விடைதேடும் வினாக்கள்
கோவை கார் சிலண்டர் வெடிப்பு
வைகறையின் கள ஆய்வு
கடந்த 23ம் தேதி அதிகாலை 4.05 அல்லது 4.30 மணியளவில் கோயம்புத்தூர், கோட்டை மேடு ஈஸ்வரன் கோயில் அருகில் TN 01 F 8163 எண்ணுள்ள மாருதி 800 (பொள்ளாச்சியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான) காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. காரை ஓட்டி வந்தவரின் உடல் கொஞ்சம் கருகிய நிலையில் காருக்கு வெளியில் கிடந்தது. உடனடியாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கார் வெடிப்பு 6 தனிப்படைகள் அமைப்பு என்ற செய்தி (போலீஸ் செய்தி) கேட்டவுடன் நாங்கள் (வைகறை நிருபர்கள்) ஒரு முடிவுக்கே வந்து விட்டோம். நிச்சயமாக இது ஒரு அரசியல் நகர்வு. 1998 போல மீண்டும் பிஜேபியை ஆட்சிக்கு கொண்டு வரவும், திமுக ஆட்சியை கலைக்கவும் திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடு. வழக்கம்போல பலியாடுகள் முஸ்லிம்கள் தான் என்று.
கார் வெடித்த நிமிடம் முதல் இந்த ஆய்வறிக்கை தயாரிக்கும் நொடி வரை செய்திகள் அனைத்தும் வழங்குவது போலீஸ்தான். ஏனெனில் அத்துனை ஆதாரங்களையும் போலீசார் மிக சாமர்த்தியமாக அவர்கள் கைகளில் கொண்டு சென்று விட்டனர். ஆம். அந்தப் பகுதியிலுள்ள 22 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை அல்ல ஹார்ட் டிஸ்க்கையே கொண்டு சென்று விட்டனர். யார் கைகளிலும் கிடைத்துவிடக் கூடாதென்று!
முதல் செய்தி : ஈஸ்வரன் கோயில் அருகிலுள்ள (Speed Breaker) வேகத்தடையில் ஏறி இறங்கியதால் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து கார் சிதறியது. காரை ஓட்டி வந்தவர், காருக்கு வெளியே (தூக்கி வீசப்பட்டு) இலேசாக கருகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
நாங்கள் விபத்து நடந்த இடத்திற்கு சென்றபோது எந்த செய்தியாளரும் சம்பவ இடத்தை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. காரையும், எரிந்த உடலையும் அப்புறப்படுத்திய பிறகே செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆக மொத்தத்தில் அங்கிருந்த ஆதாரங்கள் அனைத்தும் மிக கவனமாக அழித்துள்ளனர்.
அந்தக் காரிலிருந்து இலேசாக கருகிய நிலையில் இரண்டு வீட்டு உபயோக சிலிண்டர்கள் ஆணிகள், கோலி குண்டுகள் சிதறி கிடந்ததாகவும் இது திட்டமிடப்பட்ட சதிச்செயலாக இருக்கக்கூடும் என்றும் போலீசார் தெரிவித்தனர். வெடித்ததாக சொல்லப்பட்ட கார் உடனே அப்புறப்படுத்தப்பட்டது.
இரவு 8 மணிக்கு தான் இறந்தவர் யார் என போலீசார் அறிவித்தனர். அவர் பெயர் ஜமேஷா முபீன். கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர். இச்சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக காணாமல் போனவர்.
கோவை மாவட்ட காவல்துறை ஆணையர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்:
அந்தப் பேட்டியின் போது ஒரு நிருபர், "இறந்து போனவரின் உடலிலிருந்து கெரோசின் வாடை வந்ததாக சொல்லப்படுகிறதே? அவர் எரிக்கப்பட்டாரா” என்ற கேள்விக்கு, “உங்கள் கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று எழுந்து சென்று விட்டார். ஆனால் அந்த காருக்குள்ளே ஒரு கெரோசின் கேன் இருந்தது.
இவரின் வீடு சோதனைக்குள்ளாக்கப்பட்டது. 75 கிலோ எடையுள்ள மிகவும் சக்திவாய்ந்த வெடிபொருட்கள் (Pentaerythritol tetranitrate (PETN) and Nitroglycerin) கைப்பற்றப் பட்டதாகவும் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ அறிவித்தனர். இந்த வெடிபொருட்கள் Flipkart, Amazon போன்ற இணையதளங்கள் வாயிலாக வாங்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேற்சொன்ன வெடிபொருட்களை பொதுமக்கள் யாரும் அவ்வளவு எளிதாக வாங்க இயலாது என்றும் சொல்லப்படுகிறது. (The Times of India Dt.31.10.22)
பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஜமேஷா முபீன் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இவனுடைய நண்பர்கள் என தல்ஹா, அசாருதீன், நியாஸ், ஃபெரோஸ், ரியாஸ் ஆகியோரை கைது செய்து UAPA சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர் போலீசார். இது எல்லாமே அவசரகதியில் நிகழ்த்தப்பட்டது!!
நாம் இவரது குடும்பத்தாரை பேட்டி கண்டதில் கிடைத்த தகவல்கள்:
ஜமேஷா முபீன் பி.இ. இன்ஜினியரிங் படித்த பட்டதாரி. புத்தக கடையில் வேலை பார்த்து வந்தவர். சொற்ப வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தவர். வாய் பேசாத காது கேளாத மார்க்க கல்வி கற்ற ஒரு பெண்ணை தன்னுடைய வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுத்தார். ஒரு சைக்கிள் மட்டுமே இவருக்கு சொந்தமானது.
கார் பைக் என எதுவும் கிடையாது. கார் ஓட்டத் தெரியாது. எங்காவது மனைவி மற்றும் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதானால் தன்னுடைய மைத்துனரிடத்தில் பைக் இரவல் வாங்குவார். இவர் கார் ஓட்டியதை இதுவரை யாரும் பார்த்ததேயில்லை.
கண் பார்வை தெளிவாக தெரியாது. ஆறு மாதத்திற்கு முன்பு தான் கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் நண்பர்கள் வசூல் செய்து தந்ததே! கண்ணை சுருக்கி தான் பார்ப்பார். ஐந்து வேளை தொழுவார். குர்ஆன் ஓதுவார். இதுதான் இவரிடத்தில் உள்ள சிறப்பம்சங்கள். கடந்த 2019ம் ஆண்டு என்.ஐ.ஏ இவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று இவர் மீது எந்த வழக்கும் பதியாமல் விட்டுவிட்டதற்கான காரணம் மடியில் கனம் இல்லை.
கடந்த ஓராண்டாகவே இவருக்கு சரியான வருமானமில்லை. பழைய இன்ஜினியரிங் புத்தகங்களை வாங்கி விற்பனை செய்திருக்கிறார். கடந்த ஒரு மாதமாக இவருடைய செல்போன் ஸ்டேடஸ்ஸில் இன்ஜினியரிங் புத்தகங்கள் தான் இருந்துள்ளன.
இரண்டு சிசிடிவி வீடியோக்களை போலீசார் வெளியிட்டனர். அதில் ஒரு வீடியோ:
ஒரு கார் பிகே செட்டி வீதியிலிருந்து வந்து வலப்புறமாக ஈஸ்வரன் கோயில் வீதியில் திரும்பி கொஞ்ச தூரம் சென்றவுடன் வீடியோ அதிர்கிறது.
இரண்டாவது வீடியோ: ஜமேஷா முபீன் வீட்டிலிருந்து நான்கு பேர் (ஜமேஷா முபீன் உட்பட) ஒரு பெரிய சாக்கு மூட்டையை எடுத்துச் செல்கின்றனர். இது குறித்து நாம் முபீன் மைத்துனரிடம் கேட்ட போது,
“இதுவரை இரண்டு வீடுகள் மாறிவிட்டார் என் மச்சான். அவ்வாறு வீடு மாறும்போது என்னையும் என் நண்பர்களையும் உதவிக்கு அழைப்பார். கடைசியாக இந்த வீடு மாறிய போதும் என்னை அழைத்தார். நானும் எல்லா பொருட்களையும் (அட்டை பெட்டி பெட்டியாக) எடுத்துச்சென்றபோது அந்த வீட்டு உரிமையாளர், “இந்த பெட்டியில் என்னதான் உள்ளது?” என கேட்டார். நான் என் மச்சானிடம் கூட கேட்காமல் அந்த அட்டை பெட்டியை திறந்து காட்டினேன். அதில் புத்தகங்கள் தான் இருந்தன என்றார்".
ஜமேஷா முபீனுடைய உடலுடைய (லேசாக கருப்படித்த ஆனால் எரியாத, வெந்து போகாத, வெடிக்காத) ஃபோட்டோ இவனுடைய மனைவியிடத்தில் காட்டி போலீசார் கேட்ட போது இது யார் என தெரியாது என இவர் மனைவி சைகை காட்டியுள்ளார். முபீனுடைய உடல் (ஜனாஸா) என போலீசாரால் கொடுக்கப்பட்ட உடலின் உயரம் 5.75.அடி. ஆனால் உண்மையில் முபீனுடைய உயரம் 5.25. அடி என்றார் அவர் உறவினர்.
கிட்டத்தட்ட இச்சம்பவத்தின் பிண்ணணியில் ஏகப்பட்ட அரசியல் உள்ளது.
இந்தக் கார் சம்பவத்தை 1998ம் ஆண்டு குண்டுவெடிப்புடன் ஒப்பிட்டு மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தாகவும் தினத் தந்தி போன்ற சேனல்களில் டாக்குமென்ட்டிரிகள் வெளிவந்தன. ஒரு விதத்தில் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஏன் தெரியுமா? 1998ம் ஆண்டு குண்டுவெடிப்பினால் பயனடைந்தவர்கள் பிஜேபியினர். ஆம். மத்தியில் ஆட்சியை கைப்பற்றினார்கள். ஆக ஒரு குண்டுவெடிப்போ அல்லது ஒரு கலவரமோ நடத்தினால் நிச்சயமாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது ஆட்சியை கைப்பற்றலாம் என்பது தான் பிஜேபியின் அஜெண்டா. நிச்சயமாக அந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டது தான் இந்த கார் வெடிப்பு சம்பவமாக இருக்கக்கூடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
விடை தேடும் வினாக்கள்..!
1. கஞ்சிக்கே வழியில்லாதவர் (ஜமேஷா முபீன்) கார் வாங்கினாரா?
2. கார் ஓட்டத் தெரியாதவரை இதுவரை அவர் (ஜமேஷா முபீன்) கார் ஓட்டி யாருமே பார்த்ததேயில்லையாமே அவர் மனைவி உட்பட! நிலைமை இப்படியிருக்க காரை உண்மையிலேயே ஓட்டியது யார்?
3. உண்மையிலே முபீன் கார் ஓட்டி வரும் சிசிடிவி பதிவுகள் ஏதும் உண்டா?
4. இந்த சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே ஜமேஷா முபீனை காணவில்லை! அவர் எங்கிருந்தார் அந்த இரண்டு நாட்களாக? கார் எங்கிருந்து புறப்பட்டது, கோவையில் எந்த வழியாக நுழைந்தது என்ற பதிவுகள் ஏதும் உண்டா?
5. கார் வெடித்ததா? ஒரேயொரு சிசிடிவி பதிவு தான் உள்ளது! அதுவும் கார் செல்வது போல்தானே உள்ளது? உண்மையிலே அது வெடித்திருந்தால் வெடித்த இடத்திற்கு அருகாமையில் உள்ள போத்தீஸ் குடோவுன் கேமரா பதிவு செய்திருக்கும், அந்த பதிவுகள் சொல்வது என்ன? அது 24 மணி நேரமும் தெள்ளத் தெளிவாக காட்டக் கூடிய கேமராவாச்சே?
6. காரின் பின்பக்க சிசிடிவி பதிவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளீர்கள். காரின் முன்புறம் (யார் காரை ஓட்டி வருகிறவர்) உள்ள சிசிடிவி பதிவுகளை ஏன் வெளியிடவில்லை? அதை வெளியிட்டால் உண்மையில் யார் காரை ஓட்டி வந்தார் என்பது தெரிந்துவிடும் அல்லவா?
7. ஈஸ்வரன் கோயில் வாயிலில் (இரவு காவலுக்காக) எப்போதுமே ஒரு போலீஸ் அமர்ந்திருப்பார். அன்று மட்டும் 3:30 மணிக்கு அவர் சென்றுவிட்டதாக கமிஷனர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்? அப்படியானால் அவருக்கு இது முன்கூட்டியே தெரியுமா?
8. சிலிண்டர் வெடித்துத்தான் கார் சிதறியது இல்லையா? வெடித்த சிலிண்டரின் ஒரு சின்ன பாகத்தை கூட காண முடியவில்லையே! ஏன்?
9. வெடித்ததில் கார் துண்டுதுண்டாக சிதறியது. ஆனால் ஜமேஷா முபீன் என்று கூறப்படும் நபர் மட்டும் (சுண்டு விரல் கூட உடையாமல்) காருக்கு வெளியில் லேசாக கருகிய நிலையில் கிடந்தார்.
இதென்ன மர்மம்? முடிச்சு அவிழுமா?
10. எல்லா சம்பவங்களிலும் சிசிடிவி பதிவுகளை மட்டும்தான் போலீஸ் கேட்டுப் பெறும். ஆனால் இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் உள்ள அத்துனை சிசிடிவியின் ஹார்டு டிஸ்க்கை எடுத்துச் சென்றுவிட்டது போலீஸ். ஆக யார் கையிலும் எதுவும் கிடைத்து, உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்பதனாலா என்று மக்கள் கேட்கிறார்கள்?
11. தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தங்கள் உடலில் உள்ள ரோமங்களை அகற்றி விடுவது வழக்கம் என்று புதிதாக ஒரு செய்தி வந்துள்ளது!! அப்படி எத்துணை தற்கொலைப்படை தாக்குதல்களை இந்த செய்தி நிறுவனம் கண்டுள்ளது என்ற செய்திகளை வெளியிட முடியுமா?
நாங்கள் சொல்கிறோம். இதற்கு முன் தற்கொலைப்படை தாக்குதல் என்று என்.ஐ. ஏ.வால் வர்ணிக்கப்பட்ட தாக்குதலின் விவரத்தை ஆதாரத்துடன் தருகிறோம்.
2017ம் ஆண்டு காஷ்மீரில் ஆதில் அகமது என்ற 19 வயது சிறுவன் காணாமல்போகிறான். 2019ம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒரு மிகப்பெரிய அசம்பாவிதத்தை நடத்தி மக்களின் கவனத்தை திசை திருப்புவார்கள் என தி ஹிந்து நாளிதழ் 2018ம் ஆண்டு எச்சரிக்கின்றது. அதற்கேற்றார்போல் ஐபியும் ஒரு மிகப்பெரிய தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக சொல்கிறது. 2019ம் ஆண்டு சொல்லி வைத்தாற்போல் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் செக்போஸ்ட் அருகே 350 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடி பொருட்களுடன் ஒரு வேன் வெடித்தது. வேனை ஓட்டி வந்தவன் துண்டுதுண்டாக சிதறிப்போனான். அவன்தான் ஆதில் அகமது என பாதுகாப்புப்டையினர் அறிவித்தனர். இதனை தற்கொலைப்படை தாக்குதல் என அறிவித்தனர். தி ஹிந்து நாளிதழ் சொன்னது போலவே நடந்தது. 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிஜேபியினர் வெற்றி பெற்றனர்.
