Followers

Friday, March 31, 2006

சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?

சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வருகிறது.

ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து 'இதயத்தில் இடம் தா!' என்கிறான். அது என்ன இதயத்தில் சென்று காதலன் உட்கார்ந்து கொள்வதா? 'உன் மூளையில் இடம் தா' என்றாலாவது ஓரளவு உண்மை இருக்கிறது. நம் உடம்பில் உள்ள இதயத்தின் பணி என்பது உடல் அனைத்துக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கி கொடுக்கும் வேலையைத் தவிர வேறு விஷேசமாக தீர்மானங்கள் எதையும் எடுப்பதில்லை என்பது தற்கால அறிவியல் கண்டு பிடிப்பு. அறிவு சம்பந்தப் பட்டது மூளையில் நடப்பதாகவும், ஆசை சம்பத்தப் பட்டது இதயத்தில் நிகழ்வதாகவும் பலரும் நம்பி வருகிறோம். நானும் இதே கருத்தைத் தான் சமீப காலம் வரை கொண்டிருந்தேன்.

அண்ணா எம்.ஜி.ஆரை 'இதயக் கனி' என்று வர்ணித்தார். 'இதயம் ஒரு கோவில். அதில் வாழும் தெய்வம் நீ' என்றெல்லாம் (வைரமுத்து என்று நினைக்கிறேன்) எழுதுவது இந்த அர்த்தத்தை வைத்துத்தான். 'மனதில் உறுதி வேண்டும்' என்று பாரதி எடுத்து எழுதியதும் மேலே சொன்ன அர்த்தத்தில் தான். ஒருவன் ஒரு செயலில் உறுதியுடன் இருக்க வேண்டுமானால் அவன் சிந்தனை, செயல் பாடுகளில் உள்ள உறுதியை தீர்மானிப்பது மூளை தானே ஒழிய இதயம் அல்ல.அன்றைய மக்களின் நினைவு செயல் பாடுகள் அனைத்தும் இதயம் சம்பந்தப் பட்டது என்பதாக இருந்ததால், பாரதியும் அதே அர்த்தத்தில் கவிதை புனைந்துள்ளார் என்று தான் நான் நினைக்கிறேன்.

தினமலர் தரும் விளக்கம்

'விஞ்ஞானிகள் பவுதீக ஆராய்ச்சி செய'கின்றனர். பூத பவுதீக நுட்பங்களுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிற்கு மேலாக மனித உடலில் மனம் எனற ஒன்று இருக்கிறது. அந்த மனம் எங்கிருக்கின்றது? என்பதில் இன்னும் அறிவியல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மெய்ஞஞானமோ மனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.
-ஜனவரி 2004, பக்தி மலர், பக்கம் 7

தற்போதய அறிவியல் மனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?

சிந்திப்பது மனம். இதுதான் உணர்ச்சி, அறிவு இவற்றிற்கு அடிப்படை. இது மனிதனின் பெரு மூளைப் பகுதியில் தோன்றும் இயக்க மாகும். நரம்பு மண்டலத்தின் முதன் மையப் பகுதியாகிய மூளைதான் மனம் என்னும் மூளைத் திறன் தோன்றுவதற்கு முக்கியக் களம் ஆகும்.

உடலுக்குள் உயிர் என்பதாகத் தனியாக எதுவும் இல்லை. உடலின் பல்வேறு மண்டலங்களின் செயல் திறன்களுக்கும் அவற்றின் இயக்கங்களுக்கும் இடையிலான ஒருமைப்பாடு அல்லது ஒருங்கினைப்பே உயிர் எனப் படுவது. (The functions of the various systems in the body and the functional integration or co-ordination, we call life) இது போலவே ' பெரு மூளையின் கண் உள்ள ஏறத்தாழ 1400 கோடி நரம்பணுக்கள் அல்லது நியூரோ செல்கள் எனப்படும் நியூரான்களில் நிகழும் உடல்-வேதியல் எதிர் வினையே மனம் என்பதாகும்' என அறிவியலார் வரையறை செய்துள்ளனர்.

பெரு மூளையானது அறிவுத் திறன், உணர்ச்சி, நினைவாற்றல், கற்பனைத் திறன் முதலான மனத்தின் செயல் பாடுகளுக்கு இருப்பிடமாக இருக்கிறது. சிறு நீரகத்தின் செயலால் சிறுநீர் வெளிப் படுவது போல மூளை நரம்பு மண்டலம் இவற்றின் செயலால் உருவாவதே மனம். இன்னும் சுருங்கக் கூறின் மூளை அணுக்களில் ஏற்படும் வேதியல் மாற்றத்தால் உருவாவதே மனம்.
-நன்றி: விடுதலை



இது போன்ற ஒரு சர்ச்சை குர்ஆனிலும் வந்துள்ளது. ஒரு ஹிந்து நண்பர் இது பற்றி கேட்டதற்கு அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீன் கொடுத்த விளக்கத்தை கீழே தருகிறேன்.

இறைவனை மறுப்பவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. (குர்ஆன் 7:179)

(அநியாயத்துக்கு எதிராக போரிட கூப்பிட்டால், போருக்கு வராமல்) வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்தி கொண்டனர். அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரை இடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். (குர்ஆன் 9;87)

(போரில் உங்களின் எதிரிகள்) உங்கள் மேற் புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப் புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பல விதமான எண்ணங்களைக் கொண்டபோது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டனர். அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப் பட்டார்கள். (குர்ஆன் 33:10)

சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்தி போகும்.ஆனால் இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில்இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப் பட்டுநம் காலம் வரை வந்து சேர்ந்து இருக்காது.

ஆனால் மூளைதான் சிந்தனைக்கு காரணம் என்று நிரூபிக்கப் பட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய அறிவியல் உலகம் பழைய நம்பிக்கைப் படி இதயம் என்று பொருள் படுத்தினால் குர்ஆன் இறை வேதமாக இருக்க முடியாது என்று மறுக்க வாய்ப்பாகி விடும். எனவே இது போன்ற இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது இதயம் என்றும் குறிப்பிட முடியாது ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது?நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம்.அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் கூற வல்லவன்.

அரபு மொழியில் 'கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும் இதயத்தை குறிக்கவும் இச் சொல் பயன் படுத்தப் பட்டுள்ளது.மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறனுக்கு மூளை இதயம் ஆகிய அர்த்தங்கள் இச் சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மூளை, இதயம் ஆகிய இரண்டையும் குறிக்கக் கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன் படுத்தி இருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக் குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள். மூளைதான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக் காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப் பொருளும் அச் சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான். 5:25- 7;179- 9;87- 9;93- 17;46- 18;57- 63;3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்பு படுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33;10- 40;18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச் சொல் இதயம் என்ற பொருளில் பயன் படுத்தப் பட்டுள்ளது.ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன் படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக் கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டு பிடிக்கப் படும் என்ற உண்மையை அறிந்தவனால்தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப் பட முடியாமல் காப்பாற்றி- உண்மை கண்டறியப் படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப் படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன் படுத்தி இருப்பது இறை வேதம் என்பதற்கான நிரூபணங்களில் ஒன்றாக உள்ளது.

3 comments:

Thekkikattan|தெகா said...

நல்லதொரு கட்டுரை. இங்கு ஒரு சிறு உதராணம். மனத்திற்க்கும் (மூளை) இதயத்தின்பால் எடுக்கப்படும் முடிவுகளுக்கும் ஒரு வேறுபாடு. ஒருவர், தனது துணைவியாருடன் விவாகாரத்து பெரும்பொழுது தனது குழந்தைகளுக்கு எவ்வளவு மாத காப்பீடு தொகை (Child Support) வழங்க வேண்டும்மென்பதில் தனது மூளையை (rational) பயன்படுத்தி முடிவு கட்டினால், தனது பொருளதார நிலையை அதீதமாக கருத்தில் கொண்டு எவ்வளவு பிடித்து கொடுக்கலாம் என்று சிந்திப்பார். அதுவே, மனசாட்சி (இதயம்) இருப்பவர் எவ்வளவும் தான் கொடுப்பதாக உடனடியாக ஒத்துக்கொள்வார். பின்னால் இன்னல்களுக்கு ஆளாகினும்.

Science has a limitation in almost every field. Can they isolate every bit of my stored experiences and put them on a petri dish and show it me like here is my good and bad memories are...? Then where exist all my memories when I am in deep sleep in the nodes of neurons? What happens if I do not identify with my external entity of personality when I am awake from my asleep, then who am I, is that means just I am the thought which are drawn from my experiences...?

TheKa.

சந்திப்பு said...

சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?

நல்ல கேள்வி: ஆனால் இரண்டுமே இல்லை என்பதுதான் உண்மை.

சிந்தனை என்பது தானாக உருவாவதில்லை. உருவாகவும் செய்யாது. அத்துடன் மூளை தானே செயல்படவும் செய்யாது. அதுவும் அதற்கு தெரியாது. பின் எப்படி சிந்தனை உருவாகிறது என்று கேட்கிறீர்களா?

--பொருள் தான் காரணம்-- ஆம்! நாம் கண்ணால் காணும் பொருட்கள்தான் சிந்தனையையே உருவாக்குகிறது. நீங்கள் கற்பனை செய்துப் பாருங்கள் பொருட்களே இல்லாத சூழலில் மூளை சிந்திக்குமா? என்று நிச்சயமாக இருக்காது. எனவே இந்த பிரபஞ்சத்தில் பொருள்தான் முதன்மையானது. கருத்து (சிந்தனை) இரண்டாம் பட்சமானது.

எனவே, சிந்தனையை தோற்றுவிப்பது பொருளே! எனக்கூறி முடிக்கிறேன்.

supersubra said...

நீங்கள் கூறுவது கம்யூனிஸ்டுகளின் பொருள் முதல் வாதம் போல் உள்ளது. ஆனால் இன்றைய உலகில் இருக்கும் பொருள் அனைத்தும் முதலில் மனிதனின் சிந்தனையில் உருவாக்கப்பட்டு பின் பருவடிவம் பெற்றதுதான்.

சிந்தனைக்குப்பின் செயல்
செயலலுக்க்ப்பின் பொருளின் தோற்றம்