Followers

Saturday, September 23, 2006

நோன்பு கடமையாக்கப் பட்டதன் காரணம்!

நோன்பு கடமையாக்கப் பட்டதன் காரணம்!

நாமெல்லாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ரமலான் மாதம் வந்து விட்டது. இந்த மாதத்தின் சிறப்பிறகு முக்கிய காரணம் இந்த மாதத்தில் தான் மனித குலத்தின் வழிகாட்டியான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.

'இந்தக் குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது. அது மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும்.பொய்யை விட்டு உண்மையை பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.'

2 : 185 - குர்ஆன்

ஆக ரமலான் மாதத்தில் நாம் ஒரு மாதம் நோன்பு நோற்பது இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டது என்பதால் ஆகும்.

முகமது நபி அவர்கள் கூறினார்கள் : 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முகம்மது அவர்கள் இறைவனின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஏழைகளுக்கான வரியை கணக்கிட்டு வழங்குதல், ரமலானில் நோன்பு நோற்றல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.

அறிவிப்பவர் : இப்னு உமர் நூல் : புகாரி 8

இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளதில் ஒரு அம்சமாக நோன்பு விளங்குவதால் இதன் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த நோன்பை இறைவன் முகமது நபி அவர்களின் சமுதாயத்துக்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்துக்கும் நோன்பு கடமையாக்கப் பட்டிருந்தது. இதைப் பற்றி குர்ஆனில் கூறும் போது

'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது.'

2 : 183,184 - குர்ஆன்

இந்த வசனத்தின் மூலம் நாம் இறை அச்சம் உடையவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவும் நோன்பு நம் மீது கடமையாக்கப் பட்டது என்று இறைவன் கூறுகிறான்.

வசதி இருக்கிறது. தனக்கு முன்னால் வித விதமான உணவு வகைகள் இருக்கிறது. யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டு விட்டால் எவருக்கும் தெரியப் போவதுமில்லை. இருந்தாலும் என் இறைவன் எனக்கு கட்டளை இட்டு விட்டான். எனவே நான் எந்த உணவையும் குறிப்பிட்ட நேரம் வரை தொட மாட்டேன் என்ற உறுதியும் இந்த நோன்பின் மூலம் நமக்கு கிடைக்கிறது.

'யார் பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை.' என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: நபித் தோழர் அபூ ஹீரைரா
1903 - புகாரி

இதன் மூலம் நோன்பு ஒரு மனிதனை தவறான வழிகளிலிருந்து மீள்வதற்கு துணை புரிய வேண்டும். அது இல்லாத படசத்தில் அவர் பசித்திருப்பதனால் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது முகமது நபியின் அறிவுரையாகும். இந்த நோன்பின் மூலம் வறியவர்களுக்கு பசியின் கொடுமை எப்படி இருக்கும் என்பதை செல்வந்தர்களும் உணருவதற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது. மேலும் தேவைக்கு அதிகமான கொழுப்புக்ள் நம் உடம்பில் இருந்தால் நோன்பின் மூலம் அவை எல்லாம் சரி செய்யப் படுகின்றன. இதன் மூலம் மருத்துவத்துக்கும் நோன்பு ஒரு வகையில் காரணமாகிறது.

'உங்களில் நோயாளியாகவோ பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்கு சக்தி உள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரம்.'

2 : 184 - குர்ஆன்

பயணத்தில் இருப்பவர் வேறொரு நாளில் கணக்கிட்டு அந்த நோன்பை பூர்த்தியாக்க வேண்டும். வயது முதிர்ச்சியினால் நோன்பு நோற்க முடியாதவர், நோய் குணமாகி விடும் என்பதை எதிர்பார்க்க முடியாத தொடர்ச்சியான நோயிலிருக்கும் நோயாளிகளும் நோற்காத ஒவ்வொரு நோன்புக்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். மற்ற சாதாரண நோயாளிகள் தமது உடல்நிலை சரியானதும் விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு நோற்பது கடமையாகும்.

'நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை'

2 : 187 - குர்ஆன்

இதன் மூலம் இரவு நேரங்களில் நோன்பு மாதங்களில் மனைவியோடு சந்தோஷமாக இருப்பது அனுமதிக்கப் பட்டுள்ளது.

'முகமது நபி அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன்' என்று நபித் தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.

ஆதார நூல்கள் : அஹமத், அபூ தாவூத், நஸயீ

நோன்பு வைத்திருப்பவர் உச்சி வெயில் நேரத்து வறட்சியைக் குறைத்துக் கொள்வதற்காக குளிப்பதும், தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதும் கூடும் என்பதை இதிலிருந்து அறியலாம்.

'நோன்பு பாக்கி உள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்' என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா, நூல் புகாரி

ஒரு மனிதர் முகமது நபி அவர்களிடம் வந்தார். 'இறைவனின் தூதரே! என தாய் மீது ஒரு மாத நோன்பு கடமையாக உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு முகமது நபி அவர்கள் 'ஆம் நிறைவேற்றலாம். இறைவனின் கடன் நிறைவேற்றப் பட அதிகம் தகுதியானது.' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்
1953 - புகாரி

இறந்தவரின் சொத்துக்காக மட்டும் வாரிசாக ஆசைப் படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை. நாமறிந்தவரை பெற்றோருக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் நோன்பு நோற்பவர்களைக் காண முடிவதில்லை.

'முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும், உண்மை பேசும் ஆண்களும் பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும் பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும், இறைவனை அதிகம் நினைக்கும் அண்களும் பெண்களும்ஆகியோர்களுக்கு இறைவன் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

33 : 35 - குர்ஆன்

நோன்பு நோற்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இறைவன் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளதாக வாக்களித்துள்ளதால் நோன்பை விடாது வைத்து இறைவனின் அன்பை பெற்றுக் கொள்வோமாக!

ரமலான் வந்து விட்டாலே சவூதியில் வாழ்க்கை முறை அப்படியே மாற்றத்திற்கு உள்ளாகி விடும். வேலை நேரம் அனைத்து கம்பெனிகளிலும் ஒரு மணி நேரம் அல்து இரண்டு மணி நேரம் குறைக்கப் பட்டு விடும். சில கம்பெனிகள், அலுவலகங்கள் அனைத்தும் இரவு எட்டிலிருந்து நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரை வேலை நேரம் இருக்கும். பகல் பொழுது அனைத்தும் தூக்கத்திலேயே சென்று விடும். இந்த சூழலைப் பார்த்து மாற்று மத சகோதரர்கள் பலர் அவர்களாகவே விரும்பி நோன்பிருக்கும் காட்சியையும் பார்க்கிறோம். மாலை நேரம் ஆகி விட்டால் பள்ளிகளில் நோன்பு திறப்பவர்களுக்காக சவூதி வீடுகளில் இருந்தும், ஹோட்டல்களிலிருந்தும் பல வித உணவு பதார்த்தங்கள் வந்த வண்ணம் இருக்கும். அதை சவூதி நாட்டவரே அனைவரையும் அமர வைத்து பரிமாறுவது ஒவ்வொரு ரமலானிலும் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கிறது.

சென்ற நோன்பில் இருந்தவர்கள் இந்த வருட நோன்பில் நம்மிடையே இல்லை. எனவே எல்லாம் வல்ல இறைவன் இந்த ரமலான் மாதத்தை அடையும் பாக்கியத்தை நமக்குத் தந்து, அந்த ரமலானில் கடை பிடிக்கும் காரியங்களை வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி வைப்பனாக!

இணைய நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களைக் கூறிக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

No comments: