Followers

Showing posts with label உவைசி. Show all posts
Showing posts with label உவைசி. Show all posts

Saturday, November 21, 2015

தமிழகத்துக்கு உவைசியின் மனிதாபிமான உதவி!



AIMIM ன் தலைவர் அசாசுத்தீன் உவைசி தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களது பங்காக 9.5 லட்சம் ரூபாயை அர்பணித்துள்ளார்.

வளரட்டும் மனித நேயப் பணி....

Wednesday, December 03, 2014

அஸாஸூத்தின் உவைசி ரியாத் வருகையின் போது.....



இந்திய அரசியல் வாதிகளை ஆச்சரியத்தோடு திரும்பி பார்க்க வைத்திருக்கும் அஸாஸூத்தீன் உவைசி ரியாத் வருகை புரிந்துள்ளார். அவர் தனது பேச்சில் கூறிய கருத்துக்களின் சுருக்கமாவது...

'இஸ்லாமியர்களின் தனிக் கட்சி இந்திய அரசியலில் பல பதவிகளை பெறுவதை சமய சார்பற்ற தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதாக பலர் கருத்திடுகின்றனர். அது தவறு. எங்களைப் போன்றவர்கள் அரசியல் அதிகாரத்துக்கு வந்தால் மத சார்பின்மை மேலும் சிறப்புறும்.

முஸ்லிம்கள் அரசியலில் முற்றிலுமாக நுழைய வேண்டும். மகாராஷ்ட்ராவில் நாங்கள் இரண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவுடன் பலர் எங்களை விமரிசிக்கின்றனர். பல தலைவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பயம் அரத்தம் இல்லாதது. குஜராத் கலவரத்தை நாங்கள் மறந்து விடவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓய மாட்டோம். குஜராத் அரசியலில் சரியான பங்களிப்பு முஸ்லிம்கள் தராததாலேயே அத்தகைய இழப்பை நம்மால் சந்திக்க நேர்ந்தது.

முஸ்லிம்கள் படிப்பிலே அதிக கவனம் செலுத்த வேண்டும். மேற் படிப்புகளை எந்த தியாகம் செய்தும் படித்து முடிக்க வேண்டும். வாய்ப்புகள் நிறைய காத்திருக்கிறது. மாலேகான் என்ற ஊரில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழ்கின்றனர். ஆனால் அங்கு ஒரு வங்கி கூட திறக்கப்படவில்லை. அந்த நகரம் முன்னேற்றம் அடையாமல் இருக்கிறது. அந்த மக்களும் படிப்பிலே ஆர்வமற்று உள்ளனர். இந்தியா முழுக்க முஸ்லிம் கிராமங்களின் பெரும்பாலான நிலை இதுதான். இந்த நிலை மாற வேண்டும்.

2016ல் உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பல இடங்களில் மஜ்லிஸ் பார்ட்டி போட்டியிட்டு ஆளும் வர்க்கத்துக்கு தக்க பாடம் புகட்டும். இது போன்ற மேலும் பல சிறந்த மாற்றங்களை பெற முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாக உழைத்து கல்வியில் உயர வேண்டும்.' என்றும் பேசினார். பெருந்திரளான மக்கள் இவரது பேச்சை கேட்க வந்திருந்தனர்.

ரியாத்தின் ஹாரா என்ற இடத்தில் 'நயாகரா ஹைதராபாதி உணவகத்தை' யும் திறந்து வைத்தார் உவைசி. வபாக் அல் சஹ்கா மற்றும் மும்தாஜ் குரூப் இந்நிகழ்வுக்கான ஸ்பான்ஸர்களாக செயல்பட்டனர்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
03-12-2014

Thursday, June 12, 2014

பாராளுமன்றத்தில் ஒரு சிங்கத்தின் கர்ஜனை!



ஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான பேச்சு.

மோடிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டியவர் ‘நான் உங்களுடைய வெற்றியை Pyrrhic victory ஆகத்தான் கருதுகின்றேன்’ என்று சொன்னதுதான் சரியான பஞ்ச். மோடியின் வெற்றியை இதனை விட நச்சென்று விமர்சிக்க முடியாது.

‘ஏன் குஜராத் 2002 படுகொலைகளையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?’ என்று ராம்விலாஸ் பாஸ்வான் சொன்னதற்கு அவர் அளித்த பதில் அழுத்தமானது. கனமானது. உவைசி சொன்னார்: ‘இந்த நாட்டின் வரலாற்றில் நாட்டின் அடிப்படைகளை ஆட்டங்காணச் செய்கின்ற அளவுக்கு நான்கு கொடூரங்கள் நடந்திருக்கின்றன. முதலாவதாக தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படுகொலை. இரண்டாவதாக, 1984-இல் தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலைகள். மூன்றாவதாக, பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட கொடுமை. நான்காவதாக குஜராத்தில் 2002-இல் நடந்த முஸ்லிம் படுகொலைகள்.’

இவ்வாறு சொன்ன அதே மூச்சில் ‘எவரிடம் மனித நேயம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமைகளை மறக்க மாட்டார். நினைவில் வைத்திருப்பார். எவரிடம் மனிதம் இருக்கின்றதோ அவர் இந்தக் கொடுமையாளிகளை மன்னிக்கவே மாட்டார்.’ என்று சொன்னதைக் கேட்டு அவையே சில வினாடிகள் ஸ்தம்பித்து நின்றுவிட்டது.

Inclusive growth குறித்து பேசுகின்ற நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். பன்முகத் தன்மையும் பல்வேறு இனங்களையும் மதங்களையும் மொழிகளையும் பண்பாடுகளையும் சேர்ந்து வாழ்கின்ற பன்மைச் சமூகத்தன்மையும்தான் இந்த நாட்டின் அடையாளமாக, பாரம்பர்யமாக இருந்து வந்துள்ளது. ஆனால் இது இந்த அவையில் பிரதிபலித்துள்ளதா? யோசியுங்கள். முஸ்லிம் எம்பிக்களின் எண்ணிக்கை 21 ஆக சுருங்கிப் போனதேன்? சிந்தியுங்கள்.

முஸ்லிம்களை equal partnersகளாக ஆக்கிக் கொள்வோம் என்று சொல்கின்றீர்கள். சமமான பங்குதாரர்களாய் முஸ்லிம்களை எப்படி ஆக்கப் போகின்றீர்கள்? உங்களுடைய சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சரே முஸ்லிம்களை சிறுபான்மையினர் எனச் சொல்லக் கூடாது என்று கூறியிருக்கின்றார். நான் கேட்கின்றேன். முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகத்தினர் இல்லை யெனில் 80 ஆயிரம் பேரைக் கொண்ட பார்சிகளுக்காகத்தான் சிறுபான்மை துறை அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது என்று நான் நம்ப வேண்டுமா? அரசியல் அமைப்புச் சட்டத்தின் 29க்கும் 30க்கும் இது நேர் மாறானதாக இல்லையா?

மே 16 அன்றுதான் அக்ஷர்தாம் கோவில் தாக்குதல் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் வந்தது. குஜராத் அரசும் உள்துறை அமைச்சரும் சரியாகச் செயல்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது. அந்த அரசின் அப்போதைய உள்துறை அமைச்சர்தான் இப்போது இந்த நாட்டின் பிரதமராகவும் இருக்கின்றார்.
தம்முடைய கையாலாகாததனத்திற்காக குஜராத் அரசு மன்னிப்பு கேட்குமா? ஏழு ஆண்டுகள், பன்னிரு ஆண்டுகள் என சிறையில் தொலைத்த அப்பாவிகளுக்கு அவர்களின் இழந்த ஆண்டுகளை மீட்டுக் கொடுப்பது யார்?

Zero tolerance to communalism என்று இந்த அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐயா, நான் இங்கு இஹ்ஸான் ஜஃப்ரியின் மகனாக வந்திருக்கின்றேன்.
நான் இங்கு இஷ்ரத் ஜஹானின் அண்ணனாக நிற்கின்றேன்.
நான் இங்கு முஹ்சின் சாதிக்கின் சித்தப்பாவாக வந்துள்ளேன். நான் இங்கு குஜராத் இனப் படுகொலையின்போது உயிரைப் பறிகொடுத்த அபலைகளின் சார்பாக நிற்கின்றேன்.

அந்த அப்பாவிகளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?

தமிழ்படுத்தியது

- டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

இணைப்பு கீழே தரப்படுகின்றது.

http://www.youtube.com/watch?v=8n8V0cXerMc

Friday, December 06, 2013

பாப்ரி மஸ்ஜித், சில கேள்விகளும் பாடங்களும் - அக்பருத்தீன் ஒவைஸி!|



பாப்ரி மஸ்ஜித், சில கேள்விகளும் பாடங்களும் | அக்பருத்தீன் ஒவைஸி | மஸ்ஜித் தாருஸ்ஸலாம், ஹைதராபாத் | டிசம்பர் 2013
-------------------------------------------------------------

21 வருடங்கள் ஆனபின்னும் ஷஹீத் ஆன பாப்ரி மஸ்ஜித்தின் மீள்வரவை, ஒவ்வொரு வருடமும் நாம் எதிர்பார்த்த வண்ணமே உள்ளோம். இவ்வருடமும்.

யாரும் இதை எளிதில் மறந்து போயிருக்கலாம். எனினும், பூமியின் மேல் தன்னுடைய சிரத்தைக் கொண்டு வைக்கும் உலகெங்கும் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும், இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் டிசம்பர் 6, 1992 தேதியை மறக்கவியலாது. இந்திய வரலாற்றின் வலி மிகுந்த பக்கங்களின் ஒன்றாய், இந்தியாவில் முஸ்லிம்களாய் வாழ்கிறோம் என்னும் கர்வத்தைக்கொண்டவர்களுக்கு சாட்டையடியாய், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்னும் மனப்பால் குடித்துக்கொண்டவர்களின் தொண்டையில் விஷமாய், மதச்சார்பின்மையைப் போற்றிப்புகழ்ந்து வாழ்பவர்களுக்கு ஓர் பேரதிர்ச்சியாய் அமைந்த நாள், இந்த நாளே....

21 வருடங்கள் கடந்து விட்ட பின்னும் இன்றும் ஒவ்வொரு முஸ்லிமும் நீதியை எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றான். இத்தனை வருடங்களிலும் இந்திய முஸ்லிமின் பார்வையில் படுவது, மதச்சார்பின்மையற்ற இந்திய நாடென்னும் ஓர் பக்கமும், நிஜ இந்தியாவின் மற்றொரு பக்கமும்தான். இருந்தும் நீதி கிடைக்கும் என்னும் நம்பிக்கை இன்னும் கரைந்திடவில்லை அவனின் கண்களில். நம்பிக்கை, எண்ணங்களில் மட்டுமல்ல, ஒவ்வொரு முஸ்லிமின் ஈமானிலும் இதே சிந்தனை குடிகொண்டுள்ளது, இன்று வரை: “நமக்கு நீதி கிடைக்கும். இன் ஷா அல்லாஹ் வெற்றி கிடைக்கும். மீண்டும் அதே இடத்தில் பாப்ரி மஸ்ஜித் எழுப்பபடும்.”

பாப்ரி மஸ்ஜித்தின் அழிப்பைப் பற்றி அனைவருக்கும் தெரிந்த விஷயங்கள் பல இருப்பினும், சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன், இங்கிருக்கும் அனைவருக்கும். பாப்ரி மஸ்ஜித்தை அழிப்பது என்பது ஓரிரு வருடங்களில் சிந்தித்து, வடிவமைக்கப்பட்ட திட்டமல்ல. சுதந்திர இந்தியாவின் முதல் மூச்சிலிருந்தே அந்தத் திட்டமும் தீட்டப்பட்டுவிட்டது. அவர்கள் வெறுமனே அந்த ஓர் நாளுக்காகத்தான் காத்திருந்தார்கள். எப்பொழுது அந்த நாள் வரும், எப்பொழுது நாம் அந்த மஸ்ஜிதை அழிப்போம், எப்பொழுது இந்து ராஷ்டிரத்தின் அடிக்கல்லை நாட்டுவோம்,எப்பொழுது ராமனின் கோவிலை அங்கே கட்டியெழுப்புவோம், எப்பொழுது இந்தியாவில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமையும் அனுதினமும் மரணப்பிடியில் வாழ்நாளைக் கடத்த வைப்போம், எப்பொழுது முஸ்லிம்களை, அவர்களின் ஆசைகளை, அபிலாஷைகளை, குடும்பத்தை, சொந்தங்களை, உயிரை, உடைமையை பிச்சைப்பொருளாய் மாற்றுவோம் என்னும் சிந்தனையிலேயே காத்திருந்தார்கள். காலம் கனிந்ததும், நேரம் கிடைத்ததும், வாய்ப்பைத் தவறவிடவில்லை அவர்கள், மஸ்ஜிதை ஷஹீதாக்கியே ஓய்ந்தார்கள்.

பாரதீய ஜனதா பார்ட்டியின் நீண்டகாலக் கொள்கையான இந்த அழிவை செய்வதன் மூலம் அல்லது, மதச்சார்பின்மை என்பது பொய், இந்து ராஷ்டிரம் என்பதே மெய் என்னும் கூற்றை நிலைநிறுத்திட வேண்டி ஒவ்வொரு உறுப்பினரும் தம்மால் ஆன வேலைகளை இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் செய்து கொண்டேதான் இருந்தனர், திட்டங்கள் இட்டனர். சிலர் சட்டத்தின் ஓட்டைகளை நாடினார்கள், சிலர் மக்கள் தலைவர்கள் என்னும் முதலைகளை நாடினார்கள், இன்னும் சிலரோ மக்களின் மனங்களிலேயே விதை தூவி வளர்க்க ஆரம்பித்தார்கள்.

இந்த அழிவின் முதல் அடியாக ராமர் சிலைகளை மஸ்ஜிதில் கொண்டு வைப்பதாகட்டும், அல்லது, மூடியிருந்த கதவுகளை மீண்டும் திறந்து இரு சமூகத்தாருக்கும் இறைவழிபாடு செய்ய அனுமதித்ததாகட்டும், இதில் முக்கிய கை, முக்கிய தாக்கம், வேறெவரிடமிருந்தும் இல்லை, மாறாக, ஒவ்வொரு மூச்சிலும் மதச்சார்பின்மை, மதச்சார்பின்மை எனப் பொய்யைக் கூவிக் கூவி விற்கும் காங்கிரஸே இந்த அழிவின் பின்னிருந்த முக்கிய காரணியாகும், ஆம் காங்கிரஸ்தான் இதன் மூலம்.

ஒவ்வொரு பேச்சிலும் ஒவ்வொரு அறிக்கையிலும், நாங்கள்தான் மதச்சார்பின்மையைக் காக்கிறோம், நாங்கள்தான் மதச்சார்பின்மையை பூஜிக்கிறோம், சுவாசிக்கிறோம் என்று உடலின் அத்தனை அணுவிலும் பொய்மையைக் கொண்ட இதே காங்கிரஸார்தான் பாப்ரி மஸ்ஜித்தினுள் முதன் முதலில் காவிக்கறைகளை கறை படிய விட்டது. மிம்பரின் இடத்தில் மூர்த்திகளை (சிலைகளை) வைத்தது, இதே காங்கிரஸார்தான் இரு சமூகங்களுக்கும் உரிமை (!!) உண்டு என்று சொல்லி வழிபாடுகளுக்கு இடம் தந்தது, இறுதியில் மஸ்ஜித்தை ஷஹீதாக்கிய குரூரமும் காங்கிரஸாரையே சாரும்!

எனக்கு இன்னமும் தெளிவாக நினைவிருக்கிறது, பாப்ரி மஸ்ஜித்தின் ஷஹாதத்திற்கு முன்னே பாஜகவின் லால் கிஷன் அத்வானி தேசம் முழுதும் ரத யாத்திரை மேற்கொண்டது. வழி முழுதும் விஷத்தின் விதைகளை விதைத்துச் சென்றார். ஒவ்வொரு கதவையும் தட்டித் தட்டி ராமனின் ஆட்சிக்கு உதவுங்கள் எனப் பிச்சை எடுத்தபடி சென்றார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒவ்வொரு ஊரிலிருந்தும் இளைய சமுதாயத்தை இந்து ராஷ்டிரம் அமைக்க அழைத்துச் சென்றார். பிரிவினையும், துவேஷமும் மக்கள் மத்தியில் கொழுந்து விட்டெரிந்தது. எங்கெல்லாம் ரதயாத்திரை தன் காலடியை எடுத்து வைத்ததோ அங்கெல்லாம் அழிவின் பண்டிகைகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டனவே அதை எப்படி மறக்க முடியும்?? இன்றைய இளைய சமுதாயத்திற்கு தெரியாது, ரதயாத்திரையின் மூலம், ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் பரம்பரை பரம்பரையாக, காலம் காலமாக வைரங்களையும், உயர்ரக கற்களையும் விற்று பேரும் புகழும் பெற்றிருந்த முஸ்லிம் வாணிபக்குடும்பங்களை, துணிகளின் தொழிலில் அபிவிருத்தியையும் மனநிம்மைதியையும் பெற்றிருந்த முஸ்லிம் குடும்பங்களை ஒரே இரவில் ஒன்றுமில்லாமல் ஆக்கியதை எப்படி மறக்க முடியும்?? வருடக்கணக்காக வட இந்தியாவில் நேர்மையான தொழிற்பணியின் மூலமும், தீரமான வியாபார சிந்தனையாலும் கோலோச்சியிருந்த முஸ்லிம் குடும்பங்களின் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் கரியில் இட்ட துணியாய் கசக்கிச் சென்றாரே அதை எப்படி மறக்க இயலும்??

மணமுடித்த நம் சகோதரிகளை விதவைகளாக்கிச் சென்ற அந்த யாத்திரை, நீண்ட வாழ்வினை கனவு கூட காணாத இளைய சமுதாயத்தை மிதித்துச் சென்றது. யாத்திரையைச் செய்த அத்வானி மட்டுமல்ல, இந்த விஷத்தையும், துவேஷத்தையும் விதைத்தது, உமா பாரதி ஒரு புறம், அஷோக் சிங்கால் ஒரு புறம், சில சமயம் சாத்வி ரிதம்பராயின் விஷம், என்றால் சில சமயம் கல்யாண்சிங், சில சமயம் பால் தாக்கரே என்றால் சில சமயம் வினய் கடியார்.... இன்றும் அவர்களின் விஷம் நிறைந்த கொடூர பேச்சுக்கள் பதியப்பட்டே உள்ளது. இந்திய தேசத்தின் மதச்சார்பின்மையை கொன்று புதைத்த, கொன்று புதைக்கும் இவர்களின் மீது இது வரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது??? இந்தியாவை சாம்பலாக்குவதற்காகவே புறப்பட்ட ரத யாத்திரை இன்னும் இந்தியாவை அழித்துக் கொண்டுதான்
உள்ளது. எங்கே சென்றார்கள் சட்டத்தைக் காப்பாற்றுபவர்கள்? எங்கே சென்றார்கள் மதச்சார்பின்மையின் பாதுகாவலர்கள்? எங்கே சென்றது சட்டமும் நீதியும்? National Integration Council மூலம் அனைத்து மஸ்ஜித்களும் பாதுகாக்கப்படும் என்று சூளுரைத்தார்களே அந்த வாக்குறுதி என்னவாயிற்று? சுப்ரீம் கோர்ட் வரை சென்று பாப்ரி மஸ்ஜிதின் பாதுகாப்பிற்காக பக்கம் பக்கமாக சட்டங்களை ஏந்தி வந்தார்களே அந்த சட்டங்கள் என்னவாயிற்று?? அன்றைய இந்தியப் பிரதமர் நாட்டு மக்களின் முன்னிலையில் எந்த நிலையிலும் பாப்ரி மஸ்ஜிதை இடிக்க விட மாட்டோம், அதைப் பாதுகாப்போம் என்றாரே அந்த வாக்குறுதி என்னவாயிற்று? கோர்ட் உத்தரவையும் மீறி, பள்ளி வளாகத்தினுள் சென்று பள்ளியை தரை மட்டமாக்கினார்களே, இன்று வரை அவர்களின் மேல், Contempt of court-எனும் ரீதியில் கூட வழக்கு போடப்படவில்லையே ஏன்????????????????

“The people who destructed the Babri Masjid are the anti-national elements of this country..." என்று பார்லிமெண்ட்டில் கூவினாரே, அன்றைய பிரதமர்... அவரிடமும், அவரின் கட்சியிடமும் கேட்கிறேன், இன்று வரை அதில் சம்பந்தப்பட்ட எத்தனை Anti-national / தேசத்துரோகிகளின் மேல் வழக்குகள் பதியப்பட்டது? எத்தனை பேரை கழுவிலேற்றினீர்கள், எத்தனை தேசத்துரோகிகளை சிறையிலடைத்தீர்கள்... எத்தனை தேசத்துரோகிகளை கைது செய்தீர்கள், தண்டனை பெற்றுத் தந்தீர்கள், எதற்கேனும் விடை இருக்கிறதா?? இருபது வருடங்களாக இந்திய முஸ்லிமின் இந்தக் கேள்விக்கு, மதச்சார்பின்மை என்பது மெய்யானால், விடை தாருங்கள்.

மஸ்ஜித் மட்டும் வீழவில்லை அன்று, இந்தியாவின் மானம் வீழ்ந்தது உலகின் முன், மதச்சார்பின்மையின் முகத்திரை கிழிந்தது மக்களின் முன், ஹிந்துத்துவத்தின் கோர முகம் வெளிப்பட்டது மக்களின் முன், அனைத்தையும் கையைக் கட்டி வேடிக்கை பார்த்த அரசு அலுவலர்களாலும், காவல்காரர்களாலும் நீதி செத்துப் போனது அராஜகத்தின் முன்....

என் உரிமையைப் பற்றி நான் கேள்வி எனுப்பினால் நான் தவறு செய்தவனாகிறேன்.... என் கவலைகளைப் பற்றிப் புலம்பினால் நான் தண்டிக்கப்படுகிறேன்.... ஆனால் எவர்கள் என் தேசத்தின் மதச்சார்பின்மைக்கு சவால் விடுகிறார்களோ.... எவர்கள் என் தேசத்தின் இறையாண்மையைக் குழி தோண்டிப் புதைக்கிறார்களோ, எவர்கள் சட்டங்களின் மீது தங்கள் அபிலாஷைகளை பாய் விரிக்கிறர்களோ ... அவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறுங்கள்.... இத்தனை தேசத்துராகிகளையும், வரம்புகளை சட்டங்களை மீறியவர்களையும் என்ன செய்தீர்கள் என்று கூறுங்கள்....

எங்கள் வியாபாரங்களை தகர்த்தால் தோட்டாக்கள் சீறிப் பாய்வதில்லை... எங்களின் வீடுகள் சூறையாடப்பட்டால் தோட்டாக்கள் சீறிப் பாய்வதில்லை.... எங்களின் தாய்மார்களும், சகோதரிகளும் மானபங்கப்படுத்தப்பட்டால், வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில் எறிந்தால் தோட்டாக்கள் சீறிப்பாய்வதில்லை....எங்களின் மக்களையோ, வீடுகளையோ, சகோதரிகளையோ, குழந்தைகளையோ, இறை ஆலயங்களையோ காப்பாற்றத் துடிக்கையில் தோட்டாக்கள் விரைந்து எம்மேலேயே பாய்கின்றன... இதுதான் நியாயமா???? இதுதான் நீதியா??? தூர தூரத்திலிருந்து என் கேள்விகளைக் செவிமடுப்பவர்களிடம் கேட்கிறேன்...என் கேள்விகளுக்கு பதிலுண்டா??? இது என் கவலை மட்டுமல்ல, என் கேள்விகள் மட்டுமல்ல.... என் சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வோர் முஸ்லிமின் கேள்வியும் இதுவே....

உங்களிடம் எங்களுக்காக நேரமோ, பதிலோ எப்பொழுதுமே இருந்ததில்லையே.... இருக்காது உங்களிடம்.... ஏன் இருக்காது....ஏனென்றால் எங்கள் மசூதியைப் பாதுகாக்கும் நோக்கமே உங்களுக்கு இருக்கவில்லை.... அன்றைய இந்தியாவின் பிரதம மந்திரி இதில் இணைந்திருந்தார், லால் கிஷன் அத்வானி இணைந்திருந்தார், மத்திய/மாநில அரசு அதிகாரிகள் இணைந்திருந்தனர், அங்கு நின்று
கொண்டிருந்த காவல்காரர்கள் இணைந்திருந்தனர்... எல்லோருமே இதில் இணைந்திருந்தனர்..... உங்களின் ‘மதச்சார்பின்மை’ என்னும் ஓடி ஓடி இளைத்த பொய்க்கு ஓட்டத்திலிருந்து ஒரு இடைவேளை
தேவைப்பட்டது, மஸ்ஜிதை இடித்த மண்ணில்....

மதச்சார்பின்மை இருப்பது உண்மையானால், இந்தியர்களைப் பிரித்து, சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி, இந்திய சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக்கி, மசூதியைத் தரைமட்டமாக்கி ஆக்ரோஷித்தார்களே அவர்களை தண்டனைக்குட்படுத்துங்கள், சட்டத்தின் முன் நிறுத்துங்கள், மசூதியை மீண்டும் எழுப்பித் தாருங்கள் அப்பொழுது ஆறுதல் கொள்கிறோம் நாங்கள், ஆம் இந்தியாவில் மதச்சார்பின்மை இன்னும் இருக்கிறதென்று.... ஆனால் நடந்தது என்ன??? எங்களின் மஸ்ஜிதை தரைமட்டமாக்கிய அதே இரவில், எங்கள் சமூகத்தை நடைப்பிணமாக்கிய அதே இரவில் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு தலைநகரிலும் எத்தனை எத்தனை இளைஞர்களை சிறையிலடைத்தீர்கள்.....தேச அமைதிக்கு களங்கம் விளைந்திடும் என்று.... எத்தனை ஆயிரம் எங்கள் இளைஞர்களை கைது செய்தீர்கள், நாட்டு மக்களையும், நலனையும் பாதுகாக்கிறோம் என்று??? பறிகொடுத்தவர்களையே பலிகடாவாக்க உங்களால்தான் முடியும்.

மதச்சார்பின்மையை பொய்யாக்கி நீங்கள் எங்களை மண்ணில் வீழ்த்தினாலும், மரணத்தின் போது கூட ஒப்பாரி இட இடம் தராமல் எங்களின் வாய்க்குப் பூட்டு போட்டாலும், எங்களின் வாழ்வை சூனியமாக்கினாலும் தெரிந்து கொள்ளுங்கள், நாங்கள் இந்தியர்கள்... சுதந்திரத்திற்கு முன்னரும், அதன் பின்னரும், ஊன், உயிர், உடைமை, உரிமை என எல்லாவற்றையும் தியாகம் செய்து வளர்த்த இந்த தேசம் எங்கள் தேசம்.... இந்தியா எங்களின் தேசம்.... எங்களின் மண்.... எங்களின் மண்ணாகவே இருந்தது, இருக்கிறது, இன்னும் இருக்கும்...!! இந்தத் தேசத்தில் பிரிவினையையும், சமூகத்தில் குழப்பத்தையும், மனித மனங்களில் விரோதத்தையும் உண்டு செய்பவர்கள், நாங்களல்ல.... அவர்களின் பெயர் “பாரதீய ஜனதா பார்ட்டி”யாகும்.... அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய நீங்களோ... பாரத் ரத்னாவை அத்வானிக்குத் தருவதா, வாஜபேயிக்கு தருவதா அல்லது கல்யாண் சிங்கிற்கா என பட்டிமன்றம் நடத்துகிறீர்கள். வாஹ்.....!

எல்லோரும் கேட்கிறார்கள்.... அல்லாஹ்வின் இல்லத்தை அல்லாஹ் காப்பாற்ற மாட்டானா? பாதுகாக்க மாட்டானா....?? நிச்சயமாக அல்லாஹ் அவனில்லத்தைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் இல்லத்தை அவனின் அத்தனை படைப்புக்களும் சேர்ந்து பாதுகாப்பதை விடவும் அல்லாஹ் பாதுகாக்க வல்லவன். உலகில் உள்ள அத்தனைப் படைப்புக்களையும் பாதுகாக்கும் இறைவன், அவனின் இல்லத்தைப் பாதுகாக்க மாட்டானா?? பிறகு ஏன் அல்லாஹ் இந்த மஸ்ஜிதின் ஷஹாதத்தை அனுமதித்தான்??????

அல்லாஹ் இந்த மஸ்ஜிதின் ஷஹாதத்தை நமக்கு ஓர் எச்சரிக்கை ஆக்கியுள்ளான்... இந்தியாவில் வாழும் முப்பது கோடி முஸ்லிம்களின் மனங்களை, உணர்வுகளைத் தட்டி எழுப்பியுள்ளான்....

முஸ்லிம்களே எழுந்து விடுங்கள்...உணர்வு பெறுங்கள்.... பிரிவினையை விட்டுவிட்டு ஒன்று கூடுங்கள்.... உங்களின் சகோதர சகோதரிகளின் பாதுகாப்பிற்காக ஒன்றிணையுங்கள்.... அல்லாஹ்வைத் துதிக்கும் ஆலயங்களைப் பாதுகாக்க அவனின் இல்லங்களில் தோளுடன் தோள் சேர்த்து நில்லுங்கள் என... இது அல்லாஹ்வின் எச்சரிக்கையே ஆகும்....!!

தன்னுடைய இல்லத்தை அழிப்பதைப் பொருந்திக்கொண்டு அல்லாஹ் நம்மனைவருக்கும் எச்சரிக்கை அனுப்பியுள்ளான்... என் இல்லத்தின் அழிவிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்... பெண்களின், குழந்தைகளின், முதியோர்களின் நலனையும், உயிரையும், மானத்தையும், உடைமைகளையும், வாழ்வையும் பாதுகாக்க என் இல்லத்தின் அழிவிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்... தோளுடன் தோள் சேர்த்து தயாராகுங்கள் என்கின்றான்..... இந்த மண்ணில் இன்னும் அழிவுகள் தொடரப்படவிருக்கின்றன ... இப்பொழுதிலிருந்தே ...இந்த மஸ்ஜிதின் அழிவிலிருந்தே பாடம் படிக்க ஆரம்பியுங்கள் என்கின்றான்....

அல்லாஹ், தன் இல்லத்தில் அழிவின் மூலம், தொழுகையில்லாமல் முஸ்லிமாய் வாழ்பவர்களுக்கு தொழுகையைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ளான்... இந்தக் கூட்டத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கானோரில் குறைந்தது இருவராவது தொழுகையை சரியாக நிலை நாட்டாதவராக இருப்பீர்கள்... அப்படி எவரேனும் இருந்து அவர் மீண்டும் தொழுகையின் பக்கம் திரும்புவரானால்....என் ஈமானைக் கொண்டு கூறுகிறேன்... இப்படிப்பட்ட்டவர்கள் நிறைய நிறைய, மஜ்லிசும் நிறையும்... மஸ்ஜிதும் எழுப்பப்பட்டு விடும்.... எவரின் சகோதரியோ, தாயோ இனி தீயிலிடப்பட மாட்டார்கள்... தொழுகையை விட்டு விடாதீர்கள்.... தொழுகையை விடாமல் கடைப்பிடியுங்கள்.... அல்லாஹ்வின் இல்லங்களை இறையருள் பூத்துக்குலுங்கும் இடங்களாக மாற்றுங்கள்... தொழுகையின் வரிசைகளில் ஒற்றுமையை உருவாக்குங்கள்.... மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்... கற்ற மார்க்கத்தினைக் கொண்டு உங்களின் வியாபாரங்களிலும், வாழ்விலும், இருள்களை அகற்றி, புதிய விடியல்களையும், புதிய வெளிச்சங்களையும் கொண்டு வாருங்கள்... உலகின் கல்வியோடு, மார்க்கக் கல்வியையும் பூரணமாக்குங்கள்... உங்களில் ஒரு சகோதரர் கவலையுடன் இருந்தால், அவரின் கவலையை அகற்றிட முன்வாருங்கள்... அந்தக் கவலையை உங்களால் அகற்ற முடியாமல் போனாலும், குறைந்தது அவருக்காக இரு கையேந்தி து’ஆ செய்திட முன்வாருங்கள்... ஏனெனில் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் நபிமொழிகளில் உள்ளது..... எந்த ஒரு முஸ்லிமின் மனதில், இன்னொரு முஸ்லிமின் கவலையின் தாக்கம் சிறிதும் இல்லையோ, அவர் முஹம்மதின் உம்மத்தைச் சேர்ந்தவரல்லர்... முஹம்மதின் உம்மத்தைச் சேர்ந்தவர்களாக நீங்கள் இருந்தால், விசாரணை என்னும் பெயரில், பொய் வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் கண்ணீரைத் துடைக்க இரு கையேந்தி இருள் விடியா நேரங்களில் து’ஆ செய்யுங்கள்... அவர்களின் வலியை உணருங்கள்... அஸ்ஸாமின் முஸ்லிம்களுக்காக கண்ணீருடன் து’ஆ செய்யுங்கள்.... முஜாஃபர் நகரின் கேம்பில் வாழ்வை நகர்த்தும் முஸ்லிம்களுக்காக து’ஆ செய்யுங்கள்...

இன்றைய சமூகத்தை உணருங்கள்.... சமூகம் இருக்கும் நிலையை உணருங்கள்.... ஆயிரமாயிரம் மக்களை வெட்டிச் சாய்த்தவனும், ஆயிரமாயிரம் மக்களை வீடில்லாமல், குடும்பமில்லாமல் அகதிகளாக்கியவனும், தேசத்தின் மானத்தையும், மதிப்பையும், இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைத்தவனெல்லாம் சுதந்திரமாக சுற்றித் திரியும் காலம் இது. மண் இது. இதையெல்லாம் கண்டு அஞ்சி ஓடுபவர்கள் முஸ்லிம்கள் அல்ல. இன்று இந்த நிலைக்கு நம் சமூகம் தள்ளப்பட்டது ஏன் என்பதைப் படியுங்கள்.... தொழுகைகளின் வரிசைகளில் ஒற்றுமையில்லை.... மஸ்ஜித்களில் ஒற்றுமையில்லை... பெருநாள் கொண்டாட்டங்களில் ஒற்றுமையில்லை.... ஒவ்வொரு ஊரிலும் ஓர் அமீர் இருக்கிறார்கள்.... சில ஊர்களில் தெருவுக்கு ஓர் அமீர் இருக்கிறார்கள்.... எப்பொழுது ஒற்றுமையை

நிலை நாட்டப்போகிறோம்?? அல்லாஹ் ஒருவனே.... இந்த உம்மத்தின் தூதர் ஒருவரே..... நமக்கென அல்லாஹ் அனுப்பிய வேதம் ஒன்றே அப்படி என்றால், இச்சமூகத்தின் அமீரும் ஒரே ஒருவர்தான் இருக்க முடியும், அதற்கு முன், சமூகம் என்பது ஒரே ஜமா’அத்தாக இருக்க வேண்டும்...

என் சகோதரர்களே.... பாப்ரி மஸ்ஜிதையும் தாண்டிய இன்னும் பலப்பல திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன.... முஸ்லிம் சமூகத்தின் வேர்களிலிருந்தே வீழ்த்திடும் அத்தனை திட்டங்களிலும் காய்கள் நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.... ஹைதராபாத்தை யூனியன் டெர்ரிடரி ஆக்க முயற்சிகள் நடக்கின்றன.... நம் குரல்கள் சிதைக்கப்படுகின்றன.... மொழிகளில் கூட பாரபட்சம் காட்டப்படும் காலம் இது... தமிழுக்கோ, ஹிந்திக்கோ, தெலுகுக்கோ உள்ள முக்கியத்துவமோ, அங்கீகாரமோ, இன்று வரை உர்தூவிற்கு கிடைக்கவில்லை..... சுதந்திரப் போராட்டத்தின் வேராக இருந்ததோர் மொழி!!!

அதனை தற்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவச்செல்வங்களைக் கூட அங்கீகரிக்க மறுக்கின்றீர்கள்... உர்தூவையும், முஸ்லிம்களையும், முஸ்லிம்களின் அடையாளங்களையும் ஒவ்வோர் ஊர்களிலுமிருந்து அகற்றிக்கொண்டுள்ளீர்கள்.... ஆனால் ஹைதராபாத்தில் இது நடக்காது.... அப்படி ஒன்று நடந்தால், எதிர்க்க, புரட்சி செய்யவும் தயாராகுங்கள் சகோதரர்களே.... நம் மண், நம் தேசம், நம் அடையாளம், நம் பாரம்பர்யம், நம் சமூகம் என எல்லாவற்றையும் பாதுகாக்கும் பொறுப்பு, அதற்கென ஜிஹாத் செய்யும் கடமை நம் மீது உள்ளது.

அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாகும் ஆசையும் கனவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்திலிருந்து அதன் பேரன், அதன் பேரன், அதன் பேரன் என இறுதி முஸ்லிம் வரைக்கும் அடங்காதது. அல்லாஹ் நம் மண்ணை, நம் தேசத்தை, நம் சமூகத்தை, நம் சகோதர சகோதரிகளின் வாழ்வை, உயிரை, உடைமைகளை, பாதுகாக்கும் துணிவையும், அதன் வழி ஷஹாதத்தையும் நமக்குத் தந்தருள்வானாக.

யா அல்லாஹ் எங்களின் சமூகத்தை அநியாயக்காரர்களிடமிருந்தும், அநீதியான ஆட்சியாளர்களிடமிருந்தும் காத்தருள்வாயாக.

யா மாலிக் எங்களை காத்தருள்வாயாக.... எங்களின் மீது அநியாயக்காரர்களின் கை ஓங்கி விடச் செய்திடாதே....

எங்களின் பாவங்களின் காரணத்தால், தவறுகளின் காரணத்தால் எங்களின் மீது அநியாயத்தின் கையை ஓங்கி விடச் செய்து விடாதே....

யா அல்லாஹ்.... எங்களின் பாப்ரி மஸ்ஜித்தை மீண்டும் அதே இடத்தில் எழும்பச் செய்வாயாக.

யா அல்லாஹ் எங்களின் எல்லா மஸ்ஜித்களையும் காத்தருள்வாயாக. பாதுகாப்பாயாக.

யா அல்லாஹ் எங்களின் எண்ணங்களில், செயல்களில், அமல்களில் உன் பொருத்தத்தை அளிப்பாயாக. ஆமீன். ஆமீன். யா ரப்பல் ஆலமீன்.

-உவைசியின் பேச்சை அழகிய முறையில் மொழி பெயர்த்து தந்த சகோதரி உம்மு உமருக்கு நன்றிகள்.

Thursday, December 05, 2013

 பாபர் மசூதி இடிப்பும் இல‌க்கற்ற இசுலாமியர்களும் !



2005ஆம் ஆண்டு புலனாய்வுக் கழகத்தின் (Intelligence Bureau) முன்னாள் இணை இயக்குனர் மலோய் கிருஷ்ண தர் வெளியிட்ட ஒரு நூலில் பாபர் மசூதி இடிப்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., விஷ்வ இந்து பரிசத் அமைப்புகளால் 10 மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிடப்பட்டதாகக் கூறுகிறார்.

ஆக முதலில் இது ஒரு திட்டமிடப்பட்ட செயல் என்பது உறுதி. இது பலரும் அறிந்ததே, ஆனால் இதன் காலம் பத்து மாதங்கள் என்பது அப்பட்டமான பொய்யாகவே பார்க்க முடிகின்றது. பாபர் மசூதி இடிப்பும், அங்கு இராமர் கோவில் கட்டும் திட்டமும், ‘ரஃகுபீர் தாஸ்’ என்பவர் 1885 ஜனவரி-16 அன்று தொடுத்த வழக்கிலிருந்தே அறியப்படுகின்றது. அதன் பின்னர் தொடர்ச்சியாக மேல்முறையீடு செய்து முயற்சித்தும், பின்னர் 1934-ம் ஆண்டு மசூதியின் முகப்பு சுவர்களை இடித்தும் தொடர்ந்தது இந்துத்துவாக்களின் குரோதச் செயல்கள். இதனடிப்படையிலே தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படி அவர்களின் வெகு ஆண்டுகாலத் திட்டமாக இருந்த மசூதி இடிப்பின் மத்தியச் செயல்தான், 1949-ம் ஆண்டு சிலைகளை உள்ளே வைத்து, அங்கு இராமர் அவதாரமாக தோன்றியுள்ளார் என்பது. அதன் நீட்சியாகவும், உச்சமாகவும் நிகழ்ந்ததுதான் உலக வரலாற்றிலே கருப்பு தினமாகக் காணப்படும் டிசம்பர்-6 1992 அன்று காவி கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்ட பாபரி மசூதி தகர்ப்பு. இப்படி நூற்றாண்டுகளுக்கும் மேல் திட்டமிட்டு செய்யப்பட்டு ஒன்றுதான் இந்த மசூதி இடிப்பு என்பதனை உணர வேண்டும்.

இந்த அவலத்தை சந்தித்து இசுலாமியர்கள் இந்தியாவில் இருண்டு போயுள்ளனர். இவர்களுக்கு ஒரே ஆதரவு நீதித் துறை. ஆனால் அந்த நீதி மன்றமும் கூட மதவாதிகளின் அரசுக் கட்டிடம் என்பதனை நன்கு உணர்ந்து கொண்டார்கள், அலகாபாத் நீதிமன்றத்தின் 2010-ம் ஆண்டைய தீர்ப்பின் மூலம். இதுதான் பாபரி மசூதியின் அவலம் குறித்த குறுகிய வரைவிலக்கணம். இந்தத் துயரிலிருந்து, அவமானத்திலிருந்து, துரோகத்திலிருந்து, தோல்வியிலிருந்து மீண்டெழ, 20 ஆண்டுகளில் இசுலாமியர்கள் என்ன செய்துள்ளார்கள்?

முதலில் இவர்களிடத்தில் எவ்விதமான தூரநோக்கு செயல் திட்டங்களும் கிடையவே கிடையாது. “எங்களுக்குள் தீண்டாமை கிடையாது, பேதமை கிடையாது, ஒற்றுமை அதுவும் கிடையாது” என்று கல்லிடைக்குறிச்சி சொற்பொழிவொன்றில், மறைந்த போராளி பழனி பாபா அவர்கள் இசுலாமியர்களைக் குறித்துச் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். உண்மையில் அதுதான் ஆழ்பெரும் உண்மை. வருடம் டிசம்பர் 6 பிறந்துவிட்டால் போதும், அதற்கு முன்பிருந்து ஒரு காலமாக, சுவர் விளம்பரம், தட்டிகள், நோட்டீஸ் பிரச்சாரம், இறுதியில் அன்றைய தினத்தில் ஒரு கண்டனக் கூட்டம், கருத்தரங்கு, பேரணி, இவ்வள‌வுதான் இத்தனை ஆண்டு காலமாக இந்த இசுலாமியர்களும், அவர்களை வழிநடத்தும் தலைவர்களும் கடைபிடிக்கும் போராட்ட வழிமுறைகள். இதனால் கட்டடம் எப்படி உயிர் பெறும்?

"டிசம்பர் 6 போராட்டம் என்பதே ஏதோ 'வருஷம் பாத்திஹா' சடங்கு போல ஆக்கப்பட்டு விட்டது. ராமர் கோவிலைக் கட்டுவதற்காக விஹெச்பியால் தொடங்கப்பட்ட பல பிரிவுகள் தமது இலக்கை அடைய ஒன்றிணைந்து நிற்பதையும், பாபர் மஸ்ஜித் மீட்புக்காகத் தொடங்கப்பட்ட நமது இயக்கங்கள் பல கூறுகளாகப் பிளவு பட்டு நிற்பதையும் தான் நம்மால் காண முடிகிறது” என்று குறிப்பிட்டுள்ளார், திரு.ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் தனது ‘குருதியில் நினையும் நூலில்’(ப-98). மேலும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நுண் சாதுரியங்களையும் அதில் குறிப்பிட்டுக் காட்டி, இதில் துளியேனும் நம் இசுலாமியர்களிடத்தில் உள்ளதா என்றும் வினவியுள்ளார். அலகாபாத் தீர்ப்பு வெளியான அதே ஆண்டில் இவர் எழுதிய இந்த வரிகளை இரண்டு ஆண்டுகள் கடந்தும் இசுலாமியர்கள் சுயபரிசோதனை செய்துள்ளார்களா என்றால் இல்லை என்பதே வேதனை. எப்பொழுதும் போல இந்த வருடமும் தனித்தனியே ஆரப்பித்துவிட்டனர் தங்களின் துக்க நாள் அனுசரிப்புகளை.

"பாபர் மசூதியினை மறந்துவிடாமல் இருப்பதுவே, நமது பாஸிச எதிர்ப்பின் முதல்நிலை" என்ற வண்ணமாக ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' எனும் இசுலாமிய இயக்கம், 21-வது ஆண்டில் ஒரு வாசகத்தை கையிலெடுத்திருப்பது, இச்சமூகத்தின் இலக்கற்ற நிலையினை தெளிவுபடுத்துகின்றது. அதேநேரம் இதே இயக்கம், பாபர் மசூதி குறித்து நான்கு வருடங்களுக்கு முன்னர், ‘நான்தான் பாபரி பேசுகிறேன்' என்று ஒரு ஆவணப் படமும், அலகாபாத் தீர்ப்பு வெளியான உடன் “நீதி தேடும் பாபரி மசூதி” என்ற ஆவணப் படமும் வெளியிட்டது வரவேற்க வேண்டியது. அதேசமயம் அது சென்றடைந்தது எத்தனை பேருக்கு என்கிற போது சோகமாக உள்ளது. இந்நிலையில் அவ்வியக்கத்தின் சார்பாக, இவ்வருடமும் அதேபோல், “வரலாற்றின் வெளிச்சத்தில் பாபரி மஸ்ஜித்” எனும் மற்றுமொரு ஆவணப் படம் வெளியிடப் போவதாக அவர்களின் துண்டறிக்கையில் வெளியிட்டுள்ளனர். இது உண்மையில் மிகக் கசப்பானதே. எத்தனை வருடத்திற்குத்தான் இப்படி ஆவணப் படம் எடுக்கப் போகிறீர்கள்? அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டாமா?

இந்த ஆவணப்படங்கள் எத்தனை பேரைச் சென்று சேர்ந்துள்ளது? பாபரி மசூதி இடிப்பு அநீதி என்று உணர்ந்த இசுலாமியர்களிடமும், அதிலும் அதிகமாக வெளியிடும் அவ்வியக்கம் சார்ந்த உறுப்பினர்களிடமும் தவிர வேறு எவரிடத்தில் சென்று சேர்ந்துள்ளது? சேரி மக்களுக்குத் தெரியுமா இவைகள்? இந்தப் படங்கள் விற்பனைக்காக எத்தனை பக்கங்கள் கடை விரித்துள்ளீர்கள்? நீங்கள் நடத்து டிசம்பர்-6 கூட்ட அரங்கு தவிர?

ஆக, இவர்கள் செய்யும் ஊடக செயல்கள் கூட முழுமையானதாக இல்லை. ஆனால் ஆவணப்படங்கள் தாண்டியும் இது ஒரு பெரும் திரைப்படமாக எடுத்து அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணம் இவர்களிடத்தில் இல்லை. 'ராம் கே நாம்’ என்று ஹிந்தியில் பாபரி மசூதி இடிப்பிற்கு முன்னரே வெளிவந்த படத்தினை இங்குள்ள மக்களுக்கு மொழியாக்கம் செய்து காட்டவோ, வட இந்திய மக்களுக்கு அதனை பரப்பிக் காட்டவோ இவர்களிடத்தில் திறன் இல்லை, திட்டங்கள் இல்லை.

ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எழுதிய அதே நூலில், இசுலாமியர்களின் கையறு நிலையினை அவர் தெளிவாகக் கூறியிருக்கின்றார். வி.ஹெச்.பி செய்த பள்ளிக்கூடத் திறப்பு, அதில் இராமர் பற்றிய திணிப்பு, ஊடகங்களில், சின்னத்திரைகளில் இராமர் தொடர் ஒளிபரப்பு, மலைவாழ் மக்களிடத்தில் இராமர் சிலை இலவச அளிப்பு என்று அவர்களின் செயல்திட்டங்களை கூறியிருக்கின்றார். இதில் ஒன்றையேனும் இசுலாமியர்கள் செய்துள்ளார்களா என்றால் இல்லை? சமீபத்தில் 26-இயக்கங்கள் தமிழகத்தில் ஒன்றிணைந்து, முகம்மது நபி அவர்களை இழிவுபடுத்திய அமெரிக்க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்து, அமெரிக்க தூதரகத்தினை தமிழகத்தை விட்டும் துரத்தியடித்தது. ஏன் இந்த ஒற்றுமை இதில் வருவதில்லை. ஏன் இந்த 26 இயக்க‌ங்களிடத்திலாவது ஒரு பள்ளிக் கூடம் உள்ளதா? ஊடகம் உள்ளதா? அரசியல் பலம் உள்ளதா? தென்னக இசுலாமியர்களின் நிலையே இப்படியென்றால், வடக்கில் உள்ளவர்களின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அங்கு அவர்கள் இசுலாமியர்களாக உலாவுவதே பெரிய சிக்கல்.

இப்படி 20 வருடங்கள் கழிந்தும் எந்த செயல் திட்டமும் அற்று இந்த சமூகம் இருப்பதன் பின்புலம், இரண்டு. ஒன்று இவர்களிடத்தில் இல்லாத ஒற்றுமை, இன்னொன்று இந்துத்துவாக்களின் திசை மாற்றும் வேலை.

மசூதி இடிக்கப்பட்டதும் இசுலாமியர்கள் எழுந்து விடுவார்கள் என்ற காரணத்தால், இசுலாமியர்களுக்கு தொடர்ந்து வெவ்வேறு பிரச்சனைகளைக் கொடுத்து, அவர்களை திசைமாற்றிக் கொண்டே உள்ளது காவிக் கும்பலும், அதனோடு இருள் கரம் கோர்த்திருக்கும் காங்கிரஸ் கும்பலும். அதனால்தான் இசுலாமியர்கள் டிசம்பர் ஆறன்றே இதனை நினைவு கூறும் அவலம் தொடர்கின்றது.

மசூதி இடிப்புக்குள்ளான சில வருடங்களில், பழனிபாபா கொலை செய்யப்படுகிறார். ஒரு வீரியமிக்க தலைமையை அழித்துவிட்டது. இந்தியாவெங்கும் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டு, இசுலாமிய இளைஞர்கள் சிறைகளுக்குள் நிரப்பப்படுகின்றனர், இசுலாமியர்களின் பிற‌ப்புரிமையான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர், அப்துல்நாசர் மதானி தொடர்ந்து சிறை பிடிக்கப்பட்டுள்ளார், 2002-ல் குஜராத்தில் இசுலாமியர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டனர், இப்படி ஒரு இழப்பில் இருக்கும் சமூகத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனைகளைக் கொடுத்து அதன் மூலம் அவர்களை விழிப்புணர்வு அடையவிடாமல், எக்காலமும் போராடிக் கொண்டே இருக்கும் முகமாக, இசுலாமியர்களை திசை திருப்புவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுகின்றனர், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள்.

இப்படியான சூழலில்…. “பாபர் மசூதி இடிப்பு தினத்தில் முஸ்லிம்கள் எதிர்ப்பு காட்டும்போது, அதைக் கொண்டாடியதால் பரமக்குடி முருகனையும், பெரிய பொட்டு வைத்துக்கொண்டு அன்னதானத்தை பிரமாண்டமாக நடத்தியதால் மதுரை சுரேஷையும் படுகொலை செய்ததாக தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாஜக‌ பிரமுகர் முருகன் கொலை குறித்து விசாரிக்க தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 7 நாள் காவலில் எடுத்தனர்” என்கிற செய்தி இன்றைய தினங்க‌ளில் ஊடகங்களில் பரவ விடப்பட்டுள்ளன. இது எவ்வலவு பெரிய விஷமம். முஸ்லீம்கள் நீதி வேண்டி நடத்தும் போராட்டங்கள் கூட இனி இந்துக்கள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்துமல்லவா? இவர்களின் போராட்டங்கள் தவறாக பார்க்கப்படுமல்லவா? இருபது வருடங்கள் கழித்தும் இந்தச் சமூகம் எள்ளள‌வும் எழுந்து நிற்கவில்லை, எழ விடாமல் எதிரிகள் பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் இத்தனை அடுக்கடுக்கான பிரச்சனைகளையெல்லாம் களைய இந்த இசுலாமியர்கள் ஒன்றுபட்டாலே ஒழிய வேறு தீர்வே இல்லை என்பதுவே ஆழமான உண்மை.

பாபர் மசூதி இடிப்பானது, எவ்வகையிலும் நியாயமற்றது என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் கருத்து கூறியும், அங்கு இராமர் பிறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெளிவாகத் தெரிந்தும் கூட, அலாகாபாத் நீதிமன்றம் அப்பட்டமான ஒரு விநோதத் தீர்ப்பினை வழங்கியது, வேதனையிலும் வெங்கொடுமை. அங்கு இராமர் பிறந்ததற்கான ஆதாரங்களைத் தேடி, அகழ்வாராய்ச்சி தொல்பொருளியாளர்கள் மசூதியினுள் தோண்டிய குழிகள் ஆதாராம் தேடி இல்லை; அது இராமர் கோவில் கட்டுவதற்கான பூமி தோண்டல் என்பதனை அலாகாபாத் தீர்ப்பு தெளிவாக்கிவிட்டது. முழுக்க முழுக்க இந்துக்களுக்கே சாதகமான இந்தத் தீர்ப்பினைக் கூட இந்துத்துவாக்கள் அநியாயம் என்கிறார்கள்.

“ஜென்ம பூமியின் மூன்றில் ஒரு பங்கு இசுலாமியர்களுக்கென்று தீர்ப்பு கூறியுள்ளார்கள். இது என்னவென்று புரியவில்லை. அநீதியாக உள்ளது” என்று இந்து முன்னணி இராமகோபலய்யர் கூறியுள்ளார்.

"முஸ்லீம்கள் இனியும் பாபர் மசூதி என்று ஜென்ம பூமியினை அழைத்தால், நாங்கள் முஸ்லீம்களின் மக்காவினைக் கேட்போம்” என்று ஒரு மிரட்டல் விடுத்தார், தீர்ப்பு வெளியான அடுத்த நாளில் திரு.இராஜ்நாத் சிங்.

ஆனால், இசுலாமியர்களுக்கோ இதுபற்றியெல்லம் எந்த அறிவும் இல்லை. இது ஒரு அப்பட்டமான அநீதி என்றறிந்தும் இவர்கள் மனங்களுக்குள்ளே புழுகிக் கொள்கின்றனர். இது ஒரு மதத்திற்கான இழிவல்ல, இது இந்திய தேசத்தின் இழிவென்பதனை உணர்ந்து, இப்பிரச்சனையினை, ஐ.நா மன்றம் வரையிலும், ஏனைய இசுலாமிய நாடுகளிடத்திலும் முறையிட்டு இருக்க வேண்டாமா இந்த இசுலாமிய சமூகம்?

“நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு, நீதிபதிகளையும் மதவெறி தீண்டிவிட்டதோ என்ற ஐயத்தை உண்டாக்குகின்றது” என்று நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்களும்,

“நீதிமன்றம் மிகவும் மோசமான தவறிழைத்துவிட்டது” என்று அரசியலமைப்பு சட்ட நிபுண‌ர் திரு.இராஜிவ் தவான் அவர்களும்,

“இது ஒரு அரசியல் தீர்ப்பு, உறுதியான ஆதாரங்களால் வழங்கப்பட்டது இல்லை" என்று எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்களும்,

“பள்ளிவாசல் கபருஸ்தானில் நீதியை குழிதோண்டிப் புதைத்துவிட்டது நீதிமன்றம்" என்று, அவினாஷ் பாண்டே ஆராய்ச்சி நிபுண‌ர் அவர்களும்,

இப்படியாக பலரும் 2010 வெளியான தீர்ப்பினை எதிர்த்து, இது அநீதி, அநீதி என்று கூறியுள்ளனர். இந்த உண்மைகளுக்கு மத்தியில் ஊடக‌ங்கள் பார்ப்பனர்களின் குமுறல்களை மட்டுமே திரையிடுகின்றன.

இப்படியிருந்தும் இன்னும் இசுலாமியர்கள், பாரதிய ஜனதாவிற்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியினைச் சார்வது ஒரு நூற்றாண்டு கடந்தும் தொடரும் அவலமாக உள்ளது.

குல்திப் நய்யார் "பியாண்ட் த லைன்ஸ்" என்ற சுயசரிதை நூலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“நரசிம்மராவ் பாபர் மசூதி இடிப்பில் மறைமுக ஆதரவாளராக இருந்தார். இடிப்பின் போது பூஜையில் உட்கார்ந்த நரசிம்மராவ் பாபர் மசூதியின் கடைசிக் கல் வீழ்த்து முடிந்தவுடன்தான் பூஜையை முடித்தார்" என்று குல்தீப் நய்யார் அந்த நூலில் எழுதியுள்ளார். "பாபர் மசூதி இடிப்புக்கு ராவ் அரசே முழு பொறுப்பு. அவருக்கு அது நடக்கும் என்று தெரிந்திருந்தபோதும் அவர் அதனைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை" என்கிறார் குல்திப் நய்யார்”

இதுதான் காங்கிரஸின் உண்மை முகமாக உள்ளது. இருந்தும் இசுலாமியர்களின் ஏமாற்றம் தவிர்க்க இயலாததாக உள்ளது. தங்களுக்கென்று ஓர் அரசியல் பலத்தினை உருவாக்காமல், ஊடக வலிமையினை உருவாக்காமல், அறிவுத் தலைமுறைகளை உருவாக்காமல் இவர்களால் என்றுமே எழுந்திருக்க முடிய முடியாது. இதற்க்கெல்லாம் தேவை ஒற்றுமை. அது நிகழ வேண்டுமெனில் ஒவ்வொரு இசுலாமியனும் சிந்திக்க வேண்டும்.

20 வருட காலத்தில், ஒவ்வொரு இயக்கமும் தலைக்கு ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து கல்வி கொடுத்து, சிவில் சர்வீஸ் பரிட்சை எழுதப் பயிற்சி கொடுத்து ஊக்குவித்து, அவனுக்கான எல்ல செலவுகளையும் ஏற்று வளர்த்திருந்தால் இன்று இசுலாமியர்கள் மத்தியில் குறைந்தது பத்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உருவாகியிருக்க மாட்டார்களா? ஐ.பி.எஸ். அதிகாரிகள் உருவாகியிருக்க மாட்டார்களா? ஏன் செய்யவில்லை இந்த இயக்கங்கள்?

இருபது வருடங்களில் இந்தப் போராட்டங்களுக்காக செலவு செய்த தொகையினைச் சேமித்து ஒரு பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம். செய்தார்களா? பிரதான இயக்கங்கள் ஒன்றிணைந்து தங்களுக்காக ஒரு செய்தி ஊடகம் உருவாக்கியிருக்கலாம். செய்யவில்லையே ஏன்?
இவர்கள் மத்தியில் நம்பிக்கையில்லை, ஒற்றுமையில்லை. தற்பெருமை, போட்டி மனப்பாங்கு மட்டுமே உள்ளது.

இது கருப்பு நாள் மட்டும், இல்லை காவிகளின் நாள் என்று நாம் உணராத வரையில் வெற்றி நமக்கிங்கு இல்லவே இல்லை. நாம் சக்தி பெற, நீதம் பெற ஒற்றுமை தவிர மாற்று இல்லை என்று உணர்ந்ததை நிறைவேற்றாத வரையில், வெற்றி எட்டாக் கனியே.

பாசிசவாதிகளின் ஹிந்துஸ்தானத்திற்கு, சுதந்திர போரட்ட நாயகர்களின் வழிவந்த இசுலாமியர்கள் என்றும் தடையாகவே இருப்பர். இதனை அடைய இசுலாமியர்களை விரட்டியடிக்கவும், தலித்துகளை ஒடுக்கி வைக்கவும் பாசிசம் உறங்காது வேலை செய்யும். ஆனால் தவறு செய்பவனே, அவனை தண்டிக்கும் வழிமுறையினையும் காட்டிக் கொடுத்து விடுகின்றான். அவ்வகையிலேதான், இந்துத்துவாக்கள் ஒரு தவறு இழைத்துவிட்டனர். அதுவே டிசம்பர்-6. அவர்களால் அந்நியப்படுத்தப்படும் இசுலாமியர்களும், ஒடுக்கப்படும் தலித்துகளும் இணைவு கொள்வது இத்தளத்தில்தான். ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரலாக ஓங்கி மறைந்த சட்டமேதை, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மறைந்த நாளில், மசூதியை இடித்து இசுலாமியர்களுக்கு தங்களின் தோழமையினை அடையாளம் காட்டிவிட்டது ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத அமைப்பு.

இவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு உள்ளார்ந்த அர்த்தம் இருக்கும், அவ்வகையில் மசூதியினை இவர்கள் இடித்தது, “நான் சாகும் போது ஒரு இந்துவாகச் சாக மாட்டேனென” கூறி மரணித்திட்ட மாவீரர் அம்பேத்கர் மறைந்த டிசம்பர்-6 ஆகும். வேறு எந்தக் காரணமும் இருப்பதாக இந்நாள் குறித்த வரலாறுகள் இல்லை.

இதனால்தான், “எரிபடும் சேரிகளில், இடிபடும் மசூதிகளில் புறப்படும் விடுதலைச் சூறாவளி' என்று தொல்.திருமாவளவன், திசம்பர் 6 - 1992 அன்றே மதுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இனி இசுலாமியர்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். தலித் சமூக மக்களிடையே நல்லுணர்வு வளர்த்து, தங்களின் பொது எதிரியினை மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும். அதற்கு எதிர்வரும் நாடாளுமன்றமும், சட்டமன்றமுமே பாடமாக இருக்க வேண்டும். வீணாக பணத்தினை செலவழிக்காமல் அதனை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டிற்குள்ளாவது இசுலாமியர்களுக்கென்று ஒரு தனி ஊடகமும், ஒருமித்த தலைமை கொண்ட கட்சி கூட்டணியும் அமைந்திட வேண்டும்.

இளைஞர்களை அறிவுத் தளத்தில் ஊக்கப்படுத்த வேண்டும். ஒவ்வொரு இயக்கமும் குறைந்தது ஐந்து மாணவர்களைத் தெரிவு செய்து, அவர்களுக்கு கல்வி, இருப்பிட, உணவுகளை இலவசமாக்கி, அவர்களை ஒவ்வொரு துறைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இன்றிலிருந்து முயற்சித்தாலே, அடுத்த வருடங்களில் இசுலாமிய ஆட்சியாளர்கள் சொல்லும் விதமாக‌ ஏற்பட்டு இருப்பார்கள். இதுபோன்ற ஆரோக்கியமான கருத்துக்களைக் கூறி, இவைகளை செயல்படுத்த ஒவ்வொரு இசுலாமியனும் அவரவர் இயக்கத் தலைமைகளை கட்டாயப்படுத்த வேண்டும். இதில் கயமம் காட்டும் இயக்கங்களை இசுலாமியர்களே நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

“பள்ளிவாசல்கள் பஜனை மன்றங்களல்ல; அவை பாசறைகளாக மாறாத வரையில், நாம் இம்சிக்கப்பட்டுக் கொண்டுதான் இருப்போம்” என்று கூறிய பழனிபாபாவின் வார்த்தைகளின் படி, பள்ளிவாசல்கள் தோறும் இது வெறுமனே நம் இழப்பு அல்ல, மாறாக நம் தேசத்தின் இழுக்கு என்று உணர்ந்தும், இதனைப் பற்றி பேசுவதால் அமைதி குலையாது என்று உணர்ந்தும், மசூதி மதகுருமார்கள் துணிவாக தத்தம் மசூதிகளில் பேச வேண்டும். நம் முன்னோர்கள் இம்மண்ணிற்க்காக தம் இன்னுயிர் கொடுத்ததினைப் போல, இன்று இசுலாமியர்கள் மசூதியினை மீட்டு, நம் தேசத்தின் கருப்பு நாளை ஒளி வீசச் செய்து, நமது தியாகத்தினை மீண்டுமொருமுறை நிரூபிக்க வேண்டும்

இறுதியாக பொதுச் சமூகத்திற்கு:

“பாபர் மசூதி தீர்ப்பானது, இந்து-முஸ்லீம் பிரச்சனை அல்ல. மாறாக இது அமைதியினை விரும்பக்கக் கூடிய, மதச்சார்பின்னைமையினை போற்றக் கூடிய, அரசியல் சட்டங்களை மதிக்கக் கூடியவர்களுக்கும், சட்டத்தை காலில் போட்டு மிதிக்கக் கூடிய, நாசகர செயலை செய்கின்றவர்களுக்கும், அநீதியாள‌ர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தமாகும்” என்று இதன் தன்மையினை விவரித்துக் கூறுகின்றார், சிறந்த சமூக ஆர்வலரான திரு.ஹர்ஷ் மந்திர் அவர்கள்.

ஆகவே, இசுலாமற்ற தோழர்களே! பாப்ரி மசூதி இடிப்பிற்கு ஆதரவு தரும் எவரும் உண்மை தேசியவாதிகள் இல்லை என்பதனையும், மாறாக அவர்களே தேச விரோதிகள், தீவிரவாதிகள் என்பதனையும் நீங்கள் உணர்ந்து, நாட்டை நலம் காணச் செய்ய வேண்டும்.

- ஷஹான் நூர், கீரனூர் ( chenoor35@gmail.com)