Followers

Sunday, November 02, 2008

வைகோவின் வடிகட்டிய தேசத் துரோகம்!!

விடுதலைப் புலிகளைக் கடுமையாக விமர்சித்து எழுதிய ஹிந்து நாளிதழின் கோவை - ஈரோடு அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆனால் இந்தத் தாக்குதலால் தமிழக முதல்வர் தொடங்கி, எந்தவொரு அரசியல்வாதியும் கண்டனம் செய்யவில்லை.

கருத்துச் சுதந்திரத்தக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கம் நேர்ந்துள்ள அச்சுறுத்தல் இது என்பது ஓர் அபாயம். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுடைய வன்முறையையும் செயல்பாடுகளையும் ந்த மௌன அரசியல்வாதிகள் அங்கீகரிக்கிறார்கள் என்பது மற்றொரு மிகப் பெரிய அபாயம். இந்த மௌன ஆதரவை வைகோ நன்றாக சாதகமாக்கிக் கொண்டிருக்கிறார். தமது பொதுக்கூட்டப் பேச்சில் (அக்டோபர் 21 அன்று) புலிகளுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருக்கிறார். இலங்கை துண்டாடப்படாமல் காக்க இந்தியா எந்த விதத்தில் உதவினாலும் சரி, இந்தியாவே துண்டாடப்படும் அபாயம் ஏற்படும் என்று பிரதமரை எச்சரித்திருக்கிறார்! தமிழ் ஈழம் உருவாக உதவுவதற்கு, தாமே படை திரட்டி, தலைமை தாங்கி நடத்திச் செல்ல முடியும் என்றும் அவர் சவால் விட்டிருப்பது, பகிரங்க புலிகள் ஆதரவுப் பேச்சு மட்டுமல்ல; வடிகட்டிய தேசத் துரோகமும்கூட. ஆனால், இதற்கும் தமிழக முதல்வர் மௌனம் காத்து மறைமுக ஆதரவு தெரிவிப்பார் என்று நம்பலாம்!

தமிழக அரசியல்வாதிகள் நினைப்பதுபோல், பிரபாகரன் தமிழ் ஈழத்தைத் தனி நாடாகப் பெற்று, ஆட்சி புரிய அனுமதிக்கப்பட்டால் விடுதலைப்புலிகளின் அடுத்த குறி தமிழகமாக இராது என்பது என்ன நிச்சயம்? அப்போது இங்கே நிலவக்கூடிய கொடுங்கோன்மையில் யாரும் எதையும் மேடைபோட்டுப் பேசக்கூட முடியாது! புலி ஆதரவுப் புயலில் நிலை தடுமாறும் தமிழக அரசியல்வாதிகள் மத்தியில், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சி.ஞானசேகரன் (காங்கிரஸ்) மட்டுமே தெளிவாகச் சிந்தித்தது. தைரியமாகப் பேசியுள்ளார். ராஜீவ்காந்தி கொலையாளிகளை ஆதரிக்கும் வெறிப் போக்கைத் துணிந்து கண்டனம் செய்துள்ளார். தடை செய்யப்பட்ட இயக்கத்தையும் அதன் தலைவரையும் பகிரங்கமாக ஆதரித்துப் பேசுவோரை, தமிழக முதல்வர் கைது செய்யாதது ஏன்? என்று நியாயம் கேட்டிருக்கிறார். தமிழ் உணர்வு என்பது மொழி, பண்பாடு, உரிமைகள் காப்பதில் இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த உணர்வு வெறியாக திசை மாறி நாட்டைத் துண்டாட அனுமதித்தால், தமிழ்ப் பண்பாடும் தமிழ் உணர்வும் தழைக்காது. விரைவில் அழிந்துதான் போகும். மும்பையில் ராஜ்தாக்கரே விசிறி விட்டிருக்கும் மராத்தியப் பிரிவினை உணர்வும் இத்தகைய விபத்தையே விளைவிக்கும்.
வரலாற்று ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பல்வேறு அழகான இழைகளைக் கொண்டு பின்னப்பட்ட நாடு இந்தியா. அதில் ஒவ்வோர் இழைக்கும் தனித் தன்மையும் குணமும் உண்டு என்பதற்காக, இழையிழையாகப் பிரிக்க ஆரம்பித்தால் நாடும் துவண்டு போகும். அதன் மாநிலங்களும் தனித் தனி இழைகளாகி வலுவிழந்து சுருண்டு தொங்கும்.இந்த விபரீதம் நோக்கிச் செல்லவும் மக்களைத் தூண்டவும் முற்படும் சுயநல அரசியல்வாதிகள் ராஜ் தாக்கரேயானாலும் சரி. வைகோவானாலும் சரி, கைதாகி தண்டனை பெற வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும்.

