Posted by Kalilur Rahman
ஊர்ல இருந்தப்போவும் சரி, சென்னையிலயும் சரி... வாழ்க்கை முழுக்க வாடகை வீட்டுலதான் இருந்திருக்கேன். 4-5 வருஷத்துக்கு ஒரு தடவை சட்டி. சாமான்லாம் தூக்கிட்டு வீடு தேடி அலையுற கொடுமை வார்த்தையில சொல்லி மாளாது... ஒவ்வொரு தடவை வீடு மாறும்போது விலைவாசி ஏறியிருக்கும், வீட்டு வாடகை ஏறியிருக்கும்.. நம்ம பட்ஜெட்க்குள்ள நாம எதிர்பார்க்குற மாதிரி நல்ல வீடு கிடைக்குறது கஷ்டமாகிட்டே போகும், குதிரைக்கொம்பா இருக்கும்.
ஊர்ல இருந்தப்போ, பெரும்பாலும் தெரிஞ்சவங்க வீட்டுலயோ இல்ல வேற யாரோ முஸ்லீம் வீட்டுலேயோதான் வாடகைக்கு இருந்திருக்கோம்.. அது ஏன்னு சின்ன வயசுல நான் யோசிச்சது இல்ல.. கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பின்னாலதான், முஸ்லீம்களுக்கு பெரும்பாலும் யாரும் வீடு கொடுக்குறதில்லங்கிற விஷயமே தெரிஞ்சுது. ஸ்கூல் படிக்குறப்போ முதன்முதல்ல இதை கேள்விப்பட்டப்போ, இப்படியொரு நிபந்தனைக்கு பின்னால இருக்கக்கூடிய மனநிலையை கொஞ்சமும் புரிஞ்சுக்க முடியல.. ரொம்ப வியப்பா இருந்தது. ஒரு சின்ன பையனா 'அது ஏன் முஸ்லீம்களுக்கு வீடு கொடுக்கமாட்டாங்க?'ங்கிற கேள்வியே ஒரு மாதிரி inferiorஆ feel பண்ணவெச்சது. 'all Indians are my brothers and sisters'ன்னு தினமும் பிரேயர் அப்போ National Pledge எடுக்குறதுலாம், பிரேயரோட முடிஞ்சுருமோன்னு தோணும்.
வீடு தேடி அலையுறப்போ எல்லாம், மூஞ்சியில அடிச்ச மாதிரி 'முஸ்லீம்களுக்கு எல்லாம் வீடு கொடுக்குறதில்ல'ன்னு சொல்லுவாங்க.. திண்டுக்கல் ஒரு சின்ன நகரம்தான். அங்கே அந்த மாதிரி இருந்தது கூட ஆச்சர்யம் இல்ல. ஆனா, வேலை தேடி சென்னை வந்த பின்னால இன்னும் மோசமான சம்பவங்கள் நடந்திருக்கு.
4, 5 நண்பர்கள் கூட சேர்ந்து பேச்சிலர்ஸா வீடு பார்க்க போறப்போ, ஒரு முறை ப்ரோக்கர் ஒருத்தர் 'தம்பி.. உங்க 5 பேர்ல கிறிஸ்டியன், முஸ்லீம் யாரும் இருந்தா பின்னால போய் நின்னுக்கோங்க.. வாயை தொறந்துடாதீங்க.. அப்போதான் வீடு கிடைக்கும்'ன்னு சொன்ன கொடுமைலாம் நடந்திருக்கு.. ரஹ்மான்ங்கிற பேரை சில நண்பர்கள் ரகுன்னு கூப்பிடுவாங்க.. கும்பலா நண்பர்கள் கூட போறப்போ, அதையே சில ஹவுஸ் ஓனர்ஸ்கிட்ட சொன்னதும் உண்டு.. அதுவும் அப்போல்லாம் கடவுள் நம்பிக்கை வேற இருந்ததால, 'என்ன, வாழ்க்கைடா இது.. ஏன்டா முஸ்லீமா பொறந்து தொலைச்சோம்'ன்னு கடுப்பு மசுரா இருக்கும்.
