'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Wednesday, July 16, 2014
மத மாற்றத்துக்கும் கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி? - சுவாமி விவேகானந்தர்
மத மாற்றத்துக்கும் கீழ்மைக்கும் யார் பொறுப்பாளி?
சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்.
“இந்தியாவிலுள்ள ஏழை மக்களிடையில் முகமதியர்கள் அதிகம் இருக்கின்றார்கள். அதற்கு காரணம் என்ன? கத்தியையும், வாளையும் காட்டிப் பயமுறுத்தி இந்துக்கள் முகமதியர்களாக மாற்றப்பட்டார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.
நம் நாட்டிலுள்ள ஜமீன்தார்களிடமிருந்தும், புரோகிதர்களிடமிருந்தும் சுதந்திரம் பெற்று வாழ்வதற்குத்தான் இந்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாறினார்கள்.
வங்காளத்தில் விவசாயிகளுக்கிடையில் இந்துக்களைவிட முஸ்லீம்கள் அதிகமாக இருப்பதைக் காணலாம். அதற்குக் காரணம் என்னவென்று தெரியுமா? அக்காலத்தில் விவசாயிகளுக்கிடையிலிருந்த ஜமீன்தார்களுடைய கொடுமையிலிருந்து விலகிக் கொள்வதற்காக இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்கள்.
தோட்டிகளையும், பறையர்களையும் இன்றைய இழிநிலைக்குக் கீழே இறக்கிக் கொண்டு வந்தவர்கள் யார்? அவர்கள் கீழ்மை அடைவதற்குப் பொறுப்பாளிகள் யார் என்னும் கேள்வி எழுமாயின் அதற்கு விடை வருமாறு:
அவர்கள் கீழ்நிலை அடைவதற்கு ஆங்கிலேயர்கள் பொறுப் பாளிகள் அல்லர்.
அவர்கள் கீழ்நிலைக்கு வந்ததற்கு நாமே பொறுப்பாளிகளாவோம். நம்முடைய துன்பத்துக்கும் நம்முடைய கீழ்மைக்கும் நாம் தாம் பொறுப்பாளிகள், மதத்தில் போலிகளும், அவநம்பிக்கை உடையவர்களும் இருக்கிறார்கள்.
அத்தகைய நயவஞ்சகர்கள் மதத்தின் உட்கருத்தை வலியுறுத்தாமல் வெளி ஆசாரங்களைப் பிரமாதப்படுத்திச் சுய நலத்தை வளர்ப்பவர்களாயிருக்கிறார்கள். அவர்கள் பாரமார்த்திகம், வியவகாரிகம் என்ற கொள்கைகளின் வடிவங்களில் கொடுமையான செயல்கள் பலவற்றை உருவாக்கியுள்ளார்கள். அவை அவர்களுடைய குற்றங்களாகும்.
ஏழைகள் என்று கூக்குரலிடுவதற்குப் பலர் இருக்கிறார்கள். ஏழைகளின் நலனுக்காக ஏதாவது செய்வதற்குச் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளுடைய துன்பத்திலும் துக்கத்திலும் பங்கு கொண்டு உண்மையாகவே உருகி அழுபவர்கள் எத்தனைபேர் இருக்கிறார்கள்?
மக்கள் இனத்துக்காகப் பாடுபடும் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? மனிதர்களாகப் பிறந்துள்ள நாம் மனிதர்களுக்காக உருகா விட்டால் நம்மை மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? பசியின்றி பட்டினியின்றி மக்களினம் வாழ நாம் என்ன செய்கின்றோம்? மக்களையெல்லாம் மகேசுவரன் நிலைக்கு உயர்த்த நாம் என்ன செய்கின்றோம்? இவ்வுலக வாழ்வை கடந்து அப்பால் செல்லுவதற்கும் இந்துமதம் சிறந்த வழிகாட்டியாகவிருக்கின்றது.
இந்தமதத்தைச் சரியாக அறிந்து அதை மக்களுக்குப் புரியும்படி செய்வது இந்துவினுடைய பொறுப்பாகும். இதைச் செய்யாததால் இந்து மதத்திலிருந்து மற்ற மதங்களுக்கு மக்கள் போகின்றார்கள். பொதுவாக நம்மவர்களிடையே பேச்சு அதிகம். செயல் குறைவு. கிளிப்பிள்ளை போன்று புத்தகத்தில் படித்தவற்றையும் பிறரிடமிருந்து கேட்டவற்றையும் பேசிக் கொண்டிருப்போம்.
நமக்குப் பேசத்தான் தெரியும் நமக்கு எதையும் செயல்படுத்தத் தெரியாது. அதற்கு காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் போதுமான உடல் பலம் இல்லை. நம் முடைய துன்பத்துக்கு நம்மிடமுள்ள உடல் பலகீனமே காரணமாகும்.
மேலும் நாம் சோம்பேறிகளாகவிருக்கின்றோம். செயல்புரிய வேண்டும் என்ற உற்சாகம் நம்மிடம் இல்லை. நம்மிடம் ஒற்றுமையும் இல்லை. ஒருவரை ஒருவர் நேசிக்கும் தன்மையும் இல்லை. நம்மிடம் சுயநலம் மிகவும் அதிகம். கீழ்நிலையி லுள்ள மக்களைப் புறக்கணிப்பது மதமாற்றத்துக்கு ஒரு காரணமாகும்.”
(தர்மசக்கரம் துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11)
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
assalamu alaikum. plz give me the link which is you posted the sundani with camel post.
Post a Comment