Followers

Showing posts with label DALITH. Show all posts
Showing posts with label DALITH. Show all posts

Monday, August 24, 2020

விநாயக சதுர்த்தியும் குத்தாட்டமும்.....

 விநாயக சதுர்த்தியும் குத்தாட்டமும்.....

பக்தி என்பது மனதில் உதிப்பது. இறைவனை அன்போடும் பக்தியோடும் அணுகி நமது கோரிக்கைகளை வைப்பது வழக்கம். ஆனால் இங்கு நடப்பது பக்தியா? 10 வயது சிறுவனும் 20 வயது இளைஞர்களும் சாராயத்தை உள்ளே தள்ளி விட்டு கடைகளை உடைப்பதும் நடைபாதைகளை சேதப்படுத்துவதும்தான் விநாயக சதுர்த்தியா?

இங்கு குத்தாட்டம் போடும் சிறுவர்களில் யாராவது ஹெச்.ராஜா குடும்பத்து பார்பன குழந்தைகள் உண்டா? நாராணயன், கே.டி. ராகவன் குடும்பத்து பிள்ளைகள் யாராவது இந்த கும்பலில் இருக்கிறார்களா. கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். கலவரம் வரலாம்: வெட்டு குத்துகள் நடக்கலாம்: வழக்கும் பதியப்படலாம். எனவே இங்கெல்லாம் ஹெச்.ராஜா தனது குடும்ப உறுப்பினர்களை அனுப்ப மாட்டார். ஆண்மையற்ற அரசு என்று அறிக்கை விடும் ஹெச்.ராஜா தனது குடும்பத்து உறுப்பினர்களை இந்த கூட்டத்துக்கு அனுப்பியிருக்க வேண்டுமல்லவா?

பார்பன குழந்தைகள் சிறந்த பள்ளி, கல்லூரிகளாக பார்த்து தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளும் முயற்சியில் இருப்பார்கள். மறந்தும் ராஜாக்களும் நாராயணன்களும் தங்களின் குழந்தைகளை ஊர்வலத்துக்கு அனுப்ப மாட்டார்கள்.

இங்கு பின்னால் இருந்து ஹெச்.ராஜா, ராகவன் போன்றவர்கள் பணம் கொடுத்து பிரியாணியும், சாராயத்தையும் கொடுத்து தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார்கள். இனி விநாயகர் சதுர்த்தியில் குத்தாட்டம் போடும் இந்த இளைஞர்களின் வாழ்வு இப்படியே தான் கழியும். குற்றப் பரம்பரைகளாக வளருவர். இதைத்தான் ஹெச்.ராஜா போன்றவர்கள் விரும்புகின்றனர். இதனை உணர்ந்து கொள்ளாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அப்பாவி மக்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுவார்களோ?



Sunday, February 07, 2016

கல்வியின் பெயரால் தொடரும் சாதிய வன்மங்கள்!



ஹைதராபாத் பல்கலைக்கழக அறிவியல் புலத்தில் பி.எச்டி. ஆய்வு மேற்கொண்டு வந்த தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை, அனைவரிடமும் பெரும் சர்ச்சைகளையும் கேள்விகளையும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக மாணவ/மாணவிகளின் ‘தன் மரணங்கள்’ நாடெங்கும் அதிர்வலைகளை எழுப்பியபடி இருக்கின்றன. அதிலும் கல்விக்கூடங்களில், உயர் கல்விக் கூடங்களில் நிகழும் மரணங்கள், அதன் பின்னிருக்கும் சாதியின் கோர முகங்களை வெளிப்படுத்தியபடியே இருக்கின்றன.

தலித் என்பதாலேயே தொடர்ச்சியாக இழிவுகளைச் சந்தித்துக்கொண்டேயிருக்கும் நிலை அவர்களைத் தொட்டுத் தொடர்ந்தபடி இருக்கிறது. கிராமப்புறங்களில் ஊர் என்றும் சேரி என்றும் ஊரே இரண்டாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது. சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும் காலத்தில் இந்த வேறுபாடு தொடங்கிவிடுகிறது.

நகரங்களில் வெளிப்படையாகத் தெரியாத சாதி, கிராமப்புறங்களில், சிறு நகரங்களின் பள்ளிகளில், மாணவர்களின் கைகளில் வண்ணமயமான பட்டைகளாக (Bands) வெளிப்படத் தொடங்கிவிட்டது. சாதிக்கேற்ற நிறம், அந்த நிறத்துக்கேற்றவாறு நடத்தப்படும் நிலை எனச் சாதியம், வெவ்வேறு வடிவம் எடுத்துத் தலைவிரித்தாடுகிறது. பொருளாதார ரீதியாக தலித் மக்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்காதவரையிலும் எத்தகைய சீர்திருத்தங்களில் ஈடுபட்டாலும் அது தலித்துகளை மட்டுமல்லாமல், ஒடுக்கப்படும் அனைத்துச் சாதி மக்களையும் அழிவுப் பாதையை நோக்கியே அழைத்துச் செல்லும் என்பதற்கான அத்தாட்சியே இவை அனைத்தும்.

நாகரிக சமூகம் என்று சொல்லிக்கொள்ளவே முடியாத அளவுக்கு அவை வேரூன்றிக் கிடப்பது அச்சத்தைத் தோற்றுவித்திருக்கிறது. அதிலும் தலித் பெண்ணாக இருந்தால், அடிமைக்கும் அடிமையாக நடத்தப்படும் நிலை. கல்லூரி வளாகத்துக்குள் பிற இடைநிலைச் சாதி மாணவ, மாணவிகளால் தலித் மாணவிகள் நடத்தப்படும் விதம் ஒருபுறம் என்றால், கல்வி நிறுவனமே அதற்குச் சற்றும் குறையாமல் பாரபட்சத்தை வாரி வழங்குகிறது.

பொதுவாக, கல்வி வளாகங்களுக்குள் காணப்படும் தீண்டாமை மிக நுட்பமானது. அடிப்படை வசதியின்மை, சுகாதாரமான குடிநீர், தங்கும் விடுதிகளில் பாரபட்சம் எனப் பிரச்சினைகள் அனைத்து மாணவர்களையும் தாக்கினாலும் அதனுள்ளும் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் அடுத்த உள் அடுக்குகளில் ஒடுக்குமுறைகளைச் சந்திக்கின்றனர். இதனைக் கொடூரமான தாக்குதல் என்றே சொல்லலாம். எல்லோருக்கும் ஒரு அடி என்றால், தலித்தாகப் பிறந்ததால் அவர்கள் கூடுதலாக இரண்டு அடிகளைப் பெற்றே தீர வேண்டும். இது மிகவும் நுட்பமான வன்முறை.

உதாரணமாக, பொதுத் தேர்வுகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் பிறப்பு குறித்து விடைத்தாள்களைத் திருத்துபவர்கள் அறிய வாய்ப்பில்லை என்பதால் அதிக மதிப்பெண் பெறும் தலித் மாணவர்கள் அதே பாடத்துக்காக பிராக்டிகல் தேர்வில் ஈடுபடும்போது ஒப்பீட்ட அளவில் மிகக் குறைந்த மதிப்பெண்கள்தான் பெறுவார்கள். ஏனென்றால், அந்தத் தேர்வுகள் கல்வி நிறுவன வளாகத்தில், அறியப்பட்ட ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடைபெறும். அந்த மாணவர்களின் சாதி குறித்து ஆசிரியர்களுக்குத் தெரியும் என்பதால் மதிப்பெண்கள் வழங்கும்போது அவர்களின் கை இயல்பாகவே உள்ளிழுத்துக்கொள்கிறது.

இந்த நுண் அரசியல் கிராமத்தின் தொடக்கப் பள்ளிகள் முதல், நாட்டின் மதிப்பு மிக்க உயர் கல்வி வளாகங்கள்வரை தொடர்வது வேதனை. திறன்கள் நிரூபிக்கப்படும் தேர்வுகளிலேயே இப்படி ஒதுக்கப்படுகிறார்கள் என்றால் வகுப்பறைகளில், விடுதிகளில் ஆசிரியர் – சக மாணவர் உறவுகளில், அன்றாடச் சந்திப்புகளில், உரையாடல்களில், பாடங்களுக்கு விளக்கம் அளிப்பதில், விளையாட்டு மைதானங்களில், கண் பார்வையில், கை தொடுகையில் எப்படியெப்படியெல்லாம் பாரபட்சமாக நடத்தப்படுவார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது ஒன்றும் கடினமான காரியமல்ல.

நவீன தீண்டாமையின் வெளிப்பாடுகள்

பல தோழிகளிடமும் அவர்களின் பள்ளிக் காலத்து நினைவுகளைப் பற்றி பேசும்போது, தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டது மிகுந்த கசப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாகவே இருந்தது.

முதல் தலைமுறையாகக் கல்லூரியில் சேர்ந்து படித்த தோழி, தற்போது அரசு அலுவலராக இருப்பவர். அவர் தன் கடந்த கால பள்ளி அனுபவங்களையும் கல்லூரியில் அவர் நடத்தப்பட்ட விதம் பற்றியும் விவரித்தபோது அந்த வலியும் வேதனையும் நமக்குள்ளும் கடத்தப்பட்டதை உணர முடிந்தது. இத்தனைக்கும் அவர் இட ஒதுக்கீட்டில் மட்டுமல்லாமல், மதிப்பெண் அடிப்படையிலும் நல்ல தேர்ச்சியைப் பெற்றவர். பெண்ணாகப் பிறந்ததால் முதல் தவணை பாரபட்சம். தவிர, தலித் சமூகத்தில் பிறந்ததால் இன்னொரு மடங்கு கூடுதலாகப் பாரபட்சம்.

ஓரளவு சட்டப் பாதுகாப்பு இருப்பதால் நேரடியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க முடியாது. இரட்டைக் குவளை முறை சாத்தியமில்லை என்பதைத் தவிர ஒவ்வொரு கல்லூரியிலும், ஒவ்வொரு விடுதி வளாகத்திலும் ஒரு சேரியை எப்படியாவது உருவாக்கிவிடுகிறார்கள். ஒரு கேலிப் பார்வையும் ஏளனப் புன்னகையும்கூடப் போதும், ஒரு தலித் பெண் உள்ளுக்குள் சுருங்கிப்போக.

ஆயிரம் தலைமுறை அறிவொளி

சேரியிலோ காலனியிலோ பிறந்து, முதல்தலைமுறையாகக் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கும் ஒரு அப்பாவிப் பெண்ணின் மருண்ட பார்வையையும் எதைக் கண்டும் அச்சத்துடன் ஒதுங்கியே போகும் அவளது நிலையையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். தனக்குப் பிறகு ஆயிரம் தலைமுறைகளுக்கு அறிவொளி ஏற்படுத்தப் போகிறவள். அவளை ஒரே பார்வையில் பொசுக்கிவிட்டால், பின் அவள் எப்படி எழுந்து நிற்க முடியும்? இந்த நடைமுறையைத்தான் இட ஒதுக்கீட்டின் மீதான கடும் வெறுப்பாக வெளிப்படுத்துகிறது முன்னேறிய சமூகம்.

முடிந்தால் முகத்துக்கு நேராகவே பேசுவது. இல்லையென்றால் சாடைமாடையாகக் குத்திக் கிழிப்பது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் சண்டைக்காரி என்ற பட்டத்தோடு முத்திரை குத்தப்படுவதுடன் ஓரங்கட்டப்படும் நிலையையும் எதிர்கொள்ள வேண்டும்.

