Followers

Tuesday, August 22, 2023

அன்புள்ள ரஜினிகாந்த்,

 அன்புள்ள ரஜினிகாந்த்,

'அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது வரலாறு ,' என்று அங்கே பயணித்து வந்த நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். அது உண்மைதான். அங்கே இப்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது என்பதும் கட்டி முடிந்த பின்னர் கோலாகலமாக திறக்கப்படப் போகிறது என்பதும் வரலாற்றில் இடம் பெறத்தான் போகிறது. ஆனால் இந்த அத்தியாயத்துக்கு முன்பு வேறு சில அத்தியாயங்களும் வரலாற்றில் ஏற்கனவே இடம் பெற்று விட்டன. அந்த அத்தியாயங்களை நீங்கள் கண்டிப்பாக படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மதவெறி கொண்ட லட்சக்கணக்கான இந்துத் தீவிரவாதிகளால் அங்கே இருந்த ஒரு பண்டைய மசூதி இடிக்கப்பட்ட அத்தியாயம். அதற்கு முன்பும் பின்பும் நிகழ்ந்த கலவரங்களில் தேசமெங்கும் சுமார் ஐந்தாயிரம் பேர் கொலையுண்ட அத்தியாயம். அதற்குப் 'பழி வாங்குவதற்காக' மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கணக்கான பேர் மடிந்து போன அத்தியாயம். இந்த அத்தியாயங்கள் எதுவுமே உங்களுக்குத் தெரிந்திராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அது தெரிந்தும் அந்த இடத்துக்குப் போய் வழிபாடு நடத்தி விட்டு வந்திருக்கிறீர்கள் எனில் ஒரே சாத்தியக்கூறுதான் தெரிகிறது: உங்களுக்கு அந்த ரத்த அத்தியாயங்கள் எல்லாமே உவப்பானதாகவே இருந்திருக்கின்றன. ராமர் பெயரைச் சொல்லி நடந்த அத்தனை படுகொலைகளும் உங்களுக்கு மன நிறைவையே தந்திருக்க வேண்டும். 'அவனுங்களுக்கு நல்லா வெச்சோம்யா ஆப்பு!' என்றுதான் தோன்றி இருந்திருக்க வேண்டும். உங்களுக்கு அப்படித்தான் தோன்றியதா சார்? காரணம், அந்த இடத்தில் தற்போது எழும்பி வரும் கட்டிடத்துக்குப் பின் வீழ்ந்திருந்த உயிர்களுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல் உங்களால் அங்கே நிற்க முடியாது திரு ரஜினி. நீங்கள் மட்டுமல்ல, நாளை அங்கே வழிபடப் போகும் ஒவ்வொருவருக்கும் அது பொருந்தும். காரணம் உங்களைப் போன்றோருக்காகத்தான் அந்த மாபெரும் வரலாற்றுக் குற்றம் நிகழ்த்தப்பட்டது. அத்தனை உயிர்கள் வீழ்ந்து போயின. இந்து மதத்தின் மீதான 'அமைதி மதம்' எனும் பொய்ப் பிம்பம் நொறுங்கிப் போனது. ஒன்று மட்டும் புரியவில்லை: அங்கே செல்ல முடிந்ததன் மூலம் உங்கள் நீண்ட நாள் கனவு நிறைவேறியதாக சொல்லி இருக்கிறீர்கள். அந்தக் கனவு எது: அங்கே எழும்பி வரும் அந்தக் கட்டிடமா, அல்லது அதற்கு வித்திட்ட ஆயிரக்கணக்கானோரின் மரணமா? என்று தெளிவாக சொல்லவில்லை. இரண்டில் ஏதுவாக இருப்பினும் கனவு நிறைவேறியதற்கு வாழ்த்துகள் சார். இதே போல நீண்ட நாளாக நிறைவேறாத வேறு கனவுகள் நிலுவையில் இருந்தால் உங்கள் புதிய குருநாதர் யோகி ஆதித்யநாத் அவர்களிடம் சொல்லி வையுங்கள். நிறைவேற ஏற்பாடு செய்வார். இவண் உங்கள் ரசிகன் ஸ்ரீதர் சுப்ரமணியம்

No comments: