Followers

Showing posts with label இலக்கியம். Show all posts
Showing posts with label இலக்கியம். Show all posts

Saturday, June 27, 2015

கோயிலில் தமிழில்லை - புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்



தமிழன் தமிழக கோயிற் கடவுளுக்கு அருச்சனை செய்விக்கச் செல்லுகின்றான். கருவறைக்கு இப்புறமே நிற்கின்றான். அருச்சகன் அருச்சனைக்குக் கூலி கேட்கின்றான். தமிழ் பெரியார் ஒருவர் குறுக்கிட்டுத் தமிழனுக்கு அறிவுறுத்துகிறார்.

பெரியார்:

சிவனாரை வழிபடத் திருக்கோயி லிற்புகுந்ததால்
இவன் வழிமறித்து நில்லென்றான் நில்லென்றான்

தமிழன்: இவனே கருவறைக்குள் இருக்கத் தகுந்தவனாம்
எட்டி இருந்துசேதி சொல்லென்றான் சொல்லென்றான்...

பெரியார்:
கருவறைக்குள் இவன்தான் கால் வைக்க வேண்டும்
என்றால் சரியான காரணமும் வேண்டுமே வேண்டுமே?

தமிழன்:
சுரர்களில் பூசுரனாம் நாமெல்லாம் சூத்திரராம்
சூத்திரன் தாழ்ந்தவனாம் யாண்டுமே! யாண்டுமே!!

பெரியார்: தேவனும் இவனானால் தேவருல கிருக்கப்
பூவுல கைச்சுரண்டல் ஆகுமா? ஆகுமா?

தமிழன்:
பூவுல கைக்காக்கப் புறப்பட்ட பேர்வழிகள்
சுரண்டாவிட்டால் பொழுதுபோகுமா? போகுமா?

பெரியார்: அப்பனுக் கருச்சனை அவன்தானே செய்ய வேண்டும்?
அருச்சனை நீபுரிந்தால் தீமையா? தீமையா?

தமிழன்: அருச்சனை தமிழாலே அய்யய்யோ நடத்தினால்
அப்பன் கதை முடிந்து போமையா! போமையா!!

பெரியார்:
தமிழ்ஒலி யால்செவித் தகடுகிழியும் சிவம்
நமக்கெதற் காந்தம்பி இவ்விடம்? இவ்விடம்?

தமிழன்: சமக்ருதம் செத்தும் அதன் பேரையும் சாகடித்தால்
நமக்கெல்லாம் வாழ்விடம் எவ்விடம்? எவ்விடம்?

பெரியார்:
தமிழைக் கெடுக்க வந்த வடமொழி மறைவதால்
நமக்கொரு கேடுமில்லை நல்லதே நல்லதே.

தமிழன்:
சமக்ருதம் தேவமொழி தமிழுக்கும் தாய்மொழி
தமிழரைக் காத்திடவும் வல்லதே! வல்லதே!

பெரியார்: தாய்மொழி தனிமொழி உலகத்தின் தாய்மொழி
சமக்ருதம் கலப்பட நஞ்சப்பா! நஞ்சப்பா!
சுமந்தபொய் மூட்டையும் சும்மாடும் பறந்திடத்
தூயோர் பறக்கடித்த பஞ்சப்பா! பஞ்சப்பா!

குயில் 9.8.1960 (தமிழுக்கும் அமுதென்று பேர், பக்கம் 103 -104)


Saturday, December 27, 2014

நாவலுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் - தொடரும் வன்முறைகள்.....



'மாதொருபாகன்’ நாவலுக்கு எதிரான போராட்டம் நேற்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது. அந்நாவல் இந்துப் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் திருச்செங்கோட்டின் பெருமைக்கு மாசு கற்பிப்பதாகவும் கூறிப் போராட்டம் நடத்தினர். இந்து அமைப்புக்களும் சாதிய அமைப்புக்களும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தியதாக இன்று பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

"நாவல் பிரதியை எரித்தும் காலால் மிதித்தும் என் புகைப்படத்தைச் செருப்பால் அடித்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். என்னைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் இட்டுள்ளனர். என் மீதும் காலச்சுவடு பதிப்பகத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் புகார் அளித்துள்ளனர்.

நாவலில் உள்ள பகுதிகள் குறித்துக் கருத்துரீதியாக விவாதிக்கத் தயாராக உள்ளேன். ஆனால் எதிர்தரப்பில் அதற்கான நிதானத்துடன் பேசுவோர் இல்லை. மதம், சாதி என்னும் கட்டுக்குள் நின்று மட்டுமே பார்ப்போருடன் எப்படிப் பேசுவது என்றும் தெரியவில்லை.

இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி நண்பர்களுடன் ஆலோசிக்கிறேன். நானும் யோசிக்கிறேன். என்ன செய்யலாம்?"

-பெருமாள் முருகன்

----------------------------------------------------

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நூலுக்குத் தடை கோரும் இந்துத்துவ அமைப்புகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மறுமதமாற்றம் என்று நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புகள் தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றுவதற்குக் குறிவைத்துச் செயல்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு வெளிப்பாடாக, நாடறிந்த எழுத்தாளர் பெருமாள் முருகன் நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூலைத் தடை செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

பெருமாள் முருகன் பல நூல்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர். அவரது நாவல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுப் பாராட்டுப் பெற்றவை. அவர் 2010ஆம் ஆண்டில் எழுதிய 'மாதொருபாகன்' என்ற நாவல் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது கொங்கு மண்டலத்தில் மிகவும் அன்போடு இல்லற வாழ்வை நடத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றியது.

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காவல்துறையிடம் பாதுகாப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

-----------------------------------------------------

On Friday, more than 50 cadres, led by Tiruchengode town RSS president Mahalingam, raised slogans and tried to take out a march from the foothills of the temple to the police station. But they were stopped by Deputy Superintendent of Police Ramasamy, who asked them to prefer a complaint with the local police station. While initially their attempt to burn copies of the book was thwarted by the police, they later succeeded in doing so in front of the local police station.

In their petition, the BJP, RSS and other Hindu outfits said that in many pages the author had denigrated Lord Shiva and the women devotees who visited the temple during the car festival. The cited the narratives in pages, 87, 116, 117, 118, 129 and 172 of the book were in bad taste. They demanded the arrest of both the author and the publisher.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/bjp-rss-seek-ban-on-tamil-novel-arrest-of-author/article6729393.ece


Monday, November 24, 2014

பழந் தமிழ் இலக்கியத்துக்குள் நுழைவோமா!



பழந்தமிழ் இலக்கியங்களில் காதலன், காதலியை ‘தலைவன், தலைவி’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் தேடச் செல்வான். இதற்குப் ‘பொருள்வயிற் பிரிவு’ என்று பெயர். இந்தப் பிரிவுக் காலம் மூன்று மாதங்களைத் தாண்டக் கூடாது. ஆனால் தமிழர்களாகிய நாம் ஒரு ஆண்டும், பலர் இரண்டு ஆண்டுகளும் தலைவியை பிரிந்து வளைகுடாக்களில் வாழ்ந்து வருகிறோம். மனைவி குழந்தை பெற்றோர்களோடு வாழ்ந்து வருபவர்களை நான் குறிப்பிடவில்லை. பெரும்பாலான தமிழர்கள் தலைவியை பிரிந்தே வாழ்கின்றனர்.

இத்துறையில் செலவழுங்கல், பிரிவாற்றாமை, பருவ வரவு, தலைவன் வரவு ஆகிய சூழல்கள் சிறப்பாகப் பாடப்படுகின்றன.

பிரிவு என்பது இளம் காதலருக்கு உயிர்வாட்டம் தருவது. தலைவியின் ஒப்புதலின்றிப் பிரிதல் தலைவனுக்கு இயலாதது. தலைவியின் மெல்லிய உணர்வுகளை உணரும் தலைவன் பிரிவைக் குறிப்பாக உணர்த்துவான். தலைவியின் வாட்டம் கண்டு தன் பயணத்தை நிறுத்துவான். தோழி எடுத்துச் சொல்லவும் பயணத்தை நிறுத்துவான். இதுவே செலவழுங்கல் என்பது. கலித்தொகைப் பாடப் பகுதியில் இதனைக் காணலாம். பொருள் தேடப் புறப்பட்ட தலைவனைத் தடுத்த தோழி அச்செய்தியைத் தலைவியிடம் தெரிவிக்கிறாள்.

‘மரங்கள் பட்டுக்கிடக்கும் காட்டுவழியில் பொருள் தேடிவர நினைக்கின்றாய். இதனைத் தலைவி அறிந்தால் நெஞ்சழிவாள். உயிரை விட்டுவிடுவாள் என்று நான் சொல்லத் தலைவன் பயணத்தை நிறுத்திவிட்டான். எனவே தலைவியே மகிழ்ச்சிகொள்’


வினைவெஃகி நீ செலின் விடுமிவள் உயிரெனப்
புனையிழாய் நின்னிலை யான்கூறப் பையென
நிலவுவேன் நெடுந்தகை நீளிடைச்
செலவொழிந் தனனால் செறிகநின் வளையே.

(கலி. 10, 21-24)


என்று தோழி கூறுகிறாள்.

மரங்கள் பட்டுக் கிடக்கும் காட்டு வழியில் பொருள்தேட புறப்பட்டாலே கலித் தொகை தலைவிக்கு வருத்தம் மேலிடுகிறது. ஆனால் இந்த கால தலைவிகளோ தலைவன் பாலைவன சுடு மணலில் கிடந்து வெந்தாலும் மாதா மாதம் தனக்கு பணத்தை மட்டும் அனுப்பி விடு என்கிறாள். 800 ரியால் 1000 ரியால் என்று குறைந்த சம்பளத்துக்கு வந்து வெயிலிலும் பனியிலும் கஷ்டப்படும் தலைவனின் வலி உணர்ந்தால் ஆடம்பர செலவுகளை தலைவி செய்வாளா? ஒரு உண்மை சம்பவத்தை இனி பார்ப்போம்

ஒரு முறை சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் எனது தாத்தாவை கோலாலம்பூர் பயணம் ஏற்றி விட வந்திருந்தேன். தனது மகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்க ஆவலோடு இரண்டு மாதம் டூரிஸ்ட் விசாவில் செல்கிறார். அருகே வேறொரு வயதானவரும் அமர்ந்திருந்தார். சோகத்தோடு இருந்தார். அவரை வழியனுப்ப வந்த நபரிடம் 'பெரியவர் சோகமாக காணப்படுகிறாரே! ஏன்' என்று கேட்டேன்.

அதற்கு அவர் 'சோகக் கதைங்க. இவருக்கு சரியாக காது கேட்காது. வயதாகி விட்டதால் கண் பார்வையும் மங்குகிறது. பொருள் தேட மலேசியா இனியும் நான் போக மாட்டேன் என்று அடம் பிடித்தார். ஆனால் அவர் மனைவியோ எனக்கு 1000 ரூபாய் பணம் கொடுத்து 'எப்படியாவது இந்த மனுஷனை ஃபிளைட் ஏற்றி அனுப்பி விட்டு வா' என்று அனுப்பியுள்ளர்'

'பிரியமில்லாதவரை இந்த வயதில் அனுப்பலாமா? இது தவறில்லையா'

'தவறுதாங்க.... நானும் அந்த அம்மா கிட்டே சொன்னேன். எனக்கு புத்தி சொல்லாதே! சொன்ன வேலையை செய்' என்று சொல்பவரிடம் நான் என்ன சொல்ல?'

'எந்த ஊரு?'

'மதுரை'

தாத்தாவுக்கு இமிக்ரேஷன் எல்லாம் முடிந்து உள்ளே சென்று விட்டார். வயதானவர் என்பதால் தாத்தாவின் ஃபிளைட் கிளம்பும் வரை நான் காத்திருந்தேன்.

விமானமும் கிளம்பி விட்டது. அரை மணி நேரம் கழித்து அந்த வயதான பெரியவர் மட்டும் சோகத்தோடு வெளியே வந்தார். அழைத்து வந்த இளைஞர் பதற்றத்தோடு 'நீங்க ஃபிளைட் ஏறலையா?' என்று கேட்டார். பெருசு சரியான ஆள்தான். விமான நிலைய கழிவறைக்கு சென்றவர் அரை மணி நேரம் கழித்துதான் வெளியேறியிருக்கிறார். மூன்று முறை விமான நிலையத்தில் தொடர்ந்து இவர் பெயரை கூப்பிட்டுள்ளார்கள். நேரமாகி விட்டதால் இவரது இருக்கையை காலியாகவே வைத்து விமானம் புறப்பட்டு விட்டது. வேண்டுமென்றே இவர் கழிவறையிலேயே அமர்ந்து விட்டார்.

'என்னய்யா இப்படி பண்ணிட்டீங்க? உங்க மனைவி கிட்டே நான் என்ன சொல்லப் போறேன் என்று எனக்கு விளங்கவில்லை'

'நீ ஒன்னும் கவலைப்படாதே! அவளை நான் சமாளிச்சுக்கிறேன்' என்று சொல்லி மதுரைக்கு பஸ் பிடிக்க இருவரும் சென்றனர்.

கலித் தொகையில் வரும் தலைவி தலைவனை பிரிவதை சோகமாக எண்ணுகிறார். ஆனால் இருபதாம் நூற்றாண்டு தலைவியோ தலைவன் வயதான காலத்தில் அந்நிய தேசத்தில் செத்தாலும் பரவாயில்லை: தான் நிம்மதியாக வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாள். காலம்தான் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகிறது?

Sunday, August 24, 2014

செத்தும் கொடை கொடுத்தாரா சீதக்காதி!

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வரலாறு!

//படையெடுப்புகளுக்கு முன்பாகவே தமிழகம் வந்த இஸ்லாம் தமிழ்ப் பண்பாட்டோடு பிரிக்க முடியாதபடி நெருக்கமாகக் கலந்துவிட்டது. தமிழ் இலக்கிய மரபை அடியொற்றித் தமிழ் முஸ்லிம் புலவர்கள் ஏராளமாக காப்பியங் களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்திருக்கின்றனர். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பல்சந்தமாலை என்ற செய்யுள் தமிழக முஸ்லிம்களின் தொன்மையைக் காட்டக்கூடியதாக இருக்கிறது.//
--தமிழ் இந்து நாளிதழ்
24-08-2014

பல கற்பனைக் கதைகளை இவ்வாறு தமிழில் புனைந்த முஸ்லிம்கள் இஸ்லாமியர்களின் இறை வேதமான குர்ஆனை தமிழில் மொழி பெயர்ப்போம். நபிகள் நாயகத்தின் வாழ்வை மொழி பெயர்ப்போம் என்று ஏனோ தோணவில்லை. மார்க்க அறிஞர்களும் இதற்கான முயற்சியில் இறங்கவில்லை. கடந்த நூறு வருடங்களுக்கு முன்புதான் குர்ஆனின் மொழி பெயர்ப்பை அப்துல் ஹமீது (ஏகேஏ அப்துல் சமதின் தகப்பனார்) அவர்கள் முதன் முதலாக வெளியிட்டார். அதற்கும் மார்க்க அறிஞர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

இவ்வாறு இறைவன் என்ன மனிதர்களிடம் பேசுகிறான் என்று விளங்காமலேயே 1300 வருடங்களாக இஸ்லாமியர்கள் இந்த தமிழகத்தில் வாழ்ந்து வந்துள்ளனர். குர்ஆனை மொழி பெயர்க்காமல் தங்கள் கற்பனையை விரித்து பல கட்டுக் கதைகளை இஸ்லாமிய சரித்திமாக வடிக்க ஆரம்பித்தனர். 'விறகு வெட்டியார் கிஸா' 'பப்பரத்தியார் அம்மாணை' 'சீறாப் புராணம்' என்று கற்பனை கலந்த பல காவியங்களை படைக்க ஆரம்பித்தனர். எனது பாட்டி ராகமிட்டு பல பாடல்ளை தமிழில் பாடுவார். கேட்க மிக ரம்மியமாக இருக்கும். சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இது போல் உண்மையை தெளிவாக விளங்காமலேயே பல கோடி முஸ்லிம்கள் இந்த உலகை விட்டு சென்று விட்டனர்.

//காய்ந்து சிவந்தது சூரியகாந்தி கலவியிலே தோய்ந்து சிவந்தது மின்னார் நெடுங்கண்டொலைவில் பன்னூல் ஆய்ந்து சிவந்தது பாவாணார் நெஞ்சமனுதினமும் ஈந்து சிவந்தது மால் சீதக்காதியிரு கரமே. சீதக்ககாதி இறந்தது தாளாமல் அவரது சமாதிக்குப் போய் படிக்காசுப் புலவர், புலவர்கள் வாயில் மண் அள்ளிப் போட்டு, ‘இப்படிப் போய்விட்டீரே யார் இனி ஆதரிப்பார்கள்' என அழுது அரற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் சமாதி வெடித்துக் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்துக்கொள்ளும்படி சீதக்காதியின் கரம் வெளிப்பட்டதாம்.
அந்த அதிசயம்தான் புலவர்களின் கற்பனையினால் ‘செத்தும் கொடுத்த சீதக்காதியே' என்ற பேச்சு வழக்காகி, வள்ளல் தன்மையோடு தொடர்புடைய பெயராக சீதக்காதியின் நினைவை நம்மிடம் நீட்டி வைத்திருக்கிறது. //
-தமிழ் இந்து நாளிதழ்
24-08-2014


சீதக்காதி பல வறியவர்களுக்கு உதவியிருக்கலாம். ஆனால் அவரது சமாதி வெடித்து விரல் வெளிபட்டது என்பதை கற்பனையே! அன்றைய புலவர்கள் அளவுக்கு மீறி புகழ்வது வாடிக்கை. 'கவிதைக்கு பொய் அழகு' இல்லையா? இறந்தவர்கள் மறுபடி இந்த உலகத்துக்கு வருவது சாத்தியமில்லை என்கிறது குர்ஆன். அறிவியலும் இறந்தவர்கள் திரும்ப வெளி உலகுக்கு வருவதை ஒத்துக் கொள்வதில்லை.

மேலும் தமிழக முஸ்லிம்களின் வீடுகளில்தான் தற்போது தமிழ் வாழ்கிறது. படித்த முஸ்லிம்கள் கூட ஆங்கிலேய ஆட்சி எதிர்ப்பு உணர்வால் இன்று வரை ஆங்கிலம் கலக்காத தமிழையே பேசி வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் வரவால் தமிழகத்தில் தீண்டாமை ஒரு கட்டுக்குள் வந்தது என்பதை மறுக்க முடியாது. 'நாம் இவ்வாறு தீண்டாமையை தொடர்ந்தால் அனைத்து மக்களும் இஸ்லாத்தின் பக்கம் சென்று விடுவார்கள்' என்ற பயத்தினால் பல ஆதிக்க சாதியினர் தங்களின் தீண்டாமை உணர்வை ஓரளவு குறைத்துக் கொண்டனர் என்றால் அது மிகையாகாது. இஸ்லாம் தமிழகத்தை தொட்டதால் தமிழர்கள் அடைந்த மறுமலர்ச்சி இது.

//அஸ்லாமு அலைக்கும், இன்சா அல்லா, அல்லாவு அக்பர், கைரத் கியா? பஹுத் சுக்ரியா. சலாம் போலோ """"" ஆகியவைகள் எல்லாம் தமிழ் வார்த்தைகள் என்றால் நிச்சயம் முஸ்லிம்கள்தான் உண்மையான தமிழர்கள். சந்தேகமே இல்லை. (முஸ்லிமில் வரும் "ஸ்" என்பது வடமொழி எழுத்து இல்லை என்று சொன்னாலும் ஒத்துகொள்ள வேண்டியதுதான்.// -Ananamalai, tamilhindu

உருது மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் வட நாட்டிலிருந்து கலவரத்தால் இங்கு குடியேறியர்கள். அவர்கள் வீட்டுக்குள் உருது மொழியை பயன் படுத்துவார்கள். நான் சொல்ல வருவது தமிழ் முஸ்லிம்களைப் பற்றி. அடுத்து 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்பதற்கு 'உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக' என்று வாழ்த்த அதை ஏற்பவரும் 'அப்படியே உங்களுக்கும் ஆகட்டுமாக!' என்று சொல்வது உலகம் முழுவதும் உள்ள நடைமுறை. இதனை விரும்பியவர்கள் தமிழிலும் சொல்லிக் கொள்ளலாம். தமிழில் அப்படி ஒரு வழக்கம் முன்பு இல்லாததால் அரபியில் அதனை சொல்கிறோம். ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது தவறில்லையே!

//எனது இஸ்லாமிய நண்பர்கள் எனது பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்வார்கள். என்னுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள். யேன், வுறங்கி கூட இருக்கிறார்கள். ஆனால் எனது ஹிந்து நண்பர்கள் , என் சாதியை பார்த்து, பக்கத்தில் கூட அமர்ந்து பிரயாணம் செய்ய மாட்டார்கள்//.- gupendran, tamil maran tamil hindu comment

இதுதான் இஸ்லாம்.


Thursday, January 09, 2014

நாலடியார் - பேச்சா ? குரைப்பா?

கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது
உரைப்பினும் நாய்குரைத் தற்று.

பொருள்

கல்லாது நீண்ட ஒருவன் = கல்வியறிவு இல்லாது வளர்ந்த ஒருவன்

உலகத்து = இந்த உலகில்

நல்லறி வாள ரிடைப்புக்கு = நல்ல அறிவுள்ளவர்கள் மத்தியில் செல்வது

மெல்ல இருப்பினும் = சுவடு படாமல், மெல்ல போனாலும்

நாயிருந் தற்றே = அது நாய் இருப்பது போலத்தான்

இராஅது = அது சும்மா இருக்காது

உரைப்பினும் = பேசினால் கூட

நாய்குரைத் தற்று = குரைப்பது போலத்தான் இருக்கும்

கற்றறிந்தோர் சபையில் பேசாமல் இருப்பது நல்லது....

அரசியல்வாதிகள், ஆன்மீக வாதிகள் என்று பலரும் உரிய கல்வி இல்லாமலேயே முக்கிய பதவிகளை தங்களது செல்வாக்காலும் பண பலத்தாலும் பெற்று விடுகிறார்கள். அப்படி குறுக்கு வழியில் பெற்ற அந்த இடத்தை அடைந்தும் அவர்களின் கல்வியறிவு குறைவினால் தாங்கள் யார் என்பதை உலகுக்கு தங்களையறிமாலேயே காட்டி விடுவார்கள். எல்லாம் தெரிந்த மேதாவி மாதிரி பேசவும் தொடங்கி விடுவார்கள். இது எப்படி இருக்கிறது என்றால், பெரிய சபையில் நாய் நுழைந்த மாதிரி. அது நுழைந்ததே தப்பு. சரி, நுழைந்து விட்டது. பேசாமலாவது இருக்கலாம் அல்லவா ? அதால் இருக்க முடியாது. அது பேசவும் ஆரம்பித்தால், அது எப்படி இருக்கும். நாயின் குரைப்பாகத்தான் இருக்கும். அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா ? இனிமை இருக்குமா ?

------------------------------------------------

''கல்வி கற்பது ஒரு வணக்கமாகும்'' (இப்னு மஸ்ஊத்). ''சிறிது நேரம் கல்வி கற்பது ஓர் இரவு நின்று வணங்குவதை விட மேலானதாகும்'' (அபூதர்தா) ''சிறிது நேரம் இருந்து எனது மார்க்கத்தைப் பற்றிய அறிவைப் பெறுவது ஓர் இரவு முழுவதும் விடியும் வரை நின்று வணங்குவதை விட எனக்கு விருப்பமானதாகும்'' (அபூஹுரைரா)

''கடமையான தொழுகை போன்ற செயல்களை அடுத்து அறிவைத் தேடுவதைவிடச் சிறந்ததோர் அமல் இல்லை'' (இமாம் அஸ்ஸெளரி) ''கடமையில்லாத தொழுகையை விட அறிவைப் பெறுவது சிறந்தது'' (இமாம் அஷ்ஷாபிஈ)

''எமது மூதாதையர் எதில் இருக்கக் கண்டோமோ அதுவே எமக்குப் போதுமானது''. ''நாம் எமது தலைவர்களையும் பெரியோர்களையும் பின்பற்றுபவர்கள்'' என்று கூறிச் செயற்படுவோரை இஸ்லாம் மூடர்கள் என்று கண்டிக்கின்றது.

மேலும், இஸ்லாம் அறிவியலுக்கு முரணான யுகங்களை மறுத்துரைக்கிறது. அனைத்து நம்பிக்கைகளும், மார்க்க நம்பிக்கைகள் உட்பட உறுதியான அறிவின் அடிப்படையில் அமையவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. முஷ்ரிகீன்களைப் பற்றியும் அவர்களது கற்பனையான தெய்வங்களைப் பற்றியும் கூற வந்த அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.:

''இவைகளெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்களேயன்றி வேறில்லை. அதற்காக இறைவன் (உங்களுக்கு) எவ்வித ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. அவர்கள் சந்தேகத்தையும் மனோ இச்சையையுமே பின்பற்றுகின்றனரேயன்றி வேறில்லை''. (53:23)

நம்பிக்கைகள் அனைத்தும் ஆதாரத்தின் அடிப்படையில் அமையவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. எனவேதான் அல்குர்ஆன் பிழையான நம்பிக்கைகளைக் கொண்ட மனிதர்களை விளித்து, கீழ்வருமாறு கோரும்படி நபியை வேண்டுகின்றது.

''நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் உங்களது ஆதாரத்தை கொண்டுவாருங்கள் என்று (நபியே) கூறுங்கள்''(2:111)

''எவர்களுக்குக் கல்வியறிவு கொடுக்கப்பட்டிருக்கின்றதோ, அவர்கள் நிச்சயமாக, இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என்று உறுதியாக அறிந்து, இதை விசுவாசித்து மனப்பூர்வமாகவே அவனுக்கு வழிப்படுகின்றனர்'' (22:54)

Wednesday, January 08, 2014

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர

நமச்சிவாய பதிகத்தில் முதல் பாடல்...

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக்
கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற்
பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பொருள்:

சொற்றுணை = சொல் + துணை = சொல்லுக்கு துணையான

வேதியன் = வேதங்களுக்கு தலைவனான

சோதி = சோதி வடிவாய் உள்ளவன்

வானவன் = வானத்தில் உள்ளவன்

பொற்றுணைத் = பொன் போன்ற துணை உள்ள

திருந்தடி = திருவடி

பொருந்தக் கைதொழக் = மனமும், கையும் அவன் திருவடியில் பொருந்துமாறு கை தொழ

கற்றுணைப் பூட்டியோர் = கல்லைக் கட்டி

கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கி போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது

நமச்சி வாயவே. = நமச்சிவாய என்ற அந்த நாமமே

----------------------------------------------------

கடல் என்றால் இந்தப் பிறவி பெருங்கடல். இந்த பிறவி கடலை சும்மா நீந்தி கடப்பதே கடினம், இதில் கல்லை வேறு கட்டிக்கொண்டு எப்படி நீந்துவது?

கல்லுனா எது ? உறவுகள், பந்த பாசங்கள், ஆசைகள், கோபம், தாபம் போன்ற மன மாசுகள் ... இத்தனை கல்லை கட்டி கொண்டு இந்த பிறவிப் பெருங்கடலை எப்படி நீந்தி கரை சேருவது?

இறைவனின் திரு நாமம் இருந்தால், அந்த கற்கள் கூட தெப்பமாய் மாறி சுகமாக கரை சேர முடியும்.

திருநாவுக்கரசர் இறைவனின் உதவியைப் பற்றி இவ்வாறு பாடியிருக்க நமது தமிழகத்தில் இந்த பாடல் சம்பந்தமாக ஒரு வரலாற்று நிகழ்வையும் சொல்வர். அதனையும் பார்ப்போம்.

திரு நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மாறியதால், சமணர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அவர்கள், அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு தாங்கொண்ணா துன்பங்களை தந்தனர்.

அதில் ஒன்று நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எரியச் செய்தது.

அப்படி கடலில் போட்டவுடன், அவர் இறைவனை நினைத்து உள்ளம் உருகி நமச்சிவாயப் பதிகம் பாடினார்.

அவரை கட்டியிருந்த கல் தெப்பமாய் மிதந்தது. அதில் ஏறி கரை சேர்ந்தார்.

இது நடந்தது கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினம் என்ற கடற்கரையில்.

இன்றும் அங்கு "கரையேற விட்ட குப்பம்" என்று ஒரு இடம் உண்டு. அப்பர் கரையேறிய இடம்.

இது உண்மையான வரலாறா? அல்லது சமணர்களை மட்டம் தட்ட சைவ சமயத்தவர் செய்த கட்டுக் கதையா என்பது இன்றும் விவாதத்தில் உள்ளது. இதே கதையை மையமாக வைத்து தான் கமலஹாசனும் தசாவதாரம் படத்தின் மூலமாக இந்த கதையை எடுத்தாண்டிருப்பார்.



--------------------------------------------

'உங்களுக்காக எனக்கு கொடுத்து அனுப்பப்பட்டதை(இறை வேதத்தை) உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் தர முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்'

-குர்ஆன் 11:57

மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.

(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள். (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)