Followers

Sunday, August 09, 2020

பெரியாரும் இஸ்லாமும்

 


பெரியாரும் இஸ்லாமும்

பெரியார் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் அவமானத்திற்கு உள்ளாக்கப்படும் போது அதற்கான எதிர்ப்பின் முதல் குரல் முஸ்லிம்களிடம் இருந்து தான் உருவாகும். முஸ்லிம்களுக்கும் பெரியாருக்குமான உறவு அத்தகையது.

பெரியார், முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சனை என்று மட்டுமல்ல இஸ்லாத்தின் பால் ஒரு சச்சரவு ஏற்பட்டால் கூட முதன் மனிதராக ஆதரவுக்கரம் நீட்டுபவராக இருந்தார்.

பெரியார் எனும் கடவுள் மறுப்பாளர் ஏன் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும் என்று நாம் கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்.

பெரியார் என்றுமே கடவுள் தத்துவத்திற்கு நேரடியான எதிரியாக இல்லை. ஆனால் அதற்கு மாறாக கடவுள் பேரைக் கொண்டு ஒருவர் ஏமாற்றப்படும் போதும், துன்புறத்துதலிற்கு ஆளாக்கப்படும் போதும் அதனை கடுமையாக எதிர்த்தார். அதற்கு அவர் பொதுவாக பயன்படுத்திக்கொண்ட பெயர் மட்டுமே “கடவுள் மறுப்பு.”

கடவுள் மறுப்பை ஏற்றுக்கொண்டதாக கூறப்படும் பெரியார் தான், தமிழக மக்களை இஸ்லாத்திற்கு செல்லுங்கள் என்று கூறினார். அதனை பல ஆண்டுகாலமாக பொதுமேடைகளில் பேசினார்.

இன்று பெரியாரும் இஸ்லாமும் நெருக்கமாக இருந்த வரலாறு பெருமளவு மறைந்து போய் இருக்கிறது. அதனை யாரும் வெளிப்படுத்த முன்வருவதில்லை அல்லது மறைக்கிறார்கள். ஆனால், அதனை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

இஸ்லாத்தை பற்றி பெரியாரின் பார்வை

பொதுவாகவே மதங்களுக்கு எதிரான பார்வை கொண்டிருந்த பெரியார் இஸ்லாம் மார்க்கத்தை அப்படி அணுகவில்லை. இஸ்லாத்தையும் விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகிய பெரியார் இஸ்லாத்தை பற்றி இப்படிக் கூறுகிறார்,

“இஸ்லாம் என்றால் முகமது நபிகள் மதம் என்றோ, இங்கு லுங்கி கட்டிக்கொண்டு அளந்து தாடி வைத்துக் கொண்டு இருக்கும் சாயுபு, ராவுத்தர், மரைக்காயர், மாப்பிள்ளை என்கின்றவர்கள் மதம் என்றோ கருதி விடாதீர்கள்.

திராவிடர்கள் மதம் முகம்மது நபிக்கு முன்பு, கிருஸ்து நாதருக்கு முன்பு, புத்த மகானுக்கு முன்பு, ஆரியர்களுக்கு “ கிருஷ்ணன்” “ராமன்” “சிவன்” “விஷ்னு”க்களுக்கு முன்பு திராவிடர்களுக்கு இருந்த மதமாகும்.

இஸ்லாம் என்பது சாந்தி , பணிவு , பக்தி என்ற பொருள்படும் அரபுச்சொல். இஸ்லாம் என்பது சகோதரத்தன்மை என்பது இவ்வளவு தான்! 200 வருசத்துக்கு முற்பட்ட அகராதிகளை பாருங்கள். அரபு வார்த்தைகளில் சொல்லாமல் தமிழில் ஒரு கடவுள், பரஸ்பர பணிவு, பக்தி, உடன்பிறப்பு என்ற தன்மைகள் கொண்ட மதம் என்றால் போதும், கடவுள் என்பது திராவிட மொழி, காட்(GOD) என்பது ஆங்கில மொழி, அல்லாஹ் என்பது அரபு மொழி என்பதல்லாமல் திராவிடர்களுக்கு மாறுபட்ட கடவுள் அல்ல. கொள்கை அல்ல என்பேன். (“ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 16&17)

மேலும் பெரியார் இஸ்லாத்திற்கு ஆதரவாக பேசுகிறார் எனும் குரல் வரும் போது பெரியார் சொல்கிறார், “ நான் இஸ்லாத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை. இது உண்மை! உண்மை!” (ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 19)

அது சண்டாளர்களையும் ரட்சிக்கும் மதம்; வீரத்தையும் ஆண்மையையும் (ஒடுக்கப்பட்ட மக்களுக்கு) அளிக்கும் மதம் (‘குடிஅரசு’ ஆக.25, 1929).

“ஒரு மனிதன் தான் மாலை 5 மணிக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக்கொண்டதாய்ச் சொல்லி, 5,30 மணிக்குத் ‘தீண்டாதவன் என்கின்ற இழிவிலிருந்து மீண்டு, தெருவில் நடக்க உரிமை பெற்று” மனிதனாக முடியும்  (‘குடிஅரசு’, ஆக.2, 1931) 

உலகில் மதமே இருக்கக்கூடாது அதனால் எப்போதும் அழிவு தான் என்று கூறிய பெரியார் இஸ்லாத்தை பற்றி மட்டும் கூறும் போது

“’மதங்கள் ஒழிந்த பிறகுதான் உலக சமாதானமும், ஒற்றுமையும், சாந்தியும் ஏற்பட முடியும், என்பது அநேக அறிஞர்களது அபிப்ராயமானாலும் அதற்கு விரோதமாக ஏதாவது ஒரு மதம் இருக்கும்போதே ‘உலக சமாதானம் ஏற்பட்டுவிட்டது.’ சாந்தி ஏற்பட்டு விட்டது என்று சொல்லப்படுமானால் அது இஸ்லாம் கொள்கைகளாகத் தான் இருக்கக்கூடும் என்று கருதுகின்றேன். ஏனெனில் அத சமூக ஒற்றுமை, சமூக சமத்துவம் ஆகிய காரியங்களில் மற்றெல்லோரைக் காட்டிலும் அதிகமான கவலை எடுத்து வருகின்றது” (குடிஅரசு, ஆக.23,1931)

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் – பெரியார் சொல்கிறார்.

1947ம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் ரயில்வே ஊழியர்களுக்கிடையே உரை நிகழ்த்துகிறார். அந்த நிகழ்ச்சியில் 5000 பேர் கலந்து கொள்கிறார்கள். அந்த உரையில் முழு நீளமாக இஸ்லாத்திற்கு செல்லுங்கள் அதுவொன்றே சமூக நீதிக்கு தீர்வு என பெரியார் பேசுகிறார்.

அதனை புத்தகமாகவும் “ இன ஒழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என்று 1947ல் புத்தகமாகவும்  கொண்டு வந்தார் பெரியார். 1993ல் கூட மறுபதிப்பு செய்யப்பட்டு புத்தகம் வெளியிடப்பட்டது.

பெரியார் அடுத்தவர்களின் மனதுக்கு ஏற்றவாறு பேசி நல்ல பெயரை பெற்றிட வேண்டும் என்று நினைப்பவர் அல்ல. அதனால் எத்துனை பெரிய கூட்டத்திலும் தன் மனதில் உண்மை என்று எண்ணியதை அப்படியே பேசுவார்.

அதனால் தான் 5000 பேர் கலந்து கொண்ட கூட்டத்திலும், 20,000 பேர் கலந்து கொண்ட கூட்டத்திலும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் இன இழிவு ஒழிய ஓரே தீர்வு என்று பேசினார். ( ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 14)

பெரியார் கூறுகிறார் “   தோழர்களே, நமது வியாதி- நோய் ( சூத்திரர்கள், வேசி மகன் என்ற நோய்) பெரிது; மிக மிகப் பெரிது. இது(cancer) புத்துத் தொழுநோய் போன்றது. வெகு நாளைய நோய். இதற்கு ஒரே ஒரு மருந்து தான். அது இஸ்லாம் தான்!. இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியது தான். தூக்க மருந்தும், போதை மருந்தும் கொண்டு நோய் இம்சை தெரியாமல் நாறும் பிணம்போல் கிடக்க வேண்டியது தான் நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம்(இந்து மதம் விடுவது என்னும்) மருந்து தான் .அதுதான் நாடு கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும், வீரம் கொடுக்கும் மருந்து ஆகும்!” (ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 16)

இஸ்லாத்தை ஏற்கப்போவதாக 1930ல் அம்பேத்கர் அறிவித்த போது பெரியார் அம்பேத்கருக்கு இப்படியொரு கடிதம் எழுதினார், “எவ்வளவோ பெரிய பெரிய ஆட்களெல்லாம் அதை கண்டித்தார்கள். மாளவியா, விஜயராகவாச்சாரியார் போன்றவர்களெல்லாம், ‘அம்பேத்கர் அவர்களே உங்களுடைய முடிவை மீண்டும் பரிசீலனை செய்யுங்கள்’ என்பதாகத் தந்தி கொடுத்தார்கள் அப்போது தோழர் அம்பேத்கர் அவர்களுக்கு நானும் ஒரு தந்தி கொடுத்தேன். என்னவென்றால், நீங்கள் ஒண்டியாகப் போகக்கூடாது. குறைந்தது ஒரு லட்சம் பேரோடு மதம் மாற வேண்டும். அப்போது தான் முஸ்லிம் மதிப்பான்… ஒரு லட்சம் பேரோடு தாங்கள் அங்கு போகும்  போது நானும் ஒரு பத்து இருபதாயிரும் பேர்கள் தருகிறேன் என்பதாகத் தந்தி கொடுத்தேன்.” (ஆனைமுத்து தொகுப்பு, பக். 1033)

இஸ்லாத்தை தவிர மற்ற மதங்களை ஏற்றுக்கொண்டால் உருவாகும் நிலை என்ன என்பது பற்றியும் பெரியார் கூறுகிறார்,

“ கிருஸ்துவ மதத்தை தழுவும் இந்து எவனும் இங்கு இந்து ஜாதிக் கொள்கையை தழுவ அனுமதிக்கப்படுகிறான். சீக்கியனும் அநேகமாய் இந்து மதக் கொள்கையைப் படித்தான் கடவுளை வணங்குகிறான். ஆனால் உருவக் கடவுள்களுக்கு பதிலாகப் புஸ்தகத்தை கடவுள் உருவமாய் வைத்து இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியனும் இந்து போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஒரு அளவுக்கு ஜாதிப்பாகுபாடு அனுசகிரிக்கிறான். சீக்கியரில் தீண்டப்படாத கீழ் ஜாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது.

ஆரியர்கள் சீக்க்யர்கள், சீக்கியம் ஆன மதங்களுடன் நேசமாக இருக்கிறார்கள். பௌத்தம், சமணம் முதலியவையும் நடப்பில் இஸ்லாத்தை வெறுப்பதால் இந்துவுடன் வேஷத்தில் உறவாடுவதால் அவைகளிடம் ஆரியருக்கு அவ்வளவு வெறுப்பு இல்லை” (ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 24&25)

அம்பேத்கர் பௌத்த மதத்தில் சேர்வதை கூட பெரியார் விரும்பவில்லை. அதனை பெரியாரே கூறுகிறார், “அம்பேத்கர் பௌத்தத்தில் சேருகிறேன் என்று சொன்னவுடன் எப்போதும் போல பலர் எதிர்த்தார்கள். ஆனாலும் இஸ்லாம் ஆவது என்றால் பயப்படுகிற அளவுக்கு பௌத்தர் ஆகிவிடுவது என்று சொல்லுவதற்கு இந்து மதத்தார்கள் (பார்ப்பனர்கள்) பயப்படமாட்டார்கள். ஏனென்றால் பௌத்தத்தை இந்து மதத்தோடு ஏறக்குறைய கலர வைத்து விட்டார்கள்.”  (சென்னை சொற்பொழிவு 13.5.1952)

முகம்மது நபிகள் பற்றி பெரியார்

நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த ஒரே முஸ்லிம் அல்லாத இந்திய அரசியல் தலைவர் பெரியார் மட்டும் தான்.

பெரியார் கூறுகிறார்

“இன்றைய வரையிலே அவருக்குப்பின்னால் இந்தத் துறைகளில் அவர் சொன்ன கொள்கை கருத்துக்களை விட மேலானதாகச் சொல்லுவதற்கு எவரும் தோன்றவில்லை” (சென்னை சொற்பொழிவு, 20.12.1953).

“திரு. முகம்மது  நபியைப் பற்றி யார் எப்படி நினைத்துக் கொண்டாலும் நான் அவரை ஒரு மனிதர் என்றும், மனிதரைப் போலவே தாயும் தகப்பனும் கூடி கருத்தரித்து பிறந்தவர் என்றும் கருதித்தான் அவரால் செய்யப்பட்டதாகச் சொல்லும் விஷயங்களில் அனேகத்தை நான் புகழ்கிறேன். அதற்காகவே அவரையும் நான் பாராட்டுகிறேன்.அப்படிச் சொல்லப் படுபவைகளே அந்த மார்க்கத்திற்கு ஒரு பெருமை என்றும்  நினைக்கிறேன்…. ஆனால் மற்ற மதத்துக்காரர்களோ தங்கள் மதத் தலைவரை ஒரு மனிதர் என்றலே கோபித்துக் கொள்கிறார்கள். கழுதை, நாய், குதிரை இவற்றினுடைய வயிற்றிலிருந்து பிறந்தவர் என்றாலும் ஏற்றுக் கொள்கிறார்கள்”

(சாத்தான்குளம், 28.7.1931).

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற பெரியாரின் கருத்துக்கு எதிர்விளைவுகள்

பெரியார் இஸ்லாத்திற்கு மாறுங்கள் என்று கூறியதால் அவருக்கு வந்த எதிர்கருத்துகளுக்கு பதிலளித்த பெரியார் இப்படிக் கூறினார்,

“ ஆதி திராவிடர்களை நான் இஸ்லாம் கொள்கையை தழுவுங்கள் என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களை பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்கு சொந்த அறிவுமில்லை. சொல்வதை கிரகிக்க சக்தியுமில்லை. சிலருக்கு தங்கள் மேன்மை போய்விடுமே, தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம் என்றே நான் கருதிவிட்டேன். “

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பெரியார் தொடர்ச்சியாக கூறி வந்ததால் சில திராவிட கழக்கத்தாரே பெரியாரின் கருத்துக்கு எதிராக பல கடிதங்கள் எழுதுகிறார்கள். அதற்கும் பெரியார் உங்கள் சிந்தனையில் இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே அதிகம் இருக்கிறது, உண்மை இல்லையென்று கூறி பதில் தருகிறார்.

“ சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையது, திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.” (ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 23)

“ இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால் பிராமணர் என்ற ஜாதியே , சமுதாயமே இரா, பல கடவுள்களும், விக்கிரக (உருவ)க் கடவுள்களும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக கடவுள்களுக்கு படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும் . இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கபடுகிறது, வெகுகாலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது,” (ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 23 & 24)

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற பெரியாரின் தொடர்ச்சியான பிரச்சாரத்திற்கு வசவு பாடி ஒரு கட்டுரை வெளிவந்தது, அதற்கும் பதிலளித்த பெரியார்,

“ நான் இஸ்லாத்தில் சேரும் படி யாரைச் சொல்லுகிறேன்? சூத்திர பட்டத்தை வெறுக்கிறவர்களையும், சூத்திரப்பட்டத்தால் இழிநிலையில் பிற்பட்ட தன்மையில் இருக்கிறவர்களையும், திராவிட சமுதாயத்திற்கு மான உணர்ச்சி, மனிதத்தன்மை உணர்ச்சி வேண்டும் என்பவர்களையும் தான் இந்து மதத்தை விட்டு நம் விருப்பத்திற்கு ஏற்ற இஸ்லாத்தை அல்லது அதுபோன்ற மார்க்கத்தை தழுவச் சொல்கிறேன். ஆதலால் மற்றவர்கள் பதற வேண்டியதில்லை.” (ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 29&30)

ஒரு கட்டத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தீர்கள் என்றால் கொல்வோம், தூற்றுவோம் என்று கடிதங்கள் பெரியாருக்கு வரத்தொடங்குகிறது, அதற்கும் பதில் தருகிறார் பெரியார்,

“ இதனால்(இஸ்லாமகும் படி சொல்வதால்) இளைஞர் மனம் என்மீது வெறுப்புக் கொண்டுவிட்டது என்று மிரட்டி எனக்குக் கடிதம் எழுதுகிறீர்கள். இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என்மீது(வெறுப்புக் கொள்ளாது) வெறுப்புக் கொண்டு விடுமானாலும் கூட நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர் பாராட்டுவார்கள். பாராட்டாவிட்டாலும் இன்று நான் சொன்னதை பின்பற்றி வீரத்தோடு மான வாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ, தப்பாகவோ நான் அதில் உறுதிக்கொண்டு இருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும், சாவு வருவதானாலும் மனக்குறையின்றி நிறைமனதுடன் அனுபவிப்பேன் – சாவேன் என்பதை உண்மையாக வெளியிடுகிறேன்.” (ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 31&32)

பெரியார் மேடையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்கள்

பெரியாரின் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற பிரச்சாரத்தின் பலனாக பல ஆயிரம் பேர் தென்னிந்தியாவில் இஸ்லாத்தை ஏற்றார்கள். பெரியாரின் மேடையிலேயே பலர் இஸ்லாத்தை தழுவிக்கொண்ட நிகழ்வும் நடந்தது. அதனையும் பெரியாரே கூறுகிறார்,

“ சமீப காலம் வரை தீண்டாமை விலக் வேண்டும், தீண்டத்தகாதாவர்கள் என்கின்ற தன்மை மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் உடனே இஸ்லாமாக ஆக வேண்டும் என்று சொல்லி 20 வருட காலம் பிரச்சாரம் செய்து அந்த சமுதாயத்தவரையும் ஒப்புக்கொள்ள செய்திருக்கிறேன்.

மலையாலத்திலும் 1924 முதல் 34 வரை பிரச்சாரம் செய்து மலையாள ஈழவர்களையும் மற்றும் தீண்டப்படாத மக்கள் என்பவர்களையும் ஒப்புக்கொள்ளச் செய்தேன். இவர்கள் ஒப்புக்கொண்டு தங்கள் மாநாட்டில் தீர்மானங்கள் செய்து சுமார் மொத்தத்தில் இங்கு 2000,3000 பேரும் மலையாளத்தில் சுமார் 600,700 பேர்களும் இஸ்லாத்தை தழுவியதுடன் அவர்கள் இழிவுகள் சிறிது சிறிதாக நீக்கப்பட்டு தீர வேண்டிய அளவுக்கு வெற்றி ஏற்பட்டு விட்டது” (ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 35&36)

இஸ்லாம் திராவிடர் மதம் – சொல்வது பெரியார்

பெரியார் இஸ்லாம் தான் நம் பூர்வகுடி மதம் என்று எடுத்துரைத்தார். திராவிடரான நமக்கு பழங்காலத்தில் சாதிகள் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்று வாழ்ந்து வந்தோம். அதனையே இஸ்லாமும் கூறுகிறது என்று கூறினார் பெரியார்.

“இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையது, திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.” (ஆதாரம் : இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து – பக். 23)

பெரியார் “ தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது “ என்று தலைப்பிட்டு 24.02.1935 குடி அரசில் கட்டுரை கூட வெளியிட்டார்.

அதில் பெரியார் கூறுகிறார்,

“ ஆரியர்கள் இந்நாட்டுக்கு வந்து குடியேறுவதற்கு முன் தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையை பற்றியும் அவர்களது மதம், தெய்வ வழிபாடு என்பவைகளின் மாதிரியை பற்றியும் பண்டைத்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றபடி பார்ப்போமானால் தமிழ் மக்களின் அப்போதிருந்த வாழ்க்கையும், மதமும், கடவுள் வழிபாடும் ஆகியவை பெரிதும் இஸ்லாம் மதத்தையும் ஒரு சில கிறிஸ்துவ மதத்தையும் ஒத்து இருக்கின்றன என்று சொல்லலாம். “

“ சுயமரியாதைக்காரர்கள் கோரும் மாற்றமும் திருத்தமும் அதிலும் பெரிதும் இல்லையானாலும் கூட இன்று ஆரியர்களை வெறுக்கும் தமிழ் மக்களுக்கு தாரளமாய் இடமிருக்கின்றது.” (குடி அரசு 24.02.1935)

முஸ்லிம்களுக்கு பக்கபலாக எப்போதும் துணை நின்ற பெரியார்

ஜின்னாவுடன் பெரியார்

1926ல் காங்கிரஸில் இந்துத்துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்தி வந்தததையும், முஸ்லிம்களை மிரட்டி வந்த நிகழ்வையும் கண்டித்த ஜின்னா, “ நாங்கள் முஸ்லிம்கள், இந்துக்களுடன் எப்போதும் நேசமாகியிருப்பதையே விரும்புகிறோம். ஆனால், முஸ்லிம்களுடன் எதிர்த்து சண்டையிட துணிந்தால் அவர்களை எதிர்ப்பதற்கும் தயங்க மாட்டோம். எங்கள் நபியவர்களின் படை இதை வரலாற்றில் சாதித்து காட்டியிருக்கிறார்கள்” என்று பேசினார்.

இதையொட்டி இந்தியா முழுக்க ஜின்னாவின் பேச்சுக்கு அனைத்து தலைவர்களும் எதிராக குரல் எழுப்பினார்கள். ஆனால் ஒற்றை ஆளாக பெரியார் ஜின்னாவின் இந்த பேச்சு நியாயமானது என்று குரல் எழுப்பினார். ஜின்னாவுக்கு ஆதரவாக 1926ம் ஆண்டு மே மாதம் குடியரசில் எழுதினார் பெரியார்.

மாட்டுக்கறி விசயத்தில் பெரியார்

இப்போது மட்டுமல்ல பெரியாரின் காலக்கட்டத்திலும் மாட்டுக்கறி பெயரில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதற்கு பெரியார் கொடுத்த பதில்,

 பசுக்கொலையை பற்றி இந்துக்கள் முஸ்லீம்களை உபத்திரவிப்பது அனாவசியமென்றே கருதுகிறோம், முஸ்லீம்கள் பசுக்கொலை செய்வதால் இந்துகளுக்கு எந்த விதக் கஷ்டமோ நஷ்டமோ இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. இந்துக்களுக்கு எப்படி ஒரு ஆட்டையோ, கோழியையோ , பன்றியையோ விலை போட்டு வாங்கி வளர்த்து கொன்று தின்பதற்கு பாத்தியமுண்டோ அதே போல் முஸ்லிம்களுக்கும் பசுவையோ, ஆட்டையோ, கோழியையோ விலை போட்டு வாங்கி கொன்று தின்னப் பாத்தியமுண்டு.

இப்படி இருக்க, முஸ்லீம்களுக்கு மாத்திரம் ஒரு ஜெந்து விசயத்தில் நிர்பந்தம் ஏற்படுத்துவதின் பொருள் என்ன?..

மாடு சாப்பிடுவதும் மாட்டை கொல்வதும் நமது தேசத்தில் முஸ்லிம்கள் மாத்திரம் செய்யவில்லை. நமது நாட்டில் பஞ்சமர் என்று சொல்வோரில் கோடிக்கணக்கான பேர்கள் அப்படியே செய்கிறார்கள். நாம் இப்போது எந்த அரசாங்கத்தின் கீழ் இருக்கிறோமோ அந்த அரசாங்கமே மாடு தின்கிற வகுப்பை சேர்ந்தவர்கள்.

பஞ்சமர்களும், முஸ்லிம்களும் ஏழைகளாக இருப்பதால் வயதான மாடுகளையும், செத்த மாடுகளையும் உபயோகிக்கிறார்கள். நம்மை ஆளும் ஜாதியாரோ நல்ல வாலிபமுள்ளதாய் – காளைத்தரமாய் – உழைக்கக் கூடியதாய் – அழகுள்ளதாய் பார்த்து வாங்கி கொன்று சாப்பிடுகிறார்கள்.” (11.07.1926 குடி அரசு)

இஸ்லாத்தை விட்டு வெளியேறாதீர்கள் – சொல்வது பெரியார்

ஒரு கட்டத்தில் பெரியாரிடம் ஒரு முஸ்லிம் பெரியவர், உங்கள் கொள்கைகள் எங்கள் இஸ்லாமிய இளைஞர்கள் பலரிடமும் கூட பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்லாத்திலும் மூட நம்பிக்கைகள் கலந்திருக்கிறது. சில இளைஞர்கள் தங்கள் மார்க்கத்தை விட்டு வெளியேறி உங்களுடன் இணைய விருப்பப்படுகிறார்கள் என்று சொல்கிறார்.

