Followers

Wednesday, March 04, 2009

'நான் கடவுள்' - என் பார்வையில்



நேற்றுதான் நண்பர் கொடுத்த குறுந் தகட்டின் மூலம் 'நான் கடவுள்' திரைப்படம் பார்த்தேன். பாலா தனது முத்திரையை இப்படத்திலும் பதித்துள்ளார். சமூகத்தின் அவலங்களையும், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையையும் இவரை விட சிறப்பாக திரைக்கு வேறு யாரும் கொண்டு வர முடியாது என்பது என் கருத்து. மன நலம் பாதிக்கப்பட்ட நபர்களையே மையக் கருத்தாக ஒவ்வொரு படத்திலும் எடுத்துக் கொள்வதற்கு ஏதேனும் விஷேஷ காரணம் பாலாவுக்கு இருக்கலாம்.

எங்கள் ஊரில் நான் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போது சாமியார் மடம் தாண்டித்தான் செல்ல வேண்டும். அப்போது அங்கிருந்து வரும் மணியோசை: அங்கிருந்து சாமியார்கள் கையில் திருவோட்டுடன் கும்பல் கும்பலாக கிளம்புவது என்பதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. திருமண பந்தத்தையும் உதறி விட்டு, சொந்தபந்தங்களையும் தூரமாக்கிவிட்டு இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள் என்று நினைத்ததுண்டு.

இதே போல் இஸ்லாத்தின் பெயரால் 'ஃபக்கீர்கள்' என்ற ஒரு குரூப்பும் உண்டு. இவர்களும் சாமியார்களை ஒத்த பழக்க வழக்கங்களையே கொண்டிருப்பர். சொந்த பந்தங்களையும் தூரமாக்கிவிட்டு இவர்களும் நாடோடிகளாகவே திரிவர். இவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளெல்லாம் தேவ வாக்கு என்று நம்பி இவர்கள் பின்னால் செல்லும் பலரையும் பார்த்திருக்கிறேன். இந்த ஃபக்கீர்களிடமும் சிலரிடம் கஞ்சா அடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு வித போதையில் தர்காக்களில் உருண்டு கிடக்கும் பல பக்கீர்களைப் பார்த்திருக்கிறேன். அரை மயக்கத்தில்தான் இவர்கள் இறைவனை தரிசிப்பார்களோ என்னவோ! தொழுகை கிடையாது. உடல் சுத்தம், உடை சுத்தம் எதையும் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தற்போது பக்கீர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சமீப காலங்களில் பலரும் விளங்கிக் கொண்டனர். தற்போது இவர்களின் மதிப்பும் இஸ்லாமியர்களிடத்தில் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.

இனி திரைப்படத்துக்கு வருவோம்....

இளையராஜாவின் இசையும் பாடல்களும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே', 'சொந்தமில்லை பந்தமில்லை', 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' போன்ற பழைய பாடல்களையே இன்னும் கொஞ்ச நேரம் ஓட விட்டிருக்கலாம்.

அழகாக கதையை நகர்த்திக் கொண்டு வந்த ஜெயமோகன் திடீரென்று அகோரிகளுக்கு தவறு செய்பவர்களை கண்டு பிடித்து விடும் திறமை உண்டு என்ற ரீதியில் புருடா விடும் போதுதான் படத்தில் தொய்வு ஏற்படுகிறது. இது பொன்ற சக்திகளெல்லாம் பெற துறவறம் மேற்கொள்ள வேண்டும்: கஞ்சா அடிக்க வேண்டும்: நர மாமிசம் சாப்பிட வேண்டும்: யாருக்கும் புரியாத பாசையில் எதையாவது உளர வேண்டும்: என்றெல்லாம் ஜெமோ ரீல் விடுவதுதான் உச்ச கட்ட அபத்தம். இதை தவிர்த்து விட்டுப் பார்த்தால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த நிறைவு ஏற்படுகிறது.

குருடியாக நடித்திருக்கும் அந்த பெண்ணின் நடிப்பு மனதைத் தொடுகிறது. மும்பையில் தினமும் பத்து குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி விபரம் சொல்கிறது. அவர்களெல்லாம் இன்னும் எந்த எந்த மாநிலங்களில் கைகள் முடமாக்கப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப் படுகிறார்களோ என்று நினைக்கும் போது பகீரென்கிறது மனது. நமது நாட்டு பணக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிச்சைக்காரரை தத்து எடுக்க முன் வந்தால் அடுத்த வருடமே இந்தியாவை வல்லரசாக்கி விடலாம். மனம் வர வேண்டுமே!

8 comments:

ஜோ/Joe said...

//நண்பர் கொடுத்த குறுந் தகட்டின் மூலம் 'நான் கடவுள்' திரைப்படம் பார்த்தேன்.//

அதற்குள் அதிகாரபூர்வ குறுந்தகடு வந்துவிட்டதா?

suvanappiriyan said...

ஜோ!

ஆரம்பம் டாட் காமில் இருந்து தரவிறக்கம் செய்து பிறகு படத்தை குறுந்தகட்டில் நண்பர் ஏற்றிக் கொடுத்தார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

Thamiz Priyan said...

காசியில் இருக்கும் சாமியார்களை ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் காட்டியது கொஞ்சம் அதிகம் தான்....

புருனோ Bruno said...

படத்தை பார்த்து விட்டு அதனடிப்படியில் (ஏற்கனவே தீர்மானிக்காமல் !!) எழுதப்பட்ட வெகு சில விமர்சணங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்

:)

suvanappiriyan said...

தமிழ் பிரியன்!

//காசியில் இருக்கும் சாமியார்களை ஏதோ எல்லாம் தெரிந்தவர்கள் போல் காட்டியது கொஞ்சம் அதிகம் தான்....//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

திரு புருனோ!

//படத்தை பார்த்து விட்டு அதனடிப்படியில் (ஏற்கனவே தீர்மானிக்காமல் !!) எழுதப்பட்ட வெகு சில விமர்சணங்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன்//

பாலாவின் மற்ற படங்களோடு ஒப்பிடுகையில் 'நான் கடவுள்' ஒரு படி கீழே இறங்கி விடுகிறது. இது ஜெயமோகனின் நுழைதலால் கூட இருக்கலாம். எக்காலத்திலும் எச்சந்தர்ப்பத்திலும் மனிதன் கடவுளாக முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பல மோசடிகளை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

¸ñ½ý ÌõÀ§¸¡½õ said...

"மனிதன் கடவுளாக முடியாது என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டால்"

"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்"-கவிஞர்.

"நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்"-சித்தர்.

நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தவன் கடவுள்தானே. மனிதன்தான் தெய்வமாகமுடியும். அதனாலேயே மனிதப் பிறவி உயர் பிறவி என்று கருதப்படுகிறது.

இஸ்லாத்தின் வழியில், இந்த தேசத்தில் எவ்வளவோ ஸூஃபி ஞானிகள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் தெய்வாம்சம் உள்ளோர்தானே.

அதுதான் இந்த மண்ணின் வழி. அரபு வழி நம் வழியல்ல.

கடவுள் அறியப்படுவதல்ல; உணரப்படுவது.

-கண்ணன்.

suvanappiriyan said...

திரு கண்ணன்!

//"நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்"-சித்தர்.

நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தவன் கடவுள்தானே. மனிதன்தான் தெய்வமாகமுடியும். அதனாலேயே மனிதப் பிறவி உயர் பிறவி என்று கருதப்படுகிறது.//

சிலை வணக்கத்தை கண்டிப்பதற்க்காக சித்தர் எடுத்தாண்ட வார்த்தைப் பிரயோகமே 'நாதன் உள் இருக்கையில்' என்பது. மனிதன் இறக்கிறான்: நோய்வாய்ப்படுகிறான்: பொய் சொல்லுகிறான்: திருமணம் செய்து குழந்தைகளையும் பெறுகிறான். இவை எல்லாம் ஒரு இறைவனுக்கு இலக்கணமாக முடியாது. இது போன்ற பலஹீனங்களை உடையவன் இறைவனாகவும் முடியாது.

//அதுதான் இந்த மண்ணின் வழி. அரபு வழி நம் வழியல்ல.//

ஒரு நாட்டின் எல்லைகளை வகுத்துக் கொண்டது நிர்வாக வசதிக்காகவே! இந்த உலகில் தோன்றிய முதல் மனிதனிலிருந்து பல்கிப் பெருகியவர்களே நாம் அனைவரும். எனவே அரபி, நீக்ரோ, திராவிடன், ஆரியன் என்ற பாகுபாடுகளுக்கெல்லாம் நான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நல்லவைகள் எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்வேன்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.