Followers

Sunday, March 01, 2020

வாட்ஸ்அப்பின் பலத்தினை புரிந்து கொள்ள முடிந்தது.

தொடக்கத்தில் இதனை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து வாட்ஸ்ஆப்பில் பரப்பப்படும் செய்திகளால் என்ன விளைவு ஏற்பட்டுவிடும் என்று தான் தோன்றியது. ஆனால் புல்வாமா , பாலகோட் தாக்குதலின்போது எந்த ஆதரமும் இல்லாமல் செய்திகள் அதிகளவில் திரும்பத் திரும்பப் பரப்பப்பட்டபோது தான் வாட்ஸ்அப்பின் பலத்தினை புரிந்து கொள்ள முடிந்தது.
2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு ஒரு காரணம் சமூக வலைதளங்களும் தான். குறிப்பாக வாட்ஸ் ஆப்கள். ஒரு செய்தி உண்மையா, பொய்யா என்பதெல்லாம் இங்கு தேவையில்லாதது. ‘இந்த செய்தி எனக்கு விருப்பமானதாக இருக்கிறது, இல்லை’ என்பது மட்டும் தான் இங்கே விதி. விருப்பம் என்றால் ஒரு பார்வர்ட் செய்தால் போதும். இதனை தேசத்துக்கு செய்யும் சேவையாக மாற்றியது எல்லாம் தந்திரம்.
2014 ல் 155 மில்லியன் பேர் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தியவர்கள். 2019 ல் இதுவே மும்மடங்கானது. 450 மில்லியன் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தத் தொடங்கியிருந்தனர். இதனை பாஜக தனது தேர்தலுக்கு பயன்படுத்திக் கொண்டது. ஊடகத்தைக் காட்டிலும் வலிமையானதாக வாட்ஸ் ஆப் மாற்றப்பட்டது.
உஜ்வல் பரிக் போன்றவர்கள் இதற்காக தன்னுடைய வேலையை விட்டு பாஜக தேர்தலில் வாட்ஸ் அப் மூலம் மக்களிடம் மோடி குறித்த செய்திகளைப் பரப்பியது பற்றி தனியாக எழுதலாம்.
பாராளுமன்றத் தேர்தலின் போது 9,00,000 செல்போன் பிரமுகர்களை பாஜக நியமித்திருந்தது. இது சாதாரண எண்ணிக்கை அல்ல. இவர்கள் ஏற்றி வைப்பதை பக்தாள்கள் கொளுத்திப் பரப்பினர்.
பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்திய ஓரே வாரத்தில் இதற்கு ஆதரவாக வாட்ஸ் அப் க்ரூப்கள் எண்ணிகையில் அடங்காத அளவுக்கு உருவாகின. அதில் பரப்பப்பட்டவை அனைத்தும் உண்மைக்கு புறம்பான தகவல்கள், எப்போதும் போல. அதில் சிலவற்றை thewire தனது கட்டுரை ஒன்றில் தெரிவிக்கிறது.
அரசாங்க மருத்துவமனையில் 45சதவீதம் பேர் இஸ்லாமிய நோயாளிகளால் நிரம்பியுள்ளதால் இந்து நோயாளிகள் சிகிச்சை இல்லாமல் அவதிபடுகின்றனர் என்றது ஒரு வதந்தி. இந்தியாவில் குற்றம் செய்து நிரூபிக்கப்பட்டவர்களில் 44சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் என்றது மற்றொரு செய்தி. இவையெல்லாம் எந்த அரசாங்க மருத்துவக் குறிப்பிலும், குற்றவியல் ஆவணப் புள்ளி விவரங்களிலும் இல்லாத தகவல்கள்.
இதோடு ஒரு படி மேலே போய் ஒவ்வொரு முஸ்லிம் கல்லறை கட்டப்பட்டபோதும் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை 16 இலட்சம் என்றது ஒரு வாட்ஸ்அப் வதந்தி.
இது போன்ற வதந்திகளை சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் உள்ளவர்களும் பரப்புகிறார்கள் என்பது தான் இன்று நாடு சந்திக்கும் பேராபத்து. டெல்லி கலவரத்தின் போது கூட இந்துக் கோயில் இடிக்கப்பட்டது என்கிற வாட்ஸ்ஆப் வதந்தி மேலும் வன்முறையைத் தூண்டியிருக்கிறது.
மக்கள் செய்திகளை நம்புவதை விட அதைப் பரப்புவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை பாஜக தெரிந்து வைத்திருக்கிறது. இதற்கு மக்களைப் பயன்படுத்திக் கொள்கிறது.
இணையதளம் மற்றும் வாட்ஸ்ஆப் பயன்பாடு பற்றித் தெரிந்திருப்பதால் தான் காஷ்மீரிலும், டெல்லி கலவரப்பகுதிகளிலும் முதலில் இணைய சேவையை முடக்கியது அரசு. இந்த மாபெரும் பொய்த் தகவல்களுக்கு மத்தியில் மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பது தான் ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்.
Deepa Janakiraman

1 comment:

Dr.Anburaj said...

கறைபடாத கரங்களுக்கு திரு.மோடி அவர்கள் சொந்தக்காரா் என்பதை உணா்ந்து மக்கள் அமோக ஆதரவு அளித்துள்ளார்கள்.

டெல்லி தோ்தலில் காங்கிரஸ் தோ்ச்சி 0 சீரோதானே.

உலகம் உள்ள அளவிற்கும் இந்தியாவில பாரதிய ஜனதா ஆட்சிதான்.


வாங்க வரும் தேர்தலில் தாமரைச் சின்னத்தில் வாக்களிப்போம்.