உண்மையில் கடவுள் மறுப்பாராக அறியப்படும் பெரியார் என்ன செய்திருக்க வேண்டும்?.. உடனே அவர்களை அந்த மார்க்கத்திலிருந்து வெளியேறி நாத்திகனாக வழி செய்யுங்கள் என்று கூறியிருக்க வேண்டும் அல்லவா?.. ஆனால் அப்படி சொல்லவில்லை பெரியார்.

பெரியார் சொல்கிறார். “ அப்படிப்பட்ட வாலிபர்களாலும், மௌலவிகளாலும் தங்கள் சமூகத்திலுள்ள சில பழக்க வழக்கங்கள் மார்க்கத்தின் பெயராலும் , புரோகிதர்களாலும் இந்துக்கள் சாவகாசத்தினாலும் அவை மனித இயற்கைக்கும் தர்மத்திற்கும் விரோதமாய் இருந்தால் அக்கொள்கைகளை அதிலிருந்து கொண்டே திருத்த முயற்சிப்பது தான் பயனளிக்குமேயொழிய மார்க்கத்தை விட்டு திடீரென்று வெளியேறி விட வேண்டியதில்லை என்பதே எனது அபிப்ராயம்” ( குடி அரசு 15.02.1931)

இஸ்லாத்தின் உட்கூறுகளையும் ஆதரித்த பெரியார்

பெரியார் எதையும் விமர்சனக் கண்ணோட்டதுடன் அணுகுபவர். எதையும் கேள்வி கேட்பவர் பெரியார். அப்படி பெரியார் இஸ்லாத்தின் நடைமுறைகளை ஒவ்வொரு முறையும் கேள்வி கேட்டு விளக்கம் பெற்றார்.  சில நேரங்களில் விமர்சனமும் செய்திருக்கிறார்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமை – சொல்வது பெரியார்

இஸ்லாமிய மதத்தில் பெரிதும் குற்றச்சாட்டுளுக்கு உள்ளாக்கப்படுவது பெண்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கவில்லை என்பது தான். ஆனால், அதனையும் பெரியார் மறுக்கிறார்,

பெரியார் கூறுகிறார், “ முகமதிய மதத்தில் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. அதாவது, பெண்களுக்கு சொத்துரிமை உண்டு. விதவா விவாகம் உண்டு. கணவனும் மனைவியும் ஒத்துக்கொள்ளா விட்டால் விலகிக் கொள்ளச் சுதந்திரம் உண்டு. படிக்க சுதந்திரம் உண்டு. ஆனால் கோஷா முறையை பற்றி குற்றம் சொல்லலாம். ஆனாலும் வர வர அதுவும் விலக்கப்படுகின்றது.” (25.08.1929 குடி அரசு)

ஹஜ் வழக்கம் பகுத்தறிவு சார்ந்தது – சொல்வது பெரியார்

இஸ்லாத்தில் ஜகாத் முறையை பெருமையாக பேசிய பெரியார் ஹஜ் முறையில் தனக்கு பெரிய ஐயமிருக்கிறது. இந்துக்கள் புனித யாத்திரை செல்வது போலத்தானே என்று ஐயம் எழுப்பினார். அதற்கும் பதில் கிடைத்தவுடன் பெரியார் கூறுகிறார்,

“ முஸ்லிம்கள் மக்காவுக்குப் போவதில் செல்வத்திலும், சரீரத்திலும் தகுதியுள்ளவர்கள் தான் போக வேண்டுமென்று இருக்கின்றதே தவிர எல்லோரும் போய்த்தீர வேண்டுமென்று இல்லையென்றும்  அந்த இடம் முகம்மது நபி அவர்கள் உண்மையில் பிரத்தியட்சத்தில் பிறந்த இடம் என்பதற்காக அங்கு போவது என்பது தானே தவிர வேறு அற்புதமில்லை என்று அறிவு வளர்ச்சிக்கும் மற்ற மக்கள் நடை, உடை, நாகரிகம் பார்த்து வரவும் பயன்படும் படியான ஒரு யாத்திரை என்றும்  கொலை களவு கொள்ளை நடத்தின பாபம் தீர்ந்து விடும் என்று சொல்வது தப்பு என்றும் அந்த மாதிரி எண்ணத்துடன் யாரும் போவதில்லை” என்றும் ஐயத்தை முடித்து வைத்தார்கள் என்றார். ( குடி அரசு 09.08.1931)

சமதர்ம ஆட்சி வேண்டுமா முஸ்லிமாக மாறுங்கள் – சொல்வது பெரியார்

1936ம் ஆண்டு ஜனவரி மாத குடி அரசு கட்டுரையில் உலக முஸ்லிம்களின் ஜனத்தொகை என்ற விவரத்தை கொடுத்து விட்டு பெரியார் இப்படி சொல்கிறார்,

“ தீண்டப்படாத மக்களே, தாழ்த்தப்பட்ட மக்களே நீங்கள் உங்கள் தீண்டாமை ஒழிவதற்கு இல்லாவிட்டாலும் இந்திய மக்கள் அரசியல் சமூக மரியாதைக்கு என்றாவது உடனே எல்லோரும் முஸ்லீம் ஆகுங்கள். இந்தியாவின் 16 கோடி முஸ்லீம்கள் இந்தியாவின் 48 கோடி இந்துக்களுக்கு சமமானவர்கள், 16 கோடி முஸ்லிம்கள் ஆகிவிட்டால் இந்தியாவில் 8 நாளில் சமதர்ம ஆட்சியை ஏற்படுத்தி விடலாம். “ (குடி அரசு 12.01.1936)

இஸ்லாத்தில் தர்மம்

இஸ்லாத்தின் ஜகாத் முறையையும் வரவேற்று ஆதரித்து பேசியிருக்கிறார் பெரியார்,

“முகம்மதிய மதம் தர்ம விசயத்தில் மிக்க பிரயோஜனமான காரியத்தை செய்விக்கிறது. அதாவது ஒரு முஸ்லிம் தனது சொத்தில், அல்லது தனது வரும்படியில் இன்ன பாகம் தர்மத்திற்கு கொடுக்க வேண்டும் என்று இருப்பது அமுலில் இல்லாவிட்டாலும் கொடுக்கும் பணத்தை ஏழைகளுக்கும், கஷ்டப்பட்டு சம்பாதித்து சாப்பிட முடியாதவர்களுக்கும் அநாதைப் பிள்ளைகளை காப்பாற்றி கல்வி, தொழில் கற்று கொடுப்பதற்கும் உபயோகப் படுத்தகின்றதே  ஒழிய தர்மத்தின் பெயரால் சோம்பேறிகளை உருவாக்குவதில்லை” (25.08.1929 குடி அரசு)

முஸ்லிம்களே மதத்தை முற்படுத்துங்கள் – சொன்னது பெரியார்

கடவுள் மறுப்பாளராக மட்டும் காட்சிப்படுத்தப்படும் பெரியார் முஸ்லிம்களின் வளர்ச்சிக்கு அவர்களின் மதம் மட்டுமே காரணம். அதனால் எப்போதும் அதனை முற்படுத்துங்கள். மதத்தை கடந்து தேசியம் என்று வெவ்வேறு காரணங்கள் சொல்லி விலகுபவர்கள் கண்டிப்பாக சமூக நன்மைக்கு வித்திட மாட்டார்கள் என்று கூறினார்.

பெரியார் கூறுகிறார்.

“ அவர்கள்(முஸ்லிம்கள்) சமூகம் முன்னேறி வருவதற்கும் அவர்கள் மதம் தலை சிறந்து விளங்குவதற்கும் அதுதான் காரணம். அப்படிப்பட்டவர்கள் இன்று இந்தியாவில் ஜன சமூகத்தில் சுருங்கின எண்ணிக்கை உள்ளவர்களாய் இருந்தும் எப்படிப்பட்ட நெருக்கடியிலும் சமூகத்தை விட்டுக் கொடுக்காததாலேயே அவர்கள் தலை நிமிர்ந்து நடக்கிறார்கள். சமபங்கு – சில விஷயங்களில் இரட்டைப்பங்கு கூட அடைந்து வருகிறார்கள். இது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்ககூடியதும் மற்ற சமூகத்துக்கு படிப்பினைக்கு பயன்படுத்தக் கூடியதுமான விஷயமுமாகும். “ குடி அரசு 14.03.1937

அரசியல் விஷயத்திலும் முஸ்லிம்கள் ஆதரவு தேவை – சொல்பவர் பெரியார்

பெரியார் கூறுகிறார்,

“அரசியல் விசயத்திலும் நான் பெரிதும் முஸ்லிம்களுடைய ஆதரவை எதிர்பார்த்தவனாய் இருக்கிறேன்.

ஏனெனில் கல்வியிலும், சமூகத்துறையிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பிற்படுத்தப்பட்டு, தாழ்த்தப்பட்டு கிடந்த மக்கள் முன்னேற்றமடைய முயற்சிக்க வழி காட்டியவர்கள் முதல் முதல் முஸ்லிம்களேயாகும். எனது தோழர் கலீபுல்லா சாயுபு அவர்கள் சுயமரியாதை இயக்கத்துக்கு 1500 வருசத்துக்கு முன்பே வழிகாட்டியது இஸ்லாம் என்றார். ஆனால், நான் ஜஸ்டிஸ் இயக்கத்துக்கு கூட 35 வருசத்துக்கு முன்னமேயே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கு வழிகாட்டியவர்கள் முஸ்லிம்களேயாகும் அதாவது முஸ்லிம் லீக்கேயாகும் என்று சொல்வேன்” (குடி அரசு 05.12.1937)

இஸ்லாத்தில் சீர்திருத்தம் சாத்தியம்

இஸ்லாத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்றும் சீர்திருத்தம் சாத்தியம் என்றும் கூறியவர் பெரியார்,

எப்போதும் இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களோடு இஸ்லாத்தின் மேன்மையும் எடுத்து கூறி வந்தார் பெரியார்.

“இவற்றையும் மார்க்கக் கொள்கைகளோடு சேர்த்துக் கொண்டிருக்கிறவர்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கம் என்று எப்படி சொல்ல இயலும்? கோபிப்பதில் பயனில்லை. மற்ற மதங்களை விட இஸ்லாம் மதம் மேலானது என்பது என் அபிப்ராயம். ஆனால் அதில் இனிச் சிறிது கூடச் சீர்திருத்தம் வேண்டியதில்லை என்பவர்களுடன்  நான் முரண்பட்டவன்” (களக்காடு, 23.12.1950).

பெரியார் ஒருமுறை மிலாடி நபி மாநாட்டில் பேசுகையில், அல்லாசாமி, கூண்டு வழிபாடு(தர்கா வழிபாடு) போன்று இந்துமதத்தில் இருக்கும் சில மூட –பழக்க வழக்கங்களையும் இஸ்லாத்தில் வைத்திருக்கிறீர்கள். இதனை வைத்துக்கொண்டு எப்படி உங்களை பகுத்தறிவு வாதிகள் என்கிறீர்கள் என்றார். அதே இடத்தில் அடுத்த வருடம் பெரியார் மிலாடி நபி மாநாட்டில் பேசிய போது அல்லாசாமி பண்டிகை நடத்தப்படவில்லை. அதை குறிப்பிட்டு பேசிய பெரியார், சென்ற வருடம் நான் அல்லா சாமி உட்பட சில மூடப்பழக்க வழங்கங்கள் இஸ்லாத்திலும் இருப்பது பற்றி சொன்னதால் சிலர் வருத்தப்பட்டார்கள். ஆனால், இந்த வருடம் அல்லா சாமி பண்டிகை நடத்தப்படவில்லை. நான் சொன்னதால் தானே நடந்தது என்று கூறினார்.

அதனால் தான் இஸ்லாத்தை பற்றி கூறுகையில் பெரியார், “

இஸ்லாம் மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமென்றும், பகுத்தறிவின் பரீட்சைக்கு விட்டு அதன்படி நடக்கத் தயார் என்றும் முஸ்லிம்கள் இன்று தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள். அந்தப்படிச் சொல்ல மற்ற மதக்காரர்களுக்கு ஏன் தைரியமில்லை? ஏனெனில், திரு. முகம்மது நபி கொள்கைகள் ஆனதனாலும், அநேக விஷயங்களில் அது பகுத்தறிவுக்கு நிற்கத்தக்க யோக்கியதையுடையதாய் இருக்கின்றது” (‘குடி அரசு’ ஆக. 23, 1931).

பெரியார் ஏன் இஸ்லாத்திற்கு மாற வில்லை?

இவ்வளவு தூரம் இஸ்லாத்தின் பால் அக்கறையோடு இருக்கும் பெரியார் ஏன் மதம் மாறவில்லை எனக்கேள்வி எழுவது இயற்கை.

அம்பேத்கரிடம் இதற்கான பதிலைப் பெரியார் கூறியுள்ளார்.

“அம்பேத்கர் அவர்கள் என்னைப் பார்த்து என்ன இராமசாமி நாம் இப்படி பேசிக் கொண்டே இருந்தால் என்ன பலன் ஏற்பட முடியும்? வாருங்கள். நாம் இரண்டு பேரும் புத்த மதத்தில் சேர்ந்துவிடுவோம் என்றார். நான் சொன்னேன். ’ரொம்ப சரி, இப்போது முதலில் நீங்கள்  சேருங்கள், நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென்றால் தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றித் தீர்மானமாகப்  பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்தியக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமர் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும்  இந்து மதத்திலுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வதுபோல் அப்புறம் நான் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவதனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக் கூடாது’ என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான்,இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது” (டெல்லி பகார் கஞ்ச், 15.12.1959).

பெரியாரின் இத்தகைய குறிப்புகளை எல்லாம் வைத்துக்கொண்டு தான் இஸ்லாத்திற்கு மாறிய பெரியார்தாசன் ” பெரியார் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார்” என்று புத்தகம் எழுதினார். பெரியார் தனிப்பட்ட வாழ்க்கையில் இஸ்லாத்திற்கு மாறினாரா இல்லையா என்று நமக்கு தெரியாது. அது அவருக்கு இறைவனுக்கும் இடைப்பட்ட நிலைப்பாடு.

ஆனால், பெரியார் கடவுளை கண்மூடித்தனமாக எங்குமே எதிர்க்கவில்லை. இஸ்லாத்தின் பால் அதிக காதல் கொண்டிருந்தார் என்பது மட்டும் மறுக்க முடியாதது.

– அபூ சித்திக்.

 

1 comment:

Dr.Anburaj said...

ஈவேரா முதலில் இசுலாத்தை கடுமையாக விமா்சனம் செய்தாா். பின் பாக்கிஸ்தான் பிரிவினை சாக்கில் முஸ்லீம்கள் உதவி செய்தால் தமி்ழ்நாட்டை தனிநாடாக பிரித்து விடலாம் என்ற நப்பாசையால் பொய்யாக அண்டப்புளுகாக அரேபிய காடையர்களின் மதத்தை புகழ்ந்து தள்ளியிருக்கின்றாா்.

இசுலாம் ஒரு அசிங்கம்.அரேபியர்களின் வல்லாதிக்க இயக்கம். மறக்கும் அளவிற்கு உலகிற்கு நன்று