கிட்டத்தட்ட தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற கோவையை நுழைவாயிலாக ஆக்கிக் கொள்ள பா.ஜ.க.வினர் முயற்சித்துள்ளனர். ஆனால் இங்குள்ள இந்து முஸ்லிம் உறவுகளுக்கு முன்னால் இவர்களின் எல்லாவகையான சதித் திட்டங்களும் தவிடுபொடியாகி விடுகின்றன.
நிச்சயமாக தமிழகத்தில் இவர்களின் அரசியல் சித்துவிளையாட்டுக்கள் எடுபடாது.
"நியாயமின்றி ஓர் ஆன்மாவை கொலை செய்தவன், ஒட்டுமொத்த சமுதாயத்தையே கொலை செய்தவனுக்கு ஒப்பாவான்” என்ற குர்ஆன் வசனத்தை படித்த முபீன் இந்த சதியை அரங்கேற்றியிருக்க மாட்டான் என்ற உண்மையை மக்கள் உணர்வார்கள்.
இந்த கார் எரிப்பை செய்தவர்கள் யார் என்ற உண்மையை இறைவன் நிச்சயம் வெளிக்கொண்டு வருவான். சதிகாரர்கள் தோற்றுப்போவர்.
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. அசத்தியம் நிச்சயம் அழிந்தே தீரும்” என்று கூறுவீராக.
திருச்சியில் சதாம் ஹூசைன் வழக்கு NIA கீழ் தரப்பட்டபோது, அதை ஏற்க மறுத்துவிட்டது. அதனால் மாநில உளவுத்துறை அதிகாரி சுரேஷ் -இன் பெயர் நான்கு இடங்களில் இடம் பெற்றது.
இப்போது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை யார், ஆளுநர் ஆகியோரின் அழுத்தங்களால் NIA -இடம் இந்த வழக்கு திணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பா.ஜ.க.வினர் வென்றுவிட்டதாக நினைக்கின்றனர். இனி நமக்கு எல்லா அரசியல் இலாபங்களும் கிடைத்துவிடும் எனக் கருதுகின்றார்கள்.
அதனால் NIA என்ற தேசிய புலனாய்வு முகமை எல்லாக் கோணத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். நீதியை நிலைநாட்டிட வேண்டும். செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
தொடக்க நாள்களில் NIA தொடங்கப்பட்டது, Saffron Terrorism என்ற காவித் தீவிரவாதத்தை தடுக்கத்தான் அல்லாமல் அதை பாதுகாப்பதற்கு அல்ல. இப்போது அப்படி ஒரு நிலை நிலவுகின்றது.
NIA கோவை சிலிண்டர் வெடி விபத்து வழக்கை விசாரிப்பவர்கள் The Hindu ஆங்கில இதழில் வந்த மிகவும் ஆதாரப்பூர்வமான இந்தச் செய்தியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
பெயர் சொல்லிட விரும்பாத, ஆனால் இந்த வழக்கோடு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சொன்னார் :
இந்தக் கேஸ் சிலிண்டர் விவகாரத்தில் எந்த அமைப்பிற்கும் தொடர்பில்லை. The Hindu, Nov.2, 2022
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தேசிய புலனாய்வு முகமை உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்திட வேண்டும்.
- கோவையிலிருந்து ஆசிஃப்
(வைகறை வெளிச்சம் நவம்பர் 2022 இதழில் விரிவாக கொடுத்துள்ளோம்)
இதுப்போன்ற தகவல்களுக்கு இணைந்திடுங்கள்...
வைகறை வெளிச்சம் மாத இதழ்
ஆசிரியர்: மு.குலாம் முஹம்மது M.A., "வைகறை வெளிச்சம் ஆசிரியர் விடியல் வெள்ளி நிறுவுனர்"
ஆண்டு சந்தா: 480/-
தொடர்புக்கு: 8148129887, 8870960662