Followers

Saturday, October 11, 2008

கிராமத்தை காலி செய்த பொதுமக்கள்!


கிராமத்தை காலி செய்த பொதுமக்கள்


தேவதானப்பட்டி : தேனி மாவட்டம், மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையாசாமி கோயில் நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் தருமாறு கேட்டு அம்மாபட்டி தெரு பொதுமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து 2 கி.மீ., தூரம் உள்ள பாலூத்து கரட்டுப்பகுதியில் தங்கியுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா, மேல்மங்கலம் பட்டாளம்மன் முத்தையாசாமி கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் மூன்று நாள் திருவிழா நடந்து வருகிறது. கீழத்தெரு சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கோயில் நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அம்மாபட்டி தெருவை சேர்ந்த மக்களுக்கு கோயில் நிர்வாக கமிட்டியில் பிரதிநிதித்துவம் தர வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். இப்பிரச்னை தொடர்பாக இருதரப்பினரிடையே 1997ம் ஆண்டு கலவரம் ஏற்பட்டது. 40 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இம்மாதம் 13 முதல் 15ம் தேதி வரை கோயில் திருவிழா நடக்க உள்ளது.

திருவிழா துவங்க இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், கோயில் நிர்வாகத்தில் சம அளவு பிரதிநிதித்துவம் தரும் வரை ஊருக்குள் வரமாட்டோம் எனக்கூறி, அம்மாபட்டி தெரு மக்கள் 1500க்கும் மேற்பட்டோர் தங்களின் வீடுகளை காலி செய்து விட்டு ஆடு, மாடுகளையும் உடன் ஓட்டிக் கொண்டு, இரண்டு கி.மீ.,. தூரம் உள்ள பால்ஊத்து கரட்டுப்பகுதிக்கு சென்று விட்டனர். பெரியகுளம் தாசில்தார் ஷேக் அப்துல்லா சமரசம் பேச வந்தார். மக்கள் பேச மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். பெரியகுளம் ஆர்.டி.ஓ., சுப்பிரமணி, தாசில்தார் ஷேக் அப்துல்லா, தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பி விட்டனர்.

அம்மாபட்டி தெரு மக்கள் கருத்து:

எம்.ராமு, அம்மாபட்டி தெரு சமுதாய தலைவர்: பட்டாளம்மன் முத்தையாசாமி கோயில் கிராம கோயிலாகும். இதில் தனிப்பட்ட ஒரு சமுதாயத்தினர் எப்படி உரிமை கொண்டாட முடியும். எங்களது உரிமை பிரச்னையில் முடிவு ஏற்படும் வரை ஊருக்குள் வரப்போவதில்லை.

கே.சங்கரன்: திருவிழா நடக்கும் மூன்று நாட்களும் அம்மாபட்டி, கீழத்தெருவை சேர்ந்த 9 சமுதாயத்தினர் அவரவர் பகுதிகளில் விழா நடத்துவோம். கடந்த 1996ம் ஆண்டு கோயிலை நிர்வகிக்க அமைத்த கமிட்டியில் நாங்கள் ஏமாற்றப்பட்டு ஐந்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் மட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோயில் கீழத்தெருவிற்குள் இருப்பதாக பொய்யான தகவலை அளித்துள்ளனர்.

என்.முத்து, சமுதாய பொருளாளர்: பல ஆண்டுகளாக கோயிலுக்கு வர்ணம் பூசி வந்தோம். அந்த உரிமையையும் பறித்து விட்டனர். தற்போதுள்ள கோயில் நிர்வாக கமிட்டியை கலைத்து, கிராமத்திலுள்ள அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் புதிய கமிட்டி அமைக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான நகைகள் அனைத்தும் பதுக்கப்பட்டுள்ளன. சாமிக்கு அலங்காரம் செய்வதில்லை.

எஸ்.ராசு: கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பூஜாரியாக இருந்து வருகின்றனர். சுப்பிரமணியஅய்யர் என்பவரின் நிர்வாகத்தில் கோயில் பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் கீழத்தெருவை சேர்ந்தவர்கள் பூஜாரி மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோயில் நிர்வாகத்திற்கு ஐந்துபேர் கொண்ட கமிட்டி அமைத்தது எங்களுக்கு தெரியாது. இப்பிரச்னையில் தீர்வு ஏற்படும் வரை திருவிழா நடத்தக்கூடாது. கோயிலில் எங்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும், அல்லது அரசு ஏற்று நிர்வகிக்க வேண்டும்.

கருப்பு கொடி ஏற்றி வெளியேறிய மக்கள் : அம்மாப்பட்டி தெருவை சேர்ந்த பொதுமக்கள் குழந்தைகள், கால்நடைகளுடன் காலை 8 மணியிலிருந்து வீடுகளை விட்டு வெளியேற துவங்கினர். வீடுகளில் கருப்பு கொடியேற்றி வைத்திருந்தனர். ஆண்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். இவர்களுடன் பேச சென்ற தாசில்தார் ஷேக்அப்துலை "கெரோ' செய்து திருப்பி அனுப்பினர். ஆர்.டி.ஓ., சுப்பிரமணியன், ஊராட்சி தலைவர் மலைச்சாமி, போலீசாரை அழைத்துக்கொண்டு மீண்டும் தாசில்தார் பேச்சு நடத்த சென்றார். ஊராட்சி தலைவரை பார்த்த மக்கள் ஆவேசம் அடைந்ததால் அவர் போலீஸ் வாகனத்திலேயே உட்கார வைக்கப்பட்டார். கிராமத்தை விட்டு வெளியேறி நடந்து சென்று கொண்டிருந்தபோது ராஜம் என்ற பெண் மயங்கி விழுந்தார். கிராம மக்கள் தங்கியிருக்கும் இடத்தில் சிறிய அளவில் மட்டும் பந்தல் போடப்பட்டுள்ளது.

பத்திரிக்கைச் செய்தி
11-10-2008

மேலே உள்ள பத்திரிக்கை செய்தியைப் பார்த்து ஆச்சரியமுற்றேன். கணிணி, இணையம், பங்கு சந்தை, அமெரிக்கா சீனாவுக்கு மாற்று என்றெல்லாம் அடிஎடுத்து வைக்கும் நமது நாட்டில் இப்படியும் சில சம்பவங்கள். சாதிப் பற்று நம் நாட்டில் அனைத்து மக்களிடத்திலும் புரையோடிப் போயுள்ளது. எத்தனை பெரியார்கள் அவதாரம் எடுத்தாலும் நிலைமை என்னமோ தொடங்கிய இடத்திலேயேதான் உள்ளது.

இந்துக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் காட்ட மட்டும் இந்த மக்கள் இந்து மதத்துக்கு வேண்டும். இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் தாக்குவதற்கு மட்டும் இந்த அப்பாவிகள் வேண்டும். அவர்களின் வேலை முடிந்தவுடன் 'கோவிலில் உனக்கு இடமில்லை' என்று விரட்டும் இந்த போக்கு என்று மாறுமோ அன்றுதான் நம் நாடு உண்மையான சுதந்திரத்தை நுகர முடியும்.

இவர்கள் என்ன சொத்தில் பங்கு கேட்கிறார்களா? தான் பின் பற்றும் ஒரு மதத்தின் தெய்வத்தை தரிசிக்க அனுமதி மறுக்கப்படுவது நமக்கு கேவலம் இல்லையா? இதை எல்லாம் பொறுக்காமல் ஒருவன் மதம் மாறினால் அங்கும் அவனுக்கு இந்துத்துவவாதிகளால் பிரச்னை.

இந்த நேரத்தில் என் முன்னோர்களை நினைத்துப் பார்க்கிறேன். 'காசுக்காக மதம் மாறுகிறான்' 'தாய் மதத்தை விட்டு அரபு நாட்டு மதத்தை தழுவுகிறான்' என்ற நக்கல் கேலிகளை எல்லாம் பொருட்படுத்தாது இந்த அவலத்திலிருந்து நீங்க சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்தார்களே! அதற்க்காக என் முன்னோர்களை வாழ்த்துகிறேன்.

என் முன்னோர்கள் இந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் இன்று நான் ஏதாவது ஒரு சாதி சங்கத்தில் ஐக்கியமாகி இருப்பேன். அல்லது மேல் சாதியினரை எல்லாவற்றிற்க்கும் காரணமாக்கி பதிவுகள் போட்டுக் கொண்டிருப்பேன். இதற்க்கெல்லாம் அவசியம் இல்லாமல் ஆக்கிய என் முன்னோர்களை இன்னொரு முறை வாழ்த்துகிறேன்.

இது போன்ற ஒரு முடிவை எடுக்க என் முன்னோர்களின் மனத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய எல்லாம் வல்ல அந்த ஏக இறைவனையும் இந்த நேரத்தில் வாழ்த்தி வணங்குகிறேன்.


'இறைவனின் ஆலயங்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து அவற்றை பாழாக்க முயல்பவனைவிட பெரும் அநீதி இழைத்தவன் யார்?'
-குர்ஆன் 2:114














5 comments:

Anonymous said...

பின்னே நின்று இயக்கும் சூத்ரதாரி யாரோ?

Unknown said...

அந்த எம் முன்னோர்கள் வாழ்த்துக்குரியவர்கள்.
அவர்களின் மறுமை வெற்றிக்காக இறைவனை துதிக்கிறேன்.

suvanappiriyan said...

//பின்னே நின்று இயக்கும் சூத்ரதாரி யாரோ?//

வேறு யாருங்க! உங்களையும் என்னையும் படைத்து பரிபாலிக்கும் அந்த ஏக இறைவன்தான்.

suvanappiriyan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சுல்தான்.

Anonymous said...

ஏன் இஸ்லாமில் ஜாதி இல்லையா? என்ன பெயர் வேறு அம்புட்டுதான்!