குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர், 23 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுதலை!
நாங்கள் விடுதலையாகிவிட்டோம் ஆனால் நாங்கள் இழந்த 23 வருடங்களை யார் தருவார்? 1996 குண்டுவெடிப்பு வழக்கில் விடுதலையான 5 பேர் குமுறல்!
கடந்த 1996ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஆக்ராவில் இருந்து பிகனேர் நோக்கி ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில், சம்லெட்டி கிராமம் அருகே குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர் 37 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பனது டெல்லி லாஜ்பத் நகர் குண்டுவெடிப்புக்கு மறுநாள் நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு மற்றும் சவாய் மன் சிங் விளையாட்டு அரங்கில் 1996ல் நடைபெற்ற குண்டு வெடிப்பு உள்ளிட்ட சில குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீர் புரட்சி முன்னணி என்ற அமைப்பு பொறுப்பேற்றது. சம்லெட்டி குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் மீது குற்றம்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சதித்திட்டம் நடந்ததற்கான ஆதாரங்களை அரசுத்தரப்பு கொடுக்க தவறிவிட்டது. இந்த குண்டுவெடிப்பின் முக்கிய குற்றவாளியான டாக்டர் அப்துல் ஹமீதுக்கும் இவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிறுவ தவறிவிட்டது என்று கூறிய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 6 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டதையடுத்து நேற்று மாலை 5:30 மணிஅளவில் லத்திப் அகமது பாஜா(42), அலி பாத்(48), மிர்சா நிசார்(39), அப்துல் கோனி(57), ரயீஸ் பெக்(56) ஆகிய ஐந்துபேரும் ஜெய்ப்பூர் மத்தியசிறையில் இருந்து வெளியேறினர். இந்த ஆறு பேரும் 1997 ஜூன் 8ம் தேதி முதல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
சிறையில் இருந்து வெளியேறிய அவர்கள் 5 பேர், குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை தங்கள் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டும்வரை ஒருவரை ஒருவர் தங்களுக்கு யார் என்றே தெரியாது என்று தெரிவித்தனர். இந்த வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள ரயீஸ் பெக் ஆக்ராவையு, கோனி ஜம்மு காஷ்மீரையும், மற்றவர்கள் ஸ்ரீநகரையும் சேர்ந்தவர்கள். இந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன் பாத் பாய் வியாபாரம் செய்துவந்தார். கோனி பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். பாஜா காஷ்மீரி கைவினை பொருட்களை டெல்லி மற்றும் காத்மாண்டு ஆகிய இடங்களில் விற்பனை செய்துவந்தார். நிசார் 11ம் வகுப்பு பள்ளி மாணவன். இந்த நிலையில் தான் 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
“நாங்கள் எந்த உலகத்திற்குள் அடியெடுத்துவைக்கிறோம் என்றே தெரியவில்லை; நாங்கள் எங்களது உறவினர்களை இழந்துவிட்டோம்; எனது தந்தை மற்றும் தாய், மாமா ஆகியோர் இறந்துவிட்டனர். நாங்கள் சிறையிலிருந்து குற்றமற்றவர்கள் என்று விடுதலையாகிவிட்டோம். ஆனால் சிறையில் இருந்த 23 ஆண்டுகளை எங்களுக்கு யார் திரும்ப தருவார்” என்று ரயீஸ் பெக் கேள்வியெழுப்பியுள்ளார்.
“இந்த வழக்கில் என்னை கைது செய்யும்போது எனக்கு 16 வயது தான்; ஆனால் எனக்கு 19 வயது என்று கூறி என் மீது குற்றம்சுமத்தி சிறையில் அடைத்தனர். தற்போது எனக்கு 39 வயது ஆகிறது. ஆனால் சிறையில் இருந்த காலத்தில் நம்பிக்கையை ஒருபோதும் இழக்கவில்லை. இனிமேல் தான் புதிய வாழ்க்கையை தொடங்கவேண்டும்” என்று சலீம் தெரிவித்தார்.
சம்லெடி நகர் குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 12 பேரில் 2014ல் ஒருவரும், நேற்று 6 பேர் என இதுவரை 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் திகார் சிறையில் உள்ள ஜவீத் கான் மீது லஜ்பத் நகர் குண்டுவெடிப்பு வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதால் அவர் வெளியேறவில்லை. 1997ல் கைது செய்யப்பட்டாலும் இந்த வழக்கின் மீதான விசாரணை 2011ம் ஆண்டில்தான் தொடங்கியது. 23 ஆண்டு வாழ்க்கையை இழந்துவிட்டார்கள் என்று வேதனை தெரிவிக்கின்றனர் இவர்களது உறவினர்கள்.
தகவல் உதவி
நியூஸ் 7
24-07-2019
நியூஸ் 7
24-07-2019
No comments:
Post a Comment