Followers

Saturday, January 19, 2019

அந்தக் கரங்களில் என்ன இருக்கிறது?

இந்தப் படம் பேராசிரியை ஒருவரால் முகநூல் பதிவில் பகிரப்பட்டிருந்தது.
மேலதிக விபரங்கள் அறிவதற்காக இணையத்தில் தேடியபோது மெய்சிலிர்த்தது.
அந்தக் கரங்களில் என்ன இருக்கிறது?அப்படி ஏன் அந்தக் கரங்களைப் பார்க்கிறார்கள்?அந்தக் கரங்கள் அவர்களிடம் ஏதும் பேசுகிறதா? கேளுங்கள்....
2012ல் ஆப்கானிஸ்தானின் காந்தகார் பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியினை மேற்கொண்டிருந்தார் தளபதி அப்துல் ரஹீம். அப்போது, குண்டு வெடித்ததில் தனது இரு கைகளையும் இழந்துவிட்டார். உடனடியாக அமெரிக்க மருத்துவக்குழு அவருக்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளித்தது. இருப்பினும் தனக்கு உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் கைகள் பொருத்தப்பட வேண்டும் என்று பல நாட்டு மருத்துவமனைகளை அணுகியும் பயனில்லை.இந்நிலையில் இந்தியாவில் கேரளாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் வெற்றிகரமாக உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அறிகிறார்.
ஆறேழு மாதங்களுக்கு முன் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். பொருத்தமான கைகளுக்குக் காத்திருக்கும் வேளையில், விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஜோஸப் என்பவரின் கைகளைப் பொருத்த ஆலோசிக்கப்படுகிறது.
ஜோஸப் குடும்பத்தினரின் ஒப்புதலுக்குப் பிறகு ஆபரேஷனுக்கு ஆயத்தமாகிறது மருத்துவக் குழு.பேராசிரியரும் உறுப்பு மாற்று சிகிச்சையின் நிபுணருமான டாக்டர். சுப்ரமணியம், இருபது மருத்துவர்கள் மற்றும் எட்டு மயக்க மருந்து நிபுணர்கள் கொண்ட மருத்துவக் குழுவினருடன் செயல் முறைகளைத் தொடங்குகிறார். ஏறத்தாழ பதினைந்து மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்படுகிறது.
தற்போது குணமடைந்து, தமது அன்றாடப் பணிகளை தமது(!) கைகளின் மூலமே செய்துவரும் அப்துல் ரஹீமை, மேலும் சில மாதங்கள் தங்கியிருந்து பிசியோதெரபி பயிற்சி எடுக்கப் பரிந்துரைத்திருக்கிறார் மருத்துவர்.
தமக்கு கைகளை வழங்கிய ஜோஸப் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போது எடுத்த படம் தான் இது.
ஜோஸப்பின் மனைவியும் மகளும் அந்தக் கைகளை கண்ணீரோடும் அன்போடும் பார்க்கும் பார்வையை விவரிக்க உலகில் மொழியேதும் உண்டோ?
கைகளை இழந்த ஒரு இஸ்லாமியனுக்கு, ஒரு கிறிஸ்தவனின் கைகளை எடுத்து ஒரு `இந்துவின் கைகளால் பொருத்தப்பட்டுள்ளது.
மதங்கள் தூக்கி எறியப்பட்டு, மனிதம் ஒட்டப்பட்டுள்ளது.மனிதம் மறந்து மதம்பிடித்துத் திரியும் மனங்கள் மடிந்து போகட்டும்,மண்ணில் மனித நேயம் தழைக்கட்டும்!
- ரபீக்
இந்த ஆக்கத்தை அனுப்பித் தந்த நண்பருக்கு நன்றி....


5 கிலோ மீட்டர் தனது தாயாரை சுமந்து சென்ற சரோஜ்!

5 கிலோ மீட்டர் தனது தாயாரை சுமந்து சென்ற சரோஜ்!
ஒரிஸ்ஸாவின் கர்பாபகல் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜ்(வயது 17). இவரது தாயார் இறந்து விட்டார். ஆனால் உடலை எடுத்துச் செல்ல அக்கம் பக்கத்தவர் யாரும் உதவ முன் வரவில்லை. காரணம் இவர் ஒரு கீழ் சாதி இந்து. என்ன கொடுமை!
தனது தாயாரின் உடலை தனது சைக்கிளில் வைத்து 5 கிலோ மீட்டர் தூரமிருக்கும் காட்டுக்குள் சென்று எரியூட்டியிருக்கிறார் சரோஜ். நாம் வாழ்வது நாகரிக சமூகத்தில்தானா என்ற ஐயம் ஏற்படுகிறது.
தகவல் உதவி
இந்தியா டுடே
17-01-2019


Friday, January 18, 2019

கும்பமேளாவினால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு!

கும்பமேளாவினால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு!
உபியின் கான்பூர் தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. கிட்டத்தட்ட 250 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. உபியை ஆளும் யோகி ஆதித்யநாத் அரசு கும்பமேளாவுக்காக 3 மாதத்துக்கு அனைத்து தொழிற்சாலைகளையும் மூடச் சொல்லி ஆணை பிறப்பித்துள்ளது. தினக் கூலிகள், தோல் பதனிடுவோர் என இரண்டு லட்சம் பேர் இதனால் வேலையிழந்து உள்ளனர்.
பெரும் முதலாளிகளோ '3 மாதம் வரை எங்களால் பொருத்திருக்க முடியாது. எங்கள் ஆர்டர்களை பாகிஸ்தான், பங்களாதேஷூக்கு திருப்பி விடுகிறோம்' என்று கூறுகின்றனர். இதனால் இரு நாடுகளும் பலனடையப் போகின்றன.
சிறு தொழில் அமைப்பின் தலைவரான ஹஃபீஸூர் ரஹ்மான் கூறுகிறார் 'இது முதல் முறையாக நடைபெறுகிறது. மூன்று மாதம் என்பது மிக அதிகம். முன்பெல்லாம் குளியல் நடைபெறும் 3 நாட்களுக்கு மட்டும் தொழிற்சாலைகளை மூடுவோம். அதனால் பெரும் பாதிப்பும் எங்களுக்கு இல்லை. மூன்று மாத தடையால் ஏற்கெனவே வாங்கிய ஆர்டர்களை இப்போது திருப்பி கொடுத்துள்ளோம். எங்களுக்கு வந்த ஆர்டர்கள் எல்லாம் தற்போது பாகிஸ்தானுக்கும், பங்களாதேஷூக்கும் சென்று விட்டது. லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து நிற்கின்றனர். வருடத்துக்கு 7000 கோடிக்கு மேல் தொழில் நடந்து நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியையும் தந்து கொண்டுள்ளன இத் தொழிற்சாலைகள். இன்று அனைத்தும் கேள்விக் குறியாகியுள்ளது.' என்கிறார்.
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
19-01-2019
யோகி ஆதித்யநாத் போன்ற சாமியார்களுக்கு உழைப்பின் மகத்துவம் விளங்க வாய்ப்பில்லை. வழக்கமாக கும்பமேளா நாட்களில் 3 நாட்கள் மட்டுமே தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும். மூன்று மாதம் மூடப்படுவதால் லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கின்றனர். நமது நாட்டுக்கு கிடைத்த அந்நிய செலாவணி இன்று பாகிஸ்தானுக்கு சென்று விட்டது.
"போலோ பாரத் மாதா கீ ஜே'


Thursday, January 17, 2019

பிஜேபி துணை தலைவர் ஆயுதக் குவியலுக்காக சிறையிலடைப்பு!

பிஜேபி துணை தலைவர் ஆயுதக் குவியலுக்காக சிறையிலடைப்பு!
தனன்ஜெய் குல்கர்னி (வயது 49) மும்பையின் டாம்பிவ்லியின் (Dombivli) பிஜேபியின் துணை தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான கடையிலிருந்து 170 பயங்கர ஆயுதங்கள் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை கிட்டத் தட்ட இரண்டு லட்சம் மதிப்புள்ளதாகும். இவ்வாறு மறைமுகமாக பல ஆண்டுகளாக ஆயுதங்களை விற்று வந்துள்ளார். பெரும்பாலானவை பஞ்சாப், ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டவை.
திலக் நகரில் உள்ள இவரது கடையிலிருந்து குவியல் குவியலாக ஆயுதங்களை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்நிகழ்வு மஹாராஷ்ட்ர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் தேச பக்தர்களா? அல்லது தேச விரோதிகளா?
தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
17-01-2018
Wednesday, January 16, 2019

12 பெண்கள் சவுதி அரேபியா ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்!12 பெண்கள் சவுதி அரேபியா ஜெத்தாவில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்!
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஹிப்சுர் ரஹ்மான் அகாடமியின் ஏற்பாட்டில் 12 பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா, பிலிப்பைன், பிரிட்டன் என்று பல நாட்டைச் சேர்ந்த பெண்கள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். இவர்களின் குடும்பத்தினர் பெரும்பாலானோர் நாத்திக சிந்தனையிலேயே இருந்துள்ளனர். இந்த பெண்களும் பெற்றோர்களை பின்பற்றி நாத்திக சிந்தனையிலேயே இருந்துள்ளனர். பணி நிமித்தமாக சவுதி அரேபியா வந்த இவர்களுக்கு இஸ்லாமிய வாழ்வு முறை மிகவும் பிடித்து விட்டது. அகாடமியின் முயற்சியால் இந்த பெண்களுக்கு சில மாதங்களாக குர்ஆனின் போதனைகளும் நபிகளாரின் வாழ்வு முறையும் போதிக்கப்பட்டது. அதன் பிறகு நடந்த நிகழ்வில் 12 பேரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
படத்தில் இருப்பது எட்டு சகோதரிகள். மற்ற நான்கு சகோதரிகள் புகைப்படத்தில் இல்லை. இவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினாலும் இஸ்லாமிய மார்க்கத்தில் நிலைத்திருக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என்று நாமும் பிரார்த்திப்போம்.
தகவல் உதவி
சவுதி கெஜட்
14-01-2019