-கல்கி (02.11.08)

- - - - - - - - - - - - - - - -

6 comments:

suvanappiriyan said...

நம் அரசியல்வாதிகள் எதையாவது பேசி பிரச்னைகளை மேலும்தான் சிக்கலாக்குகிறார்கள். இதில் தன் பங்குக்கு சினிமாக்காரர்கள் வேறு! கல்கியும் தன் பங்குக்கு எதையாவது செய்து குழப்ப வேண்டுமல்லவா! அதைத்தான் மேலே உள்ள கட்டுரை விளக்குகிறது.

இவர்கள் அனைவருமே காடுகளிலும் மழையிலும் அகதி முகாம்களிலும் தினமும் செத்துப் பிழைக்கும் நம் இனத்தவருக்கு நிரந்தர தீர்வை என்றுதான் வழங்குவார்களோ!

Anonymous said...

தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும் தமிழ் நாடும்

தேவன். (கனடா)

இந்த உலகானது பல சுவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. அவையாவன மேற்காகவும், கிழக்காகவும், மொழிவாரியாகவும், வகுப்பு வாரியாகவும், அடிப்படையவாதங்களாகவும், நிற, இன, வாத வேறுபாடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இப்படியாக பல வேறுபாடுகளை கொண்ட உலகமும், பலம் வாய்ந்த பெரும் தேசிய இனங்களும், அடிப்படைவாதங்கள் பேசும் குறுந்தேசிய, இனங்களும் ஒன்றை ஒன்று அடக்குவதாகவும் அல்லது விழுங்குவதாகவும் அமைந்துள்ளன. இத்தகைய சூழலில் நின்றுதான் எதிர்காலத்துக்கான அமைதி சுபீட்சம், மானிட இருப்பு என்பவற்றுக்காக குரல் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கைத் தீவின் இனங்களுக்கிடையேயான இனமுரண்பாடுகளையும் வரலாறுகளையும் ஆராயும் போது, 1977களின் பின்புதான் மிகவும் உச்சநிலையும் கொதிநிலையையும் அடைந்தது எனும் முடிவுக்கு வரக்கூடியதாக உள்ளது. 1977 தமிழருக்கு எதிரான இனக்கலவரம், வடக்கில் பாதுகாப்பு படைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக 1981ல் தமிழ் மக்களின் ஆன்மாவாக கருதப்பட்ட யாழ். நூலகம் எரிப்பைத் தொடர்ந்து, 1983ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் அரசினால் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக் கலவரம். இதனைத் தொடர்ந்து தமிழ் தரப்பில் உருவாகிய எழுச்சிகள், பல்வேறு இயக்கங்கள் என இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையான காலகட்டம் என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து இந்தியாவின் கரிசனை அக்கறை இலங்கைத் தீவின் மீது என்றும் இல்லாதவாறு மிகவும் தீவிரம் பெற்றது. அன்றைய காலகட்டத்தில் இலங்கையில் ஆட்சியில் இருந்த ஜே.ஆர் அரசு மேற்கொண்ட திறந்த பொருளாதாரச் கொள்கையும் மேற்குலக சார்பான அரசியல் கொள்கை முன்னெடுப்புகளும் இந்தியாவுக்கு மிகவும் எரிச்சல் ஊட்டுவனவாகவும் உவர்ப்பாகவும் இருந்தது என்றே கூறலாம். இதன் காரணமாக அக்காலட்டத்தில் இந்தியாவை ஆட்சி செய்த இந்திரா காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரஸ் அரசு, தெற்காசிய பிராந்தியத்திய நாடான இலங்கையில் தனது ஆதிக்கத்தையும், ஆழுமையையும் ஸ்திரமாக பேணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டிறகு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், இந்திய மத்திய நடுவன் அரசு பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சிகள் மற்றும் பலவித உதவிகளையும் வழங்குவதன் மூலம் ஜே.ஆர் அரசை ஆட்டங்காண வைத்து, இந்தியாவிடம் சரணாகதி அடைய வைப்பதற்காக இலங்கைத் தீவின் இனமுரண்பாட்டைக் கையாண்டது. இந்தியாவின் இந்நிலைப்பாடானது தவிர்க்க முடியாததும்கூட. ஏனெனில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின் இலங்கைத் தீவில் ஆட்சி செய்த பெரும்பான்மை அரசுகள் ஒர் உறுதிப்பாடற்ற அரசியல் தலைமைகளை கொண்டுள்ளதால், சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை சரிவர கையாளாதாலும், அனைத்து விடையங்களிலும் இந்தியாவை சார்ந்தே இருக்க வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதுவே தெற்காசிய பிராந்தியத்தின் ப+கோள அரசியல் நலன்களை கொண்ட அரசியல் யதார்த்தமாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் தமிழர் பிரச்சினையும் பார்க்கப்படல் வேண்டும்.

