'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Saturday, July 19, 2014
ஒரு இந்துவா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிறேன் - அரவிந்தன் நீலகண்டன்
வினவு அண்ணனுக்கு
வணக்கம்,
என்னோட பெயர் மனோஜ் குமார், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பக்கத்துல ஒரு கிராமத்த சேந்தவன். மெக்கானிக்கல் டிப்ளமா முடிச்சிட்டு இப்ப சென்னையில தங்கி வேலை தேடறேன்.
இந்த லெட்டரை ஏன் எழுதறேன்னு எனக்கே தெரியல, உங்கள்ட்ட சொல்லனும்னு தோணிச்சி. எழுதுறேன்.
வருசநாடு, கொடியங்குளம், தருமபுரி .. மாதிரி எங்க ஊர்ல பெரிய கலவரங்கள் நடக்கலேன்னாலும், எங்க ஊருல ஜாதி பாகுபாடு உண்டு. எங்க ஊருனு இல்ல, எங்க மாவட்டமுமே அப்படிதான். தூத்துக்குடியில் நான் பாலிடெக்னிக் படிக்கும் போது அங்க இருந்த மாணவர்கள் எல்லாருமே ஜாதி செட்டா குரூப் குரூப்பாத் தான் இருப்போம். சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள் இருக்கது மாதிரி ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார், பசுபதி பாண்டியன் இவங்களுக்கும் ரசிகர்கள் இருக்காங்க. “நாடு பாதி நாடார் பாதி”, “எக்குலமும் வாழனும் முக்குலம் தான் ஆளனும்”னு மாணவர்கள் நிறைய பஞ்ச் டயலாக்கு வெச்சுருக்காங்க. பள்ளிக்கூட சுவர்லயும் பாக்கலாம்.
நான் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேந்தவன். என் தாத்தாவோட பழைய காலம் மாறி இல்லைன்னாலும் நானும் ஜாதி பாகுபாட்டை அனுபவிச்சிருக்கிறேன். பள்ளி, ஊரு, கோவிலு எல்லா இடத்திலும் ஜாதி பாகுபாடு இருக்கிறது. முன்னெல்லாம் எங்க ஊரு பெரிய வீட்டுக்காரங்க எல்லாரையும் அடிப்பாங்களாம். அதை வாங்கிகிட்டு பேசாம அவங்க கிட்ட வேலை பாக்கனுமாம். கோவில் சப்பரம் வரும் தெருவில் செருப்பு போட்டு நடக்க கூடாதாம். இப்பல்லாம் அப்படியில்ல. இருந்தாலும் முழுசா போகலை.
என் வகுப்பு மாணவர்கள் என் கண்ணு முன்னாடியே பறப்பய, சேரி, சக்கிலின்னு அவங்களுக்குள்ள திட்டுறதுக்கு சகசமா பயன்படுத்துவாங்க.
ஜாதின்னு ஒண்ணு இல்லாம இருந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்னு பல தடவை கற்பனை செஞ்சு பார்த்திருக்கிறேன். கடவுள் ஏன் இப்படி படைச்சாருன்னு தெரியவில்லை. ஜாதியினால் எவ்வளவு பிரச்சனை. தர்மபுரியில் எங்க சமுதாயத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக எத்தனை பேரு வீடுகள கொளுத்துனாங்க. தினமும் எங்கையாவது ஒரு மூலையில் யாராவது ஒரு தாழ்த்தப்பட்டவர் ஜாதி கொடுமையால பாதிக்கப்பட்டுகொண்டு தான் இருக்கிறார்கள்.
தர்மபுரி பிரச்சனை நடந்த போது எனக்கு பல நாள் தூக்கமே வரவில்லை. நாம் அங்கு போய் நம்ம மக்களுக்கு எதாவது உதவலாம்னு நினைச்சாலும் எப்படி போவது எங்கு தங்குவது ஒன்றும் தெரியாத்தால் எதையும் செய்ய முடியவில்லை. எங்கள் ஊர் வி சி கட்சிகார்களிடம் கேட்டுபார்த்தேன். தலைவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கூறினார்கள்.
தர்மபுரியில் கலப்பு திருமணம் செஞ்சுவச்சதப் பத்தின உங்க கட்டுரைய பாத்தேன். ரொம்ப சந்தோசமாக இருந்தது. நீங்க செய்தது மிகப்பெரிய பணி. எந்த ஊருல கலப்பு திருமணம் செய்ஞ்சால் கொலை செய்வேன்னு சொன்னார்களோ அந்த ஊரிலேயே கலப்பு திருமணம் செய்துவைத்திருக்கிறீர்கள். மனம் நிறைந்து உங்களை வாழ்த்துகிறேன்.
இதே சமயத்தில் உங்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். நீங்க இந்து மதத்தை எதிர்த்து எழுதும் போது பலமுறை திட்டியிருக்கிறேன். சில கமெண்டுகளும் கோபத்துல போட்டுள்ளேன். நான் படிச்சது இந்து பள்ளிகூடம். எனக்கு சாமி நம்பிக்கையும், தேசபக்தியும் அதிகம். அந்த பள்ளிகூடத்துல ஜாதி வித்தியாசம் இல்லாம எல்லாரும் பாரதமாதா புதல்வர்கள்ன்னு சொல்லுவாங்க அது எனக்கு பிடிக்கும். அதனால, ஆர்.எஸ்.எஸ் மாதிரியான இந்து இயக்கங்கள் தான் நம் நாட்டிற்கு தேவைன்னு நினைச்சேன். சென்னை வந்ததுக்கு பின்னாடிதான் உங்க தளத்தை படிக்க ஆரம்பிச்சேன். உங்க கட்டுரைங்கள்ள இந்து மதத்த திட்டுற கட்டுரைகள் எனக்கு பிடிக்காது. சாதிப் பிரச்சினை சம்பந்தமா எங்க மக்கள ஆதரிச்சு நீங்க எழுதுறது எனக்கு பிடிக்கும்.
இப்போது வேலை தேடி சென்னை வந்து, எங்க ஊரு நண்பர்கள் கூட தங்கி இருக்கேன். சென்னை வந்த பிறகுதான் பல விசயங்கள் தெரிய வருது. ஊர் அண்ணன்கள் சிலர் அவங்க வீட்டுக்கு கூட தெரியாம புத்த மதத்துக்கு மாறியிருக்காங்க. அவங்க நிறைய சொல்லுவாங்க. அம்பேத்கர் இந்து மதம் மோசம்னு சொன்னதா சொல்லுவாங்க. அவங்க தான் உங்க வெப்சைட்டை குடுத்து படிக்க சொன்னாங்க.
நான் அவுங்க கிட்ட விவேகானந்தர் சாதி இல்லைனு சொல்லியிருக்கார் என்று பேசுவேன். இந்திய வல்லரசா வரணுமுனா மோடி தான் பிரதமரா வரணும்னு வாதாடுவேன்.
இருந்தாலும், அவங்க கேக்குற கேள்விங்களுக்கும் உங்க சைட்ல நீங்க எழுதற வாதங்களுக்கும் என்னால பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் நமக்குத்தான் விசயம் தெரியலியே தவிர, நிச்சயமா இதுக்கெல்லாம் சரியான பதில் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.
போன வாரம் திருவான்மியூரில இந்து ஆன்மீக சேவை கண்காட்சி ஒன்று நடந்தது. உங்களுக்கு பதிலடி கொடுக்க ஏதும் புக் கிடைக்குமான்னுதான் கண்காட்சியை பார்க்கவே நான் போனேன். அங்க நீங்களும், ரூம் நண்பர்களும் சொல்றதுதான் உண்மைங்கிறத நேரிலேயே பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்.
கண்காட்சிக்கு உள்ளே போனால் 2வது ஸ்டாலே வீர வன்னியர் ஸ்டால் என்று போட்டிருந்தார்கள். வன்னியர் தான் அரச பரம்பரை ன்னு சொல்லி அது சம்பந்தமான் புத்தகங்கள், வீடியொ எல்லாம் வைத்திருந்தார்கள். நாங்கள் தான் அரச பரம்பரை என்று அவங்க சொல்லும் போதே மத்தவங்க எல்லாம் அவங்களுக்கு அடிமையாக இருந்தாங்கன்னு தானே சொல்ல வாராங்க. அதை பாத்ததும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. நாம எல்லாரும் இந்துக்கள் என்று உண்மையில் நினைத்திருந்தால் இப்படி ஒரு ஸ்டாலை போட்டிருப்பார்களா? தர்மபுரியில் இப்படி ஒரு மோசமான சம்பவம் நடந்து முடிந்து ஜாதி வெறி பரவிவரும் நிலையில் இந்து இயக்கம் நடத்தும் ஒரு கண்காட்சியில் சாதிவெறியை எப்படி அனுமதிச்சாங்கன்னு கோவம் வந்துச்சு.
கொஞ்சம் தள்ளி போனால் அகமுடையார் ஸ்டால், விஸ்வகர்மா ஸ்டாலுனு ஜாதிக்கு ஒரு ஸ்டால் வைத்திருந்தார்கள். ஜாதியும் இந்து மதமும் வேறு வேறு கிடையாது. ஜாதிதான் இந்துமதம் என்று ரூம் நண்பர் அடிக்கடி சொல்வார். அப்படி கிடையாது, இந்து மதத்தில் ஜாதி இல்லை. இடையில் வந்தவர்கள் தான் உருவாக்கி இருக்காங்க. இந்து இயக்கங்களும் ஜாதி இல்லைன்னுதான் பேசுறாங்கன்னு அவங்களோட சண்டைபோட்டிருக்கிறேன். இப்படி அது எல்லாம் பொய்யாகும்னு நான் நினைக்கவேயில்லை.
இந்து இயக்கங்கள் ஜாதியை ஆதரிக்கிறத நேரிலேயே பார்த்த பிறகு நான் இந்து இயக்ககங்களுக்கு ஆதரவா இருந்ததை நெனச்சி அவமானமா இருந்தது.
கண்காட்சி ஸ்டால்களை சில பெண்கள் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தங்க. அவங்ககிட்ட பேசிப் பார்த்தேன். அவங்களும் எல்லாரும் தாழ்த்தப்பட்ட சாதிதான்னு தெரிஞ்சது. கண்காட்சியின் மற்ற வேலைகளை இந்து இயக்க தொண்டர்கள் செய்து கொண்டிருந்தாங்க. ஆனால் சுத்தம் செய்யும் வேலைக்கு மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்துறாங்கன்னு பாத்தபோது ஆத்திரமா வந்தது.
நான் உங்களையும், ரூம் நண்பர்களையும் மூக்குடைக்க வேண்டும் என்றுதான் கண்காட்சிக்கு போனேன். ஆனால் நானே மூக்குடைபட்டு போனேன்.
அப்போ எந்த ஜாதியின் பேரும் இல்லாமல் அம்பேத்கர் படம் வைத்திருந்த ஒரு ஸ்டாலைப் பார்த்தேன். மனதுக்கு ஆறுதலா இருந்தது. நான் மூக்குடைபட்டதை யாரிடமும் கூறக்கூடாது என்று தான் கோவமாக நினைத்தேன். ஆனால் அங்கிருந்த அம்பேத்கர் படங்களும், ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் என்பவர் பழகிய விதம் காரணமாக, என்னையறியாமல் அவரிடம் என் ஆதங்கத்தை கொட்டி பேசினேன். நாமெல்லாம் இந்துக்களாக, இந்தியர்களாக இருக்கும் போது சாதி பெருமை பேசுபவர்களை அழைத்து ஸ்டால் போட்டிருக்காங்க, சுத்தம் செய்யும் பணிக்கு இந்து இயக்க வாலண்டியர்கள் இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் தான் எனக்கு இன்னும் அதிர்ச்சியளித்தது. அவருடைய நிலைமை என்னைவிட பரிதாபமாக இருக்குன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
அவர் அம்பேத்கர் படத்தை ஸ்டாலில் போடுவதாக சொன்னாராம். கண்காட்சி நடத்துறவங்க வேணுமினே ஒதுக்குபுறமா, ஒரு மறைவான இடத்தை கொடுத்து இங்கு போடுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம். அவரது மற்றொரு ஸ்டாலுக்கு பான்பராக் பாக்கெட் சைசில் சின்ன இடம்தான் தருவோம்னு சொல்லி இடம் ஒதுக்கிட்டாங்கன்னார். சென்னையை சேர்ந்த பிராமணர்கள் தான் இந்தக் கண்காட்சிய நடத்துறாங்கன்னு அவர் சொன்னார். பாத்தீங்கன்னா அவரும் சாதாரண ஆளு கிடையாது, பல புத்தகங்களை எழுதுன எழுத்தாளர். (எனக்கும் சில புத்தகங்களை அன்பளிப்பா கொடுத்தார்). அவருக்கே இந்த நிலைன்னா வேற எதைப்பத்தி பேசி என்ன ஆகப் போகுது?
அந்த ஸ்டாலில் அம்பேத்கர் பொன்மொழிகளை எழுதி வைத்திருந்தார்கள். “ சம்ஸ்கிருதத்தை தேசிய மொழியாக்கணும். பாகிஸ்தான் முசூலீம்கள் கிட்ட இருந்து இந்துக்களை பாதுகாக்க மகர் ரெஜிமென்டை ஏற்படுத்தணும்” இது மாதிரி நான் இதுவரைக்கும் கேள்விப்படாத அம்பேத்கர் பொன்மொழிகளை காட்சிக்கு வைத்திருந்தார்கள். இதெல்லாம் சொன்னால் ரூம் நண்பர்கள் ஒத்துக்கமாட்டார்களேன்னு அவரிடம் “இது அம்பேத்கரின் எழுத்துக்களில் எந்த தொகுதியில் வருது” என்று கேட்டேன். அதுக்கு அவர் “இந்த பொன்மொழிகள் தொகுதியில் இல்லை, அம்பேத்கார் பத்தி வேறு எழுத்தாளர் எழுதினதில் இருந்து போட்டிருக்கோம்”னு சொன்னார். இந்த புக்கை வைத்துதான் அம்பேத்கர் தொகுதிகளை வெளியிட்டிருக்காங்கன்னும் சொன்னார். அதனால அம்பேத்கர் தொகுதியிலும் இது இருக்கும் ஆனா எந்த தொகுதினுதான் ஞாபகமில்லைன்னு சொன்னார். ஒரு சின்ன புக்குல இருந்து இவ்வளவு தொகுதிங்க எப்படி வந்திச்சின்னு எனக்கு ஆச்சரியம். அந்த சாரோ எந்த தொகுதின்னு இமெயிலில் அனுப்புறேன்னு சொன்னார். மெயில் வந்தவுடன் உங்களுக்கு வெவரத்தை அனுப்புகிறேன்.
அப்புறம் அவருகிட்ட ஜாதி சங்க ஸ்டால் பத்தி கேட்டேன். தப்புதான்னு வருத்தப்பட்டாரு. கையோட வெங்கடேசன்னு ஒரு ஆர்.எஸ்.எஸ் சாருகிட்ட அழைச்சுகிட்டுப் போனார். இவரு கேக்குற கேள்விங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்ன பதில் சொல்றீங்கன்னு அவர் கிட்டே கேட்டார். அவருகிட்டயும் “நாம இந்துவா இருக்கும்போது இப்பிடி ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புதானே, கூட்டி பெருக்கும் வேலைங்களுக்கு மட்டும் உங்ககிட்ட வாலன்டியருங்க இல்லையா”ன்னு கேட்டேன்.
அவரோ “நாங்கள் தேவேந்திர குல வேளாலர்களுக்கும் இடம் கொடுத்திருக்கிறோமேன்னு சொல்லி இன்னொரு குண்ட தூக்கி போட்டார். ஜாதி சங்கங்களை அனுமதிக்கிறது தப்புன்னு சொல்வாருன்னு பாத்தா, “வேணும்னா பறையன்னு சொல்லி நீயும் ஒரு ஸ்டால் போட்டுக்கோ” ன்னு சொல்றாமாரி இருந்தது அவருடைய பதில்.
இதை தவறுன்னு இவங்க கருதலயேன்னு வருத்தமாவும், கோபமாவும் இருந்தது. இவ்வளவு நாள் என்ன இந்துவா நினைச்சதுக்கு இது ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது. நீ இந்து இல்லை பறையன், அதை ஏத்துக் கொண்டு நீயும் ஸ்டால் போட்டுக் கொள்ளலாம்ங்கிற மாறி இருந்துச்சு அவரது பதில். கூனி குறுகி போனேன். அடுத்து என்ன பேசுவதுன்னு எனக்கு தெரியல. நாம் இத்தனை நாள் நண்பர்களாக நினைச்சவங்க நம்மை எட்டி உதைப்பது போல இருந்தது.
இல்லை சார், நாம இந்துக்களா இருக்கும் போது ஏன் ஜாதி பெயரை பயன்படுத்தனும்? நீங்க அம்பேத்கர் பெயரை போட்டு பறையருன்னு போட்டாலும் அது தப்புதானேன்னு வாதிட்டேன். இதுக்கு வெங்கடேசன் சாரு ஒன்னும் பதில் சொல்லல. நான் தெளிவா பேசுறதா அரவிந்தன் சார்தான் சொன்னார். கூட்டுறதுக்கு கான்ட்ராக்டு விட்டதால ஒன்னும் செய்ய முடியலேன்னு வெங்கடேசன் சாரு சொன்னாரு. எனக்கு அந்த பதிலிலும் திருப்தி இல்லை.
ரூம் நண்பர்களும் வினவும் சொல்றது மாதிரி இந்து மதமே இப்படித்தானா? இல்லை இந்து இயக்கங்கள் தான் இப்படியா? எனக்குள்ள பல கேள்விகள் தோணிச்சு.
அரவிந்தன் சாரை தவிர அங்கு எனக்கு ஆறுதலா யாரும் இல்லை. ரூம் நண்பர்கள் புத்த மதத்திற்கு மாறுமாறு கூறியது சரின்னுதான் பட்டது. முதல்ல அரவிந்தன் சாரை பாத்த போது அம்பேத்கர் மதம் மாறியது பத்தி கேட்டேன். அதுக்கு அவரு அம்பேத்கர் வேறு அந்நிய மதத்துக்கு மாறலை. புத்தமத மாற்றம் என்பது ஒரு ரூமிலிருது இன்னொரு ரூமுக்கு மாறுவது. ஆனா வீடு ஒன்னுதான். இப்படித்தான் அம்பேத்கர் கூட சொல்லியிருக்காருனு சொன்னார்.
அது இப்ப ஞாபகத்துக்கு வந்து அவருகிட்டயே கேட்டேன். “இப்ப நீங்க புத்த மதத்துக்கு மாறுவது சரியான தீர்வல்ல”ன்னு அவர் கூறினார். ஏன் இப்ப மாறி பேசுறாருன்னு எனக்கு குழப்பம் வந்தது.
உடனே சார் ஒரு பேப்பரை எடுத்து ஒரு மேப் வரைஞ்சு காமிச்சார். அதுல கட்டம் கட்டமா போட்டு இது எஸ்சி அதுக்கு மேல எம்பிசி பிறகு பிசி, எப்சின்னு போட்டு சைடுல முஸ்லீம்னு போட்டு இவங்க எல்லாரும் தாழ்த்தப்பட்டவர்கள தாக்குறாங்கன்னு சொன்னாரு. தாழ்த்தப்பட்ட மக்களை தாக்குறதுக்கு ஜாதி இந்துக்களை தூண்டுறது மேல இருக்குற பிராமணர்கள் மாதிரியான எஃப்சின்னு விளக்குனார். இதை வாய்ப்பா பயன்படுத்தி எஸ்சி மக்களுக்கு எதிரா முஸ்லீம்கள் செயல்படுறாங்கன்னும் சொன்னார்.
அதுக்கு நான் சொன்னேன், சார், முஸ்லீமகள் நம்ம மக்களுக்கு எதிராக இருக்கிறதா தெரியல. முஸ்லீம்கள் நம்மள எங்கயும் அடிக்கல. ஜாதி இந்துக்கள்னு சொல்றவங்க தான் தர்மபுரி மாறி பல இடங்கள்ள அடிக்கிறாங்க. முஸ்லிம் மதத்துக்கு மாறிய என் நண்பனைப் பற்றி சொல்லி வேணுண்ணா அவன்கிட்ட பேசுறீங்களான்னு கேட்டேன். அவன அவங்க மதத்துக்காரங்க சமமா மதிக்கிறாங்க. மசூதியில எல்லா இடத்துக்கும் அவன் போக முடியுது.
அதே நேரத்தில நான் காதலிக்கிற பி.சி சாதி பெண்ணை கலியாணம் செய்வதில் எனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதை சொல்லி முசுலீம் ஆட்களிடம் அப்படி இல்லையேன்னு கேட்டேன்.
இத அமைதியா கேட்ட அரவிந்தன் சார், டெல்லி ஜும்மா பள்ளிவாசலிலும், மெக்கா, மெதினாவிலயும் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவங்க தான் இமாம் ஆக முடியும். அங்கேயும் சாதி இருக்குன்னு விளக்கினார்.
நான் சொன்னேன், “நான் சென்னையத் தாண்டி டெல்லி, மெக்காவுக்கெல்லாம் போறதுக்கு சான்சே இல்ல. அந்த இடங்கள்ள எப்படி இருந்தாலும் எனக்கு கவலையில்ல. எங்க ஊரு பள்ளிவாசல்ல என்ன மதிச்சா அது போதும். எங்க ஊரு பக்கத்துல இருக்கும் ஆத்தங்கரை தர்கா பள்ளிவாசலுக்கு யாரு போனாலும் நல்லாவே மதிப்பாங்க. அந்த மதிப்பு வள்ளியூர் முருகன் கோவில்ல கூட கெடைக்காது சார்” ன்னு சொன்னேன்.
அதே நேரத்தில, நம்ம பண்பாட்ட விட்டு கொடுக்காம நான் புத்த மதத்துக்குத்தான் மாறப் போறேன்னு சொன்னேன். அதுக்கு அரவிந்தன் சாரு, “தாழ்த்தப்பட்ட மக்கள் புத்த மதத்துக்கு மாறி என்ன பயன்? இடைநிலை ஜாதிங்களும் உங்களோட மாறுனாத்தான் ஜாதிப்பாகுபாடு இருக்காது. அப்படி மாறதா இருந்தாலும் காசுக்கு ஆசைப்பட்டு முஸ்லீம், கிறிஸ்டீனுக்குத்தான் மாறுவாங்க. புத்தமதத்துக்கு யாரும் மாறமாட்டாங்க”ன்னு பேசுனார்.
இதக் கேட்டதும் எனக்கு சுரீர்னு கோவம் வந்துச்சு. சில வருசங்களுக்கு முன்னடி என்னோட சித்தப்பா கிரிஸ்டியனாக மாறினார். அவரு பேரு முதல்ல ஈஸ்வரன் இப்போது யோவானாகியிருக்கார். சார் நீங்க சொல்றது எங்களை கொச்சைப்படுத்துற மாறி இருக்கிறது என்று சொல்லி என் சித்தப்பா கதையை சொன்னேன். அவருதான் எங்கள் குடும்பத்துல முதல்ல படிச்சு ஆளானவரு. அரசு வேலையில் இருக்கிறார். நாங்க எவ்வளவு தான் சொல்லியும் எங்க ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமா இருக்காரு. ஏன்னா அவர் வந்தா இங்க யாரும் மதிக்க மாட்டார்கள். அவர் சொல்றது உண்மைதான். ஒரு பியூன் கூட மதிக்கமாட்டார். இதுக்குத்தான் சாதியை மறைச்சு வெளியூருல வேலைசெய்கிறார்னு சொன்னேன். மேற்கொண்டு அரவிந்தன் சாரு ஒன்னும் சொல்லல.
அதற்கப்பறம் பெரியார் பத்தி பேசுனோம்.
அம்பேத்கர் படத்தை நீங்க போட்டிருக்கீங்க. உண்மைக்குமே சந்தோசமா இருக்கு. ஆனா அம்பேத்கரை நம்மளவிட பெரியார் இயக்கங்களும், வினவு தளம், கீற்றுல தான் அதிகமாக போடுறாங்கன்னு கேட்டேன்.
அதெல்லாம் ஏமாத்துற வேலை. ஈ.வெ.ரா -வை பெரியார்னு அழைக்கிறதும், பாபாசாகேப் அம்பேத்கரை வெறுமனே அம்பேத்கர்னு அழைப்பதும் திராவிட இயக்கங்கள் திட்டமிட்டுத்தான் செய்யுராங்க. நம்மளயும் ஏமாத்துராங்க. அதனால் ஈ.வெ,ரா ன்னு மட்டும் சொல்லுங்க என்றார். கீழ்வெண்மணியில் நம்மாள்களை கொன்ற போது பெரியார் அதை கண்டிக்கல தெரியுமான்னு சொல்லி ஈ.வெ.ரா தாழ்த்தப்பட்டவங்களுக்கு எதிரானவர்னு பேசினார்.
“பெரியாரையும் அம்பேத்கரையும் இணைச்சி பேசுறதே முதலில் தப்பு. நீங்க அம்பேத்கரையும், காஞ்சி சங்கராச்சாரியாரையும் சேத்து பேச முடியுமா? சங்கராச்சாரியார் ஒரு முட்டாள். அம்பேத்கர்தான் அறிவாளி. பல பட்டங்கள் பெற்றவர். இவங்களை இணை வெச்சி பேசமுடியுமா? அதுமாறி தான் ஈ.வெ.ராவும் அம்பேத்கரும். இவங்க ரெண்டுபேரையும் இணைச்சி பேசுறதே தப்பு”
“வீரமணி யாதவ சாதிக்காரர் பெரியார் திடலில் யாதவர்களுக்கு தான் முன்னுரிமை தெரியுமா? வினவு ஆசிரியர்குழுவில் எத்தனை தலித்துங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? அதை நடத்தற மாதையன் ஒரு ஐயர்னு உங்களுக்குத் தெரியுமா”ன்னு கேட்டார்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது சார். ஆனால் நம்மாள்களை போல அவுங்க ஜாதி பெருமையை வெளிப்படையா இங்க மாறி ஸ்டால் போட்டு சொல்லலியே”ன்னு சொன்னேன்.
“நாம என்ன தான் தி.க வை திட்டினாலும் கோவில் நுழைவு, அனைத்து சாதி அர்ச்சகர் என எல்லாத்துக்கும் திராவிட கட்சிங்கதான் முன்னணியில் இருக்கிறார்கள். கருணாநிதி தான் சட்டம் கொண்டுவந்தாரு”ன்னு சொன்னேன். உடனே அரவிந்தன் சார் குறுக்க பேசினார்.
“நம் வரலாறே நமக்கு தெரியவில்லை. இவங்கதான் எல்லாம் செஞ்சாங்கன்னா எம்.சி.ராஜா யாரு?, சகஜானந்தா யாரு? குஜராத்துல மோடிஜி அமைதியா பெரிய கோவிலுங்கள்ள கூட எல்லா ஜாதிக்காரங்களையும் அர்ச்சகரராக்கிட்டார் தெரியுமா” ன்னார்.
சகஜானந்தா யார்னு எனக்கு தெரியல. அவரிடம் கேட்டேன். தில்லை சிதம்பரம் கோவிலில் மடம் கட்டி அனைவருக்கும் கல்வி கொடுத்தவராம் அவரு தில்லைன்னு சொன்னதும் அங்கு கூட மனித உரிமை மையம்தான் கோவிலுக்குள்ள தமிழுக்காக போராடுனாங்கன்னு சொன்னேன்.
பிறகு மீண்டும் மத மாறுவது பத்தி பேசினோம்.
“நம் முன்னோர்கள் கஷ்டப்பட்டு கோவிலை கட்டினார்கள். அதை எளிதாக அடுத்தவர்கள் கையில் விட்டுவிட்டு போகலாமா. உள்ளிருந்து கொண்டே போராட வேண்டும். இந்த கண்காட்சியில் அனைவரும் பாத்து பயப்படும் ஸ்டால் எது தெரியுமா இந்த ஸ்டால் தான். ஏன்னா நான் சாதியில்லைன்னு சொல்கிறேன். அதுவும் அவங்க விரும்பும் சாவர்க்கர் போன்ற இந்து இயக்க தலைவர்கள் சொன்னதை வைத்து சொல்றேன். ஈ.வெ.ரா மாதிரி வேறு யாரும் சொன்னதா சொன்னா அவங்க கவலைப்படமாட்டாங்க. உங்க சாவர்க்கர்தான்பா சொல்லியிருக்காருன்னு எடுத்து சொல்றேன்” என்றார்.
சில நிமிடங்கள் என்னை புத்தகம் படிக்க சொல்லிட்டு வெளியே போனார். திரும்பி வந்து “ நான் ஆர்.எஸ்.எஸ் காரங்கட்ட சொல்லிவிட்டேன். நீங்க கொங்கு கவுண்டர்களையும் வன்னியர்களையும் இந்து இயக்கத்துக்குள் கொண்டுவருகிறேன் என்ற பெயரில் பல தலித்துகளை வெளியே தள்ளிகொண்டிருக்கிறீர்கள் என்று சொல்லிட்டு வந்தேன்” என்றார். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவருங்க கிட்ட நெருக்கமான பழக்கம் இருக்கும் போல.
நாங்க பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெரியவர் வந்தார். தஞ்சாவூர் இல்லேன்னா கும்பகோணத்துக்காரர்னு நினைக்கிறேன் அவர மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர்னு அறிமுகம் செஞ்சார். அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் நான் வேண்டாம்னு சொல்லியும் எனக்கு ரசனா ஜூஸ் வாங்கி கொடுத்தார். “அம்பேத்கர் மேற்கோள்களை தமிழில் மொழிபெயர்த்து அதை விளக்குவதற்கு ஆட்களும் தருவதாகவும் அதை பள்ளிக்கூடங்களில் காட்சிக்கு வைக்க உதவி வேண்டும்”னும் அந்த ஆர்.எஸ்.எஸ் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அரவிந்தன் சார்.
வினவு அவர்களுக்கு,
இந்த கண்காட்சிக்கு ஏன்டா போனோம்னு ஆகிவிட்டது. போகாமல் இருந்திருந்தால் இந்து மதமும் இயக்கங்களும் சரியானவை என்று கற்பனையிலாவது நிம்மதியா இருந்திருப்பேன். போனபிறகு ஜீரணிக்கவே முடியலை.
என்னை போல இன்னும் பல தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இந்து இயக்கங்களை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நான் பேசிய ஸ்டால் நிர்வாகி அரவிந்தன் நீலகண்டன் சார் கூட, அம்பேத்கருக்கு ஓரமாக இடம் ஒதுக்குவோம், பான்பராக் பாக்கெட் அளவு இடம் ஒதுக்குவோம்னு சொன்ன பின்பும் அவங்களை எதுக்கு நம்புறாருன்னு எனக்கே தெரியல.
“நம் சகோதரன் மனநோயால் பாதிக்கப்பட்டால் அப்படி விட்டுவிடுவோமா, அதனால் இடைநிலை ஜாதியினரை மாத்தணும். அதுக்கு மதத்தை கைவிடக் கூடாதுங்கிறது” தான் அவரோட கருத்து.
அவங்களை மாத்தி நமக்கு என்ன ஆகப்போகுது? நமக்கு வேண்டியது தன்மானம். அது மதம் மாறினால் கிடைக்கும்னா ஏன் மாறக்கூடாதுங்கிறது என்கருத்து.
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் உள்ள ஒருத்தர் தலித் சேம்பர் காமர்ஸ் ஆரம்பிச்சிருக்காருன்னும், அதுல தலித்துக்கள் பொருளாதார வலிமை உள்ளவங்களாகி அதுக்கு பின்னாடே நாமே இது மாதிறி பல கண்காட்சிகங்கள நடத்தலாம்னு அரவிந்தன் சார் சொன்னார்.
திரும்பும் போது “ஒரு இந்துவா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேக்கிறேன். நீங்க சொன்ன விசயங்கள் செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு” என்று அரவிந்தன் சார் வருத்தப்பட்டு சொன்னார்.
“உங்களுக்கே பான்பராக் பாக்கெட் அளவுக்கு தான் இடம் கொடுக்குறாங்க. பேசாம நீங்களும் என்னோடு மதம் மாறுங்க”ன்னு நான் சொன்னேன். அவர் மறுத்துட்டார். அரவிந்தன் சார் மாதிரி உள்ளவங்க எல்லாம் தெரிஞ்சிருந்தும் ஏன் மறுக்கிறாங்கன்னு தெரியல.
