Followers

Tuesday, July 22, 2014

விதியைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்?

ஹானஸ்ட் மேன்!

//மறுபிறவி இல்லை என்று மறுப்பவரின் பார்வைக்கு: “”இப்போது எவ்வாறு அவன் உங்களை படைத்துள்ளானோ இதே போன்று ‘மீண்டும்’ நீங்கள் படைக்கபடுவீர்கள்” (ஆதாரம் -குரான் 7 : 29) இதற்கு என்ன பொருள்?//

இதில் உங்களுக்கு என்ன குழப்பம்? இந்த உலகத்தில் நாம் வாழும் போது இறைவனால் ஒரு உருவம் கொடுக்கப்படுகிறோம். உருவம் கொடக்கப்பட்ட அந்த மனிதன் இறந்து மண்ணோடு மண்ணாகி விடுகின்றான். அதன் பின்னர் மறுமை நாளில் அவன் உலகில் எந்த உருவத்தில் வாழ்ந்தானோ அதே உருவத்தில் திரும்பவும் உயிர் கொடுக்கப்படுவான் என்கிறது குர்ஆன். இதில் உங்களுக்கு என்ன குழப்பம்? இந்த வசனம் நீங்கள் கூறும் மறு பிறவியை எப்படி ஆதரிக்கும்?

//எல்லாவற்றிற்கும் அல்லா தான் காரணம் என்று தெரிகிறது.. அப்படியிருக்க ஒன்று இந்துக்களின் மனத்தை மாற்றவேண்டும். அல்லது இந்துக்கள் அனைவரையும் மலடிகளாக மலடுகலாக ஆக்கி அந்த இனமே அழிந்து போக செய்யவேண்டும். அந்த ஆற்றல் உடையவன் தானே அல்லா? அவ்வாறு அவர் செய்யட்டுமே!//

நீங்கள் கேட்பது விதி சம்பந்தமான கேள்வி. இந்த விதியைப் பற்றி அதிகம் சர்ச்சை செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் கட்டளையிட்டுள்ளார். இருந்தாலும் ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம். இன்றும் நேற்றும் நடந்த எனது விதியைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். நாளை என்ன நடக்கும் என்ற விதி எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு 10 நாளில் நான் இறந்து விடுவேன் என்ற விதி எனக்கு தெரிந்திருந்தால் என்னால் மற்ற நாட்களை சுகமாக கழிக்க முடியுமா? எனவே இந்த விதியைப் பற்றிய ஞானம் நமக்கு மறைவாக்கப்பட்டுள்ளது நமது நன்மைக்காகவே. இது பற்றி குர்ஆன் கூறுகிறது

'உங்களுக்கு தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப் படாமல் இருப்பதற்காகவும் அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும் விதியை ஏற்படுத்தியுள்ளான்.'
-குர்ஆன் 57:23

முஸ்லிம்களிடத்தில் தற்கொலைகள் குறைவாக இருப்பதற்கு இந்த வசனத்தை நம்புவதுதான் காரணம். எவ்வளவு துன்பம் வந்தாலும் 'நம் விதியில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது' என்று கூறி தனது பாரத்தை முஸ்லிம்கள் இறைவன் மேல் இறக்கி வைத்து விடுவார்கள். உலகம் முழுவதிலும் தற்கொலை விகிதத்தில் முஸ்லிம்கள் பின் தங்கியிருப்பதற்கு அசைக்க முடியாத இந்த இறை நம்பிக்கையே காரணம்.

'மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழியில் நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்ல என்று முஹம்மதே! கூறுவீராக'
-குர்ஆன் 10:108

இந்த வசனத்தின் மூலம் விதியை காரணம் காட்டி மனிதர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. எது நேர் வழி, எது தீய வழி என்று பகுத்து காட்டப்பட்டு விட்டது. எனவே ஒருவன் தீய செயல் செய்தால் அச்செயலுக்கு அவனே பொறுப்பாளி.

எல்லோரையும் நல்லவர்களாகவே படைத்து விட்டால் பிரச்னையே இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். இப்படி ஒரு அமைப்பை ஏன் இறைவன் ஏற்படுத்தினான் என்ற விபரம் சொல்லப்படவில்லை. அது நமது நன்மையைக் கருதியும் கூட இருக்கலாம். இதற்கான விடையை மறு உலக விசாரணையில் இறைவன் தெளிவு படுத்துவான். அது வரை பொறுப்போமே!

//ஆனால் அந்த பெண்ணை அந்த நிறுவன CEO இணைத்து கேவலமான photos களை மின்னஞ்சலில் அனுபியுள்ளான் இதுதான் நேர்வழியா? கூறும்.//

முஸ்லிம்கள் அனைவரும் பத்தரை மாற்று தங்கங்கள் என்று நான் எங்குமே சொல்லவில்லை. இது போன்று தவறாக நடப்பவர்களிடம் தொழுகை போன்ற இஸ்லாமியருக்கு உரிய நல்லொழுக்கங்கள் இல்லாதிருப்பதை பார்க்கலாம். எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள். இது போன்று சமூகங்களில் உள்ள தீயவர்களை இறைவன் தண்டிப்பான் என்ற உண்மையை உணர்த்தி அவர்களை நேர் வழிப் படுத்த வேண்டும். அந்த சமூகப் பொறுப்பு எனக்கும் உள்ளது உங்களுக்கும் உள்ளது.

No comments: