Followers

Friday, August 22, 2014

கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி காலமானார்!



கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி காலமானார்!

கன்னட எழுத்தாளர் அனந்த மூர்த்தி உடல் நிலை சரியில்லாமல் கடந்த நான்கு நாட்களாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்கை அளித்தும் பலனில்லாமல் இன்று வெள்ளிக் கிழமை காலமானார். இவருக்கு வயது 81. டிசம்பர் 21, 1932 ல் திருஹல்லி தாலுகா சிமோகா மாவட்டத்தில் பிறந்தார். 'சமஸ்காரா' என்ற இவரது நாவல் மிகப் பிரபலமாகி திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. கன்னட இலக்கியத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றியவர். எழுத்துலகின் உயரிய விருதாகக் கருதப்படும், "ஞானபீடம்' விருது பெற்றவர்.

பெங்களூரில், சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது, "பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என்று கூறியிருந்தார். இதை அறிந்த, பா.ஜ.,வினர் கடும் கோபம் அடைந்தனர். "கர்நாடக சட்டசபைத் தேர்தல்களின் போது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் இவர், மோடியைப் பற்றி பேச அருகதை இல்லை. விரும்பினால் அவர், இந்தியாவை விட்டு வெளியேறிக் கொள்ளலாம்' என்றனர்.

மேலும், பா.ஜ., பிரமுகர்கள் பலர், எழுத்தாளருக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்தனர். இதை அறிந்த அனந்தமூர்த்தி மேலும் கொதிப்படைந்தார். அவர் அன்று கூறியதாவது:

“பா.ஜ.,வுக்கு என்னைக் கண்டால் எப்போதுமே பிடிக்காது. ஏனெனில், நான், ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை வெளிப்படையாக எதிர்ப்பவன். ஹிந்துயிசம் பற்றி சரியாக அறியாத அவர்கள், அவர்களின் ஹிந்துயிசத்தை பரப்பி வருகின்றனர். என்னிடம் அந்த கருத்தை விற்க முடியாததால், கோபம் கொண்டுள்ளனர்.

ஆட்சியில் இல்லாத போதே, இவ்வாறு செயல்படுபவர்கள், மோடி பிரதமராகி விட்டால், எப்படி செயல்படுவர் என யோசிக்கவே முடியவில்லை. பிரதமர் பதவி என்பது, மிக உயர்ந்த பதவி. அதற்கென சில தகுதிகள் உள்ளன. நேரு, போன்றோர் வகித்த பதவி அது. அதை வகிக்க, மோடிக்கு தகுதியில்லை. பிரதமர் என்பவர், எல்லாராலும் எளிதில் அணுகக் கூடியவராக இருக்க வேண்டும்; பயத்தை ஏற்படுத்தக் கூடியவராக இருக்கக் கூடாது. மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மக்கள் விரோத அரசு அல்ல; ஆனால், ஊழல் அரசு. இந்த அரசு, பதவியிலிருந்து வெளியேற வேண்டும். அதற்காக, மோடி போன்றவர்கள், அந்த பொறுப்புக்கு வரக் கூடாது”. இவ்வாறு, எழுத்தாளர், அனந்தமூர்த்தி கூறினார்.

ஆனால் அனந்த மூர்த்தியின் எண்ணம் நிறைவேறவில்லை. ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்வா இயக்கத்தினர் இந்து மதத்துக்கும், இந்திய நாட்டுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் எத்தகைய கேட்டை விளைவிக்கக் கூடியவர்கள் என்ற உண்மை பல கோடி இந்திய மக்களுக்கு சொல்லப்படாமல் விடப்பட்டுள்ளது. இன்னும் ஐந்து வருடம் கழித்து அனந்த மூர்த்தியின் வார்த்தை எத்தனை சத்தியமானது என்பதை வோட்டளித்த இந்திய மக்கள் உணர்வர். அது வரை நாமும் பொறுப்போம்.

இவரைப் போன்ற நல்லவர்கள் மறைந்தாலும் கோடான கோடி இந்தியர்களின் மனதில் பசுமையான நினைவுகளால் வாழ்ந்து கொண்டே இருப்பர்.

அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

No comments: