Followers

Saturday, July 12, 2014

நரேந்திர மோடியை இன்று முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்களா?

நரேந்திர மோடியை இன்று முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்களா?

திரு க்ருஷ்ணகுமார்!

//இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட கருத்துக்களில் காணப்பட்ட நிறைகள் மற்றும் குறைகளை அறிய ஆவலாக இருக்கிறேன். மிகக் குறிப்பாக இதை வாசிக்கும் எமது பேரன்பிற்குரிய ஜெனாப் சுவனப்ரியன் போன்ற முஸ்லீம் சஹோதரர்களது கருத்துக்களை அறிய மிகவும் ஆவலாக இருக்கிறேன்.//

பொதுவாக நரேந்திர மோடி அவர்களுக்கு இஸ்லாமியர்கள் மேல் வெறுப்பொன்றும் இல்லை. அவருக்கு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் தன்னை இந்துத்வாவாதியாக பிரகடனப்படுத்திக் கொண்டு கோத்ரா ரயில் எரிப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். போலீஸ் அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட் "உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் உங்களின் வேலைகளை முடித்துக் கொள்ளுங்கள்" என்று மோடி சொன்னதை அவ்வளவு லேசில் மறந்து விட முடியாது. "ராஜ தர்மத்தைக் காப்பாற்றுங்கள்" என்று வாஜ்பாய் சொல்லும் அளவுக்குத்தான் அன்றைய மோடியின் ஆட்சி இருந்தது. இஹ்ஸான் ஜாப்ஃரி கடைசி முயற்சியாக மோடியோடு "காப்பாற்றுங்கள்" என்று கதறியதையும் மறந்து விட முடியாது. இள மங்கை இர்ஷத் ஜஹான் போலி எண்கவுண்டரையும் நாம் மறக்க முடியுமா?

இத்தனை செயல்களையும் இவர் செய்தது இந்து மதத்தின் மேல் உள்ள பற்றினால் அல்ல. ஒடுக்கப்பட்ட இனத்தை சார்ந்த தான் தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையால் எழுந்தவைகளே அவை. இன்று நினைத்ததை சாதித்து விட்டதனால் அதற்காக பிராயச்சித்தம் தேட முயற்சிக்கலாம். அவரது அதிகாரத்துக்கு பயந்து ஒரு சில முஸ்லிம்கள் அவரை வானளாவ புகழலாம். நடந்து வரும் தங்கள் தொழிற்சாலைகளை காப்பாற்றிக் கொள்ள அந்த முஸ்லிம்கள் நரேந்திர மோடியிடம் சரணடையலாம். செய்த தவறுகளுக்கு தண்டனை பெறாத வரை சாமானய முஸ்லிம்கள் நரேந்திர மோடியை என்றுமே மன்னிக்க மாட்டார்கள்.

"உங்களின் மன்னிப்பு மோடிக்கு தேவையில்லை" என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பாதிப்பக்குள்ளான மக்களின் பிரார்த்தனை என்றுமே வீண் போகாது. அவரின் தூக்கத்திலும் செய்த கொடுமைகள் கண் முன்னே நிழலாடும். "அரசன் அன்று கொல்வான்: தெய்வம் நின்று கொல்லும்" எனும் பழமொழி இன்றில்லா விட்டாலும் என்றாவது நிறைவேறும்.

தன்னை முன்னிறுத்திக் கொள்ள தனது கட்சியை ஆட்சிக் கட்டிலில் ஏற்ற இந்நாட்டில் எத்தனையோ நேர்மையான வழிகள் உள்ளது. ஆனால் முஸ்லிம்களை வீண் பழி சுமத்தி அவர்களை கொன்று இந்துக்களின் ஓட்டுக்களை ஒருமுகப்படுத்தி அதன் மூலம் தனது அதிகாரத்தை நிறுவியிருக்கும் நரேந்திர மோடியை என்னால் எவ்வாறு பார்க்க முடியும் என்று திரு க்ருஷ்ண குமார்தான் சொல்ல வேண்டும்.

எந்த வகையிலோ இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். இந்த நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்திய முஸ்லிம்கள் உறுதுணையாக இருப்பார்கள். நாட்டை ஆள்வோருக்கு கட்டுப்படச் சொல்லி இஸ்லாமும் கட்டளையிடுகிறது. இனி வரும் ஐந்து வருடத்தில் தேவையற்ற செலவினங்களை குறைத்து அனைத்து மக்களையும் ஒன்றாக பாவித்து நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வாராக!



5 comments:

suvanappiriyan said...

தாயுமானவன் on July 10, 2014 at 8:22 pm

திரு. கிருஷ்ண குமார் அவர்களுக்கு…

தாங்கள் 40 வருடமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து சேவை செய்து வருவதாக கூறி இருக்கிறீர்கள். ஆகவே,எதற்காக இல்லை என்றாலும் உங்களின் 40 ஆண்டுக்கால உழைப்பை கருதியாவது நான் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

//தீண்டாமைக்கொடுமைக்கு எதிராக களத்தில் இறங்கி வேலை செய்து வரும் இயக்கங்கள் ஹிந்து முன்னணி மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கங்கள் மட்டிலுமே..//

அப்படி எத்தனை கொடுமைகளுக்காக உங்களுடைய ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அயராது போராடியது என்று கூற முடியுமா? ஏனென்றால், நீங்கள் சொல்வது போல் போராடி இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டில் சாதிகளே இல்லாத சமுதாயம் உருவாகி இருக்கும். இன்னும் தமிழ் நாட்டில் எத்தனை கிராமங்களில் இரட்டை குவளை முறை இருக்கிறது என்றாவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தெரியுமா? இன்னும் எத்தனை ஊர்களில் கோவில் திருவிழாவின் தேரோட்டத்தின் போது ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களால் தாழ்த்த பட்டவர்களின் தெருக்களுக்குள் தேர் போவதை தவிர்ப்பதவாது தெரியுமா? இதெல்லாம் தலைவர் மானனிய மோகன் பகவத்ஜிக்கு தெரியாது என்றால் ராமகோபலனிடம் கேட்டு தெரிந்து கொள்ள சொல்லுங்கள்.

உத்தபுரம் தீண்டாமை சுவர் விவகாரம் என்பது நாடு முழுவதும் கொந்தளித்து பேசப்பட்ட ஒன்று. அதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும், தலித்திய இயக்கங்களும், மனித உரிமைகள் நல அமைப்புகளும், போராடி பெற்ற ஒரு வெற்றி அது. இந்த வெற்றிக்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அடிப்படை வாத இயக்கங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

//ஆனால் சமூஹ நல்லிணக்கப்பணிகளில் ஈடுபடுபவர்களை ஒட்டு மொத்தமாக நாக்கில் நரம்பில்லாமல் ஒட்டுமொத்தமாகப் பிழைப்பு வாதிகள் என்று ஆரோபிப்பது …………..//

ஆர்.எஸ்,எஸின் சமுக நல்லிணக்கத்தை தான் நாங்கள் தர்மபுரி நத்தம் காலனியில் நடந்த சாதி கலவரத்திலேயே பார்த்தோமே.. இரு வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக தாழ்த்த பட்டவர்களின் வீடுகள் தீக்கிரை ஆக்க பட்ட பொழுது தாங்கள் கூறும் சமுக நல்லிணக்க அமைப்புகள் அனைத்தும் எங்கே சென்றன? ஒரு வேளை, அதன் நிர்வாகிகள் பொறியியலாளர்களாகவும், பட்டய கணக்காளர்களாகவும் இருப்பதால் தங்கள் பணிகளை கவனிக்க சென்று விட்டார்களோ!!! இழவு வீட்டிற்க்கு துக்கம் விசாரிக்க கூட சென்று வரவில்லை.

இதை எல்லாம் விடுங்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிற விடயத்தில் தங்களின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்ன? அதை முதலில் கூறுங்கள். அர்ச்சகர் பயிற்சியை முடித்த அந்த 206 மாணவர்களின் நிலை இனி என்ன.

அவர்களும் தமிழ்நாடு அரசின் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் வரும் கோவில் அனைத்திலும் அர்ச்சகர்களாக நியமிக்க பட வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாடு என்றால், அனைத்து சாதியனரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற தீர்மானத்தை எதிர்த்து நீதி மன்றத்திற்கு சென்று தடை வாங்கிய மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிவாசாரியார்களையும், தமிழ்நாடு பிராமணர் சங்கத்தையும் பிடரியில் அறைந்து முதலில் வழக்கை திரும்ப பெற சொல்லி அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க முன் வர சொல்லுங்கள்.

//ஒரு வருஷம் இரு வருஷம் இல்லை கடந்த நாற்பது வருஷங்களுக்கும் மேலாக ஆர் எஸ் எஸ் இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறேன். நான் பிழைப்பு வாதி//

நிச்சயமாக இல்லை. உங்களை பிழைப்பு வாதி என்று கூறினால் ஏழேழு பிறவிக்கும் எனக்கு நற்பேறு கிடைக்காது.. ஒன்றை மட்டும் என்னால் உறுதி பட கூற முடியும் “தவறான இடத்தில் இருக்கும் மிகச் சரியான(நல்ல) மனிதர்” தாங்கள்.

ஐயன்மீர், தங்களிடம் இது போன்று தர்க்கம் செய்வதற்கு எனக்கு மனம் வரவில்லை. தங்களின் வழிக்காட்டுதல் எப்போதும் எனக்கு தேவை. நீங்களோ வள்ளிக்கு வாய்த்த பெருமான் என்னை கருவறுக்க வேண்டும் என்று சாபம் இடுகிறீர்கள். நான் என்ன ராஜபட்சேவை போன்று வேலவனின் மக்களான தமிழர்களையா கருவறுத்தேன். அல்லது கருவறுத்தவனுக்கு பதவி ஏற்ப்பு விழாவில் ராஜோபசாரம் கொடுத்து விருந்து வைத்தேனா. என்ன செய்வது, என்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்த வேறு எனக்கு வழி தெரியவில்லை. மன்னிக்கவும். இன்று பிரதோஷ நன்னாள் எம்பெருமான் ஈசனின் பரிபூரண அருள் என்றென்றும் உங்களுக்கு இருக்க வேண்டும். என் பிரார்த்தனையும் அதுவே. திருச்சிற்றம்பலம்.

க்ருஷ்ணகுமார் said...

ஜெனாப் சுவனப்ரியன்

எமது மனங்கனிந்த ரம்ஜான் முபாரக்.

பன்னிரெண்டு வருஷங்களாக காங்க்ரஸ் மத்ய சர்க்கார் தனது அனைத்து சக்திகளையும் ஏவிவிட்டும் கூட.......... ஹிந்துஸ்தானத்திலிருக்கும் மற்றும் விதேசத்தைச் சார்ந்த அனைத்து ஊடகங்களும் எண்ணிறந்த துஷ்ப்ரசாரங்கள் செய்தும் கூட.......ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் மீது 2002 குஜராத் கலஹத்திற்காக இது வரை ஒரு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்ய முடியவில்லை.

உங்களுக்கு உர்தூ / ஹிந்துஸ்தானி பரிச்சயமாக இருந்தால் முழு நிகழ்ச்சியையும் நான் பகிர்ந்திருந்த காணொலியில் பார்க்கவும்.

ஸ்ரீமான் தாயுமானவன் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இஸ்லாமியப் பெருந்தகைகளை மேட்டுக்குடி மக்கள் என்று புறந்தள்ளிக் கருத்துப் பகிர்ந்தது போன்று நீங்கள் கருத்துப்பகிரவில்லை. நிகழ்ச்சியில் சாதாரண முஸல்மாணிய சஹோதரர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். நன்று.

\\ அவரது அதிகாரத்துக்கு பயந்து ஒரு சில முஸ்லிம்கள் அவரை வானளாவ புகழலாம். \\

தவறு.

ஜெனாப் ஸாஜித் ரஷீதி சாஹேப் மற்றும் ஜெனாப் மற்றும் முஃப்தி எஹ்ஸாஸ் அஹ்மத் சாஹேப் போன்றோர் வெறும் மேட்டுக்குடி மக்கள் மட்டும் அல்ல மாறாக இஸ்லாம் பற்றி நன்றாக முறையாகக் கற்றறிந்த பெருந்தகைகள் என்று அறிவேன். முஸ்லீம் சஹோதரர்கள் நலனுக்காகப் பாடுபடும் பெருந்தகைகள் என்றும் அறிவேன். முஃப்தி சாஹேப் தாருல் உலூமில் கல்வி பயின்றவர். தேவ்பந்தி சுன்னி பந்தினைச் சார்ந்தவர். இந்தப் பெருந்தகைகள் மோதி அவர்கள் அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னரேயே அவருடன் அளவலாவலில் இருந்த பெருந்தகைகள். முழுக்காணொலியையும் பார்த்தால் முழு விபரமும் அறிவீர்கள்.

\\ ஆனால் முஸ்லிம்களை வீண் பழி சுமத்தி அவர்களை கொன்று இந்துக்களின் ஓட்டுக்களை ஒருமுகப்படுத்தி அதன் மூலம் தனது அதிகாரத்தை நிறுவியிருக்கும் நரேந்திர மோடியை என்னால் எவ்வாறு பார்க்க முடியும் என்று \\

மதக்கலஹங்களில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டாலும் முஸ்லீம்கள் கொல்லப்பட்டாலும் இரண்டுமே இழிவான செயல்.

இது சாரமற்ற குற்றச்சாட்டு என்பது காணொலியில் முறையான காரணங்களுடன் விசாரிக்கப்பட்டுள்ளது. கலஹத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஹிந்துக்கள் முஸ்லீம்கள் ..... இரண்டு சமுதாயத்தைச் சார்ந்தவர்களும் ந்யாயாலயத்தால் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். குற்றம் உள்ளவர்களை மட்டிலும் தான் இறைவன் கூட தண்டிக்க இயலும். குற்றமற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதும் கூட குற்றமே.

ஜாஃபர் சாஹேப் கருத்துப் பகிர்ந்த படிக்கு இதை விட பன்மடங்கு முஸல்மாணிய சஹோதரர்கள் கொல்லப்பட்ட முந்தைய கலஹங்களில் இது வரை விசாரணை கூட நடக்கவில்லை என்பதும் மேலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை என்பதும் வெட்கித் தலை குனிய வேண்டிய விஷயங்கள் மட்டிலும் இல்லை. சமூஹ அக்கறை உள்ளவர்கள் முனைந்து நீதி கிடைக்கப் போராட வேண்டிய விஷயமும் கூட.

\\ எந்த வகையிலோ இன்று நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். \\

Wohi Hota Hai Jo Manzoor-e-Khuda Hota Hai!

எந்த வகையிலோ இல்லை ஐயன்மீர். ஹிந்துஸ்தானத்தின் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், க்றைஸ்தவர்கள் என அனைத்து சமுதாய மக்களும் வாக்களித்ததன் படி ஸ்ரீ நரேந்த்ரபாய் ப்ரதம மந்த்ரியாக இருக்கிறார்

\\ இனி வரும் ஐந்து வருடத்தில் தேவையற்ற செலவினங்களை குறைத்து அனைத்து மக்களையும் ஒன்றாக பாவித்து நமது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வாராக! \\

என்னுடன் ஹிந்துஸ்தானி சாஸ்த்ரீய சங்கீதம் பகிரும் எனது ஷியா முஸ்லீம் சஹோதரர்கள் முகத்தில் கவலையின் ரேகைகளைப் பார்க்கும் போது மனதில் வ்யாகூலம் வருகிறது. மோதி அவர்கள் அனைத்து ஹிந்துஸ்தானியரையும் ஒன்றாக பாவித்து வளர்ச்சிப்பாதையில் தேசத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது 125 கோடி ஹிந்துஸ்தானியரின் எதிர்பார்ப்பு. அதை அவர் அவ்வண்ணமே நிறைவேற்றுவார் என எங்கள் முருகப்பெருமானை இறைஞ்சுகிறேன்.

மோதி அவர்கள் செயல்பாடுகளில் இந்த விஷயங்கள் சார்ந்து எனது எதிர்பார்ப்பின் பாற்பட்டு குறையும் உண்டு. எனது தொடரும் வ்யாசத்தில் அதை பதிவு செய்வேன். உங்களது ப்ரத்யேகமான எதிர்பார்ப்புகள் ஏதும் இருந்தாலும் பகிர விக்ஞாபித்துக்கொள்கிறேன்.

குதா ஹாஃபீஸ்

suvanappiriyan said...

திரு க்ருஷ்ணகுமார்!

//எமது மனங்கனிந்த ரம்ஜான் முபாரக்.//

எனது தளத்திற்கு உங்களின் முதல் வருகைக்கு நன்றி! உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.!

//பன்னிரெண்டு வருஷங்களாக காங்க்ரஸ் மத்ய சர்க்கார் தனது அனைத்து சக்திகளையும் ஏவிவிட்டும் கூட.......... ஹிந்துஸ்தானத்திலிருக்கும் மற்றும் விதேசத்தைச் சார்ந்த அனைத்து ஊடகங்களும் எண்ணிறந்த துஷ்ப்ரசாரங்கள் செய்தும் கூட.......ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் மீது 2002 குஜராத் கலஹத்திற்காக இது வரை ஒரு குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்ய முடியவில்லை.//

ஒரு நாட்டின் முதல்வர் ஒரு கலவரத்தில் நேரிடையாக பங்கெடுக்க மாட்டார். நடக்கும் கலவரங்களை தடுக்காமல் வாய் மூடி மௌனமாக இருப்பது ஒரு முதல்வருக்கு அழகா! டெஹல்கா வெளியிட்ட காணொளிகளை நீங்கள் பார்க்கவில்லையா? பாபு பஜ்ரங்கி 'நரேந்திர பாய் எங்களுக்கு முழு சுதந்திரமும் கொடுத்தார். மியா பாய்களை வெட்டி வீழ்த்தினோம்' என்று பகிரங்கமாக நடந்த அக்கிரமங்களை ஒத்துக் கொண்டு இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறாரே! மோடி அவர்கள் நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்தில் அந்த கலவரங்களை கட்டுப்படுத்தி பல முஸ்லிம் உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் காப்பாற்றி இருக்கலாமே!

https://www.youtube.com/watch?v=mfnTl_Fwvbo

இந்த வீடியோவைப் பார்த்து விட்டு உங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

//உங்களுக்கு உர்தூ / ஹிந்துஸ்தானி பரிச்சயமாக இருந்தால் முழு நிகழ்ச்சியையும் நான் பகிர்ந்திருந்த காணொலியில் பார்க்கவும்.//

ஹிந்தி நன்றாகவே வரும். முழு காணொளியையும் முன்பே பார்த்துள்ளேன்.

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

க்ருஷ்ணகுமார் said...

ஜெனாப் சுவனப்ரியன்,


\\ எனது தளத்திற்கு உங்களின் முதல் வருகைக்கு நன்றி! உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.! \\

ம்............இது இரண்டாவது வருகை. ஓரிரு வருஷங்களுக்கு முன்னர் ஸ்ரீ நகரில் இருந்த போது முதன்முறையாகக் கருத்துப் பதிவு செய்திருந்தேன்.

\\ ஒரு நாட்டின் முதல்வர் ஒரு கலவரத்தில் நேரிடையாக பங்கெடுக்க மாட்டார். \\

2002 குஜராத் கலஹம் மற்றும் ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் ...... இந்த இரண்டும்......ஹிந்துஸ்தானத்து மற்றும் எண்ணிறந்த விதேச ஊடகங்கள் மற்றும் பல என் ஜி ஓ க்களுக்கு கிட்டத்தட்ட ஒரு பணம் காய்ச்சி மரமாக கடந்த 12 வருஷங்களாக இருந்தது என்றால் மிகையாகாது.

கோத்ரா கலஹம் அதையடுத்த 2002 மதக்கலஹத்தில் ஹிந்து மற்றும் முஸல்மாணிய சஹோதரர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதும் அதையடுத்து நடந்த ந்யாயாலய விசாரணைகளில் இரண்டு சமூஹத்தைச் சார்ந்த குற்றவாளிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ந்யாயாலய தஸ்தாவேஜுகளில் ருஜுவாக்கப்பட்ட விஷயம்.

தான் குற்றம் செய்திருந்தால் அதற்காக மன்னிக்கப்படக்கூடாது ........... மாறாக மிகக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ நரேந்த்ரபாய் அவர்கள் கூறியுள்ளார். எனக்கு அதில் முழு உடன்பாடு உண்டு.

கலஹம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் ............ ஊடகங்களில் ....... உரல்களில் (URL) ............ சம்பவ விவரணைகளாக இல்லாமல் ........... நமக் மிர்சி மசாலா சேர்க்கப்பட்ட திகில் கதைகள் போலும் ....... சில சமயம் திகில் கதையாக வடிக்க முனைந்து முடியாமல் நகைச்சுவைக் கதையாகவும் ............... மோதி விரோத தொழில் முனைவோர்களால் பரப்புரை செய்யப்பட்ட அவலங்கள் எண்ணிறந்தவை; மேலும் அப்படிப்பட்ட அவலங்கள் வீழ்ச்சி என்ற புள்ளியை தொட்டு விட்டாலும் தொடர்கிறது என்பது நிதர்சனம்.

அறிவு பூர்வமான முழுமையான சம்பவ விவரணைகள் போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட் - ஆடோப்ஸி ரிபோர்ட் மற்றும் ந்யாயாலய விசாரணைகளை வாசித்து ஆராய்கையில் தெரிய வரும். இது போன்ற மூல மற்றும் முழுமையான ஆவணங்கள் சார்ந்த அறிவு பூர்வமான விவரணைகளை நான் நண்பர் ஸ்ரீ ஒத்திசைவு ராமசாமி அவர்கள் தளத்தில் வாசித்துள்ளேன். அதே தளத்தில் பங்கு பெறும் நண்பர் ஸ்ரீ வெங்கடேசன் அவர்கள் பாபு பஜ்ரங்கி பற்றிப் பகிர்ந்த தகவல்களும் பதிலுக்கு ஸ்ரீ ராமசாமி அவர்கள் பகிர்ந்த தகவலும் நேரடியாக நூற்றுக்கணக்கான பக்கங்கள் சார்ந்த தீர்ப்பு ஆவணங்களில் இருந்து பகிரப்பட்டவை. விஷயத்துக்கு தெளிவு அளிப்பவை.

நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்ட எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ....... மூல ஆவணங்கள் சார்ந்து...... அதன்பாற்பட்ட விஷயப்பகிர்வுகளில் எனக்கு முழுமையான அக்கறை உண்டு. இந்த நிகழ்வுகள் சம்பந்தமாக முறையான முழுமையான விபரங்களைக் கொடுப்பவை என்ற படிக்கு. ஊடக கிசுகிசுக்கள் உரல்கள் பேசும் மிகைப்படுத்தப்பட்ட விவரணைகள் போன்றவை பரபரப்புக்கு மற்றும் உரத்துக் கூச்சல் போடுவதற்கு உதவலாம். விஷயத்தெளிவுக்கு உபயோகமற்றவை என்பது என் தாழ்மையான கருத்து.

க்ருஷ்ணகுமார் said...

கலஹத்தில் மோதி அவர்களின் செயல்பாடு என்பது விவாதிக்கப்பட்ட நிகழ்ச்சியில் ஒரு கூறு மட்டிலும். இஸ்லாமிய சமூஹம் சார்ந்து மற்ற மதசார்பற்ற கட்சிகளின் செயல்பாட்டிலிருந்து ஹிந்துத்வ இயக்கங்களின் செயல்பாடு எப்படி மாறுபட்டது என்பதும் ஒரு கலஹமற்ற அமைதி நிலவும் சூழலில் இஸ்லாமிய சமூஹம் மட்டுமின்றி ஒட்டு மொத்த சமூஹமும் எப்படி ஒருங்கிணைந்து வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியும் என்பதும் நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

கலஹ நிகழ்வுகளைப் பொறுத்த வரை நான் முறையாக அறிந்த விஷயங்கள் சொல்பம். மேற்கொண்டு விவாதிக்க விழையும் அன்பர்கள் அவரவர் புரிதல்கள் அல்லது முன் தீர்மானங்களுக்கு ஏற்ப எதைப்பற்றியும் விவாதிக்க விழையலாம். ஊடக பரபரப்பு செய்திகள் URL கிசுகிசுக்கள் போன்றவற்றில் சொல்லப்படும் விஷயங்களில் என் கவனம் இருக்காது. ந்யாயாலய ஆவணங்கள் சார்ந்து பகிரப்படும் ஒவ்வொரு விஷயத்தையும் உள்ள படி மதிப்புடன் அறிய விழைவேன்.

நான் விஷயங்களைப் பகிர்வதைக் காட்டிலும் விஷயங்களில் ஆழ்ந்த புரிதல் மற்றும் அக்கறை உள்ள ஹிந்து மற்றும் முஸல்மாணிய அன்பர்களுடைய......நிகழ்ச்சியைச் சார்ந்த ஒவ்வொரு கூறினைப்பற்றிய பற்றியும் அவரவரது அபிப்ராயங்களை அறிவதில் ஆர்வமாக இருக்கிறேன்.

கருத்து வேறுபாடுகளால் மட்டிலும் ஆனது அல்ல உலகம். உலகில் உள்ள அனைத்து மனிதர்களிடையேயும் வியக்கத் தக்க கருத்தொற்றுமைகளும் உண்டு என்பதனை எனது வாழ்க்கை கற்றுக்கொடுத்துள்ளது.

கருத்தொற்றுமைகளை அடிப்படையாகக் கொண்டு கரம் கோர்த்து...... மக்கள் அன்பு மற்றும் வளர்ச்சிப்பாதையில் செல்வது வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும் என்பது என் ஆழமான கருத்து.

இங்கு பகிரப்பட்ட விஷயங்கள் சில எனது வ்யாசத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களுக்கு மேலதிகத் தெளிவைத் தரும் என்பதால் அதை சம்பந்தப்பட்ட திரியில் பகிர விழைகிறேன்.

உள்ளீடற்ற வெற்று உணர்வுகள் சார்ந்த கருத்துக்கள் அல்லாது......... கருப்பொருள் சாராத பகிரல்கள் அல்லாது........ விஷயம் சார்ந்த அறிவு பூர்வமான கருத்துக்களை பகிர விழைந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நான் சொல்ல வேண்டிய விஷயம் மேலும் ஏதும் இருக்குமானால் உங்களது தளத்தில் பகிரப்படும் விவாதங்களில் மேற்கொண்டு பங்கு பெறுவேன். மற்ற படி இந்த விவாதம் சம்பந்தமாக விஷயத்துக்குத் தெளிவு தரும் உங்கள் தளத்து பகிரல்களை ஆர்வத்துடன் வாசிக்க விழைகிறேன்.

குதா ஹாஃபீஸ்