திரு வியாசன்!
//உங்களின் முன்னோர்கள், இஸ்லாமியத் தாய்மார்கள், தமிழ்ப் பெண்களைப் போலவே சேலையணிந்து முக்காடிட்டுக் கொண்டனர். அப்பொழுது அவர்கள் உண்மையான, ஒழுக்கமான முஸ்லீம்கள் இல்லையா? இதில் வேடிக்கை என்னவென்றால், முஸ்லீம்கள் அனைவரும் அரபுக் கலாச்சாரத்தைத் தான் கடைப்பிடிக்க வேண்டுமென்றோ அல்லது ஒரே சீருடையைத் தான் அணியவேண்டுமென்றோ முகம்மது நபி அவரகள் எந்த இடத்திலும் முஸ்லீம்களுக்குக் கூறவில்லையாம்.//
உங்கள் கருத்தை முழுவதுமாக ஒத்துக் கொள்கிறேன். அரபு கலாசாரத்தைப் பின்பற்றுங்கள் என்று குர்ஆனோ, நபிகளோ எங்குமோ சொல்லவில்லை. குர்ஆன் இடும் கட்டளை முகம், கை மணிக்கட்டு இந்த இரண்டை தவிர மற்ற இடங்களை அந்நிய ஆடவர்கள் முன்னால் வரும் போதும் வெளியில் செல்லும் போதும் மறைத்துக் கொள்ளச் சொல்கிறது. கவர்ச்சியான பகுதிகளை துணிகள் போட்டு மறைத்துக் கொள்ளச் சொல்கிறது. இதனால் ஆண்கள் சபலப்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். பெண்ணுக்கும் பாதுகாப்பு. வன்புணர்வு நிகழ்ச்சிகள் தினமும் நடப்பது நமது நாட்டில் வழக்கமாகி விட்டது. இதற்கு முக்கிய காரணமே பெண்கள் அணியும் ஆபாச உடைகள் தான். ஒரு இஸ்லாமிய பெண் முக்காடிட்டு பஸ்ஸில் ஏறினாலே ஒரு மரியாதை தாமாக வந்து விடும். இதை நான் பல இடங்களில் கவனித்துள்ளேன்.
அடுத்து எனது குடும்பத்து பெண்கள் அனைவரும் கருப்பு அங்கியே அணிகிறார்கள். 20 வருடங்களுக்கு முன்பு துப்பட்டி என்ற ஒரு வெள்ளை உடையை சேலையை போன்று சுற்றிக் கொள்வார்கள். அது அடிக்கடி நழுவும் அபாயமும் உண்டு. ஒரு கையால் பிடித்துக் கொண்டால்தான் நழுவி விடாமல் இருக்கும். ஆனால் தற்போது அணியும் கருப்பு அங்கியில் பட்டன் சிஸ்டம் உள்ளதால் நழுவ வாய்ப்பில்லை. இந்த கருப்பு அங்கி, உடுத்தும் அந்த பெண்களுக்கு வசதியாக இருக்கிறது. இதைத்தான் உடுத்த வேண்டும் என்று எனது வீட்டு பெண்களுக்கு நான் என்றுமே சொன்னதில்லை. துப்பட்டாவை விட புர்ஹா வசதி என்பதால் அவர்களே தேர்ந்தெடுத்துக் கொண்டது. யாரும் அந்த பெண்களை கட்டாயப் படுத்தவில்லை.
//என்னைப் பொறுத்த வரையில் அவர்கள் தமிழை வெளியில் பேசினாலும், எத்தனை தலைமுறைகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அல்ல.//
இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் பல உர்து முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களோடு திருமண உறவு வைத்து தமிழ் ரத்தத்தோடு கலந்து விட்டவர்கள் எனது பார்வையில் தமிழர்களே! அப்படி சம்பந்தம் பண்ணாதவர்களை வேண்டுமானால் தமிழர்கள் இல்லை என்று சொல்லலாம். இதே அளவு கோளை கன்னடம் பேசும், தெலுங்கு பேசும், மலையாளம் பேசும், சௌராஷ்ட்ரா பாஷை வீட்டுக்குள் பேசும் குடும்ப அங்கத்தினர்களையும் பார்க்க வேண்டுமல்லவா!
//நீங்கள் கூறுவதைப் பார்த்தால், இன்று கூடத் தமிழை நீங்கள் உங்களின் தாய்மொழியாக, உங்களின் முன்னோர்களின் மொழியாக எண்ணி நேசிக்கவில்லை, மாறாக வஹாபிய சிந்தனை வழியில் எல்லா உலகமொழிகளும் சமம் என்ற வகையில் நேசிக்கிறீர்கள். அந்த வழியில் பார்த்தால் நீங்கள் உண்மையில் தமிழனே அல்ல என்பது தான் எனது கருத்து,//
தாய் மொழிப் பற்று என்பது தானாக ஒருவரது உடலில் ஊறக் கூடிய ஒன்று. நான் தமிழன் என்பதால் அந்த தமிழ்ப் பற்று எனக்குள் முன்பே இருந்தது. இடையில் ஒரு சிலர் தமிழை இந்துக்கள் மொழி என்று விபரம் தெரியாமல் குழப்பி வந்தனர். வஹாபிய சிந்தனை வந்தவுடன் தமிழ் இந்துக்களுக்கான மொழி மட்டும் அல்ல. அது தமிழரின் மொழி என்ற உண்மை தெரிந்து அந்த இறுக்கம் இன்னும் அதிகமானது என்றுதான் சொல்கிறேன். மற்றபடி உங்களின் தனிப்பட்ட எண்ண அளவுகோள்களில் நான் தலையிட முடியாது.
//வஹாபிய சிந்தனை உண்மையில் அரபு விசுவாசத்தை அதிகரிக்கிறது, ஊக்குவிக்கிறது என்பது தான் பலரின் கருத்தாகும். உண்மையில் அது தான் அந்த மதப்பிரிவைத் தோற்றுவித்தவரின் நோக்கமும் என்று தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு மட்டும் வஹாபியம் இந்தியாவிலும், தமிழிலும் பற்றை ஏற்படுத்தியது என்கிறீர்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது.//
“மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான். “
ஆதார நூல்: (அல்பைஹகீ)
முகமது நபி அவர்களின் இறுதி பேருரையில் வரும் இந்த வாசகம் இனப் பெருமையையும் குலப் பெருமையையும் காலில் போட்டு மிதிக்கிறது.
மற்றொரு அறிவிப்பில் 'குலப் பெருமையை எனது காலில் போட்டு மிதிக்கிறேன்' என்று நேரிமையாகவே சாடுகிறார். இப்படிப்பட்ட ஒருவர் அரபு விசுவாசத்தை ஊக்குவிக்கிறார் என்று எப்படி சொல்கிறீர்கள்?
//வஹாபிஸ்டுகள் தான் குரானை முதலில் தமிழில் மொழிபெயர்த்தார்கள் என்பதையும் அதிலும் இந்துக்களின் மொழியில் குரானை மொழிபெயர்த்தல் பாவம் என்று தமிழ்நாட்டு தமிழ் முஸ்லீம்கள் நினைத்துக் கொண்டதால் மொழிபெயர்க்கவில்லை என்பதையும் என்னால் நம்ப முடியவில்லை, நீங்கள் இதற்கு ஆதாரம் காட்டுங்கள்.//
இஸ்லாம் வந்து 1400 வருடங்களுக்கு மேலாகியும் குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன்பே. ஏகேஏ அப்துல் சமதின் தந்தையார் தான் முதன் முதலில் குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தார். அதற்கு மதரஸாக்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாது அவர் குர்ஆன் மொழி பெயர்ப்பை வெளியிட்டார். இதற்கு முன்பு மொழி பெயர்க்க பலர் முயற்சித்தாலும் மதரஸா முல்லாக்களால் தடுக்கப்பட்டனர். இந்த வரலாறு தமிழக முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது பத்துக்கு மேற்பட்ட மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன.
//தமிழர்களின் பிள்ளைத் தமிழ் பாடும் மரபில், முகம்மது நபிகளுக்கே அழகு தமிழில் பிள்ளைத்தமிழும், சீறாப்புராணமும் பாடிய தமிழ் முஸ்லீம்கள், தமிழில் குரானை மொழி பெயர்த்தல் பாவம் என்று நினைத்தவர்கள் என்பது தமிழ் முஸ்லீம் சமூகத்தின் தமிழ்ப்பற்றை இழிவு படுத்துவதாகும்,//
சீறாப் புராணத்தில் உமருப் புலவர் பல கற்பனைகளை கலந்திருப்பார். முகமது நபியின் மகளின் திருமணத்தில் மெக்கா நகரமெங்கும் வாழை மரங்கள் பந்தக் கால்களில் நடப்பட்டிருந்ததாக ஒரு பாடல் வரும். பாலைவனத்தில் எங்கிருந்து விளையும் வாழை மரம். தமிழக கலசாரத்துக்கு ஏற்றவாறு அந்த திருமணத்தை மாற்றியவர் உமருப் புலவர். ஒரு இடத்தில் அலி அவர்களின் உடல் வனப்பை பார்த்து 'தாங்கள் அவருக்கு மனைவியாகியிருக்கக் கூடாதா' என்று பல பெண்களும் ஏங்கினார்களாம். மிக கண்ணியமாக வாழ்ந்த அந்த உத்தம பெண்களை இதை விட யாரும் கேவலப் படுத்தி விட முடியாது. இவை எல்லாம் அவரது கற்பனை. இந்த கற்பனை காவியத்தை இஸ்லாமியர் யாரும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஆனால் இஸ்லாத்தின் சட்டங்களை சொல்லும் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது 100 ஆண்டுகளுக்கு முன்பு தான். இதனை யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளுங்கள்.
//பி.ஜே வின் சிந்தனை எப்படிப்பட்டது என்பது அவரது ஈழத்தமிழர் எதிர்ப்புக் காணொளிகளிலிளிருந்தும், அவரது தமிழர் எதிர்ப்பை ஐ. நா. மனிதவுரிமை ஆணையத்தின் விசாரணைக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறியதிலிருந்தும் அறியலாம்.//
தமிழ் முஸ்லிம்கள் ஆரம்ப காலங்களில் பிரபாகரனோடு கை கோர்த்து கொண்டு இலங்கை அரசுக்கு எதிராகவே இருந்தனர். 'முஸ்லிம் ரெஜிமெண்ட்' என்றே தனியாக ஒரு பிரிவு இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன். சிங்கள அரசு ஒரு சில முஸ்லிம் இளைஞர்களை அவர்களுக்கு ஆதரவாக செயல்பட வைத்தது. யார் தமிழருக்கு எதிராக உள்ளனரோ அவர்களை தண்டிப்பதை விட்டு விட்டு தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை மூதூரில் நூற்றுக்கு மேற்பட்டவர்களை ஒரே நாளில் துடிதுடிக்க கொன்றார் பிரபாகரன். 'அது ஒரு துன்ப நிகழ்வு' என்று அதனை சாதராணமாக எடுத்துக் கொண்டார். பல தொழிலதிபர்களை 500 ரூபாயை செலவுக்கு கொடுத்து மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தார். இப்படிப்பட்ட சுயநலமியோடு முஸ்லிம்கள் எவ்வாறு இணைந்திருப்பர். எனவே பிரிந்தனர். அந்த பிரிவே தமிழர்களை பலவீனமாக்கி பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாக காரணமானது.
//உங்களுக்குத் தமிழ் சரியாகத் தெரியாது போலிருக்கிறது,. இந்தப் பாட்டில் பெண்ணின் தாய்மாமன் அதாவது பெண் வீட்டார் இப்படியெல்லாம் சீதனம் கொடுப்பார் என்று தான் கண்ணதாசான் கூறுகிறார். இதற்கும் நீங்கள் கூறும் மஹருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.//
உங்களுக்குத்தான் தமிழ் சரியாகத் தெரியாது என்று நினைக்கிறேன். அந்த கதையில் தனது அண்ணன் மகனை தனது மகளுக்கு மண முடித்துக் கொடுக்கிறேன் என்று அந்த தங்கை உறுதி கூறுவாள். அதன் பின்னணியில் தான் இந்த பாடலே ஒலிக்கும். மாமன் தனது மருமகளுக்கு சீதனமாகத் தருவதாகத்தான் அந்த பாடல் சொல்லும்.
//திருமணத்தில் பெண்ணுக்கு முக்காடிட்டு அறைக்குள் பூட்டி வைக்காமல், தமிழ்ப்பண்பாட்டின் படி பெண்ணை எல்லோரும் பார்க்கும் வகையில் திருமணம் செய்தீர்களா? மாலை மாற்றுவது தமிழர் கலாச்சாரத்தின் முக்கிய அங்கம், ஆனால் அதை ஏன் நீங்கள் செய்யவில்லை.//
என்னோடு வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளும் பெண்ணை நான் பார்த்தால் போதாதா? அதை ஏன் சபையில் கூட்டி வந்து எல்லோருக்கும் காண்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? அதே போல் ஒரு மாலைக்கே 2000 லிருந்து 3000 வரை செலவழிக்கப்படுகிறது. சில இடங்களில் இன்னும் அதிகம். இரண்ட மணி நேர நிகழ்வுக்கு ஏன் இந்த பொருளாதார அழிப்பு வேலை. அதனை ஒரு ஏழைக்கு கொடுத்துதவலாமே. மாலையிடுவதுதான் தமிழன் கலாசாரம் என்று எங்கு படித்தீர்கள்?
அடுத்து ஒரு குறிப்பிட்ட சட்ட திட்டங்கள் இல்லை என்றால் சமூகம் எந்த அளவுக்குச் செல்லும் என்பதை மணமகளே திருமணத்தில் குத்தாட்டம் போடுவதை இந்த காணொளியில் பாருங்கள். இதுவும் தமிழர் கலாசாரம் என்று சொல்வீர்களோ?
https://www.youtube.com/watch?v=f0JVeKGZ4Bg
//அந்த சகோதரத்துவத்தை ஈழத்தமிழர்கள் கொத்துக் கொத்த்தாகக் கொல்லப்படும் போது ஏன் காட்டவில்லை,//
அதற்கு காரணம் பிரபாகரனின் நடவடிக்கைகள் என்று முன்பே சொல்லியுள்ளேன். மூதூரில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்கு நீங்கள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நானும் கேட்கலாம்.
//இது வெறும் சப்பைக்கட்டு தான். தமிழர்கள் எல்லோரும் இன்றும் சாதிப் பெயரை வைப்பதில்லை, சாதி இல்லாத தமிழ்ப் பெயர்களும் உண்டு,//
உங்கள் மனசாட்சி இதனை கண்டிப்பாக ஒத்துக் கொள்ளாது. இன்றும் பல கிராமங்களில் தலித் குழந்தைகள் உயர் சாதி கிராமங்களில் செல்லும் போது தங்களின் செருப்பை கைகளில் எடுத்துச் செல்கிறார்கள். இன்றும் தொடரும் இந்த கொடுமையைப் பற்றி விகடனும் கட்டுரை வெளியிட்டிருந்தது.
//வஹாபியம் வந்து தமிழனின் பழைய வரலாற்றைப் புதுப்பிக்கும் நிலை வரும் என ஒரு வஹாபிஸ்டு இவ்வளவு வெளிப்படையாகச் சொல்வதைப் பார்க்கத் தான் எனக்கு நெஞ்சு திக் திக்கென்று அடிக்கிறது.//
பெரியாரே முயன்றும் இந்த மண்ணில் சாதிக்க முடியாததை இறைவன் அருளால் இஸ்லாம் சாதித்து காட்டும். சில ஆண்டுகளுக்கு பிறகு இதனை நீங்களே உணரும் போது திக் திக் என்று உங்கள் மனம் கலவரப்படாமல் ஆனந்த கூத்தாடும். :-)
1 comment:
இஸ்லாம்தான் சாதித்து விட்டதே. எப்போதோ அழிந்த அடிமை முறையை மீண்டும் புதுப்பித்திருக்கிறதே ஈராக்கில். யாசிடி மற்றும் கிருஸ்துவ பெண்களைப் பிடித்து சென்று செக்ஸ் அடிமையாக விற்க ஆரம்பித்து விட்டார்களே.
Post a Comment