ஆனா, luckily கல்யாணம் ஆன பின்னால.. நான் இப்போ இருக்குற வீடு, இதுக்கு முன்னால இருந்த வீடு - 2 ஹவுஸ் ஓனரும் ரொம்ப நல்ல மனுஷங்க.. எந்த பாரபட்சமும் பார்த்ததில்ல.. ஆனா, இப்போ 6 மாசமா கால் வலி இருக்குறதால, அதிகம் படி ஏறி இறங்க வேணாம்ன்னு டாக்டர் சொன்னதால ground floor அல்லது lift இருக்குற மாதிரி வீடு தேடிட்டு இருக்கேன்.. ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில 3 வாரமா சனி, ஞாயிறுல நானும் மனைவியும் வீடு தேடுறதே கதின்னு இருக்கோம். சென்னையில நல்ல டீசண்ட்டான வீடு கிடைக்குறதே கஷ்டம்.. அதுலயும், lift இருக்குற மாதிரி தேடுறப்போ இப்போ இருக்குறதைவிட space கம்மியா ஆனா 6, 7 ஆயிரம் வாடகை அதிகமாதான் வீடுகள் இருக்கு.. Leaseக்கு வீடு தேடுனப்போவும், பெருசா நல்ல வீடுகள் கிடைக்கல.
சென்னை விதிகள்படி எப்போவும் போல பாதிக்கு பாதி வீடுகள்ல 'Non-veg not allowed'.. மீதி வீடுகளை filter பண்ணி தேடுறப்போ, இன்னைக்கு நாள் full'ஆ அலைஞ்சதுல ஒரு சூப்பரான வீடு கிடைச்சது.. நல்ல வீடா இருந்ததால, எடுத்ததுமே 'Non-veg allowed தானே?'ன்னு நானே கேட்டுட்டேன். 'அதெல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல'ன்னு ஹவுஸ் ஓனர் சொன்னார். என் வேலை, மனைவி வேலை பத்தியெல்லாம் கேட்டார். வீடு முழுக்க ஒவ்வொரு ரூம், கிச்சன் எல்லாம் காட்டுனார்.. நல்ல வீடா இருந்ததால, நானும் மனைவியும் செம்ம happy.. வாடகை, advance தொகை ரெண்டுமே எங்க சக்திக்கு ஜாஸ்திதான்.. இருந்தாலும் worth ஆன வீடுங்கிறதாலயும், இன்னையோட வீடு தேடுற படலம் முடிஞ்சிடும்ங்கிற நிம்மதியிலயும் இந்த வீட்டை ஓகே பண்ணிடலாம்ன்னு நினைச்சோம். கொஞ்சம் cheap ஆன வேற 2 வீட்டை பார்க்க வேண்டியிருந்தது, அதை பார்த்துட்டு finalize பண்ணிடலாம்ன்னு நினைச்சோம்.
1 மணிநேரம் கழிச்சு, அந்த 2 வீடும் பார்த்து பெருசா பிடிக்காததால.. வேற யாரும் முந்திக்குறதுக்குள்ள முதல்ல டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வெச்சிடலாம்ன்னு திரும்ப அந்த ஹவுஸ் ஒன்றரை பார்க்க வந்தோம். வர்ற வழியில, அடுத்த மாசம் இந்த வீட்டுக்கு வந்ததும் எந்த ரூம்ல எதை வைக்கணும், மனைவிக்கு ஜிம் இங்கிருந்து பக்கமா தூரமான்னு பல விஷயங்கள் பேசிட்டு இதுதான் புது வீடுன்னே confirm பண்ணி சின்ன சந்தோஷத்தோட கற்பனைகளோட வந்தோம்.
ஹவுஸ் ஓனர்கிட்ட 'எங்களுக்கு வீடு பிடிச்சிருக்கு.. அதான் டோக்கன் அட்வான்ஸ் தந்துடலாம்ன்னு வந்தோம்'ன்னு சொல்லிட்டு, 'அட்வான்ஸ் அல்லது வாடகை குறைக்க முடியுமா? negotiate பண்ணலாமா'ன்னு கேட்டேன்.. அதுக்கு அவர் 'இருங்க.. இருங்க.. அதுக்கு முன்னால, இன்னொரு விஷயம் கேட்கணும்.. நீங்க முதல்ல வந்தப்போ, கேட்க மறந்துட்டேன். நீங்க ஒண்ணும் கிறிஸ்டியன், முஸ்லீம் எல்லாம் இல்லேல்ல?'ன்னு கேட்டார். 2-3 நொடிகள் நான் அமைதியாவே இருந்தேன்.. 'ஆமாங்க, நான் முஸ்லீம்தான்'னு சொன்னேன்.. 'அச்சச்சோ, ஸாரிங்க.. எங்க apartment associationல ஹிந்துக்கள் தவிர வேற யாருக்கும் வீடு கொடுத்தா பிரச்சினை வரும்'ன்னு சொன்னார். அதோட நிறுத்தாம, 'actualஆ எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்ல.. இது apartment ரூல்ஸ், நான் அதை மீற முடியாது.. எனக்கு எல்லா மதத்துலயும் friends இருக்காங்க'ன்னு தனக்குத்தானே சர்ட்டிபிகேட்டும் கொடுத்துகிட்டார். 'சரிங்க, தேங்க்ஸ்'ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.
இது நடந்து 3-4 மணிநேரம் ஆகியும், இந்த விஷயம் பத்தின சிந்தனைதான் மொத்தமா ஆட்கொண்டிருக்கு.. 'நீங்க ஒண்ணும் கிறிஸ்டியன், முஸ்லீம் எல்லாம் இல்லேல்ல?'ன்னு அந்தாளு கேட்டது ஏதோ ஒரு புழுவை போல உணர வெச்சிடுச்சு. அப்போ அந்தாளு முஸ்லீம், கிறிஸ்டியன்ஸை மனுஷங்கள்ல சேர்க்காம எந்த கேட்டகிரியில வெச்சிருக்கார்ன்னு தெரியல..
தீண்டாமை எவ்ளோ கொடுமையான, ஈவு இரக்கமற்ற, தயவுதாட்சண்யம் இல்லாத விஷயம்ன்னா.. ஒரு secondல ஒரு மனுஷனை காலி பண்ணிடும். 'You don't belong here.. You are not one of us'ங்கிற உணர்வை கொடுக்கும். நான் நல்லா படிச்சிருக்கேன், நல்ல வேலையில இருக்கேன், நல்லா சம்பாதிக்குறேன், இந்த சமுதாயத்துல நான் மதிக்கத்தக்க ஒரு மனுஷனா இருக்கேன்ங்கிற ஒரு சின்ன pride உங்களுக்குள்ள இருந்தா, தன்னிறைவான ஒரு எண்ணம் இருந்தா அதை இந்த மாதிரி கேள்விகள் கொஞ்ச நேரத்துல அசைச்சு பார்த்திடும்.
இந்த விஷயங்கள் பத்தின புரிதல் இருக்குற, நின்னு நிதானமா யோசிக்கக்கூடிய என்னை மாதிரி ஆட்களுக்கே இது ஒரு பாதி நாளுக்கு மேல disturb பண்ணுதுன்னா.. மத்தவங்க என்ன மாதிரி ஒரு உணர்வுக்குள்ள தள்ளப்படுவாங்கன்னு யோசிச்சு பாருங்க. மதம், சாதி, சுத்தம், தீட்டு, வழிபாடு, மசுருமட்டன்னு என்னென்ன எழவையோ சொல்லி தினம் தினம் ஏதாச்சும் இப்படி பண்ணிக்கிட்டு.. சொர்க்கம்ன்னு ஒண்ணு இருக்கு, அங்கே போறதுக்குதான் நாம டிக்கெட் எடுத்திருக்கோம்ன்னு நெனச்சுட்டு இருக்குற பதறுங்களா டேய்ய்.. ஆகச்சிறந்த சல்லிப்பயலுகடா நீங்க.
No comments:
Post a Comment