Followers

Tuesday, June 06, 2006

ஜிஹாத் - புனிதப் போர் ஓர் விளக்கம்!

ஜிஹாத் - புனிதப் போர் ஓர் விளக்கம்!

இந்த ஜிஹாத் என்ற பதம் ஹிந்துத்துவ வாதிகளால் தவறான பொருள் கொடுத்து பரப்பப்படுகிறது. முஸ்லிம்களில் கூட சிலர் ஜிஹாதை தவறாக பொருள் கொள்கிறார்கள். ஜிஹாத் என்பது புனிதப் போர் என்றும் அப்பாவி பொது மக்களை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் ஜிஹாதிகள் என்றும் பொய்யான பிரச்சாரம் நடந்து வருகிறது.

ஜிஹாத் என்ற அரபி வார்த்தை ஜஹாதா என்ற பதத்திலிருந்து வந்தது. ஜஹாதா என்றால் அரபியில் போராட்டம் என்ற பொருள் வரும். உதாரணத்திற்கு ஒரு மாணவன் பரீட்சையில் தேற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடினால் அது கல்வியின் மீது அந்த மாணவன் தொடுக்கும் ஜிஹாத். அதே போல் தவறான எண்ணங்களிலிருந்து விடுபட அவன் தன்னுடைய மனத்தோடு நடத்தும் போராட்டமும் ஒரு வகை ஜிஹாதே!

முஸ்லிம்களிலேயே பலர் ஜிஹாத் என்றால் புனிதப் போர் என்று அர்த்தம் கொள்கிறார்கள். புனிதப் போர் என்ற வார்த்தைக்கு நேரடி அரபி பதம் "ஹரபுன் முகத்தஸா". இந்த வார்த்தை குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த இடத்திலும் பயன் படுத்தப் படவில்லை.பிறகு எப்படி "புனிதப் போர்" என்ற வார்த்தை முஸ்லிம்களிடம் பிரபல்யமானது?

மதத்தின் பெயரால் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை பல ஆயிரக்கணக்கில் கொன்று அதற்கு "சிலுவைப் போர்" என்ற பெயரையும் இட்டனர். அவர்களை எதிர்ப்பதற்காக முஸ்லிம்கள் தரப்பில் படை திரட்டும் போது "புனிதப் போர்" என்ற பெயரிடப்பட்டது. அன்று ஆரம்பித்த இந்த "புனிதப் போர்" என்ற வார்த்தை இன்று வரை முஸ்லிம்களிடத்தில் நிலை பெற்று விட்டது. எனவே இனிமெலாவது ஜிஹாத் என்ற வார்த்தையை சரியான பொருளில் விளங்க முயற்ச்சிப்போம்.

இப்படி நாம் தீமையை எதிர்த்து போரிடும் போது நம்மை அழிக்க வரும் எதிரிகளையும் நாம் எதிர்க்க வேண்டி வரும். தன் வீட்டையும் தன் மனைவி மக்களையும் காப்பாற்றும் பொருட்டு ஒருவன் போராடினால் அதுவும் ஒரு வகை ஜிஹாதாகும். பத்திரிக்கையாளர் அருண்சோரி குர்ஆனின் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டு இது இந்தியாவில் உள்ள இந்துக்களைத்தான் சொல்கிறது என்று தவறான விளக்கம் அளித்திருந்தார்.

"அந்த இணை கற்ப்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்!"

குர்ஆன் 9 : 5

மேற்கண்ட வசனத்தைத்தான் அருண்சோரி எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வசனம் எப்போது இறங்கப் பட்டது அந்த சூழ்நிலை என்ன என்று தெரியாமல் மேலோட்டமாக பார்த்தால் எவருக்குமே வித்தியாசமாகவே தெரியும்.

முகமது நபியும் அவரது தோழர்களும் வீடு வாசல் சொத்து சுகங்கள் அனைத்தையும் பறி கொடுத்து விட்டு மக்காவை விட்டு வெளியேற்றப் படுகின்றனர். அவர்கள் செய்த ஒரே குற்றம் இஸ்லாத்தை அந்த மக்களுக்கு எத்தி வைத்தது. இவர்கள் அனைவரும் மதினாவில் சென்று குடியேறுகின்றார்கள். அங்கு இஸ்லாத்துக்கு வரவேற்பு கிடைக்கிறது. மதினா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். முகமது நபி அங்கு ஒரு இஸ்லாமிய அரசையும் உருவாக்குகிறார்.

மக்காவில் எஞ்சியிருந்த ஒரு சில முஸ்லிம்களும் காபிர்களால் (இணை வைப்பவர்களால்) துன்புறுத்தப் படுகின்றனர். மதினாவாசிகளை அழிக்க மக்காவாசிகள் படை திரட்டிக் கொண்டு வருகிறார்கள். இந்த நேரத்தில் போர் செய்யவில்லை என்றால் மதினா முற்றிலுமாக அழிக்கப் படும். இஸ்லாத்திற்கும் பின்னடைவு ஏற்படும். இந்த நேரத்தில் தான் முஸ்லிம்களின் மீது போரை இறைவன் கடமையாக்குகிறான்.

நம்மை ஏற்கெனவே அழித்த மேலும் தற்போது இஸ்லாமியர்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்குடன் ஒரு படை வந்து கொண்டிருக்கிறது. தற்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும். தங்களை தற்காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்த வேண்டும். எதிரிகளை போர்க களத்தில் கொல்ல வேண்டும். சிறை பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் தான் மேலே அருண் ஷோரி சுட்டிக் காட்டிய வசனம் வருகிறது.

"அந்த இணை கற்ப்பிப்போரை கண்ட இடத்தில் கொல்லுங்கள்.அவர்களைப் பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள்.ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காக காத்திருங்கள்.அவர்கள் திருந்திக் கொண்டு தொழுகையை நிலை நாட்டி ஏழை வரியையும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். இறைவன் மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.

குர்ஆன் - 9 : 5

இது போன்ற ஒரு சூழ்நிலையில் யாரும் எடுக்கக் கூடிய ஒரு நிலைப் பாட்டைத்தான் குர்ஆனும் முஸ்லிம்களுக்கு கட்டளையாக இடுகிறது. இனி போர் சம்பந்தமாக வரும் வேறு வசனங்களையும் பார்ப்போம்.

"தமது உடன்படிக்ககைளை முறித்து இத்தூதரை (முகம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் யுத்தத்தைத் துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா?" -குர்ஆன் 9 :13

உடன்படிக்ககைளையும் முறித்து அவர்களாகவே போரைத் துவக்கியுள்ள நிலையில் முஸ்லிம்களை போர்டச் சொல்லி குர்ஆன் கட்டளை இடுகிறது.

"உங்களிடம் போருக்கு வருவோருடன் இறைவனின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! இறைவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்" - குர்ஆன் 2 :190

போரில் வரம்பு மீறக் கூடாது என்று முஸ்லிம்களுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

"எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப் பட்டனர் மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திரா விட்டால் மடங்களும் ஆலயங்களும் வழிபாட்டுத் தலங்களும் இறைவனின் பெயர் அதிகமாக துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டிருக்கும்." - குர்ஆன் 22 :40

இஸ்லாத்தை ஏற்ற ஒரே காரணத்துக்காக வீட்டை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றுகின்றனர். அந்த அநியாயக் காரர்களை எதிர்க்க சொல்கிறது குர்ஆன். அடுத்து பள்ளிவாசல்களும் கோவில்களும் சர்ச்களும் பாதுகாப்போடு இருக்க பலப் பிரயோகமும் அவசியம் என்று சுட்டிக் காட்டப் படுகிறது.

"போரிலிருந்து விலகிக் கொள்வார்களானால் இறைவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன்:" குர்ஆன் - 2 :192

போரிலிருந்து விலகிக் கொண்டவர்களை துன்புறுத்தக் கூடாது என்றும் இதிலிருந்து விளங்குகிறது.

'எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொருப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!" என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவினமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக இறைவனின் பாதையில் போரிடாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?" - குர்ஆன் 4 : 75

முதியோர்கள் பெண்கள் சிறுவர் போன்றவர்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப் படக் கூடாது என்பதற்காகவே சில நேரங்களில் முஸ்லிம்களின் மீது போரை கடமையாக்கினான் இறைவன். அதைத்தான் இங்கு சுட்டிக் காட்டப் படுகிறது.

"முகம்மதே! அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! இறைவனையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்: அறிந்தவன்:" - குர்ஆன் 8 : 54

எதிரிகள் சமாதானத்தை விரும்பினால் போரை நிறுத்தி சமாதானத்தின் பக்கம் வர வேண்டும். தேவையற்ற உயிர்ப் பலிகள் தடுக்கப் பட வேண்டும் என்று இந்த வசனத்தில் கட்டளையிடுகிறான்.

"இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்" - குர்ஆன் 2 : 256

"இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுவோர் இறைவனின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பீராக!பின்னர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக!அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்." - குர்ஆன் 9 : 6

"உங்கள் மார்க்கம் உங்களுக்கு! என் மார்க்கம் எனக்கு" என முகம்மதே கூறுவிராக" - குர்ஆன் 109 : 6

மேற் கண்ட மூன்று வசனங்களும் கட்டாய மத மாற்றத்தை தடை செய்கின்றன. முஸ்லிம் அல்லாதவர்கள் பாதுகாப்பு கோரினால் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் இதன் மூலம் விளங்குகிறோம்.மத மாற்றத்துக்காக போர்கள் கூடாது என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

'நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்!இல்லையேல் நீங்கள் செய்ததற்காகக் கவலைப் படுவீர்கள்.' -குர்ஆன் 49 :6

இந்த வசனம் மூலம் விளங்குவது நம் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றினாலும் உடன் ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்று விளங்குகிறோம். முதலில் செய்தி உண்மைதானா அல்லது வதந்தியா என்று முதலில் ஆராய வேண்டும். அரசு மூலம் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முயற்ச்சிக்க வேண்டும். இதிலெல்லாம் எந்த பிரயோசனமும் இல்லை என்ற நிலை வரும் போது மட்டும் தான் ஆயுதத்தை நாம் எடுக்கலாம்.

'அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமினறி செய்யாதீர்கள்.' -குர்ஆன் 17 :33

தக்க காரணமின்றி அநியாயமாக அப்பாவிகளைக் கொல்வதை மேற்கண்ட வசனம் தடுக்கிறது.

காபிர்கள் என்று குர்ஆனில் பல இடங்களில் வருகிறதே?

காபிர் என்ற வார்த்தை குப்ர் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. குப்ர் என்ற வார்த்தைக்கு ஏற்க மறுத்தல் என்று தமிழில் பொருள் வரும் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்காத அனைவரும் காபிர்கள் என்று அழைக்கப் படுவர். இது எதும் அவமானகரமான வார்த்தைப் பிரயோகம் ஒன்றும் அல்ல.காபிர் என்ற வார்த்தையை தமிழ்ப் படுத்தினால் இணை வைப்பவர் அதாவது இறைவனுக்கு இணை வைப்பவர் என்ற பொருளில் வரும்.எனவே இதை ஒரு வித்தியாசமாக பார்க்கத் தேவையில்லை. மேலும் பல விபரங்களை அடுத்தப் பதிவில் பார்ப்போம் இறைவன் நாடினால்.

4 comments:

Jafar ali said...

மிக அருமையான விளக்கங்கள்! தொடருங்கள் சகோதரரே!!

வஹ்ஹாபி said...

காஃபிர் என்ற சொல் க-ஃப-ர (மறுத்தான்) என்ற வினைச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

'காஃபிர்' என்றால் மறுத்தவன் என்றுதான் பொருள், இணை வைப்பவன் என்று தமிழில் பொருள் கொள்ள முடியாது. 'அ-ஷ்-ர-க' (இணை கற்பித்தான்) என்ற கடந்த கால வினையிலிருந்து பிறந்த சொல்லே 'முஷ்ரிக்' (இணை கற்பிப்பவன்) என்பதாம்.

வஹ்ஹாபி said...

ஜிஹாது குறித்துச் சுருக்கமாகவிருப்பினும் தேவையான விளக்கம் கொடுத்திருக்கின்றீர்கள்; நன்றி!

ஒரு திருத்தம்: காஃபிர் என்ற சொல் 'க-ஃப-ர' (மறுத்தான்) என்ற வினைச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
உங்களை/நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன் என்பதற்கு 'அக்ஃபுருக்க'.

"காஃபிர் என்றால் இணை வைப்பவன்" என்று நீங்கள் சொல்வதை 'அக்ஃபுருக்க' (நான் மறுக்கிறேன்).
காஃபிருக்கு (இறை)மறுப்பாளன் என்றுதான் பொருள்; இணை வைப்பவன் என்று தமிழில் பொருள் கொள்ள முடியாது.

'அ-ஷ்-ர-க' (இணை கற்பித்தான்) என்ற கடந்த கால வினையிலிருந்து பிறந்த சொல்லே 'முஷ்ரிக்' (இணை கற்பிப்பவன்) என்பதாம். என்றாலும் இறை மறுப்பாளர்கள் இணை கற்பிப்பவராகவும் திகழ்கின்றனர் என்பதை நான் மறுக்கவில்ல (லா அக்ஃபுரு).

முதல்வர் மு.க. அவர்களை வரவேற்பதற்காகச் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரைப் பலவாறு விளித்து மதுரையில் பல வால்போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன. அதிலொன்று "கடவுளே வருக!".

suvanappiriyan said...

Thanks to Mr Wahhabi and Mr Jaffar Ali,

Anbudan

Suvanappiriyan