
இந்தியா உள்பட பல உலக நாடுகளில் சென்ற வாரம் சூரிய கிரகணம் காணப்பட்டது. இந்த நேரத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.
சூரிய கிரகணம் கண்டால் அது விலகும் வரை முகமது நபி இறை வணக்கத்தில் ஈடுபடுவார். முகமது நபியின் இந்த செய்கையால் கிரகணம் ஏற்படும்போது உலக முஸ்லிம்களும் தொழுகையில் ஈடுபடுவார்கள்.
இந்த கிரகணத்தைப் பற்றி நமது வள்ளுவர் கூட 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று அறிவியலுக்கு முரணாண கருத்தை சொல்வதையும் பார்க்கிறோம். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் வள்ளுவரின் கருத்து தவறு என்பதும் நமக்கு விளங்குகிறது.
உலகம் ஒரு நாள் பல கோள்களும் ஒன்றோடொன்று மோதி கண்டிப்பாக அழியக் கூடியதே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதே கருத்தையே இஸ்லாமும் கூறுகிறது. 'இந்த உலகம் ஒரு நாள் அழிக்கப்பட்டு நன்மை தீமைக்கேற்றவாறு மறு உலகில் கூலி வழங்கப்படும்' என்பது இஸ்லாமிய நம்பிக்கை.
இனி இந்த சூரிய கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை சற்று பார்ப்போம். சூரியன், சந்திரன், பூமி,ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சந்திரன் சூரியனை மறைப்பதை சூரிய கிரகணம் என்கிறோம்.
பூமியிலிருந்து ஒரு பொருளை வானத்தை நோக்கி எறிந்தால் அது பூமியை நோக்கி கீழே விழுவது பூமியின் ஈர்ப்பு விசையினால். இதை புவி ஈர்ப்பு விசை என்கிறோம்.
அதே போன்று சந்திரனுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. முழு பவுர்ணமியில் கடல் நீர் மேலேறுவதும் இதனால்தான். சூரியனுக்கும் ஈர்ப்பு விசை உண்டு. அதனால்தான் அது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் ஈர்த்து தனது பாதையில் அழைத்துச் செல்வதை 'சூரியக் குடும்பம்' என்கிறோம்.
'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும்.'
-குர்ஆன் 31:29
ஈர்ப்பு விசை கொண்ட மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது தனது ஈர்ப்பு விசையில் சிறிய மாற்றம் ஏற்படுமானால் கோள்கள் ஒன்றோடொன்று மோதி உலகம் அழிந்து விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உலகம் அழிவதற்கு சாத்தியமான நேரம் இது என்பதை பல விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டுள்ளனர்.
எனவே உலகம் அழிவதற்கு சாத்தியமான இந்த நேரத்தில் இறைவனை பயந்து அவனை துதித்து பிரார்த்தனையில் ஈடுபடுவதை முகமது நபி வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட உலக முஸ்லிம்களும் கிரகணம் ஏற்பட்டதிலிருந்து அது விலகும் வரை பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
தகவல் உதவி : உணர்வு
No comments:
Post a Comment