ஊற்றினால் கூட போதும்.நான் சொன்ன விஷயங்களை எல்லாம் மாடித்தோட்ட விவசாயிகள் மனசுல வெச்சுகிட்டா நல்ல மகசூல் எடுக்கலாம்."

வீட்டுத்தோட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு இவரை 95784 19307 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வீட்டுத்தோட்டம் தொடர்பா உங்களுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டால் கமென்ட் பாக்ஸ்ல பதிவு பண்ணுங்க. உங்களுக்கான விளக்கம் கொடுக்கப்படும்.


Thanks Vikatan




 

No comments: