குர்ஆன் பற்றி சில அறிஞர்களின் கருத்துக்கள்!
அறிஞர் கொய்தே கூறுகிறார்:
குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அந்நியமாகத் தெரிகிறது. பிறகு புதுமையாகத் தெரிகிறது. அடுத்து ஒரு தென்றல் போல் மனதைக் கவர்ந்து செல்கிறது. மதிப்பச்சத்தை ஏற்படுத்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச் செய்வதாகவும் அமைந்துள்ளது- இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தை செலுத்தக் கூடியதாக இருக்கிறது.
-Quoted in T.P. Hughes Dictionary Of Islam, Page – 526.
ஜி.மார்கோலத் கூறுகிறார்:
உலகத்திலுள்ள பெரும் மத கிரந்தங்களில் குர்ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தைத் தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும் பெரும் பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றி அமைப்பதிலும் அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை. அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக் கிடந்த மக்களை இலட்சியத்தைப் பேணும் குழுவாக ஒன்றிணைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாக மாற்றியது. ஐரோப்பிய மக்களும் கிழக்கிந்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய அரசியல் அமைப்புகளை அது தோற்றுவித்துள்ளது.
-Introduction to J.M.Rodwells The Koran, New york, Every mans library 1977, page 711
ஆர்தர் ஜே.ஆர்.பெர்ரி கூறுகிறார்:
குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்ச்சியை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கிறது. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது.
'அதனுடைய சொற்களின் ஓசைநயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச் செய்கிறது.' - என்று பிக்தால் தன் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.
-The Koran Interpreted, London Oxford University Press, 1964,Page 8.
'நமது அடியாரான முஹம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்: இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்'
குர்ஆன் 2:23
No comments:
Post a Comment