Followers

Saturday, May 22, 2010

வானங்கள் அடுக்குகளால் படைக்கப்பட்டுள்ளதா?

வானங்கள் அடுக்குகளால் படைக்கப்பட்டுள்ளதா?

'ஏழு வானங்களை இறைவன் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா?'
-குர்ஆன் 71:15

'அவனே பூமியில் உள்ள அனைத்தையும் மனிதர்களாகிய உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தைப் படைக்க நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.'
-குர்ஆன் 2: 29

'முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.'
-குர்ஆன் 37:6

நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் குர்ஆனின் வசனங்களில் சிலவற்றை மேலே பார்க்கிறீர்கள். வானங்களை ஏழு அடுக்குகளாக படைத்துள்ளதாக குர்ஆன் கூறுகிறது. ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகள் எதுவும் வானத்தின் அமைப்பையோ அது எத்தனை அடுக்குகளாக்கப்பட்டுள்ளது என்பதையோ துல்லியமாக இதுவரை சொல்லவில்லை. இனி வருங்காலத்தில் வான் ஆராய்ச்சி அதிகரிக்கும் பட்சத்தில் இந்த வசனங்கள் உண்மைப்படுத்தப் படலாம். முன்னால் வாழ்ந்த வானியல் அறிஞர்கள் அனைவரும் வானம் ஒன்றுதான் என்ற நம்பிக்கையிலேயே இருந்தனர். பெரு வெடிப்பு சித்தாந்தத்துக்கு பிறகுதான் வானங்கள் ஒன்றுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு தற்கால விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இப்போதய அறிவியலாளர்களின் கருத்து பேரண்டங்களின் எண்ணிக்கை ஒருகால் எண்ணிலடங்காததாக இருக்கலாம் அல்லது எண்ணிலடங்காத குட்டி குட்டி பேரண்டங்களைக் கொண்ட ஒரு எல்லையற்ற மகாப் பேரண்டமாகவும் இருக்கலாம்.
(ஆதாரம்: எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம் - பக்கம் 129-130)

எனவே ஒரே வானம் மட்டுமே இருப்பதற்கு சாத்தியம் இல்லை என்ற கருத்து அறிவியல் உலகில் பரவத் தொடங்கி இருக்கிறது. நம் காலத்திற்கு பிறகோ அல்லது நம் காலத்திலோ பல வானங்களையும் அறிவியலார் நிச்சயமாக கண்டு பிடிப்பர்.

ஆகாயங்களின் எண்ணிக்கை எவ்வளவு என அறிவியலால் தீர்மானிக்க முடியவில்லை என்றாலும் நாம் வசிக்கும் இப்பேரண்டம் அடுக்குகளால் உருவானதே என்பதை அறிவியல் ஆய்வுகள் கண்டு பிடித்துள்ளன.

அறிவியல் அறிஞர் சர் வில்லியம் ஹெர்ஷல் பல வருடங்கள் இடை விடாது முயற்சி செய்து ஆகாயத்தில் 688 அடுக்குகள் உள்ளதாக கண்டுபிடித்தார்.

1924-ல் எட்வின் ஹப்பிள் என்பவர் தாம் பேரண்டம் என்பது காலக்சிகள் எனும் நட்சத்திர மண்டலங்களின் ஏராளமான தொகுதிகளால் உருவானதே எனக் கண்டுபிடித்தவராவார். காலக்சிகள் என்பதை சுருக்கமாக நட்சத்திரக் கூட்டங்கள், நட்சத்திர மேகங்கள், நெபுலாக்கள், ஒற்றை நட்சத்திரங்கள், இரட்டை நட்சத்திரங்கள், பன்மை நட்சத்திரங்கள், வால் நட்சத்திரங்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள், கருங்குழிகள், மற்றும் நட்சத்திரக் குடும்பங்கள் உள்ளிட்ட மாபெரும் ஒரு அண்டத் தொகுதியாகக் குறிப்பிடலாம். பேரண்டத்தில் இவைகளின் எண்ணிக்கை நூறு கோடி என்றும் ஒவ்வொன்றிலும் பதினாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாகவும் அறிவியலார் ஷேப்லி கணக்கிட்டுள்ளார். ஆனால் நவீன கணக்கீட்டின்படி கேலக்சியின் எண்ணிக்கையும் அவை ஒவ்வொன்றிலும் உள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் சில பதினாயிரம் கோடிகளாகும்.
(ஆதாரம்: எ ஃப்ரீ ஹிஸ்டரி ஆஃப் டைம். பக்கம் 38:39)

நமது அறிவியல் திறமை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டு வருவதால் இதை விட அதிகமான காலக்சிகள் மற்றும் நட்சத்திரங்கள் பற்றிய விபரங்கள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப் படலாம். எப்படி பார்த்தாலும் நாம் வசிக்கும் பேரண்டம் காலக்சிகளின் அடுக்குகளால் உருவாக்கப்பட்டிருப்பதால் ஏனைய ஆறு பேரண்டங்களும் அடுக்குகளின் தொகுதிகளாக இருந்து விட்டால் அது எவ்வித அறிவியல் முரண்பாடும் இல்லாததே என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

தகவல் உதவி: 'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்.'