Followers

Monday, September 08, 2008

காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?

காந்திஜிக்கு சுதந்திர உணர்வை ஊட்டியவர்கள் யார்?

இன்றைக்கு சுதந்திரம் என்ற பெயர் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது மகாத்மா எனும் தேசப்பிதாதான். அந்த மகாத்மாவை தேசப்பிதாவாக மாற்றியவர்கள் யார் என்ற உண்மையை எல்லா வரலாற்றாசிரியர்களும் சாமர்த்தியமாக மறைத்து விட்டனர். ஆனால் மகாத்மா காந்தி தனது சுய சரிதையில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப் பதிவில் பார்ப்போமா!

அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி, அப்துல் கரீம் ஆதம் ஜவேரி ஆகிய இருவரும் சகோதரர்கள். குஜராத்தில் போர்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று பெயர் சொல்லும் அளவுக்கு கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ம் ஆண்டு 'தாதா அப்துல்லாஹ் கம்பெனி' என்ற பெயரில் 50 சரக்கு கப்பல்களையும் 4 பயணிகள் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.

இவர்களின் கம்பெனி அலுவலக வேலைகளை முறையாகச் செய்ய சட்டம் தெரிந்த ஒரு நபரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி அவர்கள் போர்பந்தரில் தனது வீட்டிற்க்கு அருகாமையில் இருந்த சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தி அவர்களை அலுவலகப் பணிக்காக தனது சகோதரர்களுடன் கலந்து ஆலோசித்து 105 பவுண்டு சம்பளத்திற்க்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.

காந்தி என்ற அந்த இளைஞர் தேசப்பிதாவாக உருவாக்க விதை விதைத்த நேரம் இதுதான். 1863ம் ஆண்டு முதன்முறையாக காந்தி வேலையில் சேர்வதற்க்காக தென் ஆப்ரிக்கா பயணம் மேற்க்கொண்டார். அந்தப் பயணத்தில் இவர் ஒரு இந்தியன் என்பதால் பல கொடுமைகளுக்கு ஆளாக்கப் பட்டார். தென் ஆப்ரிக்காவில் உள்ள அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களிடம் பயணத்தைப் பற்றிக் கூறும்போது ' நம் நாட்டிலே நமக்கு சுய மரியாதை இல்லை. அதை வேறு எங்கும் எதிர்பார்க்க முடியாது போலும்' என்றார் காந்தி.

உடனேயே 'நாம் உழைத்து உண்கிறோம். நாம் ஏன் சுய மரியாதையை இழக்க வேண்டும்? நாம் ஏன் நாட்டு மக்களுக்கு சுய மரியாதை கிடைக்க பாடுபடக் கூடாது?' என்ற கேள்விக் கணையைத் தொடுத்து காந்தியின் சுதந்திர உணர்வை தட்டி எழுப்பினர் ஜாவேரி சகோதரர்கள்.

அந்தக் கேள்விதான் காந்தியை தேச விடுதலைப் பற்றிய கவலையை ஏற்படுத்தியது. இதை காந்தி தன் சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பின்பு காலங்கள் உருண்டோட ஒரு நாள் அப்துல்லாஹ் கம்பெனி வழக்கறிஞர் பேக்கர் அவர்களுக்கு உதவியாக டர்பனிலிருந்து பிரிட்டோரியாவிற்க்கு புகை வண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் செல்லும்போது வெள்ளையர்களால் காந்தி அவமானப்படுத்தப் பட்டு மாரிட்ஸ்பார்க் ஸ்டேஷனில் இறக்கிவிடப்பட்டார். அங்குதான் காந்தியின் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

காந்தியும் ஜாவேரி சகோதரர்களும் சுதந்திர இந்தியாவைக் காண 'நேட்டால் இந்தியன் காங்கிரஸ்' (Natal Indian Congress) என்ற அமைப்பை தென் ஆப்ரிக்காவில் நேட்டால் நகரிலுள்ள அவர்களது இல்லத்தில் 1894ம் ஆண்டு மே 22ல் ஆரம்பிக்கிறார்கள்.

