Followers

Thursday, September 28, 2006

முகமது நபியையே கண்டிக்கும் குர்ஆனிய வசனம்!

முகமது நபியையே கண்டிக்கும் குர்ஆனிய வசனம்!

'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முகம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.'

80 : 1, 2 -குர்ஆன்

ஒரு முறை முகமது நபி உயர் குலத்தவரான குரைஷிகளிடம் இஸ்லாமிய போதனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர்கள் 'முகம்மதே! நீர் சொல்லும் கொள்கைகள் நன்றாகத்தான் இருக்கிறது. ஒரே இறைவனை ஏற்க்கச் சொல்கிறீர். ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை. கருப்பு அடிமைகளோடு எங்களையும் ஒன்றாக உடகார வைத்து போதிக்கிறீரே அது தான் எங்களுக்கு சிரமமாக இருக்கிறது. எங்களுக்கு ஒரு நாள் அந்த அடிமைகளுக்கு வேறொரு நாள் என்று பிரித்து உபதேசம் செய்தால் உம்முடைய கோரிக்கையை பரிசீலிக்கிறோம்' என்ற ரீதியில் கோரிக்கை வைக்க ஆரம்பித்தனர்.

இதன் மூலம் நம் நாட்டு பிராமணியத்தையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு அந்த மக்களிடத்தில் நிற வெறியும் குலப் பெருமையும் நிறைந்திருந்ததை விளங்க முடிகிறது. முகமது நபியும் சிறிது யோசிக்கிறார்கள். முதலில் அவர்கள் கோரிக்கையை ஏற்று இஸ்லாத்துக்குள் வரவழைப்போம். பிறகு நம்முடைய பிரச்சாரத்தால் அவர்களின் நிற வெறியை போக்கி விடலாம் என்று மனதுக்குள் நினைத்தவராக மேற்க் கொண்டு குரைஷிகளிடம் பேச முகமது நபி முற்படுகிறார்.

அந்த நேரத்தில் அந்த சமுதாயத்தில் இழிவாக கருதப்பட்டவரான அப்துல்லா என்பவர் அந்த இடத்துக்கு வருகிறார். இவருக்கு கண் தெரியாது. முகமது நபி சிலருடன் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்ட இந்த குருடர் 'இறைவனின் தூதரே! அஸ்ஸலாமு அலைக்கும்' என்று கூறுகிறார். இதை முகமது நபி விரும்பவில்லை. அங்கு பிரச்சினையே இது போன்ற இழி குலத்தவர் குறிப்பிட்ட சபைக்கு வரக் கூடாது என்பதே! எனவே முகமது நபி முகத்தை சற்று கடுகடுப்பாக்கிக் கொண்டு அப்துல்லாவுக்கு பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார். அப்துல்லாவும் 'இறைவனின் தூதர் ஏதோ சங்கடத்தில் இருக்கிறாரபோல' என்று மனத்துக்குள் நினைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார்.

இந்த நேரத்தில் தான் இறைவனிடமிருந்து ஒரு வசனம் இறங்குகிறது.

'தன்னிடம் அந்த குருடர் வந்ததற்காக இவர் (முகம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது முகம்மதே உமக்கு எப்படி தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.'

'யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகா விட்டால் உம் மீது (குற்றம்) ஏதும் இல்லை. இறைவனை அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்.'

80 : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 - குர்ஆன்

முகமது நபி கோபம் அடைந்ததோ, முகத்தை சுளித்ததோ கண் தெரியாத இந்த மனிதருக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்காது. அவர்கள் முகத்தை சுளித்துக் கொண்டு உயர் குலத்தவரோடு பேசிக் கொண்டிருந்திருக்கலாம்.

ஆனால் உடனடியாக இறைவன் புறத்திலிருந்து எச்சரிக்கை வருகிறது.

உம்மை ஆர்வத்தோடு தேடி வருகின்ற இந்த குருடரை உயர் குலத்தவருக்காக விரட்டி அடிக்கிறீரா? என்று இறைவன் முகமது நபியைக் கண்டிக்கிறான்.

குர்ஆன் முழுக்க ஒவ்வொரு வசனத்திலும் 'முகம்மதே! மக்களுக்குக் கூறுவீராக!' என்று அடிக்கடி நேரிடையாகக் குறிப்பிடும் இறைவன், இந்த குறிப்பிட்ட வசனத்தில் மட்டும் ஏதோ ஓர் மூன்றாம் மனிதரிடம் பேசுவது போல் 'இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்' என்ற ரீதியில் வசனம் அமைந்திருப்பதிலிருந்து இறைவனின் கோபம் நமக்கும் விளங்குகிறது.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது அந்த குருடருக்கே மற்றவர்கள் சொல்லித்தான் தெரிகிறது. இந்த சம்பவம் நமக்கு ஒரு உண்மையை விளக்குகிறது.

குர்ஆனை முகமது நபி தாமே சொந்தமாக உருவாக்கியிருந்தால் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்கின்ற ஒரு வாசகத்தைத் தமக்கு எதிராக அவர்கள் உருவாக்கியிருக்க முடியாது.

காலா காலத்துக்கும் இந்த வேதத்தைப் படிப்பவர்களெல்லாம் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து இந்த வசனத்தை நீக்கியும் இருக்கலாம். யாருக்கும் தெரியப் போவதில்லை.

குர்ஆன் முகமது நபி உருவாக்கியது அல்ல என்பதாலும் இறைவன் புறத்திலிருந்து வந்தது என்பதாலும் தான் இதைக் கூட நபிகள் நாயகம் அவர்கள் அந்தக் குருடர் மத்தியிலும் தம்மைப் பெரிதும் மதிக்கின்ற சமுதாயத்தின் மத்தியிலும் 'இறைவனே என்னைக் கண்டித்து விட்டான்' என்று பிரகடனம் செய்கிறார்கள்.

இந்தக் குர்ஆன் இறைவன் அருளியதுதான் என்பதற்கு இந்த சம்பவத்தை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.அது மட்டுமல்லாமல் முகமது நபியே ஆனாலும் அவர்கள் இறைவன் விருப்பத்திற்கு மாற்றமாக எதையும் செய்ய அதிகாரம் இல்லை என்ற செய்தியும் நமக்கு கிடைக்கிறது.

செய்பவர் யார் என்று பார்த்து இறைவன் நீதி வழங்க மாட்டான். செய்யப் படும் காரியத்தைத்தான் அவன் பார்ப்பான் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

ஒரு சாதாரண மனிதராகக் கருதப்பட்ட கண் தெரியாதவருக்காக தனது தூதரையே இறைவன் கண்டிக்கிறான் என்றால் இது எவ்வளவு அற்புதமான ஒரு மார்க்கம்! இது போன்ற ஒரு கடவுள் கொள்கையினால் மனித குலத்திற்கு எவ்வளவு பயன் கிட்டும் என்பதை எல்லாம் இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

முகமது நபி கூட இந்த சம்பவத்திற்கு பிறகு அப்துல்லா இப்னு மக்தூம் என்ற அந்தக் குருடரிடத்தில் முன்பிருந்ததை விட அதிக மரியாதையோடு நடந்து கொண்ட வரலாற்றையும் பார்க்கிறோம்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

11 comments:

ஜயராமன் said...

அபத்தமான மொழிபெயர்ப்பு.

நீங்கள் சொல்வது போல இந்த சுரா முகம்மதை குறிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சுன்னிகளின் இந்த பொருளை வேறு துலுக்க இனத்தவர்கள் ஒப்புவதில்லை.

மாறாக, இது முகம்மதுவை காணவந்த ஒரு உமய்யத் இன தலைவனை குறித்தது என்றே சொல்லப்படுகிறது.

குரான் முகம்மதுவை பற்றி பேசும்போது (அதாவது முகம்மது தன்னைப்பற்றி அல்லாஹ் சொன்னார் என்று சொன்னது) "நான் உன்னை ஒரு அப்பழுக்கற்ற குணத்தவராக படைத்தோம்" என்பதே. நீங்கள் சொல்வது அந்த குரான் சுராவுக்கு விரோதம். அதனால் இந்த பொருள் ஏற்புடையதாக இல்லை.

மேலும், குரான் சுராவை சரியாக படியுங்கள். முதல் சுரா "நீ" என்று சொல்லவில்லை. "அவன்" என்று மூன்றாம் வேற்றுமையில் சொல்கிறது. (அரபி தெரியுமல்லவா??) ஆனால், மூன்றாவது வரியில் "நீ" என்று சொல்கிறது...

நன்றி

suvanappiriyan said...

ஜயராமன்!

//நீங்கள் சொல்வது போல இந்த சுரா முகம்மதை குறிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சுன்னிகளின் இந்த பொருளை வேறு துலுக்க இனத்தவர்கள் ஒப்புவதில்லை.//

//மாறாக, இது முகம்மதுவை காணவந்த ஒரு உமய்யத் இன தலைவனை குறித்தது என்றே சொல்லப்படுகிறது//

அடடே! குர்ஆனை ஆராய்ச்சி பண்ணும் அளவுக்கு ஜயராமன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வசனம் முகமது நபியையும் கண் தெரியாத அந்த தோழரையும் சம்பந்தப் படுத்தித்தான் என்று பல அறிஞர்களின் மொழி பெயர்ப்பிலும், புகாரி ஹதீஸ் தொகுப்பிலும் காணப்படுகிறது. இந்த சம்பவத்தை அனைத்து முஸ்லிம்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த இஸ்லாமிய பிரிவினர் ஒத்துக் கொள்வதில்லை என்பதை ஆதாரத்தோடு தருகிறீர்களா?.

உமயய்த் இனத் தலைவனைப் பற்றியது என்பதை எதில் படித்தீர்கள் என்பதை எனக்குத் தெரிவித்தால் நானும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

//குரான் முகம்மதுவை பற்றி பேசும்போது (அதாவது முகம்மது தன்னைப்பற்றி அல்லாஹ் சொன்னார் என்று சொன்னது) "நான் உன்னை ஒரு அப்பழுக்கற்ற குணத்தவராக படைத்தோம்" என்பதே. நீங்கள் சொல்வது அந்த குரான் சுராவுக்கு விரோதம். அதனால் இந்த பொருள் ஏற்புடையதாக இல்லை.//

ஆஹா! அருமையான சிந்திக்க வைக்கும் கேள்வி. முகமது நபியே பல முறை 'நானும் உங்களைப் போன்ற சாதாரண மனிதன் தான். நமக்குள் உள்ள வித்தியாசம் எனக்கு இறைவனிடத்திலிருந்து செய்திகள் வருவது மட்டுமே' என்று கூறியிருக்கிறார்கள். சாதாரண மனிதருக்கு உள்ள கோபம், சந்தேகம், மறதி போன்ற குணங்கள் முகமது நபிக்கும் அவ்வப்போது இருந்துள்ளது. இது போன்று தவறும் நேரங்களில் இறைவன் புறத்திலிருந்து செய்திகள் வந்து இறைத் தூதர்களை நேர்வழிப் படுத்தப் படும். இது மோஸே, கிள்று போன்ற பல தூதர்களின் வாழ்விலும் நடந்துள்ளது. அதிலும் முகமது நபி அந்த உயர் குலத்தவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் அந்த குருடரிடம் அவ்வாறு நடந்து கொண்டார்கள். எண்ணம் தூய்மையாக இருந்தாலும் நடந்து கொண்ட முறை சரியில்லை என்பதைத்தான் இறைவன் இங்கு சுட்டிக் காட்டுகிறான்.

//மேலும், குரான் சுராவை சரியாக படியுங்கள். முதல் சுரா "நீ" என்று சொல்லவில்லை. "அவன்" என்று மூன்றாம் வேற்றுமையில் சொல்கிறது. (அரபி தெரியுமல்லவா??) ஆனால், மூன்றாவது வரியில் "நீ" என்று சொல்கிறது...//

எந்த அத்தியாயம், வசன எண் என்று எதுவும் குறிப்பிடாமல் சொன்னால் எந்த வசனத்தை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று விளங்கவில்லை. தெளிவுபடுத்தவும்.

//(அரபி தெரியுமல்லவா??)//

அரபியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பாண்டித்தியம் இல்லை. தமிழகம் வரும்போது உங்களிடம் டியூஷன் வைத்துக் கொள்கிறேன்.:-((

ஜயராமன் said...

சுவனப்பிரியன்,

தங்கள் பதிலுக்கு நன்றி.

என் போன்ற காபிர்களுக்கு நீங்கள் பதில் சொல்வது மிக்க மகிழ்ச்சி.

தங்களின் பதில் கேள்விகளுக்கு என் பதிலுரை.

தங்கள் இஸ்லாமிய அறிவு உங்கள் சுன்னதுல்ஜமாத் வரையில் சுருங்கியுள்ளதோ என்று ஐயமாகிறது. ஏன் என்றால், இந்த அபஸா சுராவில் முகம்மதுவை குறிப்பதா இல்லையா என்பது பெரும் விவாதம், துலுக்கர்களுக்கிடையே. சுன்னிக்கள் இவ்வாறு சொன்னாலும், ஷியா சகோதர்ர்கள் இதை ஒப்புவதில்லை. உங்களுக்கு இதை நான் சொல்லிக்கொடுக்கப்போவதில்லை. நீங்கள்தான் இதை சரியில்லை என்று நிரூபிக்கவேண்டும். உங்கள் ஷியா நண்பர்கள் இருந்தால் கேளுங்கள். முடிந்தால், இமாம் ஃபக்ர்உதீன் ராஸீ அவர்கள் எழுதிய இஸ்மதுள்-அன்பியா என்ற புத்தகத்தை படிக்கவும். மிகவும் பிரபலமான புஸ்தகம்.

"நீ" என்பது இதே 80வது சுராவில் 3வது அயாத். "நான்" என்பது இதே 80வது சுராவில் முதல் அயாத். நீங்கள் இந்த பதிவில் எழுதினதிலேயே இவை உள்ளன.

"இன்னக்க லா அல் குலுக்கீன் அஸீம்" என்ற ரஸூலுக்கு நீங்கள் சொல்வது அவமானம் என்பது சில இஸ்லாம் சகோதர்ர்களின் வாதம்.

தங்களுக்கு அரபி தெரியுமா என்று துடுக்குத்தனமாக கேட்டதற்கு மன்னியுங்கள்.

suvanappiriyan said...

ஜயராமன்!

//என் போன்ற காபிர்களுக்கு நீங்கள் பதில் சொல்வது மிக்க மகிழ்ச்சி.//

காபிர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தாத போது நீங்களாக எதற்கு உபயோகப்படுத்துகிறீர்கள்?

'மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்'

49 : 13 - குர்ஆன்

இதன்படி நீங்களும் என் சகோதரர் ஆகிறீர்கள். ஒரு சகோதரனின் சந்தேகத்தை தீர்த்து வைப்பது என் கடமையல்லவா?

