Followers

Monday, December 29, 2008

இறந்தவர் உயிர் பெற்று எழ முடியுமா?

இறந்தவர் உயிர் பெற்று எழ முடியுமா?

சில மாதம் முன்பு நாம் பத்திரிக்கைகளில் ஒரு செய்தியைப் படித்திருப்போம். திருச்சியைச் சேர்ந்த வாலிபர் செல்வகுமார் தற்கொலையைப் பற்றியது அந்த செய்தி. இவர் கோவையில் உள்ள தன் அண்ணன் சார்லஸ் வீட்டில் வசித்து வந்தார். வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தி காரணமாக மின் விசிறியில் தூக்குப் போட்டுக் கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இறந்து போன செல்வகுமாரின் அண்ணன் சார்லஸ் ஒரு இன்ஜினீயர். இவர் தீவிர கிறித்தவ மத நம்பிக்கையுடையவர். இந்த மதப் பற்றினாலேயே தனது வேலையை ராஜினாமாச் செய்து விட்டு 'சுகம் அளிக்கும் அற்புதக் கூட்டம்' என்ற பெயரில் பிரார்த்தனைக் கூட்டங்களை ஆங்காங்கு நடத்தி வந்தார். மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசித்து வரும் இவர் பாஸ்டர் பட்டம் பெற்றவர்.

இறந்து போன தனது தம்பியை அடக்கம் செய்யாமல் தனது வீட்டிலேயே ஒரு ரூமில் வைத்து 'தம்பியை உயிர்ப்பிக்க' ப் போவதாக கூறி ஜெபம் பண்ண ஆரம்பித்துள்ளார். அவரது மனைவியையும் அவரது நான்கு குழந்தைகளையும் தனது தம்பிக்காக ஜெபம் பண்ண வைத்துள்ளார். இது ஒரு நாள் இரண்டு நாள் அல்ல. இரண்டு மாதங்கள் இதே போன்று இவரது குடும்பத்தினர் ஜெபத்தில் ஈடுபட்டுள்ளனர். பிணம் அழுகி துர்நாற்றம் வீசியும் ஜெபத்தை விட வில்லை.

முடிவில் உயிர்த்தெழுந்தது என்னவோ காவல்துறைதான். தற்கொலை செய்து கொண்ட விபரத்தை காவல் துறைக்கு தெரிவிக்காமல் இருந்தது. இறந்த உடலை அடக்கம் செய்யாமல் வைத்துக் கொண்டது. சுகாதாரக் கேட்டை விளைவித்தது - ஆகிய பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

ஏசுநாதர் இறந்தவர்களை உயிர்ப்பித்திருக்கிறார்: குருடனை பார்வையடைச் செய்திருக்கிறார்: குஷ்டரோகியைக் குணமாக்கியிருக்கிறார்: இதெல்லாம் நடந்தது உண்மை. ஏசுநாதருக்கு இந்த ஆற்றல் வந்தது கர்த்தரிடமிருந்து. எனவே அவரால் அற்புதங்கள் செய்ய முடிந்தது.

இதைப் பார்த்து சார்லஸ் தானும் தன் தம்பியை உயிர்ப்பிக்கப் போகிறேன் என்று கிளம்பியதால்தான் இவ்வளவு பிரச்னையும். இதே போன்ற பல கூட்டங்கள் பல இடங்களிலும் நடப்பதைப் பார்க்கிறோம். மனிதன் என்றுமே இறை சக்தியை அந்த இறைவனின் அனுமதி இல்லாமல் அடைய முடியாது என்பதை படித்தவர்களும் மறந்து விடுவதுதான் விந்தை.

'மேரியின் மகன் ஏசுவே! நான் உம் மீதும் உம் தாயார் மீதும் அருளிய என் அருட்கொடையை நினைவு கூறும். பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு உமக்கு உதவியளித்து நீர் தொட்டிலிலும் வாலிபப் பருவத்திலும் மனிதர்களிடம் பேசச் செய்தததையும் இன்னும் நான் உனக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுத்ததையும் நினைத்துப் பாரும். இன்னும் நீர் களிமண்ணால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தை போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும் இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும் வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும் நினைத்துப் பாரும். இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து வெளிப்படுத்தியதையும் நினைத்துப் பாரும்.'

-குர்ஆன் -5:110

இதே போன்ற கூத்துக்கள் இஸ்லாத்திலும் அவ்வப்போது நடப்பதுண்டு. மறைவான விஷயம் எனக்கும் தெரியும் என்று புருடா விட்டு கடைசியில் மாட்டிக் கொண்ட மௌலானாக்கள் பலர் உண்டு. இந்து மத சாமியார்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். அது பலரும் அறிந்த கதை.

ம்ம்... வீட்டுக்கு வீடு வாசப்படி.

Saturday, December 27, 2008

PJ என்ற ஈரெழுத்து வித்தகர்!


PJ என்ற ஈரெழுத்து வித்தகர்!

இன்று தமிழக முஸ்லிம்களிடையே மிகப் பெரும் மாறுதலை தோற்றுவித்தவர்களில் முதன்மையானவர் PJ என்று அனைவராலும் அழைக்கப்படும் பி.ஜெய்னுல்லாபுதீன். புரோகிதம், மூடப்பழக்கம், தர்ஹா வணக்கம், வரதட்சணை, தீவிரவாதம் என்று எந்த துறையையும் விட்டு வைக்காமல் இவை எல்லாம் இஸ்லாத்தில் இல்லாத தீமைகள் என்று தைரியமாக எடுத்துச் சொல்லி இதனால் பலரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டவர். இன்று இளைஞர்கள் கூட குர்ஆனையும் முஹமது நபியின் வாழ்க்கையையும் தங்களது வாழ்க்கையில் முடிந்தவரை கடைபிடிக்க முயல்வது இவரின் கடந்த 25 ஆண்டுகால பிரச்சாரம் என்றால் மிகையாகாது.

இந்துத்வவாதிகள் எத்தனையோ முயற்சி செய்தும் இன்று வரை தமிழகத்தில் கலவரம் வராமல் தடுத்ததில் பெரும் பங்கு இவர் தமிழகம் முழுதும் நடத்தும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியாகும். எவரின் மனமும் கோணாமல் இவர் அளிக்கும் பதில் பல இந்து நண்பர்களை இஸ்லாமியர்களை வெறுக்கும் நிலையிலிருந்து மாற்றியிருக்கிறது.

இவரால் சமீபத்தில் துவக்கப்பட்ட TNTJ என்ற 'தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்' அமைப்பு இன்று பட்டி தொட்டிகளெல்லாம் உறுப்பினர்களைக் கொண்டு ஒரு அரசாங்கத்தைப் போல் நடத்தப்படுகிறது. இந்த இயக்கம் இரத்த தானத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு தர காரணமாயிருந்தது, பெண்களையும் வீதிக்கு அழைத்து வந்து போராட வைத்தது என்று இவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவரது புத்தகங்கள் பலவற்றை சவூதி அரேபிய அரசு பல மொழிகளில் மொழியாக்கம் செய்து இலவசமாக விநியோகித்து வருவதில் இருந்தே இவரின் திறமையை அறிந்து கொள்ளலாம்.

இவரை சமீபத்தில் கல்கி இதழ் பேட்டி எடுத்தது. அவற்றை கீழே தருகிறேன்.

கல்கி -14-12-2008

'தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பு தமிழக இஸ்லாமியரிடையே செல்வாக்கு பெற்றது. குறிப்பாக இஸ்லாமிய பெண்கள் இந்த இயக்கச் செயல்பாடுகளில் பெருமளவு பங்கு கொள்கிறார்கள்.இந்த அமைப்பின் உயிரோட்டமாக இருப்பவர் பீ.ஜெய்னுல் ஆபிதீன். அவருடன் ஒரு சந்திப்பு....

கல்கி: 'இந்து மதம் சார்ந்தது' என்று சொல்லி மலேஷிய அரசு யோகாசனத்தைத் தடை செய்திருக்கிறதே?

பீஜே: அடிப்படையில் யோகாசனம் நல்ல உடல் மற்றும் மனப்பயிற்சி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்தவரை பிரச்னை எங்கே வருகிறது என்றால் மதம் சார்ந்த விசயங்கள் அதில் கலக்கப்படும் போதுதான். உதாரணமாக பிராணாயாமப் பயிற்ச்சியைச் சொல்லலாம். 'ஓம்...ஓம்' என்று சொல்லி இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்ய வேண்டும் என்று சில யோகாசன ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.

இது தவிர புராண விஷயங்களையும் மிக்ஸ் செய்கிறார்கள். 'இறைவன் ஒருவனே' என்ற ஏகத்துவ தத்துவத்தைக் கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு யோகாசனத்தில் மதத்தைக் கலக்கும் போது அதைக் கடைபிடிப்பது சாத்தியமில்லாமல் போகிறது. நாலைந்து ஆசனங்களில் இப்படி மதத்தைக் கலப்பது நடக்கிறது. மற்ற ஆசனங்கள் ஒரு பிரச்னையும் இல்லை. யோகாசனம் கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் செல்லும் இஸ்லாமியர்கள் பின்வாங்கக் காரணம் இதுதான்.

கல்கி: ஒழுக்கக் கேடுகள் நிறைந்த மைக்கேல் ஜாக்சனை இஸ்லாம் மதத்தில் சேர்த்துக் கொண்டது சரியா?

பீஜே: மைக்கேல் ஜாக்ஸன் ஒழுக்கக் கேடாக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் என்பதில் கருத்து வேற்றுமை கிடையாது. ஆனால் ஒரு மனிதன் திருந்தி வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். எல்லா மதங்களிலும் இது நடக்கிறது. மைக்கேல் ஜாக்ஸன் புகழ் பெற்றவராக இருப்பதால் அவரைப் பற்றித் தெரிகிறது. பாப் பாடகர் கேட் ஸ்டீவன்ஸன், குத்துச் சண்டை வீரர் முகமது அலி, எழுத்தாளர் கமலாதாஸ் ஆகியோர் இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்று இணைந்து நல்ல வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அது போல தான் மைக்கேல் ஜாக்ஸனும் இஸ்லாமில் சேர்ந்து மீகாயீல் ஆகியிருக்கிறார்.

கல்கி: ஒபாமா தன்னை இஸ்லாமில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று மதவாதிகள் சொல்கிறார்களே?

பீஜே: நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். ஒபாமாவின் தாயும் தந்தையும் சட்டபூர்வமான திருமண வாழ்க்கை மேற்கொண்டவர்கள் அல்ல. அவர்கள் கம்பேனியனாக வாழ்ந்து பிறந்தவர்தான் ஒபாமா. அவரது அப்பா அம்மாவை விட்டு பிரிந்தபின் அம்மா மீண்டும் மறுமணம்(அவரும் இஸ்லாமியர்) செய்து கொண்டார்.ஆனால் ஒபாமா தாய் வழிப் பாட்டியால் ஒரு கிறித்தவராகவே வளர்க்கப்பட்டவர். கிறித்தவ மிஷினரிகளிலும் வேலை செய்திருக்கிறார்.

பிறப்பின் அடிப்படையில் ஒருவர் தன்னை முஸ்லிம் என்று உரிமை கொண்டாட முடியாது. அவரே தன்னை கிறித்தவர் என்று சொன்ன பிறகு யாரும் அவரை கட்டாயப் படுத்தக் கூடாது.

கல்கி: பெருகி வரும் தீவிரவாதச் சூழலில் முஸ்லிம்களின் பொறுப்பு என்ன?

பீஜே: அதிகாரத்தில் உள்ளவர்களுக்குத்தான் பொறுப்பு வேண்டும்.நாங்கள் பொறுப்போடுதான் இருக்கிறோம். தீவிரவாதிகளுக்கோ தீவிரவாதத்துக்கோ நாங்கள் சிறிதும் இடம் கொடுப்பது இல்லை. நம் தென்காசியிலேயே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் மீது குண்டு வீசி மாட்டிக் கொண்ட குமார் பாண்டியன் இந்து முன்னணியைச் சேர்ந்தவர். முஸ்லிம்கள் மீது பழி போட பார்த்தார்கள். கோயம்புத்தூர் குண்டு வெடிப்பில் கைது செய்யப் பட்ட முஸ்லிம்களுக்கு எந்த முஸ்லிம் இயக்கமும் சட்ட உதவி செய்யவில்லை. ஆனால் மாலேகான் விவகாரத்தில் இந்து அமைப்புகள் கைது செய்யப் பட்டவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்கின்றன. இது சரியா?

அரசியல்வாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியால் நடைமுறை வாழ்க்கையில் இன்னல்களை அனுபவித்து வரும் நாங்கள், தீவிரவாதத்தை ஆதரித்து அமைதியை இழப்போமா? நாங்கள் அகிம்சையின் அமைதியை விரும்புகிறோம்.

Thursday, December 25, 2008

தோழர் செங்கொடியும் பரிணாம அறிவியலும்!

தோழர் செங்கொடியும் பரிணாம அறிவியலும்!

டார்வினின் பரிணாம அறிவியலுக்குள் புகுந்தால் சில நேரங்களில் படிக்கும் நாமே குழப்பத்தோடு வெளியில் வருவோம். இதுவரை இந்த துறையை அனைவரும் ஒத்துக் கொள்ளும் படியாக விளக்கமளித்த நபர்களே இல்லை எனலாம். அந்த குழப்பமும் சிக்கலும் நிறைந்த பரிணாமக் கொள்கையைப் பற்றி சில காலம் முன்பு நானும் இங்கு பதிவாக இட்டிருந்தேன். இதைப் படித்த தோழர் செங்கொடி இது சம்பந்தமாக மேலும் விவாதிக்க என் தளத்துக்கு வாருங்களேன் என்று அழைப்பு விடுத்திருந்தார். தற்போதுள்ள வேலைப்பளுவில் அதற்க்கெல்லாம் நேரம் இருக்காது என்பதால் அவர் வலைப்பதிவை பார்வையிட்டதோடு விட்டு விட்டேன். கம்யூனிஷத்தில் பிடிப்புள்ளவர் ஆதலால் நிறைய படிக்கிறார் போல. நிறைய விபரங்களைத் தெரிந்தும் வைத்திருக்கிறார்.

சமீபத்தில் உயிர் சம்பந்தமாக நான் இட்ட பதிவில் உயிர் சம்பந்தமாக நாத்திகவாதிகள் வைக்கும் வாதத்துக்கு பல விளக்கங்களை இந்த பதிவு தந்திருக்கும். எனவேதான் பரிணாமவியலில் எழுப்பப்படும் பல கேள்விகளுக்கும் இதிலும் விடை கிடைக்கும் என்ற ரீதியில் பதிவிட்டிருந்தேன். இதைப் பார்த்த செங்கொடி திரும்பவும் ?
இங்கு 'வாருங்களேன் விவாதிப்போம்' என்று அழைத்துள்ளார். நான் முன்பே கூறியது போல் வருட முடிவில் வேலைப்பளுவைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. எனவே எனக்கு உள்ள சில சந்தேகங்களை பின் வருமாறு பட்டியலிட்டுள்ளேன். தோழர் செங்கொடியோ அல்லது இது பற்றித் தெரிந்தவர்கள் விளக்கமளித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

1. 'ஒரு உயிரிலிருந்துதான் மற்றொரு உயிரினம் உருவாக முடியும்' என்பது அறிவியலார் பொதுவாக ஒத்துக் கொண்ட உண்மை.

ஆனால் பரிணாமவியலோ உலகம் முழுவதும் உயிரற்றப் பொருட்களான கற்பாறைகள் மண்,வாயு ஆகியன நிரம்பி இருந்த போது காற்று, மழை, மற்றும் மின்னல் ஆகியவற்றின் பல பொருட்களின் கூட்டு விளைவால் உயிர் உண்டானது என்கிறது. இரண்டு கருத்தக்களில் ஏதோ ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். இதற்கான உங்களின் விளக்கம் என்ன?

2.ஜீன்களை ஆராய்ந்த அறிவியலார் மனித இனம் அனைத்தும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து பிறந்து பிறகு பல்கிப் பெருகியதாக கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு பற்றி பரிணாமவியல் சொல்வது என்ன?

3. 'ஆற்றலை ஒரு போதும் உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஆயினும் மாற்றி அமைக்கவே முடியும்' - ஐன்ஸ்டீன்.

ஒரு பொருளைப் படைப்பதற்கு ஆற்றல் மிகவும் இன்றியமையாதது.மனிதனைப் படைத்தது இறைவன் தன்னகத்தே கொண்ட ஆற்றலினால் என்கின்றனர் ஆன்மீகவாதிகள். இல்லை... மனிதனாலும் படைக்க முடியும் என்கின்றனர் நாத்திகவாதிகளும் பரிணாமவியலாரும். இது உண்மையானால் அண்டசராசரங்கள் அடங்கிய இப் பேரண்டத்திலிருந்து எந்த ஒன்றையும் எவ்விதத்திலும் பயன்படுத்தாமல் சுத்த சூன்யத்திலிருந்து சுயமாக (இறைவன் படைப்புகளில் கை வைக்காது) சொந்த ஆற்றலைப் பயன்படுத்தி ஒரு சிறிய அணுவையேனும் படைத்துக் காட்ட முடியுமா?

4.நமக்குள் இருக்கும் உயிர் எங்கிருந்து வருகிறது? உயிரின் உதயம் எவ்வாறு நிகழ்கிறது? மனிதனின் இறப்புக்குப் பின் எங்கு செல்கிறது?

5.மனிதனுக்குப் பிறகு பரிணாமம் அடைந்து நாம் என்னவாகப் போகிறோம்? அது எப்போது என்பதையும் தெரிவிக்க முடியுமா?

6. எந்த ஒரு கோட்பாடும் நிரூபிக்கப் பட்டதாக இருக்க வேண்டும். டார்வினின் கோட்பாடுகளில் எத்தனை கோட்பாடுகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளன?

7.மனிதன் தனது உடல் அமைப்பால் மனிதன் என்ற பெருமையைப் பெறவில்லை. பகுத்தறிவால்தான் பெறுகிறான்.

உடல் வளர்ச்சி, உடல் அமைப்பில் மாறுதல் என்பதற்குத்தான் டார்வின் காரண காரியங்களைக் கூறுகிறார். பகுத்தறிவு இல்லாத உயிரினம் பகுத்தறிவு உள்ளதாக மாறுவதற்குரிய சூழல் நிர்பந்தம் எது என்று பரிணாமவியல் கூறும் தத்துவம் என்ன?

பரிணாமவியலை முழுவதும் படித்தவனல்ல நான். எனக்குள் எழுந்த சந்தேகங்களை பட்டியலிட்டுள்ளேன். நான் தெளிவு பெற விளக்கமாக பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

தின மலர். அறிவியல் ஆயிரம்!

கேள்வி: பலரது சந்தேகம் உலகம் எப்படி வந்தது? முதலில் ஒரு செல் உயிர் தோன்றியது என்றும்: சிலர் கடவுள் நம்மைப் படைத்தார் என்றும் கூறப்படுகிறது. எது நிஜம்?

-பிரியங்கா, பண்ணைக்காடு, கொடைக்கானல்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.

சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.

ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார?

Tuesday, December 23, 2008

இந்த காவல்காரர் செய்த தவறு என்ன?இந்த காவல்காரர் செய்த தவறு என்ன? கண்டு பிடியுங்கள் பார்ப்போம!

