Followers

Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts
Showing posts with label ஏ.ஆர்.ரஹ்மான். Show all posts

Tuesday, June 06, 2017

ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்!



ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி மவுலவி இம்ரான் ரஷீத்!

மார்க்க அறிஞர் ஷேக் மக்சூத் இம்ரான் ரஷீத் வட நாட்டில் பிரபலமானவர். அவருக்கு நியூயார்க்கில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை இங்கு விவரிக்கிறார். அதனை தமிழில் மொழி பெயர்க்கிறேன்.....

'நியூயார்க் ஹோட்டல் ஒன்றில் லிஃப்டுக்காக காத்திருந்த போது எனது அருகில் ஒரு பரிச்சயமான முகம் தென்பட்டது. அட... இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புன்முறுவலோடு கை கொடுத்தார். நலம் விசாரிப்புக்குப் பிறகு 'எந்த அறையில் தங்கியுள்ளீர்கள்?' என்று கேட்டார்.  நான் அறையின் எண்ணை சொன்னேன். சலாம் கூறி விட்டு பிரிந்து விட்டார்.

காலை தொழுகைக்காக நான் எழுந்தபோது எனது அறையின் கதவு தட்டப்பட்டது. இந்த அதிகாலையில் யார்? என்று சற்று பயத்தோடு கதவை திறந்தேன். ஆச்சரியமாக ஏ.ஆர்.ரஹ்மான் கந்தையில் முஸல்லாவோடு (தொழுகைக்காக விரிக்கும் விரிப்பு) நின்று கொண்டிருந்தார். 'நான் வரலாமா?' என்று கேட்டார். 'வாருங்கள்' என்று அன்போடு அழைத்துச் சென்றேன். இருவரும் சேர்ந்து காலைத் தொழுகையான ஃபஜ்ர் தொழுகையை தொழுது முடித்தோம். தொழுகைக்கு பிறகு இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்னார்....

'மவுலானா.... நீங்கள் முஸ்லிமாகவே பிறந்தீர்கள். ஆனால் நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவன். என்று நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேனோ அன்றிலிருந்து இன்று வரை ஒரு நேரத்து தொழுகையைக் கூட விட்டதில்லை. இஸ்லாத்தை ஏற்ற நாள் முதல் மதுவின் பக்கம் நெருங்கியது கூட கிடையாது. விபசாரத்தின் பக்கமும் சென்றதில்லை. இறைவன் என்னை பொருந்திக் கொண்டான். இத்தகைய சிறந்த வாழ்வைக் கொடுத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்' என்று சொன்னார்.

இவ்வாறு மவுலானாவின் பேச்சு தொடர்கிறது.......

இதில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. பல தலைமுறைகளாக இஸ்லாமியன் என்ற பெருமை பேசுகிறோம். ஆனால்  முறையாக அதனதன் நேரத்தில் தொழுவதில்லை. முஸ்லிம் என்று பெயர் வைத்துக் கொண்டு மதுவின் பக்கம் செல்கிறோம்: விபசாரத்திலும் ஈடுபடுகிறோம்: இதிலிருந்தெல்லாம் தூரமாகியுள்ள ஏ.ஆர்.ரஹ்மானை நாமும் பாராட்டுவோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா துறையில் இருப்பதை நாம் விரும்பவில்லை. கூடிய விரைவில் அதிலிருந்தும் விலகுவார் என்று எதிர் பார்போம்.








Sunday, June 05, 2016

'குன் ஃபய குன்' - அறிவியல் விளக்கமும் ரஹ்மானின் இசையும்!



'குன் ஃபய குன்' - அறிவியல் விளக்கமும் ரஹ்மானின் இசையும்!

6:73 - அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது உடனே ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி அதிகாரம் அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; யாவற்றையும் நன்கறிந்தோன்.


2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி இல்லாமையிலிருந்து, தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; உடனே அது ஆகிவிடுகிறது.

كُن فَيَكُونُ குன்பயகூன் என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் 'ஆகு' என்று சொன்னால் உடன் ஆகி விடும். இங்கு தனது வல்லமையை மனிதர்களுக்கு இறைவன் விளக்குகிறான். இன்றைய அறிவியல் இந்த வசனத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்று பார்ப்போம்.

சிங்குலாரிட்டி என்பது என்ன?

'வினோதத் தன்மை' (SINGULARITY) என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப் படும் அல்லது பயன்படாத நிலையை அடையும் இடமே 'சிங்குலாரிட்டி' (வினோதத் தன்மை) ஆகும். பெரு வெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் அந்த கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெரு வெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே 'பெரு வெடிப்பு வினோதம்' (BIG BANG SINGULARITY) ஆகும்.

-'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்'(A BRIEF HISTORY OF TIME) பக்கம் 9

-அறிவியல் அறிஞர் ஹாக்கிங்.

இந்த இடத்தில் அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் கூற்றை சற்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகின் காலம் தொடங்குவதே பெரு வெடிப்பில் இருந்துதான். பெரு வெடிப்பு என்று நிகழ்ந்ததோ அன்றிலிருந்துதான் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெரு வெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பது தெளிவாகிறது. பெரு வெடிப்புக்கு முன் அதை துல்லியமாக நிகழ்த்திக் காட்டியது யார்? என்ற கேள்வி இங்கு இயல்பாக நமக்குள் எழும்.

முன்பு 'பேரண்டம் என்றும் நிலையானது: மாற்றமில்லாதது: ஆதியோ அந்தமோ இல்லாதது: அது என்றென்றும் நிலைத்திருப்பது: அதற்கு ஒரு படைப்பாளன் தேவையில்லை:' என்றுதான் பல அறிஞர்களும் சொல்லி வந்தனர். 'மாறா நிலைக் கோட்பாடு' என்பதோடு இந்த கருத்து ஏறத்தாழ ஒத்து வரும். நாத்திகத்திற்கும் இந்த கருத்து வலு சேர்க்கும் விதமாக இருந்ததால் பலரும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அறிஞர் அரிஸ்டாட்டிலும் இந்தக் கருத்தை ஆதரித்தார்.

ஆனால் அறிஞர் ஐசக் நியூட்டன்(1672-1727) பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த பேரண்டம் இறைவன் என்ற ஒருவனின் துணையில்லாமல் உண்டாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். 'பிரின்ஸிப்பியர்' (Matthematical Principles Of Natural Philosophy) என்ற புகழ் பெற்ற நூலில் நியூட்டன் இந்த தகவலைத் தெரிவிக்கிறார். ஆனால் இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது? எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு அவரால் விடை காண முடியவில்லை.

இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு கால கட்டம் இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு 'ஒரு முழு முதல் அணு' இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக்கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில் அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள். அம்மாபெரும் வெடிப்பின்போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரம்மாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார்.

பெரு வெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும கன ஹைட்ரஜன் வாயுவின் மையக் கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக் கரு உருவாகி இருக்கலாம். அவைகளிலிருந்து 'லிதியம்' மற்றும் 'பெரில்லியம்' போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும். என்று அறிஞர் ஹாக்கிங் மேற்கண்ட புத்தகம் பக்கம் 124ல் கூறுகிறார்.

மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நடசத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்த பொருட்களுமே இல்லாத ஒரு சூன்ய நிலையிலேயே இருந்துள்ளதாக நாம் அறிகிறோம். பெரு வெடிப்புக்கு முன் மேற் கூறிய பொருட்கள் யாவும் முன்னரே தயாராக இருந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இன்னொரு கேள்வியும் எழுகிறது. பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்ட வெளியில் ஒன்றுமே இல்லை எனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் 'பெரு வெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிணாமம் பூஜ்யமாகும். அதன் வெப்பம் எல்லையற்றதுமாகும்' என்கிறார்.

-A Brief History of Time பக்கம் 123

பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை படைத்தது உருவாக்கியது யார்?

'விண்ணகத்தை நாம் வல்லமையைக் கொண்டு படைத்தோம்'
-குர்ஆன் 51:47

ஆம் இன்றைய அறிவியல் பெரு வெடிப்புக்கு முன்னால் திடீரென்று புறப்பட்ட ஒரு ஆற்றலின் மூலமே பெரு வெடிப்பு சாத்தியமானது என்பதை குர்ஆனும் மெய்ப்பிப்பதைப் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய உண்மையை வெகு சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்வதை எண்ணி வியக்கிறோம். ஆற்றலின் வரைவிலக்கணம் கூட தெரியாத அன்றைய அரபுலகில் பிறந்த முகமது நபிக்கு இந்த உண்மைகள் எவ்வாறு தெரிய வந்தது?

-----------------------------------------------------------


குர்ஆனின் இந்த அருமையான வசனங்கள் இவ்வளவு அழகிய அறிவியல் விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்க நமது சூஃபி பிரியர்களில் சிலர் இதனை கவிதையாக வடிக்க அதை நம் ஏ.ஆர்.ரஹ்மானும் அருமையான பாடலாக கொடுத்துள்ளார். இசையும் பாடலும் சேரும்பொது அங்கு சிந்தனை அகன்று விடுவதைப் பார்க்கிறோம். 'குன்பயகூன்' என்ற வார்த்தையை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? அதன் அறிவியல் உண்மை என்ன என்பதெல்லாம் ரஹ்மானின் இசையோடு கூடிய பாடலில் நமமால் உணர முடியாது. ரஹ்மானின் இசையும் அப்பாடலின் ராகமும் தான் நம் மனதில் நிற்கும்.

//ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //

இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.

குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.

'உங்களின் இடத்திலே வந்து எனது தலையை வைக்கிறேன்' என்று மற்றொரு பாடலில் ரஹ்மான் பாடுகிறார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் நமது தலையை கீழே வைக்கலாகாது என்பதை என்று ரஹ்மான் உணருவாரோ தெரியவில்லை.

எனவே ரஹ்மான் அவர்களே! நீங்கள் சினிமாவுக்கு இசை அமைத்து பல பாராட்டுக்களை பெற்றுக் கொள்ளுங்கள். அது உங்களின் தனிப்பட்ட விஸயம். ஆனால் இஸ்லாமிய கருத்தை இசை மூலம் கொடுக்க முயற்சிக்கும் இந்த பாணியை விட்டு விடுங்கள். இதற்கு இஸ்லாமியரிடத்திலும் மற்ற மதத்தவரிடத்திலும் எந்த வரவேற்பும் கிடைக்காது. சில கைத்தட்டல்கள் வேண்டுமானால் கிடைக்கலாம். மனதை மாற்றி விடும் சக்தி உங்கள் இசைக்கு இல்லை. இஸ்லாத்தை ஏற்ற 90 சதமான பேர் அதன் கருத்துக்களை விளங்கித்தான் வந்தார்களேயொழிய சூஃபித்துவ இசையினால் அல்ல என்ற உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.

இறைவன் உங்களுக்கு குர்ஆனின் உண்மையான ஞானத்தை மேலும் அதிகப்படுத்துவானாக!

Saturday, February 27, 2016

ஏ ஆர் ரஹ்மானின் 'சன்சைன் ஆர்கெஸ்ட்ரா'



இசைத் துறை என்பது முன்பெல்லாம் பார்பனர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட துறையாக இருந்தது. ஆனால் நீங்கள் மேலே பார்க்கும் அந்த குழந்தைகளில் பெரும்பாலானோர் பார்பனர்கள் அல்ல. ஏழை எளிய தாய் தந்தையருக்கு பிறந்த பல சாதிகள் மதங்களை கொண்ட குழந்தைகள் அவர்கள். தையல் கடைகாரர், பிளாட்பாரத்தில் இட்லி டீ விற்பவர், என்று ஒவ்வொருவராக பொறுக்கி எடுத்து 25 சிறுவர்களை ஏ ஆர் ரஹ்மான் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த குழுவுக்கு வெளி நாட்டிலிருந்தெல்லாம் இசைக் கலைஞர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுக்க வைத்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஆசானாக ஸ்ரீநிவாச மூர்த்தி சார் பணி புரிந்து வருகிறார்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த குழந்தைகள் இசைத் துறையில் உலக அளவில் பேசப்படுவர். நூறு ஏழைக்கு தினமும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று பிச்சை போடுவதை விட ஒரு ஏழையின் வருங்காலத்துக்கு நாம் ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தால் அதுதான் சிறந்த தர்மம். இதனை ரஹ்மான் சரியாக உணர்ந்ததால்தான் இத்தகைய ஒரு ஏற்பாட்டை உருவாக்கியுள்ளார். இஸ்லாம் ஜகாத் என்ற ஏழை வரியை ஏற்படுத்தியதும் ஒரு மனிதன் சுய மரியாதையாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

'நபியே! எதை இறைவழியில் செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக'

(குர்ஆன் - 2:219)

'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது.

(புஹாரி 1426)

'பைத்துல் மால்' எனும் பொது நிதி ஒன்றை ஊர்தோறும் நாம் உருவாக்கி ஜகாத் பணத்தை உரியவரிடமிருந்து திரட்டி ஒரு அமைப்பு முறையாக ஏழைகளுக்கு வாழ்வாதாரத்திற்கு பயன்படும் வகையில், அவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்களுக்கு ஜகாத் கொடுக்கும் வகையில் வினியோகிப்பதையே இஸ்லாம் விரும்புகிறது. இதனை இஸ்லாமியர்கள் கைவிட்டதன் விளைவே ஏழைகள் பள்ளிவாசலில் பொருளுக்காக காத்திருக்கின்றனர். தற்போது ஊருக்கு ஊர் பைத்துல்மால் உண்டாக்கப்படுகிறது. அதற்கு நாம் நம்மாலான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

----------------------------

மனிதனுக்கு தொண்டு செய்து இறைவனை அடைதல்!

'இறைவனின் தூதரே! சில நல்லறங்களை நான் செய்ய இயலாது போனால் என்ன செய்வது?' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள் 'உன்னால் மற்றவர்களுக்குத் தீங்கு ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள். அது உனக்கு நீயே செய்து கொள்ளும் நல்லறமாகும்' என்றார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூதர்
ஆதார நூல்கள் புகாரி 2518, முஸ்லிம் 119




Tuesday, September 15, 2015

ஏ ஆர் ரஹ்மான் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கிறார்!



இந்த கடிதமானது என்னைப் பற்றி சமீபத்தில் வெளியான ஃபத்வாவைப் பற்றியது.....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....

இறைவன் நமக்கும் நபிகள் நாயகத்துக்கும் தனது அளப்பரிய கருணையைப் பொழிவானாக!

"ஒருபோதும் இறைவன் விதித்ததைத் தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று நபியே! நீர் கூறும்; நம்பிக்கையாளர்கள் இறைவனின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக

குர்ஆன் 9:51


'மெசஞ்சர் ஆஃப் காட்' படத்துக்கு நன்னம்பிக்கையின் அடிப்படையில்தான் இசையமைத்தேன் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல


"முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்' படத்தை நான் இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை. அதற்கு இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் பணியில் கிடைத்த ஆன்மிக அனுபவங்கள் பகிர விரும்பாத தனிப்பட்ட விஷயம்

ராஸா அமைப்பைச் சேர்ந்த நூரி என்பவர், 'இப்படியான படத்தை ஏன் தடுக்கவில்லை' என அல்லா, என்னிடம் கேட்டால் என்ன செய்வது?' என்று பேசியிருந்தார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க முடிவு செய்ததும் இதே மாதிரியான காரணத்துக்காகத்தான். மறுமையில் அல்லாவை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்று, மனித இனத்தை ஒன்றிணைப்பது, தவறான புரிதல்களை சரிசெய்வது, அன்பைப் பற்றிய போதனைகளை, ஏழைகளின் முன்னேற்றம் பற்றிய சிந்தனைகளை பரப்புவது, எனது பெயரால் அப்பாவி மக்களை கொல்வதை விடுத்து மனித இனத்துக்கு சேவை செய்வது என்ற செய்தியை எடுத்துச் செல்லும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன செய்வது?

இன்று நபிகள் நாயகம் குறித்த பல தவறான கருத்துக்களை இணையத்தில் காண முடிகிறது. சரியான புரிதல் இல்லாததால்தான் இந்த நிலை. இத்தகைய விஷயங்களை அன்பாலும் கனிவாலும் எதிர்கொள்ள வேண்டும்.

மேலும், காட்சி ஊடகத்தின் வாயிலாக மக்களிடம் சரியான விஷயங்களை கொண்டு சேர்த்து புரியவைக்க வேண்டும் என்றும் நான் எப்போதும் நினைத்திருந்தேன்.

மத சுதந்திரம் இருக்கும் இந்திய நாட்டில் வாழும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்துள்ளது. இங்கே அனைவரது நோக்கமும் அமைதியான, வன்முறையில்லாத வாழ்க்கையை வாழ்வதே.

நான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். இங்கும், மேற்கிலும் நான் பயணிக்கிறேன், வாழ்ந்து வருகிறேன். அனைவரையும் நேசிக்க முயற்சிக்கிறேன்.

பிரச்சினையை கருணையோடும், கண்ணியத்தோடும் கையாள்வோம்; வன்முறையால் அல்ல. மன்னிப்புக் கோருவோம், உலகில் துன்புறுபவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். நபிகளின் இயல்பை பிரதிபலிப்பது போலவே பிரார்த்தனை செய்வோம்"

வணங்கும் மக்களுக்கு இதில் இக்குர்ஆனில் நிச்சயமாகப் போதுமான வழிகாட்டுதல் இருக்கிறது.

குர்ஆன் 21:107


என்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது முக நூல் பக்கத்தில் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

----------------------------------------------------

ரஹ்மானுக்கு ஃபத்வா கொடுத்த நூரி காதிரியிடம் சில கேள்விகளை நானும் முன் வைக்கிறேன்.


நூரி அவர்களே,

1) நபிகள் நாயகம் அவர்களுக்கே கொடுக்க கூடாத வழிபாட்டு முறையை தர்காகளில் இறைநேசர்கள் என்று கூறி அவர்களுக்கு ஏன் கொடுத்தீர்கள், அதை ஏன் தடுக்கவில்லை என்று அல்லாஹ் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்?

2) பெண்ணுக்கு மஹர் கொடுக்காமல் மணமகன் வரதட்சனை வாங்கும், திருமணத்தை ஏன் முன் நின்று நடத்தி வைத்தீர்கள் என்று அல்லாஹ் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

3) தலாக்குக்கு குர்ஆனில் அல்லாஹ் சொல்லியதற்கு மாற்றாக கூறப்படும் முத்தாலக்கை ஏன் தடுக்கவில்லை என்று அல்லாஹ் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள். இப்படி எத்தனையோ கேள்விகள் நம்மை நோக்கி மறுமையில் வர இருக்கிறது. எனவே இந்த கேள்விகளுக்கும் உங்களிடம் பதில் இருக்கிறதா எனபதை சிந்தித்து பாருங்கள்.

Friday, September 11, 2015

ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக ஃபத்வா!





பிரபல இரானிய திரைப்பட இயக்குனர் மஜீத் மஜீதியின் 'இறைவனுடைய தூதுவர்' என்ற பெயரில் வெளிவந்துள்ள படம் தற்போது உலகமெங்கும் பேசப்படுகிறது. இந்த படத்தில் பணி புரிந்துள்ள இசை அமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராகவும் .பத்வா கொடுக்கப்பட்டுள்ளது. சுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்த 'ரஜா அகாடமி' என்ற அமைப்பு இந்த ஃபத்வாவை கொடுத்துள்ளது. இதற்கு ஆதாரமாக மும்பையின் தலைமை முஃப்தி முஹம்மது அக்தர் கொடுத்த ஃபத்வாவை ஆதாரமாக காட்டியுள்ளது.

மஜீத் மஜீதியும், ஏ ஆர் ரஹ்மானும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார்களாம். இவர்கள் செய்த திருமணமும் செல்லாதாம். புதிதாக கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைய வேண்டுமாம். இதற்கு இவர்கள்' கூறும் காரணம் 'படத்தில் முகமது நபியின் இளமைக் காலத்தை ஒரு நடிகனை வைத்து காட்டுகிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகன் வெளியில் யோக்கியமாக இருப்பானா? இது இஸ்லாத்துக்கு புறம்பானது'என்று இதற்கு காரணத்தை சொல்கின்றனiர்.

ஒருவரை இஸ்லாத்தை விட்டு நீக்க எவருக்கும் அதிகாரம் இல்லை. இது சம்பந்தப்பட்டவருக்கும் இறைவனுக்கும் இடையிலான பிரச்னை. வெளிப்படையாக ஒருவர் ஏக இறைவனை மறுக்கிறார். முகமது நபி கடைசி இறைதூதர் என்பதையும் பகிரங்கமாக மறுத்தாலேயே ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவராக கருத முடியும். இது அல்லாமல் சகட்டு மேனிக்கு முல்லாக்கள் கொடுக்கும் எந்த ஃபத்வாவும் எவரையும் கட்டுப்படுத்தாது.

மேலும் மஜீத் மஜீதி தனது பேட்டியில் 'ஷியா சன்னி இரண்டு பிரிவினரும் ஒத்துக் கொள்ளக் கூடிய சம்பவங்களையும் ஆதாரபூர்வமான ஹதீதுகளையும் கொண்டே இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். இதுவரை இஸ்லாம் சம்பந்தமாக மேற்குலகம் வைத்திருக்கும் பார்வையானது இந்த படத்தின் மூலம் தகர்த்தெறியப்படும்' என்று கூறியுள்ளார். ஆஸ்காருக்கே பரிந்துரைக்கப்பட்ட உலக அளவில் பிரசித்திப் பெற்ற இயக்குனர் மஜீத் மஜீதி. எனவே சிறந்த முறையில் படத்தை இயக்கியிருப்பார் என்றே எண்ணுகிறேன்.

படத்தை பார்த்து விட்டு வந்த ஈரானியர்கள் மிக சிறப்பாக படம் வந்திருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்கள். சினிமா என்பது மிகச் சிறந்த சாதனம். அதனை இது வரை நாம் சரியாக பயன்படுத்தவில்லை. முயற்சி எடுக்கும் ஓரிருவரையும் இவ்வாறு காயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நபியாவதற்கு முன்பு அன்றைய அரபுலகம் எவ்வாறு இருந்தது என்பதையே பிரதானமாக இதில் காட்டியுள்ளார்கள். நபியாக ஆனதற்கு பிறகு உள்ள சரித்திரக் குறிப்புகள் அடுத்த பாகத்தில் வரும். அதில் நபிகள் நாயகத்தை காட்ட மாட்டார் என்றே நினைக்கிறேன். 'தி மெஸ்ஸேஜ்' படத்தைப் போன்றுதான் அதுவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

மேலும் இசையை பொறுத்தவரை குர்ஆன் நேரிடையாக தடையை விதிக்கவில்லை. சில ஹதீதுகள் இசையை தடுக்கின்றன. சில ஹதீதுகள் இசையை ஆதரிக்கின்றன. இதன் மூலம் நாம் இசைக்கு அடிமையாகி விடாமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும் என்பது இதிலிருந்து புலனாகிறது. நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாளின் நேரம் மிக முக்கியமானது. சிலர் பெருமபாலான நேரத்தை இசையை கேட்பதிலேயே செலவிடுகின்றனர். அதிலிருந்து நம்மை கட்டுப்படுத்திக் கொள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும்.

ஏ ஆர் ரஹ்மான் அவர்களே!

ஃபத்வாக்களைப் பற்றி கவலைபட வேண்டாம். நீக்குவதாக இருந்தால் பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கும் பல லட்சம் இஸ்லாமியர்களை வெளியேற்ற வேண்டி வரும். அப்பாவிகளின் கழுத்தை அறுக்கும் ஐஎஸஐஎஸ், போகோ ஹராம், லஸ்கர் ஏ தொய்பா போன்ற தீவிரவாத கும்பல்களுக்கு எதிராக இவர்கள் என்றாவது ஃபத்வா வெளியிட்டுள்ளார்களா? முதலில் அதற்கல்லவா இவர்களின் ஃபத்வாவை வெளியிட்டிருக்க வேண்டும்?

இந்த பதிவை ஏ ஆர் ரஹ்மான் அவர்களே! உங்களின் இன்பாக்ஸிலும் கொடுத்துள்ளேன். பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை என்று நான் ஃபத்வா கொடுக்கிறேன். உங்களின் பணிகளை நீங்கள் தொடர்ந்து செய்து வாருங்கள். இவர்கள் பண்ணும் அளப்பறையில் படத்துக்கு இன்னும் விளம்பரம் கூடும். உங்களுக்கு இதன் மூலம் மற்றொரு ஆஸ்கார் விருதும் காத்திருக்கிறது.

படத்தின் டிரெய்லரை நானும் பார்த்தேன். அசந்து விட்டேன்..... படத்தைப் பார்த்த ஒருவரின் விமரிசனம்...

I saw the movie yesterday in cinema, it was really great. The cinematic were incredible. The musics used on the film (by A.R.Rahman ) bring it to the next level! I was a fan of Hobbit and Lord before this movie, but i can tell you that this movie in almost all aspect is as good as them with a simple difference which is that the historic behind it is totally true! that makes a really great feeling. I cried in a lot of scenes of it and goosebumps in the miracles scenes. I repeat that the best positive point of the movie is the music which has been successfully joined with the film.
مزيد من المعلومات

Saturday, April 18, 2015

சானியா மிர்ஸாவுக்கு ஏ ஆர் ரஹ்மான் பாராட்டு!



டென்னிஸ் இரட்டையர் பிரிவில் உலகின் முதல் டென்னிஸ் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ள சானியா மிர்ஸாவை ஏ ஆர் ரஹ்மான் பாராட்டியுள்ளார்.

அன்பு நண்பர்களே!

பெண்களுக்கு சரியான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டுள்ளோம். அதே நேரம் இந்திய கிராமங்களிலும் நகரங்களிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு ஏதும் செய்ய இயலாதவர்களாக அதற்கு சாட்சியாகவும் நின்று கொண்டுள்ளோம்.

ஆனால் இந்திய மகளான சானியா மிர்ஷா இந்த தடைகளை உடைத்து இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுத் தந்துள்ளார். நம்முடைய குறிக்கோள் சிறந்ததாக இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதனை இவரது சாதனை மெய்ப்படுத்துகிறது. இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

இந்தியாவின் எனது சகோதரி சானியா மிர்ஸா என்னவொரு சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார்! இவரது சாதனையை கண்டு பரவசத்தில் ஆழ்ந்துள்ளேன். இவரது இந்த சிறந்த சாதனையை நாமும் கொண்டாடுவோம்.

- ஏ. ஆர். ரஹ்மான்

Tuesday, February 03, 2015

ஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்!





ஈரானின் மஜீத் மஜீதியின் அடுத்த படத்துக்கான ஒலிப்பதிவு வேலைகள் முடிக்க ஏ ஆர் ரஹ்மான் தற்போது பாரிஸில் முகாமிட்டுள்ளார். சமீர், விஸாம், அத்னான் என்ற புகழ் பெற்ற ஊத் இசை அமைப்பாளர்களோடு தனது அடுத்த படத்துக்கான வேலைகளை பகிர்ந்து கொண்டார். பாலஸ்தீனியர்களான இந்த மூன்று பேரும் சகோதரர்களாம். முன்பு ரஹ்மானின் இசையில் அராபிய இசையின் தாக்கம் அதிகம் இருக்கும். இந்த படத்தில் சொல்லவே வேண்டாம். வெளுத்து கட்டுவார்.

இந்த படம் நபிகள் நாயகத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை சொல்லக் கூடியதாக இருக்கும். உலகப் புகழ் பெற்ற பல விருதுகளை குவித்த மஜீதி இதன் டைரக்டர் என்பதால் காட்சி அமைப்புகளும் மிகப் பிரமாண்டமாக இருக்கும் என்று எதிர் பார்க்கலாம்.

'தி மெஸ்ஸேஜ்' படத்தைப் போன்றே கதாநாயகனை காட்சிப் படுத்தாமலேயே வரலாற்றை நகர்த்திச் சென்றுள்ளார் மஜீதி. கலீபா அபூபக்கர், கலீபா உமர் போன்றவர்களை படத்தில் கொண்டு வந்துள்ளார்.

மஜீதி ஷியா என்பதால் பலரும் பயந்தனர். ஆனால் அவர் தனது பேட்டியில் சன்னி, ஷியா இரு பிரிவினரும் ஒத்துக் கொண்ட விஷயங்களை வைத்தே இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக தனது பேட்டியில் கூறியுள்ளார். நபிகள் நாயகம் மரணித்து பல ஆண்டுகள் கழித்தே ஷியாக்கள் ஆட்சி அமைப்பதில் எழுந்த குளறுபடியால் உருவானார்கள். எனவே இவரது படத்தில் நபிகள் நாயகம் வரலாற்றில் எந்த பிரச்னையும் வராது என்றே நம்புவோம்.

இவரது முந்தய படங்கள் உணர்வு பூர்வமாக இருக்கும். இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்ப காலகட்டங்களில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகள் பலரது கண்களையும் குளமாக்கும். அந்த காட்சிகளை எல்லாம் எவ்வாறு எடுத்துள்ளார் என்பதை பற்றி இப்போதே பலரின் எதிர்பார்புகளை மஜீதி ஏற்படுத்தியுள்ளார்.

மாற்று மத மக்களுக்கு உலகமெங்கும் இஸ்லாத்தின் செய்தியை ஒரே நேரத்தில் கொண்டு செல்ல சினிமா ஒரு சிறந்த சாதனம். அதனை மஜீத் சரியாக பயன்படுத்தியுள்ளாரா என்பதை படம் ரிலீஸானவுடன்தான் நமக்கு தெரிய வரும்.

இந்த படத்துக்கு பிறகு அராபிய உலகிலும் ரஹ்மான் காலடி பதிப்பார் என்று நம்பலாம். ஆஸ்காரும் கிடைக்க வாழ்துவோம்.

தகவல் உதவி
டெக்கான் கெரானிக்கல்
03-02-2015

ஒரு முறை நபிகள் நாயகம் அவர்களிடம் ஒருவர் வந்து 'திருமணத்தில் இசைப்பதையும் கெளிக்கை நடத்துவதையும் அனுமதித்துள்ளீர்களா?' என வினவினார். அதற்கு 'ஆம்! அது திருமணம் தானே! விபசாரம் அல்லவே! என நபிகள் நாயகம் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஜீத்
நூல் தப்ரானி: பத்ஹூல் புகாரி, பாகம் 11, பக்கம் 133



ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், 'இறைத் தூதரின் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?' என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், '(அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்' என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் 1619


எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான் (ரஹ்) அவர்களிடம்) 'எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி(ஸல்) அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள்' (என்று ருபய்யிஉ கூறினார்கள்) அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து இரங்கல் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, 'எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்' என்று கூறினாள். உடனே நபி(ஸல்) அவர்கள், இப்படிச் சொல்லதே! இதை விடுத்து முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை வேண்டுமானால் சொல்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபய்யி(ரழி) நூல்: புஹாரீ: 4001

கஞ்சிராக்கள் என மொழிபெயர்க்கப்பட்ட இடத்தின் அறபு மூலத்தில் 'துப்பு' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியாகும். இதை சிறுமிகள் பயன்படுத்திக் கொண்டிருந்த போது நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. எனவே இது அங்கீகரிக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

------------------------------------------------------------

இசை சம்பந்தமான அழகிய விவாதம்....

http://adirainirubar.blogspot.com/2012/07/blog-post.html

Saturday, November 22, 2014

ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசைக் கச்சேரி துபாயில்!



வரும் டிசம்பர் 18 அன்று துபாயில் ஏ ஆர் ரஹ்மானின் சூஃபி இசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் பாடகர் ராஹத் ஃபதே அலி கான், சுனித் சௌஹானும் கலந்து கொள்கின்றனர். இந்திய பாகிஸ்தான் கலைஞர்கள் இணைந்து கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. இசையின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும் என்று நம்பலாம். ஆனால் இந்த இசையின் மூலமெல்லாம் இறைவனை அடைய முடியாது. தவறான நம்பிக்கையில் ஏ ஆர் ரஹ்மானும், ஃபதே அலி கானும் இருக்கிறார்கள். இறைவனும், நபிகளும் காட்டித் தராத எந்த வழி முறையும் நம்மை இறைவனுக்கருகில் கொண்டு செல்லாது. ஏ ஆர் ரஹ்மானின் முந்தய இசைக் கச்சேரிகளில் பெண்களை அரை குறை உடைகளை வலிந்து திணித்து ஆட விடுவதைப் பார்த்தோம்.. இசைக்கும் ஆடை குறைப்புக்கு என்ன சம்பந்தமோ தெரியவில்லை. எனவே இஸ்லாம் இசைக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ அதன் அளவை மீறாது இருப்போமாக! ஏ ஆர் ரஹ்மானும் தர்ஹாக்கள், இசை போன்ற போலிகளை விடுத்து உண்மையான ஆன்மீகத்தின் பக்கம் தனது கவனத்தைத் திருப்புவாராக!

195, 295, 395, 495, 750, 1000 திர்ஹம்கள் என்று டிக்கெட்டுகள் நவம்பர் 20லிருந்து விநியோகிக்கப்படுமாம். கஷ்டப்பட்டு உழைத்த காசை டிக்கெட் எடுத்து வீணாக்காமல் ஊருக்கு அனுப்பி விடுங்கள். ஆர்வமுள்ளவர்கள் ஒரு வாரம் கழித்து யுட்யூபில் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொள்ளலாம். :-)

ராஹத் ஃபதே அலி கானின் எனக்கு பிடித்த ஒரு பாடல்.

Wednesday, September 03, 2014

மஜீத் மஜீதியும் ஏஆர் ரஹ்மானும் இணையும் புதிய படம்!



படைப்பாளுமை மிகுந்த சர்வதேசத் திரைப்படங்களில் ஒன்று ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. 1997-ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தைப் பிரபல ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கியிருந்தார். ஒரு ஜோடி ஷுவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலகத்தையே கலங்க அடித்தவர்.

உலகப் பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் தரமான சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தப் படைப்புடன் உறவுகளின் உன்னதம் பேசும் பல திரைப்படங்களைக் கொடையாக அளித்தவர். அப்படிப்பட்ட இயக்குநரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்தால் எப்படியிருக்கும்? அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் அந்த ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக அங்கேயே தங்கிவிட்டாராம் இசைப்புயல்.

இசையமைக்கும் படங்கள் எந்த மொழியில் உருவானாலும் எத்தனை பெரிய படவுலகாக இருந்தாலும் இடம்பொருள் ஏவல் என்ற பாரபட்சம் காட்டாமல் முழு அர்ப்பணிப்பைச் செலுத்திவிடும் கலைநேர்மை கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மஜித் மஜிதி படத்துக்கு இசையமைத்துவிட்டுத் திரும்பியதிலிருந்தே மிகவும் ஆத்ம திருப்தியோடு காணப்படுகிறாராம் அவர்.

அது மட்டுமல்ல, அந்தப் படத்தின் வெளியீட்டையும் மிக மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். மஜித் மஜீதி ஈரானிய முஸ்லிம். ஏற்கெனவே இந்திய கலாசாரத்தை திரைப்படங்களாக ஏன் எடுப்பதில்லை என்று ரஹ்மானிடம் கேட்டவர் இவர்தான். மஜீதி மேல் அதிக பற்றுக் கொண்ட ரஹ்மான் ஷியாயிசத்தில் வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும். ஏனெனில் நமது இந்தியாவிலும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்திலும் தர்ஹா வணக்கத்தை அறிமுகப்படுத்தி ஏக தெய்வ கொள்கையை பலரிடமிருந்து பறித்ததே முந்தய ஷியா ஆட்சியாளர்கள். ஏற்கெனவே ஒவ்வொரு தர்ஹாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் ரஹ்மான். குர்ஆனின் உளப்பூர்வமான பல வசனங்கள் இன்னும் இவரது உள்ளத்தை தொடவில்லை என்றே நினைக்கிறேன். அந்த நிலைக்கு சென்றவுடன் தர்ஹாவின் மேல் உள்ள பற்று தானாக சென்று விடும்.

மேலும் மஜீத் மஜீதி முகமது நபியின் வாழ்க்கையை படமாக எடுக்கவிருப்பதாகவும் இந்த வருடமே அதன் வெளியீடு இருக்கும் என்றும் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அந்த படம் வெளியானால் இஸ்லாத்தை பற்றிய மேற்குலக மதிப்பீடு முற்றிலுமாக மாறும் சூழல் ஏற்படும் என்று வேறு கூறியிருந்தார். ரஹ்மான் இசையமைத்த படம் முகமது நபியைப் பற்றியதா அல்லது அது வேறு படமா என்று தெரியவில்லை. ஒரு ஈரானியர் இந்த படத்தை எடுப்பதால் குர்ஆனின் வசனங்களோடு மோதாமலும் முகமது நபியின் ஆதாரபூர்வமான நபிமொழிகளிலிருந்து நிகழ்வுகள் எடுக்கப்பட்டதாகவும் அது இருக்க வேண்டும். இந்த படத்தை மிகச் சிறப்பாக எடுப்பார் மஜீதி என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்கார் விருதுக்கே கூட செல்லலாம். ஆனால் பொய் கலக்காமல் உண்மை வரலாறை எடுக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றோரின் எதிர்பார்ப்பு. படத்தைப் பற்றிய முழு விபரங்களும் இனிமேல்தான் வெளியாகும். பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, August 29, 2014

நமது தேசிய கீதத்தின் பொருளை தெரிந்து கொள்வோமா!



ஜன கன மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.

இந்தியத் திரு நாடே! இந்திய மக்களின் வாழ்வுக்குக் காரணமான
நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.
நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்
மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும்,

வங்காளத்தையும், இன்பத்தால் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது;
யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது;

இந்தியக் கடலலைகளால் போற்றப்படுகிறது:.
அவை உனது பெருமையை போற்றுகின்றன: நின் புகழைப் பரப்புகின்றன.
இந்தியர்களின் வாழ்வுக்குக் காரணமான என் தாய் நாடே...
உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

தகவல் உதவி: விக்கி பீடியா

நமது தேசிய கீதத்தை கென்யர்கள் பாடினால் எப்படி இருக்கும்? :-)


Tuesday, August 19, 2014

இந்திய கலாசாரத்தைப் பற்றி ஏ ஆர் ரஹ்மான்!



சென்னை: இந்தியர்கள் தங்கள் கலாச்சாரத்துக்கு தொடர்பே இல்லாமல் வெளிநாட்டு கலாச்சாரத்தைப் படமாக்குவது ஏன்? என்று ஏ ஆர் ரஹ்மானிடம் பிரபல ஈரான் இயக்குநர் மஜித் மஜிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனை ரஹ்மானே நேற்று தெரிவித்தார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள காவியத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.

விழாவில் படக்குழுவினருடன் ஏஆர் ரஹ்மானும் பங்கேற்றார். இறுதியாக ரஹ்மானைப் பேச அழைத்தனர். அவர் பேசியது முப்பது வினாடிகள்.. நான்கே வரிகள். அவரது பேச்சு: "நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்திடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கான பதிலாக இந்தப் படம் இருக்கும்."

(குறிப்பு: சாங் ஆப் ஸ்பேராஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களைத் தந்தவர் மஜித் மஜிதி. 'இந்தியாவில் ஏன் நடிகர்களுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுக்கிறார்கள்' என்று கேள்வி எழுப்பியவர்).

-பத்திரிக்கை செய்தி




இந்திய கலாசாரம் என்பது என்ன? மனிதனை நான்கு பிரிவுகளாக பிரித்து அவனது தொழிலுக்கு ஏற்ப அவனது தகுதியை நிர்ணயித்து மேல் சாதி கீழ் சாதி என்று பிரித்து வைத்துள்ள மனு நீதியை அடிப்படையாகக் கொண்டு இயங்கிய இன்று வரை இயக்கப்படுவதற்கு பெயர்தான் இந்திய கலாசாரம். ஆதி தமிழர்கள் ஏக இறைவனை வணங்கி வந்துள்ளதற்கு சான்றுகள் கிடைத்துள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆரிய படையெடுப்புகளால் தமிழன் தனது கலாசாரத்தை தொலைத்தான். பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தப்பட்டான். இதற்கு உடன்படாத தமிழர்களை கழுவில் ஏற்றி கொன்றனர் இந்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆரியர்கள். மேலும் சேர சோழ பாண்டிய மன்னர்கள் தங்களுக்குள் பல ஆண்டுகளாக போர் செய்து விவசாய நிலங்கள் கழனிகளையும் வெற்றிக் களிப்பால் அழித்தது நமது கலாசாரம்.

பெண்கள் தங்களின் மார்பை மறைத்துக் கொள்வதற்கு போராட்டம் நடத்தில் பார்பனர்களின் விடாப்பிடியால் முடிவில் கிறித்தவ மதத்தில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்டது நமது கலாசாரம். கன்யாகுமரி சுற்று வட்டாரத்தில் நாடார்களிடம் இதனைக் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். 'முலை வரி' என்ற ஒன்றை போட்டு பெண்களின் மார்புக்கும் வரி வசூல் செய்தது நமது கலாசாரம்.

இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சிரட்டையில் தேனீர் கொடுக்கும் பழக்கமும் தனிக் குவளை முறையும் உள்ளது. ஆதிக்க சாதியினர் உள்ள ஊர்களில் பள்ளிக்கு செல்லும் தாழ்த்தப்பட்ட சிறுவர் சிறுமியர் தங்கள் காலணிகளை கைகளில் எடுத்துச் செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதுவும் கூட நமது கலாசாரம்தான்.

அடுத்து சாதி மாறி காதலித்த ஒரே குற்றத்திற்காக தருமபுரியில் இரண்டு கிராமங்களை முற்றாக அழித்து அதனை இன்று வரை நியாயம்தான் என்று பேசிக் கொண்டும் இருக்கிறோம். முடிவில் தாழ்த்தப்பட்ட அந்த இளைஞனை கொன்று அதனை தற்கொலையாக மாற்றியதும் நமது கலாசாரம்தான்.

காஞ்சிபுரம் கோவிலில் நடந்த பாலியல் அநியாயங்களை தட்டிக் கேட்ட கடவுள் பக்தர் சங்கரராமனை பட்டப் பகலில் கொலை செய்து, அதற்கு காரணமானவர்கள் இன்றும் மக்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதும் நமது கலாசாரம்தான்.

கந்து வட்டி, ரியல் எஸ்டேட், பெண் பிரச்னை, மாமூல் வசூலிப்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு அதனால் கொலையுண்ட பல இந்துத்வா நபர்களை நாம் அறிவோம். அவர்கள் இந்துத்வாவில் தொடர்பு உள்ளவர்கள் என்ற ஒரே காரணத்தினால் பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வழக்கை முடித்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லாமல் அதற்கு மத சாயம் பூசி அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக் கைதிகளாக அடைத்து வைத்திருப்பதும் நமது கலாசாரம்தான்.

கணவன் இறந்தால் எரியுட்டப்படும் அந்த சிதையிலேயே இளம் பெண்களை 'சதி' என்ற பெயரில் சதி செய்து நெருப்பில் தள்ளுவதும் நமது கலசாரம்தான். அவ்வாறு தங்கள் உயிரை விட துணியாத பெண்களை கோரஷாக சப்தமிட்டு அந்த பெண்களை வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ளி கொன்றதும் நமது கலாசாரம்தான்.

உலகிலேயே கற்பழிப்புகள் நடைபெற்று அந்த பெண்களை மரத்தில் தொங்க விடுவதும் நடப்பது நமது நாட்டில்தான். பெண் கொடுமைகள் நடப்பதில் உலகிலேயே முதலிடத்தை பெற்றவர்களும் நமது நாட்டவர்தான்.

இப்படியாக நமது கலாசாரத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

மஜீத் மஜீதி அவர்கள் ஈரானில் அமர்ந்துள்ளதால் இந்த கலாசார புரட்சிகளெல்லாம் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் சிறு வயது முதலே இந்து கலாசாரத்தில் வளர்ந்து பழக்கப்பட்ட ரஹ்மானுக்கு இவை எல்லாம் தெரியாதா? நமது நாட்டோடு சென்று விட்ட இந்த கலாசார புரட்சியை உலகுக்கும் திரைப்படமாக எடுத்துப் போட்டு நமது மானத்தைக் கப்பலேற்ற வேண்டுமா? இந்திய கலாசாரங்களை ஒவ்வொன்றாக திரைப்படங்களாக எடுத்து அதனை மஜீது டைரக்ட் செய்து ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்தால் கண்டிப்பாக அது வெற்றி பெறும். பல ஆஸ்கார் விருதுகளையும் குவிக்கும். ஆனால் இந்தியர்களாகிய நாம் வெளி நாட்டுக்கு சென்றால் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டுதான் செல்ல வேண்டும். இந்த நிலை நமக்குத் தேவைதானா? என்பதை ரஹ்மான் சற்று யோசிப்பாராக!

Wednesday, July 09, 2014

ஏ.ஆர் ரஹ்மான் கடப்பா தர்ஹாவில் வழிபடுகிறாரே?

அன்புள்ள கதிரவன்!

// அன்புள்ள சுவனப்பிரியன்,
இந்தியாவில் ஆந்திராவில் கடப்பா மாவட்டத்தில் ஒரு புகழ்பெற்ற தர்கா உள்ளது. அங்கு சென்று தான் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் மாதம் ஒருமுறை சென்று வழிபடுகிறார்.//

அதே ஏ ஆர் ரஹ்மான் ஐந்து வேளை தொழுகையையும் நேரத்தோடு நிறைவேற்றுகிறார். அதை மறந்து விட்டீர்களே! அவர் தர்ஹா மீது கொண்ட பிரியத்தை குர்ஆனை உண்மையாக விளங்கியவுடன் விட்டு விடுவார் என்றே நினைக்கிறேன். இது பற்றி அவருக்கு பல மடல்களும் எழுதியுள்ளேன்.

//மக்கள் புனிதமாக கருதி வழிபடும் தர்காக்களை இடிக்க உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது ? கொடுஞ்செயலை நியாயப்படுத்தி எழுதும் கேவலத்தை நீங்கள் செய்யலாமா ? 10-க்கும் மேற்பட்ட தர்காக்கள் இடிக்கப்பட்டதை நியாயப் படுத்தி எழுதியுள்ளீர்கள். உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார்.//

தர்ஹாக்களை இடிக்க எனக்கு குர்ஆனும் நபி மொழிகளும் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் அதனை தர்ஹாக்களை வணங்கும் அந்த மக்களே உணர்ந்து அதனை அப்புறப்படுத்தும் வரை நாங்கள் பொறுமை காப்போம். இனி குர்ஆன் வசனங்களை பார்ப்போம். ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுக்கும் உலகத்துக்கும் இடையிலான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிடுகிறது. இறந்த ஒரு மனிதனால் கேட்கவோ, பார்க்கவோ முடியாது! இனி குர்ஆன் வசனங்களை பார்ப்போம்.


குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது. உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச்செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச்செய்பவராக இல்லை. (திருக்குர் ஆன் 35:19-22)

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

குர்ஆன் 72:18



ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு கப்ரையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்:1662)

“அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கப்ருகளை பூசுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்.”
(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்-1610)


‘இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத்தலமாக ஆக்கி விடாதே என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.’
(அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: முஸ்னத் அல் ஹுமைதி)

மேற்கண்ட ஆதாரங்கள் அனைத்தும் தர்ஹாக்கள் கட்டுவதையும் அங்கு விழாக்கள் நடத்துவதையும் தடை செய்கின்றன. மக்கள் அறியாமையில் செய்தால் அதனை குர்ஆன், நபி மொழிகளோடு விவாதித்து அவர்களை நேர்வழிப்படுத்துகிறோம். இஸ்லாத்தில் தர்ஹாக்களுக்கு இடமில்லை. இஸ்லாத்தை விட்டு வெளியேறி தனி மதமாக அறிவித்துக் கொண்டு அவர்கள் வழிபட்டால் அதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப் போவதில்லை.

எனவே தர்ஹா விஷயமாக இறைவன் என்னை குற்றம் பிடிக்க மாட்டான் என்று உறுதியாக நான் சொல்கிறேன்.

Sunday, February 16, 2014

ஏ ஆர் ரஹ்மானுக்கு சில ஆலோசனைகள்!



உங்களின் முன்னேற்றத்தை கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். எவ்வளவு உயரத்துக்கு போனாலும் 'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று கூறும் அந்த தன்னடக்கத்தைக் கண்டு வியந்துள்ளேன். இளையராஜா, எம் எஸ் வி என்று பல மூத்த இசையமைப்பாளர்களை மேடையில் சந்தித்தாலும் இதுவரை அவர்களின் கால்களில் விழுந்ததில்லை. சுயமரியாதைக்காரர். இறைவனுக்கு மட்டுமே எனது தலை சாயும் என்ற கொள்கையுடையுவர். கடவுள் ஸ்தானத்திற்கு உங்களை சிலர் மேடையில் உயர்த்திய போது அதனை கடுமையாக அங்கேயே எதிர்த்தவர். காலை நேர தொழுகை தவறி விடக் கூடாது என்பதற்காக ஒலிப்பதிவை இரவு முழுக்க வைப்பவர். ஐந்து வேளை தொழுகையை தவறாமல் தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்துபவர். மாற்று மதத்தவர்கள் மத்தியில் அதிகம் வேலை செய்தாலும் அனைவருடனும் எந்த முறுகலும் இல்லாமல் அன்போடு அனைவரையும் அரவணைத்து செல்பவர் என்று உங்களின் நல்ல செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவ்வளவு நல்ல செயல்களுக்கு சொந்தக்காரரிடம் சில குறைகள் இருப்பதை நான் அறிவதால் அதனை ஞாபகப்படுத்தும் முகமாக இந்த பதிவிலே சில குறைகளை பதிக்கிறேன்.

மனிதர்களுக்கு தலை வணங்காத நீங்கள் இறந்து விட்ட ஒரு சில அடியார்களின் சமாதிகளில் உங்கள் தலையை சாய்க்கிறீர்கள். நாகூர் தர்ஹா, அஜ்மீர் தர்ஹா என்று அவ்வப்போது தர்ஹாக்களுக்குச் சென்று உங்களின் வணக்கத்தைச் செலுத்துகிறீர்கள். இது குர்ஆனின் கட்டளைக்கு மாற்றமான செயல். முகமது நபி கூட 'தனது அடக்கஸ்தலத்தில் யாரும் பிரார்த்தனை செய்ய வர வேண்டாம். இறைவனிடம் மட்டுமே தொழுது கேளுங்கள்' என்று கூறியுள்ளார். இந்த சமாதி வழிபாடு என்பது ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. மொகலாய மன்னர்கள் அதிகம் பேர் ஷியாக்களாக இருந்ததால் நகர் வலம் வரும் போது ஆங்காங்கு உள்ளவர்கள் ஏதேனும் ஒரு சமாதியைக் காட்டி அரசர்களிடம் இனாமாக நிலங்களை பெறுவார்கள். இது ஒரு மறைமுக வியாபாரமாக அந்த காலத்தில் நடந்தது. அடங்கியிருப்பவர் நல்லவரா கெட்டவரா என்பது கூட பலருக்கு தெரியாது.

ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை இறைவன்தான் முடிவு செய்ய முடியும். மேலும் குர்ஆனில் பல இடங்களில் தனக்கு இணையாக சிறு தெய்வ வழிபாடு செய்பவர்களை இறைவன் கடுமையாக கண்டிக்கிறான். அந்த தவறை மன்னிக்கவே மாட்டேன் என்று கண்டிப்பாக சொல்கிறான். தொன்மையான இந்து மதம் சீரழிந்து அதன் உண்மை முகத்தை இழந்ததற்கு முக்கிய காரணம் சிறு தெய்வ வழிபாடே. இந்த சிறு தெய்வ வழிபாட்டை இந்துக்கள் எதிர்க்காமல் அனுமதித்ததால்தான் ஏக தெய்வ வணக்கம் நமது தமிழர்களிடத்தில் மறைந்து போனது.

இஸ்லாமிய வேத நூலான குர்ஆனும், இறைத் தூதரான முகமது நபி இது போன்ற தர்ஹா வணக்கங்களை தடை செய்திருப்பதாலும் இனி வரும் காலங்களில் தர்ஹா வணக்கங்களை தவிர்த்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து நேற்று உங்கள் தளத்தில் ஒரு செய்தியை பிரசுரித்திருந்தீர்கள். அதன் வாசகமானது "Music can change the world" - Beethoven என்று வருகிறது. அதாவது 'இந்த உலகை மாற்றும் சக்தி இசைக்கு உண்டு' என்று சொல்கிறீர்கள். பீத்தோவன் என்ற இசைக் கலைஞருக்கு இந்த செய்தி உண்மையாக தோன்றியிருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிம் இவ்வாறு எண்ண மாட்டான். இந்த உலகை மாற்றிப் போடும் சக்தி இறை வேதமான குர்ஆனுக்குத்தான் உண்டு. இசை என்பது நமது வாழ்வில் ஒரு அங்கம் அவ்வளவுதான். இசையே வாழ்க்கையாகி விடாது. இசைக்கு அடிமையாகி விடக் கூடாது என்பதால் அதற்கு சில கட்டுப் பாடுகளை விதிக்கிறது இஸ்லாம்.

உங்களின் நண்பர் யுவன் சங்கர் ராஜா சில நாட்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றதை அறிவீர்கள். இசையை உருவாக்கி அதில் பல வெற்றியும் கண்டவர் யுவன் சங்கர். 100 படங்களுக்கு மேல் சொந்த இசையால் இளைஞர்களை கட்டிப் போட்டவர். ஆனால் அந்த இசையில் அவருக்கு மன அமைதி கிடைக்கவில்லை. அவருக்கு மன அமைதியைக் கொடுத்தது குர்ஆனின் வசனங்கள் தான். அதனை அவரே பத்திரிக்கை பேட்டியில் சொன்னதை பார்த்தோம்.

'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

குர்ஆன் 13:28

மேற்கண்ட இறை வசனத்தின் மூலம் இறைவன் மன அமைதி பெறுவதற்கு இறைவனைப் பற்றிய நினைவை வழியாகக் காட்டுகிறான். இரு முறை அதனை அழுத்தமாக சொல்வதிலிருந்து குர்ஆனின் வார்த்தைகள்தான் ஒரு மனிதனின் மனதை அமைதிப் படுத்தும். அதற்கு சிறந்த உதாரணம் தான் யுவன் சங்கர் ராஜாவின் மன மாற்றம். எனவே நிரந்தர மன அமைதி இசையால் கிடைக்காது நம்மை படைத்த இறைவனின் வார்த்தைகளால்தான் கிடைக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம்.

அடுத்து உங்களின் புதிய ஹிந்தி படமான "HIGH WAY" ல் ஒரு பாடல் வருகிறது. "PATHKHA GUDDI" என்ற பாடலில் 'நாம் ரப்புகா நாம் சாயிகா அலி...அலி...அலி' என்று வருகிறது. இது பஞசாபி பாடல். நான் விளங்கிக் கொண்ட வகையில் முகமது நபியின் மருமகன் அலியை நினைத்து பாடுவதாக நினைக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர் இம்தியாஸ் அலி ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இதற்கு முந்தய படமான 'ராக்ஸ்டார்' லும் தர்ஹா வணக்கத்தை வலிந்து புகுத்தினார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. அதில் என்ன காட்சிகளை புகுத்தியிருக்கிறாரோ தெரியவில்லை. ஷியாக்கள் கலீபா அலியை மிக உயர்த்தி அபுபக்கர், உஸ்மான் போன்ற கலீபாக்களை மட்டம் தட்டுவர். அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் என்று பொய்யுரைப்பர். தகவல் தொடர்பு அதிகம் இல்லாத அந்த காலங்களில் இஸ்லாமிய எதிரிகள் இடையில் புகுந்து முஸ்லிம்களுக்குள் இரண்டு பிரிவுகளை உருவாக்கி விட்டனர். குர்ஆனிலோ நபி மொழிகளிலோ ஷியா என்ற வார்த்தையே கிடையாது என்பதிலிருந்து இவர்கள் புதிதாக உருவாகிய கூட்டத்தினர் என்பதை விளங்கிக் கொள்ளலாம். இந்த படத்தின் கதையின் நாயகன் அலி என்றும் அதனை பற்றி நீங்கள் பாடுவதாக இருந்தால் நமக்கு ஒரு பிரச்னை இல்லை. ஆனால் கலீபா அலியை உயர்த்தி நீங்கள் பாடுவதாக காட்சி அமைத்திருந்தால் இது போன்ற தவறுகளிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்.

அடுத்து இஸ்லாத்தை சொல்ல எத்தனையோ வழிகள் இருக்க சினிமாவை தேர்ந்தெடுக்க வேண்டாம். ஒரு தொழில் என்ற முறையில் அதில் ஈடுபடுங்கள். இஸ்லாமும் சில கட்டுப்பாடுகளோடு இசையை அனுமதிக்கிறது. இஸ்லாமிய கருத்துக்களை சொல்ல சினிமா பாடல்களை பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த பதிவை உங்கள் இன் பாக்ஸிலும் இட்டுள்ளேன். நேரமிருப்பின் படித்து நேர் வழி பெற பிரார்த்திக்கிறேன்.

Saturday, January 11, 2014

அமெரிக்கர்கள் தமிழில் பாடினால் எப்படி இருக்கும்?



நான் சிறுவனாக இருக்கும் போது ஹிந்திப் பாடல்களையும், மேற்கத்திய ஆங்கில பாடல்களையும் தமிழர்களாகிய நாம் பாடுவது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது.. போனி எம் பாடல்கள் ஒன்றிரண்டு சிறு வயதிலேயே எனக்கு மனனமாகத் தெரியும். குர்பானி, ஷான், ஷோலே, ஹம் கிஸிஸே கம் நகின் போன்ற படத்தின் பாடல்கள் தான் எங்களது நண்பர்கள் குழுமத்தில் அதிகம் பாடப்படும். இதை பாடுபவர்கள் சிறந்த ஜீனியஸாகவும் அப்போது கருதப்படுவர் :-). அந்த மேற்கத்திய மற்றும் ஹிந்திப் பாடல்களின் தாக்கங்கள் இளையராஜா வந்தவுடன் சற்று மாறியது. மேலும் சில ஆண்டுகள் கழித்து ரஹ்மான் திரை இசைக்கு வந்தவுடன் நிலைமை தலை கீழாக மாறி விட்டது. இன்று ரஹ்மான் இசை அமைத்த பல பாடல்களை மேற்கத்திய நாட்டவர் காப்பி பண்ணுவது, அதை இசைத்து மகிழ்வது அதிகமாகி வருகிறது. 'பல்லேலக்கா' பாடலை எவ்வளவு உற்சாகத்தோடு அமெரிக்கர்கள் பாடுகிறார்கள் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.









Friday, December 27, 2013

ஏ.ஆர்.ரஹ்மான் சூப்பர் சிங்கரில் - ஓர் அலசல்



ஓய்வு நேரங்களில் எப்போதாவது தொலைக்காட்சி பக்கம் சென்றால் விஜய் டிவியின் சூப்பர் சிங்கரை தவற விடுவதில்லை. படிக்கும் காலங்களில் இருந்து இசையில் கொஞ்சம் ஆர்வம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு வருந்தினராக வந்தார். அதில் நேற்றைய நிகழ்ச்சியில் 'சன் சைன் ஆர்கெஸ்ட்ரா' வைப் பற்றிய ஒரு தொகுப்பை ஒளிபரப்பினார்கள். அந்த நிகழ்ச்சி மிகவும் நெகிழ்ச்சியை எனக்குத் தந்தது.

சலவைத் தொழிலாளியின் மகன், ரோட்டோரமாக டீக்கடை வைத்து பிழைக்கும் ஒருவரின் மகன் என்று வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 25 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குழந்தைகளை கடந்த ஐந்து வருடமாக மேற்கத்திய இசையில் வார்த்தெடுத்து வருகிறது கேஎம் மியூசிக் குழுமம். இந்த குழந்தைகளில் எவருமே இசைக் குடும்பத்திலிருந்து வரவில்லை. இது எப்படி ரஹ்மானுக்கு சாத்தியமானது? இவ்வளவு பிஸியான வேலைகளுக்கிடையே எவ்வாறு இவ்வாறு இந்த குடும்பங்களை தேர்ந்தெடுக்க முடிந்தது? எல்லாவற்றிற்கும் மேலாக இப்படி ஒரு எண்ணம் ஏன் இவருள் வந்தது? என்று நாம் சிந்திக்க வேண்டும்.

அவர் சிறு வயதில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்தார். பள்ளிக்கு சென்று விட்டு வந்து ஓய்வு நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். சில நேரங்களில் பள்ளிக்கே செல்லாமல் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். முடிவில் கல்லூரிக்கு செல்லும் தீராத ஆசையை தியாகம் செய்கிறார் தனது குடும்பத்துக்காக! அந்த வலி இன்னும் அவருள் இருப்பதால் அதைப் போன்ற ஏழை குடும்பத்து மாணவர்களை பொறுக்கி எடுத்து இன்று உலக அளவில் பேசப்படக் கூடியவர்களாக மாற்ற முயற்சிக்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம்.



செலோ என்ற வாத்திய கருவியை சரியாகக் கூட உச்சரிக்கத் தெரியாத ஒரு மாணவன் அந்த கருவியை மிக அனாயசமாக வாசிக்கிறான். ஆக ஒரு மாணவனுக்கு வாய்ப்பையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவனால் எந்த துறையிலும் சாதித்து காட்ட முடியும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த உதாரணம். முன்பெல்லாம் இசை என்றால் மேல் சாதிக்காரர்களின் ஆக்கிரமிப்பே அதிகம் இருக்கும். இந்த மாணவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் இசைப் பயிற்சியை முடித்து வெளியேறும் போது பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மாணவ மாணவிகள் அதிகம் தங்களின் திறமைகளை காட்ட ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரஹ்மானை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.

இசையை பொறுத்த வரை இஸ்லாம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. குர்ஆனும் மிகச்சிறந்த ராகத்தில்தான் ஐந்து வேளையும் பள்ளிகளில் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளிலும் இறை வேதமான குர்ஆன் ராகங்களோடு வாசிக்கப்படுவதை பார்க்கிறோம். குர்ஆன் இசையை தடை செய்து நேரிடையாக வசனங்கள் எதனையும் அருளவில்லை. கொலை, விபசாரம், வட்டி, பொய், போன்ற பாவங்களை பட்டியலிடும் குர்ஆன் அவற்றை தவிர்த்துக் கொள்ளச் சொல்லும் குர்ஆன் இசையைப் பற்றி எங்குமே ஒரு வார்த்தை கூட கூறவில்லை. சில ஹதீதுகளில் இசையைப் பற்றிய தடையை பார்க்கிறோம். மேலும் சில ஹதீதுகளில் இசையை அங்கீகரித்துள்ளதையும் பார்க்கிறோம. எனவே இரண்டு ஹதீதுகளையும் சீர் தூக்கி பார்க்கும் போது நம்மை இசை அடிமையாக்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு அளவுக்கு மீறி இசையை ரசிக்க ஆரம்பித்தால் பைத்தியத்தின் நிலைக்கு கொண்டு சென்று விட்டு விடும்.

அதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சிகளிலேயே சில உதாரணங்களைப் பார்க்கலாம். திவாகர் என்ற போட்டியாளர் 'நீங்க கடவுள் சார்' என்றும் 'இனி எனது உயிரே போனாலும் கவலையில்லை' என்றும் சொல்கிறார். இசையில் அதிக ஈடுபாடு வந்தால் இது போன்ற வார்த்தைகள் எல்லாம் சர்வ சாதாரணமாக வரும்.

இன்னொரு போட்டியாளரான அரவிந்த் சீனிவாஸ் 'சார் உங்க வீட்டு வாட்ச மேனாகவோ அல்லது கார் டிரைவராகவோ இருந்து விடலாம் என்று சில நேரங்களில் தோன்றும். தினமும் உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அல்லவா?' என்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு சிறந்த மனிதர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும், சகல மதத்தவர்களையும் மதித்து அவர்களோடு அன்போடு தனது தொழிலை கொண்டு செல்லும் லாவகமும் ஒவ்வொரு இந்தியனும் கடைபிடிக்க வேண்டியது. இதில் சந்தேகம் இல்லை.

ஆனால் அவரை புகழ்கிறோம் என்ற பேரில் கடவுள் என்பதும், உயிரையே விட்டு விடுகிறேன் என்பதும், வாட்ச் மேனாகவாவது வேலை செய்கிறேன் என்று சொல்வதும் தவிர்க்கப்பட வேண்டியது. இதை மேடைகளிலேயே ரஹ்மான் சொல்லியும் யாரும் கேட்பதாக இல்லை. தமிழர்களாகிய நாம் ஓவராக சம்பந்தப்பட்டவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். இதனால்தான் சினிமா துறையிலிருந்து பல முதல்வர்களை நாம் பார்த்து வருகிறோம். எனவே ரஹ்மானை ஒரு இசை அமைப்பளாராக பாருங்கள்: சிறந்த இந்தியனாக: சிறந்த தமிழனாக: சிறந்த மனிதனாக: சிறந்த முஸ்லிமாக: பாருங்கள். கடவுள் அளவுக்கு உயர்த்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நம் நாட்டில் உள்ள செல்வந்தர்கள் ரஹ்மானை பின் பற்றி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள இது போன்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்லூரி படிப்பு வரை கொண்டு செல்ல முயற்சிப்பார்களாக! ஏழை மக்களுக்கு உழைக்க வேண்டிய நம் நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் பொறுப்பை மறந்து தங்கள் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து ஆசிய பணக்காரர்களிலும், உலக பணக்காரர்களிலும் இடம் பெற ஆலாய் பறக்கிறார்கள். அதற்காக சாமானய மக்களின் வரிப் பணத்தையும் திருடவும் தயங்குவதில்லை. இந்த அரசியல்வாதிகள் மறந்ததனால்தானோ என்னவோ அந்த பொறுப்பை ரஹ்மான் போன்றவர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் ஏ.ஆர்.ரஹ்மான்! உங்களின் மனிதாபிமான நடவடிக்கைகளில் இறைவன் உங்களுக்கு பூரண உதவிகளை தந்தருள்வானாக என்று பிரார்த்திக்கிறேன்.

மற்றபடி இந்த போட்டியில் முதல் இடத்தைப் பெறப் போவது திவாகரா அல்லது சையது சுபுகானா அல்லது பார்வதியா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். வெற்றியாளருக்கு வாழ்த்துக்கள்.

Sunday, December 15, 2013

25 சிறந்த இந்தியர்களில் ஏ.ஆர்.ரஹ்மானும், ரஜினி காந்தும்!



என்டிடிவி யின் 25 வருடம் பூர்த்தியானதை யொட்டி இந்தியாவில் தற்போது வாழ்ந்து வரும் 25 சிறந்த நபர்களை தேர்வு செய்தது. அதில் தமிழகத்திலிருந்து ரஜினி காந்தும், ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தனது ஏற்புரையில்....

ஏ.ஆர் ரஹ்மான்: 'எல்லா புகழும் இறைவனுக்கே'(இதை தமிழிலேயே சொன்னார்) இந்த நிலையை அடைய காரணமாயிருந்த எனது தாய், ஆசிரியர்கள், தமிழ் மக்கள் மற்றும் அனைத்து நபர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு காரணமான இறைவனையும் புகழ்கிறேன்.

ரஜினி காந்த் :'ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்து இந்தியாவின் 25 சாதனையாளர்களுள் ஒருவனாகி உள்ளேன். அதிசயங்கள் நிகழும் என்பதற்கு என் வாழ்க்கையே உதாரணம். இந்த விருதை தமிழ் மக்களுக்கும், எனது குரு இயக்குனர் பாலச்சந்தருக்கும் அர்பணிக்கிறேன்.

லியாண்டர் பயஸ் : தன்னம்பிக்கையுடன் கடுமையான உழைப்பு வேண்டும்.

அமிதாப் பச்சன் : அடக்கமும், உண்மையும் முன்னேற்றத்திற்கு அவசியம்.

கபில் தேவ் : கனவு காணாமல் எதையும் அடைய முடியாது.

ஷாருக்கான் : செயல்களின் மூலம் வாழ்க்கைக்கு மதிப்பு சேர்க்க வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் : தோல்வியால் சோர்ந்து விடாமல் மீண்டும் எழுந்து, அடுத்த சவாலை எதிர்கொள்ள வேண்டும்.

எம்.எஸ்.சுவாமிநாதன் : நாட்டின் எதிர்காலம் வேளாண் வளர்ச்சியில் உள்ளது; ஆயுதங்களின் வளர்ச்சியில் அல்ல.

ரத்தன் டாடா : இந்தியாவின் வளர்ச்சியில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒய்.கே.ஹமீது, முகேஷ் அம்பானி, வஹீதா ரஹ்மான் போன்றோரும் விருது வாங்கியவர்களில் அடங்குவர்.

விருது வாங்கிய 25 பேரும் மிகச் சிறந்த தேர்வாக என்னால் கணிக்கப்படுகின்றனர். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம், கிறித்தவர், சீக்கியர் என்ற அனைத்து மக்களின் மனத்திலும் இந்த 25 பேரும் சாதி மத வித்தியாசமின்றி மதிப்புடன் குடி புகுந்துள்ளனர்.

கூட்டத்தில் பார்வையாளராக எல்.கே.அத்வானி மிக பரிதாபமாக உட்கார்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. பிரதம வேட்பாளர் பதவிதான் பறி போய் விட்டது, "பாபரி மசூதியை இடித்த மிகச் சிறந்த மனிதர்" என்று இவருக்கும் ஒரு விருது கொடுத்திருக்கலாம். அப்படியே நரேந்திர மோடிக்கும் 'முதல்வராக இருந்து 2500 முஸ்லிம்களை வேட்டையாடிய வீரர்' என்ற பட்டத்தையும் கொடுத்து கௌரவிததிருக்கலாம். :-)

பண்டிட் ஹரி பிரசாத் விருது வாங்கி பேசும் பொது ' மாதா, பிதா, குரு இவர்களை மதித்து நடந்தால் இறைவன் நம்மோடு நமது வெற்றிக்கு உறுதுணையாக இருப்பான். இறக்கும் போது நாம் எதைக் கொண்டு செல்லப் போகிறோம். நாம் செய்த நல்ல காரியங்களே நம்மோடு கூட வரும. ஜெய் ஹிந்த்' என்று முடித்தார்.

இவர் சொன்ன வார்த்தைகளை மோடியும், அத்வானியும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். நாட்டை நேசிக்கும் உண்மையான தேச பக்தன் அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவனாக இருக்க வேண்டும். தனது இனமும் தனது சாதியும் முன்னேறுவதற்காக நாட்டில் ரத்த களறியை உண்டு பண்ணும் எவனும் உண்மையான தேச பக்தனாக முடியாது. இன்றில்லா விட்டாலும் என்றாவது காரணகர்த்தர்கள் அதன் பலனை அனுபவிப்பார்கள். அன்று உண்மையை மோடியும், அத்வானியும் இந்துத்வாவாதிகளும் உணர்ந்து கொள்வார்கள்.



டிஸ்கி: 25 பேரில் ஊழல் செய்ய மறுத்து அதனால் பல இன்னல்களை இன்று வரை சந்தித்து வரும் மாவட்ட ஆட்சியர் சகாயத்தை தமிழகம் சார்பில் தேர்ந்தெடுத்திருக்கலாம். நான்கு முதல்வர்களை வரிசையாக சினிமா துறையிலிருந்து தேர்ந்தெடுத்தவர்கள் தமிழர்கள் என்பதால் இந்த முறையும் தமிழகம் என்றால் சினிமாவே என்டிடிவியினருக்கு முதலில் ஞாபகத்தில் வந்திருக்கலாம். ஆனால் இந்த(ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினி காந்த்) இருவரும் சினிமா துறையில் இருந்தாலும் தங்கள் மார்க்கங்களில் மிகுந்த ஈடுபாட்டோடு இருந்தாலும் நாட்டுப் பற்றிலும், மற்ற மதத்தவர்களை மதிக்கும் பண்பிலும் சிறந்து விளங்குகின்றனர். இதற்காக இவர்களுக்கு தாராளமாக இந்த விருதுகளைக் கொடுக்கலாம்.

Thursday, August 09, 2012

ஏ.ஆர்.ரஹ்மானும் தேனீக்கள் விழாவும்!



சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தேனீக்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாட்டிலேயே முதன்முறையாக சென்னையில் "பாலினேட்டர்-1' என்ற பொருளில் மூன்று நாள் கலை திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.

அண்ணா சாலையில் உள்ள ஹயாத் ஹோட்டல் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த கலை திருவிழாவின் தொடக்க விழாவில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார். இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால் காந்தி கலந்து கொண்டார்.
இந்த கலை திருவிழா குறித்து ஓவியர் மற்றும் வடிவமைப்பாளர் ராஜீவ் சேத்தி, ஹோட்டல் உரிமையாளர் அருண் சரஃப், நமீதா சரஃப் ஆகியோர் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

நாட்டில் 60 சதவீதம் விவசாயத் தொழில் நடைபெறுகிறது. தாவரங்களில் 80 சதவீத மகரந்த சேர்க்கை தேனீக்களால் நடைபெறுகிறது. இப்போது 75 சதவீத தேனீக்கள் அழிந்து விட்டன. நாட்டில் புலி, சிங்கம், யானை போன்ற பெரிய விலங்குகள் அழிந்து வருவதை குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர். அரசும், அரசு சார்புடைய நிறுவனங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால், தேனீக்கள் அழிந்து வருவது குறித்து எவரும் கவலை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.

ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள், காடுகளில் கான்கிரீட் கட்டுமானங்கள் போன்றவற்றால் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. தேனீக்கள் அழிந்தால் மனித இனமும் அழியும். எனவே, தேனீக்களை பாதுகாக்க வேண்டியது அவசியம்.தேனீக்களை பாதுகாக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நாட்டிலேயே முதன் முதலாக சென்னையில் இந்த விழிப்புணர்வு கலை திருவிழாவை நடத்துகிறோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசும் போது 'இது எனக்கு புதிய அனுபவம். வழக்கத்திற்கு மாறான ஒரு சூழலில் இந்த விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது.' என்றார். இந்த விழாவில் அவர் தனது மனைவி சாஹிராவோடு கலந்து கொண்டார். ரஹ்மானின் கேஎம் மியூசிக்கில் பயின்று வரும் சந்தோஷ் இந்நிகழ்ச்சியில் ஒரு பாடலை கம்போஸ் செய்திருந்தார். இதற்கான பாடலை வைரமுத்து எழுதியிருந்தார்.

தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி பேசும் போது 'இது போன்ற நிகழ்ச்சிகள் நாடு முழுக்க நடைபெற வேண்டும். தேனீக்களின் முக்கியத்துவத்தை மக்கள் உணர வேண்டும். இதன் மருத்துவ குணங்களை இன்னும் பலர் அறியாமல் இருக்கின்றனர்' என்றார்.

திரு விழாவின் ஒரு பகுதியாக தேன் சேகரிப்பவர்களான குரும்பா என்ற மலை சாதியினரின் நிகழ்ச்சியும் முறையே தமிழிலும் தெலுங்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் நீலகிரியிலிருந்து விழாவுக்காக வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஹயாத் ஹோட்டல் நிர்வாகி அருண்சராஃப் மேலும் கூறும் போது 'அரை நூற்றாண்டுக்கு முன்னால் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒன்றை நமக்கு சொல்லி விட்டு சென்றார். தேனீக்கள் முழுதும் அழிக்கப்பட்டால் அதன் பிறகு மனித நாகரிகம் என்பது நான்கு ஆண்டுகளே என்று. எனவே நாம் தேனீக்களின் அருமையை உணர வேண்டும்' என்றார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் 'முன்னால் பிரதமர் இந்திரா காந்தியிடம் தேனீக்களின் அவசியத்தைப் பற்றி பேசியிருந்தேன். தேனீக்களின் நினைவாக ஒரு தபால் தலை வெளியிட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தேனீக்களைப் பற்றி ஆராய்வதற்கு நிறைய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்' என்று தனது செய்தியாக கூட்டத்தில் அறிவித்தார்.

ஆசிய மரபு அறக்கட்டளையின் தலைவர் ராஜீவ் சேத்தி கூறும் போது 'நாங்கள் ஏற்கெனவே அக்டோபரில் ஹைதரபாத்தில் பாலினேட்டர்-2 (மகரந்த பரப்பி-2) நடத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

-தகவல் உதவி : தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ்

----------------------------------------------------------------------------------

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். “நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), (அல்குர்ஆன் 16:68)




“பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் காட்டித் தரும் எளிதான வழிகளில் உன் கூட்டுக்குள் ஒடுங்கிச் செல்” என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான். அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு பிணி தீர்க்க வல்ல சிகிச்சை உண்டு நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் 16:69)



வேலைக்காரத் தேனீயின் உடலில் தேனை செரிப்பதற்கான வயிறும் தேனை சேகரிப்பதற்கான பையும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. சேகரிப்பதற்கான பை ராணித்தேனீயின் உடலிலோ, ஆண் தேனீயின் உடலிலோ இல்லை. மலர்களிலிருந்தும் கனிகளிலிருந்தும் சேகரிக்கப்படும் அமுதம் (நெக்டர்) அந்தப்பையில் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதையே அடைகளில் சேமிக்கிறது. இந்த திரவத்தில் அடைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது, இதன் பெருமளவு நீர்மம் குறைக்கப்பட்டு இறுகிய பின்பே தேனாகிறது.



சமீப காலம் வரை தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞசி தனது கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்றுதான் எண்ணியிருந்தோம். கனிகளிலும், மலர்களிலும் உள்ள குளுக்கோஸை தேனீக்கள் விழுங்கி பல வேதி மாற்றங்கள் நிகழ்ந்து அதன் பிறகு அதன் வயிற்றுப் பகுதியிலிருந்து வெளியாகும் திரவம் தான் தேன் என்று தற்காலஅறிவியல் கூறுகிறது. நுணணோக்கிகள் இல்லாத அன்றைய காலத்தில் இவ்வாறு ஒரு உண்மையை குர்ஆனால் எவ்வாறு கூற முடிந்தது என்று சிந்திக்க சொல்கிறது இறை மறை



தேனீ உணவை உட்கொள்வதன் மூலம் அந்த உணவு செரிமானம் ஆகும் வயிற்றுப்பகுதியை பற்றி இந்த வசனம் சிந்திக்க தூண்டுகிறது. பொதுவாக பிராணியின் வயிற்றுக்கு உள்ளே இருக்கும் செய்திகளை படைத்த இறைவன்தான் பார்க்க இயலும் இந்த அறிவை மனிதன் பெற வேண்டும் என்ற அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதாவது மனிதர்களாகிய நாம் ஸ்கேன், லேசர் கருவிகள் போன்ற நவீன தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டும் அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வது எளிது என்பதை உணர வேண்டும். இப்படிப்பட்ட துல்லியமான அறிவாற்றலுக்கு நவீன உபகரணங்கள் பற்றிய கல்வி மிக அவசியம். இவற்றை எல்லாம் நாம் சிந்திக்க வேண்டும் என்றுதான் குர்ஆனில் இறைவன் இதற்கென ஒரு அத்தியாயத்தையே இறக்கியுள்ளான்.

---------------------------------------------------------------

தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ் (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

கொம்புத்தேன்

மரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். இந்த வகையான தேன் கிடைப்பது மிகவும் அரிது.

புற்றுத்தேன்

கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.

மனைத்தேன்

இது வீடுகளில் கட்டுகின்ற தேன். பசியினைத் தூண்டும். உடலை வலுவாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

பொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.


---------------------------------------------------------------

மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு - 17





Wednesday, April 04, 2012

'குன்பயகூன்' - அறிவியல் - ஏ.ஆர்.ரஹ்மான்!

6:73. அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்; அவன் “ஆகுக!” என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது; எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்; அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்; அவனே பூரண ஞானமுடையோன்; (யாவற்றையும்) நன்கறிந்தோன்.

2:117. (அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.

كُن فَيَكُونُ குன்பயகூன் என்ற இந்த வார்த்தையை இறைவன் குர்ஆனில் பல இடங்களில் பயன்படுத்துகிறான். இறைவன் 'ஆகு' என்று சொன்னால் உடன் ஆகி விடும். இங்கு தனது வல்லமையை மனிதர்களுக்கு இறைவன் விளக்குகிறான். இன்றைய அறிவியல் இந்த வசனத்துக்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்று பார்ப்போம்.

சிங்குலாரிட்டி என்பது என்ன?

'வினோதத் தன்மை' (SINGULARITY) என்பது நாம் அறிந்துள்ள அனைத்து அறிவியல் விதிகளும் தோற்கடிக்கப் படும் அல்லது பயன்படாத நிலையை அடையும் இடமே 'சிங்குலாரிட்டி' (வினோதத் தன்மை) ஆகும். பெரு வெடிப்பு எந்த மயிரிழை நேரத்தில் திடீரென நடைபெற்றதோ அந்தக் கணத்திற்குப் பின்னால் நிகழ்ந்த யாவும் நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் அந்த கணத்திற்கு முன்னால் நிகழ்ந்தது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் அறிந்துள்ள அறிவியல் விதிகளால் இயலவில்லை. தற்போது பேரண்டம் இயக்கப்படுகின்ற விதிகளையே நாம் அறிவோம். ஆனால் இந்த விதிகள் யாவும் பெரு வெடிப்புக்கு முன்னால் செயலற்றுப் போகிறது. மேலும் பெரு வெடிப்புக்கு முன் அது எப்படி நடைபெற்றிருப்பினும் அவற்றுக்கும் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே 'பெரு வெடிப்பு வினோதம்' (BIG BANG SINGULARITY) ஆகும்.

-'எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்'(A BRIEF HISTORY OF TIME) பக்கம் 9

-அறிவியல் அறிஞர் ஹாக்கிங்.

இந்த இடத்தில் அறிவியல் அறிஞர் ஹாக்கிங் அவர்களின் கூற்றை சற்று சிந்தித்துப் பார்ப்போம். இந்த உலகின் காலம் தொடங்குவதே பெரு வெடிப்பில் இருந்துதான். பெரு வெடிப்பு என்று நிகழ்ந்ததோ அன்றிலிருந்துதான் காலம் தொடங்குகிறது. இதன் பொருள் பெரு வெடிப்புக்கு முன் காலம் இல்லை என்பது தெளிவாகிறது. பெரு வெடிப்புக்கு முன் அதை துல்லியமாக நிகழ்த்திக்காட்டியது யார்? என்ற கேள்வி இங்கு இயல்பாக நமக்குள் எழும்.

முன்பு 'பேரண்டம் என்றும் நிலையானது: மாற்றமில்லாதது: ஆதியோ அந்தமோ இல்லாதது: அது என்றென்றும் நிலைத்திருப்பது: அதற்கு ஒரு படைப்பாளன் தேவையில்லை:' என்றுதான் பல அறிஞர்களும் சொல்லி வந்தனர். 'மாறா நிலைக் கோட்பாடு' என்பதோடு இந்த கருத்து ஏறத்தாழ ஒத்து வரும். நாத்திகத்திற்கும் இந்த கருத்து வலு சேர்க்கும் விதமாக இருந்ததால் பலரும் இதைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அறிஞர் அரிஸ்டாட்டிலும் இந்தக் கருத்தை ஆதரித்தார்.

ஆனால் அறிஞர் ஐசக் நியூட்டன்(1672-1727) பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இந்த பேரண்டம் இறைவன் என்ற ஒருவனின் துணையில்லாமல் உண்டாயிருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார். 'பிரின்ஸிப்பியர்' (Matthematical Principles Of Natural Philosophy) என்ற புகழ் பெற்ற நூலில் நியூட்டன் இந்த தகவலைத் தெரிவிக்கிறார். ஆனால் இந்த பேரண்டம் எவ்வாறு உருவானது? எந்த காலத்தில் உருவாக்கப்பட்டது என்ற கேள்விகளுக்கு அவரால் விடை காண முடியவில்லை.



இப்பேரண்டத்தின் வரலாற்றில் 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களுக்கு இடையில் குறிப்பிடும்படியான நிகழ்ச்சிகளைக் கொண்ட ஒரு கால கட்டம் இருந்துள்ளதாக அறிவியலாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு முன் அங்கு ஒரே ஒரு அணு 'ஒரு முழு முதல் அணு' இருந்ததாகவும் ஏதோ ஒரு காரணத்தால் வினாடியின் பல்லாயிரக்கணக்கான பகுதியில் ஒரு துளி நேரத்தில் அந்த அணு வெடித்துச் சிதறியதாகவும் கூறுகிறார்கள். அம்மாபெரும் வெடிப்பின்போது அந்த அணுவிலிருந்து கணக்கிட முடியாத பிரம்மாண்டமான ஆற்றல் வெளி வந்தது. பிறகு மெதுவாகப் படிப்படியாக அந்த ஆற்றலில் இருந்து விண்ணகப் பொருட்கள் யாவும் உருவாகின என லிமாயிட்டர் கருதுகிறார்.