இவற்றினுள் ஒன்றை ஒன்று பிரித்து பார்க்க முடியாது. அதாவது பாலும் நீரும் போல இந்தத் தளத்தில் நின்றுதான் இலங்கைத் தீவில் அமைதியை ஏற்படுத்த முடியும். 1984 ஆண்டில் எதிர்பாராத இந்திராகாந்தியின் படுகொலை என்னும் கொடிய விபத்தின் காரணமாக அரசியலுக்கு அழைத்து வரப்படுகின்றார் ராஜீவ் காந்தி. ஏனெனில் அரசியல் என்பது அவரது விருப்பமான தேர்வாக இருக்கவில்லை. அதனால் அவரது வாழ்வின் முடிவும் கொடிய விபத்தாகவே அமைந்துவிடுகின்றது. இந்த வரிகளை எழுதும்போது எனது உடலும் அதிர்ச்சியில் உறைந்து போகிறது எனது உணர்வுகளே இப்படி இருக்கும் போது பிரிட்டிஸ் காலனித்தவத்தை எதிர்த்து போரிட்ட இந்திய காங்கிரசும், அந்த படு கொலையால் பாதிக்கப்பட்ட 110 கோடி மக்களின் உணர்வுகளையும் என்னால் விபரிக்க முடியாமல் உள்ளது. புலிப் பாசிச கும்பலின் ஊடகங்கள் இன்றுவரை இந்திய எதிர்ப்புவாதத்தை கைவிடாத நிலமையில், புலிகளின் பேச்சாளரான ப. நடேசனின் கோரிக்கைகளான கடந்த காலத்தை மறக்கும் படியும், தங்கள் மீதான தடையை இந்திய அரசு நீக்கும்படியும் கூறி இருக்கிறார். புலிகளின் தலைவரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த கொலையை மறப்பதற்க்கு இது என்ன மாமியார் மருமகள் சண்டையா? இந்த விடையத்தை சர்வதேச இன்டர்போலும், இந்திய உயர் நீதிமன்றமும் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் மூலம் தீர்மானித்துவிட்டன. இந்த நிலையில் பிரபாகரன் சார்பாக ப. நடேசன் சோனியாகாந்தியிடம் கோரிக்கைவிடுவது மிகவும் அபத்தமானது.

எது எப்படி இருப்பினும் ராஜீவ் காந்தியின் விருப்பமற்ற அரசியல் பிரவேசம் அந்தக் காலகட்டத்தில் இந்திய தேசத்திற்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. இளைய தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. இன்று கணனித்துறையில் இந்தியா ஓர் புரட்சிகரமான வளர்ச்சியை எட்டுவதற்கு அடித்தளம் இட்டவர், ராஜீவ் காந்தியே. இவரது வசீகர தோற்றம் துணிவு, போன்ற ஆழுமைகளை அன்றைய நாளேடுகள் பதிவு செய்தன, பாராட்டியும் இருந்தன. ஆனால் இலங்கைப் பிரச்சினையில் இரு தரப்பாலும் (இலங்கை அரசு –புலிகள்) அவருக்கு ஏற்பட்ட அவமானம், வடுக்கள், விபத்துக்கள், கோரமான மரணம் வாழ்வின் முடிவு இவைகள் என்றும் இரத்தக்கறை படிந்த வரலாறுகளாகவே பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மேலும் களங்கமற்ற முகங்கொண்ட ராஜீவ் காந்தியின் கொலையென்பது மறக்கப்படவோ மன்னிக்கப்படவோ முடியாத குற்றமாகவும், அவரைக் கொலைசெய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்னும் குரல்கள் பலமாக எப்போதும் உலக அரங்கில் ஒலித்துக்கொண்டே இருக்கும். புலிகளின் கடந்த கால நூற்றாண்டிற்கும் மேலான பாசிச பொறிமுறைகளை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு ஓர் உண்மை புலப்படும். அது என்னவெனில், புலிகளது பாசிச கட்டுமானங்களையும, செயற்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு நேர்மையான, பலவீனங்களற்ற திறன் உள்ளவர்களை, புலிகள் ஒருபோதும் அணுகுவதில்லை. மாறாக, தங்களை கேள்வி கேட்பவர்களையும் தமக்கு அரசியல் சவாலாக இருக்ககூடியவர்களையும், திறமையானவர்களையும் துரோகம் பட்டம் சூட்டி, சுட்டு அழித்தே வந்துள்ளர்கள்.

ஒரு பழமொழி கூறுகின்றது ‘பணம் அண்ட, பாதாளம் வரையும் பாயும்’என்று. பணம், குற்றவியல், அதிகாரம், துதிபாடுதல், வழிபடுதல், இவை அனைத்துக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. உறுதியற்ற பலவீனமானவர்களையே புலிகள் தங்கள் தேவைகளிற்காக பணத்தால் விலைக்கு வாங்குகிறார்கள். தற்போது தமிழ் நாட்டு அரசியலிலும் பலர் புலிக்கு விலை போகின்றனர். ஆனால் இவையெல்லாம் ஒரு தற்காலிகமான சினிமாக் காட்சிதான். ஏனெனில் இறுதியில் மனிதத்துடன் கூடிய ‘மானுடம் வெல்லும்’என்று வரலாறு கூறுகிறது. இன்று தமிழ் நாட்டில் புலிகளுக்கு ஆதரவாக சலசலப்பொன்று உருவாகியிருக்கின்றது. சாதி அடிப்படையிலான கட்சிகளாலும், இன்றைய திராவிட பிற்போக்குத்தனமான கட்சிகளாலும் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளாலும், இந்திய தேசத்தின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தன்மைக்கும், இறையான்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. இது போன்ற புலிகளுக்கு ஆதரவான அழுத்தங்களையும் அச்சுறுத்தல்களையும் நடுவன் அரசு மிகச் சிறப்பாகவே எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையில், இலங்கைத் தமிழ் இனமும் பிற பல்லின மக்களும் எதிர்பார்புடன் இந்திய தேசத்தை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’என்ற இந்த பழமொழிக்கும் தமிழ் நாட்டு சினிமாக் காரர்களும் நிறையவே தொடர்பு உண்டு என்பார்கள் ஏனெனில் கோடம்பாக்கத்தின் சினிமாத் தொழிற்சாலை வருடத்துக்கு 200 படங்களுக்கு மேல் எடுக்கிறார்கள். இவற்றுள் 95 வீதமான படங்கள் மசாலத்தனமானவை. உலகின் செவ்விய இனமான மூத்த குடி தமிழரின் ஒரு பிரிவினர், அதாவது புலம்பெயர் தமிழர்கள் தமிழ் நாட்டில் ஓடாத பல தரமற்ற படங்களையும் ஓட வைத்து, இசைத் தட்டுக்களையும் விற்பனை செய்து சினிமாக்காரர்களை செழிப்புடன் வாழவைக்கிறார்கள். அத்துடன் நின்றுவிடாது, சினிமா நடிகைகளையும் நடிகர்களையும் வசந்த –கோடை காலங்களில் புலம் பெயர் தேசங்களுக்கு வரவழைத்து, அவர்களின் வாழ்விற்கு செழிப்பூட்டிவருகிறார்கள். இவ்வாறு நிலைமைகள் இருக்கும் போது, தமிழ் நாட்டு சினிமாக் காரர்கள் மட்டும் தங்கள் நன்றிக் கடனை வெளிப்படுத்த வேண்டாமா? தமிழ்நாட்டு சினிமாக் காரர்களிடமும் திராவிட கட்சிகளிடமும் இலங்கைத் தமிழனான நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். முழங்காலுக்கும் தலைக்கும் முடிச்சு போடுவது போல நினைத்து, இலங்கை தமிழர் பிரச்சினையை அணுகாதீர்கள். இந்து, தினமலர், துக்ளக், குமுதம், கல்கி போன்ற பத்திரிகைகள் புலிகளை எதிர்த்து எழுதி வருவதால், அவைகளை பிராமணியப் பத்திரிகைகள் என வர்ணித்து, அதனால்தான் இலங்கைத்தமிழர்களை எதிர்க்கிறார்கள் என்கிறீர்கள். தயவுசெய்து உங்குள்ள பிராமணிய ஆதிக்கத்தையும் இலங்கை தமிழர் பிரச்சினையும் தொடர்புபடுத்தாதீர்கள். (மனுசாத்திரத்தையும், ஆறுமுகநாவலரின் சைவமும் தமிழும், யாழ்ப்பாண வேளாhளர்களின் ஆதிக்க போக்குகளையும் இன்னுமொரு சந்தர்ப்பதில் பார்க்கலாம்) அத்துடன் இருபது ஆயிரம் மாவீரர்களும், புலிகளுக்கும் மட்டும் குரல் கொடுக்காது, புலிகளால் உருவாக்கிய முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், இரண்டு இலட்சத்துக்கு மேற்ப்பட்ட அநாதை சிறுவர்களுக்காகவும், கந்தன் கருணை படுகொலைகக்காகவும், வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்காவும் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைக்காகவும், சிங்கள சகோதரர்களின் கொலைக்காகவும், சகோதரப்படுகொலைக்காகவும், கல்விமான்கள் கொலைக்காகவும் குரல் கொடுங்கள். புலிகள் மாத்திரமல்ல, இலங்கை மக்கள் அனைவருமே உங்கள் தொப்புள் கொடி உறவுதான்.
http://www.thenee.com/

Anonymous said...

/கருத்துச் சுதந்திரத்தக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கம் நேர்ந்துள்ள அச்சுறுத்தல் இது என்பது ஓர் அபாயம்./


பத்திரிகை சுதந்திரமுன்னா எதுங்க. ராஜபக்ஷ இந்து பத்திரிகைக்குமட்டும் ஸ்பெஷல் பேட்டி கொடுக்குறதாங்க? புரொண்ட் லைன் ஆசிரியருக்கு லங்காரத்னா விருதும் ஆசியாவின் சிரந்த பத்திரிகையாளர் விருதும் கொடுப்பதாங்க? இதையெல்லாம் இந்துவோ புரொண்ட்லைனோ சொல்லலீயே பாருங்க. நீங்க ஒரு லெட்டரு இத பத்தி எழுதி பாருங்க. போடுவாங்களாய்யா? எதுங்க பத்திரிகை சுதந்திரம்? ஸ்ரீலங்கா அரசு பத்திரிகையாளரைக் கொடுமைப்படுத்தும் மிக மோசமான நாடுன்னு ஒலகத்தோட பத்திரிகையாளர் கூட்டமைப்பே சொல்லுதேங்க. கல்கி ராஜேந்திரன் பன்னாடை இத பத்தி எழுதுவானாய்யா? துக்ளக், கல்கி, இந்து, தினமலர் இதெல்லாம் மாமன்மச்சான்னு கட்டிக்கின்னு அழுவுர பத்திரிகைங்க சஞ்சிகைங்க. என்னிக்க்காச்சும் காஷ்மீர் பத்தி கிருஷ்ணமூர்த்தி பையன் எழுதுவானாய்யா? அவ்னுக்கு விண்ணும் மண்ணும் நாவலுல வெள்ளைக்காரன் அவனோட நாட்டை காட்டி குட்து இந்தியாவுக்கு ஒதவி பண்ணறத சூப்பரா தியாகம் மாதிரி எழுதுவான். மத்தவன் பண்ணினா, தியாகம், வைகோ ஈழதமிழருக்கா பேசினா துரோகமாய்யா? என்ன எழவு பேசுதீரு நீரு?

அம்மா இந்துவ அடிச்சு வெரட்டினாங்க பாருங்க. அப்போ இந்தியா பூரா என்னத்த எவன் கொளுத்தினான்னு புரொண்ட் லைன்லையே தேடிப்பாருய்யா வெங்காயமுன்னு ராஜேந்திரன்ன்னு சொல்லப்படாதா? அவரு நெஜத்துலேயே நடைமுறை அரசியலு தெரியாத வாண்டுமாமாவா?

கல்கி, துக்ளக், தினமலர், இந்து, புரொண்ட்லைன் இதுவெல்லாம் மயிலாப்பூரு மாமாவுக்கும் திரூவல்லிக்கேனி மடிசாருங்களுக்கும் தீனி போடருதுக்கும் மடசாம்பிராணியா வெச்சிருக்கருதுக்கும் வர்ற பத்திரிகைங்க. நீரு ஏன் ஒம்மோட துட்டை குடுத்து வாங்கி அழுவுரீரு?

Anonymous said...

இலங்கை இறையாண்மை ஒரு புறம் இருக்கட்டும்.. அணு ஒப்பந்த்தால
இந்திய இறையாண்மையே கேள்விக் குறியாயிட்டுன்னு ஒரு கம்யூனிஸ்டு தலைவர்
சொல்றாரே.. அதுக்கு என்ன சொல்றிங்கோ.. சாரே ....

suvanappiriyan said...

திரு தேவன்!

//இன்று கணனித்துறையில் இந்தியா ஓர் புரட்சிகரமான வளர்ச்சியை எட்டுவதற்கு அடித்தளம் இட்டவர், ராஜீவ் காந்தியே. இவரது வசீகர தோற்றம் துணிவு, போன்ற ஆழுமைகளை அன்றைய நாளேடுகள் பதிவு செய்தன, பாராட்டியும் இருந்தன. ஆனால் இலங்கைப் பிரச்சினையில் இரு தரப்பாலும் (இலங்கை அரசு –புலிகள்) அவருக்கு ஏற்பட்ட அவமானம், வடுக்கள், விபத்துக்கள், கோரமான மரணம் வாழ்வின் முடிவு இவைகள் என்றும் இரத்தக்கறை படிந்த வரலாறுகளாகவே பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.//

//‘சோழியன் குடும்பி சும்மா ஆடாது’என்ற இந்த பழமொழிக்கும் தமிழ் நாட்டு சினிமாக் காரர்களும் நிறையவே தொடர்பு உண்டு என்பார்கள் ஏனெனில் கோடம்பாக்கத்தின் சினிமாத் தொழிற்சாலை வருடத்துக்கு 200 படங்களுக்கு மேல் எடுக்கிறார்கள்.//

//(மனுசாத்திரத்தையும், ஆறுமுகநாவலரின் சைவமும் தமிழும், யாழ்ப்பாண வேளாhளர்களின் ஆதிக்க போக்குகளையும் இன்னுமொரு சந்தர்ப்பதில் பார்க்கலாம்) அத்துடன் இருபது ஆயிரம் மாவீரர்களும், புலிகளுக்கும் மட்டும் குரல் கொடுக்காது, புலிகளால் உருவாக்கிய முப்பது ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகளுக்கும், இரண்டு இலட்சத்துக்கு மேற்ப்பட்ட அநாதை சிறுவர்களுக்காகவும், கந்தன் கருணை படுகொலைகக்காகவும், வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களுக்காவும் காத்தான்குடி பள்ளிவாசல் கொலைக்காகவும், சிங்கள சகோதரர்களின் கொலைக்காகவும், சகோதரப்படுகொலைக்காகவும், கல்விமான்கள் கொலைக்காகவும் குரல் கொடுங்கள். புலிகள் மாத்திரமல்ல, இலங்கை மக்கள் அனைவருமே உங்கள் தொப்புள் கொடி உறவுதான்.//

உங்களின் பல கருத்துக்களோடு நான் ஒத்துப் போகிறேன். ராஜீவ் காந்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் தலைமையிலேயே ஈழத் தமிழருக்கு ஒரு நிரந்தர தீர்வைக் கண்டிருக்கலாம். அதையும் கெடுத்தார்கள். இன்னும் எத்தனை உயிர்களை எடுக்க இருக்கிறார்களோ! அந்த இறைவனுக்கே வெளிச்சம்.

suvanappiriyan said...

என் மனத்தைத் தொட்ட ஒரு அன்பரின் பின்னூட்டம்.

//நல்ல பதிவு. சகோதரர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பரிவு வெளிப்பட்டிருக்கிறது. சிறு வயதிலிருந்தே நானும் இலங்கை பிரச்சினை பற்றி படித்தும் கேட்டும் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம், அடடா புலிகள் நெருங்கி விட்டார்கள். ஈழம் பிறந்து விடும்..பிரச்சினை ஓய்ந்து விடும் என்று நம்பியிருக்கிறேன். ஆனால் பாருங்கள் ஆண்டுகள் 20-க்கும் மேல் கடந்து விட்டன...இன்னும் அதே சடலங்கள், புலம் பெயரும் மக்கள். எங்கே தவறு நடக்கிறது? தனி ஈழ ஆதரவாளர் என்ற முறையிலே எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்தால் மீண்டும் மாலினி பார்த்தசாரதிகள் இதே போல் எழுதுவதை தவிர்க்கலாம்.

1. தனி நாடாக பிரித்து கொடுத்ததாகவே வைத்துக் கொள்வோம். ஈழம் தனித்து இயங்கும் வல்லமை படைத்ததாக இருக்குமா? பொருளாதார ரீதியாக என்னென்ன வளங்கள் கொண்டதாக இருக்கும்? தனி நாடாக பிரித்துக் கொடுத்த நிம்மதியில் நீங்களும் நானும் போய் விடுவோம்..ஆனால் ஈழத்தின் எதிர்காலம் எப்படிப் பட்டதாக இருக்கும்? மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நமக்கே பாதி பட்ஜெட் பாதுகாப்பிற்கு போகிறது. அப்படியென்றால் சரிக்கு சரிபாதி எதிரி நாட்டுடன் எல்லை பகிர்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டின் இறையாண்மைக்காக எவ்வளவு செலவிடுவார்கள்? கொசாவா என்று நீங்கள் பேச்செடுத்தால்..அது இரு வல்லரசுகளின் பனிப்போரின் விளைவு..அதனால் அது ஒரு வல்லரசின் பொருளாதார மற்றும் பாதுகாப்பை பெற வழி இருக்கிறது. ஆனால் இங்கே அப்படி ஏதும் பணக்கார நாடுகள் இல்லை.

2. சுபாஷ் சந்திர போஸ் வன்முறை வழியை கையில் எடுத்த போது, அவர் எந்த வகையிலும் சத்தியாகிரக போராட்டக்காரர்களை அழிக்கவோ அல்லது அவர்கள் வழியில் குறுக்கிடவோ இல்லை. அதனால்தான் அவர் வழியில் அடைய இயலாததை சத்தியாகிரக வழியில் நம்மால் சாதிக்க முடிந்தது. அப்படி ஏன் மாற்று சக்திகளை புலிகள் வளர விடவில்லை? தன் சகோதரர்கள் என்று தெரிந்தும் அவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்திய இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி மாற்றுக் கருத்துக்களுக்கு வழி இருக்கும்? இப்பொழுது குழியில் தள்ளப்பட்டிருக்கும் ஜனநாயகம் அவ்வாறே இருக்கும்.

3. இந்த ஒரு வாரம் தான் பிரச்சினை நடைபெறுகிறதா? இல்லை..இத்தனை நாள் இல்லாத அக்கறை ஏன் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு? தயவு செய்து இவர்களை நம்பி உங்கள் போராட்ட வழிகளை முடிவு செய்ய வேண்டாம். ஓட்டு என்ற ஒன்றிற்காக இவர்கள் நாளைய பேச்சுக்கள் உங்களை காயப்படுத்தலாம். அப்படியென்றால் அடுத்த நாட்டு விவகாரம் என்று சும்மா இருந்து விடுவதா? கட்டாயம் இல்லை. எப்பொழுது அகதிகளாய் இங்கு வர ஆரம்பித்தார்களோ அப்பொழுதே இந்தியாவும் பிரச்சினைக்குள்ளே இழுக்கப்பட்டு விட்டது. அரசு ரீதியாய் இல்லாவிட்டாலும், கட்சி ரீதியாகவாவது ஒரு கமிட்டியை முதல்வர் அமைக்க வேண்டும். அது நேரே இலங்கைக்கு சென்று இரு தரப்புக்கும் பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும்.மேலும் அது அவ்வப்போது நிலைமையை வெளியிட வேண்டும். அப்போதுதான், இது மாதிரி 'ஏன் இந்த திடீர் தமிழர் பாசம்?' போன்ற கேள்விகள் கேட்க படாமல் இருக்கும்.

4. நீங்கள் உங்கள் சகோதரருடன் சிறு வயதில் சண்டை போட்டிருக்கிறீர்களா? உங்கள் பக்கமே நியாயம் இருந்தாலும் உங்கள் மீது அக்கறை கொண்ட உங்கள் தந்தையின் நிலைப்பாடு எத்தகையதாய் இருக்கும்? அவர் சமாதானத்தையே சொல்லியிருப்பார். அவ்வமயம் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் காலப்போக்கில் அப்பிரச்சினையே மறந்து போயிருக்கும். அதை விடுத்து, 'அவன் செய்தது தவறு, அவனுக்கு ஒரு அறை கொடு' என்று அவர் கூறியிருந்தால் உங்களுக்கு அவ்வமயம் பெருத்த சந்தோஷம் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது உங்கள் சகோதரருடன் உங்கள் உறவு எத்தகையதாய் இருந்திருக்கும்?பிரச்சினைக்குள்ளே இருக்கும் இருவரால் கண்டிப்பாக சமாதானம் என்ற உன்னத தீர்வின் மகத்துவம் புரியாமலே இருக்கும். பிரச்சினைக்கு வெளியே இருப்பவர்களால் தான் சமாதானம் என்பதை கொடுக்க முடியும். அதை விடுத்து நாமும் இப்படி கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்பதை ஊக்குவித்தால் யார்தான் சமாதானம் கூற இயலும்?

என்னைப் பொறுத்தவரை, பிரச்சினையை சரியான கோணத்தில் அணுக அங்கு தலைவர்கள் இல்லை. அப்படியே பிறந்தாலும், அவர்களை உயிருடன் விட புலிகளும் தயாராக இல்லை. புலிகளின் இந்த 'உணர்வு மிக்க பிடிவாதத்தால்' பிரச்சினைக்கான முடிவு நீண்டு கொண்டே போகிறது. இறுதியில் அகதிகளாக பிறப்பெடுத்து, அகதிகளாகவே வாழ்ந்து முடித்த ஒரு தலைமுறையின் அவலமே நம்முன் நீண்டு கிடக்கிறது.//
1:40 PM