உணவு, உடை, பழக்கவழக்கம் என அனைத்திலும் பண்பாட்டு ரீதியான தீண்டாமைச் சாட்டை அவள் மீது சொடுக்கப்பட்டுக்கொண்டேயிருந்தால் அவளுக்குள் ஆளுமைப் பண்பு எப்படி உருவாகும்? எது நடந்தாலும் கலங்காமல் எதிர்த்துப் போராடக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டியவர்கள் எப்போதும் தலை குனிந்தவாறே இருக்கச் செய்தால் அவர்கள் சிந்தனை பாழுங்கிணற்றையும், உத்தரத்தையும், ரயில் தண்டவாளங்களையும் நோக்கித்தானே பாய்கிறது? இதனைத் தற்கொலை என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? உண்மையில் இது சமூகக் கொலை அல்லவா! ஆண், பெண் என இரு பாலாருக்கும் இது பொருந்தும். இதைத் தடுக்க அரசு எடுக்கும் முயற்சிகள் என்ன? ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுகின்றனவா? மாநிலங்கள் மாறினாலும் நாடு முழுக்க அவலம் மாறுகிறதா? அரசுகளே துணை போகும் நிலையை நோக்கி முன்னேறியிருப்பதுதான் கண்ட பலன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
07-02-2016

Friday, January 22, 2016

சாதிக் கொடுமையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்!



1.மலேபுலா ஸ்ரீகாந்த், ஜனவரி 1, 2007 - இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, மும்பை

2.அஜய் எஸ். சந்திரா, ஆக. 26, 2007 – ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), பெங்களூரு

3.ஜஸ்பிரீத் சிங், ஜனவரி 27, 2008 – இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர்

4. செந்தில் குமார், பிப்ரவரி 23, 2008 – பி.எச்.டி, இயற்பியல் துறை, ஹைதராபாத் பல்கலைக்கழகம்

5. பிரசாந்த் குரீல், ஏப்ரல் 19, 2008 - முதலாம் ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்

6. ஜி. சுமன், ஜனவரி 2, 2009 – இறுதி ஆண்டு எம்.டெக், ஐஐடி, கான்பூர்

7. அங்கிதா வேக்தா, ஏப்ரல் 20, 2009 – முதலாம ஆண்டு, பி.எஸ்.சி (நர்சிங்), சிங்கி நர்சிங் நிலையம், அகமதாபாத்

8. டி. ஸ்யாம் குமார், ஆக. 13, 2009 – முதலாம் ஆண்டு பி.டெக், சரோஜினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹைதராபாத்

9. எஸ். அமராவதி, நவ 4, 2009 – தேசிய இளநிலை பெண் குத்துச்சண்டை வீரர், சிறப்பு பயிற்சி மையம், ஆந்திரப் பிரதேச விளையாட்டு ஆணையம், ஹைதராபாத்

10. பன்தி அனுஷா, நவம்பர் 5, 2009 – பி.காம், இறுதி ஆண்டு, வில்லா மேரி கல்லூரி, ஹைதராபாத்

11. புஷ்பாஞ்சலி பூர்த்தி, ஜனவரி 30, 2010 – முதலாம் ஆண்டு, எம்.பி.ஏ., விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெங்களூரு

12. சுஷில் குமார் சௌத்ரி, ஜனவரி 31, 2010 - இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (முன்னாள் கேஜிஎம்சி), லக்னோ

13. பால்முகுந்த் பாரதி, மார்ச் 3, 2010 – இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், எய்ம்ஸ், புது தில்லி

14. ஜே.கே. ரமேஷ், ஜூலை 1, 2010 - இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி, விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு
மாதுரி சேலே, நவம்பர் 17, 2010 – இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்

15. ஜி. வரலக்ஷ்மி, ஜனவரி 30, 2011 – பி.டெக் முதலாம் ஆண்டு, விக்னான் பொறியியல் கல்லூரி, ஹைதராபாத்

16. மனிஷ் குமார், பிப்ரவரி 13, 2011 – மூன்றாம் ஆண்டு, பி.டெக், ஐஐடி, ரூர்க்கி

17. லினேஷ் மோகன் காலே, ஏப்ரல் 16, 2011 – இளநிலை, நோய் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய நிறுவனம், புது தில்லி

18. அனில் குமார் மீனா, மார்ச் 3, 2012 – முதலாம் ஆண்டு, எய்ம்ஸ், புது தில்லி

பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் தலித் மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள். ஓம் பிரகாஷ் வால்மீகி என்ற இந்தி தலித் எழுத்தாளர் தனது சுயசரிதையில் தலைமை ஆசிரியரால் தனது சாதித் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அவமானத்தை நினைவு கூர்கிறார். ‘போய் விளையாட்டு மைதானம் முழுவதையும் பெருக்கு, இல்லா விட்டால் உன் குண்டியில் மிளகாய்களைத் திணித்து பள்ளியிலிருந்து துரத்தி விடுவேன்’ என்று தலைமை ஆசிரியர் அவரிடம் சொன்னாராம். பகிர்ந்து கொள்வதற்கான இது போன்ற கொடும் நிகழ்வுகள் முறையாகக் கல்வி கற்ற ஒவ்வொரு முதல் தலைமுறை தலித்திடமும் இருக்கின்றன.

(தகவல்: இன்சைட் அறக்கட்டளை) நன்றி: ஆனந்த், அவுட்லுக்

Monday, January 18, 2016

தலித் மாணவர் தற்கொலை - பிஜேபி அமைச்சர் மீது வழக்குப் பதிவு







ஹைதரபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட ரோஹித் வெமுலாவின் உடல் பெற்றோருக்கும் தெரிவிக்காமல் நண்பர்களுக்கும் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக எரியூட்டப்பட்டுள்ளது. இவ்வளவு அவசரமாக உடலை எரிக்க வேண்டிய அவசியம் என்ன? இது தற்கொலையா? அல்லது கொலையா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

மாணவர்களின் புகார் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டுதல், எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிஜேபியின் மத்திய துணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பாராவ், மேலவை உறுப்பினர் ராமச்சந்திர ராவ், மாணவர்கள் சுஷீல் குமார், ராமகிருஷ்ணா ஆகியோர் மீது கச்சிபவுலி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலித்தாக பிறந்து விட்டால் இந்த நாட்டில் அந்த உயிருக்கு எந்த மதிப்பும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் ஆள்வோரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை....



ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலித் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் வன்முறையைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டிருந்த ரோஹித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2-ம் தேதியன்று ரோஹித் உள்ளிட்ட 5 பேரும் பல்கலைக்கழகத்தின் தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இந்த மாணவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் (ASA) சேர்ந்தவர்களாவர்.

இந்நிலையில், ரோஹித் வெமுலா விடுதி அறையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்துக்கு பல்கலைக்கழக நிர்வாகமே பொறுப்பு எனக் கூறிய அம்பேத்கர் மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், அறையில் இருந்து ரோஹித் உடலை அப்புறப்படுத்தவிடாமல் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் போலீஸார், மாணவர்கள் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பதற்றத்தை தணிக்கை போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இடைநீக்கத்தின் பின்னணி:

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழகத்தில் முசாபர்நகர் பாக்கி ஹை ‘Muzzafarnagar Baqi Hai’ என்ற விளக்கப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. இத்திரைப்படத்தை திரையிடுவது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு (ASA) சேர்ந்தவர்களிடையே மோதல் வெடித்தது.

இதனையடுத்து அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 5 பேர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து கல்லூரி விடுதியில் இருந்தும் வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றப்பட்ட மாணவர்கள் ஐவரும் கல்லூரி வளாக்த்திலேயே கூடாரம் அமைத்து தங்கி வந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

துணை வேந்தர் ராஜினாமா செய்ய கோரிக்கை:

பல்கலைக்கழகத்தில் இருந்தும், தங்கும் விடுதியில் இருந்தும் நீக்கப்பட்டதாலேயே ரோஹித் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறும் பல்வேறு மாணவ கூட்டமைப்பினர், இதற்கு பொறுப்பேற்று பல்கலைக்கழக துணைவேந்தர் பி.அப்பா ராவ், தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர் மீது குற்றச்சாட்டு:

தலித் மாணவர்கள் 5 பேரும் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் பாஜகவின் அழுத்தம் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

செகந்தராபாத் தொகுதியில் மக்களவை எம்.பி.யும், மத்திய இணை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயா மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எழுதிய கடிதத்தில், "ஹைதராபாத் பல்கலைக்கழக வளாக தரத்தை மேம்படுத்த வேண்டுமானால் 5 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்" என வலியுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே தலித் மாணவர்கள் ஐவரும் நீக்கப்பட்டனர் என மாணவ தரப்பு குற்றஞ்சாட்டுகிறது.

தற்கொலை குறிப்பு:

ரோஹித் வெமுலாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் குண்டூர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோஹித், பல்கலைக்கழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வு அறிஞர்களுக்கான (JRF) உதவித்தொகையை பெற்றுவந்தார்.

அவர் எழுதிய 5 பக்க தற்கொலைக் குறிப்பில், "என் கண்கள் எப்போதும் நட்சத்திரங்களையே கண்டு கொண்டிருந்தன. ஒரு நாள் எழுத்தாளராக, பெயர்பெற்ற கல்வியாளராக உருவாக வேண்டும் என்பதே என் லட்சியமாக இருந்தது. ஆனால், கடந்த 6 மாதங்களாக எனக்கு ஜெ.ஆர்.எஃப் உதவித்தொகைகூட வழங்கப்படவில்லை" என குறிப்பிட்டிருந்தார்.

144 தடை உத்தரவு அமல்:

ரோஹித் தற்கொலையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.

Keywords: ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், தலித் மாணவர் தற்கொலை, அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஜாதி, அரசியல், பாஜக

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
18-01-2016

காதல் தோல்வியால் இந்த மாணவர் இறந்தார் என்று வழக்கை மூடி விடுவார்கள். இந்த தற்கொலைக்கு ஸ்மிருதிராணியும் பிஜேபியும் பொறுப்பேற்க வேண்டும். ஐந்து மாணலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டால்தான் கல்லூரியின் தரம் உயரும் என்று அறிக்கை ஸ்மிருதிராணிக்கு அனுப்பப்பட்டு அந்த அமைச்சகத்தின் உத்தரவிலேயே ஐந்து மாணவர்களும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்து மதத்தில் எந்த உரிமையையும் கொடுக்காமல் எண்ணிக்கையை கூட்டிக் காட்டுவதற்கென்றே தலித்களை சேர்த்து வைக்கும் காலமெல்லாம் இது போன்ற கொடுமைகளுக்கு பஞ்சமிருக்காது.

Thursday, January 07, 2016

முதியவரின் பிணத்தை தெரு வழியாக அனுமதிக்காத சாதி இந்துக்கள்!



நேற்று மயிலாடுதுறை அருகே திருநாள் கொண்டச் சேரியில் ஒரு முதியவர் இறந்து விட்டார். இறந்த முதியவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் தங்கள் தெரு வழியே பிணத்தை எடுத்துச் செல்ல சாதி இந்துக்கள் அனுமதிக்கவில்லை. அங்கு பெரும் பதட்டம் நிலவியது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த காவலர்கள் தாழ்த்தப்பட்டவர்களை விரட்டி விட்டு பிணத்தை தாங்களே வேறு மார்க்கமாக (வடுவூர் வழியாக) வேறு வழியின்றி எடுத்துச் சென்றுள்ளனர். பிறகு அந்த காவலர்களே சுடுகாட்டில் பிணத்தை புதைத்துள்ளனர்.

'நாமெல்லாம் இந்துக்கள்' என்று வழியும் மோடி, அமீத்ஷா, இல கணேசன், இராம கோபாலன் எல்லாம் எங்கே சென்று ஒளிந்து கொண்டார்கள்?

மண்ணின் மைந்தனின் பிணத்தை அவனது நாட்டு தெருக்களில் எடுத்துச் செல்வதையே அனுமதிக்காத சமூகங்களின் மத்தியில்தான் நாம் வாழ்ந்து வருகிறோம்.