பெரு வெடிப்பு நிகழ்ந்த நூறு வினாடிகளுக்குப் பிறகு டியூட்ரியம் எனும கன ஹைட்ரஜன் வாயுவின் மையக் கரு உருவாகி இருக்க வேண்டும் என்றும் அவை இணைந்து ஹீலியம் அணுவின் மையக் கரு உருவாகி இருக்கலாம். அவைகளிலிருந்து 'லிதியம்' மற்றும் 'பெரில்லியம்' போன்றவற்றின் தனிமங்கள் உருவாகி இருக்க வேண்டும். என்று அறிஞர் ஹாக்கிங் மேற்கண்ட புத்தகம் பக்கம் 124ல் கூறுகிறார்.

மேற்கண்ட தகவல்கள் பேரண்டம் அதன் துவக்க கட்டத்தில் விண்ணகப் பொருட்களாகிய காலக்சிகள், நடசத்திரங்கள், கிரகங்கள், வால் நட்சத்திரங்கள், விண் கற்கள் போன்ற எந்த பொருட்களுமே இல்லாத ஒரு சூன்ய நிலையிலேயே இருந்துள்ளதாக நாம் அறிகிறோம். பெரு வெடிப்புக்கு முன் மேற் கூறிய பொருட்கள் யாவும் முன்னரே தயாராக இருந்திருக்கவில்லை என்பதையும் இங்கு நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இன்னொரு கேள்வியும் எழுகிறது. பெரு வெடிப்புக்கு முன் சூன்யமான அண்ட வெளியில் ஒன்றுமே இல்லை எனில் வெடித்த பொருள் எது என்பதாகும். இதற்கு ஹாக்கிங் 'பெரு வெடிப்பு நிகழ்ந்த போது இப்பேரண்டத்தின் பரிணாமம் பூஜ்யமாகும். அதன் வெப்பம் எல்லையற்றதுமாகும்' என்கிறார்.

-A Brief History of Time பக்கம் 123


பூஜ்யத்திலிருந்து அதாவது சூன்யத்திலிருந்து இம்மாபெரும் பேரண்டத்தை படைத்தது உருவாக்கியது யார்?

'விண்ணகத்தை நாம் வல்லமையைக் கொண்டு படைத்தோம்'
-குர்ஆன் 51:47

ஆம் இன்றைய அறிவியல் பெரு வெடிப்புக்கு முன்னால் திடீரென்று புறப்பட்ட ஒரு ஆற்றலின் மூலமே பெரு வெடிப்பு சாத்தியமானது என்பதை குர்ஆனும் மெய்ப்பிப்பதைப் பார்க்கிறோம். எவ்வளவு பெரிய உண்மையை வெகு சாதாரணமாக குர்ஆன் சொல்லிச் செல்வதை எண்ணி வியக்கிறோம். ஆற்றலின் வரைவிலக்கணம் கூட தெரியாத அன்றைய அரபுலகில் பிறந்த முகமது நபிக்கு இந்த உண்மைகள் எவ்வாறு தெரிய வந்தது?

-----------------------------------------------------------


குர்ஆனின் இந்த அருமையான வசனங்கள் இவ்வளவு அழகிய அறிவியல் விளக்கங்களை கொடுத்துக் கொண்டிருக்க நமது சூஃபி பிரியர்களில் சிலர் இதனை கவிதையாக வடிக்க அதை நம் ஏ.ஆர்.ரஹ்மானும் அருமையான பாடலாக கொடுத்துள்ளார். இசையும் பாடலும் சேரும்பொது அங்கு சிந்தனை அகன்று விடுவதைப் பார்க்கிறோம். 'குன்பயகூன்' என்ற வார்த்தையை இறைவன் ஏன் பயன்படுத்தினான்? அதன் அறிவியல் உண்மை என்ன என்பதெல்லாம் ரஹ்மானின் இசையோடு கூடிய பாடலில் நமமால் உணர முடியாது. ரஹ்மானின் இசையும் அப்பாடலின் ராகமும் தான் நம் மனதில் நிற்கும்.

//ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //

இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.

குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.



'உங்களின் இடத்திலே வந்து எனது தலையை வைக்கிறேன்' என்று மற்றொரு பாடலில் ரஹ்மான் பாடுகிறார். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் நமது தலையை கீழே வைக்கலாகாது என்பதை என்று ரஹ்மான் உணருவாரோ தெரியவில்லை.




============================================================


பதிவர் மலர் மன்னனைப் பற்றி பலரும் அறிந்திருப்போம். தமிழ் ஹிந்து மற்றும் திண்ணை வாசகர்களுக்கு அவர் நல்ல பரிச்சயம். இந்துத்வாவை தனது நரம்புகளிலெல்லாம் ஓட விட்டுக் கொண்டிருப்பவர். வர்ணாசிரமக் கொள்கையை இன்றும் ஆதரிப்பவர். இப்படிப்பட்டவர் முன்பு திண்ணையில் எழுதிய ஒரு வரியைப் படிப்போம்.

//‘கிருத்துவத்திலும் இசுலாத்திலும் ஆன்மிகம் என்பதே கிடையாது. அதாவது அம்மதங்கள் வெறும் வெத்துவேட்டுகள் என்றும் அம்மதங்களில் சேர்ந்தோர் நல்லவராகமாட்டார்கள்//

இது போன்ற ரீதியில்தான் அவரது பல கருத்துகளும் பின்னூட்டங்களும் இருக்கும். தற்போது இஸ்லாமியரிடத்தில் தவ்ஹீது பிரசாரம் அதிகமானதால் தர்ஹா வணக்கம் குறைய ஆரம்பித்துள்ளது. மூடப்பழக்க வழக்கங்கள் எல்லாம் ஒழிய ஆரம்பித்துள்ளன. இந்து மதத்துக்கு பெருத்த அச்சுறத்தலாக உள்ள ஒரே மார்க்கம் இஸ்லாம். மற்ற அனைத்தையும் இந்துத்வாக்குள் அடக்கி விட்டனர். மற்ற மதங்களைப்போல் இஸ்லாத்தையும் பத்தோடு பதினொன்றாக ஆக்க தர்ஹா வணக்கத்தை ஊக்கப்படுத்த தற்போது இந்துத்வா அதிக ஆர்வம் காட்டுகிறது. அதன் ஒரு வெளிப்பாடாக சமீபத்தில் மலர் மன்னன் வெளியிட்ட ஒரு பதிவின் ஒரு பக்கத்தைப் பார்ப்போம்.

//முகமதியம் ஸூஃபிகளை அங்கீகரிப்பதில்லை என்பதோடு அவர்களைச் சித்ரவதை செய்து கொல்லவும் செய்யும். எனது அனல் ஹக் கட்டுரையில் இதுபற்றி விரிவாகவே எழுதுகிறேன். ஸூஃபிகளைப் போற்றி வணங்கியது ஹிந்து சமூகம். ஹிந்துஸ்தானத்திற்கு வந்த பாதிப்பாலேயே முகமதியத்தைப் பரப்ப வந்த கரீப் நவாஸ் என்று பின்னர் அழைக்கப்பட்ட குவாஜா மொய்னுதீன் சிஸ்தி கூட ஒரு ஸூஃபி ஆகிவிட்டார். ஹிந்துக்கள் அவரைத் தம்மவராக வரித்துக் கொண்டனர். ராஜஸ்தான் அஜ்மீரில் உள்ள அவரது அடக்கத்தலம் சென்று வணங்கியுள்ளேன். ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துப் பாடிய ஜாவேத் அக்தர் எழுதிய க்வாஜா மேரே க்வாஜா என்ற பாடலை நான் கேட்டு உருகாத நாளே இல்லை.

ஸூஃபிகளை வணங்குதல் நமது சம்பிரதாயம். அவர்களை இழித்துப் பேசுவதும் கொடுமைப்படுத்துவதும் அடிப்படை வாத வஹாபிய முகமதியர் வழக்கம். ஸூஃபிகளும் சித்தர்களே. ஆனால் முகமதிய சட்டதிட்டங்கள் உள்ள இடங்களில் ஸூஃபிகளுக்கு இடமோ மரியாதையோ இல்லை.//

இந்துத்வாவாதி மலர் மன்னன் தர்ஹாவுக்காகவும் சூஃபி களுக்காகவும் எந்த அளவு வக்காலத்து வாங்குகிறார் பாருங்கள். அதாவது தர்ஹா வணக்கத்தை பிரபல்யப்படுத்தி குர்ஆனின் சட்டங்களை புறந்தள்ள வேண்டும் என்பதே இவர்களின் தற்போதய முக்கிய பணி. ஏனெனில் அந்த அளவு இஸ்லாமியரிடத்தில் தற்காலங்களில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது இந்துத்வாவாதிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. வர்ணாசிரமக் கொள்கை நொறுங்கி விழுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதைத் தடுத்து நிறுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து வருகின்றனர். ஆனால் முடிவில் அவர்கள் அடையப் போவது தோல்வியே!

Sunday, March 18, 2012

ஆஸ்கார் ரஹ்மானுக்கு கொடுத்தது தவறு- இஸ்மாயில் தர்பார்.

ஆஸ்கார் ரஹ்மானுக்கு கொடுத்தது தவறு- இஸ்மாயில் தர்பார்.

கேள்வி: ஏ.ஆர்.ரஹ்மான் வேறொருவர் பாடலை திருடி ஆஸ்கார் விருது பெற்று விட்டார்? ஆஸ்கார் விருது பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்று சொன்னீர்களாமே?





இஸ்மாயில் தர்பார்: நான் இரண்டு வருடம் முன்பு நாக்பூர் சொந்த வேலையாக போனபோது ஒரு நிருபர் ஆஸ்கார் அவார்டைப் பற்றி கேட்க 'உரியவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு தொகைக்கு வாங்கப்பட்டது' என்றேன். இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறேன்.






கேள்வி: எப்படி விலை கொடுத்து வாஙகப்பட்டது என்று சொல்வீர்கள்? படமும் சிறப்பாக இருந்தது, பாடலும் சிறப்பாக இருந்தது.

இஸ்மாயில் தர்பார்: பாடல் சிறப்பாக இருந்ததா? அது அவருடைய பாடலா? அவர் சொந்தமாக டியூன் போட்டு எழுதியதா? அப்படி அது அவர் போட்ட மெட்டு என்று நிரூபித்து விட்டால் காலம் பூராவும் அவருக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன். ஆஸகார் விருது கொடுக்கும் அளவுக்கு அந்த பாடலில் என்ன இருக்கிறது?

கேள்வி: அது விருது கொடுப்பவர்களின் பொருப்பு அல்லவா? ஆஸ்கார் கமிட்டியிடம் தங்கள் கருத்தை வாபஸ் வாங்குவதாக சொன்னீர்களாமே!

இஸ்மாயில் தர்பார்: ஆம். ஆஸ்கார் கமிட்டியினர் என்னை தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாதல்லவா? எனவே அவர்களுக்கு எனது நிலையை விளக்கினேன். வரும் காலத்தில் நானும் கூட எனது படத்தை ஆஸ்காருக்கு அனுப்பலாம். எனவே அவர்களிடம் முறுகல் நிலையை விரும்பவில்லை. ஆனால் ரஹ்மான் விஷயத்தில் எனது கருத்து அப்படியேதான் இருக்கிறது.

கேள்வி: அவர்மேல் உள்ள பொறாமையில்தான் இவ்வாறு அபாண்டமாக குற்றம் சாட்டுகிறிர்கள் என்ற கருத்து வைக்கப்படுகிறதே?

இஸ்மாயில் தர்பார்: எனக்கு எந்த பொறாமையும் இல்லை. நான் உழைக்கிறேன். என் குடும்பமும் நானும் சாப்பிடுகிறோம். நான் சப்பாத்தி சப்ஜி சாப்பிடுகிறேன். அவர் இட்லி சாம்பார் சாப்பிடுகிறார்.(வட நாட்டுக்காரன் தனது புத்தியை காட்டியதற்கு எனது கண்டனங்கள். இட்லி சாம்பாரின் அருமை இவருக்கு எங்கு தெரியப் போகிறது? ) இவை அனைத்தையும் எனக்கு தருவது இறைவனே! நான் யாருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரிடம் உள்ள திறமையை மக்கள் முன் வைக்காமல் விருதுகளை வாங்க என்ன செய்ய வேண்டும்? யாரை பிடிக்க வேண்டும் எனபதை எல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டு பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார். அதிலும் சொந்த பாடலாக இருந்தாலும் பரவாயில்லை. வேறொருவரின் பாடலுக்கு இவர் எப்படி விருது வாங்கிக் கொள்ளலாம். இதுதான் எனது கேள்வி. அவருக்கு கூஜா தூக்குபவர்கள் அவரை கீழே தள்ளப் பார்க்கிறார்கள். நான் அவரது தவறை சுட்டிக் காட்டி சரியான வழிக்கு அழைத்து வர முயற்ச்சிக்கிறேன்.

கேள்வி: விருது விவகாரத்தில் முன்பும் ஒருமுறை விமரிசிக்கப்பட்டீர்கள்தானே?

இஸ்மாயில் தர்பார்: ஆம். முன்பு தேவதாஸ் படமும் சாதியா(அலைபாயுதே) படமும் நேசனல் அவார்டுக்காக போட்டியில் இருந்தபோது விருதை சாத்தியாவுக்கு கொடுத்தார்கள். இரண்டரை வருடம் கஷ்டப்பட்டு அந்த படத்துக்கு இசை அமைத்ததன் வலி எனக்குதான் தெரியும். இதனால் 10 படங்கள் என் கையை விட்டு போனது. அதுவும் சாதியா ஒரு டப்பிங் படம். இந்த படத்துக்கு நேஷனல் அவார்ட் கொடுத்து எனது படத்தை ஒதுக்கியது என்ன வகை நியாயம்?

கேள்வி: உங்களுக்கு நேஷனல் அவார்ட் கிடைக்கவில்லை என்ற பொறாமையால்தான் ரஹ்மான் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் என்கிறார்களே?

இஸ்மாயில் தர்பார்: இதற்கு முன்பே பதில் சொல்லி விட்டேன். ரஹ்மான் என்னிடம் நேரிடையாக வந்து 'யாருடைய பாடலையும் திருடவில்லை. எனது சொந்த மெட்டு' என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.... ஒரு இசை அமைப்பாளனான எனக்கு நன்கு தெரியும் அந்த பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று.