ஹைதராபாத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் கார்பரேஷன் ஈடுபட்டிருந்தது. அப்பொழுது அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூராக ஒரு சிறிய கோவில் இருந்தது. அதை அகற்ற வந்த பணியார்களுக்கு பாதுகாப்பாக வந்த காவலரை இந்துத்வாவாதிகள் தாக்குவதைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள்.

அத்வானியும், மோடியும் குறிப்பிடும் ராமராஜ்யம் என்பது இதுதானோ!

Saturday, December 20, 2008

'கடவுள்' தோனிக்கு கோவில்: ராஞ்சி ரசிகர்கள் முடிவு!ராஞ்சி: கிரிக்கெட்டில் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு ராஞ்சி ரசிகர்கள் சேர்ந்து கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தலைமையில், "டுவென்டி-20' உலககோப்பை, ஆஸ்திரேலியா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி, தற்போது இங்கிலாந்து தொடரிலும் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

ஐந்தரை அடி சிலை: இந்நிலையில் தோனியை கவுரவிக்கும் விதத்தில் தோனி ரசிகர்கள் கிளப், ராஞ்சியில் கோவில் கட்ட முடிவு செய்துள்ளனர். 1,650 சதுர அடியில், அடுத்த ஆண்டில் கோவில் கட்டி, ஐந்தரை அடி உயரத்தில் தோனிக்கு சிலை வைக்கப்பட இருக்கிறது. இதுதவிர தோனியின் சிறுவயது, இளைஞர் மற்றும் இந்திய அணியில் அறிமுக புகைப்படங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இந்த கோவிலில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது.

கிரிக்கெட் கடவுள்: இதுகுறித்து, தோனி ரசிகர்கள் கிளப்பின் தலைவர் ஜிதேந்திர குமார் சிங் தெரிவித்தது: அமிதாப்பச்சன், ஷாருக்கானுக்கு லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரபலமான தோனிக்கு ஏன் கோவில் கட்டக்கூடாது. ஜார்க்கண்ட் மற்றும் ராஞ்சியை கிரிக்கெட் உலக வரை படத்தில் இடம்பெற செய்தவர் தோனி. இதனால் தோனி ரசிகர்கள் கிளப்பின் சார்பில் "கிரிக்கெட் கடவுள்' தோனிக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம். இதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை.

கோவில் திறப்பு: கோவில் கட்டுவதற்கு, பல்வேறு தரப்பில் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவிலை திறந்து வைக்க தோனியை சம்மதிக்க வைக்க உள்ளோம். இவ்வாறு ஜிதேந்திர குமார் சிங் தெரிவித்தார்.

-Dina Malar

Thursday, December 18, 2008

அதிகாரி ஹேமந்த் கர்கரேயை சுட்டது யார்?

அதிகாரி ஹேமந்த் கர்கரேயை சுட்டது யார்?

மும்பை துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளால் ஹேமந்த் கர்கரே சுடப்பட்டதாகவும், அதை உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியே ஒத்துக் கொண்டதாகவும் நாம் செய்திகளில் படித்தோம். ஆனால் நேற்று மத்திய மந்திரி அப்துர்ரஹ்மான் அந்துலே 'அதிகாரி ஹேமந்த் கர்கரேயின் சேவைக்கும் தியாகத்துக்கும் தலை வணங்குகிறேன். நேர்மையான அதிகாரி. இவரை குறிப்பாக சுடுவதற்கு தீவிரவாதிகளுக்கு எந்த காரணமும் இல்லை. மாலேகான் குண்டு வெடிப்பில் நேர்மையாக நடந்து குற்றவாளிகளை பிடித்ததில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகத்தான் நான் பார்க்கிறேன்.' என்று தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

'ஒரு மத்திய மந்திரி நாட்டில் மிக முக்கியமாக கருதப்படும் ஒரு சம்பவத்தைப் பற்றி ஆதாரம் இல்லாமல் சொல்லியிருப்பாரா?' என்றும் 'பொறுப்பற்ற முறையில் பேட்டி கொடுத்த அந்துலே பதவி விலக வேண்டும்' என்றும் காரசாரமான விவாதங்கள் தொடங்கி விட்டன. அந்துலேயின் கொடும்பாவி எரிப்பையும் சிவசேனை செய்து முடித்து விட்டது.

என் பாகிஸ்தானிய நண்பரிடம் பாம்பே குண்டு வெடிப்பைப் பற்றிய வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது அவர் 'பலுசிஸதான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள மாகாணங்களில் பாகிஸ்தானின் சட்டங்களை மதிப்பவர் எவருமில்லை. பாகிஸ்தானும் அங்கு சற்று அடக்கியே வாசிக்கும். போதைப் பொருள் நடமாட்டமும் இங்கு அதிகம். பணத்திற்காக எதையும் செய்யக் கூடிய கூலிகள் இங்கு அதிகம் கிடைப்பர்.' என்ற ரீதியில் சொன்னார்.

அவர் மேலும் கூறும்பொழுது 'மும்பை குண்டு வெடிப்பைப் பார்த்து நான் மிகவும் வருத்தமுற்றேன். இதில் என் நாட்டைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளது என்னை மிகவும் வருத்தமுறச் செய்கிறது. பாகிஸ்தானில் சில மத்ரஸாக்களில் ஜிஹாதுக்கு தவறான விளக்கம் கொடுத்து மூளை சலவையும் நடக்கிறது. அவர்களுக்கு உங்கள் நாட்டு சில ஹிந்துத்வா தலைவர்களின் இஸ்லாத்துக்கு விரோதமான பேச்சுக்களையும் போட்டுக்காட்டி தயார்ப்படுத்துகிறார்கள். தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க எங்கள் நாடு இது போன்ற தவறாக வழிநடத்தப்படும் மத்ரஸாக்களை மூட வேண்டும். இதன் மூலமே அப்பாவிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவதைத் தடுக்க முடியும்.' என்றும் கூறினார்.

இந்தியாவில் கூட எல்லையோரம் சில இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலையை எடுப்பதையும் பார்க்கிறோம். தவறாக வழி நடத்தப்பட்டிருக்கும் இது போன்றவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்க வேண்டும். நமது நாட்டை நிர்மூலமாக்கும் எவனையும் அது முஸ்லிமாக இருந்தாலும் அவனுக்கு எதிரான நிலையைத்தான் இந்திய முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். 95 சதவீதமான இஸ்லாமியர் இந்திய சார்புடையவர்களாகவே இருக்கின்றனர். அப்படி மாறும் ஒரு சிலர் கூட இந்திய ராணுவத்தாலும் காவல்துறையாலும் பாதிப்படைந்தவர்களே!

சரி தலைப்புக்கு வருவோம்....

'இது போல் கூலிக்கு வேலை செய்யும் பாகிஸ்தானிகள் கூட்டத்தில் குறிப்பிட்டு ஹேமந்த் கர்கரேயை சுட்டது எப்படி? போலீஸ் காவலில் உள்ள பாகிஸ்தானிய தீவிரவாதியை சித்திரவதை செய்து தங்கள் விருப்பத்துக்கு தோதுவாக வாக்கு மூலம் வாங்க முடியும் தானே' என்ற ரீதியிலும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இந்த சதியில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் சதியும் இருக்கலாம் என்ற பாகிஸ்தான் அதிகாரியின் பேட்டியையும் என் நண்பர் சுட்டிக் காட்டினார். இது போல் பல யூகங்களுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

பதிவு இடும் நேரம் அந்துலே தனது கருத்தை வாபஸ் வாங்கிக் கொண்டதாக செய்தியில் பார்த்தேன்.

Wednesday, December 17, 2008

எறும்புகளைப் பற்றி என்றாவது எண்ணியதுண்டா?


எறும்புகளைப் பற்றி என்றாவது எண்ணியதுண்டா?

நாம் அன்றாடம் சந்திக்கும் பல உயிரினங்களில் எறும்பும் ஒன்று. இந்த எறும்பினத்தைப் பற்றி நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? இந்த பதிவில் எறும்புகளைப் பற்றி சில ருசிகர தகவல்களை பரிமாறிக் கொள்வோமே!

எறும்புகளின் அறிவாற்றல்:

ஒரு வகை எறும்பு இனத்தில் தொழிலாளி எறும்புகள் குளிர் காலங்களில் பிற எறும்புகளின் உணவுக்காகச் சின்ன சின்ன வித்துக்களை இழுத்து வந்து புற்றுக்களில் சேர்க்கின்றன. புற்றுக்கள் தானியங்கள், வித்துக்கள் போன்றவற்றை அரைப்பதற்க்கென்றே ஒரு கிடங்கை அந்த எறும்புகள் உருவாக்குகின்றன.

அங்கே குடியிருக்கும் எறும்புகளுக்கு தானியங்களை அரைத்து உண்ணுவதற்க்கேற்ற வகையில் முன்னேற்ப்பாடுகள் செய்து தருவதற்க்கான பொறுப்பை பெரிய தாடைகளையுடைய சில எறும்புகள் ஏற்றுக் கொள்கின்றன. அது ஒன்று தான் அந்த எறும்புகளின் வேலை. இலையுதிர் காலம் வரும்போது அந்தக் கிடங்கிலுள்ள எல்லா தானியங்களும் அரைத்து முடிக்கப்பட்டு விடுகின்றன. இப்போது பெரிய எண்ணிக்கையுடைய அந்த எறும்புகளின் தலை சிறந்த பணி முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த உணவைப் பாதுகாப்பது ஒன்றுதான்.இன்னும் சில வகை எறும்புகளை அவற்றின் உள்ளுணர்வோஅல்லது அறிவுத்திறனோ எதுவோ ஒன்று அவற்றின் உணவுக்காகவும் வசிப்பதற்க்காகவும் புல் வீடுகளை வளர்க்கச் சொல்லித் தூண்டுகிறது. புல்லால் ஆன அந்தக் குடில்களே அவற்றிற்கு உணவாகவும் பயன்படுவதால் அவற்றைத் தோட்ட வீடுகள் என்றும் சொல்லலாம்.

சில எறும்புகள் தேன் கூடுகளுக்கு இடர் விளைவிக்கும் சில குறிப்பிட்ட கம்பளிப் புழுக்களையும் பூச்சிகளையும் வேட்டையாடி உண்ணுகின்றன. அந்த புழுக்களும் பூச்சிகளும்தான் அவற்றுக்கு மாமிசம் வழங்கும் ஆடு மாடுகளாகும். அந்தப் புழுக்களிலிருந்து தேனைப் போல வடியும் ஒரு திரவத்தையும் அந்த எறும்புகள் உணவாகக் கொள்கின்றன.

சில எறும்புகள் அவற்றிலேயே சிலவற்றைப் பிடித்துத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்கின்றன. வேறு சில எறும்புகள் தமக்குக் குடில் அமைத்துக் கொள்ளும் போது இலை தழைகளை தமக்குத் தேவையான பருமனுக்கு ஏற்ப வெட்டிக் கொள்கின்றன.

சில தொழிலாளி எறும்புகள் ஓய்வாகத் தமது கை கால்களை ஓரிடத்தில் கிடத்திக் கொண்டு படுத்து விடும்போது பட்டுப் புழுக்களைப்போல் நூல் நூற்க்கவும் அவற்றால் நெய்யவும் தெரிந்த கூடுகளில் வாழும் ஒரு வகைச் சிற்றெறும்புகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. சில குட்டி எறும்புகளுக்கு அவற்றுக்கான கூடுகளை உருவாக்கிக் கொள்ளத் தெரியாத போது அதன் சமுதாயம் பாடுபட்டு அதற்காக ஒரு கூட்டை உருவாக்கித் தருகின்றது.

-'அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகிறது'
பேராசியர் மஹ்மூத் ஸாலிஹ்

பேராசியரின் இந்த கட்டுரையைப் பார்த்து நாம் பிரமித்து போகிறோம். சின்னஞ்சிறிய எறும்பு அதற்கும் கண் வாய் மூக்கு வயிறு குடல் மலப்பாதை என்று ஒன்று விடாமல் அதனுள் வைத்து அதற்கு உயிரையும் கொடுத்தது எந்த சக்தி?

எந்த உயிரணுக்களிலிருந்து எறும்புகள் உருவாகின்றனவோ அவற்றிடம் இந்த சிக்கல் நிறைந்த பணிகள் எல்லாம் எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன?

நிச்சயம் அங்கே அவற்றுக்கெல்லாம் இந்தப் பணிகளை நிறைவேற்றுதற்க்குரிய வழிகாட்டும் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

'அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்' - குர்ஆன் 87:1-2-3

Sunday, December 14, 2008

யார் இந்த அஃப்ஸல்?

இன்று சிவசேனைக் கட்சியைச் சார்ந்த சிலர் அஃப்சல் குருவின் உருவத்தை தூக்கில் தொங்க விட்டு ஆக்ரோஷமாக அடிக்கவும் செய்தனர். இன்று கூட ஒரு அனானி அஃப்சல் குருவை பற்றிய எனது அபிப்ராயத்தையும் கேட்டிருந்தார். இவற்றுக்கெல்லாம் பதிலாக நான் ஒரு வருடம் முன்பு இட்ட பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

யார் இந்த அஃப்ஸல்?

'1990-ல் அப்ஸல் 'ஜே.கே.எல.எஃப்' என்ற இயக்கத்தால் கஷ்மீரில் வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் போல் கவரப்பட்டார். பாகிஸ்தானுக்கும் ஒரு முறை சென்றார். இயக்கத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளால் மனம் உடைந்து டெல்லி சென்றார். டெல்லியில் தன்னுடைய படிப்பை தொடர்ந்திட முடிவு செய்தார்.அவர் எப்போதும் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.அதற்கு முன் அவர் எம்.பி;பி;எஸ் (மருத்துவப் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்தார். என் கணவர் சாதாரண வாழ்க்கையையே வாழ்ந்திட விரும்பினார். அதனால் நமது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவருடைய சான்றிதழ்களைத் தர மறுத்து விட்டனர். சான்றிதழ்களை தந்திட வேண்டும் என்றால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்திட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினர். இதனால் இன்னும் இரண்டு பேரை சரணடையச் செய்தார். அதன் பின்னர் அஃப்ஸலுக்கு ஒரு சான்றிதழைத் தந்தார்கள். அதில் 'அவர் ஒரு சரணடைந்தவர்' எனக் குறிப்பிட்டிருந்தார்கள். சரணடைந்த ஒருவராக கஷ்மீரில் வாழ்க்கை நடத்துவது மிகவும் சிக்கலான ஒன்று. ஆனாலும் அவர் தன் குடும்பத்தோடு கஷ்மீரிலேயே வாழ்ந்திடுவது என முடிவு செய்தார்.'

'1997-ல் அவர் ஒரு சிறு வியாபாரத்தைத் தொடங்கினார். அது மருத்துவம் - மருந்து ஆகியவை தொடர்பான வியாபாரம். மருத்துவ கருவிகளை வாங்கி விற்பதும் இதில் அடங்கும். அடுத்த வருடம் நாங்கள் திருமணம் முடித்துக் கொண்டோம். அப்போது அவருக்கு வயது 28. எனது வயது 18.'

'நாங்கள் கஷ்மீரில் வாழ்ந்த காலங்கள் வரை இந்திய பாதுகாப்புப் படையினர் எங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டே இருந்தார்கள். யார் யார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கின்றதோ அவர்களைப் பற்றிய தகவல்களைத் தந்திட வேண்டும். அவர்களை உளவு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என அழுத்தங்களும் அல்லல்களும் தந்து கொண்டே இருந்தார்கள். '22 ரைஃபிள்ஸ்' என்ற ராணுவப் பிரிவைச் சார்ந்த மேஜர் இராம் மோகன் ராய் என்பவர் அஃப்ஸலை சித்திரவதை செய்தார். அவருடைய மரம ஸ்தானத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி சித்திரவதை செய்தார். அஃப்ஸலை அவமானப் படுத்தினார். கேவலமான சொற்களைக் கொட்டி வைதார்.'

'சில நாட்கள் கழித்து சிறப்புக் காவல் படையினர் அவரைத் தங்களுடைய ஹம்ஹமா முகாமிற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த முகாமில் வைத்து டி.எஸ்.பி.டாரிந்தர் சிங், டி.எஸ்.பி. வினாய் குப்தா ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் கேட்டார்கள். இந்த ஒரு லட்சம்ரூபாயை கொடுக்கும் அளவிற்கு நாங்கள் வசதியானவர்கள் அல்ல. அதனால் நாங்கள் எங்களிடமிருந்தவை அனைத்தையும் விற்றுவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம்.என்னுடைய திருமணத்தில் கிடைத்த சிறிய தங்க நகையையும் விற்பனை செய்ய வேண்டியதாயிற்று. இத்தனையையும் அஃப்ஸலை இந்தச் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றிட இழக்க வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸலை குளிர்ந்த நீரில் நிறுத்தி வைத்தார்கள். பெட்ரோலை அவருடைய மலத் துவாரத்தில் ஊற்றினார்கள்.ஒரு அதிகாரி சாந்தி ஷிங் என்பவர் அஃப்ஸலை கடுங்குளிரில் தலை கீழாக தொங்க விட்டார். மணிக்கணக்கில் தொங்க விட்டார். அவருடைய மறைவிடத்தில் மீண்டும் மின் அதிர்ச்சியைப் பாய்ச்சினர். இந்த சித்திரவதை ரணங்களிலிருந்து வெளியே வந்திட அவர் பல மாதங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.'

'அஃப்ஸல் ஏதேனும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். அதனால்தான் அவரை இப்படி சித்திரவதை செய்திருக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். இப்படிச் சித்திரவதை செய்யப் பட்டது அவரிடமிருந்து தகவல்களைச் சேகரிக்கத்தான் என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆனால் கஷ்மீரில் இருக்கும் சூழலை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். கஷ்மீரில் வாழும்; ஒவ்வொருவருக்கும் அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்திருக்கும். அவர் அங்கு நடப்பவற்றில் பங்கு பெறுகிறாரோ இல்லையோ அங்கு என்ன நடக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மக்கள் அனைவரையும் தகவல் சொல்பவர்களாக மாற்றுவதன் மூலம் அண்ணனுக்கு எதிராக தம்பியையும், கணவனுக்கு எதிராக மனைவியையும், பிள்ளைகளுக்கு எதிராக பெற்றோரையும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அஃப்ஸல் தன் குடும்பத்தோடு அமைதியாக வாழவே விரும்பினார். ஆனால் எஸஃ.டி.எஃப் என்ற சிறப்புக் காவல் அதற்கு அனுமதிக்கவில்லை.'

'இது போன்ற குரூரமான சூழ்நிலையிலிருந்து அஃப்ஸல் தன்னை விடுவித்துக் கொள்ள விரும்பினார். அவர் தக் வீட்டை விட்டு வெளியேறினார்.தன் குடும்பத்தையும் தொடர்ந்தார் டெல்லி வந்தார்.டெல்லியில் வந்து வயிறு பிழைக்க விரும்பினார். அங்கே தன்னுடைய வாழ்க்கையைச் சீர் செய்திட முயற்சி செய்தார். வாழ்க்கை ஓரளவுக்கு நிலை பெற்றதும் என்னையும் எங்களது நான்கு வயது மகனையும் டெல்லிக்கு அழைத்து வாழ வைப்பதாக முடிவு செய்தார்.எல்லாக் குடும்பங்களையும் போல நாங்கள் ஒன்றாய் வாழ்ந்திட விரும்பினோம். ஆனால் மீண்டும் சிறப்புக் காவல் படையினர் என் கணவரை டெல்லியிலும் துரத்த ஆரம்பித்தனர். அத்தோடு எங்களுடைய எல்லாக் கனவுகளும் தகர்ந்து தவிடு பொடியாயின.

'சிறப்புக் காவல் படையினர் என் கணவரிடம் முஹம்மத் என்பவரை கஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வர வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினார்கள். என்னுடைய கணவர் இந்த முஹம்மத் என்பவரையும், தாரிக் என்பவரையும் சிறப்புக் காவல் படையின் கஷ்மீர் முகாமில் வைத்தே சந்தித்தார். இவர்களைப் பற்றி என்னுடைய கணவருக்கு எதுவும் தெரியாது. அதே போல் ஏன் இப்படியொரு பணியைச் (கஷ்மீர் சிறப்புக் காவல் படையின் முகாமிலிருந்து இவர்களை டெல்லிக்கு அழைத்து வரும் பணியை) செய்யச் சொல்கிறார்கள் என்பதும் என் கணவருக்குத் தெரியாது. '

'இவற்றை எல்லாம் என் கணவர் நீதி மன்றத்தில் விரிவாக எடுத்துச் சொன்னார். ஆனால் நீதி மன்றமோ பாதியை எடுத்துக் கொண்டது. மீதியை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டது. என்னுடைய கணவர் முஹம்மதை காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்தார் என்பதை எடுத்துக் கொண்டது. ஆனால் முஹம்மதை சிறப்புக் காவல் படைதான் தன் முகாமிலிருந்து டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி பணித்தது என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்தது.'

'கீழ் நீதி மன்றங்களில் அஃப்ஸல் என்ற என் கணவருக்கு வாதாட யாரும் இல்லை. நீதி மன்றம் ஒரு வழக்கறிஞரை நியமித்தது. அவரோ என் கணவரிடம் என்ன நடந்தது என்பதை எப்போதும் கேட்டதில்லை. அதே போல் அவருக்கு எதிராகச் சாட்சியம் சொன்னவர்களைக் குறுக்கு விசாரணையும் செய்யவில்லை. அந்த வழக்கறிஞர் என் கணவரை வெறுத்தார். நீதிபதி திங்காரா அவர்களிடம் என்னுடைய கணவர் 'அந்த வழக்கறிஞர் எனக்காக வாதாட வேண்டாம் ' என்று எவ்வளவோ சொன்னார். ஆனால் நீதிபதி திங்காரா அதைக் கண்டு கொள்ளவே இல்லை. உண்மையில் என் கணவர் கீழ் நீதி மன்றத்தில் தனது தரப்பில் எதையும் எடுத்துச் சொல்லிட இயலவில்லை. என்னுடைய கணவர் எதையேனும் சொல்லிட முற்படும் போதெல்லாம் நீதிபதி அதைக் கேடக மறுத்து விட்டார். அவர் தன்னுடைய துவேஷங்களை வெளிப்படையாகவே நீதி மன்றத்தில் காட்டினார்.'

'உயர் நீதி மன்றத்தில் ஒருவர் மனித உரிமை வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்டு என்னுடைய கணவருக்காக வாதாட முன் வந்தார். என் கணவரும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால் அவர் என் கணவருக்காக வாதிடவில்லை. மாறாக நீதி மன்றத்திடம் என் கணவரைத் தூக்கிலிட்டுக் கொலை செய்யக் கூடாது: விஷ ஊசியைப் போட்டுத்தான் சாகடிக்க வேண்டும் என வாதாடினார். என் கணவருக்காக ஒரு வழக்கறிஞரை வைத்திடும் வாய்ப்பு எனக்கிருக்கவில்லை. எனக்கு டெல்லியில் யாரையும் தெரியாது. வேறு வழியின்றி என் கணவர் எஸ்.ஏ.ஆர் ஜீலானியைக் காப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட வழக்கறிஞர் குழுவுக்கு கடிதம் எழுதினார். இந்தக் குழு 'சுசில்குமார்' என்ற வழக்கறிஞரை வைத்தது. ஆனால் இவரால் உச்ச நீதிமன்றம் சாட்சியங்களுக்குள் செல்ல முடியாது. அதனால் என் கணவருக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை.'

'என் கணவரைத் தூக்கில் போட்டு விடக் கூடாது என்றும் அவருடைய வழக்கை நியாயமாக நீதியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.தன்னுடைய தரப்பு வாதத்தைச் சொல்லிட வாய்ப்பளிக்கப்படாத ஒருவரை நீங்கள் (உச்சநீதி மன்றம்) தூக்கிலிட மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். சம்பவம் நடந்தவுடன் காவல் துறையினர் என் கணவரை ஊடகங்களின் மூலம் ஒப்புதல் வாக்கு மூலம் தந்திட கட்டயப் படுத்தினார்கள். இது வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே நடைபெற்றது.

'காவல் துறையினர் அவரை அவமானப் படுத்தினார்கள். அடித்தார்கள். சித்திரவதை செய்தார்கள்.அவருடைய வாயில் மூத்திரத்தைப் பெய்தார்கள்.'

'இவற்றை எல்லாம் வெளிப்படையாகச் சொல்வதற்கு வெட்கமாகவெ இருக்கின்றது. ஆனால் சூழ்நிலைகள் என்னைக் கட்டாயப் படுத்தியதால்தான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று. இவற்றை எல்லாம் எழுத்தில் வடிப்பதற்கு மிகையான தைரியம் தேவைப்பட்டது. இப்பொது ஆறு வயதாகி விட்ட என் மகனின் தந்தையைக் காப்பாற்றிடுவதற்காக நான் இவற்றை எல்லாம் சொல்லிட வேண்டியதாயிற்று.'

'என்னுடைய கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உச்ச நீதி மன்றம் பேசுமா? என் சார்பில் நீங்கள் பேசுவீர்களா?நான் என் கணவருக்காகவும் என் மகனின் தந்தைக்காகவும் வாதாடுகிறேன் என்பது உண்மைதான். அதே நேரத்தில் கஷ்மீரில் வாடும் என்னைப் போன்ற பெண்களுக்காகவும் வாதாடுகின்றேன்.'

இந்த மொத்த விவகாரத்திலும் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எஸ்.டி.எஃப் என்ற சிறப்புப் பாதுகாப்புப் படையின் கண்காணிப்பில் நீண்ட நாட்கள் இருந்தவர்கள் என்பது புலப்படும். இதனால்தான் விருப்பு வெறுப்பற்ற ஒரு விசாரணை நாடாளுமன்றத் தாக்குதலில் மேற் கொள்ளப் பட வேண்டும் என ஜன நாயக உரிமைகளுக்கான மக்கள் குழுமம் கேட்கிறது.

-நாடாளுமன்ற தாக்குதலில் சம்பந்தம் உள்ளதாக அப்ஸல் என்ற கஷ்மீரி கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.மாவட்ட தலைமை நீதிபதி திங்காரா அவர்களாலும், பின்னர் உச்ச நீதி மன்றத்தாலும் தண்டிக்கப் பட்டவர். இந்த தண்டனையைப் பற்றி அஃப்ஸலின் மனைவி தபஸ்ஸூம் தான் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் தமிழாக்கத்தைத்தான் நாம் மேலே பார்த்தது.

Source : Annexe 18 of : December, 13,
Terror Over Democracy By Nirmalangshu Mukherji:
A Wifes Appeal for justice :
Published by Promilla & co, New Delhi.

அஃப்ஸல் நம் பாராளுமன்றத்தை தாக்க திட்டம் தீட்டியிருந்தால் உண்மையிலேயே தூக்கு தண்டனை கொடுக்க தகுதியானவர்தான். ஆனால் இங்கு அன்றைய பி.ஜே.பி அரசும், இந்துத்துவ வாதிகளும், நீதிபதிகளும் திட்டமிட்டு ஏற்கெனவே அவர்களின் கஸ்டடியில் இருந்தவர்களை வைத்து நடத்திய நாடகமாகத்தான் மேற் சொன்ன மனுவின் மூலம் தெரிய வருகிறது. இந்த மனுவில் உள்ள விபரங்கள் உண்மையாகும் பட்ஷத்தில் உண்மைக் குற்றவாளிகளை மக்கள் முன் கொண்டு வந்து உச்ச பட்ச தண்டனையை கொடுக்க வேண்டும்.

எஸ்.ஏ.ஆர். ஜீலானி!

தூக்குத் தண்டனை வழங்கப்பட்டவர்களில் நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சதி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.ஏ.ஆர். ஜீலானி என்பவரும் உண்டு. இவர் டெல்லிப் பல்கலைக் கழகத்தில் அரபித் துறைத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர். ஜீலானி அவர்களை டெல்லி உயர்நீதி மன்றம் வழக்கிலிருந்தே விடுதலை செய்தது. அவரை விடுதலை செய்திடும் போது இந்த வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட சாட்சியங்கள் எத்துணை பொய்யானவை போலியானவை என்பதைத் தெளிவுபடுத்தியது.

ஜீலானியின் மீது பதினெட்டு சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கீழ் நீதிமன்றம் கூறிற்று. அதனால் மரண தண்டனையும் வழங்கிற்று. அந்த பதினெட்டு சாட்சியங்களும் போலியானவை என உயர் நீதி மன்றம் கூறிற்று. அத்தனை சாட்சியங்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தது உயர் நீதி மன்றம்.

அதே போல் அஃப்சல் என்பவரைப் பற்றிய காவல் துறையின் கூற்றுக்கள் முழுமையாக உடைந்து தகர்ந்து துகள் துகள்களாகப் போய்விட்டன.

'செல் போன்களைத்தான்' மிக முக்கியமான சாட்சியமாக அரசு தரப்பு காட்டுகிறது. அதற்கும் ஆதாரமாக குற்றம் சுமத்தப் பட்டவர்களின் வாக்கு மூலங்களையே காட்டுகின்றது. இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் கொடுமையும் குரூரமும் நிறைந்த சித்திரவதைகளுக்குப் பின் வாங்கப் பட்டவை. ஆகவே இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் அல்லது சாட்சியங்கள் யதார்த்தமானவை அல்ல. அவை உருவாக்கப் பட்டவை. இதனால் இந்த வழக்கு விசாரணையில் உண்மைகள் வெளிவர தவறி விட்டன.

அதே போல் 'சுயமான சாட்சியங்கள்' எனக் காவல் துறை கொண்டு வந்து நிறுத்திய சாட்சியங்களும் வாங்கப் பட்ட சாட்சியங்கள்.

குற்றவாளிகளிடம் வாக்கு மூலங்கள் என வாங்கப் பட்டவை 'பொடா' என்ற பாசிச பயங்கர வாதச் சட்டத்தின் கீழ் வாங்கப் பட்டவை. இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த வாக்கு மூலங்கள் காவல் துறை அதிகாரிகளிடம் வழங்கப் பட்டவை அல்ல. அவை பார தூரமான சித்திரவதைகளின் கீழ் வழங்கப் பட்டவை என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இந்த வாக்கு மூலங்கள் - அதாவது காவல் துறையினர் முன் வழங்கப் பட்ட இந்த வாக்கு மூலங்கள் அனைத்தும் பின்னர் நீதிபதிகளின் முன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (criminal procedure code) பிரிவு முன்னூற்றுப் பதின் மூன்றின் கீழ் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களுக்கு முற்றிலும் மாறானவை.

இப்படி நீதிபதிகளின் முன் வழங்கப் பட்ட வாக்கு மூலங்களில் (அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்கு மூலங்களில்)பல வழக்கின் போக்கையே மாற்றுபவை. இதில் முஹம்மது அஃப்ஸல் என்பவர் வழங்கிய வாக்கு மூலம் மிகவும் முக்கியமானது.

அந்த வாக்கு மூலம் நம்பத் தகுந்தது. இதனால் நீதி மன்றங்கள் இதில் சில பகுதிகளை நம்பின. இந்த வாக்கு மூலம் இந்த வழக்கில் மறைத்து வைக்கப் பட்ட பல முக்கிய பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த வாக்கு மூலத்தை இதர வாக்கு மூலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்திடும் போது இந்த சதியில் பாதுகாப்பு முகவர்களின் (security agencies) பங்கு முண்டோ என்ற கசப்பான சர்ச்சையும் கிளம்பியிருக்கின்றது.

முஹம்மது அஃப்ஸலுக்கு அவருடைய வரலாற்றையும் வாதத்தையும் முழுமையாக சொல்லிட எந்த வாய்ப்பும் வழங்கப்பட வில்லை. இதோடு முஹம்மது அஃப்ஸல் என்பவரின் தரப்பை நீதிமன்றத்தில் யாரும் சமர்ப்பிக்வில்லை.

இதனால் முழு வழக்கிலும் காவல் துறையினரின் கூற்று நிரூபிக்கப் படாமலேயே நின்றது. பெரிய திரிபுகளும் கற்பனைக் கதைகளும் இயற்கையான நீதி மறுக்கப் பட்ட நிலையிலுமே (Against National Justice) வழக்கு முடிந்தது.

-நிர்மலாங்ஷூ முகர்ஜி
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் குழு
Terror Over Democracy

Kashmir

கஷ்மீரில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்று நிர்வாணமாக படம் பிடித்து வைத்துக் கொண்டு அந்தப் படங்களைக் காட்டி மிரட்டி அந்தப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம்.இப்படி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் பட்ட இளம் பெண்கள் நாற்பத்தி மூன்று பேர் மீட்கப் பட்டுள்ளனர்.

பாதுகாப்புப் படை அதிகாரிகள், காவல் துறையினர், அரசியல்வாதிகள் இவர்கள் தான் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். வழக்கமான பாணியில் எட்டாம் வகுப்பு பெண் குழந்தை ஒன்றை கடத்திச் சென்றதில் தான் இந்த விவகாரம் வெளியே வந்துள்ளது. இதில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த பதிமூன்று பேர் உடந்தை.

காவல் துறை இதனை சரிவர புலன் விசாரணை செய்யாது என்பதால் இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையும் இதனைச் சரிவர புலனாய்வுச் செய்திட வில்லை என கஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி நீதி மன்றத்திலேயே வருத்தப் பட்டுள்ளார்.

-Indian Express. Pune.
29-04-2006

'ஜம்மு கஷ்மீரில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை அடிக்கடி இஸ்லாமியர்கள் அங்கு வாழும் இந்துக்கள் மீது நடத்தும் போர் என்றே காட்டுகின்றார்கள். இது மீடியாக்களின் வழியாக பெரிதுபடுத்தப் படுகிறது. இந்த ஊடகங்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் கொலை செய்யப்படும் முஸ்லிம்களைப் பற்றிய செய்திகளை அதிகமாக வெளியிடுவதில்லை. கொல்லப் பட்டவர்களில் எண்பது சதவீதம் முஸ்லிம்களே என்ற உண்மை திட்டமிட்டு மறைக்கப் படுகிறது.'

-The Hindu
2-5-2006

கடந்த பதினாறு வருடங்களுக்குள் எட்டாயிரம் பேர் வரை காணாமற் போய் விட்டார்கள். இவர்களில் அதிகமானோர் பாதுகாப்புப் படையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டவர்கள். அந்த இளைஞர்கள் எங்கு அடைத்து வைக்கப் பட்டுள்ளார்கள் என்ற ஒரு விபரமும் பெற்றோர்களுக்கு இதுவரை தெரியப் படுத்தப் படவில்லை.

ஸாஹிருத்தீன் என்ற பத்திரிக்கையாளர் தனது 'அவர்கள் காற்றில் கரைந்து போனார்களா?' என்ற நூலில் காணாமற்போன நான்காயிரம் பேர்களின் பட்டியலைத் தருகிறார்.

ஐநூறு பேருக்கும் அதிகமாக கஷ்மீரில் இளைஞர்கள் காணாமல் போனதை உயர் நீதி மன்றமே ஒப்புக் கொண்டிருக்கிறது.

காணாமற்போனோரின் பெற்றோர்கள் அமைப்பும், மனித உரிமைகள் அமைப்பும் எட்டாயிரம் பேர் என்று கணக்கு சொல்கிறது.

இவை எல்லாம் கஷ்மீர் மக்கள் கடைபிடித்து வரும் இஸ்லாமிய கலாச்சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீர்குலைத்து அவர்களிடையே கலாச்சார பேரழிவை ஏற்படுத்தும் முயற்சி என்று தான் கஷ்மீர் மக்கள் நினைக்கின்றனர். அடக்கு முறையால் மக்களை தற்காலிமாக வெல்லலாம். ஆனால் அவர்களின் மனங்களை வெல்ல நம் அரசு முயல வேண்டும். நம் நாட்டு அறிவு ஜீவிகளும், அரசும் இதற்கான முயற்ச்சியில் உடன் இறங்க வேண்டும்.

Saturday, December 13, 2008

மஹாத்மா காந்தியும் ராதா கிருஷ்ணனும்!

மஹாத்மா காந்தியும் ராதா கிருஷ்ணனும்!

காந்தியைப் பார்ப்பதற்கு ஜனாதிபதி ராதா கிருஷ்ணன் வந்தார். அவருக்கு மட்டும் ஒரு குவளை பசும்பால் கொண்டு வரும்படி காந்தி பணித்தார். 'ஏன் நீங்கள் பசும்பால் குடிப்பதில்லையா?' என்று ராதா கிருஷ்ணன் கேட்டார். உடனே காந்தி 'பசும்பால் என்பது பசுவின் மாமிசம்தான் திரவ நிலையில் உள்ளது. அதனால் நான் பசும்பால் குடிப்பதில்லை' என்று காந்தி கூறினார். அதனைக் கேட்ட ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் 'நாம் குழந்தையாக இருந்தபோது தாயிடம் குடித்தது தாயின் மாமிசம்தானே? குழந்தைப்பருவத்தில் நாம் தாயின் பாலைத் தவிர எதனைச் சாப்பிடுவது?' என்ற வினாவை எழுப்பினார். அதன் பிறகு காந்தி பசும்பால் சாப்பிட ஆரம்பித்தாராம்.

சிங்கம் புலி சிறுத்தை நாய் பூனை முதலிய மிருகங்கள் கூர்மையான பற்களை மட்டும் கொண்டுள்ளன. இந்தக் கூரிய பற்கள் மாமிசத்தைக் கிழித்து தின்பதற்குப் பயன்படுகின்றன. அதனால்தான் மேற்கண்ட மிருகங்கள் அசைவமாகவே இருக்கின்றன. இதே போல ஆடு மாடு குதிரை யானை போன்ற மிருகங்கள் தட்டையான பற்களைக் கொண்டுள்ளன. இதனால் இவைகள் இலை தழை கிழங்குகள் அதாவது சைவ உணவுகளையே சாப்பிடுகின்றன.

ஆனால் மனிதனுக்கு கூரிய பற்களும் தட்டையான பற்களும் உள்ளன. மனிதன் சைவ உணவுகளையும் அசைவ உணவுகளையும் சாப்பிடும் விதத்தில் பற்களை இறைவன் அமைத்துள்ளான். எனவே மனிதன் சைவ உணவுகளையும் அசைவ உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்பது வல்ல இறைவனின் விருப்பமாக இருப்பது சிந்திக்க வேண்டிய உண்மை.

-உணர்வு வார இதழ்

அடடே.... அசைவ பிரியர்கள் ஓ போட்டுக் கொள்ளலாம்.

Thursday, December 11, 2008

மிஸ் இந்தியா நஃபீசா அலி - மெக்காவில்
மிஸ் இந்தியா நஃபீசா அலி - மெக்காவில்

1976 ஆம் ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நஃபீசா அலி. 1977 ஆம் ஆண்டு நடந்த உலக அழகிப் போட்டியில் ரன்னராகவும் வந்துள்ளார். நீச்சல் வீராங்கனை, நடிகை, சமூக சேவகர் என்ற பல பரிணாமங்களைக் கொண்டவர் நஃபீசா அலி. பலராலும் அறியப்பட்ட புகைப்படக் கலைஞர் அஹமது அலியின் மகளாவார். ரோமன் கத்தோலிக்க தாய்க்கும் முஸ்லிம் தந்தைக்கும் பிறந்த இவர் மணந்தது போலோ வீரர் சீக்கியரான சோதி சிங்கை.

ஒரு காலத்தில் இவருடைய முகம் பிரதிபலிக்காத பத்திரிக்கைகளே இல்லை எனலாம். இதனால் பலரின் விமரிசனத்துக்கும் உள்ளானார். தற்போது சமூக சேவையில் அதிகம் கவனம் செலுத்தும் நஃபீசாவை அரப் நியூஸ் பேட்டி எடுத்தது.

'பெண்களுக்கு இஸ்லாம் கொடுத்த 'ஹிஜாப்' என்ற உடையில் புது அனுபவத்தை அடைகிறேன். எங்களின் ஹஜ் பயணம் மிகவும் சிறப்பாகவும் எந்த ஒரு சிரமும் இன்றியும் அமைந்ததற்கு இறைவனுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'

'நான் அன்பையும் பாசத்தையும் அதிகம் விரும்புபவள். என்னைப் போன்றே என் நாடான இந்தியாவின் மீதும் அன்பையும் பாசத்தையும் பொழிகின்றேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக என் நாடு தினந்தோறும் குண்டு வெடிப்புகளால் அச்சுறுத்தப்படுகிறது.'

'அனைத்து மதங்களும் அமைதியையே போதிக்கின்றன.ஆனால் எங்கோ ஒரு சிறு குழு இருந்து கொண்டு மதச்சாயத்தையும் பூசிக் கொண்டு தீவிரவாதத்தை வளர்க்கின்றன. அவர்களை இனம் கண்டு சமூகத்திலிருந்து தனித்து ஒதுக்குவது சமய நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரின் கடமை. இந்த ஹஜ் பயணத்தில் என் நாட்டுக்காகவும் என் மக்களுக்காவும் அமைதி வேண்டி இறைவனிடம் அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபட்டேன்.'

இவ்வாறு தனது பேட்டியில் கூறியுள்ளார் நஃபீசா அலி.

-சுவனப்பிரியன்.

Wednesday, December 10, 2008

'சந்திர மோகன்' --'சாந்த் முகம்மதாக' மாறியது ஏன்?
'சந்திர மோகன்' 'சாந்த் முகம்மதாக' மாறியது ஏன்?

ஹரியானா முதலமைச்சர் பஜன்லாலின் மகன் சந்திர மோகன். எல்லா மாநிலத்திலும் 'முதலமைச்சரின் மகனே அடுத்த வாரிசு' என்ற எழுதப்படாத விதிக்கொப்ப தன் மகனை உப முதல்வராகவும் ஆக்கி அழகு பார்த்தார் முதல்வர் பஜன்லால். நான்கு முறை எம் எல் ஏ வாகவும் இருந்துள்ளார் சந்திர மோகன். திருமணமாகி குழந்தைகளும் உள்ளது. இஸ்லாமிய நூல்களை நண்பர்கள் மூலமாக பல ஆண்டுகளாக படித்து வந்துள்ளார். இஸ்லாமிய மார்க்கத்தில் சந்திர மோகனுக்கு ஒரு பிரியம் வந்துள்ளது.

அதோடு அல்லாமல் அனுராதா பாலி என்ற பெண்மணியுடன் சந்திர மோகனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு அது பின்பு காதலாகவும் மாறியுள்ளது. திடீரென்று வீட்டை விட்டு வெளியேறிய சந்திர மோகன் ஒரு மாதம் தலைமறைவாக இருந்து இன்று சண்டீகரில் நிருபர்கள் முன் தன் காதலியோடு தோன்றி 'நானும் என் மனைவியும் திருமணம் செய்து கொண்டு விட்டோம். இன்று முதல் என் பெயர் சாந்த் முகம்மது' என்று அறிவித்தவுடன் நிருபர்களே சிறிது ஆடிவிட்டனர்.

நிருபர்: இதனால் உங்களின் முதல் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் துரோகம் இழைப்பதாக நினைக்கவில்லையா?

சாந்த் முகம்மது: என் பெயரில் எந்த சொத்தும் இல்லை. அனைத்தும் என் முன்னால் மனைவி பெயரிலும் என் குழந்தைகளின் பெயரிலும் மாற்றி விட்டுத்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனவே இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதனால் பாதிக்கப் பட்டது நான்தான்.

நிருபர்: உப முதல்மந்திரி, அடுத்த முதல்வர் என்று வர்ணிக்கப்பட்டவர். இன்று முதல் மந்திரியால் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளீர்கள். அனைத்து சொத்துக்களையெல்லாம் இழந்துள்ளீர்கள். இவை எல்லாம் உங்களை பாதிக்கவில்லையா?

சாந்த் முகம்மது: இந்த பாதிப்புகள் எல்லாம் வரும் என்று தெரிந்துதானே இந்த முடிவை எடுத்துள்ளேன். இதை விட இன்னும் பாதிப்புகள் வந்தாலும் அதையும் தாங்கக் கூடிய நிலையில்தான் நானும் என் மனைவியும் உள்ளோம். மேலும் முன்பை விட சந்தோஷமாக இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்.

நிருபர்: சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிப்பிப்பதற்காகவே நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததாக சொல்லப்படுகிறதே?

சாந்த் முகம்மது: என்னோடு நெருங்கி பழகும் என் நண்பர்களிடம் இது சம்மந்தமாக கேட்டுப் பாருங்கள். பல இஃப்தார் விருந்துகளை நானே ஏற்பாடு செய்துள்ளேன். பல காலம் நான் குர்ஆனை படித்து வந்துள்ளேன். இது நான் நீண்ட நாள் சிந்தித்து எடுத்த முடிவு. குறை சொல்பவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை. என் மனதில் உள்ளதை நானே அறிவேன்.

இவர் உண்மையில் இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டுத்தான் முஸ்லிமாக மாறினாரா? அல்லது சட்டத்துக்கு பயந்து முஸ்லிமாக மாறினாரா என்பது அவருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. ஆனால் இது சம்பந்தமாக சில காலம் ஊடகத்துறைக்கு நிறைய செய்திகள் கிடைத்த வண்ணம் இருக்கும். முதல்வர் பஜன்லால் வேறு 'என்னை அவமானப் படுத்திய அவர்களை நான் விடப் போவதில்லை' என்று கர்ஜித்துக் கொண்டிருக்கிறார். இந்த இருவரின் எதிர்காலமும் தற்போது கேள்விக் குறியாகவே உள்ளது.

'பியார் கியா து டர்னாகியா?'

Tuesday, December 09, 2008

இறை தூதரின் வாழ்வை நினைவூட்டும் பெருநாள்!


இறை தூதரின் வாழ்வை நினைவூட்டும் பெருநாள்!

பெயரைச் சொல்லும்போதே நம் இதயங்களில் ஒரு நெகிழ்ச்சி...! நம்மையும் மீறி நம் மனங்களில் ஒரு சோக கீதத்தின் மெல்லிய ஓசை...!ஆம்...! தியாகங்க ளாலேயே புடம் போடப் பட்ட மகத்தான ஓர் இறைத் தூதரின் உன்னத வாழ்வை ஆண்டுதோறும் நினைவூட்டும் பெருநாள்தான் இந்தத் தியாகத் திருநாள். யார் அந்த இறைத் தூதர்?அவர்தாம் இப்ராஹீம் (அலை) அவர்கள்.ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இன்றைய ஈராக் அமைந்துள்ள பகுதியில், "ஊர்' எனும் ஊர் இருந்தது.
அந்த ஊரில் உயர் குலத்தைச் சேர்ந்த ஆஸர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் அந்த ஊருக்கே தலைமைப் பூசாரியாகவும், மன்னரின் ஆஸ்தான குருவாகவும் (ராஜகுரு) விளங்கினார்.அந்தத் தலைமைப் பூசாரியின் மகனாகப் பிறந்தவர் தான் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள்.
இளமையிலேயே ஆழ்ந்த மதிநுட்பம் கொண்டவராகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி, தம்மைச் சூழ்ந்திருந்த சமுதாயத்தின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார்.கல்லில் ஓர் உருவத்தை வடித்து, "இதுதான் கடவுள்; இதற்குச் சிரம் தாழ்த்து' என்று தந்தையும் சமுதாயப் பிரமுகர்களும் சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். தந்தை, "கல்லால் அடித்து உன்னைக் கொல்வேன்' என்றார். மகன் கலங்கவில்லை. கொள்கையில் உறுதியாக நின்றார்."சூரியன், சந்திரன் உட்பட இயற்கைப் படைப்புகள் எதுவும் இறைவன் ஆக முடியாது. இந்த இயற்கைப் படைப்புகளைப் படைத்த ஓர் இறைவன் இருக் கின்றான். அவனே வானங்கள் - பூமி ஆகியவற்றின் இறைவன். மனிதனுக்கும் அவன்தான் உண்மையான அதிபதி.நான் அவனை மட்டுமே வணங்குவேன். வேறு யாருக்கும் சிரம் பணியமாட்டேன். நீங்களும் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். படைப்பினங் களை வணங்காதீர்கள். படைத்தவனையே வணங்குங்கள்' என்று, வெளிப் படையாக இப்ராஹீம் நபி(அலை) பிரசாரம் செய்தார்.அவ்வளவுதான்...! ஒட்டுமொத்த சமுதாயமும் அவருக்கு எதிராகத் திரும்பியது. சமுதாயத் தலைவர்கள் ஒன்றுகூடி "இவருக்கு என்ன தண்டனை தரலாம்?' என்று கலந்தாலோசித்தனர். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர். அது மிகவும் பயங்கரமான முடிவு.

"திகுதிகு' என கொழுந்துவிட்டெரியும் நெருப்புக் குண்டம் ஒன்றைத் தயார் செய்து அதில் இப்ராஹீமை வீசி எறிந்திட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.நெருப்புக் குண்டம் தயார் செய்யப்பட்டது. இப்ராஹீம் இழுத்து வரப்பட்டார்.கண்ணெதிரே கனன்று எரிந்து கொண்டிருக்கும் தீக்குண்டம்; கதறக் கதற நெருப்பில் வெந்து உயிரை இழக்க வேண்டிய கொடூரம்...! யாராக இருந்தாலும் ஆடித்தான் போயிருப்பர்.ஆனால் -இப்ராஹீம் நபி(அலை) கலங்கவில்லை; கதறவில்லை. இறைவன் ஒருவனே எனும் கொள்கைக்காக - அவன் மீது வைத்திருந்த அளவிட முடியாத நேசத்திற்காகத் தம் இன்னுயிரையும் அர்ப்பணிக்கத் தயாராகி விட்டார்.இதோ, நெருப்பில் வீசி எறியப் படுகிறார் இப்ராஹீம் நபி(அலை).உடனடியாக இறைவனிடமிருந்து கட்டளை வருகிறது: ""நெருப்பே...! நீ இப்ராஹீமுக்கு குளுமையாகவும் சாந்தமாகவும் ஆகிவிடு''(குர்ஆன் 21:69)அதற்குப் பிறகு அவர் அந்த ஊரை விட்டே வெளியேறினார். பல நாடுகளுக்கும் சென்று ஓரிறைக் கொள்கையை - ஏகத்துவத்தைப் பிரசாரம் செய்தார். கடுமையான அடக்குமுறைகளையும், சோதனைகளையும் எதிர் கொண்டார்.

இவை அனைத்தையும் விட மகத்தான ஒரு சோதனை அவருக்குக் காத்திருந்தது.இப்ராஹீம் நபி(அலை) அவர்களுக்கு நீண்ட காலமாகக் குழந்தை இல்லை. தமக்கு ஒரு குழந்தையைத் தரும்படி தொடர்ந்து இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தார். முதுமையை எட்டிப் பிடித்தபோது "வாராது வந்த மாமணி' போல அவருக்கு ஓர் அழகிய ஆண்மகவு பிறந்தது.
அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகனுக்கு இஸ்மாயீல் என்று பெயரிட்டு தம் உயிரில் வைத்து வளர்த்தார். இஸ்மாயீலுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும். அப்பொழுதுதான் அந்தச் சோதனை தொடங்கியது.தம் ஆருயிர் மகனை இறைவனுக்காக அறுத்து பலியிடுவது போல இப்ராஹீம் கனவு கண்டார். அடுத்தடுத்த நாள்களிலும் அந்தக் கனவு தொடர்ந்தது.இப்ராஹீம் நபி சற்றும் தாமதிக்காமல் மகனை அழைத்தார். தாம் கண்ட கனவைக் கூறுகிறார்."தந்தையே, இறைவனின் விருப்பம் அதுதான் எனில் அவனுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். என்னை நீங்கள் பொறுமை உள்ளவனாகவே காண்பீர்கள்' என்றார் மைந்தர்.ஆஹா...! இப்படிப்பட்ட தந்தையையும் மகனையும் வரலாற்றில் எங்காவது நீங்கள் பார்த்தது உண்டா?"இறைவனுக்காக உன்னைப் பலியிடப் போகிறேன்' என்கிறார் தந்தை. "தயங்காமல் செய்யுங்கள்" என்கிறார் மைந்தர்.இப்ராஹீம் கத்தியை நன்கு கூர்தீட்டி மகனின் கழுத்தில் வைத்து அறுக்க முயன்றபோது இறைவனிடமிருந்து கட்டளை வந்தது.""நிறுத்து இப்ராஹீம்! நாம் வைத்த சோதனைகள் அனைத்திலும் நீர் வெற்றி பெற்றுவிட்டீர். மகனை அறுப்பதற்குப் பதிலாக ஓர் ஆட்டைப் பலியிடுங்கள்!''ஏக இறைவனின் மீது கொண்ட அன்புக்காக-அவனுடைய திருப்தியையும் உவப்பையும் பெற வேண்டும் என்பதற்காக எந்தத் தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இருந்தார்கள் இப்ராஹீம் (அலை) அவர்கள்.அதற்குப் பிறகு அவர் தம் மகனுடன் மக்காவுக்கு வந்து இறை ஆலயத்தைக் கட்டியதும், அந்த ஆலயத்தை தரிசிக்க வரும்படி உலக மக்களுக்கு அழைப்பு கொடுத்ததும், அந்த அழைப்பு இறையருளால் இன்று வரை செயல்வடிவம் பெற்று வருகிறது என்பதும் வரலாறு.இறைவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் உயர் பண்பு நம் உள்ளங்களிலும் மலரட்டும்...!வாசகர்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துகள்.

சிராஜுல் ஹஸன்-சமரசம் ஆசிரியர்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

Tuesday, December 02, 2008

சீரா என்ற பெயரில் ஒரு போலி இஸ்லாமியர்!
சீரா என்ற பெயரில் ஒரு போலி இஸ்லாமியர்!

சமீப காலமாக சீரா என்ற பெயரில் பதிவுகள் எழுதி வரும் ஒரு பதிவரை நாம் அனைவரும் அறிவோம். இவருக்கு கொடுக்கப்பட்ட வேலை நடு நிலையான இந்து மக்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவது. தனக்கு கொடுக்கப்பட்ட இந்த வேலையை மிகவும் திறமையாக இந்த நபர் செயல்படுத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பொய்யயான செய்திகளை வெளியிடுவது. இதன் மூலம் ஹிந்துக்களை உசுப்பி விட்டு இஸ்லாமியருக்கு எதிராக பின்னூட்டம் வாங்க வேண்டியது. அவர்கள் மனத்தில் இஸ்லாத்துக்கு எதிரான எண்ணங்களை விதைப்பது என்று தன் வேலையை இந்த நபர் அருமையாக செய்து வருகிறார்.

//ஆனால் இன்று காங்கிரசும் அதே பாப்பனிய பயங்கரவாத பாஜக வழியில் பாகிஸ்தானை மிரட்டுவதை கண்டு மதச்சார்பற்ற இந்தியர்களும் முஸ்லீம்களும் கடும் கோபத்தில் உள்ளார்கள். கம்யூனிஸ்டு ஏ பி பரதன் ஏற்கெனவே அப்படிப்பட்ட தவறான பாதையில் சென்று பாகிஸ்தானை மிரட்டும் வேலையெல்லாம் வைத்துகொள்ளவேண்டாம் என்று காங்கிரஸை எச்சரித்திருந்தார்.//- சீறா.

//வறுமையில் வாடும் ஏழை முஸ்லீம்களிடமிருந்து பிடுங்கிய பணத்தை வைத்து இப்படி ஊதாரி செலவு செய்ய திட்டம் போட்ட இந்து பாசிச பாஜக அரசுக்கும், அந்த திட்டத்தை செயல்படுத்திய இந்து பாசிச காங்கிரஸ் அரசுக்கும் வித்தியாசம் என்ன?//-Seera

//நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலவினை இரண்டாக உடைத்து விட்டதை ஸஹீஹ் அல் புகாரியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அப்படியிருக்கையில், ஏற்கெனவே நிலவுக்கு ஆம்ஸ்ட் ராங் ஆகியோரை அனுப்பியதாக அமெரிக்கா கூறியதை இஸ்லாமியர் சந்தேகக்கண்ணுடனேயே பார்த்தார்கள்.

அது பிறகு பெரிய ஏமாற்றுவேலை என்று அமெரிக்கர்களாலேயே புட்டு புட்டு வைக்கப்பட்டது. உண்மையில் நிலவுக்கு யாரும் போகவும் இல்லை, அதனுக்கு யாரும் துணைக்கோள் அனுப்பவும் இல்லை என்று நிரூபணம் ஆகிவிட்டது

ஆகவே நாம் பார்ப்பது அரை நிலவுதான். அந்தபக்கத்து நிலவு உடைத்து ஹிராம் மலைக்கு அப்பால் விழுந்துவிட்டது என்பதே ஸஹீஹ் அல் புகாரி கூற்று. (பாகம் 5, அத்தியாயம், 58, எண் 208, 209, 210, 211) (பாகம் 4, அத்தியாயம் 56, எண் 830, 831, 832)//-Seera


இதே மாதிரியான உளரல்களை இவரின் ஒவ்வொரு பதிவிலும் காணலாம். விபரம் அறிந்த பதிவர்கள் இந்த கோமாளியின் செய்கையை கண்டு சிரித்து விட்டு சென்று விடுகின்றனர். ஆனால் இவரை முஸ்லிமாக நினைத்துக் கொண்டு கோபமாக இவருக்கு இன்னும் பின்னூட்டம் அளித்து வரும் சக பதிவர்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது.

விருத்த சேதனமும் செய்து கொண்டு கையில் 'இஸ்மாயில்' என்றும் பச்சை குத்திக் கொண்டு காந்தியைக் கொன்றவர்கள் இதுவும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள்.