Followers

Tuesday, September 30, 2008

நோன்பு பெருநாள் என்றால் என்ன?

நோன்பு பெருநாள் என்றால் என்ன?

ஓர் உண்மையைச் சொன்னால் உங்கள் விழிப் புருவங்கள் வில்லாய் வளையும்...!இஸ்லாமியர்களுக்கான இனிய பண்டிகைகள்-இனிய திருவிழாக் கள் மொத்தம் எத்தனை தெரியுமா?இரண்டே இரண்டுதான்.வியப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை! ஒன்று, ரம்ஜான் பண்டிகை என்று சொல்லப்படும் ஈகைத் திருநாள். இன்னொன்று, ஹஜ்ஜுப் பெருநாள் என்று சொல்லப்படும் தியாகத் திருநாள்.இந்த இரண்டைத் தவிர, வேறு எந்த ஒரு பண்டிகையோ, திருவிழாவோ இஸ்லாமியர்களுக்கு இல்லை.

அப்படியானால் முஹர்ரம், பஞ்சா, உரூஸ். சந்தனக்கூடு என்பதெல்லாம்...?

அவையெல்லாம் பண்டிகையும் அல்ல; திருவிழாவும் அல்ல. இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், மார்க்கத்திற்குப் புறம்பான காரியங்கள் அவை.அவ்வளவு ஏன், இறைத்தூதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாது நபி கூட, இஸ்லாமியப் பண்டிகை அல்ல.உலக முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா...!அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?அதைச் சொன்னால் நீங்கள் இன்னும் வியப்படைவீர்கள்.பிறர் கண்ணீர் துடைப்பதையும், பிறர்க்கு உதவுவதையும் மதக் கடமையாகவே - இறை வழிபாடாகவே ஆக்கியுள்ள மார்க்கம் தான் இஸ்லாம்.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ""இறைத் தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன?'' என்று வினவினார்.இந்த வினாவிற்கு இறைத் தூதர் என்ன விடை சொல்லி இருப் பார் என்று நினைக்கிறீர்கள்?

இறைவன் மீது நம்பிக்கை கொள்ளல் எனத் தொடங்கி இஸ்லாத்தின் அடிப்படைகளை எல்லாம் விலாவாரியாக விளக்கியிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்?அதுதான் இல்லை.இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரே வார்த்தையில் விடை அளித்தார்கள்."பசித்தவருக்கு உணவளிப்பதுதான் இஸ்லாம்!'"அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை நம்பிக்கையாளர் அல்லர்' என்று அண்ணலார் ஓங்கி முழங்கினார்கள்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டதன் நோக்கம், மக்களின் உளப் பிணியைத் தீர்ப்பது மட்டுமல்ல, பசிப் பிணியைத் தீர்ப்பதும் தான்.அவருடைய அனைத்து அறிவுரைகளும், வழிகாட்டுதல்களும், இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளன என்பதை வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.இதே வழிகாட்டுதல் தான் ரமலான் மாதத்திலும் பளிச்சிடுகிறது."ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்தேனும் நரக நெருப்பிலிருந்து விடுதலை பெறுங்கள்'"ஒரு மிடறு பாலைக் கொண்டாவது நோன்பாளிக்கு நோன்பு திறக்க உதவுங்கள்'"இறை வழியில் தான தர்மங்களை வாரி வழங்குங்கள்'"வசதியுள்ளவர்கள் தங்களின் செல்வத்திலிருந்து ஜகாத்தைக் கணக்கிட்டு ஏழைகளுக்குக் கொடுத்தே ஆக வேண்டும்'-

இவை போன்ற எண்ணற்ற கட்டளைகள், நபிமொழி நூல்களில் நிரம்பி வழிகின்றன.பெருமானார்(ஸல்) அவர்களின் அதே கட்டளை தான், ஈகைத் திருநாளிலும் செயல் வடிவம் பெறுகிறது.எப்படி?பெருநாளன்று, யாரும் பசி- பட்டினியோடு இருக்கக் கூடாது என்று, இஸ்லாம் விதித்துள்ளது.அந்த மகிழ்ச்சியான நாளில், யாரும் நோன்பு கூட இருக்கக் கூடாது என்று அண்ணலார் கட்டளை இட்டுள்ளார்கள்.எல்லாம் சரி, ஆனால் கஞ்சிக்கே வழியில்லாத, கதியற்ற மக்களுக்கு ஏது பெருநாளும், திருநாளும்? அரிசிச் சோற்றுக்கு அவர்கள் எங்கே போவர்?இங்கு தான் இஸ்லாமியச் சட்டம் மிக அருமையாகச் செயல்படுகிறது.பணக்காரர்கள் மட்டுமல்ல, ஓரளவு வசதியுள்ள நடுத்தர மக்கள் கூட, பெருநாளன்று சிறப்புத் தொழுகைக்குப் போவதற்கு முன்பாக "ஃபித்ரா' எனும் பெருநாள் தர்மத்தைக் கட்டாயம் தர வேண்டும் என்பது மார்க்கச் சட்டம்.

நாம் சாப்பிடுவதற்கு என்ன அரிசியைப் பயன்படுத்துகிறோமோ, அதே தரத்தில், ஏறத்தாழ இரண்டரை கிலோ அரிசியை அல்லது அதன் கிரயத்தை, ஏழைகளுக்கு, பெருநாள் தர்மமாக வழங்கிட வேண்டும்.உங்கள் குடும்பத்தில் ஆறு பேர் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஆறு பேருக்கும் தலா இரண்டரை கிலோ அரிசி எனக் கணக்கிட்டு 15 கிலோ அரிசியை ஏழைகளுக்கு வழங்கிட வேண்டும்."ஃபித்ரா எனும் இந்தப் பெருநாள் தர்மத்தை யார் வழங்கவில்லையோ, அவருடைய நோன்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

பூமிக்கும், வானத்துக்கும் இடையே அது தொங்கிக் கொண்டிருக்கும்' என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதன் நோக்கம், பெருநாளன்று எந்த ஓர் ஏழையும் பசியோடு இருக்கக் கூடாது; உணவின்றி வாடக் கூடாது; பிஞ்சுக் குழந்தைகள், பட்டினியால் தவிக்கக் கூடாது ன்பதேயாகும்.அதனால்தான் இந்தப் பண்டிகைக்கு ஈதுல் ஃபித்ரு- ஈகைத் திருநாள் என்று பெயர் வந்தது.ஆம்...!ஈகைத் திருநாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் திருநாள்...!பசிப்பிணி போக்கும் பெருநாள்...!வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்... !ஈத் முபாரக்!

- சிராஜூல் ஹசன் , ஆசிரியர் சமரசம்

Monday, September 29, 2008

கடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு

கடல்களின் சங்கமம் -ஓர் ஆய்வு

'அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும் கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்.
குர்ஆன் - 25 : 53

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. அவை ஒன்றையொன்று கடக்காது.
குர்ஆன் - 55 : 19

'(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.'குர்ஆன் - 27 :62

இரண்டு கடல்கள் சேரக் கூடிய இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே தடுப்பையும் தடையையும் ஏற்படுத்தியிருப்பதாக மேற்ச் சொன்ன வசனங்கள் அமைந்துள்ளன.அரபிக் கடலையும் செங் கடலையும் பார்க்கும் போது இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். இரண்டின் வண்ணத்திலும் வித்தியாசம் தெரியும். ஜோர்டான் நாட்டு எல்லையில் அமைந்துள்ள DEAD SEA சாக் கடல் இதற்கு மேலும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கடலில் உப்பின் அடர்த்தி மிகவும் அதிகம்.இது போல் உலகில் உள்ள பல கடல்களின் நிறம் சுவை அதிகம் மாறுபட்டிருக்கிறது. நம் நாட்டில் முக்கடல் சங்கமம் ஆகும் கன்னியாக் குமரியிலும் இதே போன்ற வேறுபாட்டை நாம் காண முடியும்இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமம் ஆகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும் அடர்த்தியிலும் உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

'அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றெரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போதுஅதை கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை.
குர்ஆன் - 24 : 40

இந்த வசனத்தில் கடலைப் பற்றி இறைவன் குறிப்பிடும் போது ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும், அதற்கு மேலேயும் அலை இருக்கும் எனவும் கூறுகிறான்.கடலின் மேற் பரப்பில் அதுவும் கடற்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது. கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.கடல் ஆழத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது. எனவே இந்த வசனமும், இதற்கு முன்பு சொன்ன வசனங்களும் நம்மைப் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பது மேலும் நிரூபணம் ஆகிறது.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.

Sunday, September 14, 2008

சல்மான்கான் கொண்டாடிய விநாயக சதுர்த்தி!

சல்மான்கான் கொண்டாடிய விநாயக சதுர்த்தி!

தற்போது வட இந்தியாவில் பிரபலமாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று சல்மான்கான் தனது குடும்பத்தோடு கொண்டாடிய விநாயக சதுர்த்தியைப் பற்றி. இவர் மட்டுமல்லாது இவரது தந்தை சலீம்கான், சகோதரர்கள் அர்ஃபாஸ்கான், சுகைல்கான் போன்ற அனைத்து குடும்ப உறுப்பினர்களும் விநாயக சதுர்த்தியை மிகவும் விமரிசையாக கொண்டாடியுள்ளனர். இதனால் கோபமுற்ற ஒரு சில உலமாக்கள்(மார்க்க அறிஞர்கள்) சல்மான்கானுக்கு எதிராக ஃபத்வா(மார்க்க தீர்ப்பு) கொடுத்துள்ளார்கள். நேற்றைய ஆர்.கே.பி. ஷோவில் இதையே பிரதானமாக வைத்து சல்மான்கான் தந்தை சலீம்கானோடு டெலிபோனில் பேட்டி எடுத்தனர். அந்த பேட்டியின் சுருக்கத்தைத் தருகிறேன்.

ஆர்.கே.பி : நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு விநாயக சதுர்த்தி ஏன் கொண்டாடுகிறீர்கள்?

சலீம்கான் : பெரும்பான்மை மக்கள் வழிபடும் ஒரு நிகழ்ச்சியை கௌரவிக்க வேண்டும் என்பதற்க்காக நானும் என் குடும்பமும் விநாயக சதுர்த்தியைக் கொண்டாடுகிறோம். என் மனைவியும் இந்து மதத்திலிருந்து வந்தவரல்லவா! இந்துக்கள் ஹாஜி அலி போன்ற தர்காக்களை வழிபடுகிறார்கள் அல்லவா! அது போலதான் இதுவும்.

ஆர்.கே.பி : உங்களுக்கு எதிராக மௌலானாக்கள் .ஃபத்வா கொடுத்துள்ளார்களே! அதைப்பற்றி...

சலீம்கான் : அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? இதே மௌலானாக்கள் தீவிரவாதத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்களா? ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்கள் குண்டு வெடிப்பில் இறக்கிறார்களே! அவர்களுக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளார்களா? அதை எல்லாம் செய்து விட்டு பிறகு என்னிடம் வரட்டும். மற்ற மதத்தவர்களை மதிக்கச் சொல்லித்தான் நபியின் போதனையும் உள்ளது. மௌலானாக்களே எந்த அளவு இஸ்லாத்தை விளங்கியிருக்கிறார்கள் என்பதற்க்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் திருமணத்தின் போது என் மனைவியின் பெயரை அரபு பெயராக மாற்றச் சொல்லி மௌலானா என்னை வற்புறுத்தினார்.நான் கடைசி வரை அதற்கு சம்மதிக்கவில்லை. அது என் மனைவியின் விருப்பம். இவ்வளவு ஏன்? முகமது நபி காலத்தில் அவரின் தோழர்கள் பலரும் பல மொழிகளை பேசக் கூடியவர்கள் இருந்தனர். அவர்களில் பலரின் பெயர் அரபு மொழியில் இல்லை. அந்த பெயர்களை மாற்றச் சொல்லி முகமது நபி கட்டாயப்படுத்தவும் இல்லை. மௌலானாக்களின் இஸ்லாமிய அறிவு இந்த அளவில்தான் இருக்கிறது......

இவ்வாறு சலீம்கானின் பேட்டி நீண்டு கொண்டே செல்கிறது.

சலீம்கானின் பேட்டியைப் பற்றி பலத்த சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஒரு சாதாரண மனிதன் செய்யும் எந்த செயலும் பிரச்னையை உண்டுபண்ணாது. இந்தியாவின் பிரபலமான பாலிவுட் ஹீரோ சல்மான்கான் சம்பத்தப்பட்டுள்ளதால் இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

//பெரும்பான்மை மக்கள் வழிபடும் ஒரு நிகழ்ச்சியை கௌரவிக்க வேண்டும் என்பதற்க்காக//

பெரும்பான்மை மக்களின் வழிபாட்டை கௌரவிப்பது என்பதற்க்கும், அந்த வழிபாட்டிலேயே கலந்து கொள்வது என்பதற்க்கும் நிறைய வேறுபாடு உண்டு. இறைவனை வணங்குவதில் போலித் தனம் இருக்கக் கூடாது. சலீம்கானும் அவரது குடும்பமும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி வினாயக சதுர்த்தி கொண்டாடினால் அதை யாரும் எதிர்க்கப் போவதில்லை. அவர் வெளியேறுவதால் இஸ்லாத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்ப்படப் போவதில்லை. நான் இந்துவாகவும் இருப்பேன். முஸ்லிமாகவும் இருப்பேன் என்பது போலித்தனம்.

ஒரு மதம் ஒரு கடவுளை வணங்கச் சொல்கிறது. மற்றொரு மதம் பல கடவுள்களை வழிபடச் சொல்கிறது. ஒரு மதம் ஒரு ஜோடியிலிருந்து பிறந்து மனித இனம் பிறகு பல்கிப் பெருகியது என்கிறது. மற்றொரு மதமோ பிறப்பிலேயே மனிதனை நான்கு வர்ணமாக பிரித்து வழிபாட்டு முறையிலும் பாகுபாட்டைப் போதிக்கிறது. ஒரு மனிதன் இரண்டையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

நான் திமுக உறுப்பினராகவும் இருப்பேன். அதோடு என்னிடம் அதிமுக உறுப்பினர் அட்டையும் இருக்கும். இரண்டு அலுவலகத்துக்கும் நான் சென்று வருவேன். என்னை யாரும் கேள்விக் கேட்கக் கூடாது என்றால் கருணாநிதியோ ஜெயலலிதாவோ பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத்தான் செய்வார்கள்.

//இந்துக்கள் ஹாஜி அலி போன்ற தர்காக்களை வழிபடுகிறார்கள்//

தர்ஹா வழிபாடு என்பது இஸ்லாமிய நம்பிக்கைகளில் இல்லாத ஒன்று. மசூதிக்குச் சென்று ஐந்து வேளை தொழுவது உலக முஸ்லிம்கள் கடைபிடிக்கும் வழக்கம். தர்ஹா வழிபாடு மொகலாயர்களின் தாக்கத்தினால் வந்தது. இந்த பழக்கத்தை மாற்ற முயற்ச்சித்து வருகிறோம்.

//என் திருமணத்தின் போது என் மனைவியின் பெயரை அரபு பெயராக மாற்றச் சொல்லி மௌலானா என்னை வற்புறுத்தினார்//

இந்த ஒரு வாதத்தில் சலீம்கானோடு நான் ஒத்துப் போகிறேன். ஏனெனில் ஒருவன் முஸ்லிமாக இருப்பதற்கு அரபியில்தான் பெயர் இருக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. நபி இப்றாகீம்(ஆப்ரஹாம்), நபி மூஸா(மோஸே) போன்ற அரபி அல்லாத பெயர்கள் இறைத் தூதர்களுக்கு முன்பு இருந்திருக்கிறது. அன்பழகன் அறிவழகன் போன்ற அழகிய தமிழ்ப் பெயர்களிலேயே ஒருவர் முஸ்லிமாக வாழ முடியும்.

அடுத்து புரோகிதத்தை ஒழிக்க வந்ததுதான் இஸ்லாம். எனவே மௌலானாக்கள் சொல்வது எல்லாம் இஸ்லாம் ஆகாது. எந்த ஒன்றுக்கும் குர்ஆன் கட்டளை இட வேண்டும். அல்லது முகமது நபியின் போதனை அவ்வாறு செயல்படுத்தச் சொல்ல வேண்டும்.

//ஒன்றுமறியாத அப்பாவி பொதுமக்கள் குண்டு வெடிப்பில் இறக்கிறார்களே! அவர்களுக்கு எதிராக ஃபத்வா கொடுத்துள்ளார்களா?//

நியாயமான கேள்வி. இதே மௌலானாக்கள் தீவிரவாதத்துக்கு எதிராக பலத்த எதிர்ப்பும் ஃபத்வாவும் கொடுத்துள்ளார்கள். ஆனால் அவை எல்லாம் இது போல் பத்திரிக்கைகளில் வெளிவருவதில்லை. ஒரு உண்மையான முஸ்லிம் எந்த ஆத்மாவுக்கும் தீங்கு விளைவிப்பவனாக இருக்க மாட்டான். அப்பாவி மக்களை இலக்காக்கும் யாரும் அது முஸ்லிமாக இருந்தாலும் அவன் அழித்தொழிக்கப் பட வேண்டும் என்பதில் இரு வேறு கருத்தில்லை. ஆனால் நமது நாட்டில் நடக்கும் 90 சதவீத குண்டு வெடிப்புகள் முஸ்லிம்களின் மேல் பழியைப் போட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப் படுபவை. டெஹல்கா அறிக்கைகளும், திக்விஜய் சிங்கின் பேட்டியும் நமக்கு இதைத்தான் உணர்த்துகின்றன. முஸ்லிம்களிடம் சரியான ஊடக வசதி இல்லாததால் இந்த செய்திகள் சரியாக மக்களிடம் சென்றடைவதில்லை.

நேற்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். குண்டு வைத்தவர்கள் கண்டிப்பாக மனித ஜென்மமே அல்ல. அப்பாவி மக்களை ஹாஸ்பிடலுக்கு கொண்ட சென்ற காட்சி மனதை என்னவோ செய்தது.

1.பாகிஸ்தானின் சதியா?

2.முஸ்லிம் தீவிரவாதிகளின் சதியா?

3.இந்து தீவிரவாதிகளின் செயலா?

4.அமெரிக்க இஸ்ரேலின் சதியா?

என்று பல கோணங்களில் விசாரணையை துவக்காமல் எடுத்த எடுப்பிலேயே 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற இல்லாத ஒரு அமைப்பின் பெயரில் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யும் படலம் வழக்கம் போல் தொடங்கி விட்டது. இதனால் உண்மையான குற்றவாளிகள் தப்பி விடுவதை ஏனோ காவல்துறை கண்டு கொள்வதில்லை. வருங்கால பிரதமர் என்றழைக்கப்படும் ஒரு தலைவர் நேற்று பொது மக்கள் முன்னிலையில் 'பத்து நாட்களுக்கு முன்பே நான் எச்சரித்தேன் டெல்லியில் இப்படி ஒரு குண்டு வெடிப்பு நடக்கும் என்று' என்ற ரீதியில் பேசுகிறார். உங்களுக்கு எப்படி இவ்வளவு துல்லியமாக தெரியும் என்று எவரும் அவரைப் பார்த்து கேட்கப் போவதில்லை. முன்பு நடந்த குண்டு வெடிப்பில் 'இந்தியன் முஜாஹிதீன்' என்று ஈமெயில் கொடுத்தவர் ஒரு அமெரிக்க பிரஜை. துல்லியமாக தெரிந்தும் அவரை அதிகாரவர்க்கம் குடும்பத்தோடு பத்திரமாக அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. இதை யாரும் கேட்கப் போவதில்லை. இவர் சி.ஐ.ஏ க்கு ஏஜெண்டாகவும் நமது நாட்டில் பணிபுரிந்திருக்கிறார் என்கிறது பத்திரிக்கைச் செய்தி. இதையும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அனைத்தையும் மூடி மறைத்து வழக்கம் போல் அப்பாவிகள் சிறையில் அடைக்கப் படுவார்கள்.

குண்டு வெடிப்பில் தங்களது சொந்தங்களை இழந்த என் நாட்டு சகோதரர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது நாடு மத,சாதி சண்டைகள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கி உலக வல்லரசாக மாற எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறைவனை இந்த ரமளானில் பிரார்த்தித்து இப்பதிவை முடிக்கிறேன்.

Wednesday, September 10, 2008

உலகின் பெரு வெடிப்புக் கொள்கை!

உலகின் பெரு வெடிப்புக் கொள்கை!

ஜெனிவா: உலகின் மிகப்பெரிய அணுபிளவு சோதனை இன்று ஜெனிவாவில் துவங்கி உள்ளது. செயற்கை பிரளயத்தை ஏற்படச் செய்து அதன் மூலம் பூமி மற்றும் உயிர்கள் உருவானதை நிரூபிக்கும் சோதனையில் ஐரோப்பிய ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய இயற்பியல் அணுபிளவு சோதனையாக கருதப்படுகிறது. இதில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 300 அடி ஆழத்திலும், 27 கிமீ தொலைவில் நீள்வட்டப் பாதையிலும் 2 புரோட்டான்களை இயக்கி, அவற்றை வெடிக்கச் செய்து அதன் மூலம் உலகம் உருவானதை அறியும் சோதனையில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீள்வட்டப்பாதையில் சுமார் ஆயிரம் காந்தப்புல சிலிண்டர்கள் இணைக்கப்பட்ட முனைகளைக் கொண்ட வெவ்வேறு மின் ஆற்றல்களைக் கொண்ட இரு புரோட்டான் அணுக்களை இணை‌‌ய செய்வதன் மூலம் இந்த செயற்கை பிரளயம் உருவாக்கப்பட்டுள்ளது.ஒளி வேகத்தைக் கொண்டு சுமார் 11 ஆயிரம் சுழல் கம்பிகள் ஒவ்வொரு விநாடியின் போதும் சிதைவடைய செய்யப்படுகிறது. சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இயங்கி வரும் இந்த ஆய்வகத்தில் உலக நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பணியாற்றி வந்தனர். சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் 30 பேர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. உலகின் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சோதனையின் மூலம் உலகம் தோன்றியதன் ரகசியங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அறிவியல் ஆர்வளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த செயற்கை பிரளயத்தினால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என உலக சுற்றுப்புற ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இதனால் பாதிப்பு ஏதும் நிகழாது என விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். கதிரியக்க பாதிப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் உலகம் முழுவதும் இந்த சோதனைக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


-பத்திரிக்கைச் செய்தி

இந்த அணுப்பிளவு சோதனை வெற்றிகரமாக முடிந்தால் உலகம் தோன்றியது எவ்வாறு என்ற மிகப் பெரிய கேள்விக்கு விடை கிடைக்கும். நாலாயிரம் கோடியை இதற்காக செலவிட்டிருக்கிறார்கள். பல நாட்டு விஞ்ஞானிகளின் அயராத உழைப்பு என்ன முடிவை தருகிறது என்று பார்ப்போம்.

இந்த அணுபிளவு சோதனையை குர்ஆன் எவ்வாறு அணுகுகிறது என்பதையும் கொஞ்சம் பார்ப்போமா!

'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கைக் கொள்ள வேண்டாமா?'
-குர்ஆன் 21:30

'பூமியின் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்கு சரியான விடை இதுவே!'

'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்'
-குர்ஆன் 41:10,11

இந்த குர்ஆனிய வசனங்கள் மேலே நாம் படித்த பத்திரிக்கை செய்தியின் பல கேள்விகளுக்கு விடை தருகிறது. இது வரை விஞ்ஞானிகள் சொல்லி வந்த செய்திகளை உண்மைப் படுத்துகிறது.

இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும் உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன. இந்த இரண்டு அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். அதைத்தான் மலைகள் செய்கின்றன. பூமி உருவாகி பிறகுதான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வானம் பூமி அனைத்தும் ஒன்றாக இணைந்து பிரித்து எடுக்கப்பட்டதுதான் இந்த உலகம் என்ற விஞ்ஞானிகளின் கூற்றையும் மேற்கண்ட வசனம் மெய்ப்பிக்கிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகுதான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்ற விஞ்ஞானிகளின் முடிவை மெய்ப்பிக்கிறது மேலே நான் எடுத்துக்காட்டிய வசனங்கள்.

இது அல்லாமல் இன்னும் பல உண்மைகளும் தற்போதய ஆராய்ச்சியால் உலகம் காண இருக்கிறது. நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Monday, September 08, 2008

காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?

காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?

இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா!

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.

இவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.

காந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான். 1863ம் ஆண்டு முதன்முறையாக காந்தி வேலையில் சேர்வதற்க்காக தென் ஆப்ரிக்கா பயணம் மேற்க்கொண்டார். அந்தப் பயணத்தில் இவர் ஒரு இந்தியன் என்பதால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டார். தென் ஆப்ரிக்காவில் உள்ள அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களிடம் பயணத்தைப் பற்றிக் கூறும்போது ' நம் நாட்டிலே நமக்கு சுய மரியாதை இல்லை. அதை வேறு எங்கும் எதிர்பார்க்க முடியாது போலும்' என்றார் காந்தி.

உடனேயே 'நாம் உழைத்து உண்கிறோம். நாம் ஏன் சுய மரியாதையை இழக்க வேண்டும்? நாம் ஏன் நாட்டு மக்களுக்கு சுய மரியாதை கிடைக்க பாடுபடக் கூடாது?' என்ற கேள்விக் கணையைத் தொடுத்து காந்தியின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர் ஜாவேரி சகோதரர்கள்.

அந்தக் கேள்விதான் காந்தியை தேச விடுதலைப் பற்றிய கவலையை ஏற்படுத்தியது. இதை காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பின்பு காலங்கள் உருண்டோட ஒரு நாள் அப்துல்லாஹ் கம்பெனி வழக்கறிஞர் பேக்கர் அவர்களுக்கு உதவியாக டர்பனிலிருந்து பிரிட்டோரியாவிற்க்கு புகை வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் செல்லும்போது வெள்ளையர்களால் காந்தி அவமானப்படுத்தப் பட்டு மாரிட்ஸ்பார்க் ஸ்டேஷனில் இறக்கிவிடப்பட்டார். அங்குதான் காந்தியின் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

காந்தியும் ஜாவேரி சகோதரர்களும் சுதந்திர இந்தியாவைக் காண 'நேட்டால் இந்தியன் காங்கிரஸ்' (Natal Indian Congress) என்ற அமைப்பை தென் ஆப்ரிக்காவில் நேட்டால் நகரிலுள்ள அவர்களது இல்லத்தில் 1894ம் ஆண்டு மே 22ல் ஆரம்பிக்கிறார்கள்.

அதன் முதல் தலைவராக அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களும் முதல் செயலாளராக காந்தியும் நியமிக்கப்பட்டார்கள். இவ்வமைப்பின் மூலம் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டினார்கள். பின்பு 1896ல் நேட்டால் இந்தியன் காங்கிரஸின் இரண்டாவது தலைவராக அப்துல் கரீம் ஆதம் ஜவேரியும் இரண்டாவது செயலாளராக காந்தியும் நியமிக்கப் பட்டார்கள்.

பின்பு காந்தி தனது உறவினர்களைப் பார்ப்பதற்க்காக தாயகம் திரும்பினார்.1897ல் மீண்டும் இரண்டாவது முறையாக தென் ஆப்ரிக்கா சென்றார். தனது குடும்பத்துடன் எஸ்.எஸ். சூர்லேண்ட் என்ற தாதா அப்துல்லாஹ் கம்பெனியின் பயணக்கப்பலில் இலவசமாக பயணம் செய்தார். எஸ்.எஸ்.நாத்ரி என்ற இன்னொரு கப்பலும் சென்றது. மொத்தமாக 800 பயணிகள் பயணமானார்கள்.

இந்த பயணம் வைர வரிகளால் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பயணத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் துறைமுகத்திலிருந்து இந்தியர்கள் இறங்க அனுமதி வழங்கவில்லை.

இந்த தகவல் அறிந்த ஜவேரி சகோதரர்கள் இந்தியர்களின் சுதந்திர உணர்வுக்காக பிரிட்டிஷாரை கடுமையாக எதிர்த்தார்கள். ஜவேரி சகோதரர்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு கலங்கிய பிரிட்டிஷார் 23 நாட்கள் கழித்து இந்தியர்கள் அந்த துறைமுகத்தில் இறங்க அனுமதித்தனர்.

இது நேட்டால் இந்திய காங்கிரஸின் முதல் வெற்றி என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தாதா அப்துல்லா கம்பெனி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நேட்டால் இந்தியன் காங்கிரஸ் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தது. சுதந்திர வேட்கையைத் தூண்டும் ஆணிவேராக இருந்த ஜாவேரி சகோதரர்களின் கடல் வாணிபத்தை வீழ்த்த திட்டம் தீட்டினர் பிரிட்டிஷார்.

அதன் விளைவாக அவர்களின் நான்கு பயணிகள் கப்பல்களும் பல துறைமுகங்களில் நின்ற நிலையிலேயே மூழ்கடிக்கப்பட்டன. இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் இருக்கிறது.
நன்றி : விடியல் வெள்ளி

நாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள்.

உண்மைதானே!