இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்ற கேள்வி ஒவ்வொரு மனிதனின் மனதிலும் எழுவது இயல்பே! ஏனெனில் இறைவனை யாரும் பார்த்தது கிடையாது. இறைவனின் பேச்சை நம்மில் யாரும் கேட்டதும் கிடையாது. அப்படி இருக்கையில் இறைவனைப் பற்றிய நம்பிக்கையை நாம் எப்படி வளர்த்துக் கொள்வது.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார்கள்.கிறித்தவர்களிலும் கர்த்தரைப் பற்றிய எண்ணத்தில் தெளிவாகவே இருப்பார்கள். சிலர் ஏசுவையும், பரிசுத்த ஆவியையும் வணங்கலாம். இந்து நண்பர்களில் பலர் ஒரு கடவுளை ஒத்துக் கொண்டாலும், தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக கடவுளாக வழிபடுவார்கள்.
கடவுள் மறுப்பில் இருக்கும் நாத்திகர்களை எடுத்துக் கொள்வோம். இந்த உலகம் நிலையானது என்று கடவுளை மறுப்பவர்கள் கூறுகின்றனர். இந்த உலகம் எப்படி தோன்றியது என்று நாம் வினவினால் 'உலகம் தோன்றவில்லை. அது என்றும் நிரந்தரமாக உள்ளது' என்பார்கள். அதே போல் 'கடவுளும் தோற்றுவிக்கப் படவில்லை. அவன் எக்காலத்திலும் உள்ள நிரந்தரன்' என்று ஆத்திகர்கள் கேட்டால் 'அது எப்படி ஒருவன் தோற்றுவிக்கப்படாமல் இறைவன் தோன்ற முடியும்? என்னால் ஒத்துக் கொள்ள முடியாது' என்பார்கள். உலகம் பற்றிய வாதத்தில் ஒரு நிலை. இறைவன் பற்றிய வாதத்தில் வேறொரு நிலை. மானிடனின் அறிவில் புரிந்து கொள்ள முடியாத எந்த ஒன்றுமே எங்கும் இருக்க முடியாது என்ற தவறான எண்ணமே இதற்க்கெல்லாம் காரணம்.
வார்னர் ஹைசன்பர்க் என்ற அறிவியல் அறிஞர் ஒரு புரட்சிகரமான கோட்பாட்டை 1926-ல் ஒருவாக்கினார். அநிச்சய தத்துவம்(Uncertainity Principle) என்பது அதன் பெயர். அணுவுக்குள் இருக்கும் மின் அணுவான எலக்ட்ரான் எனும் மிகமிக சூட்சுமமான துகள்கள் அணுவின் மையக் கருவைச் சுற்றி ஒளியின் வேகத்தில் சுழல்கின்றன. அத்துகள்களின் ஒரு நேரத்தில் உள்ள வேகம், அந்த நேரத்தில் சுற்றுப் பாதையில் அது இருக்கும் இடம், இவை இரண்டையும் அளக்க முயலும் போது ஏற்படும் விளைவிலிருந்து ஹைசன்பர்க் இக்கோட்பாட்டை உருவாக்கினார்.
இக்கோட்பாட்டிலிருந்து அறிஞர்கள் கண்ட உண்மை என்னவெனில் 'துகளின் இருப்பிடத்தை எவ்வளவு துல்லியமாக நீங்கள் அளக்க முயல்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு துல்லியமற்ற நிலையிலேயே துகளின் வேகத்தை உங்களால் அளக்க முடியும்.' என்ற முடிவுக்கு வந்தனர். துகளின் இருப்பிடத்தையும், அத்துகளின் துல்லியமான வேகத்தையும் நம்மால் துல்லியமாக கண்டறிய முடியாது. எனவே இச் சோதனையிலிருந்து ஹைசன்பர்க் அவர்கள் 'மனிதனின் அறியும் ஆற்றலுக்கு மிக நிச்சயமாக ஒரு எல்லை உண்டு' என்பதை நிரூபித்தார்.
அற்பப் பொருளான அணுவைப் பற்றியே முழுமையாக அறிந்து கொள்ள இயலாதவனாக மனிதனைப் படைத்துள்ளான் இறைவன். அப்படி இருக்கையில் அந்த அணுவையும் படைத்து கோடானு கோடி கோள்களையும், உயிரினங்களையும் படைத்து பரிபாலிக்கும் அந்த இறைவனைப் பற்றியும, அவன் எப்படி உண்டானான் என்பது பற்றிய அறிவும் எனக்கு இருக்க வேண்டும் என்று மனிதன் எப்படி எதிர் பார்க்க முடியும்? இறைவனைப் பற்றி எனக்கு விளங்காதவரை இறைவன் இருக்கிறான் என்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவது உயிர் என்றால் என்னவென்று எனக்கு புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று கூறுவதற்க்கு ஒப்பாகும்.
'முஹம்மதே! உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'உயிர் என்பது எனது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள்.' என்று கூறுவீராக.
-குர்ஆன் 17:85
'ஒவ்வொரு அறிந்தவனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்'
-குர்ஆன் 12:76
நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிய செய்திகளுக்கு குர்ஆன் தெளிவாக விளக்கமளிக்கிறது. ஹைசன்பர்க்கும், அறிவியல் அறிஞர் ஹாக்கிம் அவர்களும் எதை உறுதிப் படுத்துகிறார்களோ, அதை குர்ஆன் உண்மைப் படுத்துகிறது. நமக்கு குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளதால் ஒரு குற்ப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் ஆய்வு செய்ய முடியாது என்பதை இதிலிருந்து விளங்குகிறோம்.
சரி. அப்படி என்றால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை எப்படி நம்புவது? எப்படி உயிர் என்பதை பார்க்காமல் ஒத்துக் கொள்கிறோமோ அது போல் உலகில் உள்ள இறைவனின் அத்தாட்சிகளைப் பார்த்து நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். நம்முடைய பிறப்பையே எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு துளி விந்திலிருந்து ஒரு குழந்தை பிறக்கிறது. தகப்பனின் நிறம்,குரல்,சாயல்,குணம் அனைத்தையும் ஒரு துளி விந்தில் ஜிப் செய்யப்பட்டிருக்கிறதே அதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? 10 நிமிடம் நம்மால் மூச்சு விடாமல் இருக்க முடியவில்லை. ஒன்பது மாதம் வயிற்றுக்குள் உணவும் தந்து, சுவாசிக்கவும் தகுந்த ஏற்ப்பாட்டை உண்டாக்கியது யார்? மனிதன் உண்டாக்கும் பல பொருட்களுக்கும் மூலப் பொருட்கள் உண்டு. அந்த மூலப் பொருட்களை உண்டாக்கியது யார்? பேரண்டத்தில் எத்தனையோ கோள்கள் இருக்க பூமியை மட்டும் மனிதர்கள் வசிப்பதற்கு ஏற்ற இடமாக தேர்ந்தெடுத்தது யார்? இப்படி ஒவ்வொரு அதிசயங்களுக்கும் சூத்திரதாரி யார் என்பதை உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள். விடை தானாக தெரியும்.
தகவல் உதவி:
'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்."