Followers

Sunday, January 04, 2009

புது வருடமும் மூடப்பழக்கங்களும்!




புது வருடமும் மூடப்பழக்கங்களும்!

ஆங்கில புத்தாண்டு வந்து சென்றும் விட்டது. ஏசு நாதர் எதற்காக அவதரித்தார்? எதனை போதித்தார் என்று சிந்திக்கக் கூட மறந்த நம்மவர்கள் அந்த நாளில் குடியும் கும்மாளமுமாக பொழுதை கழித்து புத்தாண்டை அனுப்பியும் விட்டார்கள். உலகம் முழுவதும் ஏறத்தாழ இதே நிலைதான்.

தற்போது இஸ்லாமியர்களின் புத்தாண்டான முஹர்ரம் மாதம் பிறந்து நான்கைந்து நாட்களாகிறது. புத்தாண்டின் முஹர்ரம் முதல் தேதியை முஸ்லிம்கள் யாரும் விமரிசையாக கொண்டாடுவதில்லை. முஹமது நபி கொண்டாட சொல்லி கட்டளையும் இடவில்லை.

ஆனால் முஹர்ரம் 10 ஆம் நாள் ஷியா முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஆசூரா தினம் என்றும் முஹமது நபியின் பேரர் ஹீசைன் கொல்லப்பட்ட தினத்தில் நாங்கள் துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்ற பெயரில் விழா எடுப்பதையும் பார்க்கிறோம். இது போன்று உடலை வறுத்திக் கொண்டு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் இஸ்லாத்துக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை. ஆனால் இஸ்லாத்தின் பெயரால்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் உலகெங்கும் அரங்கேற்றப்படுகிறது.

ஒருவர் இறந்தால் என்றால் அவருக்காக மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்க இஸ்லாம் கட்டளை இடுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகு வழமைக்கு திரும்பி விட வேண்டும். ஆனால் இவர்களோ வருடா வருடம் உடலை கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட தங்கள் வருத்தத்தை தெரிவிக்கும் பழக்கத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? எத்தனையோ அறிவு சார்ந்த இஸ்லாமிய நிகழ்ச்சிகள் உலகெங்கும் வருடா வருடம் நடந்து கொண்டிருக்க பிபிசி யும் சிஎன்என்னும் இந்த நிகழ்ச்சியை மட்டும் பெரிதாக்கி காட்டுவதிலிருந்தே இந்த நிகழ்ச்சியின் போலித்தனம் தெரிய வரும். இஸ்லாம் என்றால் முஹர்ரம் பண்டிகைதான் என்று உலக மக்கள் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதற்கு இவ்வளவு முக்கியத்துவமும் கொடுக்கிறார்கள்.

அடுத்து இதே முஹர்ரம் 10 ஆம் நாள் மற்றொரு நல்ல காரியமும் நடந்தேறியுள்ளது. இறைத்தூதர் மோசே (மூஸா) கொடுங்கோல் அரசன் பாரோ (பிர்அவுன்) விடமிருந்து கடல் பிளந்து காப்பாற்றப்பட்ட நாளும் இதே முஹர்ரம் 10 ஆம் நாள்தான். “Ten Commands” படம் பார்த்தவர்கள் இந்த வரலாறை நன்கு விளங்க முடியும்.

முஹர்ரம் 9, 10 ஆகிய இந்த இரண்டு நாட்களில் மோசேயை இறைவன் காப்பாற்றியதற்கு நன்றி கூறும் விதமாக நோன்பு வைக்க சொல்லி முகமது நபி கட்டளை இட்டுள்ளார். இது ஒன்று தான் முஹர்ரம் மாதத்தைப் பற்றிய இஸ்லாம் வைக்கும் வழிபாடு. எனவே இஸ்லாமிய நண்பர்கள் அறியாமைக்கால மூடப்பழக்கமான பஞ்சா எடுப்பது, மாரில் அடித்துக் கொள்வது, தீ மிதிப்பது, உடலைக் கீறிக் கொள்வது போன்ற பழக்கங்களை விட்டொழித்து முஹர்ரம் 9,10 களில் நோன்பிருந்து அந்த ஏக இறைவனை நினைவு கூறுவோமாக!

1 comment:

suvanappiriyan said...

திருப்புவனம் : திருப்புவனம் அருகே மதுவன்திடல் கிராமத்தில் மொகரம் பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் விரதமிருந்து இந்துக்கள் பூக்குழி இறங்கிய மதநல்லிணக்கவிழா நடந்தது. திருப்புவனம் அருகே முதுவன்திடல் கிராமத்தில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. முன்பு இங்கு வசித்த முஸ்லிம்கள் தொழில் விஷயமாக வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்ததால் இந்துக்கள் மட்டுமே உள்ளனர். இக்கிராமத்தினர் ஊர்க்காவல் தெய்வமாக பாத்திமாநாச்சியாரை வணங்கிவருகின்றனர். இங்குள்ள மகளிர் குழு, கபாடிக்குழுக்களுக்கு பாத்திமா நாச்சியார் பெயர் சூட்டி வருகின்றனர். விவசாயம் செழிக்கவும், பெண்கள் திருமண தடை நீங்குதல் போன்ற பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேறுவதாக நம்பிக்கை இருக்கிறது.




முஸ்லிம்களின் மொகரம் பண்டிகையை இங்குள்ள இந்துக்கள் விரதமிருந்து கொண்டாடுகின்றனர். 10 நாட்கள் விரதத்தை முடித்து நேற்று முன்தினம் மாலையில் பூக்குழி விழா பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலில் துவங்கியது. சப்பரத்தை அலங்கரித்து 5 விரல் உருவத்துடன் ஊர்வலம் நடத்தப்பட்டது. வழிநெடுகிலும் இந்துக்கள் முறைப்படி விபூதியும், இஸ்லாம் முறைப்படி சர்க்கரையும் வழங்கப்படுகின்றன. பள்ளி வாசல் முன்பு நள்ளிரவில் சிறுவர் முதல் முதியவர் வரை பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.




அஜ்ரத் காதர்பாட்சா என்பவர் கூறுகையில்," மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தொன்றுதொட்டு பூக்குழி விழா நடந்துவருகிறது. இந்துக்கள் தீமிதித்து வேண்டிக்கொள்கின்றனர்'' என்றார். மலைச்சாமி என்பவர் கூறுகையில்," மூதாதையார் கடைப்பிடித்த நடைமுறைகளை பின்பற்றி விழா நடத்துகிறோம். பூக்குழியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விரதமிருந்து இறங்கி வருகிறோம். மூன்றாம்நாள் கண்மாய்க்கரை வரைசென்று அடக்கம்செய்து அழுதுகொண்டுவருவோம். அதன்பின் பூக்குழியை மூடிவிடுவோம்'' என்றார்.
-Dina Malar