அங்கிருந்து வந்தததுக்கு பிறகு எனக்கு குழப்பமாவே இருக்கு. நீங்க இந்து மதத்தை திட்டறீங்க. ஆனால் தருமபுரியிலேயே கலப்பு திருமணம் செஞ்சு வக்கிறீங்க. ஒரு வகையில இதுதான் இந்து ஒற்றுமையை உண்டாக்குற காரியம். ஆனால், இந்து ஒற்றுமைன்னு பேசுறவங்க சாதிக்கு ஒரு ஸ்டால் போடுறாங்க. சாதியை மறந்து ஒன்றுபட வைக்கிற உங்களைத் திட்டுறாங்க.
ஒரே குழப்பமா இருக்கு. இதை உங்களிடம் பகிர வேண்டும் போல தோன்றியது. அதுக்குத்தான் இந்த நீண்ட லெட்டரை இமெயில்ல அனுப்புறேன்.
இப்படிக்கு
மனோஜ்குமார்
தகவலுக்கு நன்றி
வினவு தளம்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
சுவனப்பிரியன் எங்கள் பக்கம் இருக்கும் தவறை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்கும் அற திண்மை எங்களுக்கு உள்ளது. ஆனால் எகிப்திய மம்மி விஷயம் முதல் இன்று வரை உங்களிடம் எள்ளளவும் நேர்மை இல்லையே சகோதரரே. அல்-தக்கியா மட்டுமேதான் இருக்கிறது. எங்கள் தலித் சகோதரர்களிடம் நான் ஒரு ஹிந்துவாக என்றென்றும் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். அவர்கள் வலியில் உள்ள நேர்மையான வேதனையை உணர்ந்திருக்கிறேன். ஆனால் உங்களை போல காஃபிர்களின் குரல்வளையை வெட்டி தலித் தலைவரான ஜிதேந்திர மண்டலை அகதியாக்கிய அயோக்கியத்தனமான மதவெறி எனக்கு இல்லை. இதை புரிந்து கொள்ளும் யோக்கியதை நீங்கள் உட்பட எந்த ஈமானியனுக்கும் இருக்கும் என்றும் தோன்றவில்லை
திரு அரவிந்தன் நீலகண்டன்!
//சுவனப்பிரியன் எங்கள் பக்கம் இருக்கும் தவறை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்கும் அற திண்மை எங்களுக்கு உள்ளது. //
சம்பந்தமே இல்லாமல் இந்து என்ற வேலிக்குள் தலித்களை அடைத்து வைத்து இன்று வரை ஒரு சக மனிதனுக்கு கொடுக்கும் மரியாதையை தர முடியாமையை ஒத்துக் கொண்டு நீங்கள் மன்னிப்பு கேட்டது வரவேற்கத்தக்கது. இனியாவது நாங்கள் எல்லாம் இப்போது சாதி பார்ப்பதில்லை என்று முழு ஆட்டை பிரியாணியில் மறைக்க வேண்டாம்.
//ஆனால் எகிப்திய மம்மி விஷயம் முதல் இன்று வரை உங்களிடம் எள்ளளவும் நேர்மை இல்லையே சகோதரரே. அல்-தக்கியா மட்டுமேதான் இருக்கிறது. //
எகிப்திய மம்மிக்களைப் பற்றி நான் என்ன சொன்னேன். எனக்கு ஞாபகமில்லை. விளக்கம் தேவை.
//எங்கள் தலித் சகோதரர்களிடம் நான் ஒரு ஹிந்துவாக என்றென்றும் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். அவர்கள் வலியில் உள்ள நேர்மையான வேதனையை உணர்ந்திருக்கிறேன்.//
உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி. அவர்கள் வடிகால் தேடி இஸ்லாத்தை நோக்கி வந்தால் அங்கும் வந்து அவர்களுக்கு தொல்லை கொடுக்காதீர்கள். தலித்கள் வேண்டுவதும் அதைத்தான்.
//ஆனால் உங்களை போல காஃபிர்களின் குரல்வளையை வெட்டி தலித் தலைவரான ஜிதேந்திர மண்டலை அகதியாக்கிய அயோக்கியத்தனமான மதவெறி எனக்கு இல்லை. இதை புரிந்து கொள்ளும் யோக்கியதை நீங்கள் உட்பட எந்த ஈமானியனுக்கும் இருக்கும் என்றும் தோன்றவில்லை//
உபியில் நடக்கும் கூட்டு கற்பழிப்புகளுக்கும், வன்னியர் தலித் மோதலுக்கும், இந்து முன்னணி கட்ட பஞ்சாயத்து கொலைகளுக்கும், இந்து முன்னணி சின்ன வீட்டு கொலைகளுக்கும், குஜராத் இஸ்லாமிய கூட்டு கொலைகளுக்கும் நீங்கள் எப்படி பொறுப்பாக மாட்டீர்களோ இந்து மதம் அதற்கு பொறுப்பேற்காதோ அதுபோல எங்காவது சொந்த பகையில் நடக்கும் ஒரு கொலைக்கு இஸ்லாமோ நானோ மற்ற இஸ்லாமியர்களோ பொறுப்பாக மாட்டார்.
இந்து மதத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் தலித்களுக்கு சம உரிமை கொடுங்கள். இல்லாது போனால் உங்களின் காலத்திலேயே அந்த மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி வர ஆரம்பிப்பர்.
மனோஜ்குமாருக்கு நான் சொல்வது இதுதான்.
இந்துமதத்தைப்பற்றியறிய இந்த சங்கப்பரிவார் ஆசாமிகள் பக்கமே போவாதீர். அதாவது அரவிந்தன் நீலகண்டனைப்போன்றவர்கள்.
இந்து ஆன்மிகப்பெரியோர்கள் பலரிடம் பேசியே தெரிந்து கொள்ளுங்கள். அவர்களைக்காணபது அரிது. ஆனால் முயற்சி திருவினையாக்கும். போலிகளிடம் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
மரியாதை, ஜாதி, கலப்புத்திருமணத்துக்கு உதவி: வன்னியர், தேவர் பிராமணாள் எல்லாம் நம்மை விட உயர்வாக நினைத்துக்கொள்கிறார்களே; – இந்த நினைப்புக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. எனவே இவற்றைத் தூக்கியெறிந்து விடுங்கள்.
கண்டிப்பாக பார்ப்பனர்களே வேண்டாம். அவர்களில் சான்றோருண்டு. ஆனால் அவர்கள் தங்களைக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். நாம்தான் தேடவேண்டும். தற்சமயம் அவர்கள் வேண்டவே வேண்டாம் உங்களுக்கு. ஏனெனில் அவர்கள் தப்பித்தவறி ஏதாவது சொல்லிவிட்டால் நீங்கள் நொந்து விடுவீர்கள். மறந்து போய் நானும் கீழ்ஜாதியினர் என்றெழதியிருக்கிறேன் பார்த்தீர்களா?
என் வழி தனி வழி என்றார் நாராயண குரு. அதாவது பார்ப்பனரிடம் செல்லா இந்துமதம். நீங்களே அதை ஆராய்ந்து அவர் செய்தது போல தனிநபராக இந்துவாக இருங்கள்.
உண்மையிலேயே இந்துவாக இருப்பின் உங்களுக்கு ஆன்மிக நன்மை கிடைக்கும். உண்மையான இந்துவுக்கு அவன் மதம் ஆன்மிகத்துக்கு மட்டுமே ஒழிய அரசியல் பண்ண அன்று.
ஒருவேளை இந்துவாக அம்மதத்தின் கொள்கைகளைத் தெரியவந்து பிடிக்காவிட்டால் இந்துவிலேயே பலபிரிவுகள் உண்டு. தேடுங்கள். அவற்றுள் ஒன்று கண்டிப்பாக ஒத்துவரும் எனக்கு வந்தது போல. தமிழ்நாட்டில் அந்த ஆன்மிகத்திருவிழா இந்த ஆன்மிகத்திருவிழா என்றெல்லாம் நடாத்துவார்கள் போகாதீர்கள். அவர்கள் அரசியல்வாதிகள்தான் மதம் என்ற போர்வையில். நீங்கள் சென்றது வினவு காட்டியதைப்போல ஜாதியரசியல் அரங்கு.
இசுலாம் கிருத்துவத்தையும் நான் இகழவில்லை. ஆனால், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைய வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.
-kavya
அன்புள்ள சகோதரர் மனோஜ் குமார்!
உங்களின் ஆதங்கத்தை படித்தேன். ஒரு சக மனிதனாக உங்கள் துக்கத்தில் பங்கு கொள்கிறேன். இதற்கு நிரந்தர விடிவு நீங்கள் இஸ்லாத்தை ஏற்பது ஒன்றுதான். பலருக்கு கசப்பாக இருந்தாலும் உண்மை இதுதான். வேறு மார்க்கம் தற் காலத்தில் இந்தியாவில் இல்லை. சில தவறுகள் முஸ்லிம்களிடத்தில் இருக்கலாம். ஆனால் இஸ்லாத்தில் இல்லை. இதனை ஏற்கெனவே மதம் மாறி இன்று முழு முஸ்லிம்களாக மாறி விட்ட உங்கள் சகோதரர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போது இஸ்லாத்தை ஏற்றுள்ள யுவன் சங்கர் ராஜாவின் தளத்தில் சென்று அவருள் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காணுங்கள். உங்களின் வாழ்வு சிறக்க, தன் மானத்தோடு ஒரு வாழ்வு முறை கிடைக்க எனது பிரார்த்தனைகள்.
உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருந்தால் எனது மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். அல்லது பின்னூட்டமிடுங்கள்.
அரவிந்தன் நீலகண்டன் உங்களிடம் சில எளிய கேள்விகள்….
* சாதி மறுப்புத் திருமணங்களை ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆதரிப்பதாகச் சொல்கிறீர்கள்.அப்படியானால் தமிழகம் முழுக்க சாதிமறுப்புத் திருமண இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ். தொடங்கலாமே?
* சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் ராமதாஸ், கொங்கு வேளாளர் பேரவை மணிகண்டன் போன்றவர்களை எதிர்த்து ஒரு சின்ன அறிக்கை, பொதுக்கூட்டமாவது ஆர்.எஸ்.எஸ். போட்டதுண்டா?
* செண்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடித்தபோது காக்கி டவுசர்களோடு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வந்தார்களே, தர்மபுரி சம்பவத்தின்போது இந்த டவுசர்களைக் காணமுடியவில்லையே ஏன்?
* நீங்களெல்லாம் இந்துத்துவத்தை எதிர்த்த சாதிமறுப்பாளர்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஏன் உங்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் இரட்டை டம்ளர் உடைப்புப் போராட்டத்தைத் தொடங்கக்கூடாது?
* ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு சாதி கிடையாது என்றால் அது தமிழ்நாட்டில் எத்தனை தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடத்தியிருக்கிறது?
* இந்து ஆன்மீகக் கண்காட்சியை நடத்தியவர்களுக்கு இந்துத்துவ அரசியல் கிடையாது என்கிறீர்கள். இந்த கண்காட்சியை ஒருங்கிணைத்த குருமூர்த்தி யார்? அவரும் ஸ்டாலினிஸ்டா?
- மனுஷி
Post a Comment