அதன் முதல் தலைவராக அப்துல்லாஹ் ஆதம் ஜவேரி அவர்களும் முதல் செயலாளராக காந்தியும் நியமிக்கப்பட்டார்கள். இவ்வமைப்பின் மூலம் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் ஊட்டினார்கள். பின்பு 1896ல் நேட்டால் இந்தியன் காங்கிரஸின் இரண்டாவது தலைவராக அப்துல் கரீம் ஆதம் ஜவேரியும் இரண்டாவது செயலாளராக காந்தியும் நியமிக்கப் பட்டார்கள்.

பின்பு காந்தி தனது உறவினர்களைப் பார்ப்பதற்க்காக தாயகம் திரும்பினார்.1897ல் மீண்டும் இரண்டாவது முறையாக தென் ஆப்ரிக்கா சென்றார். தனது குடும்பத்துடன் எஸ்.எஸ். சூர்லேண்ட் என்ற தாதா அப்துல்லாஹ் கம்பெனியின் பயணக்கப்பலில் இலவசமாக பயணம் செய்தார். எஸ்.எஸ்.நாத்ரி என்ற இன்னொரு கப்பலும் சென்றது. மொத்தமாக 800 பயணிகள் பயணமானார்கள்.

இந்த பயணம் வைர வரிகளால் பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்தப் பயணத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் இந்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் துறைமுகத்திலிருந்து இந்தியர்கள் இறங்க அனுமதி வழங்கவில்லை.

இந்த தகவல் அறிந்த ஜவேரி சகோதரர்கள் இந்தியர்களின் சுதந்திர உணர்வுக்காக பிரிட்டிஷாரை கடுமையாக எதிர்த்தார்கள். ஜவேரி சகோதரர்களின் கடும் எதிர்ப்பைக் கண்டு கலங்கிய பிரிட்டிஷார் 23 நாட்கள் கழித்து இந்தியர்கள் அந்த துறைமுகத்தில் இறங்க அனுமதித்தனர்.

இது நேட்டால் இந்திய காங்கிரஸின் முதல் வெற்றி என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவம் மறைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தாதா அப்துல்லா கம்பெனி பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து நேட்டால் இந்தியன் காங்கிரஸ் சுதந்திர உணர்வை மக்கள் மத்தியில் பரப்ப ஆரம்பித்தது. சுதந்திர வேட்கையைத் தூண்டும் ஆணிவேராக இருந்த ஜாவேரி சகோதரர்களின் கடல் வாணிபத்தை வீழ்த்த திட்டம் தீட்டினர் பிரிட்டிஷார்.

அதன் விளைவாக அவர்களின் நான்கு பயணிகள் கப்பல்களும் பல துறைமுகங்களில் நின்ற நிலையிலேயே மூழ்கடிக்கப்பட்டன. இன்றைய மதிப்பின்படி கிட்டத்தட்ட 150 கோடி தொகையை ஜாவேரி சகோதரர்கள் இந்திய விடுதலைக்காக இழந்தனர். மூழ்கடிக்கப்பட்ட 4 பயணிகள் கப்பலில் ஒன்று எஸ்.எஸ். கேத்திவ் கப்பல் குஜராத் மாநிலம் போர்பந்தர் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் இருக்கிறது.
நன்றி : விடியல் வெள்ளி

நாட்டு சுதந்திரத்திற்க்காக தங்கள் நிறுவனத்தையும் பணம் பொருள் அனைத்தையும் இழந்த இந்த ஜாவேரி சகோதரர்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஒருக்கால் இவர்கள் இந்து மதத்தில் அதுவும் உயர் சாதியில் பிறந்திருந்தால் இன்று நமக்கெல்லாம் அறியப்பட்டவர்களாக ஆகியிருப்பார்கள்.

உண்மைதானே!

1 comment:

Dr.Anburaj said...


நல்ல தகவல்.முஸ்லீம்கள் சிலா் பாக்கிஸ்தான் பிாிவினை செய்து எல்லாவற்றையும் பாழ்படுத்தி விட்டாா்கள்.