Followers

Monday, January 30, 2006

திருக்குறளும் மனு தர்மமும்

வள்ளுவர் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபாடான கருத்துக்கள் சிலவற்றைப் பரிமேலழகர் தம் உரையில் புகுத்தியுள்ளார் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளைச் சுட்டிக் காட்ட இயலும். திருக்குறளுக்கு உரை எழுத துவங்கும்போதே எடுத்த எடுப்பிலேயே 'அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கிய ஒழித்தலும் ஆகும்' என்றும் 'ஒழுக்கமாவது அந்தணர் முதலிய வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட பிரம்மச்சாரியம் முதலிய நிலைகளின்று அவ்வவற்றிற்கோதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்' என்றும், 'அதுதான் (அவ்வொழுக்கம்) நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும் வேறுபாடுடைமையின், சிறுபான்மையாகிய அச்சிறப்பு இயல்புகள் ஒழித்து எல்லொருக்கும் ஒத்த பெரும்பான்மையாகிய பொது இயல்பு பற்றி இல்லறம் துறவறம் என இருவகை நிலையால் கூறப்பட்டது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வடமொழியாளராகிய மனு தமது சாத்திரத்தில் கூறுகின்ற 'தருமம்' என்பது வேறு, திருதிருக்குறளில் வருகின்ற 'அறம்' என்பது வேறு. மனுவின்படி மனித குலம் நான்கு வருணத்தாராக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வருணத்திற்கும் ஒவ்வொரு வகையான சட்ட விதியின் கீழ் நீதி கூறும் தன்மையதே தருமம் ஆகும். ஆனால் வள்ளுவரின் கருத்துப்படி மனித குலம் அனைத்திற்கும் அன்புநெறி, அருள்நெறி, அறிவுநெறி, பண்புஒழுக்க நெறி போன்ற வற்றின் கீழ் விதிக்கப்பட்ட கடமையை கூறும் தன்மையதே ஆகும்

1) எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஓரே தன்மையாகத்தான் இருக்கும். பிறப்பைப் பொறுத்து ஏற்றத்தாழ்வு இல்லை என்னும் கருத்துப்பட 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' (குறள் 978) என்று கூறுவது வள்ளுவரின் அடியாகும்.

ஆனால் 'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' - மனு த.சா.ஆ .1 சு., 100 என்றும் 'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270) என்றும் 'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

2) கல்லாதவர்கள் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருந்தாலும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்து கற்றவர்களைப்போல பெருமையுடையவராகக் கருதப்பட மாட்டார் என்னும் கருத்துப்பட 'மேற் பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு' (குறள்-409) என்று கூறுவது வள்ளுவரின் அறம்.

ஆனால் 'பிராமணர் இந்த மனு நூலைப் படிக்கலாம் மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது' - மனுத.சா.அ 1.சு 103) என்றும் 'சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது வேதம் ஓதக்கூடாது' (மனு த.சா.அ.1 சு99) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

3) ஒருவர் தாம் தேடிய பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் நாம் மட்டும் தனியாக இருந்து உண்ணுதல் என்பது வறுமையால் இரத்தலைக் காட்டிலும் கொடிது ஆகும் எனும் கருத்துப்பட இரத்தலின் இன்னாதது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்' (குறள் 229) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால் 'சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றையும் ஓமம் பண்ணிய மிச்சத்தையும் கூட கொடுக்கலாகாது' - மனு ( த.சா.அ 4 சு. 80) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

4) பசுவின் நா வறட்சியைப் போக்க நீர் தாரீர் என்று பிறரை நோக்கி இரந்து கேட்டாலும் அப்படி இரத்தலை விட இழிவான செயல் வேறொன்றும் இல்லை என்ற கருத்துப்பட 'ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு இரவின் இனி வந்தது இல்' (குறள் -1066) என்பது வள்ளுவரின் அறம் ஆகும்.
ஆனால் பிராமணர் நாள் தோறும் பிச்சைக்காக ஊருக்குள் புகுந்து சுற்றி வர வேண்டும் - மனு த.சா.அ. 6 சு 43) என்பது மனுவின் தருமம் ஆகும்.

5) உலகத்தார் பல தொழில்களைச் செய்து பார்த்து அலைந்து திரிந்து சுழன்று வந்தாலும் இறுதியில் ஏர்த்தொழிலின் பின்னேதான் நிற்க வேண்டியிருக்கிறது அதனால் எவ்வளவ துன்பம் உற்றாலும் உழவுத் தொழில்தான் சிறந்த தொழிலாக திகழ்கின்றது என்னும் கருத்துப்பட 'சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்உழந்தம் உழவே தலை' (குறள் 1031) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்,

ஆனால் 'பயிர்த் தொழில் நல்ல தொழில் என்று நினைக்கிறார்கள். அந்த தொழில் பெரியோர்களால் மிகவும் இகழப்பட்டதாகும்' மனு (த.சா.அ.10 சு 84) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

6)ஒருவன் எப்பொழுதும் பொய் சொல்லாமல் இருப்பானேயானுல் அவன் வேறு அறங்களைக் கூட எப்பொழதும் செய்ய வெண்டியதில்லை. அதுவே எல்லா அறங்களின் பயனையும் தரும் என்னும் கருத்துப்பட 'பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை செய்யாமை நன்று' (குறள் 297)என்று கூறுவது வள்ளுவரின்அறம் ஆகும்.

ஆனால் 'பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய சொன்னால் குற்றமில்லை' (மனு த.சா.அ.8 சு-112) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

7) உயிர்களைக் கொன்றும் நெய் முதலிய பொருள்களைச் சொரிந்தும் ஆயிரம் வேள்விகளைச் செய்வதை விட ஒர உயிரின் உயிரைப்போக்கி அதன் ஊனை உண்ணாமல் இருத்தல் நல்லத ஆகும் என்னும் கருத்துப்பட 'அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்த உண்ணாமை நன்று' (குறள் 259)என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால்'ஒரு பிராமணன் தன்னைப் புலால் உண்ண வேண்டும் என்று பிறர் கேட்டுக் கொள்ளும் போதும் விதிப்படி சீரார்த்தத்தில் வரிக்கப்பட்ட போதும் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம்' என்றும்
'அஜீகர்த்தர் என்னும் முனிவர் நூறு பசுக்களை வாங்கிக் கொன்று வேள்வி செய்து தமது பசியைத் தீர்த்துக் கொண்டார். அப்படிச் செய்தும் அவருக்குப் பாவம் நேரிடவில்லை' - மனு (த.சா.அ. 10 சு 105) என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்

8) கொலையின் மூலம் நன்மையாக ஆகின்ற ஆக்கமானதுபெரிதாக இருந்தாலும் சிறந்த சான்றோர்களால் அப்படிப்பட்ட ஆக்கமானது மிக இழிவானதாக கருதப்படும் என்னும் கருத்துப்பட - 'நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை' (குறள் 328) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால் உண்ணத்தக்க உயிர்களை நாள்தோறும் கொன்று உண்டாலும் பாவத்தை பிராமணன் அடைய மாட்டான். பிராமணனாலேயே உண்ணத்தக்கவையும் கொல்லத்தக்கவையும் படைக்கப்பட்டிருக்கின்றன- மனு (த.சா.அ.5.சு- 30) என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

9) எந்த பொருளைப் பற்றி எவரெவர் என்ன சொல்லக் கேட்டாலும் கேட்டவாறு அப்படியே அதனை ஏற்றுக் கொண்டு விடாமல் அந்த பொருளினுடைய உண்மையான பொருளைக் கண்டறிவதே அறிவுடமையாகும் என்னும் கருத்துப்பட 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு (குறள் 423) என்று கூறுவது வள்ளுவரின் அறம் ஆகும்.

ஆனால் வேதத்தைச் சுருதி என்றும் தரும சாத்திரத்தை சுமிருதி என்றும் அறியத்தக்கன அவ்விரண்டையும் ஆராய்ச்சி செய்து மறுப்பவன் நாத்திகன் ஆவான் என்று கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

10) குற்றம் இன்னதென்று ஆராய்ந்து பார்த்து, யார் பக்கமும் சாயாமல், நடுவு நிலைமை பொருந்துமாறு நின்று யாரிடத்திலும் குற்றத்திற்கான தண்டனையை ஆராய்ந்து அதற்கு ஏற்றபடி நிதி வழங்குவதே அரசனது செங்கோல் முறையாகும் என்னும் கருத்துப்பட 'ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மட்டும் தேர்ந்து செய்வதெ முறை' (குறள் - 541) என்று கூறுவது வள்ளவரின் அறம் ஆகும்.

ஆனால் 'பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனைச் சித்திரவதை செய்து கொல்லுக. ஆனால் பிராமணன் சூத்திரனின் பொருளை கொள்ளையிடலாம்' (மனு த.சா.அ.9.248) என்றும்,

பிராமணன் எத்தகைய குற்றங்கள் செய்தாலும் அவனைத் தூக்குப் போட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அவன் தலையை மட்டும் மொட்டை அடிக்க வேண்டும். அதுவே அவனுக்குத் தூக்குத் தண்டனைக்கு ஒப்பாகும். மற்ற வருணத்தார்க்கு கொலையே தண்டனை' மனு (த.சா.அ.379) என்றும்
கொடிய குற்றம் செய்தாலும் பிராமணனைக் கொல்லாமலும், மற்ற எத்தகைய துன்பத்திற்கும் ஆளாக்காமலும் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்து அயலூருக்க அனுப்ப வேண்டும். (மனு த.சா.அ.சு 380) என்றும்,
அரசனானவன் எத்தகைய குற்றத்திற்கும் பிராமணனைக் கொல்ல நினைக்கக் கூடாது'
மனு (த.சா.க.8.சு.380 என்றும் கூறுவது மனுவின் தருமம் ஆகும்.

இவை மட்டும் அல்லாது 'பெண் போகம் புலால் உண்ணல், கள்குடித்தல், ஆகிய இவை மனிதர்களுக்கு இயற்கையான குணங்கள் ஆகையால், இவைகளைக் குறித்து விதிகள் அவசியம் இல்லை' என்றும்

'நான்கு வருணத்தாரின் பெண்களையும் பிராமணன் மட்டும் அவன் விரும்பியவாறு திருமணம் முடித்துக் கொள்ளலாம்' என்றும்,
விவாக காலங்களில் பொய சொல்லலாம் என்றும் ' தனது நாயகன் இறந்து விட்டால், அல்லது புத்திரப் பேற்றை விரும்புகின்ற பெண்ணானவள், ருது காலத்தில் உடம்பில் நெய்யைப் பூசிக்கொண்டு தனது கணவரது சகோதரரையோ அல்லது அந்தக் குலத்தில் யாரையேனும் புணர்ந்து கொள்ளலாம்' என்றும்

பிராமணன் பெற்றதாய் ஒருத்தியைத்தவிர மற்ற பெண்களையெல்லாம் புணரலாம் என்றும்

வட மொழியாளரின் சுருதிகளும் சுமிருதிகளும் கூறியிருக்கும் தருமங'கள் போன்றவைகள் அனைத்துவள்ளுவருக்கு அறவே உடன்பாடில்லாத ஒன்றாகும்

பரிமேலழகர் எழுதிய உரை பல பொதுப்படையான குறள்களைப் பொறுத்துச் சிறப்பாக வரவேற்கதக்கதாக இருந்ந போதிலும் மனு முதலிய நூல்கள் விழித்தன செய்தலையும், விலக்கியவற்றை ஒழித்தலையும் வலியுறுத்தும் வகையில், சமய உணர்வோடும், சனாதன உணர்வோடும் அயலாரின் கொள்கைப்பற்றோடும்எழுதிய உரைப்பகுதிகள் அனைத்தும் புறக்கணித்து ஒதுக்கப்பட வேண்டியவைகளாகவே இருக்கின்றன. வள்ளுவர் நெறிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும், உலகியல் நடை முறைக்கும், பகுத்து அறியும் ஆராய்ச்சி அறிவுக்கும் ஏற்ற முறையில் உண்மைப் பொருள் விளக்கம் காணும் பொருட்டு மேற் கொண்டுள்ள முயற்சிதான் இவ்வுரை விளக்கப் படைப்பாகும்.

-டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்
உண்மை- ஜனவரி-26


என் கருத்து:

எங்களின் மூதாதையர்கள் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நான் இப்பொழுது முஸ்லிமாக வாழ்ந்து வருகிறேன். முன்பு எங்களின் சாதி என்ன என்று கூட தெரியாமல் மறக்கடிக்கப்பட்டுள்ளோம். கலாச்சாரமும் முழுவதும் இஸ்லாமாக மாறி விட்டது. இன்று நான் வேலை (சவூதி) செய்யும் அலுவலகத்தில் தொழுகை நேரம் வந்து விட்டால். ஓரளவு அரபி எழுதப் படிக்கத் தெரிந்ததால் நான்தான் தலைவராக நின்று தொழுகை நடத்துகிறேன். எனக்குப் பின்னால் சவூதியாகிய என் முதலாளியும், அவரின் மகனும் மற்றும் பாகிஸ்தான் எகிப்து, நாட்டைச் சார்ந்தவர்களும் தொழுகிறார்கள். இங்கு அறிவுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படகிறதேயொழிய நான் யார் என்ற பார்க்கப்படுவதில்லை. நம் இந்து முன்னனி ராம கோபாலய்யர், இல கணேசன் பேச்சைக் கேட்டுக் கொண்டு நான் தாய் மதம் திரும்பினால் பழையபடி நான் சூத்திரன். மேலே நாவலர் சுட்டிக்காட்டிய அனைத்து விஷயங்களிலும் நானும் சம்பந்தப்படுவேன.. நிம்மதியாக, கௌரமாக, முஸ்லிமாக வாழ்ந்து வரும் நான் எதை எதிர்ப்பார்த்து நான் பழைய மதம் திரும்புவது என்பதை இல கணேசனும், ராமகோபாலய்யர்களும் விளக்குவார்களா?

அன்புடன்
சுவனப்பிரியன்

2 comments:

suvanappiriyan said...

திரு கால்கரி சிவா!
தொழிற்ச் சங்கங்கள் இல்லை என்றாலும் நீங்கள் பாதிக்கப் பட்டால் எந்த செலவும் இல்லாமல் கம்பெனியின் மீது வழக்குத் தொடர முடியுமே! இதில் வெற்றி பெற்று எத்தனையோ பேர் பயனடைந்துள்ளனர். ஆனால் வேலை நிறுத்தம் கூடாதுதான். அது முதலாளியையும் தொழிலாளியையும் பாதிக்கும் அல்லவா? கேரள நாட்டவர் அங்கு உள்ள தொழிற் சங்க பிரச்னைக்கு பயந்து தமிழ் நாட்டில் அதிகம் முதலீடு செய்வது நமக்குத் தெரிந்ததுதானே!

suvanappiriyan said...

திரு ஈரோடு பிலிம்ஸ்!
முகமது நபியின் அத்தை மகள் ஜைனபை அடிமையாக இருந்த ஜைது என்ற அடிமைக்கு திருமணம் செய்து கொடுத்தார். எனவே வேறுநாட்டவர் திருமணம் செய்வதற்கு ஒரு தடையும் இல்லை. ஆனால் அட்வான்ஸ் ஜீவனாம்சமாக ஒரு லட்சம் அல்லது ஒண்ணரை லட்சம் பெண்ணுக்கு நாம் கொடுக்க வேண்டும். அவ்வளவு பணத்துக்கு நம்மவர்கள் எங்கே போவது . அதுதான் பிரச்னையே!