சினிமாக்களில் மட்டுமே பார்த்திருக்க முடிந்த கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை ஒரே நாளில் சந்தித்த , 'வாழும் துயரம்' அவர். பிப்ரவரி 27, 2002ல் கோத்ரா ரயிலில் பற்றிய தீ கலவரமாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை காவு வாங்கியது. தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்வதற்கு பலர் உயிரோடு இல்லை,
பலர் உயிருக்கு பயந்து சொல்லத்தயாராய் இல்லை! ஆனால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காய் படிப்பறிவற்ற ஓர் இளம்பெண் துணிந்து வந்தார். அதனை அவர் சொல்லக் கேட்போம்...
"என் கணவர் வேலையில்லாதவராக அப்போது
இருந்தாலும் , வசதிக்கொண்ட வீட்டில் திருமண வாழ்க்கை சுகமாக சென்றுக்கொண்டிருந்தது
எங்களுக்கு 3 வயதில் ஓர் மகள் இருந்தாள். பெயர் சாலிஹா. நான் 5 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தவளாக இருந்தேன். பிப்ரவரி 28! சரியாக கோத்ரா சம்பவத்திற்கு அடுத்த நாள் எங்கள் கிராமத்தின் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்துத்துவாவினரால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அது கலவரமாக மாறிப்போக பல முஸ்லிம் வீடுகள் தீக்கிரையாகின. நாங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தப்பிச் செல்ல நாடிய போது ஊர்த்தலைவர் தடுத்து "யாராலும் உங்களுக்கு தீங்கு ஏற்படுத்த முடியாதென்று"உறுதி கூறினார். ஆனால்,அதன் பின்னர் கலவர கும்பல் எங்கள் இல்லங்களை நோக்கி கற்களை வீசத்தொடங்கினர்.
அதிலிருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தோம். அப்போது நான் செருப்பு கூட அணிய அவகாசம் பெற்றிருக்கவில்லை. உறுதி கொடுத்த ஊர் தலைவர் வீட்டில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் , குழந்தைகள் ஒன்று கூடினோம். ஆனாலும் பாதுகாப்பற்றவர்களாய் உணர்ந்தோம். நாங்கள் தப்பி வேறிடம் செல்பதற்குரிய எல்லா வழிகளும் கலவரக்காரர்களால் அடைக்கப்பட்டிருந்தன. 28ம் தேதி நள்ளிரவில் எங்கள் வீடுகள் திட்டமிட்டு எரிக்கப்பட தொடங்கின. நாங்கள் உங்களை கொல்வோம், உங்களை வெட்டியே தீருவோம் கோஷங்கள் உரக்க ஒலித்தன. எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டது. அதற்காக கிராம ஆண்கள் காவல்நிலையத்தில் உதவி கேட்டனர்.
ஆனால் எங்களுக்கு பாதுகாப்பு மறுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் பல முஸ்லிம்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள காடுகளுக்கு சென்று சில நாட்கள் மறைந்து வாழ்ந்தனர். அன்றைய நாள் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உண்ண உணவின்றி அருந்த நீருமின்றி உயிருக்கு பயந்து எங்கள் கிராமங்களிலேயே பல்வேறு இடங்களில் ஒளிந்துக்கொண்டே இருந்தோம். ஆனால் அசாதரண சூழல் திணிக்கப்பட்ட நிலையில் அது சாதாரண விஷயமாக இருக்கவில்லை. எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களுக்கெல்லாம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
அவர்களை வெளியே அனுப்பவில்லை எனில் உன் வீட்டையும் கொளுத்துவோம் என்று ஆவேசமாக அவர்கள் கத்தியதால் பலரும் அடைக்கலம் கொடுக்க அஞ்சினர். மிரட்டலுக்கு அஞ்சிய , உறுதி அளித்த எங்கள் ஊர் தலைவரும் அவர் வீட்டிலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டார். எங்கள் வீடுகளுக்கே செல்லலாமென நினைத்தால், அது ஏற்கனவே தீக்குரையாகியிருந்தது. மீண்டும் காவல்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பு கோரினோம்.
அவர்களோ எங்களை அக்கிராமத்தை விட்டு வெளியேறிச்செல்ல அறிவுறுத்தினர். இரவாகியிருந்தது. அருகிலிருக்கும் கிராமத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிஜல்பாய் தாமோர் வீட்டுக்கு அடைக்கலம் தேடி சென்றோம். துரதிஷ்டவசமாக அவர் அப்போது ஊரிலில்லை. அவர் மகனும் கூட எங்களை ஆசுவாசப்படுத்த குடிக்க நீரும் சில திண் பண்டங்களையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்லும்படி சொல்லிவிட்டார். வேறு வழியில்லை! வேறிடம் செல்ல வேண்டும். இன்னுமொரு கிராமத்திற்கு சென்றால் அங்குள்ள முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து எங்கோ தப்பியோடியிருந்தனர். அங்கிருந்த பள்ளிவாசல் அன்றைய இரவுக்கு பாதுகாப்பு கொடுத்தது.
ஷாமின்! என் ஒன்றுவிட்ட சகோதரி... நிறைமாத கர்ப்பிணி. திடீரென பிரசவ வலி ஏற்பட மருத்துவ உதவியும் கிடைக்காத அந்த நேரம் செய்வதறியாது திகைத்தோம். அவள் பள்ளிவாசலிலேயே தன் குழந்தையை பிரசவித்தாள். பள்ளிவாசல் அமைந்திருந்த நாங்கள் தங்கியிருந்த கிராமம் ஏற்கனவே இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டதால் அங்கிருப்பது பாதுகாப்பற்றது என எண்ணி குத்ரா எனும் கிராமத்திற்கு பழங்குடியினர் உதவியுடன் சென்றோம். எங்கள் கிராமத்திலிருந்து 500 முஸ்லிம்கள் தப்பி வந்தோம்.
17 உறுப்பினர்கள் மட்டும் குத்ராவில் தங்கிக்கொண்டோம். ஷாமினால் பயணிக்க முடியவில்லை. ஈன்றெடுத்த வேதனை அவளை சோர்வாக்கியிருந்தது. ஆகையால் இக்கிராமத்திலேயே 3 நாள் வரை மறைந்திருக்க எண்ணினோம். எங்கள் அடையாளங்களை மறைக்க பழங்குடியினர் அவர்களின் துணிகளை அணியவைத்தனர். ஷாமின் மீதான இரக்கத்தால் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். இல்லையேல் அதுவும் கிடைத்திருக்காது. அதுவும் எளிதானதாக இருக்கவில்லை.
முஸ்லிம்களை அவர்கள் தங்களுடன் வைத்துள்ளார்களா என பல விசாரணைகளுக்கு உள்ளாகினர். அதிகாலை 4 மணிக்கு மாறுவேடத்தில் அங்கிருந்து புறப்பட்டோம். உயிருக்காய் பயந்தோடிய நாட்கள் எல்லாம் கண்ணீர் மட்டுமே சுமந்திருந்தோம். அடுத்த நொடி என்ன ஆபத்திருக்கிறது என்பதை அறியாத படபடப்புகள் கொடூரமானவை.
சிந்தனையெல்லாம் எப்படி உயிரை காப்பாற்றுவதிலேயே இருந்தது. இரு நாட்களுக்கு பிறகு பழங்குடியினரின் வழிகாட்டல் உதவியுடன் சபர்வாட் கிராமத்திற்கு சென்றோம். இங்கிருந்து ,மானாபாய் எனும் நீண்டநாள் நண்பரை சந்தித்து உதவி பெற நினைத்தோம். அவர் இருக்கும் பகுதி பனிவேலா. அங்கு செல்லும் வழியில் ஒரு குக்கிராமத்தில் ஓய்வெடுத்துக்கொண்டோம். அது இரு மலைகளுக்கு இடைபட்ட இடம். குருகிய சாலை வழியே செல்லக்கூடிய பகுதி. சாலை வழியே சென்ற போது திடீரென ஒரு நபர் என் மாமாவை தாக்கினான். கீழே சரிந்த அவர் ஒரு மணி நேரத்திற்கு பின்பே சுயநினைவு பெற முடிந்தது. சில நபர்கள் சூழ்ந்துக்கொண்டனர்.
அவர்களை முன்பே எனக்கு தெரியும். அவர்கள் என் கிராமத்தை சேர்ந்தவர்கள். சற்று முன் நாங்கள் தங்கிய சபர்வாட் கிராமத்தினர் தான் நாங்கள் எங்கேசெல்கிறோம் என்ற தகவலை இவர்களுக்கு கொடுத்துள்ளார்கள். இவ்வெறியர்கள் டாட்டா ஸ்மோவில் வந்திருந்தனர்.
"முஸ்லிம்கள் இங்கேயிருக்கிறார்கள்! கொல்லுங்கள்!''
எனும் ஆவேச குரல்களை எழுப்பினர். அவர்கள் சபர்வாட், பனிவேலா கிராமத்திலிருந்த வெறிபிடித்த மக்களை திரட்டி வந்திருந்தனர். தொடர் ஓட்டத்தின் காரணமாக எங்கள் உடல் சோர்ந்திருந்தது, உதவிக்கு ஆள் இல்லாத நிலை உள்ளத்தையும் சோர்வடைய செய்திருந்தது. எங்களால் இனி அவர்களுடன் சண்டையிட முடியாது!
அதற்குரிய சக்தியையும் இழந்துவிட்டோம். ஆளுக்கொரு திசையாக ஓட்டம் பிடிக்க நினைத்தோம்! பயனில்லை- சுற்றிவளைக்கப்பட்டோம். நாங்கள் 17 நபர்கள் 4 ஆண்கள் மட்டுமே எங்களில் உண்டு! 8 பெண்களும் மீதமுள்ளவர்கள் சிறு குழந்தைகளாகவும் இருந்தனர். அவர்களிலோ 25க்கும் மேற்பட்ட வெறியர்கள் இருந்தனர்.
அவர்கள் எம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினர். நிர்வாணமாக்கப்பட்ட பெண்கள் கூட்டத்தினர்க்கு முன் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். அவர்களின் வெறி 2 நாட்களுக்கு முன் பிறந்த குழந்தையையும் விட்டுவைக்கவில்லை! ஷாமின் 2 நாள் வயது குழந்தையை கொடூரமாக கொன்றனர்.
என் தாய்மாமா, என் தந்தையின் தங்கை,அவரின் கணவரையும் அடித்துக்கொன்றனர். வன்புணர்வுக்காளான பெண்களையும் கொன்றனர். பின் என்னிடம் வந்தனர்.3 வயது மகளை கையில் ஏந்தியிருந்தேன். என்னிடமிருந்து வலுக்கட்டாயமாக அவளை பறித்துக்கொண்ட அந்த வெறியர்கள், தன் வெறியின் விசைக்கேற்ப அவளை தூக்கி வீசினர்.
அவளின் பிஞ்சு தலை பாறையில் மோதிய போது இதயமே சுக்குநூறாய் உடைந்தது. அவள் இறந்து போனாள். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை பிடித்துக்கொள்ள ஒருவர் பின் ஒருவராக என்னை வன்புணர்வுக்குள்ளாக்கினர். அவர்களின் வெறி அடங்கிய பின்பும் கண்மூடித்தனமாக என்னை உதைத்தும் அடித்தும் துன்புறுத்தினர்.
என் கழுத்துப்பகுதியினை காலால் அழுத்தியிருந்தான் ஒருவன். கற்கள் கொண்டு தாக்கப்பட்டேன். இரும்பு தடியால் என் தலையில் தாக்கிய போது நினைவிழந்து போனேன். நான் இறந்துவிட்டதாக நினைத்த அந்த வெறியர்கள் என்னை புதருக்குள் தூக்கி வீசினர். எங்களை தாக்கிய போது அவர்கள் உதிர்த்த வார்த்தைகளை என்னால் எப்போதும் திருப்பிச்சொல்ல முடியாத அளவுக்கு கேவலமானவை. " கோத்ராவில் எங்கள் மக்கள் கொன்றதற்காக உங்களை கொல்வோம்! எந்த ஒரு முஸ்லிமையும் உயிருடன் விட்டு வைக்க மாட்டோம்" என ஆக்ரோஷமாக கத்தினர். என் கண் முன்னே என் அம்மா, என் தங்கை மற்றும் என் 12 உறவினர்களும் கொல்லப்பட்டன்னர்.
தன் துன்பத்தை கத்தி சொல்ல முடியாத மிருகங்களை துன்புறுத்தி துடிதுடிக்க வைத்து கொல்லப்படுவதை போலவே என் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இத்தனைக்கும் 28ம் தேதி காலையில் என் கணவரும் இன்னும் சில உறவினர்களும் பிஜேபி ஊழியர் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட மீட்டிங்கில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கெஞ்சியுள்ளார். எங்களை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொன்றவர்கள் அப்போது அக்கூட்டத்தில் இருந்தவர்கள் தான்! 17 பேரில் 2 குழந்தைகளும் (வயது 7,வயது 5) நானும் மட்டும் பிழைத்துக்கொண்டோம்! இருவரும் எப்படி காத்துக்கொண்டார்கள் என தெரியவில்லை.
நாங்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்களில் எவரும் ஹிந்து பெண்கள் இல்லை. அவர்கள் அனைவரும் நடுத்தர வயது ஆண்கள் மட்டுமே. நாங்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட போது இவர்களெல்லாம் ஆபாச வார்த்தைகளில் கத்திக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய போது நான் ஐந்து மாத கற்பிணி என கூட என்னால் சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் கால்கள் கழுத்திலும், வாயிலும் மிதிப்பட்டிருந்தது. ஹிந்துக்களில் சாதி பேதமின்றி இந்த கொடூரத்தில் பங்காற்றினர். என் கிராமத்தை சேர்ந்தவர்களும் அதில் ஒரு பகுதியினர் தான்!
என்னால் எப்படி அவர்களை அடையாளம் காண முடியாமல் போகும் ? இரண்டு மணி நேரத்திற்கு பின் என் கண்களை திறந்த போது என் உலகம் சிதைக்கப்பட்டதை கண்டேன். என்னால் நிற்க கூட முடியவில்லை ஆனால் அவர்கள் கையில் மீண்டும் சிக்க விரும்பவில்லை நிர்வாணத்தை மறைக்க கந்தல் துணி கிடைக்குமா என தேடியலைந்தேன்
மேலங்கி கிடைத்தது. என்னை சுற்றி என் உறவினர்களின் பிணங்கள் இருந்தது. மண்ணில் சரிந்திருந்த அந்த உடல்களை பார்க்கவும் என்னால் முடியவில்லை. ஓர் இரவும் கழிந்து, அடுத்த நாள் பகல் பொழுதும் கழிந்தது. தண்ணீர் தாகமும் பசியும் என்னை மேலும் துன்புறுத்தியது. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை!
-----------------------------------------
என்ன மாதிரியான கொடூரம் இது. முழுக்க படித்து முடிவதற்குள் கண்கள் குளமாகிவிட்டது. மனுசனா, மனிதநேயத்துடன் இருக்கும் எவனும் இந்த கொடூரத்திற்கு மூளையாக இருந்த சங்பரிவாரங்களின் மதவெறி கும்பலையும்,பாசிச மதவாத பாஜகவை ஆதரிக்க மாட்டான். இவ்ளோ கொடூரம் செஞ்ச மனித மிருகங்கள் எப்படி விடுதலை??