Followers

Monday, July 07, 2014

ஹதரல்மவுத் என்பது இஸ்லாத்தின் சாதிப்பிரிவா?

ஹதரல்மவுத் என்பது இஸ்லாத்தின் சாதிப்பிரிவா?

திரு அரவிந்தன் நீலகண்டன்!

// ‘லேடன் ஹத்ரமவுத் (Hadramaut) சாதியை சார்ந்தவர். இஸ்லாமிய மரபின் படி கிலாபத் அரசை மீண்டும் உருவாக்கக் கூடியவர் குரேஷி சாதியில் இருந்துதான் வர வேண்டும்.’ ஆக ஒரு இந்தியர் காலிப் ஆவது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாத காரியம். அத்தனை ஏன் ஜும்மா மசூதியில் இமாம் ஆக வேண்டும் என்றால் சையது புகாரியின் இரத்தத் தொடர்பு கொண்ட சந்ததிகளைத் தவிர வேறுயார் வர முடியும்? //

இந்த வரிகளைப் படித்தவுடன் என்னையறியாமல் சிரித்து விட்டேன். ஏனெனில் 'ஹதரல்மவுத்' என்பது எமனில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். அதனை சாதியாக நீங்களே உருவாக்கிக் கொண்டீர்கள். குரைஷி இனத்தைச் சேர்ந்தவர்தான் கிலாபத்துக்கு தலைமையேற்க வேண்டும் என்று எந்தகுர்ஆன் வசனத்தில் படித்தீர்கள். அல்லது எந்த நபிமொழியில் படித்தீர்கள்? தெரிவித்தால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

புதிதாக இஸ்லாத்தை ஏற்ற தலித் சகோதரன் தமிழகத்தின் பல பள்ளிகளில் இமாமாக இன்றும் பணியாற்றிக் கொண்டுள்ளனர். ஜூம்ஆ பள்ளிகளில் அழகிய முறையில் பிரசங்கமும் செய்து தொழுகையும் நடத்துகின்றனர். இமாம் புகாரியின் வாரிசுகள்தான் இமாமாக முடியும் என்ற உங்கள் வாதத்துக்கு குர்ஆன், அல்லது நபி மொழிகளின் ஆதாரத்தை சமர்ப்பியுங்கள். அல்லது சொன்னது தவறு என்று ஒத்துக் கொள்ளுங்கள்.

//இஸ்லாமிய சகோதரர்கள் உண்மையிலேயே கரிசனை காட்ட விரும்பும் பட்சத்தில் குறைந்த பட்சம் இரண்டு விசயங்களை செய்யலாம்.
1. ஜும்மா மசூதியில் பாரம்பரிய முறையில் இருக்கும் இமாம் சையது புகாரியின் பதவி தகுதி வாய்ந்த அனைத்து இஸ்லாமியருக்கும் அளிக்கப்பட வேண்டும். அது பாரம்பரிய முறையில் இருக்கக் கூடாது என இயக்கம் நடத்தலாம்.
2. ஒட்டுமொத்த முஸ்லீம்களுக்கு அல்ல ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சார்ந்த இஸ்லாமியருக்கே இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அடுத்த மிக முக்கிய கோரிக்கையை முன்வைக்கலாம்.//

1. ஒரு பள்ளியின் இமாமை தேர்ந்தெடுப்பது அந்த பள்ளியின் நிர்வாகிகளே! அவர்கள் நினைத்தால் நீங்கள் தகுதியானவராக இருந்தால் உங்களையும் இமாமாக நியமிக்கலாம். குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்து இஸ்லாமிய சட்டங்களை நன்கு படித்திருப்பது ஒன்றே அங்கு தகுதியாக பார்க்கப்படும். குர்ஆனும் நபி மொழிகளும் அதனைத்தான் முஸ்லிம்களுக்கு போதிக்கின்றன.
2. சாதிகளே இஸ்லாத்தில் இல்லை எனும் போது 'ஒடுக்கப்பட்ட சாதி' என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்து மதத்தில் சாதிக் கொடுமை தாங்க முடியாமல்தான் ஒரு தலித் இஸ்லாத்தை நோக்கி வருகிறார். இங்கும் அதே சாதி முறையை பின் பற்றினால் அதற்கு இந்து மதத்திலேயே இருந்து கொள்ளலாம்.

ஒரு சில மார்க்க அறிவற்ற முஸ்லிம்கள் கிராமப் புரங்களில் சில சாதி வேறுபாடுகளை கடை பிடிக்கின்றனர். வட நாடுகளில் இது தொடர்வதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்களும் மசூதிக்குள் நுழைந்து விட்டால் அனைவரையும் ஒன்றாகவே பாவிக்கின்றனர். இந்த சிறு வித்தியாசத்தையும் போக்குவதற்கு பல அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. பாகிஸ்தானிலும் சாதி பாகுபாடு பார்க்கும் முஸ்லிம்களை திருத்த முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்.

இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிரிவு என்பது திராவிடன், ஆரியன், ஐரோப்பியன் என்ற இனத்திலான பிரிவுகளே! ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரிவுகளானது பிறப்பினால் உருவாக்கப்படுகிறது. அதற்கு வேதங்களும் உபநிஷத்துகளும் துணை நிற்கின்றன. இந்த வேறுபாடுகளை புரிந்து கொள்ளுங்கள்.


No comments: