Followers

Tuesday, October 21, 2008

இலங்கை எனது பார்வையில்!

ஒரு முறை சவுதியா விமானம் சென்னையில் புயல் காரணமாக இறங்க முடியாமல் கொழும்பு விமான நிலையத்தில் இறக்கும் நிர்பந்தத்திற்கு உள்ளானது. அப்போது அந்த குட்டித் தீவை மேலிருந்து பார்க்கும் பாக்கியம் கிட்டியது. என்ன அழகிய இயற்கை வளம் கொஞ்சும் நாடு! எங்கு திரும்பினாலும் பசுமை. இன்று அந்த நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளோ ஏராளம்.

என் தாத்தாவும் தொழில் நிமித்தமாக அடிக்கடி கொழும்பு சென்று வந்ததையும் அந்த நாட்டைப் பற்றியும் உயர்வாக என்னிடம் என் சிறு வயதில் சிலாகித்துக் கூறுவார். என் சிறு வயதில் எனது உற்ற தோழன் இலங்கை வானொலி என்றால் மிகையாகாது. கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், புவனலோஜினி துரைராஜசிங்கம், போன்றோரின் குரல்கள் இன்றும் என் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த அமைதியான நாட்கள் மீண்டும் எப்போது வரும்?

நேற்று தொலைக்காட்சியில் தமிழ் சிறுவர் சிறுமியர் சுமார் 10 அல்லது 12 வயதிருக்கும்: பள்ளி யூனிஃபார்மோடு ஸ்ரீலங்கா படையின் வான் தாக்குதலுக்கு பயந்து பதுங்கு குழியில் கண்ணீரோடு அமர்ந்திருந்தனர். இந்தக் காட்சியைப் பார்த்து மனதை என்னவோ செய்தது. பொது மக்கள் அங்கும் இங்கும் மரண பயத்தில் ஓடுவதைக் கண்டு மிகுந்த துயருற்றேன்.

பல காலம் தொடர்ந்து வரும் இந்த பிரச்னை முடிவுக்கு வராதா? 'தனி ஈழமே எங்கள் குறிக்கோள்' என்று முழங்கும் விடுதலைப் புலிகள் ஒரு புறம். 'இலங்கை வெளிநாடு நாங்கள் தலையிட முடியாது என்று கூறும் மன் மோகன் சிங்கின் அரசின் மெத்தனம்: சொந்த நாட்டைப் பிரிந்து அகதிகளாக பிரான்சிலும், ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் காலம் தள்ளும் தமிழர்கள் ஒரு புறம்: சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டு அகதி முகாம்களில் வருடக் கணக்கில் காலம் தள்ளும் நடுத்தர வர்க்கத்தினர்: மொழியாலும் இனத்தாலும் ஒன்றுபட்ட முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி என்று பிரச்னை ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே செல்கிறது.

1. தனி ஈழத்தைக் கை விட்டு அதிகார பகிர்வுக்கு ஒத்துக் கொள்ள விடுதலைப் புலிகளை அணுகுதல்.

2. சிங்கள ராணுவத்திற்கும் அதிகார பகிர்வை ஒத்துக் கொள்ளச் செய்தல். இதற்கு ஒத்து வராத பட்சத்தில் இந்தியா போர் தொடுத்து அதிகார பகிர்வுக்கு வழி காணுதல்.

3. மொழியாலும், இனத்தாலும் ஒன்று பட்ட இந்துக்கள், இஸ்லாமியர், கிறித்தவர் அனைவரையும் முந்தய சம்பவங்களை மறந்து ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல்.

போன்ற அவசர கால நடவடிக்கை இன்று இலங்கைக்கு மிக அவசியம். இல்லையென்றால் நம் கண் முன்னே நம் இனம் சிறுக சிறுக சுத்திகரிக்கப் படுவதற்கு நாம் அனைவருமே காரணகர்த்தாக்களாக்கப் படலாம்.

இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

9 comments:

Anonymous said...

தமிழருக்கு சுயாட்சி அதிகாரப் பகிர்வு வழங்கும் அனுமதியை தடை செய்யும் சிங்கள அரசியல் சட்டத்தை மாற்றி பிறகு சுயாட்சி வழங்கும் திட்டம் குறித்து பேச புலிகள் தயாராகவே இருப்பதாக பலதடவைகள் அறிவித்து விட்டார்கள். ஆக உங்கள் எண்ணங்கள் இரண்டாவதிலிருந்து தொடங்க வேண்டியவை.

முஸ்லிம்கள் தொடர்பான புலிகளின் அணுகுமுறைகள் கடந்த காலங்களில் தவறாய் இருந்திருக்கின்றன. மீள்வார்கள்!

ஆ.ஞானசேகரன் said...

சிந்தித்து எழுதப்பட்ட வார்த்தைகள்,.. உலக அரசியல் இலங்கையை அமைதி காண விடாதுபொலதான் தெரிகின்றது. இதற்கு நாமும், நம் சுயநலமாண போக்கும் ஒரு காரணம்..

suvanappiriyan said...

திரு ஞானசேகரன்!

//சிந்தித்து எழுதப்பட்ட வார்த்தைகள்,.. உலக அரசியல் இலங்கையை அமைதி காண விடாதுபொலதான் தெரிகின்றது. இதற்கு நாமும், நம் சுயநலமாண போக்கும் ஒரு காரணம்..//

வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!

suvanappiriyan said...

நண்பர் அனானி!

//தமிழருக்கு சுயாட்சி அதிகாரப் பகிர்வு வழங்கும் அனுமதியை தடை செய்யும் சிங்கள அரசியல் சட்டத்தை மாற்றி பிறகு சுயாட்சி வழங்கும் திட்டம் குறித்து பேச புலிகள் தயாராகவே இருப்பதாக பலதடவைகள் அறிவித்து விட்டார்கள். ஆக உங்கள் எண்ணங்கள் இரண்டாவதிலிருந்து தொடங்க வேண்டியவை.//

இப்போதும் நீங்கள் தமிழீழக் கோரிக்கையைத் தான் ஒரு தீர்வாக முன்வைக்கிறீர்களா? அல்லது ஒரு குறைந்தபட்ச சுயாட்சிகொண்ட நிர்வாக அமைப்பாவது தீர்வாக இருக்கட்டும் என நினைக்கிறீர்களா?

பிரபாகரன்:1977 ம் ஆண்டு காலத்திலிருந்தே எமது மக்கள் தமது அரசியல் அபிலாசைகள் என்னவென்பதை ஒவ்வொரு தேர்தல்போதும் வெளிப்படுத்தியே வந்துள்ளனர். அதுதான் இனச்சிக்கல்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

-நக்கீரன் பேட்டி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Anonymous said...

(அ)நியாயவிலையிலே ஆலோசனை வழங்க ஆயிரம் தமிழகத்துச்சிங்கங்கள் இருக்கின்றீர்கள். இதெல்லாம் தெரியாமலா இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது?
இன்று புதிதாய்ப் பிறந்ததுபோலப் பேசும் உங்களுக்கு என்றைக்கும் காழ்ப்போடு செயற்படும் சோவும் சுசுவும் ராமுமே மேல்.வெறுத்துப் போச்சு. போங்கையா. போய் வரலாற்றைப் படித்துவிட்டு வாருங்கள்.

suvanappiriyan said...

அனானி நண்பரே!

//(அ)நியாயவிலையிலே ஆலோசனை வழங்க ஆயிரம் தமிழகத்துச்சிங்கங்கள் இருக்கின்றீர்கள். இதெல்லாம் தெரியாமலா இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது?
இன்று புதிதாய்ப் பிறந்ததுபோலப் பேசும் உங்களுக்கு என்றைக்கும் காழ்ப்போடு செயற்படும் சோவும் சுசுவும் ராமுமே மேல்.வெறுத்துப் போச்சு. போங்கையா. போய் வரலாற்றைப் படித்துவிட்டு வாருங்கள்.//


போரின் தாக்கம் உங்களை அதிகமாகவே பாதித்துள்ளது. தமிழன் என்ற முறையில் அனுதாபப்படமுடியும்: பொருளாதார உதவி செய்ய முடியும்: போராட்டங்களின் மூலம் எதிர்ப்பைக் காட்ட முடியும்: மத்திய அரசுக்கு தமிழக அரசின் மூலம் அழுத்தம் கொடுக்க முடியும்: மற்றொரு நாட்டில் நடக்கும் ஒரு பிரச்னையில் தமிழன் என்ற முறையில் வேறு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

suvanappiriyan said...

வன்னி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு எடுத்துள்ளது. அகதி முகாம்களில் தங்கியுள்ள தமிழர்களின் சுகாதாரம் இதனால் இன்னும் கெடும். எனவே வாய்ப்புள்ளவர்கள் அங்குள்ள மக்களுக்கு உடனடி அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப முயற்சி எடுக்க வேண்டும். வலைப்பதிவர்கள் கூட இந்த முயற்ச்சியில் இறங்கலாம். என்னால் ஆன உதவிகளையும் செய்யத் தயாராயுள்ளேன்.

Unknown said...

ஈழத் தமிழர் குறித்த உங்கள் கருத்து மிகவும் வரவேற்கத் தகுந்தது.
உலகத் தமிழர் ஒன்று பட்டு ஈழத் தமிழரைக் காத்திடுவோம்.

suvanappiriyan said...

திரு பின்னூட்டம் பெரியசாமி!

இலங்கையின் பிரச்னை முடிவுக்கு எப்பொழுது வருகிறதோ அன்றுதான் தமிழக அரசியலும் ஒரு ஸ்திரத் தன்மைக்கு வரும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!