(இரண்டு காணாளிகளின் சுருக்கம் இது. ஹிந்தி தெரியாதவர்களுக்காக மொழி மாற்றம் செய்தேன்,)


இஸ்மாயில் தர்பார் குறைபட்டுக் கொண்ட தேவதாஸ் பாடல்.
http://www.youtube.com/watch?v=UyERhf2GnWY&feature=related

ஒருவரின் பாடலை திருடுவது என்பது எல்லோரும் செய்து கொண்டிருப்பதே! முதலில் இந்த ராகங்களுக்கும் பாடல்களுக்கும் எவரும் உரிமை கொண்டாட முடியாது. ஏழு ஸ்வரங்களை வைத்து அவரவர் திறமையால் பாடலை உருவாக்குகிறார்கள். மக்களின் ரசனையை புரிந்து கொண்டு சில மாற்றங்களை செய்பவர் பிரபல்யம் ஆகிறார். சங்கர் கணேஷ் போன்றவர்கள் கூசசப்படாமல் மற்றவர்களின் பாடல்களை அதே வருடத்திலேயே சில உல்டா செய்து “பட்டு வண்ண ரோசாவாம்” (உச்சி வகுந்தெடுத்து) மாதிரி அமைத்து விடுவார்கள்.

'தங்கப்பதக்கத்தின் மேலே....” என்ற டிஎம்எஸ்ஸின் எம்ஜிஆர் பாடல் நமக்கு எல்லாம் தெரிந்த ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மானின் 'என்ன விலை அழகே...' பாடலை கேளுங்கள். அந்த பாடலுக்கும் இந்த பாடலுக்கும் உள்ள ஒற்றுமையை உணருவீர்கள். இதற்காக எம்எஸ்வி ரஹ்மானை கோபிக்க முடியுமா?

எனவே இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொறாமைபடுபவரின் முக பாவம் எவ்வாறு செல்லும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சி.:-) நமது பதிவுலகில் கூட ஒரு பதிவர் 'மகுடம் ஏறும் பதிவுகளெல்லாம் தரமானவை அல்ல' என்று குறை பட்டுக் கொண்டார். இவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமிழ்மண மகுடத்தை தூக்கி விடுங்கள் என்று சொல்லவதும், ரஹ்மானை பிடிக்காததால் ஆஸ்கார் விருதையே கொச்சைப் படுத்தும் இஸ்மாயில் தர்பாரும் கொஞசம் சிந்திக்க வேண்டும். ரஹ்மான் இவரை கண்டு கொள்வதே இல்லை. அவர் பாட்டுக்கு மேலும் மேலும் சிகரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். :-)


பால் மோர்லேயுடன் ஏஆர்ஆர்....


வைர முத்து ரஹ்மான் பற்றி ...


சங்கர் மகாதேவன் ரஹ்மானைப் பற்றி...

யுடியூபில் வந்த சில கமெண்டுகள்:

a R Rahman is such a good hearted fellow. He is a genius guy in music that everyone knows. You (ismail) don't know how to praise your own indian...Westners have been telling that Indian hate each other. Now, you proved once again..shame on you...bloody ismail...you r such a jealous fellow...if you want publicity try doing other ….
jsenthilsg

hehehhehh why would THE ARR react to stupid people like you... never seen such a looser .. first go and train yourself for todays world and todays music.... update your knowledge and take some medicines. Devdas music was just ok.... it was a sanjay lelal bansali film so u got noticed... dumbo.. sanjay lela bansali's music in gujarish has proved who is the master behind hum dil de chuke sanam and devdas... :D take your medicines and sit at your home .
giteshmediatec

டிஸ்கி: ரஹ்மான் சார்! இளம் வயதிலேயே நான்கு தலைமுறைக்கு சொத்து சேர்த்தாகி விட்டது. அது போதும். சினிமா துறைக்கு ஒரு தலைமுழுக்கைப் போட்டுவிட்டு இருக்கும் பணத்தை தொழிலில் முதலீடு செய்யுங்கள். ஒரு உம்ரா ஹஜ்ஜையும் முடித்துவிட்டு நற்பணி மன்றங்கள் அனாதை ஆசிரமங்களில் கவனத்தை செலுத்துங்கள். இஸ்மாயில் தர்பார் முதற்கொண்டு சினிமாத் துறையை தூரமாக்குங்கள். தர்ஹா வணக்கத்தையும் அது சரிதானா என்பதை குர்ஆனை திறந்து கொஞ்சம் பார்வையிடுங்கள். இவை எல்லாம் உங்களின் மறு உலக வாழ்க்கையை செம்மையாக்கும் வழிகள். சிந்திப்பீர்களாக!

Sunday, December 04, 2011

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு வேண்டுகோள்!



ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள்

நீங்களில்லாமல் மிகவும் வெறுமையாக உள்ளது; இங்கு வந்து இந்த வெறுமையை நிரப்புங்கள்.

என்னை வண்ணங்களால் நிரப்புபவரே (வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கும் அல்லாவே)

எதையும் படைக்கவேண்டும் என்று அல்லாஹ் நினைத்தால், 'உருவாகு' என்று அவர் ஆணையிட்டமாத்திரத்தில், அது உருவாகிறது ('உருவாகிவிட்டேன்' என்று பதிலும் அளிக்கிறது).

எங்குமே எதுவுமே இல்லாத அந்தத் தருணத்திலும், அவர் இருந்தார்; அவர் மட்டுமே எங்குமே இருக்கிறார்

என்னுள் எவர் இருக்கிறாரோ, அவரே உன்னுள்ளும் இருக்கிறார்

இறைவனே அத்தனை தொடக்கங்களுக்கும் ஒரே பிறப்பிடம்.

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

ஒவ்வொரு விடியலிலும் எதனை எனதுடல் அணிந்திருக்கிறதோ, அந்த வாழ்வின் பொறியான எனதுயிர், புகையிலிருந்து வெளிவரும் கரியைப் போல இருண்டதாயிருந்தாலும், உங்களிடமிருந்து பெருகும் புத்துயிரின் ஒரு துளிக்காகவே அது உயிர்வாழ்ந்திருக்கிறது எனது இறைவனே . . .

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்;

அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்;

என்னை என்னிடமிருந்தே காப்பாற்றி விடுதலையளித்தால், அது உங்களது பெருந்தன்மையன்றி வேறில்லை எனது இறைவனே;

என்னை இப்பொழுது நானே அறியவேண்டும்; தயைகூர்ந்து எனக்கு விடுதலையளியுங்கள்

எனது இருண்ட செயல்களோடும், வெறுமையான ஆன்மாவோடும் நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை

என்னுள் நீங்களே வாழ்கிறீர்கள்; என்னை எங்கே அழைத்துவந்திருக்கிறீர்கள்?
உங்களிலும் நானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; உங்களைத் தொடர்கிறேன்; நான் உங்களது வெறும் நிழல்தானே தவிர வேறில்லை;
நீங்களே என்னை உருவாக்கினீர்கள்; இந்த உலகில் வாழ நான் தகுதியற்றவனாக இருந்தும், என்னை அரவணைத்தீர்கள்; நீங்களே முறை தவறாதவர்; நடுநிலையாளர்; நீங்களே மெய்ப்பொருள்.

நீங்கள் உத்தரவிட்டதும், எதுவுமே உடனடியாக உருவாவதைப்போல், என் வாழ்வுக்கும் ஒரு குறிக்கோளையும், ஒரு இலக்கையும் உத்தரவிட்டு அருளுங்கள்.

-நன்றி: மொழியாக்கம் ராஜேஸ்



இந்த பாடலை கேட்டு விட்டு சகோதரர் ராஜேஸ் அவர்கள் பின்வருமாறு தனது பதிவில குறிப்பிடுகிறார்.
//நான் உணர்ச்சிவசமெல்லாம் படவில்லை. ஆழ்ந்து யோசித்துத்தான் சொல்கிறேன். ஏற்கெனவே, ரஹ்மானின் பிற சூஃபி பாடல்களைக் கேட்கும்போதே ('பியா ஹாஜி அலி', 'கரீப் நவாஸ்', 'அர்ஸியான்'), இஸ்லாத்தின் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தேன். இப்போது, வெகு சீக்கிரமாகவே இஸ்லாத்துக்கு மதம் மாறிவிடுவேனோ என்று தோன்றுகிறது. இந்த அளவு இறைவன் என்ற ஆளுமையிடம் தன்னை முழுமையாக ஒப்புவிக்கக்கூடிய அளவு அமைந்த உருக்கமான, கேட்டதும் ஒருவித அமைதியளிக்கக்கூடிய பாடல்களை, எனக்குத் தெரிந்து வேறெந்த மதத்திலும் கேட்டதில்லை.//- -ராஜேஸ்



“ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”


3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”

3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.

19:35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், “ஆகுக!” என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.


குர்ஆனில் வரக் கூடிய இந்த சொற்றொடரை தழுவி இந்த பாடல் அமைக்கப்பட்டடுள்ளது. இந்த பாடலை இறைவனை நோக்கி பாடுவதாக சொன்னாலும் ஓரளவு அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் படத்தில் இந்த பாடல் ஒரு தர்ஹாவுக்கு முன்னால் அமர்ந்து பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தில் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.

//ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள் //

இது போன்ற வார்த்தைகள் தர்ஹாவில் அடங்கியிருப்பவர் இன்றும் உயிரோடு இருக்கிறார்: நாம் கேட்கும் பல பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறார் என்று நம்பி கேட்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

தர்ஹாவில் அடங்கியிருப்பவரின் சுய ரூபம் உங்களுக்கோ எனக்கோ தெரியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம். நித்தியானந்தாவைப் போல் மக்களுக்காக வெளிவேஷம் போட்டவராகவும் இருக்கலாம் உண்மை நிலை இறைவனுக்கே தெரியும்.

இந்த பாடல் இறைவனைத்தான் குறிக்கிறது என்றால் அதை ஒரு தர்ஹாவில் அமர்ந்து பாட வேண்டியதில்லை. அடுத்து இறைவனை நெருங்குவதற்கு இது போன்ற பாடல்களை பாடச் சொல்லி முகமது நபி நமக்கு கற்றுத் தரவில்லை. முகமது நபியின் அடக்கத்தலத்தில் இது போன்ற பாடல்கள் பாடப்படுவதில்லை.

பிராரத்தனை வணக்கம் அனைத்துமே இறைவன் ஒருவனுக்குத்தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கை. இதற்கு மாற்றமாக நீங்கள் எந்த முறையைக் கொண்டு வந்தாலும் அது இறைவனால் நிராகரிக்கப்பட்டு அதற்கு தண்டனையும் கொடுக்கப்படுவதாக குர்ஆன கூறுகிறது.

எனவே சகோ ராஜேஸ் உணரச்சிவசப்பட்டு ரஹ்மானின் பாடலைக் கேட்டு இஸ்லாத்துக்கு வர வேண்டாம். பாடல் சலிப்பு தட்டி விட்டால் இஸ்லாமும உங்களுக்கு சலிப்பாக தோன்றும். எனவே குர்ஆனின் தமிழ் அல்லது ஆங்கில மொழி பெயர்ப்புகளை வரிக்கு வரி தொடர்ந்து படித்து வாருங்கள். இது இறைவனின் வேதம்தான் என்ற முடிவுக்கு வந்தவுடன் பிறகு இஸ்லாத்துக்கு வருவதைப் பற்றியதான முடிவை எடுங்கள்.

உஙகளுக்கு மனம் அமைதியுற குர்ஆனின் வாசிப்பை ராகத்தோடு இசைக் கருவி இல்லாமல் கேட்டு வாருங்கள். உங்களின் உள்ளம் உண்மையாகவே ஈர்க்கப்படுவதை உணருவீர்கள். கீழே உள்ள காணொளியை ஒரு முறை பாருங்கள்.










ரஹ்மானின ராக்ஸ்டார் படத்தில் உள்ள அனைத்து பாடல்களையும கேட்டவுடன் ஒருவரின் மன நிலை எப்படி இருந்தது என்பதை ஒரு அன்பர் பின்னூடடத்தில் கூறியிருக்கிறார். அதையும் பாருங்கள்.
//While listening to this song, I feel like a aghori smoking ganja
Awesome music by ARR//

அதாவது காசியில் அகோரிகள் எவ்வாறு கஞ்சா அடித்து ஒரு வித மயக்க நிலையில இருப்பார்களோ அந்த நிலையில் தானும் இருப்பதாக இவர் கூறுகிறார். இசையை ஒரு அளவுக்கு மீறி நெசிக்க ஆரம்பித்தால் இதுதான் நிலை.

முஸ்லிம்களில் கூட பக்கீர்கள் என்ற ஒரு கூடடம் உழைக்காது இது போன்ற பாடல்களை பாடி பிச்சை எடுத்துக் கொண்டு திரிவதை பரவலாக பார்க்கலாம். இதை முற்றிலுமாக இஸ்லாம் தடுக்கிறது. நபியாகவும் ஆட்சித் தலைவராகவும் இருந்த முகமது நபி தனது வருமானத்திற்கு ஒரு ஆட்டுப் பண்ணையை சொந்தமாக வைததிருந்தார். வியாபாரமும் செய்தார். இவர்களைப் போல் புரோகிதத்தை வளர்க்கவில்லை.

ஏ ஆர் ரஹ்மானுக்கு ஒரு வேண்டுகோள்!

ரஹ்மான் சார்! தர்ஹா வணக்கத்தில் மூழ்கியிருந்த மக்களை குர்ஆனின் பக்கம் இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வருகிறோம். இசையை சினிமாவோடு நிறுத்திக் கொள்ளுங்கள. நீங்கள் நன்மை என்று நினைத்து ஒழிந்து போன சூஃபி பாடல்களையும் தர்ஹா வணக்கங்களையும் மறு பிரவேசம் பண்ண வைத்து விடாதீர்கள். நீங்கள் ஹஜ்ஜூக்கு பலமுறை வந்திருக்கிறீர்கள். இங்கு ஒரு தர்ஹாவையாவது பார்த்ததுண்டா? முகமது நபி அடக்கததலத்தில் ஏதேனும் வணக்கங்கள் நடைபெறுவதை பார்த்திருக்கிறீர்களா? இல்லையே! எனவே குர்ஆனை மேலும் ஆழ்ந்து படியுங்கள. உண்மையான இஸ்லாத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். அதுதான் உங்களின் இரு உலக வாழ்க்கையையும் செம்மைப்படுத்தும்.

'தனக்கு இணை கற்ப்பிக்கப்படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான.'
-குர்ஆன் 4:48

டிஸ்கி: முஹர்ரம் 9,10 நோன்பு வைப்பது முகமது நபி வலியுறுத்திய ஒரு வணக்கம். எனவே வசதியிருப்பவர்கள் நோன்பை வைக்கவும். மறந்து விடாமல் இருக்கவே இப்படி ஒரு ஞாபகமூடடல்