Followers

Friday, February 27, 2009

சூரியனின் செயல்பாடு ஒரு அற்புதம்! குர்ஆனின் விளக்கம்.



'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும். இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.'
-குர்ஆன் 31:29


இந்த வசனம் பூமியில் நடைபெறும் இரவு பகல் இயக்கம் என்பது பகலை இரவில் நுழைப்பதாலும் இரவைப் பகலில் நுழைப்பதாலும் ஏற்படுவதாகும் என்று விளக்குகிறது. இதிலிருந்து இரவு பகல் இயக்கத்தைத் தோற்றுவிப்பது புவி மையக் கோட்பாடு அல்ல என்றும் சூரிய மையக் கோட்பாட்டின் படிதான் இரவு பகல் உண்டாகிறது என்றும் ஒரு அறிவியல் அறிஞரைப் போல் குர்ஆன் பேசுகிறது.

புவி மையக் கோட்பாடு என்பது சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாக கொண்டு சுழல்கின்றன எனும் பிழையான தத்துவமாகும். இதைத்தான் பல அறிஞர்களும் உண்மை என்றும் நம்பி வந்தார்கள். இங்கு சூரியன் பூமியைச் சுற்றுவதாக இருந்தால் இரவு எப்போதும் பகலுக்குப் பிறகு ஓடிக் கொண்டிருக்குமே அன்றி அது எங்குமே நகராமல் நிற்பதில்லை. இரவை நகராமல் நிறுத்த முடியாவிடில் அதற்குள் பகலை எவ்வாறு நுழைக்க முடியும்? அவ்வாறே பகலை நகராமல் நிறுத்த முடியாவிட்டால் பகலுக்குள் இரவை எவ்வாறு நுழைக்க முடியும்? ஒரே ஒரு வழியே உண்டு. பகலை விட இரவை விரட்டினால் பகல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையிலேயே அதற்குள் இரவை நுழைத்து விட முடியும். அப்படிச் செய்தால் இரவானது திரும்பத் திரும்ப பகலுன்னுள் நுழையுமே அன்றி பகல் எப்போதுமே இரவுக்குள் நுழையாது. ஆனால் குர்ஆனோ பகலுக்குள் இரவு நுழைவது போல் இரவுக்குள் பகலும் நுழைவதாகக் கூறுகிறது.

எவ்வளவு துல்லியமாக சிறந்த கவனத்தோடு கையாளப்பட்ட இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். இப்போது சூரியன் பூமியைச் சுற்றி வருவதால் மட்டும் பகலோ இரவோ ஏதேனும் ஒன்று ஏதேனும் ஒன்றுக்குள் நுழைய முடிகிறதா? இல்லவே இல்லை. ஏன்? ஏனெனில் சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகலும் இரவும் ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக சம வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த இரண்டு பொருட்களும் ஒன்றுக்குள் ஒன்று ஒரு போதும் நுழையாது. எனவே பூமி அதன் அச்சில் சுழலும்போது மட்டுமே பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இரவு பகல்கள் நகராமல் ஒரே இடத்தில் கட்டுண்டு நிற்க முடிகிறது.

பூமியைச் சூழ்ந்துள்ள ஆகாயத்தில் இரவு பகல்கள் கட்டுண்டு நிற்கும்போது பூமியின் பகல் பிரதேசம் பூமியின் சுழற்ச்சியால் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் இரவுக்குள் நுழைய முடிகிறது. அதைப் போல மறுபக்கம் பூமியின் மீதுள்ள இரவுப் பிரதேசம் சுழன்று வந்து ஆகாயத்தில் கட்டுண்டு நிற்கும் பகலுக்குள் நுழைய முடிகிறது.

'பகலுக்குள் நுழையும் இரவு! இரவுக்குள் நுழையும் பகல்' எவ்வளவு சிறப்பான அறிவியல் ஞானத்தை திருக் குர்ஆனின் மேற்கண்ட வசனம் மிகச் சாதாரணமாகச் சொல்லி செல்கிறது! படிப்பறிவில்லாத முகமது நபியால் இந்த உண்மைகளை எவ்வாறு சொல்ல முடிந்தது என்று நினைத்து ஆச்சரியப்பட்டுப் போகிறோம்.

நன்றி ஏ.கே.அப்துல் ரஹ்மான்.

1 comment:

Anonymous said...

best post!