//சுன்னிக்கள் இவ்வாறு சொன்னாலும், ஷியா சகோதர்ர்கள் இதை ஒப்புவதில்லை. உங்க//

ஷியாக்கள் எந்த அளவு தவறான கொள்கையில் திசை திருப்பப் பட்டிருக்கிறார்கள் என்பது விரிவாக விளக்க வேண்டிய வரலாறு. அந்த ஆராய்ச்சிக்குள் தற்போது செல்ல வேண்டாம். சுன்னிகளோ ஷியாக்களோ யாராக இருந்தாலும் அனைவருக்கும் ஒரே குர்ஆன் தான். ஒரே நபிதான். மேலும் இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் அபஸா சூராவில்(அத்தியாயம்) சந்தேகத்திற்கிடமின்றி முகமது நபியே மேற் சொன்ன விளக்கத்தைத்தான் தன் தோழர்களிடம் சொல்லியிருக்கிறார். இது புகாரி, முஸ்லிம் போன்ற ஆதாரபூர்வமான நபி மொழிகளில் காணக் கிடைக்கிறது. இதற்கு மாற்றமாக ஷியாக்களில் ஒரு சிலர் சொல்வதெல்லாம் மார்க்கமாகாது. நீங்கள் குறிப்பிடும் புத்தகம் போல் இன்னும் எத்தனையோ உலகில் உள்ளது. அவை அனைத்தும் குர்ஆனுக்கும், நபி மொழிக்கும் மாற்றமாக இருந்தால் அது போன்ற புத்தகங்களை ஒதுக்கி விட வேண்டும். இது தான் உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ஒத்துக் கொண்ட வழி முறை.

மிகவும் இலகுவான தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பி.ஜெய்னுல்லாபுதீன் மொழி பெயர்த்த குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு சென்னையில் பரவலாக கிடைக்கும். வாங்கி படித்துப் பாருங்கள். இன்னும் பல தெளிவுகள் கிடைக்கும்.

//"இன்னக்க லா அல் குலுக்கீன் அஸீம்" என்ற ரஸூலுக்கு நீங்கள் சொல்வது அவமானம் என்பது சில இஸ்லாம் சகோதர்ர்களின் வாதம்.//

அதே இறைவன்தான் தன் தூதர் தவறு செய்யும் போதும் கண்டிக்கிறான்.
இதில் அவமானம் எங்கிருந்து வந்தது? கண்டிப்பது இறைவன் அல்லவா?

//தங்களுக்கு அரபி தெரியுமா என்று துடுக்குத்தனமாக கேட்டதற்கு மன்னியுங்கள். //
மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையெல்லாம் எதற்கு திரு ஜெயராமன்? அரபி மொழியில் இன்னும் நான் பூரண பாண்டித்தியம் பெறவில்லை. அதற்கான முயற்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். நன்றி!

ஜயராமன் said...

சுவனப்பிரியன் அவர்களே,

தங்கள் விளக்கங்கள் எளிதாகவும், நேரிடையாகவும் இருக்கின்றன. மிக்க நன்றி

///காபிர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தாத போது நீங்களாக எதற்கு உபயோகப்படுத்துகிறீர்கள்///

இந்த வார்த்தையை உபயோகித்தது தங்களை கிண்டலடிக்கவோ, சங்கடத்தில் ஆழ்த்தவோ இல்லை. காஃபிர்களுடன் நட்பு பாராட்டாதே என்று தங்கள் மார்க்கம் சொல்கிறது. (எங்கே என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தங்களுக்கு அவை அவசியம் தெரிந்திருக்கும். அதை பற்றி மேலும் ஏன் எழுதுவானேன்?) அதனால், நீங்கள் என்னை மதித்து பதில் தந்ததும், என்னை சகோதரரே என்று அழைப்பதும் சரியா? நீங்கள் மார்க்கத்துக்கு படி நடப்பவரில்லையா? அல்லது, நான் காபீர் இல்லையா? இதை தயை செய்து விளக்கவும்.

///இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் அபஸா சூராவில்(அத்தியாயம்) சந்தேகத்திற்கிடமின்றி முகமது நபியே மேற் சொன்ன விளக்கத்தைத்தான் தன் தோழர்களிடம் சொல்லியிருக்கிறார். இது புகாரி, முஸ்லிம் போன்ற ஆதாரபூர்வமான நபி மொழிகளில் காணக் கிடைக்கிறது.////

இந்த விளக்கம் போதுமானது. மிக்க நன்றி. இந்த ஹதீத்துக்களின் எண் எனக்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால், நான் அறிந்த வரையில் அவ்வாறு ஹதீத்துக்கள் இல்லை. சுனா விவரம் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

ஷியாக்கள் கூற்று தவறு. சுன்னிக்களின் பெரியோர்கள் கூற்றே சரி என்று நீங்கள் சொல்வது உங்கள் இனான் அடிப்படையில் மிக்க சரி. ஆனால், என்னைப்போன்ற வெளி ஆட்களுக்கு இது தகுந்த விளக்கம் ஆகாது. ஏனென்றால், அவர்களும் இதையே திருப்பி சொல்கிறார்கள்.

ஆனால், ஹதீத், சுனா முதலிய விவரங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே.

////வகையில் பி.ஜெய்னுல்லாபுதீன் மொழி பெயர்த்த குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பு சென்னையில் பரவலாக கிடைக்கும்.///

தகவலுக்கு நன்றி. அவசியம் வாங்கிப்படிக்கிறேன். என்னிடமுள்ள ஆங்கில மொழிபெயர்ப்புகள் யூஸூப் அலி போன்றவை அழகாக இருந்தாலும், தமிழில் இன்னும் நிறைவாக இருக்கும் என்று தோன்றுகிறது. ரமதான் மாத்த்தில் சல்லிசாக கிடைத்தாலும் கிடைக்கும். :-)


நன்றி

ஜயராமன் said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

ஜெயராமன்!

//காஃபிர்களுடன் நட்பு பாராட்டாதே என்று தங்கள் மார்க்கம் சொல்கிறது. (எங்கே என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். தங்களுக்கு அவை அவசியம் தெரிந்திருக்கும். அதை பற்றி மேலும் ஏன் எழுதுவானேன்?) அதனால், நீங்கள் என்னை மதித்து பதில் தந்ததும், என்னை சகோதரரே என்று அழைப்பதும் சரியா? நீங்கள் மார்க்கத்துக்கு படி நடப்பவரில்லையா? அல்லது, நான் காபீர் இல்லையா? இதை தயை செய்து விளக்கவும்.//

நபித்தோழர் உத்வா பின் கஸ்வான் அறிவிக்கிறார், 'அன்று முகமது நபி அவர்களுடன் இருந்த ஏழு நபர்களில் ஒருவனாக நான் இருந்தேன். அப்போது மரத்தின் இலைகளைத் தவிர வேறு உணவே கிடைக்கவில்லை. அதனால் எங்கள் வாயெல்லாம் புண்ணாகி விட்டது.'

ஆதாரம் : முஸ்லிம்

தூதராக அறிவிப்பதற்கு முன்பு மிகப் பெரும் வியாபாரியாக இருந்த முகமது நபியை ஒரே இறைவனை வணங்குங்கள் என்று சொன்னதற்காக சொந்த நாட்டை விட்டு விரட்டப் படுகிறார். ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப் படுகிறார். இலை தழைகளை சாப்பிடும் நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப் படுகின்றனர்.எப்படியாவது முஸ்லிம்களை அழித்து இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்று எதிரிகள் பல போர்களை முஸ்லிம்களின் மேல் திணித்தனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சில முஸ்லிம்களின் உறவினர்களும் நண்பர்களும் எதிரிகளின் பகுதிகளில் இருந்தனர். அவர்களுடன் முஸ்லிம்கள் உறவாடி வந்தனர்.முஸ்லிம்கள் மூலம் தகவல்கள் அவர்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதற்காகவே அந்த நேரத்தில் முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று குர்ஆன் பல இடங்களில் கட்டளையிடுகிறது.

'இஸ்லாத்தை கேலிப் பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்.'
5 : 57 - குர்ஆன்

'உங்களுக்குப் பகைவர்களாக இருப்போரையும் கைகளாலும் நாவுகளாலும் உங்களுக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுவோரையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள்'
60 : 2 -குர்ஆன்

'உங்கள் பகைவர்களாகவும் இருந்து கொண்டு உங்களையும் முகமது நபியையும் ஊரை விட்டே விரட்டியடித்தவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்.
60 :1 -குர்ஆன்

'வெளிப் படையாக எதிர்ப்பைக் காட்டி உள்ளுக்குள் முஸ்லிம்களை ஒழிக்கத் திட்டமிடுவோரை நண்பர்களாக்காதீர்கள்.'
3 : 118 - குர்ஆன்.

மேற்கண்ட வசனங்கள் அனைத்தும் முஸ்லிம்களை ஒழிக்கத் திட்டமிடும் நயவஞ்சகர்களை நண்பர்களாக்க வேண்டாம் என்று குர்ஆன் கூறுகிறது. இத்தகைய எண்ணங்கள் ஜெயராமனாகிய உங்களுக்கு இல்லை என்று நான் நம்புவதால் உங்களைப் போன்றோரை தோழர் என்றும் நண்பர் என்றும் அழைக்கிறேன். இது எவ்வாறு இஸ்லாத்துக்கு முரணாகும்.

மேலும் மாற்று மதத்தில் உள்ள நல்லவர்களுடன் நளினமாக நடக்கவும் அதே குர்ஆன் வழி காட்டுகிறது. அத்தகைய வசனங்களை கீழே தருகிறேன்.

'ஒரு சமுதாயம் உங்களுக்குச் செய்த தீமை காரணமாக அவர்களுக்கு அநியாயம் செய்யாதீர்கள்'
5 : 82 - குர்ஆன்

'மார்க்கத்துக்கு எதிராக உங்களுடன் போருக்கு வருவோரையும் உங்களையும் முகமது நபியையும் விரட்டியடித்தவர்களையும் உற்ற நண்பர்களாக்காதீர்கள். அவ்வாறு நடக்காத முஸ்லிம் அல்லாதவர்களுடன் நட்புப் பாராட்டுவது மட்டும் அன்றி அவர்களுக்கு நன்மையும் செய்யுங்கள்.'
60 : 8-9 - குர்ஆன்

'உடன்படிக்கை செய்து முறையாக நடப்போரிடம் ஒப்பந்தத்தை நிறை வேற்றுங்கள்.'
9 : 4 - குர்ஆன்
முஸ்லிம் அல்லாதோருடன் ஒப்பந்தம் செய்து கொள்வதை இவ்வசனம் அனுமதிக்கிறது.

முஸ்லிமல்லாதவர் அடைக்கலம் தேடி வந்தால் அவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்.
9 : 6 - குர்ஆன்

பெற்றோர்கள் முஸ்லிம்களாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குரிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும்
31 : 15 , 29 : 8 - குர்ஆன்

முகமது நபியே தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடமானம் வைத்திருந்தனர்.
2916, 2068 - புகாரி

முகமது நபி யூதப் பெண்ணின் விருந்தை ஏற்றனர்.
2617 - புகாரி

முகமது நபி அவர்களின் ஆட்சியில் முஸ்லிம் அல்லாதவர்கள் பலர் சகல உரிமைகளையும் பெற்று வாழ்ந்தனர்.
1356 - புகாரி

மேற் சொன்ன குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் மற்ற மதத்தவர்களோடு சுமூகமாகவும் நட்பு பாராட்டியும் இருக்கவே கட்டளையிடுகிறது.

// நான் காபீர் இல்லையா? இதை தயை செய்து விளக்கவும்.//

நீங்கள் காபிரா (இணை வைப்பவரா?) இல்லையா என்பதை நான் எப்படி சொல்ல முடியும்! அது உங்களின் வணக்கத்தையும் நற்கருமங்களையும் பொறுத்து நீங்களே எடுக்க வேண்டிய முடிவல்லவா?

rozmi said...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோத.ஞயராமன் மற்றும் சுவனப்பிரியன் அவர்களின் உரையாடல் மிக அற்புதம்மாகவும், புள்லரிக்கவும் வைக்கின்றன. இது போன்ற நடுனிலையான, வெளிப்படையான கலந்துரையாடல் மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்ள்.

M.Rozmi.
Dammam-KSA

வாசகன் said...

சு.பி. அவர்களே... சலாம் அலெய்க்கம்
திரு.ஜயராமனுக்கு நீங்கள் எடுத்து வைத்த விளக்கம்- அற்புதம் அருமை. இதையெல்லாம் அவர் ஒத்துக்கொண்டுவிட்டால் அவர் போன்றவர்களால் 'மத அரசியலில்' பிழைக்க இயலாமற் போகலாம். எனினும் தொடர்ந்து விளக்கமளித்து வாருங்கள். தேடலுடையவர்களுக்கு உதவும். தீங்கு நினைக்காத; இழைக்காத நிராகரிப்பாளர்களை நண்பர்களாகக் கொள்ள யாதொரு தடையும் இல்லை என்று சொல்கிற குரானை குறிப்பிடாத ஜயராமன் சார் முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட வந்தவர்களைக் குறித்துச் சொல்லப்பட்ட வசனங்களை ஏன் தமக்காக்கிக் கொள்கிறார்?

அப்புறம், முஸ்லிம்கள் பொதுவாக முஹம்மது என்று தானே குறிப்பிடுவார்கள். நீங்கள் ஏன் தலைப்பில் முகமது என்று குறிப்பிடுகிறீர்கள்?

podakkudian said...

சகோதரர் சுவனப்பிரியன்,
அழகான முறையில் எடுத்து வைத்த அனைத்து கருத்துக்களும் அருமை.இந்த விவாத்தால் நிறைய ஐயங்கள் தெளிவாகி உள்ளது இந்த பணி தொடர வாழ்த்துக்கள் வஸ்ஸலாம்.

suvanappiriyan said...

வஅலைக்கும் சலாம்!

//arumayana azagiya vilakkavurai vazthukkal //
-Niyamath

//இது போன்ற நடுனிலையான, வெளிப்படையான கலந்துரையாடல் மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்ள்.//
-Rozmi

// ஜயராமன் சார் முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட வந்தவர்களைக் குறித்துச் சொல்லப்பட்ட வசனங்களை ஏன் தமக்காக்கிக் கொள்கிறார்?//
-Raj


ரோஸ்மி, நியமத், ராஜ் போன்ற நண்பர்கள் கருத்துக்களைத் தெரிவித்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அப்புறம், முஸ்லிம்கள் பொதுவாக முஹம்மது என்று தானே குறிப்பிடுவார்கள். நீங்கள் ஏன் தலைப்பில் முகமது என்று குறிப்பிடுகிறீர்கள்?

அரபியில் உள்ள பெயர்களை உச்சரிக்கும் போது 'முகமது என்றோ முஹம்மத் என்றோ' எழுதுவதால் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. சலாம் சொல்லுதலிலேயே நீங்கள் 'அலெய்க்கும்' என்றும் ரோஸ்மி 'அலைக்கும்' என்றும் எழுதுகிறீர்கள். இதனால் பொருள் மாறி விடாது அல்லவா?

podakkudian!

இந்த விவாத்தால் நிறைய ஐயங்கள் தெளிவாகி உள்ளது இந்த பணி தொடர வாழ்த்துக்கள் வஸ்ஸலாம்.

Thanks for your comments.