Followers

Thursday, February 09, 2017

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்- குர்ஆன் விளக்கங்கள் - 2

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்

அத்தியாயம் : 9

அத்தவ்பா - மன்னிப்பு

மொத்த வசனங்கள் : 129

117, 118 ஆகிய இரு வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், ஹிஜ்ரத் செய்து வந்தவர்களையும், அடைக்கலம் தந்து உதவியவர்களையும், குறிப்பாக தபூக் யுத்தத்தில் பங்கெடுக்காத மூன்று நபித்தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாகக் கூறுகிறான். ஒட்டு மொத்த சமுதாயத்திற்கே பாவமன்னிப்பு வழங்கியது பற்றி இந்த அத்தியாயம் பேசுவதால் இந்த அத்தியாயத்திற்கு 'அத்தவ்பா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

71. நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

72. நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் திருப்தி மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

73. நபியே! (ஏகஇறைவனை) மறுப்போருடனும், நயவஞ்சகர்களுடனும் போரிடுவீராக!53அவர்களிடம் கடினமாக நடப்பீராக! அவர்களின் புகலிடம் நரகம். அது மிகக் கெட்ட தங்குமிடம்.

74. இறை மறுப்பிற்குரிய சொல்லை அவர்கள் கூறியிருந்தும் (அவ்வாறு) கூறவில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். இஸ்லாத்தை ஏற்ற பின் மறுத்தனர். அடைய முடியாத திட்டத்தையும் தீட்டினார்கள். அவர்களை அல்லாஹ்வும், தூதரும் அவனது அருள் மூலம் செல்வந்தர்களாக ஆக்கியதற்காக140 தவிர (வேறு எதற்காகவும்) அவர்கள் குறை சொல்வதில்லை. அவர்கள் திருந்திக் கொண்டால் அது அவர்களுக்கு நன்மையாக அமையும். அவர்கள் புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்துவான். பூமியில் அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை.

75. "அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால் தர்மம் செய்வோம்; நல்லோர்களாக ஆவோம்'' என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்தோரும் அவர்களில் உள்ளனர்.

76. அல்லாஹ் தனது அருளை அவர்களுக்கு வழங்கியபோது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அலட்சியம் செய்து புறக்கணித்தனர்.
77. அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும்488 நாள்1 வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான்.

78. அவர்களின் இரகசியத்தையும், பரம இரகசியத்தையும் அல்லாஹ் அறிவான் என்பதை அவர்கள் அறிய வேண்டாமா? அல்லாஹ் மறைவானவற்றையும் நன்கு அறிபவன்.

79. தாராளமாக (நல்வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான்.6 அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.

80. (முஹம்மதே!) அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

தமிழாக்கம் : பி.ஜைனுல் ஆபிதீன் உலவி அவர்கள்.

No comments: